ஞாயிறு, ஏப்ரல் 30, 2017

‘டெட்’ (TNTET 2017) தேர்வு வன்முறை!



‘டெட்’ (TNTET 2017) தேர்வு வன்முறை!   

  முசிவகுருநாதன் 


      பொதுவாகவே தேர்வு என்றாலே அது வன்முறைதான்! மாணவர்களுக்குத்தானே தேர்வு, ஆசிரியர்களுக்கு ஏன் தேர்வு? என்று கேள்வி கேட்கும் ஆசிரியர் சமூகத்திற்கு நடந்த தேர்வு வன்முறை குறித்தும் பேசவேண்டியுள்ளது ஒரு நகை முரண். தேர்வுகளை நியாயப்படுத்தும் எவருமே கூட இந்த வன்முறைகளை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. 


    ஆண்டுக்கு இருமுறை ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளை நடத்துவதாகச் சொல்லி, பல ஆண்டுகள் நடத்தாமல் வெறுமனே இருந்துவிட்டு, தற்போது திடீரென அறிவித்து ஏப்ரல் 29, 30 2017 ஆகிய நாட்களில் நடத்தி முடித்திருக்கிறார்கள். தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை என்பதையும் அதே நாளில் வேறு தேர்வுகள் இருக்கிறது என்கிற பல்வேறு கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 


      இதை எழுதும் பலர் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் கொத்தடிமை ஊழியம் செய்பவர்கள். மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தாத அரசுகள், இந்த ஆசிரியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்யுமா? பள்ளிகள் விடுமுறை விட்ட பிறகு  மே இறுதியில் நடத்தினால் வசதியாக இருக்கும் என்ற கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாததும் ஒரு வகையான வன்முறையே! பிறகென்ன மக்களாட்சி வேண்டிக் கிடக்கிறது?


       போட்டித்தேர்வுகளும் முறைகேடுகளும் பிரிக்க இயலாதவை. வினாத்தாள் வெளியாதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் எப்பொதும் உண்டு. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக இம்முறை தேர்வர்களை கடும் வன்முறைக்குள்ளாக்கி அதன் மூலம்  ‘டெட்’ தேர்வுகள் நியாயமாக நடைபெறுவதாக ஒரு தோற்றத்தை உண்டுபண்ணுவது ரொம்பவும் அபத்தம். அதில் ஒன்றிரண்டை மட்டும் பார்ப்போம். 

கர்ச்சிப் வைத்துகொள்ளக்கூடாது. 

    கொளுத்தும் வெயிலில் வேர்வையை எதில் துடைப்பது? கர்ச்சிப்பில் இதுவரையில் காப்பியடிக்கும் முறைகேடுகள் நடைபெற்றனவா? தேர்வு வாரியமே தேர்வர்களுக்கு கர்ச்சிப் விநியோகித்து விடலாம்! இதைப் போல பெல்ட்டில் பிட் வைத்து இந்தப் போட்டித்தேர்வுகளை எழுத முடியுமா என்ன? 

தண்ணீர்ப் பாட்டில் கூடாது. 

     குடிநீர் பாட்டிலில் என்ன வகையான முறைகேடுகள் நடைபெற முடியும்? உடல்நலம் குன்றியவர்கள் கூட தாங்கள் கொண்டு வந்த நீரை பருக அனுமதிக்காததை விட வேறு கொடுமை இருக்க முடியுமா? எல்லாரும் ‘பாத்ரூம்’ பிளாஸ்டிக் வாளிகளில் வைக்கப்பட்ட சுகாதாரமற்ற நீரைக் குடிக்க வேண்டிய கொடுமையை என்னவென்பது? தேர்வறைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்காமலும் அவர்கள் கொண்டு வந்த நீரையும் அனுமதிக்காமல் இருப்பது வன்முறையன்றி வேறென்ன?

சாதாரண கைக்கடிகாரங்கள் கூட கூடாது.

பொதுவாக தேர்வுகளில் எலெக்ட்ரானிக் பொருள்கள் (செல்போன், கால்குலேட்டர், எலெக்ட்ரானிக் வாட்ச் போன்றவை.) கொண்டுவருவதைத் தடுப்பது என்பது வேறு.  நேர மேலாண்மைக்காக சாதாரண கைக் கடிகாரங்களை அனுமதிக்காததை விட வன்செயல் இருக்க முடியாது. இதில் எப்படி முறைகேட்டில் ஈடுபடமுடியும் என்பதைத் தேர்வு வாரியம் விளக்கினால் நல்லது. ஒவ்வொரு தேர்வறைகளிலும் ஒரு சுவர்க்கடிகாரத்தை மாற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு அரை மணிக்கு ஒருமுறை மணியடிக்கப்படுவது என்பது போதுமானதல்ல.


  தேர்வரின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் இவ்வாறான முடிவுகள் எப்படி, எங்கு, யாரல் எடுக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை. எதற்கும் நீதிமன்றத்தை நாடித்தான் பெறவேண்டும் என்கிற நிலை மக்களாட்சியை மதிப்பிழக்கச் செய்யும்.  தவறான வினாவிற்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றங்களைகளையே நாடவேண்டியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு விலங்கியல் பாடத்திற்கு இவ்வாறு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


    இனி வரும் தேர்வுகளில் இம்மாதிரியான கொடிய, ஆனால் தேர்வு முறைகேடுகளுக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லாத செயல்களை முற்றிலுமாக நிறுத்திக்கொள்வது அழகு. இல்லாவிட்டால் நீதிமன்றங்களை தேர்வர்கள் நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.  

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி



ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி

(மதிப்பீடு – விமர்சனம் – அஞ்சலி – நினைவுத் தொகுப்பு)

தேர்வும், தொகுப்பும்: மு.சிவகுருநாதன்



      கீழத்தஞ்சை மாவட்டத்தில் தலித், அடித்தட்டு விவசாயக் கூலிகளுக்காக மக்கள் திரள் இயக்கம் கட்டிப் போராடி அவர்களுடைய தன்மானத்தையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் மீட்டெடுத்ததில் பி.எஸ்.ஆர்., மணலி கந்தசாமி, ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் ஆகிய ஆளுமைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. “செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம்”, என்று களப்போராளியாக பணி செய்தவர் ஏஜிகே. ஏஜிகே வின் முதலாண்டு நினைவு நாள்  ஆகஸ்ட் 10, 2017. அந்த நாளில் வெறும் புகழுரையாக இல்லாமல் அவரது வாழ்வையும் பணிகளையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யும் கட்டுரைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. கீழ்க்கண்ட தோழர்களின் பங்களிப்பில் இந்தத் தொகுப்பு உருவாகிறது.


1.   தியாகு
2.   பசு.கவுதமன்
3.   மு.இளங்கோவன்
4.   கொளத்தூர் மணி
5.   பொதிகைச்சித்தர்
6.   வ.கீதா
7.   அறிவுறுவோன்
8.   கோவை ராமகிருஷ்ணன்
9.   மலையூர் ஆறுமுகம்
10. பொ.இரத்தினம்
11. அரங்க குணசேகரன்
12. கோ.சுகுமாரன்
13. ஐ.வி.என். நாகராஜன்
14. நாகை மாலி
15. சோலை சுந்தரபெருமாள்
16. கோ.கலியமூர்த்தி
17. சாம்ராஜ்
18. தய்.கந்தசாமி
19. தெ.வெற்றிச்செல்வன்
20. செ.சண்முகசுந்தரம்
21. கவின்மலர்
22. ப்ரேமா ரேவதி
23. பாவெல் சூரியன்
24. த.ரெ. தமிழ்மணி
25. இரா. மோகன்ராஜன்
26. மு.சிவகுருநாதன்
27. ஏ.ஜி.வி. ரவி
28. ஏ.ஜி.கே. கல்பனா
29. ஏ.ஜி.கே. அஜிதா


       பட்டியல் இன்னும் நீளும். நீங்களும் இதில் பங்கேற்கலாம். ஏஜிகே பற்றிய கட்டுரைகள்  அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசி, மின்னஞ்சல், முகவரி வழியே தொடர்புகொள்ள வேண்டுகிறோம். கட்டுரைகளை மே 31 க்குள் அளிக்க வேண்டுகிறோம். தொகுப்பு நூல் ஏஜிகே நினைவு நாளில் (ஆகஸ்ட் 10, 2017) வெளியாகும்.

தொடர்புக்கு:

மு.சிவகுருநாதன்
நிலா வீடு,
2-396 பி புரட்டாசி வீதி,
கூட்டுறவு நகர்,
தியானபுரம்,
மாவட்ட ஆட்சியரகம் - அஞ்சல்,  
திருவாரூர் - 610004.
 
                               
மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

அலைபேசி: 9842802010, 9842402010

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்


பொ. இரத்தினம், வழக்கறிஞர்,

நிறுவனர்,
சமத்துவ மக்கள் படை.


தொடர்புக்கு: 

94434 58118
7010281861


        ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்சினையில் நடிகர் சத்யராஜின் பேச்சைக் கண்டித்து, அவர் நடித்து ஏப்ரல் 28 –ல் வெளியாகும் பாகுபலி 2 படத்தைத் திரையிட கன்னட சலுவாளி கட்சித் தலைவரும் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடி, எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் அறிவித்தனர். இதனையடுத்து கன்னட மக்களிடம் நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்து ஏப்ரல் 21 –ல் அறிக்கை வெளியிட்டார்.

     நாட்டைக் கெடுக்க நிறைய அரசியல்வாதிகள் இருக்கும்போது நடிகர்கள் வேறு கிளம்பியுள்ளனர். ‘மானமிகு’ என்கிற அடைமொழிக்குள் மானங்கெட்ட பிழைப்பு நடத்துவது ஏன்?  எப்படி வேண்டுமானாலும் நடித்து வியாபாரம் செய்துவிட்டுப் போங்கள். கொள்கை அது, இது என்று ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? பெரியாரை அவமானப்படுத்துவதே இவர்களைப் போன்றவர்கள்தான். உங்களுடைய வணிகத்தில் முற்போக்கு, பகுத்தறிவு ஆகியவற்றுக்கு இடமேது?  பெரியாராக நடித்துவிட்டால் பெரியாராக மாறிவிடமுடியாது. குஷ்புகூட மிக நன்றாக நடித்துள்ளார். 

    வட்டாள் நாகராஜின் பூர்வீகம் தெலுங்கு என்று சொல்லப்படுகிறது. அவர் கர்நாடக மக்களில் ஒரு சிலரை வன்முறையாளர்களாக மாற்றி, வெறியூட்டி வைத்துள்ளார். கன்னட மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. கன்னட சமூகமே இவ்வ்வாறு இருப்பதாக எண்ணுவது தவறு. தமிழ்ச் சமூகத்திலும் சில கிரிமினலகள் மக்களை வெறியூட்டுவதுபோல அங்கும் நடக்கிறது. சில கிரிமினல்களின் பித்தலாட்ட,  அரசியல், பிழைப்புவாத நடவடிக்கை என்பதில் அய்யமில்லை.

   பெரியார் கூட கன்னடர் தானே! கர்நாடக மக்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்களே என்றா கேட்டார்கள்? சத்யராஜின் உதவியாளர் சேகர் ஒரு கன்னடக்காரர். இளைஞர்களை முட்டாள்களாக வைத்திருக்க விரும்புவது சினிமாக்காரர்களின் விருப்பம். எவனோ எழுதிக் கொடுத்த வசனத்தைக் கொண்டு இவர்கள் பிழைப்பு ஓடுகிறது. இவர்களை விட நூறு மடங்கு திறமையாக எழுதக்கூடியவர்களும் இந்த நாட்டில் உண்டு. காவிரி நடுவர் தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் ரசிகர் நடத்திய போராட்டம் இனவெறியைத் தூண்டியது. பின்பு நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவமும் நடந்தது. கன்னடத் திரையுலகமும் இம்மாதிரியான வெறித்தனங்களை உண்டு பண்ணுகிறது.

     சாமானிய கன்னட, தமிழ் மக்கள்  இம்மாதிரியான வெறித்தனத்திற்கும் பித்தலாட்டத்திற்கும் ஆட்படாதவர்கள். எனவே சினிமாக்காரர்கள் தங்கள் தொழிலைப் பார்த்துக் கொண்டு இருப்பது நல்லது. இவர்களது சேட்டைகள் மூலம் சமூகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இந்த சூதாடிக் கும்பல்களால் மக்களுக்கு எவ்விதப் பலனுமில்லை. ரஜினிகாந்த் போன்றவர்கள் தங்களது மாநில மக்களுக்கு தமிழகத்தைவிட அதிக அளவிற்கு நிதியுதவி செய்கின்றனர்.

     மன்னிப்பு கேட்டால் நீங்கள் செய்கிற காரியத்தில், கொள்கையில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்துகிறவர்களில் சத்யராஜூம் ஒருவர். மன்னிப்பு கேட்டால் நீ செய்கிற செயலே தப்பு என்றுதானே பொருள்?  பெரியார் மன்னிப்பும் கேட்டதில்லை; ஒரு கத்தரிக்காயும் கேட்டதில்லை. படத்தை வெளியிட எதிர்ப்பும் வருகிறது என்று சொன்னால், அப்போது மட்டும் தமிழனாக இல்லாமல் வியாபாரியாக மாறிவிடுகின்றனர். எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்பது வணிக உத்தியே. இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளில் இப்பகுதியை வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து வெளியிடலாமே! தன்மானத்தை இழந்த வியாபாரிக்கு பெரியார் முகமூடி எதற்கு?
   
    “ஈழத்தமிழ் விதவையைத்தான் திருமணம் செய்துகொள்வேன்”, என்று சூளுரைத்த சீமான் என்னும் நடிகர், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் இரண்டாவது மனைவியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களும் ஏமாளிகள் என்பதை இவர்கள் தெளிவாக உணந்துள்ளனர். ஈழத்தமிழ் மக்களின் பணத்திற்கான இங்கே பல்வேறு கும்பல்கள் களமாடுகின்றன. தமிழ் தேசியப் போர்வையில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவில்லை. இதில் சினிமாவிற்கும் பெரும்பங்கு இருக்கிறது. 

       இறுதியாக ஒரு செய்தி:

   பெரியார்  படத்தில் நடித்ததற்காக நடிகர் சத்யராஜூக்கு பெரியார் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தை மு.கருணாநிதி மூலம் கி.வீரமணி வழங்கினார். இதனை எதிர்த்து தனது இறுதிக்காலம் வரை பெரியாரிஸ்ட்டாகவும் மார்க்சிஸ்ட்டாகவும் வாழ்ந்து சென்ற ஆண்டு ஆகஸ்ட் 10, 2016 –ல் மறைந்த ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் (ஏஜிகே) தனது ‘மடலுரையாடல்’ நூலில் (ஜனவரி 2008) பின்வருமாறு எழுதுகிறார். 

    “வீரமணியார் விற்ற பெரியார் பச்சைக்கல் மோதிரத்தைத் திருப்பிப் பெற்று அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும். கருணாநிதியார் அதனை வலியுறுத்தி வீரமணியைச் செய்யவைக்கவேண்டும். தவறினால் அல்லது மறுத்தால் கருணாநிதியே அம்மோதிரத்தை மீட்டு அரசுக் காப்பகத்தில் வைத்துப் பாதுகாக்கவேண்டும். இருவருமே அதைச் செய்யவில்லை என்றாலும், நடிகர் சத்யராஜ், அதனை வலியச் சென்று தனக்கு அணிவித்த கருணாநிதியாரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். வாங்க மறுத்தால் அரசு வங்கியில் பெரியார் பெயரில் டெபாசிட் செய்து தனி லாக்கரில் வைத்திட வேண்டும். இவை இன உணர்வாளர்களின் விருப்பம் – இனப் போராளிகளின் விருப்பம் – பெரியாரியல்வாதிகளின் விருப்பம்”. (மடலுரையாடல் – தமிழர் தன்மானப் பேரவை வெளியீடு, ஜனவரி 2008)