ஞாயிறு, டிசம்பர் 10, 2017

மற்றமையை மறுக்கலாமா?

மற்றமையை மறுக்கலாமா?

மு.சிவகுருநாதன்

      பொதுப்பிரச்சினைகளில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காத, கண்டுகொள்ளாத  ஆசிரியர் சமூகங்கள் தங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் மட்டும் பொங்கி வழிவதை சமூக ஊடகங்களில் காணமுடிகிறது. இது அடிக்கடி நிகழும் வழக்கமான ஒன்றுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இதழில் பாரதி தம்பி ‘கற்க கசடற…’ என்னும் தொடரில் விடுப்பு நாள்களின் கணக்கை வெளியிட இவ்வாறு பொங்கிய நிகழ்வும் நடந்தது. நீதிபதி கிருபாகரன் விமர்சனத்திற்கு ஆசிரியர் சமூகம் பொங்கி எழுந்தது ஒருபுறம். அதற்காக வழக்குப் போட்டுக் கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலாகவே எடுத்துக்கொள்ள முடியும். 

     வேலூர் மாவட்டம் பணப்பாக்கம், திருவாரூர் மாவட்டம் குளிக்கரை ஆகிய பள்ளிகளில் நடந்த நிகழ்வுகள் அவர்களை  மீண்டும் சமூக ஊடகவெளிக்கு இழுத்து வந்துள்ளது. மற்றமையை (others) மதிக்கமால் வெளியிடப்படும் இப்பதிவுகள் பல சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஓரளவு பொறுப்புடன் திருவாரூர்  திரு .நடனம்  என்பவர் கல்வி தரம் உயர வேண்டுமானால்...” என்னும் தலைப்பில் 14 கோரிக்கைகளை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். ஆயினும் இதன் மறுபக்கத்தை காணும் தன்மையை ஆசிரியர்கள் இழந்திருப்பது மிகப்பெரிய சமூக அவலம்.  மற்றமையை (others) மறுப்பது பாசிச குணம். புத்தர், இயேசு போன்ற அறிஞர்கள் வெளிப்பாடு மற்றமையை நோக்கியுள்ளதை அவதானிக்கலாம்.

1. மதிப்பெண்ணுக்கு  முக்கியத்துவம்  தரக்கூடாது.
2. பள்ளியில்  பராமரிக்கப்படுகின்ற  தேவையில்லாத பதிவேடுகள்  நீக்கப்பட வேண்டும்.
3. பணியிடைப் ( CRC, BRC பயிற்சியால் எந்த பயனும் இல்லாததால் நீக்கப்பட வேண்டும்.
4. வகுப்பில் குழு அமைப்பில் இல்லாமல் ,சூழ்நிலைக்கு ஏற்ப ,அட்டைகளை பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியருக்கு உரிமை வேண்டும்.
5. கண்டிப்பாக ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்கியே ஆக வேண்டும்.  (தேவைப்பட்டால் இரண்டு,மூன்று பள்ளிகளை கூட இணைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால்)
6.
ஆசிரியரை பாடம் கற்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
8.
எந்த பள்ளியிலும் காலிப்பணியிடமே இருக்கக்கூடாது.
11.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியே ஆக வேண்டும்.
12.
இரண்டு தலைமையின் கீழ் சரியாக பணியாற்ற முடியாது (AEEO, SSA)
13.
பள்ளியில் ஆசிரியைகள் மகப்பேறு விடுமுறைக்குச் சென்றால் கூட,
அந்த இடத்தில் தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்பப்பட வேண்டும்.


          மேற்கண்ட 10 கோரிக்கைகள் நியாயமானவையே. அதைப் பற்றி கொஞ்சம். மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தரும் இன்றைய கல்விமுறை குறித்தும் தேர்வு சீர்திருத்தம் குறித்து கல்விப்புலத்திற்கு வெளியேதான் சில குரல்கள் ஒலிக்கின்றன. ஆசிரியர்களும் இயக்கங்களும் மவுனமாக இருப்பதேன்? 

    தேவையில்லாத பதிவேடுகள் என்பது ஒருபுறம். ஒரே புள்ளிவிவரங்களைத் திரும்பத் திரும்பக் கேட்பது, மின்னஞ்சல், தாள் மற்றும் குறுந்தகடு அனைத்திலும் கால அவகாசமின்றி உடனடியாக நேரில் வழங்க வலியுறுத்துவது மறுபுறம். சுற்றுச்சூழலை மாசாக்கும் இத்தகைய செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கன. கணினி யுகத்தில் புள்ளி விவரச் சேகரிப்பு, தொகுத்தல் ஆகியன மிக இலகுவான செயல்கள். இவற்றில் எவ்விதப் பயிற்சியும் முன் அனுபவமுமின்றி இவ்வாறு நடைபெறுகிறது. 

    பணியிடைப் பயிற்சிகள் தேவைதான். இது நாசமாய்ப் போனதற்கு அனைத்துத் தரப்பும் காரணம். புதிய சிந்தனைகளை, உத்திகளை விவாதித்துச் செயல்படுத்துவதற்குப் பதிலாக பாடக்குறிப்பு உள்ளிட்ட அனைத்தும் இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒற்றைமைய  அதிகாரத்துவததைக் கட்டமைப்பது கொடுமை. பயிற்சியின் நாள்கள், நேரம் ஆகியவற்றை அதிகரிப்பது மட்டுமே தீர்வல்ல. ஒரு சில மணி நேரம் பயிற்சி இருந்தாலும் அது உருப்படியாக  அமைய நடவடிக்கை தேவை. ஆசிரியர்களும் புதிய சிந்தனைகளை உள்வாங்க நிரம்பி வழியாதவர்களாக இருப்பதும்  அவசியம். புதிய சிந்தனை என்கிற பெயரில் ஹிட்லரின் பெருமை, இந்து மதப் பெருமை, அமெரிக்க மாடல், வளர்ச்சி போன்ற சொல்லாடல்கள் முன்வைக்கப் படுவதிலிருந்தும் எச்சரிக்கை தேவை. 

    பழைய கற்றல் – கற்பித்தல் முறைகள் சரியல்ல, அவைகள் மாற்றப்படவேண்டும் என்பது எவ்வளவு உண்மையோ பாடக்குறிப்பில் தொடங்கி அன்றாட வகுப்பறைச் செயல்பாடுகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என திணிப்பது அராஜகம். ஆனால் இதுதானே நடக்கிறது! 

     ஒரு வகுப்பிற்கு ஒராசிரியர் இருக்கத்தான் வேண்டும் இன்று அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பெரும் சரிவை சந்திக்கிறது. “அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்” என்கிற குரல் சிலரால் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. இது பேரியக்கமாக வளரவேண்டும். அருகாமைப் பள்ளிகள் கனவு நனவாக வேண்டும்.  பள்ளிகள் இணைப்பு சமவெளிகளில் எளிது. மலைப் பகுதிகளில் இது சாத்தியமல்ல. அடித்தட்டு மாணவர்களைக் கல்வியை விட்டு துரத்திவிடும். 

    காலிப்பணியிடங்களை நிரப்புதல், விடுப்புப் பதிலி ஆசிரியர்கள் நியமனம் ஆகிய கோரிக்கைகள் நியாயமானது. ஒருவர் ஒருமாதம் விடுப்பு எடுத்தாலும் அந்த இடத்தில் பதிலி ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஒப்பீட்டளவில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைவிட மேனிலை வகுப்புகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மிக அதிக அளவில் காலியாக உள்ளன.  அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்கம் (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (RMSA) ஆகிய திட்டங்ஃப்களின் மூலம் 1 முதல் 10 வகுப்பு முடிய உள்ள ஆசிரியப் பணியிடங்கள் ஓரளவுக்கு நிரப்பப்படுகின்றன. மேனிலை வகுப்புகளின் காலியிடங்கள் சொல்லி மாளாதவை. பணப்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில்  4 குழந்தைகள் தற்கொலை (!?) செய்துகொண்டதற்கும் இது ஓரு காரணம். ஊடகங்களும் ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்கள் மறந்துபோன / மறைத்துவிட்ட தகவலிது. 

    ஆசிரியர்களைக் கல்விப்பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அலுவலகப் பணிகளிலிருந்து விடுவிக்க வேண்டும். ஆயினும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல் ஆகியவற்றிலிருந்து விலக்கு கோரமுடியாது. 

     சமவேலைக்கு சம ஊதியம் என்கிற வாதம் நியாயமானது. 6 – 8 வகுப்புகள் கற்பிக்கும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதியம், பகுதி நேரம், சிறப்பு ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழக நியமனங்கள் அனைத்தும் காலமுறை ஊதியத்துடன் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களாக மாறவேண்டும். 

   இரட்டைத்தலைமை சரியல்ல. இங்கு இன்னும் கூடுதல் தலைமைகள் உள்ளன. அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்கம் (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (RMSA), பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் (AEEO, DEEO, DEO, CEO), மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET) ஆகிய பல அமைப்புகள் ஒருங்கிணைப்பின்றி இயங்குவதும், அதிகாரத்தைச் செலுத்துவதும் கல்வியை சீரழிக்கும்.  

7.
அதிகாரிகள் பள்ளியில் காணுகின்ற குறைகளை நீக்க ஆலோசனை வழங்க வேண்டுமேயொழிய, குற்றம் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே வரக்கூடாது.
14. அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் இருக்க வேண்டுமேயொழிய,  அடிமைகள் போல் பழிவாங்கத் துடிக்கக் கூடாது.
9. பயிர் நன்றாக வளர கலையை நீக்குவது போல, பள்ளியில் சரியில்லாத மாணவர்களை நீக்கவோ அல்லது திருத்தவோ முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
10 . ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்.


     இறுதியாக, 7, 9, 10, 14 ஆகிய கோரிக்கைகள் பற்றி: 

   கல்வி அலுவலர்கள் அதிகாரம் செலுத்தக் கூடாது என்பது மிகவும் நியாயமானது. ஆனால் குழந்தைகளிடத்தில் நாங்கள் அதிகாரம் செலுத்துவோம்,  அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டும் என குரலெழுப்புவது மிகவும் மோசமானதாகப் படுகிறது. அலுவலர்களுக்கு ஆசிரியர்கள் அடிமைகளல்லர். அதைப்போலவே குழந்தைகளும்  ஆசிரியர்களுக்கு அடிமைகள் அல்லவே! 

    சரியில்லாத மாணவர்களை நீக்கவும், திருத்தம் அதிகாரமும் சுதந்திரமும் வேண்டும் என்பது மிக அபத்தமான அடிப்படைவாதக் கோரிக்கை. கல்வி பற்றிய நவீன புரிதல், சட்ட நடைமுறைகள், குழந்தைகள் உரிமைகள் எவற்றையும் கணக்கில் கொள்ளாமல் மெத்தப்படித்த ஆசிரியர்கள் இம்மாதிரியான கோரிக்கைகள் வைப்பதைவிட வேதனை வேறெதுவும் இருக்க முடியாது. 

   ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு காவலரை அனுப்பி பாதுகாப்பெல்லாம் வழங்க முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள், சமூகம் ஆகியனவே ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு கேடயமாக இருக்க முடியுமே தவிர அரசாணைகள் அல்ல. கல்வி, மாணவர்கள், சமூகம் ஆகியவற்றின் உரிமைக்காகவும் பாதிப்பிற்காகவும் ஆசிரிய சமூகம் குரல் கொடுக்கும் போது இந்த சமூகம் அவர்களுக்கு பாதுகாப்பாக அமையும். எங்கோ நடக்கின்ற ஒன்றிரண்டு நிகழ்வுகளிலிருந்து இனியாவது பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால் கல்வியை மட்டுமல்ல; ஆசிரியர்களையும் யாராலும் காப்பற்ற முடியாது.

ஞாயிறு, டிசம்பர் 03, 2017

பாடத்திட்டம் – பாடநூல் – சுமை குறைய…பாடத்திட்டம் – பாடநூல் – சுமை குறைய…


மு.சிவகுருநாதன்


(28.11.2017 ‘தி இந்து’ கட்டுரையின் தொடர்ச்சியாக…) 


   கல்விக்கூடங்களைக் கோச்சிங் சென்டர்களாக ஒருபோதும் மாற்ற அனுமதிக்க முடியாது. நாங்கள் முன்பே படித்துவிட்டோம், இனி நீங்கள்தான் படிக்கவேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் முடிவுகட்டிவிட்டது கல்வியின் சாபக்கேடு. பாடநூல்கள் கல்வியின் ஒரு சிறுகருவி மட்டுமே. ஆனால் அதுவே கல்வியை ஆக்ரமிக்க வழிவகை செய்துவிட்டோம். 

    பாடப்புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு சாத்தியப்படாத ஒரு சமூகத்தில் இருக்கின்ற ஒரே கருவியான பாடநூலின் தரத்தைப் பற்றி கவலைகொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. பள்ளியோ, வீடோ பாடநூல் சாராத வாசிப்பிற்கு எவ்வித வாய்ப்பையும் தராத நிலையில் பாடநூல்களிடம் அதிக எதிர்பார்ப்பு உருவாகிவிடுவது இயல்பு. 

   வெறும் தலைப்புகள் மட்டுமே பாடநூலை வடிவமைக்கப் போதுமானதாக இருக்க முடியாது. இருக்கின்ற பாடநூல் வடிவத்தை அப்படியே நகலெடுப்பதும் சரியல்ல. மேம்போக்காக அணுகும்போதுகூட நெருடல்கள் இருக்கின்றன. இவற்றை இன்றைய ஆசிரிய சமூகத்தின் சிக்கலாகப் புரிந்துகொள்ள முடியும். ஆசிரியர்கள் வழமையான பார்வைகளிலிருந்து விடுபடவும் புதிய சூழலுக்குத் தங்களைப் பொருத்திக் கொள்ளவும் விசாலப்பார்வை வேண்டும். இவற்றை ஏற்படுத்த அரசு, கல்வித்துறை, ஆசிரிய இயக்கங்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைத்து தரப்பும் தவறிவிட்டன என்றே சொல்லலாம். 

பாடநூல்களை நெடுங்காலம் மாற்றாமலிருப்பது நல்லதல்ல. ஆண்டுதோறும் பாடங்களில் சேர்க்கை, நீக்கல் நடைபெறுவது இத்தகைய பெரும்சுமையைக் குறைக்கும். பிற பாடத்திட்டங்களை அப்படியே நகலெடுப்பதும் சரியானதாகாது. பன்முகப்பார்வை கொண்ட பாடத்திட்டம், பாடநூல்கள் இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றப்படாத பாடத்திட்டத்தை மாற்றும்போது நிறைய சிக்கல்கள் ஏற்படுவது இயற்கை. இதனால் மாணவர்களுக்கு கூடுதல் சுமை உண்டாகும். இந்தச் சுமையைக் குறைக்க மாற்றுவழிகளை யோசிக்கவேண்டும். 

   11, 12 வகுப்புகளுக்கு இவ்வாண்டு முதல் அகமதிப்பீட்டு 10% மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இது போதாது. 1 முதல் 9 முடிய உள்ள வகுப்புகளுக்கு 40% இருக்கும்போது இங்கு குறைந்தது 25% இருப்பது நலம். மொழிப்பாடங்களுக்கு இரு தாள்கள் சுமை அகற்றப்படலாம். 

   பத்தாம்வகுப்பிற்கு 25% அகமதிப்பீடு மிகவும் அவசியம். 11, 12 வகுப்புகளுக்கு மட்டும் அளித்துவிட்டு பத்தாம் வகுப்பைப் புறக்கணிப்பது நியாயமல்ல.  இப்போதுள்ள தேர்வு முறைகளைச் சீர்திருத்தாமல் வெறும் பாடநூல்கள் கல்வியை மாற்றாது. மீண்டும் மனப்பாடக் கல்வியிடம் சரணடையாமல் இருக்க இம்மாற்றம் தேவை. கல்வித்துறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மாணவர்களுக்கு உண்டாக்கும் மன உளைச்சல்கள் போதாதென்று ஊடகங்களும் ‘ஜெயித்துக் கட்டுவோம்’ என்று மாணவர்களை வதைப்பது நிறுத்தப்படவேண்டும். 


மேலும் சில கருத்துகள்:


 • இருக்கின்ற பாடநூலை அப்படியே முன்மாதிரியாக கருதுவது பலனளிக்காது. அதைத் திருத்தி எழுதும் வேலையும் சரிப்பட்டு வராது. துணை நூல்களின்றி பழைய, பிற பாடநூற்களை மட்டும் கொண்டு பாடத்திட்டத்தை வடிவமைப்பதும் சரியல்ல.
 • அரசு பொதுத்தேர்வை கணக்கில் கொண்டு பாடத்திட்டம், பாடநூல் வகுக்கும் முறை கைவிடப்படவேண்டும். 10, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதால் பாடங்கள் எளிமையாக இருக்கவேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதியாக உள்ள நிலை மாறவேண்டும்..
 • வளர்ச்சிக்குரலை மிகையாக ஒலிப்பதை விடுத்து, சூழலியல் பற்றியும் உரிய இடங்களில் பேசவேண்டும்.
 • ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மட்டுமே பாடநூல் எழுதத் தகுதியானவர்களோ போதுமானவர்களோ அல்ல. சூழலியல் பாடங்களை எழுத நன்னிலம் நக்கீரன்,  கோவை சதாசிவம் போன்ற சூழலியல் படைப்பாளிகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
 • கலைப்பாடங்கள் மட்டுமாவது மொழியாளுமை உள்ளவர்களைக் கொண்டு தமிழில் எழுத வேண்டும். பின்னர் ஆங்கிலத்தில் பெயர்ப்பது நல்லது. ஆங்கிலத்தில் எழுதி தமிழில் பெயர்க்கும் முறை மாற வேண்டும். இவ்வாறு செய்யும்போது செயற்கையான நெகிழித் தமிழ் உருவாகிறது. இது கற்றலுக்கு ஊறு விளைவிக்கிறது.
 • விடுதலைக்குப் பிந்தைய இந்திய, தமிழ்நாட்டு வரலாறுகளுக்கு இடமே இல்லை. இது நல்லதல்ல.
 • உலகமயத்திற்குப் (1991) பிந்தைய நமது பொருளியல் தாக்கம் உரிய இடங்களில் சொல்லப்பட வேண்டும்.
 • தெளிவான பொருளியல் பாடங்கள் வேண்டும். 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு தேசியப் பங்கு மாற்றகம் (NSE) வெளியிட்ட நூல்கள்  ஒப்பீட்டளவில் சமச்சீரை விட தரமானவை. எளிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விளக்காமல் பொருளியல் கோட்பாடுகளையும் வரையறைகளையும் அறிமுகம் செய்வது ஆபத்து. குழந்தைகளின் அறிவு, வயது ஆகியன கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
 • மாணவர்களே செய்யும் வகையிலான செயல்பாடுகள் திட்டமிட வேண்டும். கில்லட்டின் மாதிரியைத் தயார் செய்தல் என்பது போன்ற அபத்தமான கொலைக் கருவிகள் செயல்பாடுகள் தவிர்க்கப் படவேண்டும்.
 •   வரலாற்றைக் காலக்கிரமமாக (Chronological Order) மட்டும் சொல்ல வேண்டும் என்கிற நியதி குழந்தைகளுக்கு அநியாயம் செய்கிறது. எனவே உயர் தொடக்கநிலையிலாவது இந்தக் காலக்கிரமத்தை ஒழித்துக் கட்டினால் நல்லது.
 • பாடநூல் எழுதும்போது ஒரு பக்கச்சார்பாக நின்று எழுதாமல் குறைந்தபட்சம் எவற்றையும் நன்மை, தீமை என இருதரப்பாக அணுகும் நடைமுறை பின்பற்றப்படல் வேண்டும். விவாதங்களுக்கு உரிய இடமளிப்பது அவசியம். அப்போதுதான் மாணவர்களை அறிவு சார் சமூகமாக வளர்த்தெடுக்க முடியும். வெறும் தலையாட்டிப் பொம்மைகளைத் தயாரிப்பது நமது வேலையாக இருக்க முடியாது.
 • சமூக அறிவியல் பாடத்தைச் சுவைபடவும் மாணவர்கள் விரும்பும் வகையிலும் சொல்லித்தரும் வகையில் பாடத்திட்டம், பாடநூல் அமைய வேண்டும்.
 • 11, 12 வகுப்புத்தேர்வுகளைப் போல 10 ஆம் வகுப்புத்தேர்வையும்  வடிவமைக்க வேண்டும். அகமதிப்பீட்டு முறை பாராட்டிற்குரியது. இதை அதிகரிக்க வேண்டும். கலைப் பாடங்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 25 வழங்க வேண்டும்.
 • மொழிப்பாடங்களுக்கு இரு தாள்கள் தேவையில்லை. இரு தாள்கள் 200 மதிப்பெண்கள் என்பதால் மொழித்திறன்கள் வளர்ந்து விடுமென நம்ப இயலவில்லை.
 • 10 ஆம் வகுப்பிற்கு ஒரே தாளில் அகமதிப்பீடு போக ஒவ்வொரு தாளுக்குரிய பகுதிகளிலிருந்து தலா 35 மதிப்பெண்கள் வினா கேட்கலாம். (அகமதிப்பீட்டு மதிப்பெண்கள்: 30) 9 ஆம் வகுப்பிற்கு இரு தாள்களுக்கும் தலா 35 மதிப்பெண்கள் என்று அமையலாம். (இரு தாள்கள் வேண்டுமென்றால்…
 • அனைத்துப் பாடங்களுக்கும் 7 பாடவேளைகள் சாத்தியமில்லை. எனவே தமிழ், சமூக அறிவியல் உள்ளிட்ட 5 பாடங்களுக்கும் தலா 6 பாடவேளைகள் மட்டும் வழங்க வேண்டும். உடற்கல்வி, மதிப்புக் கல்வி, ஓவியம், இசை, கணினி அறிவியல், சூழலியல் கல்வி ஆகியவற்றிற்கு மீதமுள்ள 10 பாடவேளைகளைப் பங்கிடலாம்.
 •   சமூக நீதி, இடஒதுக்கீடு, சமூகத்தில் உள்ள பிரச்சினைகள், சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை அரசியல் அறிவியல் பகுதியில் தெளிவுபடுத்த வேண்டும்.
 • உள்ளாட்சிகளின் செயல்பாடுகள், மக்கள் உரிமைகள், கிராம சபாக் கூட்டம், காவல்துறை, நீதிமன்றச் செயல்பாடுகள், சாலை விதிகள் ஆகியவற்றை பாடநூல் கொண்டிருக்க வேண்டும். இதுவரையில் இல்லை. இனியாவது நடந்தால் கல்வி செழிக்கும்.

     அறிவியல் பூர்வமான அணுகுமுறை, சிந்தனையைத் தூண்டும் பாடங்கள், குழந்தை உரிமைகள், மனித உரிமைகள், மத நல்லிணக்கம், பன்மைத்துவ பார்வை, படைப்பாற்றல் வளம் மிக்க மொழிநடை, புனைவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள் புராணக் கதைகள் ஆகியவற்றைத்  தவிர்த்தல். அடித்தட்டு, விளிம்பு நிலை மக்கள் வாழ்வியலுக்கு இடம், புறக்கணிக்கபட்ட, மறைக்கப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்புதல், சாதி, சமய, பாலினச் சார்பற்ற பாடத்திட்டம், பாடநூல், கல்விமுறை ஆகியவை உரிய கவனம் பெறல் வேண்டும். நிலைப்பாட்டு அறிக்கையை நன்கு உள்வாங்கி பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டால் சிறப்பான பாடநூல் உருவாகும் என்பதில் அய்யமில்லை.