செவ்வாய், மார்ச் 31, 2015

பொதுத்தேர்வுகளை ஒழித்தால் ஒன்றும் குடி மூழ்கிப்போய்விடாது!பொதுத்தேர்வுகளை ஒழித்தால் ஒன்றும் குடி மூழ்கிப்போய்விடாது!
                                  
                                     -  மு.சிவகுருநாதன்

கண்டன ஆர்பாட்ட துண்டுப் பிரசுரம்


     ஒவ்வோராண்டும் பள்ளி பொதுத்தேர்வுகள் நேரத்தில் பல்வேறு புதிய ‘காப்பியடித்தல்’ உத்திகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவ்வாண்டு வாட்ஸ் ஆப், அவ்வளவே! கல்வி முற்றிலும் தனியார் மயமானதின் விளைவுகளில் இதுவும் ஒன்று. அரசியல்வாதிகளும் சாரய வியாபாரிகளும் இன்று கல்விக் கடவுளாக புது அவதாரம் எடுத்திருக்கும் பின்னணியில் இன்று அரசும் அதிகார வர்க்கமும் இணைந்துள்ளது. 

   இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன? நாம் பலமுறை வலியுறுத்தி வருவதைப் போல பொதுத்தேர்வுகளை ஒழித்துக்கட்டுவதுதான் சரியாக இருக்கும். இது மிக எளிதாகச் செய்யக்கூடிய ஓர் செயல். ஓர் சாதாரண அரசாணை மூலமே செயல்படுத்திவிடக் கூடிய இச்செயலுக்கு ஏன் யாரும் துணியவில்லை? இதன் பின்னணியும் கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்கிற அரசியல்வாதிகளின் வியாபார நோக்கமே காரணமாக இருக்கமுடியும். இது ஒன்றும் நாடாளுமன்றத்தால் கொண்டு வரவேண்டிய அரசியல் சட்டத்திருத்தமல்ல. கல்விக்கூடங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க இன்று அரசு தயாரா? என்று கேட்கலாம். இல்லையென்றால் இதையாவது செய்யுங்கள்.

   ஆனால் இதற்காக குரல் கொடுக்கவேண்டிய ஆசிரிய சமூகம் மிகவும் தேங்கிப்போகியிருப்பதுதான் இங்கு பேரவலமாக உள்ளது. 100 விழுக்காடு தேர்ச்சி அளிப்பதற்கு மாணவர்களைத் தண்டிக்கும், கண்டிக்கும் உரிமைகளைக் கேட்டுப் போராடிய ஆசிரியர்கள், இன்று தேர்வறையில் மாணவர்கள் காப்பியடிப்பதற்கு ஆசிரியர்களைப் பொறுப்பாக்கித் தண்டிப்பதை எதிர்த்து நாளை (01.04.2015) மாவட்டத் தலைமையிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு செய்துள்ளனர். இதைப் பற்றி நாம் பலமுறை எழுதியாகிவிட்டது.

  இப்பிரச்சினையின் ஆணிவேரை மறைத்து அல்லது மறந்துவிட்டு தொடர்புடைய அனைவரும் இவ்வாறு நிழல்யுத்தம் நடத்துவது ஏனென்று புரியவில்லை. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் கடைபிடிக்கப்படுகிற மதிப்பீட்டு முறையை சற்று மேம்படுத்தி 10, 11 மற்றும் 12 வகுப்புக்களுக்கும் அமல் செய்வதால் என்ன குடியா மூழ்கிவிடப்போகிறது? தேர்வுகள் எளிமையாக குழந்தைகளை வதை செய்யாமல் இருந்துவிட்டுப் போகட்டுமே! 18 வயது வரையிலும் குழந்தைதானே! நமது சட்டங்களும் அதைதான் சொல்லுகின்றன. உலக அரங்கில் இந்தியா இன்னும் மனித – குழந்தை உரிமைகளை மதிக்காத தேசமாக இருக்கிறது என்ற அவப்பெயராவது இதன்மூலம் நீங்கினால் நல்லதுதானே!

  இறுதியாக ஒன்று. குழந்தைகள் மட்டும் அளவிற்கு அதிகமான பாடநூற்களைப் படிக்கவேண்டும் என சமூகம், பள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைத்துத் தரப்பும் விரும்புகிறது. பாடநூல்களைத் தாண்டி படிப்பதையும் தாங்களும் படிக்கவேண்டுமென்பதையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா? மேலும் அதிகம் வாசிப்பு உள்ளவன் ‘மெண்டலாகி’ விடுவான் என்கிற கற்பிதத்தையல்லவா இச்சமூகம் உற்பத்தி செய்து வைத்துள்ளது! இனி உண்மையில் பாடம் கற்க வேண்டியவர்கள் மாணவர்கள் அல்ல; ஆசிரியர்கள்தான்.

குறிப்பு:

 இதே கருத்தைத் தெரிவித்து நான் தொடர்ந்து எழுதுவருவதன் ஓர் பகுதிதான் இது. விளக்கத்திற்கு முந்தைய கட்டுரைகளைப் படிக்க கீழே இணைப்புகள் தந்துள்ளேன். 


தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?

http://musivagurunathan.blogspot.in/2012/04/blog-post_9893.html

 ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…

http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_22.html

 ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும்  போராடுங்கள்!

http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_7.html

திங்கள், மார்ச் 30, 2015

யாருக்கு சூழலியல் அறிவு தேவை?யாருக்கு சூழலியல் அறிவு தேவை?
                                      -    மு.சிவகுருநாதன்

(மார்ச் 29, 2015 அன்று மருதம் ஹால், ஹோட்டல் காசி’ஸ் இன், திருவாரூரில் நடைபெற்ற ‘காலநிலை மாற்றம்(Workshop on Climate Justice) குறித்த சூழலியல் பயிலரங்கு பற்றிய பதிவு.)

திரு 'நெல்'  ஜெயராமன்

   பல்வேறு சுழலியல் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற ‘காலநிலை மாற்றம்’ (Workshop on Climate Justice) குறித்த சூழலியல் பயிலரங்கு Pipal Tree அமைப்பின் உதவியால் திருவாரூர் பகுதி (நன்னிலம்) சூழலியல் எழுத்தாளர், நாவலாசிரியர் நக்கீரன் ஒருங்கிணைப்பில் கல்விப்புல அமர்வுகளைவிட சிறப்பான முறையில் நடந்தேறியது. இதையெல்லாம் செய்யவேண்டிய பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளுக்கும் இதைவிட முதன்மையான பணிகள் இருப்பதால் (?!) சிற்சில முரண்பாடுகள் இருந்தபோதிலும் இம்மாதிரியான அமைப்புக்களின் பணிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. சுழலியல் சீர்கேட்டிற்கு முழுமுதற்காரணம் அரசும் அதிகார வர்க்கமும் தானே! அவர்களிடமே இம்மாதிரியான செயல்பாடுகளை எதிர்பார்ப்பதும் முரண்தான்.

   வரவேற்புரை வழங்கிய பகத்சிங் சூழலியல் என்பது மேட்டிமைத்தனமாக இருந்ததனால் அவற்றிலிருந்து விலகியிருந்ததைக் குறிப்பிட்டார். அசைவ உணவைச் சமைக்க அதிக அளவு எரிபொருள் செலவாவதால் அனைவரும் சைவ உணவுப்பழக்கத்திற்கு மாறவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலை இருந்ததைச் சுட்டிக்காட்டினார். இப்போதும்கூட சூழலியல் போலிகள் இருப்பதும் ‘ஆர்கானிக்’ என்பது ஓர் பெருவணிக உத்தியாக மாறிப்போயிருப்பதும் இங்கு நடந்துகொண்டுள்ளது.

  நிகழ்வை ஒருங்கிணைத்த நக்கீரன் பொதுவாக படைப்பாளிகளுக்கும் 
சூழலியர்களுக்கும் எப்போதும் சரிபட்டுவருவதில்லை. படைப்பாளி சூழலியல் பேசும்போது கெட்டுப்போய்விட்டதாக பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இப்படிக் கெட்டுப்போவதற்காகவே இங்கு நிறைய படைப்பாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றார். இறுதியில் கருத்துரைத்த கவிஞர் வெய்யில் படைப்பாளிகள் அரங்கமென்றால் சண்டையாக மட்டுமே இருக்கும். ஒரு வரி குறிப்பெடுக்க வாய்ப்பிருக்காது. ஆனால் இங்கு பலபக்கங்கள் குறிப்பெடுக்க முடிந்தது என்றார். 

திரு மு.வெற்றிச்செல்வன் & திரு நக்கீரன்


   பொதுவான படைப்பாளிகளுக்கும் சூழலியர்களுக்கும் நக்கீரன் சொன்ன மாதிரியான முரணை கட்டமைக்க முடியும் என்று தோன்றவில்லை. கூடங்குளம், மீத்தேன், நீயூட்ரினோ போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு படைப்பாளிகளிடடையே பெருத்த வேறுபாடுகள் இல்லை என்பதே உண்மை. முல்லைப்பெரியாறு அணை போன்ற ஓருசில பிரச்சினைகளில் தமிழகச் சூழலியர்களும் தடம் மாறியதை ஒத்துகொண்டேயாக வேண்டும். நர்மதையின் சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தை அதிகப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்ததை சூழலியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் நடந்ததென்ன? சுற்றுச்சூழல் குறித்தும் சண்டை போட பல வாய்ப்புகள் உள்ளன. அமைப்பு சார்ந்த படைப்பாளிகள் குறிப்பாக இடதுசாரிகள் கூடங்குளம், மீத்தேன், நீயூட்ரினோ ஆகிய மூன்றில் மீத்தேன் திட்டத்தை மட்டும் எதிர்ப்பதன் அரசியலை வைத்துக்கொண்டு படைப்பாளிகளை குறைசொல்லிப் பலனில்லை என்று கருதுகிறேன். இயக்கம் சார்ந்த படைப்பாளிகள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்; அவர்களிடம் அறவியல் நிலைப்பாட்டை எதிர்பார்ப்பது நம் தவறுதான். 
    சூழலியல் நிகழ்வை குறுங்குழு நிகழ்வாகத் திட்டமிடவேண்டியதில்லை என்று தோன்றுகிறது. பரவலாக செல்லவேண்டிய செய்திகள் ஓர் குழுவிற்குள் முடங்குவதும் பொருத்தமாக இருக்காது. அனைவரும் தொடக்க நிலையிலேயே பெரும் விழிப்புணர்வுடன் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அமைப்பாளர்கள் அடுத்த முறை இதுபற்றி யோசிக்கவேண்டும். சூழலியர்கள் மோதவேண்டியது அரசு, அதிகார வர்க்கம் போன்ற ஆதிக்க சக்திகளிடந்தானே தவிர படைப்பாளிகளிடமல்ல.
   காலை அமர்வை ‘காடு’ இதழாசிரியர் ஏ. சண்முகானந்தம் தொடங்கி வைத்தார். வளரும் நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் வளங்கள் அழிக்கப்படுகின்றன என்றார்.

  காலை அமர்வில் பாரமபரிய நெல் சாகுபடி பற்றி ‘நெல்’ ஜெயராமன் மிக நீண்ட உரையாற்றினார். ஒன்பதாம் வகுப்பில் இருமுறை பெயிலாகி நுகர்வோர் பாதுகாப்பு செயல்பாட்டாளராக தொடங்கிய வாழ்க்கையில் நம்மாழ்வார் தொடர்பு ஏற்பட்டு, தஞ்சை விவசாயிகள் ஏற்கமாட்டார்கள் என்கிற அவரது கற்பிதத்தை உடைத்து வெறும் 7 பாரம்பரிய ரகங்களைக் கொண்டு இன்று நூற்றுக்குமேற்பட்ட ரகங்களைக் கண்டு அவற்றை விவசாயிகளுக்கு அளித்து ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் செயல்பாட்டை எளிமையாக விளக்கினார். 

    பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவிலுள்ள் உலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று வந்ததையும் கர்நாடகாவில் விவசாயிகள் அறுவடைக்காலங்களில் செய்வதைப் போன்று கட்டிமேடு ஆதிரெங்கத்தில் நெல் திருவிழா கொண்டாடுவதையும் சொன்னார்.

  நெல் சாகுபடிக்கு அதிக நீர் தேவைப்படுவதாக சொல்வது தவறு. நெல் என்பது புல் வகை. புல்லுக்கு நாம் தண்ணீர் பாய்ச்சுவதில்லை. குறைந்த நீரில் விளையக்கூடிய நெல்லை உரம், பூச்சுக்கொல்லிகள் போட்டு கெடுத்துவிட்டோம் என்றார். 

   வேளாண் ஆய்வு மையங்களில் ஒட்டு வீரிய ரகம் என்கிற பெயரில் குறுவை நெல்லை அறிமுகம் செய்கிறார்கள். இவை நமது பாரம்பரிய நெல் வகையில் இருக்கிறது. அரசின் ஒட்டு ரகம் 90 நாட்கள். அறுபதாங்குறுவை எனப்படும் 60 நாளில் அறுவடைக்கு வரும். இவை இடத்திற்கு இடம் நாள் என்ணிக்கை மாறுபடும். கன்னியாகுமரியில் 55 நாள் போதும். தலைஞாயிறு போன்ற பள்ளமான பகுதிகளில் பூங்கார் 70 நாட்களில் அறுவடையாகும். 
   
    புதுக்கோட்டை மாப்பிள்ளைச் சம்பா 6 அடி உயரம் வளர்ந்து 170 நாட்களில் அறுவடையாகும். கடலோர உவர் நிலத்தில் விளையும் உவர்கொண்டான் என்ற நெல் ரகமும் உண்டு. உடல் நலமின்றி இருக்கும்போது சாப்பிட்டால் நோய் குணமாகும் கருங்குறுவையும் நமது பாரம்பரியமே. கைவிதை சம்பா விதை 30 ஆண்டுகள் கழித்தும் முளைப்புத்திறனுடையதாக இருந்தது வியப்பளிக்கக்கூடியது. ஒட்டடையான், பூங்கார் இரண்டையும் ஒரே சமயத்தில் நட்டு, ஒன்று அறுவடையாகும்போது மற்றொன்றின் குருத்துப்பகுதியும் வெட்டப்பட்ட பிறகு அது நல்ல மகசூலைத் தரும் என்பதும் மாடுகள் விட்டு மேய்ந்தபிறகு, நல்ல தூர் கட்டி வளர்ந்து மகசூல் கிடைத்தது தனது அனுபவ உண்மை என்பதையும் விளக்கினார். 

  நம்மாழ்வார் சொன்ன அடி மண்ணுக்கு, இடை மாட்டுக்கு, நுனி நமக்கு என்பதைச் சுட்டிக்காட்டி பேசிய ஜெயராமன் பாரம்பரிய ரகங்களை ஏமாற்றுவதற்காகவே டி.கே. 9 என்றொரு நெல்லை கடைபரப்பியதாக குற்றஞ்சாட்டினார். 

திரு பொன்.வாசுதேவன்

   ‘காலநிலை மாற்றமும் பெண்களுக்கு எதிரான அநீதியும்’ என்ற தலைப்பில் உரையாற்ற வேண்டிய நிர்மலா கொற்றவை உடல்நலக்குறைவால் வரவில்லை. அடுத்ததாக ‘அழிந்துவரும் அய்ந்திணைகள்’ என்ற தலைப்பில் பத்தரிக்கையாளர் பொன்.வாசுதேவன், சர்வதேச அளவில் பருவநிலை மாற்றம் குறித்தான அமர்வுகள் அவற்றின் நிலைப்பாடுகள் இந்தியா போன்ற மூன்றான் உலக நாடுகளின் பங்கு பற்றி பேசினார். பவளப்பாறைகள், சுனாமி, அலையாத்திக்காடுகள், தாவரங்கள் இடம்பெயர்தல் பற்றியெல்லாம் பேசி இறுதியாக பாரதியின் ‘இனிது’  கவிதையோடு தனது உரையை நிறைவு செய்தார்.

திரு மு.வெற்றிச்செல்வன்


  ‘காலநிலை மாற்றத்தில் அய்.நா.வின் பங்கும் இந்திய பாதிப்புகளும்’ குறித்து பூவுலகின் நண்பர்கள் மு.வெற்றிச்செல்வன், அய்.நா.வின் செயல்படாத தன்மை, வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது செலுத்தும் சூழலியல் ஆதிக்கம், இந்திய சட்டங்களின் போதாமை, பன்னாட்டு கம்பெனிகளைக் காப்பற்ற இயற்றப்படும் சட்டங்கள், மசோதாக்கள், அறிவு சார் சொத்துரிமை, புவிசார் குறியீடு ஆகியவற்றை தொட்டுச்சென்றது. கிரிக்கெட், சினிமா, அரசியல், வழக்குரைஞர்கள், கோணங்கி, கல்விமுறை, அரசு, அதிகார வர்க்கம் என அனைத்துத் தரப்பையும் நையாண்டியுடன் இவரது பேச்சு எதிர்கொண்டது. அறிவு சார் சொத்துரிமை குறித்த வினாக்களுக்கு விளக்கமளித்த பிறகு மதிய உணவு இடைவேளைக்காக காலை அமர்வு நிறைவுபெற்றது.

திரு அருண் நெடுஞ்செழியன்

   மதிய உணவுக்குப் பின் இரண்டாம் அமர்வை சூழலியல் எழுத்தாளர் அருண் நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார். இன்று சூழலியல் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றியும் அவற்றின் பின்புலத்தையும் இவர் எடுத்துரைத்தார். 

  சென்னை CPREEC நிறுவனததைச் சேர்ந்த ஆய்வாளர் மு.அமிர்தலிங்கம் ‘அறியப்படாத கோவில் காடுகள்’ குறித்து காட்சி விளக்கத்துடன் மிக நீண்ட உரையாற்றினார். தாவரவியல் படித்து ஆசிரியர் வேலைக்குக் காத்திருந்ததபோது மேற்கண்ட நிறுவனத்தில் கிடைத்த இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஆய்வு செய்து தனது விருப்பார்வத்தை வளர்த்துக்கொண்ட விதத்தை இனிமையாக எடுத்துரைத்தார்.  
திரு மு.அமிர்தலிங்கம்

   முதலில் கோவில் தல விருட்சங்கள் குறித்த ஆய்வு பின்னர் கோயில்காடுகள் என பரிணாமம் பெற்றதை எடுத்துக்காட்டினார். திருவாரூர் கோயில் தல விருட்சம் பாதிரி என்றார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுச்சேரி – சென்னை வழியில் கீழ்புத்துப்பட்டு கொடிகள் நிறைந்த ஆசியாவில் இரண்டாவது பெரிய கோயில் காடு இருப்பதையும் அதை தாம் ஆயவு செய்து வெளியிட்டதையும் விளக்கினார். பெரும்பகுதி அழிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் பல இடங்களில் இத்தகைய காடுகள் இருப்பதைப் தமிழகத்தில் மாவட்ட வாரியாகப் பட்டிலியலிட்டார். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமையும் ஏன் தென் ஆசியாவிலும் இது போன்ற கோயில்காடுகள் இருப்பதாகத் தெரிவித்தார். 

   மக்களின் மத, கடவுள் நம்பிக்கையின் கீழ் இவ்வாறான தொன்மங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இயற்கை பாதுகாக்கப்பட்டதோடு நில்லாது மருத்துவ வசதிகளற்ற அந்நாளில் இவை பெரும் மூலிகைப்பண்ணைகளாக விளங்கின என்றால் மிகையில்லை. இங்கு நாம ஒன்றை கவனிக்கவேண்டும். ஆகம, வைதீக பெருந்தெய்வ வழிபாடு நடத்தப்படுகிற கோயில்களில் உள்ள தல விருட்சத்தை மட்டும் கோயில் காடுகள் சொல்லமுடியாது. இத்தகைய காடுகள் அனைத்தும் கிராமம் சார்ந்த அய்யனார், காளி, அம்மன் போன்ற பல்வேறுபட்ட சிறு தெய்வ, காவல் தெய்வ, குல தெய்வ வழிபாட்டு முறையின் ஓரங்கமாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். ஆய்வாளர் இது குறித்து எதுவும் சொல்லவில்லை. இது அவரது நிறுவன ஆய்வு வரம்புக்குட்படாத செய்தியாகக் கூட இது இருக்கலாம். இது போன்ற எண்ணற்ற சிக்கல்கள் சூழலியலும் உண்டு. சூழலியலை புனிதத்தன்மையாக்காமல் இம்மாதிரியான எச்சரிக்கையோடு அணுக வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
திரு ரெங்கய்யா முருகன்

   இறுதியாக வட கிழக்கு மாநில பழங்குடி மக்களுடன் வாழ்ந்த 5 நாள் அனுபவங்களின் நிழல்பாதையை ‘இந்தியப் பழங்குடிகளின் காலநிலை அறிவு’ என்ற தலைப்பில் ஆய்வாளர் ரெங்கய்யா முருகன் பகிர்ந்துகொண்டார். தான் பிறந்த ஊரில் கல்வியின் பெயரால் மலைப்பகுதி ஆக்ரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டதை நேரில் பார்த்தவன். தனியொரு ஆளே இவ்வளவைச் செய்யும்போது கம்பெனிகள் இன்னும் என்னென்ன செய்யும் எனச்சொல்லி தனது உரையைத் தொடங்கியவர், சொர்க்கம் எப்படியிருக்கும் என்று தெரியாது; இந்த 5 நாட்கள்தான் என் வாழ்க்கையின் சொர்க்கம் என்றார். 

    பணம், ரேஷன், மின்சாரம், நாம் பயன்படுத்தும் பொருட்கள் எதுவுமின்றி இப்பழங்குடிச் சமூகம் நிறைவாக இயற்கையோடு தனது வாழ்வியலை அமைத்துள்ளதை பேச்சினுடே விரிவாக எடுத்துக்காட்டினார். அவர்களிடம் கோபத்தைப் பார்க்கமுடியவில்லை. மாறாக அன்பை மட்டுமே பெறமுடியும் என்றார். சிறு குழந்தைகள் செய்யும் எத்தகைய சேட்டைகளையும் கனிவான அன்பினால் எதிர்கொள்ளும் அவர்களைக் கண்டு ஆச்சரியபட்டார்.

    இப்பழங்குடி மக்களின் வேலை, உழைப்பு, உணவு ஆகியன முறையாக பங்கிடப்பட்டு ஓர் கூட்டு வாழ்க்கை வாழ்வதை எடுத்துக்காட்டினார். இவர்களது வாழ்வில் இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மது வகைகள் (IMFL) புகுந்திருப்பதை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

   சிலரின் கருத்துரைகளுடன் அரங்கு நிறைவடையும் தருணத்தில் பேச வாய்ப்பு கேட்டு வந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறைப் பொறியாளர் தெய்வசிகாமணி, நக்கீரனின் ‘களவு போகும் நீரை’ 50 முறைக்குமேல் படித்துவிட்டேன், இன்னும் சில பகுதிகள் புரியவில்லை என்றார். மேலும் நேரு யுவகேந்திரா என்று ஏதெதோ பேசி காலவிரயம் செய்தார். நாம் எவ்வளவுதான் சூழலியல் பேசினாலும் அரசையும் அதிகார வர்க்கத்தையும் புரிய வைக்கமுடியாது என்பதற்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு. சுழலியலைப் பாதுகாக்க நமக்குப் பொறியாளர்கள் வேண்டாம்; 9 ஆம் வகுப்பு பெயிலான 'நெல்' ஜெயராமன் போன்றோர் போதும். சுழலியல் முயற்சியாக துணிப்பை வழங்கும் நிகழ்வும் அரங்கேறி பயிலரங்கு நிறைவு பெற்றது.

சனி, மார்ச் 28, 2015

இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின் சுவை...இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின் சுவை...
(அலையாத்திக்காடுகளும் அனல் மின்நிலையங்களும் – நக்கீரன் - குறு நூல் அறிமுகம்)                         
                                                        - மு.சிவகுருநாதன்
       இந்நூலுக்குள் செல்வதற்கு முன்பு பாடநூற்கள் மாணவர்களை எவ்வாறு மழுங்கடிக்கின்றன என்பதற்கு தொடர்புடைய சில எடுத்துக்காட்டுகள். ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் புவியியல் பகுதியில் “பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டைப் பகுதியிலுள்ள அடர்ந்த சதுப்புநிலக்காடுகள் மனிதனின் பொறுப்பற்ற செயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” (இவ்விடங்களைப் பாதித்த மனித செயல்களை ஆராய்ந்து அறிக.) என்று ‘சுற்றுச்சூழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும்’ பாடத்தில் சொல்லப்படுகிறது.  இதற்கு மாணவர்கள் மனிதச் செயல்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தப் பட்டியல் ஒன்றை தயார் செய்யக்கூடும். இதில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பயன்பாடு, திறந்த வெளிக் கழிப்பிடங்கள், மரங்களை வெட்டுதல் என்ற மனிதச்செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்படக்கூடும். மோடியின் தூய்மை இந்தியாவிற்கு பின்னால் வேறு எப்படி யோசிக்க முடியும்?

     இவையெல்லாம் வெறும் மனிதச் செயல்பாடுகள் மட்டுந்தானா, அப்படி மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியும் என்று தோன்றவில்லை. பூச்சிக் கொல்லிகள், வேதி உரங்கள், சுற்றுலா, இறால் – மீன் பண்ணைகள், அனல்மின் நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றைத் தனிமனிதச் செயல்பாட்டில் மட்டுமே அடக்க முடியுமா? இவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியல் தொழிற்பாடுகள், கொள்கைகள், மூலதனம் போன்றவற்றையும் இணைத்து அணுகவேண்டிய அவசியமிருக்கிறது. மாணவர்களை மூளைச்சலவை செய்யு நோக்கத்துடனே இத்தகைய பாடநூற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டியது இன்றியமையாதது.

   சதுப்பு நிலங்கள் குறித்த வரையறை ஒன்றைச் சொல்லி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றனர். இதே ஒன்பதாம் வகுப்புப் பாடநூலில் (3 வது பருவம்) ‘வளங்களைப் பாதுகாத்தலும் நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சியும்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் “ஆறு அடி ஆழத்திற்கு தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நீர் தேங்கியுள்ள பகுதி சதுப்பு நிலப்பகுதியாகும்”, என்று வரையறை சொல்லப்படுகிறது.  இது என்ன அபத்தம். நீர் தேங்கிய இடமெல்லாம் சதுப்பு நிலங்கள் என்றால் நாட்டில் சதுப்பு நிலங்களுக்கே பஞ்சமிருக்காதே! இதுதான் நமது கல்வியின் நிலை.

    மேலும் சதுப்புநிலத் தாவரங்களில் காணப்படும் வேர்களை தாங்கும் வேர்கள் என்று மட்டும் சொல்லி அதன் முதன்மைப்பணியான சுவாசம் மறக்கடிக்கப்படுகிறது. இத்தகைய கல்விச்சூழல் மற்றும் பாடநூற்கள் உள்ள நிலையில் அலையாத்திக்காடுகள் பற்றிய நக்கீரனின் குறு நூல் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.

  அலையாத்திக் காடுகளின் பல்லுயிர்ச் சூழல்,அனல் மின் நிலையங்கள், இறால் பண்ணைகள், நவீன விவசாயம், துறைமுகம் ஆகியவற்றால் பாதிப்புள்ளாகும் தற்காலச் சூழல் போன்றவற்றை இக்குறுநூல் விளக்குகிறது. 

  இப்பகுதி அளம் என்றும் அழைக்கப்படும். இதிலிருந்துதான் உப்பளம் என்ற சொல் கூட உருவாகி இருக்கக்கூடும். சு. தமிழ்ச்செல்வியின் இப்பகுதி வாழ்வியலைப் பேசும் ஓர் நாவலின் பெயர் ‘அளம்’. இந்நூலில் அலம் எனப்படுகிறது. எழுத்துப்பிழையாக இருக்கக் கூடுமோ! 

    இன்னொரு செய்தி. சதுப்பு நிலப்பகுதிகளில் காணப்படும் அரிய, சுவையான மீனினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மடவா கெண்டையுடன் கூடவே மன்னா கெண்டை, பால கெண்டை என்று சொல்லப்படும் மீன்கள் உண்டு. சீர்காழிக்கு அருகில் மடவாமேடு என்றொரு கிராமம் கூட உண்டு. கோடியக்கரைக் காட்டில் அதிக சுவைமிக்க பாலாப்பழம் ஒன்றுண்டு. அதனால்தான் என்னவோ சுவை மிகுந்த இம்மீனுக்கு அப்பெயரை வைத்திருக்கவேண்டும். எழுதும்போதே நாவில் எச்சில் ஊறுகிறதே! இனியும் சாப்பிடமுடியுமா?

அலையாத்திக்காடுகளும் அனல் மின்நிலையங்களும் – நக்கீரன் - குறு நூல்
கொம்பு வெளியீடு:
11 பப்ளிக் ஆபிஸ் ரோடு,
தேவி தியேட்டர் எதிரில்,
நாகப்பட்டினம் – 611001.
செல்: 9952356742

பூவுலகின் நண்பர்கள்,
106/1, முதல் தளம்,
கனக துர்கா வணிக வளாகம்,
கங்கையம்மன் கோயில் தெரு,
வடபழனி,
சென்னை – 600026.
பேசி: 044 43809132
செல்: 9841624006
மின்னஞ்சல்:
முகநூல்:
Poovulagin Nanbargal
விலை: ரூ. 40