வியாழன், டிசம்பர் 25, 2014

திருவாரூர் – கோட்டூர் – கீழ மருதூர் – மூன்று ஆணவக்கொலைகள் உண்மை அறியும் குழு அறிக்கை

திருவாரூர் – கோட்டூர் – கீழ மருதூர் – மூன்று ஆணவக்கொலைகள் உண்மை அறியும் குழு அறிக்கை

 திருத்துறைப்பூண்டி,                                                                                                                                                                               24.12.2014.

அமிர்தவள்ளி 
     அமிர்தவள்ளி

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழ மருதூர் கிராமம் வடக்குத் தெரு பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ந.கணேசன் மகள் மாற்றுத் திறனாளியான அமிர்தவள்ளி (30), அவரைத் திருமணம் செய்துகொண்ட அதே ஊர் தெற்குத் தெரு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனியப்பன் (40), அவர்களது 38 நாள் பச்சிளம் ஆண் குழந்தை ஆகிய மூவரும் 11.12.2014 அன்று மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து, மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த அன்றும் 20.12.2014 அன்றும் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது.

இதில் பங்கு பெற்றோர்:

01. மு.சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.
02. தய்.கந்தசாமி, வழக்குரைஞர், தலித் பண்பாட்டுப் பேரவை,  திருத்துறைப்பூண்டி.
03. ச. பாண்டியன், சமூக ஆர்வலர், திருத்துறைப்பூண்டி.
04. கே. ஹரிஷ் குமார், சமூக ஆர்வலர், திருத்துறைப்பூண்டி.
05. செ.மணிமாறன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.


குழு 
                                                               குழுவினர்

    எங்கள் குழுவினர் கொலையுண்ட அமிர்தவள்ளியின் தாய் திருமதி ரோஜினாவதி (60), தந்தை திரு ந.கணேசன் (70), சகோதரர் திரு பசுபதி, அவரது மனைவி திருமதி தேவகி (வார்டு கவுன்சிலர் மற்றும் தி.மு.க. உறுப்பினர்), அவரது குடும்பத்தினர்-ஊர்மக்கள் அவர்களது இல்லத்திற்கு ஆறுதல் சொல்லவந்த தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திரு சோம.இளங்கோவன் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்தது.

உண்மையறியும் குழு

    கொலையுண்ட பழனியப்பனின் குடும்பத்தில் திருமதி கிருஷ்ணவேணி க/பெ. சிவசுப்பிரமணியன், திருமதி திலகா க/பெ. ராமகிருஷ்ணன், கொலை வழக்கில் கைதாகியுள்ள மேலப்பனையூர் துரைராஜின் சகோதரி திருமதி கமலா, பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சேவை மையப் பொறுப்பாளர் மேலப்பனையூர் திருமதி சா. ரஞ்சிதமேரி ஆகியோரையும் எங்கள் குழு சந்தித்தது.

    இடையூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு கே.முருகன், கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி எஸ்.சுப்ரியா, திருத்துறைப்பூண்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு ஆர்.அப்பாசாமி, கோட்டூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு ஞானவேல், 60 பனையூர் ஊ.ம.தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி (தி.மு.க.), ஆதிச்சபுரம் ஊ.ம.தலைவர் திரு சிவஞானம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி ரூபாவதி குமார், திரு கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தது.  
                     
 நிகழ்வுகளும் பார்வைகளும்

     திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ மருதூர் கிராமம் (60 பனையூர் ஊராட்சி) கோட்டூருக்கு மேற்குபுறமும் ஆதிச்சபுரத்திற்கு தெற்கேயும் அமைந்துள்ள ஓர் சிறு கிராமமாகும். இக்கிராமத்தில் தலித்கள், பிள்ளைமார்கள், ஓர் வன்னியர் குடும்பம் (கொலையுண்ட பழனியப்பன் மற்றும் அவருடைய சகோதரர்கள் குடும்பம்) மற்றும் மேல மருதூரில் 10 வன்னியர் குடும்பங்கள் பெரிய வேறுபாடுகளின்றி திராவிட, கம்யூனிஸ்ட் இயக்கங்களில் கலந்திருந்தாலும் ஊர் அடிப்படையில் மிகவும் ஒற்றுமையாக இருக்கின்றனர். கொலை நடந்த அன்று (11.12.2014) பழனியப்பனின் சடலத்தை வாங்க யாருமில்லாத நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் திருமதி ரூபாவதி குமார் (தி.மு.க.) அச்சடலத்தைப் பெற்று ஊர்மக்களுடன் சேர்ந்து அடக்கம் செய்த நிகழ்வை எங்கள் குழு நேரில் கண்டது.

நர்சிங் பயிற்சித் தோழிகளுடன்..  நர்சிங் பயிற்சித் தோழிகளுடன்..

    கொலை செய்யப்பட்ட அமிர்தவள்ளி (30)  வலதுகால் ஊனமுற்ற பள்ளர் இன மாற்றுத்திறனாளிப் பெண். பத்தாம்வகுப்பு வரையில் படித்தவர்; செவிலியர்ப் பயிற்சியும் பெற்றவர். ஆதிச்சபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகச் செவியராக பணிசெய்த இவர் 8 மாதங்களுக்கு முன்பு காணமற்போயுள்ளார். அவரது செல் எண் பயன்பாட்டில் இல்லாததாலும் அவரிடமிருந்து எந்தத தகவலும் இல்லாததாலும் தொடர்ந்து தேடுதல் முயற்சி செய்துள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு பழனியப்பன் குடும்பத்தினர் பழனியப்பனே அமிர்தவள்ளியை அழைத்துச் சென்றிருப்பதாக சொல்லியுள்ளனர். காவல்துறையில் புகாரளிக்க முயன்றபோது நமக்குத்தான் கேவலம்; அதனால் வேண்டாம் என அமிர்தவள்ளி தரப்பைத் தடுத்துள்ளனர்.

அமிர்தவள்ளி வீட்டில் விசாரணைஅமிர்தவள்ளி வீட்டில் விசாரணை

    தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திரு சோம.இளங்கோவன், பச்சிளம் குழந்தையைக் கொல்ல யாருக்கு மனம் வரும்? இக்கொலைகள் மிகவும் கொடூரமானவை, என்றார். கோட்டூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு ஞானவேல் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, இரு குடும்பங்களும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவை. கட்சித் தேர்தல் பணியில் இருந்ததால் சென்று பார்க்க இயலவில்லை. முரசொலியில் அறிக்கை வெளியிட்டுள்ளேன். இக்கொலைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் மன்னிக்கமுடியாது; கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

    பழனியப்பன் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவருக்கு விஜயா என்கிற மனைவி 2 ஆண் குழந்தைகள் ஓர் பெண் குழந்தை ஆகியோருடன் தனியே வசிப்பதாகக் கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே கணவன்-மனைவி சண்டையில் பிரிந்து சென்றதாகவும் அவர்கள் எங்களுடன் தொடர்பில் இல்லை என்று பழனியப்பனின் தம்பி மனைவி திலகா க/பெ. ராமகிருஷ்ணன் எங்களிடம் கூறினார். பழனியப்பனின் இரு சகோதரர்களுக்கும் இரண்டு ஆண் குழந்தைகள். பள்ளிகளில் படிக்கும் அவர்கள் இந்தக் கொலைகளுக்குப் பிறகு தேர்வுக்குக்கூட பள்ளி செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கொலை என்பது தனிப்பட்ட நபர்களை மட்டும் பாதிக்கும் ஒன்றாக இருக்கமுடியாது என்பதற்கு இது ஓர் சான்று.

    அமிர்தவள்ளியின் தாயார் ரோஜினாவதி, “நெறய பொம்புளங்கள வச்சிருந்தான்னு சொல்றீங்களே, அவங்கள விட்டுட்டு என் நொண்டிப் பொண்ண கொன்னுட்டிங்க பாவிங்களே”, என்று எங்களிடம் அழுது புலம்பினார்.

பின்னணியில் அமிர்தவள்ளியின் வீடு பின்னணியில் அமிர்தவள்ளியின் வீடு

     பழனியப்பனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக ஊடகங்களால் ஓர் கருத்து பரப்பப்படுகிறது. ஆனால் எவரிடமும் இதற்கான ஆதாரங்கள் இல்லை. இதற்கு முன்பு ஒரு திருமணம் மட்டும் நடைபெற்றிருப்பதுதான் உறுதியாகிறது. இம்மாதிரியான அறவியல் மதிப்பீடுகள் மூலம் நடைபெற்ற மூன்று கொடூரக் கொலைகளை நியாயப்படுத்தும் போக்கு நிலவுவதை எங்கள் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

விழா மேடையில்...

   பழனியப்பன் குடும்பத்து நிலங்களை அமிர்தவள்ளியின் குடும்பம் குத்தகை சாகுபடி செய்துவந்துள்ளது. பழனியப்பனின் சகோதரர் ரா.சிவசுப்பிரமணியன் வெளிநாட்டிற்கு ஆளனுப்பும் முகவராக செயல்பட்டு வந்துள்ளார். அமிர்தவள்ளியின் அக்காவை வெளிநாடு அனுப்பியவகையில் அவர்கள் அளித்த பணம் போதவில்லையென்று இவர்களுக்குத் தெரியாமல் குத்தகை நிலங்களை வேறு ஒருவருக்கு மாற்றி அளித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கசப்புணர்வில் அமிர்தவள்ளி குடும்பத்தினர் பழனியப்பன் வீட்டுக்கு வேலைகளுக்குச் செல்வதில்லை.

   அமிர்தவள்ளியின் செல் எண்ணை மேலப்பனையூர் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் செவை மையம் மூலம் பெற்று சமாதானமாகப் பேசி ஊருக்கு வரச்செய்துப் படுகொலை செய்திருக்கலாம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் அய்யம் தெரிவித்தனர். சேவை மையப் பொறுப்பாளர்  திருமதி சா. ரஞ்சிதமேரி கடந்த 8 மாதங்களாக அந்தப்பெண் இங்கு வரவுமில்லை, தொடர்பு கொள்ளவுமில்லை என்றார்.

    11.12.2014 அன்று முதலில் பழனியப்பன் சடலம் கிடைத்தது. பிறகுதான் அமிர்தவள்ளி சடலம் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விரைவு முதல் தகவல் அறிக்கையில் (எண்: 216/2014, நாள்: 11.12.2014) இ.த.ச. பிரிவு 302 மட்டும் போடப்பட்டுள்ளது. இதில் காவல்துறை மிகவும் மெத்தனமாக நடந்துகொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. 60 பனையூர் ஊ.ம.தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி (தி.மு.க.), ஆதிச்சபுரம் ஊ.ம.தலைவர் திரு சிவஞானம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி ரூபாவதி குமார் உள்ளிட்ட அப்பகுதி அனைத்துகட்சி ஊர்ப் பொதுமக்கள் திரண்டு சாலைமறியல் செய்தபிறகு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமைத் தடுப்புச் சட்டம்  போடுவதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

   கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி எஸ்.சுப்ரியாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, முதலில் இ.த.ச. பிரிவு 302 மட்டும் போடப்பட்டதாகவும் பிறகு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமைத் தடுப்புச்  சட்டப் பிரிவு (PCR ACT) சேர்க்கப்பட்டிருக்கிறது என்றார். மேலும், இது அமிர்தவள்ளி கொலைக்கு மட்டும் பொருந்தும். நீதிமன்றத்தில் இவை இணைத்துத் தாக்கல் செய்யப்படும் என்றார்.  முதல் தகவல் அறிக்கை நகலைக் கேட்டபோது, இது மிகவும் 'சென்சிட்டிவ்' ஆன கேஸ், எனவே முதல் தகவல் அறிக்கை நகலைத் தரமுடியாது என மறுத்துவிட்டார். இந்த முதல் தகவல் அறிக்கையுடன் (எண்: 216/2014, நாள்: 11.12.2014) குழந்தைக் கொலையை இணைத்து இ.த.ச. பிரிவு 305 (V) (ii) போடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

   உள்ளூர் அளவில் அனைத்துகட்சியைச் சேர்ந்த பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராடினாலும் ஒன்றியம், வட்டம், மாவட்டம் போன்ற உயர்மட்ட கட்சி அமைப்புகள் இக்கொலைகளைக் கண்டிக்காத மவுன சாட்சியாக இருக்கும் நிலையை எங்கள் குழு பதிவு செய்கிறது.

    பழனியப்பன் – அமிர்தவள்ளிக்கு ஆண்குழந்தை பிறந்ததால் சொத்தில் பங்கு கேட்பார்கள் என்ற கோணத்தில் கொலை செய்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பழனியப்பனுக்கு ஏற்கனவே முதல் மனைவி மூலமாக 3 குழந்தை இருக்கும்போது சொத்திற்காக இக்குழந்தை உள்ளிட்ட அனைவரையும் கொன்றதாக சொல்லும் வாதம் ஏற்புடையதாக இல்லை. இக்கொலையில் சாதியம் மட்டும் செயல்பட்டிருப்பதையும் இது முற்றிலும் சாதி ஆணவக்கொலைகள் என்பதை எங்கள் குழு உறுதி செய்கிறது.

    மேலும் இக்கொலைகளில் தொடர்புடைய பழனியப்பனின் சகோதரர்கள் ரா.சிவசுப்பிரமணியன் (45), ரா.ராமகிருஷ்ணன் (43), உறவினர் மகேந்திரன் (25) மற்றும் இவர்களது நண்பர் மேலப்பனையூர் துரைராஜ் (50) ஆகிய நால்வர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மேலப்பனையூர் துரைராஜ் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதன்மூலம் இது வெறும் சொத்து-குடும்பப் பிரச்சினை என்கிற வாதம் அடிபட்டுப்போகிறது.
                             
எமது பரிந்துரைகள்:
 •      தமிழகத்தில் இம்மாதிரியான சாதி ஆணவக்கொலைகள் அடிக்கடி நிகழ்வதைத் தடுக்க இது தொடர்பான சிறப்புச்சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவரவேண்டும்.
 •       தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமைத் தடுப்புச்  சட்டப்படியும் கொலை செய்யப்பட்டவர் மாற்றுத்திறனாளி மற்றும் பச்சிளம் ஆண் குழந்தை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு அமிர்தவள்ளியின் பெற்றோருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்.
 •       இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்ய உத்தரவிடவேண்டும். இக்கொலை வழக்கை மீண்டும் விசாரித்து பின்னணியில் உள்ள அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மிகுந்த மெத்தனமாகவும் கவனக்குறைவுடனும் இவ்வழக்கைக் கையாண்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஆறுமுக சேர்வை எதிர் தமிழ்நாடு அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி (2011) நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
 •       தாழ்த்தப்பட்டோர் மீது இத்தகைய வன்கொடுமைகள் நிகழ்த்தப்படும்போது இயக்கங்கள் உட்சாதி மனநிலையோடு பிரச்சினையை அணுகுவது கவலையளிக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் சாதியத்தை ஒழிக்க முன்வரவேண்டும். சாதியொழிப்பை கட்சித் தொண்டர்களுக்கு முன்நிபந்தனையாக்க வேண்டும்.
 •      இடதுசாரி மற்றும் திராவிட இயக்கங்கள் தவிர இந்தப்பகுதியில் சொல்லிக்கொள்ளும்படியான இயக்கங்கள் இருந்தும் இந்த சாதி ஆணவக்கொலைகளைக் கண்டுகொள்ளாத நிலையில் புதிய தமிழகம் கட்சி அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் 27.12.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது சற்று ஆறுதலளிக்கிறது.
 •      அமைதி காத்த இப்பகுதி பொதுமக்களையும் அறவழியிலான போராட்டங்கள் மூலம் காவல்துறையை நடவடிக்கை எடுக்கத் துணை புரிந்த அனைத்து தரப்பினரையும் எங்கள் குழு பாராட்டுகிறது.

தொடர்புக்கு:

தய்.கந்தசாமி, வழக்குரைஞர்,
27/7, ஏ.எஸ்.என். காம்ப்ளெக்ஸ், 
திருத்துறைப்பூண்டி- 614 713.  
செல்:   +91 9486912869 
மு.சிவகுருநாதன்          
+91 9842802010  

புதன், அக்டோபர் 29, 2014

எஸ்.பி. பட்டணம் காவல் நிலையக் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை

எஸ்.பி. பட்டணம் காவல் நிலையக் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை


   மதுரை,
  அக்டோபர் 29, 2014.

     சென்ற அக்டோபர் 14 அன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை காவல் சரகம், எஸ்.பி. பட்டணம் என அழைக்கப்படும் சுந்தரபாண்டியன் பட்டனம் காவல் நிலையத்தில் காட்டுவா எனபவர் மகன் செய்யது முஹம்மது (24) என்பவர் அந்தக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் (எஸ்.அய்) அ.காளிதாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைத்து நாளிதழ்களிலும் விரிவாக வெளிவந்தது. அவ் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.அய்.டி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், காளிதாஸ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இராமநாதபுரம் தலைமைக் காவல் நிலையத்தில் உள்ளார் எனவும், கொல்லப்பட்ட செய்யது முஹம்மது குடும்பத்திற்கு அரசு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு தந்துள்ளது என்பதும், பல்வேறு இயக்கங்களும் செய்யது முஹம்மது குடும்பத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றன என்பதும், சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் இருந்த ஆறு காவலர்களும் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதும் தொடர்ந்து வந்த செய்திகள்.

இச் சம்பவம் குறித்த உண்மைகளை அறிய ‘மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisations – NCHRO) சார்பாக

பேரா. அ.மார்க்ஸ் (தலைவர், NCHRO),
வழக்குரைஞர் ரஜினி (தலைவர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்- PUHR),
 வழக்குரைஞர் ஏ.சையது அப்துல் காதர், மதுரை,
வழக்குரைஞர் எஸ்.என்.ஷாஜஹான், மதுரை

ஆகியோர் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழு சென்ற அக் 27, 28 தேதிகளில் தொண்டி, திருவாடனை, எஸ்.பி. பட்டனம், இராமநாதபுரம், மதுரை ஆகிய ஊர்களுக்குச் சென்று எஸ்.ஐ.காளிதாசால் கொல்லப்பட்ட செய்யது முஹம்மதுவின் நோயுற்ற விதவைத் தாய் பாத்திமா (44), தாய்வழித் தாத்தா சதக்கத்துல்லா, சென்னையில் ஓட்டல் வேலை செய்யும் அவரது தம்பி நூர் முகம்மது, கொல்லப்படுவதற்கு முன்பாக காவல் நிலையத்தில் செய்யது முஹம்மதை பார்த்த அவரது மாமன்கள் சகுபர் அலி மற்றும் அபு தாஹிர், செய்யது முஹம்மது காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டுப் பின் சுடப்பட்டபோது அருகில் உள்ள குளத்தில் தனது ஆட்டோவைக் கழுவிக் கொண்டிருந்த ஷேக் தாவூது, காளிதாசின் காயத்திற்கு வைத்தியம் செய்ய எனச் சொல்லி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட மருந்துக்கடை உரிமையாளர் ரமேஷ்,  காவல் நிலையத்திற்கு நேர் எதிரில் உள்ள மசூதியின் இமாம் அப்துல் காதர், கொல்லப்பட்ட செய்யது முஹம்மதுவின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆசாத், அன்று மாலை இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த காளிதாசை நேரில் பார்த்த இராமநாதபுரம் அஸ்கர் அலி மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்டச் செயலர் ஜமீல் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டது.

தொண்டி காவல் நிலையத்தில் இது தொடர்பான வழக்கை முதலில் விசாரித்த வட்ட ஆய்வாளர் எம். துரைப்பாண்டி, எஸ்.பி பட்டனம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் எம்.பாலுச்சாமி, வழக்கை தற்போது விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி யின் மதுரை டி.எஸ்.பி மன்மத பாண்டியன் ஆகியோரிடமும் பேசியது. திருவாடனை நீதிமன்றத்தில் இக்குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் இக்கொலைச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் 90/2014 மற்றும் 92/2014 ஆகியவற்றைப் பார்வையிட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டனர். மற்றொரு அறிக்கையான 91/2014 யிம் பிரதியை வழக்குரைஞர்களிடமிருந்து பெற்றுக் கொண்டோம். பிரேத பரிசோதனையின்போது இருந்த அருகில் மதுரை வழக்குரைஞர் ஜின்னாவைச் சந்தித்து கொல்லப்பட்ட சையத் முஹம்மதுவின் உடலின் புகைப்படங்களையும் பெற்றுக் கொண்டோம்.

இராமநாதபுர நீதிமன்ற வளாகத்தில் சையது முஹம்மது கொலை தொடர்பாக விசாரணை செய்துகொண்டிருந்த நீதிமன்ற நடுவர் (JM 2) திரு வேலுசாமி அவர்களைச் சந்தித்து சாட்சிகள் அளிக்கும் முழு விவரங்களையும் பதிவு செய்யுமாறு எம் குழுவில் இருந்த வழக்குரைஞர்கள் வேண்டிக் கொண்டனர். இத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச்.ஜவாஹுல்லாஹ் அவர்களிடமும் பேசினோம்’
சையது முஹம்மதுவை துப்பாக்கியால் சுட்டு அவரது கொலைக்குக் காரணமான எஸ்.ஐ.காளிதாசுடன் தொலைபேசியில் பேசினோம்.

செய்யது முஹம்மது மீது தன்னைக் கொலை செய்ய வந்ததாகப் புகார் அளித்துள்ள ஆட்டோ ரிப்பேர் மெக்கானிக் அருள் தாஸ், அருகில் சலூன் கடை வைத்துள்ள சரவணன் ஆகியோரை என்ன முயன்றும் சந்திக்க இயலவில்லை. தொலைபேசியில் பேசவும் அவர்கள் தயாராக இல்லை. சம்பவத்திற்குப் பிறகு அருள்தாஸ் கடை திறக்கவே இல்லை.

செய்யது முஹம்மதுவின் கொலை தொடர்பாகக் காவல்துறை தரப்பில் கூறுவது

எஸ்.பி பட்டனம் காவல் நிலையத்தில் 90,91.92/2014 என மூன்று முதல் தகவல் அறிக்கைகள் கொலை நடந்த அன்று (14.10.2014) பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது (90/2014) ஆட்டோ மெகானிக் அருள்தாஸ் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் செய்யது அலி மீது அருள்தாசைக் கொலை செய்ய முயன்றதாகவும் திட்டித் தாக்கியதாகவும் {IPC 307, 294 (பி), 427} குற்றம் சாட்டியுள்ள அறிக்கை: இரண்டாவது (91/2014) எஸ்.ஐ காளிதாஸ் மீது செய்யது அலியின் கொலை குறித்துப் பதியப்பட்டுள்ள சந்தேக மரண {CrPc 176(1)} வழக்கு குறித்தது. மூன்றாம் அறிக்கை (92/2014) செய்யது அலி மீது காளிதாசைக் கொலை செய்ய முயற்சித்ததாக {IPC 307} அவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் பதியப்பட்டுள்ள வழக்கு.

இவை மூன்றும் சி.பி.சி.அய்.டி இவ்வழக்கு விசாரணையை எடுத்துக் கொள்வதற்கு முன் கொலை நடந்த காவல் நிலையத்தில் பதியப்பட்டவை,

இந்த முதல் தகவல் அறிக்கைகளின் ஊடாகக் காவல்துறை சொல்வது இதுதான்:

“சம்பவம் நடந்த அன்று மதியம் 1.15 மணி அளவில் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள அருள்தாஸ் என்பவரின் ஆட்டோ ரிப்பேர் கடையில் தன் நண்பர் சாலிஹூ என்பவர் ரிப்பேர் செய்வதற்குக் கொடுத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல செய்யது முஹம்மது அங்கு சென்றார். அப்போது  நடந்த வாக்குவாதத்தின் போது ஆடு உரிக்கும் கத்தி ஒன்றால் செய்யது முஹம்மது அருள்தாசைக் கொல்ல முயற்சித்தார். இது தொடர்பாக 3 மணி அளவில் நிலையத்திற்கு வந்து புகாரளித்த அருள்தாஸ், தான் ஒரு கிறிஸ்தவப் பள்ளர் என்பதற்காகவே அவர் இப்படிச் செய்ததாகவும் கூறுகிறார். சிறிது நேரத்தில் மீண்டும் செய்யது முஹம்மது அருள்தாசின் கடைக்குச் சென்று தகராறு செய்வதைக் கேள்விப்பட்டு காளிதாஸ், மாலை 4 மணி அளவில் இரு காவலர்களை அனுப்பி அவரை அழைத்து வரச் சொன்னபோது அவர்களுடன் வந்த செய்யது முஹம்மது அசிங்கமான வார்த்தைகளால் காவல்துறையினரைத் திட்டிக் கொண்டும் எச்சரித்துக் கொண்டும் வந்தார். நிலையத்தில் அவரைச் சோதனை செய்தபோது ஓரடி நீளமுள்ள மரப்பிடி போட்ட கத்தியை செய்யது முஹம்மது தன் வெள்ளைக் கைலிக்குள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்து அதை எடுத்து எஸ்.ஐயின் மேசை மீது வைத்துவிட்டு வேரு வேலையாக அறைக்கு வெளியே வந்துள்ளனர். சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூடுச் சத்தம் கேட்டவுடன் உள்ளே சென்ற போது தன் உடலில் இரு இடங்களில் இரத்தக் காயங்களுடன் காளிதாஸ் நின்றிருந்ததையும் கீழே செய்யது முஹம்மது விழுந்து கிடந்ததையும் கண்டனர். தன்னை மேசையிலிருந்த கத்தியை எடுத்து செய்யது முஹம்மது வெட்டிக் கொல்ல முயற்சித்ததாகவும், தான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவரைச் சுட்டதாகவும் காளிதாஸ் சொன்னார். தவ்ஹீத் ஜமாத் ஆம்புலன்சை வரவழைத்து சுடப்பட்ட பின்னும் உயிருடன் இருந்த செய்யது முஹம்மதுவை இரு காவலர்களின் துணையோடு இராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பினர். காயம் பட்டிருந்த காளிதாஸ் அங்கிருந்த வாகனத்தில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதல் சிக்கிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மனைக்கு அனுப்பப்பட்டார். செய்யது முஹம்மதுவின் உயிர் மருத்துவ மனைக்குச் செல்லும் முன்பே ஆம்புலன்சிலேயே பிரிந்தது.”

செய்யது முஹம்மதுவின் உறவினர்கள் கூறுவது

“காலை 10 மனி அளவில் வெளியே சென்ற செய்யது  முஹம்மது நண்பர்களோடு கேரம் விளையாடிவிட்டு மதியம் 1 மணி வாக்கில் அருள்தாசின் ஆட்டோ ரிப்பேர் கடைக்கு நண்பரின் வண்டியை எடுக்கச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு வரவே கூப்பிடு தூரத்தில் உள்ள காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வந்து இருவரையும் அழைத்துச் சென்றனர். அருள்தாசிடம் புகார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டு செய்யது முஹம்மதுவை அங்கேயே உட்காரச் சொல்லியுள்ளனர். இதை காவல் நிலையத்திற்கு நேர் எதிரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த சாதிக் அலி, மு. சுல்தான் ஆகியோர் பார்த்துள்ளனர். செய்தி அறிந்து சுமார் 2.30 மணி அளவில் செய்யது அலியின் மாமன்கள் மு.சகுபர் அலி மற்றும் மு.செய்யது அபு தாஹிர் ஆகியோர் காவல் நிலையத்திற்குச் சென்ற போது அங்கு ஜட்டியுடன் எஸ்.ஐ அறையில் செய்யது முஹம்மது உட்கார வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர். விசாரித்து அனுப்புவதாக அங்கிருந்த காவலர்கள் கூறியுள்ளனர். செய்யது முஹம்மது கூச்சத்துடன் மாமன்களைப் போகச் சொல்லியுள்ளார். சுமார் 3.30 மணி வாக்கில் காவல் நிலையத்திற்கு வந்த எஸ்.அய் காளிதாஸ் மூர்க்கமாக செய்யது முஹம்மதுவை தாக்கியுள்ளார். அந்தச் சத்தத்தை அருகே ஆட்டோ கழுவிக் கொண்டிருந்த ஷேக் தாவூத் முதலானோர் கேட்டுள்ளனர். சுமார் 4 மணி வாக்கில் தொழுகைக்கு வந்த சாதிக் என்பவர் செய்யது முஹம்மதுவின் அலரல் சத்தம் கேட்டு சகுபர் அலிக்கு போன் செய்துள்ளார். சகுபர் அலி ஓடி வந்துள்ளார். சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூடுகள் கேட்டுள்ளன. வெளியே வந்த காளிதாஸ் எல்லோரையும் விரட்டியுள்ளார். எஸ்.ஐயின் அறையில் ரத்த வெள்ளத்தில் செய்யது அலி கிடந்தார்.

“சற்று நேரத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் ஆபுலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. பிணமாக இருந்த செய்யது முஹம்மதுவின் உடலை அதில் ஏற்றி அனுப்பியுள்ளனர். காளிதாஸ் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர் ஒருவரின் மாருதி ஸ்விஃப்ட் காரில் ஏறிச் சென்றுள்ளார். மாலை ஆறு மணிக்குப் பின் தொலைக்காட்சி செய்தியைக் கண்டபின்புதான்செய்யது முஹம்மதுவின்  வீட்டில் உள்ளவர்களுக்கு முழு விவரமும் தெரிந்தது. செய்யது முஹம்மதுவை அடித்தே கொன்ற  காளிதாஸ் பின் அவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தானே உடலில் சில இடங்களில் கீறிக் கொண்டு செய்ய்து முஹம்மது தன்னைக் கொல்ல முயற்சித்ததாகக் காளிதாஸ் பொய் சொல்லுகிறார்.”

இவை இரு தரப்பிலும் செய்யது முஹம்மது கொலையுண்ட சம்பவம் குறித்துக் கூறப்படும் செய்திகள்.

பிறகு நடந்தவை

மேற்குறித்த இரு கூற்றுகளுக்கும் இடையில் உள்ள முரண்களை ஆராயும் முன் நாங்கள் எங்கள் அறிந்த இதர தகவல்கள்:
ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகத் தன்னை அழைத்துத் தன் உடம்பில் இருந்த மூன்று காயங்களுக்கும் முதலுதவி செய்யுமாறு காளிதாஸ் கேட்டதாகவும்,  மருத்துவமனைக்குச் செல்லுமாறு தான் அறிவுரைத்ததாகவும் எஸ்.பி பட்டணத்தில் மருந்துக் கடை வைத்திருக்கும் ரமேஷ் கூறினார். ரமேஷ் அங்கிருந்ததை ஆம்புலன்ஸ் டிரைவர் ஆசாத் உறுதி செய்தார். பின்னர் காரில் ஏறி வெளியேறிய காளிதாஸ் ரமேஷின் மருந்துக்கடையில் காரை நிறுத்தி பஞ்சு வாங்கிச் சென்றதாகவும் அவர் கூறினார். முன்னதாகப் போலி டாக்டர் என காளிதாஸ் இவர் மீது வழக்குப் பதிந்துள்ளார். உங்கள் வழக்கைச் சொல்லி மிரட்டித் தன் உடம்பில் காயம் உள்ளதாகப் பொய் சொல்லச் சொன்னாரா எனக் கேட்டபோது, அப்படியில்லை எனவும், ஆபத்தில்லாத இலேசான காயங்கள்தான் அவை எனவும், அந்தக் காயங்களை காளிதாசே கூட ஏற்படுத்திக் கொண்டார் எனச் சொல்வதர்கு வாய்ப்புள்ளது எனவும் ரமேஷ் எங்களிடம் கூறினார்.

ஆம்புலன்சில் இறந்த உடலை ஏற்றுவதைக் கண்ட டிரைவர் ஆசாத் பிணத்தை ஏறுவதற்கு என ஏன் முன்பே சொல்லவில்லை எனக் கேட்டபோது ஒன்றும் பேசக்கூடாது எனவும், இடையில் யார் கைகாட்டினாலும் நிறுத்தக் கூடாது எனவும் டி.எஸ்.பி சேகர் மிரட்டியுள்ளார். அவரது செல் போனையும் பிடுங்கி வைத்துள்ளார். ஆம்புலன்ஸ் திருப்பாலக்குடி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு எஸ்.பி மயில்வாகனன், ஏடி.எஸ்.பி என்கவுன்டர் புகழ் வெள்ளத்துரை ஆகியோர் இருந்துள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் வீடியோ எடுக்கப்பட்டபின் ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

நான்கு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். முஸ்லிம் அமைப்புகள் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. உடம்பில் மூன்று துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் உட்பட மொத்தம் 18 காயங்கள் இருந்துள்ளன.

வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மார்ற வேண்டும் முதலான கோரிக்கைகளை முன்வைத்து கொல்லப்பட்ட செய்யது முஹம்மதுவின் மாமன் உயர் நீதிமன்றக் கிளையை அணுகியபோது அவ்வாறே வழக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், அரசு ரூ 5 இலட்சம் இழப்பீடு வழங்க இருப்பதாகவும் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. துப்பாக்கிக் குண்டு பாய்தல் தொடர்பான நிபுணர்களும் (ballistic experts) பிரேத பரிசோதனையின் போது கூட இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை காவல்துறை சார்பில் கடுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இறுதியில் மனுவில் கேட்டுக் கொண்டபடி சி.பி.சி.ஐ.டி விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் எனவும், ரூ 5 இலட்சம் இழப்பீடு என்பது அதிகப்படுத்தப்பட வேண்டும் எனவும், குற்றம் நடந்த இடம் அதே வடிவில் சீல் வைத்துக் காக்கப்பட வேண்டும் எனவும், செய்யது அலியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்பட வேண்டும் எனவும் நீதியரசர் கிருபாகரன் ஆணையிட்டார் (MD No. 19158 of 2014).

தற்போது இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி யின் மதுரை டி.எஸ்.பி மன்மத பாண்டியனை நாங்கள் சந்தித்தபோது எங்கள் வருகை குறித்து சென்னையில் உள்ள தங்கள் எஸ்.பிக்கு அவர் தெரிவித்ததாகவும் விசாரணைக்குத் தடை ஏதும் ஏற்படும் வகையில் எதுவும் பேச வேண்டாம் எனத் தனக்கு அறிவுரைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விசாரணை மிக சரியாக மேற்கொள்ளப்படுவதாக எங்களிடம் உறுதி அளித்த அவர் இன்னும் 15 நாட்களுக்குப் பின் வந்தால் மேலும் பலவற்றைக் கூறமுடியும் என்றார்.

தற்போது காவல்துறைக் கண்காணிப்பில் இராமநாதபுரம் தலைமையகத்தில் இருப்பதாகக் கூறப்படும் காளிதாசை நாங்கள் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தோம். இப்போது பரவாயில்லை என்றார். செய்யது முஹம்மது உங்களை வெட்டி வலது கையில் காயம்பட்டிருந்ததால் புக்காரைக்கூட அந்தக் கைகளால் எழுத இயலவில்லை, எனவே வாயால் சொல்லி எழுதப்படுவதாக உங்கள் புகாரில் கூறியுள்ள நீங்கள் எப்படி சார் துப்பாக்கியால் மூன்று முறை சுட முடிந்தது எனக் கேட்டபோது அவர் தொடர்பைத் துண்டித்தார். மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டு மற்றவர்களிடம் கருத்தைக் கேட்டுவிட்டோம். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையும் அப்படியே எங்கள் அறிக்கையில் பதிவு செய்வோம் என நாங்கள் சொன்னபோது, “என்னை hurt பண்ணாதீங்க சார் hurt பண்ணாதீங்க. நான் பொய் சொல்றேன், அவன் ஒண்ணுமே பண்ணல அப்டியெல்லாம் சொல்லி hurt பண்ணாதீங்க” எனச் சொல்லித் தொடர்பை மீண்டும் துண்டித்தார்.

காவல் துறையின் கூற்றில் உள்ள முக்கிய சில முரண்கள்

1.மதியம் சுமார் 1.30 மணி அளவிலேயே செய்யது முஹம்மது காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டதற்கு நேரடி சாட்சிகள் உள்ளன. 2.30 மணி அளவில் அவர் எஸ்.ஐ அறையில் ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட்டிருந்ததை சையதின் மாமன்கள் சகுபர் அலி மற்றும் அபு தாஹிர் ஆகியோரும் பார்த்துள்ளார். ஆனால் 4 மணி அளவில்தான் காவலர்களை அனுப்பி அவரைக் கூட்டி வந்ததாகக் காவல்துறை சொல்வது அப்பட்டமான பொய்.

2.மாலை நான்கு மணிக்குத்தான் செய்யது முஹம்மது காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் காளிதாஸ் விசாரிக்கத் தொடங்கியவுடன் செய்யது முஹம்மது மேசை மீதிருந்த கத்தியை எடுத்து அவரைக் குத்த, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி காளிதாஸ் மும்முறை அவரைச் சுட்டு வீழ்த்தியதாகவும் இராமநாதபுரம் காவல்துறை கூறுகிறது. அப்படியானால் நாலு மணிக்குப் பிறகு விசாரணை தொடங்கி 4.30க்குள் எல்லாம் முடிந்து விட்டதாக ஆகிறது. ஏன் எனில் சுமார் 4.30 மணிக்கெல்லாம் தனக்குக் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததாக ஆம்புலன்ஸ் டிரைவர் கூறுகிறார். எனில் செய்யதின் உடம்பில் 18 காயங்கள் எப்படி வந்தன?

3. நாலு மணிக்குப் பின் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட சையத் முஹம்மது தேகப் பரிசோதனை செய்யப்பட்ட போது அவரது கைலியில் ஓரடி நீளமுள்ள கத்தி கண்டெடுக்கப்பட்டு அவரது கைக்கெட்டுமாறு எஸ்.ஐயின் மேசை மீது வைக்கப்பட்டதாம். ஆனால் 2.30 மணி வாக்கிலேயே அவர் உடை எல்லாம் கழற்றப்பட்டு வெறும் ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட்டிருந்துள்ளார். எனில் கைலிக்குள்ளிருந்து கத்தி உருவப்பட்டது எப்படி? கைலி மற்றும் சட்டையுடன் அவர் அடித்தும் சுட்டும் வீழ்த்தப்பட்டிருந்தால் குண்டுக் காயங்கள் மற்றும் இரத்தக்கறையுடன் கூடிய செய்யது முஹம்மதுவின் ஆடைகள் என்னாயிற்று?

4. அந்தக் காவல் நிலையம் சுமார் 1000 சதுர அடிக்குள் உள்ள ஒரு சிறிய கட்டிடம். எஸ்.ஐயினுடைய அறைக்கும், வெளியே காவலர்கள் நின்றிருந்த அறைக்கும் சுமார் 5 அடித் தொலைவு கூட இருக்காது. மூன்று முறை கத்தியால் குத்தி, மூன்று முறை துப்பாக்கியால் சுடும் வரை பிற காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? உள்ளே நுழைந்து கத்தி வைத்துள்ள நபரைக் கொல்லாமலேயே காளிதாசைக் “காப்பாற்றியிருக்க” இயலாதா?

5.காளிதாஸ் தன் வாக்குமூலத்தில் மூன்று முறையும் செய்யதை இடது மார்பில் சுட்ட்டதாகவே கூறுகிறார். ஆனால் குண்டுக் காயங்களில் இரண்டு இரு கைகளில் உள்ளன. இதென்ன? முதல் இரு குண்டுகள் சுடப்பட்ட பின்னும் கூட செய்யது அலி கொலை செய்யும் நோக்கில் அத்தனை ஆவேசமாக ஓரடி நீளமுள்ள கத்தியைக் கையால் சுழற்றித் தாக்கினார்  என்பது நம்பக் கூடியதா?

6. புகாரைக் கையால் எழுதக் கூட இயலவில்லை எனத் தன் வாக்கு மூலத்தில் கூறும் காளிதாஸ் எப்படி துப்பாக்கியை மூன்று முறை காயம் பட்ட கை மற்றும் விரலால் சுட்டிருக்க இயலும்?

7. ஆம்புலன்சில் ஏற்றும்போது செய்யது உயிருடன் இருந்தார் எனக் கூறும் காளிதாஸ் ஏன் தானும் சிகிச்சைக்கும் அதே வண்டியில் சென்றிருக்கக் கூடாது?

8. ஆம்புலன்சில் ஏற்றப்படும் போது பிணத்தைத் தூக்கி எறிந்துள்ளனர். டிரைவர் ஆசாத் அதைக் குறிப்பிடுகிறார். உயிருடன் இருப்பவருக்கும், பிணத்திற்கும் வெவ்வேறு படுக்கைகள் உண்டு. உயிருடன் இருப்பவருக்கான படுக்கையில் பிணத்தை ஏன் ஏற்றுகிறீர்கள் என அவர் கேட்டுள்ளார். இதெல்லாம் உண்மையா இல்லையா? ஆம்புலன்சில் ஏற்றப்படும்போது செய்யது உயிருடன் இருந்ததாக ஏன் இந்தப் பொய்?

9. துப்பாக்கிச் சூடு நடந்த பின்னும் காளிதாஸ் நடந்து திரிந்துள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் நடந்து சென்றதை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். அவரை அப்போது படம் எடுக்கவோ, இல்லை கட்டு போடும்போது படம் எடுக்கவோ கூடாது என அங்கு படம் எடுக்க முயன்றவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்டுகள் போடப்பட்டு அவர் “ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டபோது”  கூப்பிட்டுப் படம் எடுக்குமாறு சொல்லப்பட்டுள்ளது.

10. தன்னை ஆடு உரிக்கும் கத்தியால் செய்யது கொல்ல வந்ததாக அருள்தாசிடம் புகார் பெறப்பட்டுள்ளது. அப்படி நடந்தது மதியம் 1.15 மணிக்கு எனச் சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவு சீரியசான விசயத்திற்கு கூப்பிடு தூரத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு அரைப் பக்க புகாரை எழுதித்தர மாலை 3 மணிவரை ஆகியுள்ளதாகக் கூறப்படுவதும், ஏதாவது அந்தக் “கொலை முயற்சிக்கு” நோக்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவப் பள்ளர் இனத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகை உள்ளது போலக் காட்டுவதும் அபத்தம். அப்படியான எந்த முரணும் எஸ்.பி பட்டணத்தில் அவ்விரு சமூகங்களுக்கும் இடையில் இல்லை.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்
 1. இது அப்பட்டமான ஒரு காவல் நிலையக் கொலை. செய்யது முஹம்மது கடுமையாக அடிக்கப்பட்டுள்ளார். பின் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். அவரிடம் கத்தி இருந்தது என்பதும் அதனால் அவர் காளிதாசைக் கொல்ல வந்தார் என்பதும் அப்பட்டமான பொய்கள். செய்யது முகம்மதுவுக்குக் குடிப்பழக்கம் இருந்த போதிலும் அடிப்படையில் அமைதியானவர் என்பதையும் இதுவரை அவர் மீது எந்த வழக்கும் கிடையாது என்பதையும் அனைவரும் சுட்டிக் காட்டினர். அடித்தது அல்லது சுட்டது அல்லது இரண்டினாலும் எஸ்.ஐயின் அறையிலேயே செய்யது கொல்லப்பட்டுள்ளார். இந்த மூன்றில் எந்த வகையில் மரணம் நிகழ்ந்த போதும் அது கொலைதான். ஏனெனில் செய்யதிடம் காவல்துறை சொல்வது போலக் கத்தி ஏதுமில்லை. காளிதாசின் உடம்பில் உள்ள காயங்கள் தன்னைக் கொலைக் குற்றத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அவரே ஏற்படுத்திக் கொண்ட மெல்லிய பொய்க் காயங்கள்.
 2. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டியின் டி.ஐ.ஜி கணேச மூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன், “இறந்த பின்பே சுடப்பட்டுள்ளது உறுதியானால் எஸ்.ஐ மீது கொலை வழக்கு பதிய தயாராக உள்ளோம்”  (தி இந்து, அக் 27) எனக் கூறியுள்ளது ஏமாற்றமளிக்கிறது. அதாவது செய்யது முஹம்மது உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால் அது கொலை வழக்கு இல்லையாம். தற்காப்புக்காகச் சுடப்பட்டதாம். ஆக செய்யதிடம் கத்தி இருந்தது எனவும், அதால் அவர் காளிதாசைக் கொல்ல வந்தார் என்பதும் அவர் உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டார் என்பதாலேயே உண்மை ஆகிவிடுகிறது என்பது டி.ஐ.ஜியின் கூற்றிலிருந்து பெறப்படுகிரது. அவர் கத்தி வைத்திருந்ததற்கு வேறு நிரூபணம் தேவை இல்லை என்றாகிறது. இதை ஏற்க இயலாது.
 3. துப்பாக்கியால் சுட்டது காளிதாஸ்தான் என்ற போதிலும் அன்று காவல் நிலையத்தில் இருந்த மற்றவர்களும் பல்வேறு நிலைகளில் இக் குற்றத்தில் பங்கு பெற்றுள்ளனர், மற்ற காவலர்களும் செய்யதைத் தாக்கியுள்ளனர். குற்றச் செயலை மறைக்கவும், பொய்யான முதல் தகவல் அறிக்கைகள் எழுதுவது, சாட்சியம் சொல்வது உட்படப் பல்வேறு வகைகளில் பங்குபெற்றுள்ளனர். காவல் நிலையத்தில் வாட்டர் டேங்க் ஒன்றைக் கட்டுவதற்காகப் பார்வையிட வந்த ரத்தினம் என்பவர் இதை நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளதைச் சிலர் பதிவு செய்துள்ளனர். காவல் நிலையத்தில் அப்போது இருந்த இதர ஆறு பேரையும் இன்று விசாரணையிலிருந்து விலக்கி, அவர்களை வெறுமனே ஆயுதப் படைக்கு மாற்றியுள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குற்றத்தை மறைக்க முயன்றதில் டி.எஸ்.பி சேகருக்கும் முக்கிய பங்கு உள்ளது. எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி ஆகியோரும் திருப்பாலக் குடியில் சுமார் 20 நிமிடங்கள் ஆம்புலன்சை நிறுத்திப் படங்கள் எடுத்துள்ளனர். எல்லோருடைய ஒப்புதலுடனும்தான் இந்தப் பொய்யான கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். 14ந் தேதி மாலை காளிதசுக்கும் மற்றவர்களுக்கும் நடைபெற்ற தொலை பேசி உரையாடல்கள் பெறப்பட்டுப் புலனாய்வு செய்யப்பட வேண்டும்.
 4. செய்யது முஹம்மதுவின் ஆடைகள், பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் கத்தியில் உள்ள கைரேகைகள், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ள நிலை முதலியனவும் புலனாய்வுக்குட்படுத்தப் படுவதோடு அவை குறித்த உண்மைகளும் வெளியிடப்பட வேண்டும். இனி இப்படியான கொலைகளில் பிரேத பரிசோதனை செய்யும்போது ballistic experts இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
 5. எஸ்.ஐ காளிதாஸ் குறித்த வேறு சில உண்மைகளும் புலனாய்வு செய்யப்படவும் விளக்கப்படவும் வேண்டும். அவர் மீது லஞ்சக் குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகிறது பண்டிகையை ஒட்டி பெரும் வசூல் வேட்டையை அவர் நடத்தியதாகவும், தான் வேலை செய்யும் இறால் பண்ணை உரிமையாளர் 5,000 ரூபாய் கொடுத்ததை செய்யது எல்லோரிடமும் சொல்லித் திரிந்தது காளிதாசுக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்படக் காரணமாயிற்று எனவும் ஒரு பேச்சு உள்ளது. அப்படியான ஒரு பேச்சு உள்ளதை இப்பிரச்சினையில் உண்மையை வெளிக் கொணர தொடக்கம் முதல் செயல்பட்டு வரும் சட்ட மன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லாவும் உறுதிப்படுத்தினார். அதேபோல காளிதாஸ் இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளவர் எனவும் கூறப்படுகிரது. அவர் முக நூல் கணக்கு ஒன்று வைத்திருந்ததாகவும், இந்த்க் கொலையை ஒட்டி அது உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் முகநூல் பக்கங்களிலேயே சில “ஸ்க்ரீன் ஷாட்” களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவும் தீர விசாரிக்கப்பட வேண்டும். காளிதாசுக்கு ஆதரவாக பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த எச்.ராஜா, இராம கோபாலன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருப்பதும் இந்த அய்யத்தை உறுதியாக்குகிறது.
 6. காவல் நிலைய மற்றும் சிறைச்சாலைச் சாவுகளில் தமிழ்நாடு முன்னிற்கிறது என அரசு வெளியிடும் தரவுகளே கூறுகின்றன. இன்றைய அ.தி.முக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இக்காவல் நிலையச் சாவுகளை “நீதியைக் கேலிக் கூத்தாக்குவது” (travesty of justice) எனச் சொல்லிக் கொண்டே இது போன்ற குற்றம் செய்யும் காவலர்களைப் பாதுகாத்து வந்தார். இப்படிக் காவல்துறை அத்து மீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதில் பிற கட்சிகளும் எள்ளளவும் குறைந்ததில்லை. இந்த நிலை மாறுவது ஒன்றே காவல் நிலையச் சாவுகள் நிறுத்தப்படுவதற்கான ஒரே வழி. அத்து மீறும் காவலர்களை ‘ஹீரோ”க்களாக முன்னிறுத்தும் ஊடகங்கள், இவர்களோடு இணைந்து செயல்படும் மருத்துவர்கள் உள்ளிட்ட பிற துறையினர் எல்லோரும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
 7. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டுள்ளபோது முஸ்தபா எனும் முஸ்லிம் ஒருவர் எஸ்.பி பட்டணக் காவல் நிலையத்தில் எஸ்.ஐ யாக நியமிக்கப்பட்டுள்ளதாக அற்கிறோம். இச் செய்தி வரவேற்கத் தக்கது. முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதிகளில் போதிய அளவில் முஸ்லிம் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் இருபதாண்டுகளாகச் சொல்லி வருகிறோம். சச்சார் அறிக்கையும் இதை வற்புறுத்தியது. எஸ்.பி பட்டனம் மட்டுமின்றி கிழக்குக் கடற்கரையோரம் முழுவதும் இந்நிலை மேற்கொள்ளப்பட வேண்டும்.
 8. நீதிமன்றமே பரிந்துரைத்துள்ளபடி ஏழ்மை நிலையிலுள்ள செய்யது முஹம்மதுவின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும். அவரது வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி அளிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 

தொடர்பு முகவரி:

அ.மார்க்ஸ், 
18 A, சுங்கம் பள்ளிவாசல் தெரு, 
மதுரை 1.  
செல்: 94441 20582, 97511 51916

நன்றி:   அ.மார்க்ஸ்

வியாழன், செப்டம்பர் 25, 2014

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

நாகப்பட்டினம்,
செப்டம்பர் 23, 2014.

குழுவில் பங்குபெற்றோர் :                        

பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி
மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி,
முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை,
அபு ஃபைசல், பத்திரிகையாளர், சென்னை.

   கடந்த ஆகஸ்ட் 30 அன்று நாகூர் பட்டினச்சேரி சீராளம்மன் கோவில் பூச்சொறிதல் திருவிழா ஊர்வலத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும் அதை ஒட்டி உருவாகியுள்ள பதட்ட நிலை ஆகியவை தொடர்பான உண்மைகளை அறிய உருவாக்கப்பட்ட இக்குழு நேற்று பகல் முழுவதும் நாகூரில் பலரையும் சந்தித்தது.    அன்றைய வன்முறையில் தாக்கப்பட்ட இளைஞர்கள் ரஞ்சித், பிரபு, காட்டுப்பள்ளி எனப்படும் ஹிலுறு ஜாமிஆ மஸ்ஜித் ஜமா அத் தலைவர் எம்.எம்.தாஹிர்,, செயலர் முகம்மது தாஜுதீன், நாகூர் ஆரிய நாட்டுத் தெரு பஞ்சாயத்தார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே நிஜாமுதீன், தற்போது கைதாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களின் பெற்றோர்கள் ஜகபர் அலி மற்றும் சாதிக், விடுதலைச் சிறுத்தை அமைப்பின் முன்னாள் நகரச் செயலர் முருகன், த.மு.மு.க மாவட்டத் தலைவர் ஜபருல்லா முதலானோரைச் சந்தித்தது. காவல்துறைக் கண்காணிப்பாளர் தற்போது விடுப்பில் உள்ளதால் இந்தப் பிரச்சினையை விசாரித்து வரும் நாகை க்ரைம் பிராஞ்ச் துணைக் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் அவர்களிடமும் விரிவாகப் பேசியது.

சம்பவம்

    இந்த ஆண்டு வி.எச்.பிஅமைப்பைச் சேர்ந்த நாகூர் முத்துகிருஷ்ணனின் முயற்சியால் முஸ்லிம் மக்கள் குறிப்பிட்ட அளவில் வசிப்பதும் காட்டுப் பள்ளி வாசலுக்கு அருகில் அமைந்துள்ள பண்டகசாலைத் தெருவில் முதன் முறையாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு  சென்ற ஆகஸ்ட் 29 அன்று சிலை ஊர்வலமும் நடத்தப் பட்டுள்ளது. அடுத்த நாள் மீனவ மக்களின் பூச்சொறிதல் ஊர்வலம் முஸ்லிம் மக்கள் வசிக்கிற மியான் தெரு வழியாக நடந்துள்ளது. பட்டினச்சேரி சீராளம்மன் ஆலயத்திற்கு இவ்வழியே பூச்சொறிதல் ஊர்வலம் வருவது வழக்கம் என்றாலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மியான் தெருவிற்கு இணையாக உள்ள  பண்டகசாலைத் தெரு வழியான சாலை சீர் செய்யப்பட்டிருந்ததால் அவ்வழியே ஊர்வலம் நடந்து வந்துள்ளது. இந்த ஆண்டு பண்டக சாலைத் தெருவில் சாக்கடை வேலை நடந்து கொண்டிருந்ததால் அவர்கள் வேறு வழியில் செல்ல முடிவெடுத்தபோது அண்ணா தி,மு.க வின் கவுன்சிலர் சின்னப் பிள்ளை என்பவர் மியான் தெருவழியாகச் செல்லுமாறு திருப்பியுள்ளார்.

   பத்தாண்டுகளுக்கும் மேலாக வேறு வழியில் சென்று கொண்டிருந்த ஊர்வலம் இந்த ஆண்டு தம் தெரு வழியே பள்ளிவாசலை ஒட்டி வந்ததையும், வழக்கமாக வருவது போலல்லாமல் இம்முறை தாரை தப்பட்டைகளுடன் பெருந்திரளாக வந்ததையும் கண்டு முஸ்லிம்கள் பதட்டம் அடைந்துள்ளனர். என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதும் அவர்களின் இந்தப் பதட்டத்திற்கு ஒரு காரணம். மாலை நேரத் தொழுகைக்காக பாங்கு ஒலிக்கத் தொடங்குகையில் தாரை தப்பட்டைச் சத்தம் கூடாது எனக் கூறியுள்ளனர். வாக்குவாதம் நடைபெற்று இறுதியில் சற்று நேரம் தாரை தப்பட்டைகள் நிறுத்தப்பட்டு பின் ஊர்வலம் தொடர்ந்துள்ளது. ஊர்வலமே இவ்வழியாகச் செல்லக் கூடாது என முஸ்லிம்கள் தடுக்கவுமில்லை. பாங்கு ஒலிக்கும்போது நாங்கள் தாரை தப்பட்டையை ஒலிப்போம் என மீனவர் தரப்பில் பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. காவல்துறை சரியாகச் செயல்பட்டிருந்தால் இன்றைய பிரச்சினையே ஏற்பட்டிருக்காது.

   தொடர்ந்து பதட்டத்துடன் பள்ளிவாசல் அருகில் திரளாக முஸ்லிம் இளைஞர்கள் கூடி இருந்துள்ளனர். இப்படி முன் அறிவிப்பு இன்றியும் அனுமதி இன்றியும் பிரச்சினைக்குக் காரணமான ஊர்வலம் குறித்து பள்ளிவாசலில் அமர்ந்து செயலர் தாஜுதீன்,

     கொறடா சாதிக், நூர் சாதிக், மசூத் அலி முதலானோர் காவல் துறைக்குப் புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்துள்ளனர். அச்சமயம் “அர்த்த ஜாம இளைஞர்கள் கழகம்” என்கிற அமைப்பைச் சேர்ந்த ரஞ்சித் எனும் இளைஞர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். இந்த அமைப்பு இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய ஒன்று எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம் இளைஞர்கள் ரஞ்சித்தை நிறுத்தியுள்ளனர். அது கைகலப்பாக மாறும் நேரத்தில் ரஞ்சித்தின் நண்பனும் அதே அமைப்பச் சேர்ந்தவரும், முதல் நாள் விநாயகர் ஊர்வலத்திற்குக் காரணமாக இருந்தவருமான பிரபு எனும் இளைஞர் வந்துள்ளார். கைகலப்பில் ரஞ்சித் மற்றும் பிரபு இருவரும் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த பள்ளி வாசலில் அமர்ந்து புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்த கொறடா சாதிக் உள்ளிட்டோர் ஓடி வந்து தாக்கியவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


   தாக்கப்பட்ட ரஞ்சித், பிரபு இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் (குற்ற எண் 346 / 2014, நாகூர் காவல் நிலையம்) புதுத் தெருவைச் சேர்ந்த நூர் சாதிக், மியான் தெருவைச் சேர்ந்த கொறடா சாதிக் எனப்படும் ஜாபர் சாதிக், ஆஷிக், அம்ஜத் அலி, அஷ்ரப்  மற்றும் சிலர் ஆகியோர் மீது இ.த.ச 147, 148, 323, 324, 307, 294 பி, 506 (1), பி.பி.டி 3,4 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

     இதுவரை பஷீர் அகமது, மசூத் அலி, அஜ்மல், நூர் சாதிக் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொறடா சாதிக், ஆஷிக், அம்ஜத் அலி ஆகியோர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

எமது பார்வைகள்
 1. பதட்டம் மிக்க சூழலில் இப்படி  முன்னூறுக்கும் மேற்பட்டோர்  தாரை தப்பட்டைகளுடன் பங்கு பெற்ற பூச்சொறிதல் ஊர்வலம் ஒன்று முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஒரு பகுதியில் நடைபெற்ற போது  காவல்துறை எந்த முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளாததும், உரிய பாதுகாப்பு அளிக்காததும் வியப்பையும் கவலையையும் அளிக்கிறது. தங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும் எனத் தெரியாது எனக் காவல்துறையின் சார்பாக எங்களிடம் அளிக்கப்பட்ட பதில் ஏமாற்றமளிக்கிறது.
 2. முஸ்லிம் இளைஞர்களால் ரஞ்சித், பிரபு ஆகியோர் தாக்கப்பட்டது உண்மை என்ற போதிலும், தாக்குதலில் ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. சாதாரண கைகலப்புதான் நடந்திருக்கிறது. ஆனால் கொலை முயற்சி உட்பட இத்தனை கடுமையான பிரிவுகளின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது காவல் துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா எனும் கேள்வியை எழுப்புகிறது. மதக் கலவரம் தொடர்பான பெரிய பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய இப்படியான கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது எனும் காவல் துறையின் பதிலை எங்களால் ஏற்க இயலவில்லை. நீதி வழங்கு நெறியின் மிக அடிப்படையான அம்சம், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு குற்றமற்றவர் கூட தண்டிக்கப்படக் கூடாது” என்கிற நெறி இங்கு கேலிக் கூத்தாக்கப் படுகிறது.
 3. இப்போது கைது செய்யப்பட்டுள்ள அம்ஜத் அலி, பஷீர் அகமது, அஜ்மல் ஆகியோரது பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. பஷீர் அகமது சம்பவத்தின் போது அவர் வேலை செய்யும் செருப்புக் கடையில் இருந்துள்ளார். இதை அவர் வேலை செய்த ராயல் செருப்புக் கடை முதலாளி ஹாஜா பக்ருதீனிடம் விசாரித்து உறுதிப் படுத்திக் கொண்டோம். அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொறடா சாதிக்கும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு முழுவதும் வைத்திருந்து பின் வீட்டுக்கு அனுப்பப்பட்ட எஸ்.டி.பி ஐ தலைவர் தாஜுதீனும், மசூத் அலியும் சம்பவ நேரத்தில் பள்ளி வாசலில் அமர்ந்து புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்துள்ளனர். நாகூர் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன், எஸ்.பி.சி.அய்.டிக்கள் ஜார்ஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இதைப் பார்த்துள்ளனர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் தாக்கப்பட்ட ரஞ்சித், பிரபு ஆகியோரே இதைக் கூறியுள்ளனர், எங்களிடமும் அவர்கள் இதைக் கூறினர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தங்களை அடிக்கவில்லை எனவும் தாங்கள் அவர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் கூறினர். அமைதிக் கூட்டத்தில் காவல் துறை சார்பாக, “நீங்கள் உண்மையான குற்றவாளிகளைக் கொண்டு வந்தால் இப்போது கைது செய்யப்பட்டவர்களை குற்றப் பத்திரிக்கை எழுதும் போது நீக்கி விடுகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தவரும் சம்பவ இடத்தில் இல்லாதவருமான நூர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாங்கள் கேட்டபோது காவல்துறை தரப்பில் திருப்தியான பதில் எதுவும் சொல்லப்படவில்லை. அடித்தவர்களைத்தான் கைது செய்கிறோம் என அவர்களால் சொல்ல இயலவில்லை.
 4. நாகூரில் எல்லோராலும் மதிக்கப்படுபவரும் தலித்கள், மீனவர்கள் உட்பட எல்லோராலும் ஏற்கப்படக் கூடியவருமான முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் இரு தரப்புடனும் பேசி சமாதானத்தை ஏற்படுத்திக்  கொண்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று நிஜாமுதீன் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில், ஏராளமான போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்ததோடு தனியாக அவர் மனைவி இருந்ததையும் பொருட் படுத்தாது காம்பவுன்ட் சுவரில் ஏறிக் குதித்து கதவுகளைத் தட்டி, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து அச்சம் ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர் அடுத்த நாள் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை. கொறடா சாதிக் என்பவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்தபோதும் சமீப காலங்களில் எந்த வழக்கும் அவர் மீது இல்லை. தவிரவும் இந்தச் சம்பவத்தின்போது அவர் பள்ளியில் அமர்ந்து புகார் எழுதிக் கொண்டிருந்துள்ளார். தாக்குதலைத் தடுத்துள்ளார். அவர் மீது பொய்க் குற்றம் சாட்டித் தேடுவது காவல்துறை சொல்வதுபோல வன்முறைகளைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்று அல்ல. மாறாக இத்தகைய நடவடிக்கைகள்தான் தீவிரவாதிகளை உருவாக்கும் முயற்சிகளாக உள்ளன என்பதைக் காவல்துறை உணர வேண்டும்.
எமது கோரிக்கைகள்:
 1. தற்போது கைது செய்யப்பட்டுளவர்கள் மர்றும் தேடப்படுபவர்களில் பலரும் குற்றமற்றவர்கள் எனக் காவல்துறையே ஏற்றுக்கொள்வதால் இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், தேடுதல்களும் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ரஞ்சித்தும் பிரபுவும் கூறுவது போல உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சரியான பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.
 2. இந்தப் பிரச்சினைக்கு முழுவதும் காரணமாக இருப்பது நாகூர் காவல் நிலையம் சம்பவத்தன்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததுதான். இது குறித்து உரிய துறை விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நாகூர் காவல் நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் உளவுத் துறையினர் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் நாகை மாவட்டத்தில், சச்சார் ஆணையப் பரிந்துரையின்படி காவல் மற்றும் உளவுத் துறைகளில் உரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இடம்பெறச் செய்ய வேண்டும்.
 3. தலித்கள், மீனவர்கள் முதலான மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி ஒரு பெறும் மதக் கலவரத்தை உண்டு பண்ணி மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் லாபம் சம்பாதிக்க இந்துத்துவ சக்திகள் இப்பகுதியில் முயல்கின்றன. அரசும் காவல்துறையும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “அர்த்த ஜாம இளைஞர்கள் சங்கம்” “ஆன்மீக இளைஞர்கள் சங்கம்” முதலான பெயர்களில் இங்கு தலித் மற்றும் மீனவ இளைஞர்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பும் முயற்சி மேற்கொள்ளப்படுவதை அரசு கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
 4. இந்துத்துவ சக்திகளின் பிளவுபடுத்தும் நோக்கத்திற்கு மீனவப் பஞ்சாயத்தினர் ஒத்துழைக்காததை இக்குழு பாராட்டுகிறது. இரு இளைஞர்களைத் தாக்கிய குற்றவளிகள் கைது செய்யப்பட வேண்டும் .என்றுதான் நாங்கள் சொல்கிறோம் என்றாலும் இந்து முன்னணியினர் இன்று (செப் 22) நடத்துகிற ஆர்பாட்டத்தில்  நாங்கள் கலந்து கொள்ளவில்லை என அவர்கள் எங்களிடம் கூறினர். நாகூர் வாழ் முஸ்லிம்கள் இந்துத்துவ அமைப்புகளின் பிளவு முயற்சிகளைக் கணக்கில் கொண்டு பிற சமூகங்களுடனான தமது ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்பு : 

அ.மார்க்ஸ், 
தய்.கந்தசாமி, 
27/7, ஏ.எஸ்.என். காம்ப்ளெக்ஸ், 
திருத்துறைப்பூண்டி- 614 713.  
செல்:
 +91 94441 20582, 
+91 9486912869

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் - உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் - உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

முத்துப்பேட்டை
செப் 23, 2014.

குழுவில் பங்குபெற்றோர் :  
                       
பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி
மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி,
முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை,
அபு ஃபைசல், பத்திரிகையாளர், சென்னை.    முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தை ஒட்டி முஸ்லிம்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்படுவது கடந்த 20 ஆண்டு காலமாகத் தொடர்கதையாகி விட்டது. எங்கள் குழுவே இது தொடர்பாக இதற்கு முன் நான்கு முறை இங்கு வந்துள்ளது. எங்களின் பழைய அறிக்கைகள் இந்த வரலாற்றை விரிவாகக் கூறுகின்றன.

      எங்களின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளதை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் விநாயகர் ஊர்வலப் பாதையை மாற்றுவதொன்றே இதற்குத் தீர்வு என்பதையும் ஆணையாக இட்டுள்ளது. எனினும் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருவதுபோல மன்னார்குடி சாலை வழியாக ஊர்வலம் திருப்பப் படுவது ஒன்றே இதற்கான தீர்வு.   ஆனால் இது இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்துத்துவ சக்திகள் அதை நடைமுறைப்படுத்த விடுவதுமில்லை. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் வன்முறையைத் தடுக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்காததால் ஆண்டுதோறும் பிரசினை தொடர்கிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வந்தாலே இங்கு வாழும் முஸ்லிம்கள் அச்சம் பதட்டம் இழப்புகள் ஆகியவற்றைச் சந்திப்பதும் தொடர்கிறது. வன்முறையின் பலன்களை வன்முறையாளர்களே அனுபவிப்பது என்னும் கொடுமையும் தொடர்கிறது. இன்று முத்துப்பேட்டை பேரூராட்சி இடைத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெறத் துவங்கியுள்ளதை வேறெப்படி விளங்கிக் கொள்வது?      இந்த ஆண்டும் ஊர்வலத்தில் முஸ்லிம் வீடுகள் தாக்கப்பட்டதை அறிந்து எங்கள் குழு மீண்டும் இங்கு வந்து நேற்று மாலை முழுவதும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டது. பா.ஜ.க மாவட்டத் தலைவர் பேட்டை சிவாவுடனும், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணபதி மற்றும் புலனாய்வு அதிகாரி சண்முகவேல் ஆகியோருடனும் பேசியது. இன்று காலை திருவாரூர் மாவட்ட ஏ..டி.எஸ்.பி அனார்கலி பேகம் அவர்களுடன் விரிவாகப் பேசியது.

சம்பவம்

      சென்ற செப்டபர் 3 அன்று விநாயகர் ஊர்வலத்தை ஒட்டிப் பெரிய அளவில் வெளி மாவட்டங்களிலிருந்து காவல்துறையினர் மற்றும் ஆயுத ரிசர்வ் படையினர் கொண்டு வந்து குவிக்கப் பட்டுள்ளனர். மதியம் 12 மணி முதல் ஊர்வலப் பாதையில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் காவல்துறை கெடுபிடிகள் கடுமையாக இருந்துள்ளன. யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. பள்ளிவாசல்களிலும் கூட தொழுகை நேரம் தவிர பிற நேரங்களில் யாரும் இருக்க அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகமே அன்று முழுவதும் ஒட்டு மொத்தமாக சிறைக் கைதிகள் போல நடத்தப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் எப்போதும்போல அவர்கள் சொன்ன நேரத்தைத் தாண்டி சுமார் 8மணி அளவில் பழைய பஸ் ஸ்டான்ட் அருகே வந்தபோது இரவுத் தொழுகைக்காக பாங்கு ஒலித்துள்ளது. காவல்துறையினர் ஊர்வலத்தை நிறுத்தியுள்ளனர். உடனடியாகக் கூட்டத்தில் தலைமை ஏற்று வந்து கொண்டிருந்த பா.ஜ.க செயலாளர் கருப்பு (எ) முருகானந்தம் முதலானோர் காவல்துறையினர் முஸ்லிம்கள் வீட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டுத் தமக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி மைக்கில் முழங்கத் தொடங்கியுள்ளனர்.

   மீண்டும் ஊர்வலம் நகர அனுமதிக்கப் பட்டபோது பழைய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ரயில்வே கேட் வரை இரு பக்கங்களிலும் உள்ள முஸ்லிம் வீடுகள் மீது ஊர்வலத்தினர் கல் வீசித் தாக்கத் தொடங்கியுள்ளனர். சுமார் 10 வீடுகளில் சன்னல் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்ததை எங்கள் குழு கண்டது. என்ன நடக்குமோ என்கிற அச்சத்துடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு முஸ்லிம்கள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

      இப்படியான கல் வீச்சுக்கள் நடந்தபோது காவல்துறைக் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் மற்றும் மூன்று மாவட்டக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இருந்த காவற் படையினர் அதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளதை. வீடியோ பதிவுகள் காட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் சாலையின் இரு மருங்கிலும் கயிறுகள் கட்டப்பட்டு ஊர்வலம் கட்டுக்குள் செல்லுவதற்கு வழி செய்யப்பட்டிருந்தது. அத்து மீறி முஸ்லிம் வீடுகள் பக்கம் நகர்வோர் உடனடியாக அங்கு நின்றிருக்கும் காவலர்களால் தடுக்கப்பட்டு கயிறுகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளவும் அது வசதியாக இருந்தது. இம்முறை அதுவும் இல்லை என்பதும் ஏன் அது இம்முறை கடை பிடிக்கப்படவில்லை என்பதும் தெரியவில்லை. ஊர்வலத்தில் செல்வோர் முஸ்லிம் வீடுகளின் மீது எறிவதற்காக சாலையில் கிடக்கும் கற்களைப் பொறுக்குவதையும் வீடுகளின் மீது வீசுவதையும் காட்டும் வீடியோ பதிவுகள் உள்ளன.
  
      அடுத்த நாள் (செப் 4) வீடுகள் தாக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.முத்துப்பேட்டை காவல் நிலையம் மு.த.அ.எண் 361 முதல் 368 வரை உள்ள அறிக்கைகளை எம் குழு பர்வையிட்டது.இ.த.ச 143, 188, 506 (2), பி.பி.டி சட்டம் 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கருப்பு (எ) முருகானந்தம், ராஜேந்திரன், மகேஷ், குமரப்பா, குமரவேல் ஆகியோர் தலைமையில் வந்த ஊர்வலத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

      அடுத்த நாள் காலை சுமார் 4 மணி அளவில் கொய்யா மகால் அருகில் உள்ள எல்சன் ஷேக் தாவூது என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடை வைத்துள்ள மணி என்பவரின் கடைக்குள் ஷட்டரைத் தூக்கி பெட்ரோல் தோய்த்த எரியும் துணி ஒன்று உள்ளே வீசப் பட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைதுள்ளன. முஸ்லிம்கள் மீது பழி வர வேண்டும் என இது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் கடை வைத்துள்ளவர் இந்துவானாலும் கடை முஸ்லிம் ஒருவருடையது என்பது குறிப்பிடத் தக்கது.

      அன்று மதியம் 11 மணி அளவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருப்பு உட்பட சுமார் ஆறு பா.ஜ.க மற்றும் இந்துத்துவத் தலைவர்கள் திடீரென முத்துப்பேட்டைக் காவல் நிலையத்திற்குள் புகுந்து எங்கள் மீது ஏன் வழக்குத் தொடுத்துள்ளீர்கள், எங்கள் ஆட்களை ஏன் கைது செய்கிறீர்கள், முடிந்தால் எங்களைக் கைது செய்யுங்கள் எனச் சவால் விட்டுள்ளனர். தாங்கள் அவ்வாறு காவல் நிலையம் சென்றதை பா.ஜ.க மாவட்ட நிர்வாகி பேட்டை சிவா எங்களிடம் ஏற்றுக் கொண்டார். முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ளவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக யாரோ சில சுமார் 10 பேர்களைத் தற்போது பெயருக்குக் கைது செய்துள்ளனர். வன்முறைகளுக்குக் காரணமான கருப்பு உள்ளிட்டோர் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நடமாடிக் கொண்டுள்ளனர்.

     காவலுக்குக் கொண்டுவரப்பட்ட காவல்துறையினர் மேற்கொண்ட சில பாலியல் அத்துமீறல்கள் இம்முறை வெளிவந்துள்ளன. காவலர்கள் பெண்கள் தனியாக உள்ள வீடுகளில் புகுந்து தண்ணீர் கேட்பது முதலான பாவனைகளில் அங்குள்ள பெண்களிடம் சில்மிஷங்கள் செய்துள்ளனர். சுமார் 50 நிகழ்வுகள் இவ்வாறு நடந்துள்ளன என ஒருவர் எங்களிடம் தெரிவித்தார்.  பெண்கள் தொடர்பான பிரச்சினை என்பதால் பலரும் இதைப் பெரிதாக்காமல் மனசுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அவமானத்தில் நொந்து போயுள்ளனர். இவற்றில் சில பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. (எ.கா: ‘காக்கி உடையில் வந்த கயவர்கள்’, நக்கீரன், செப் 20 – 23). ஆகஸ்ட் 4 அன்று இரவு பட்டறைகுளம் பகுதியில் உள்ள துப்புரவுப் பணியாளர் தெருவில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த ஒரு காவலர் சரோஜா எனும் பெண்ணிடம் வம்பு செய்ய அவரை உடனடியாக அப்பகுதி மக்கள் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்புவிக்க, அவர்கள் அந்தக் காவலரைத் தப்புவித்துள்ள செய்தி பத்திரிக்கையில் வந்துள்ளது.

      செப் 8 அன்று பழைய தியேட்டர் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து வம்பு செய்த திருத்துறைபூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சந்திரசேகர் என்பவரை அப்பகுதி மக்கள் தாக்கியபோது அவர் தையல் எந்திரத்தின் மீது விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு முத்துப்பேட்டைக் காவல்துறையினர் முஸ்லிகள் மீது வழக்குப் போட்டு அச்சுறுத்தலைத் தொடங்கியுள்ளனர்.  வீடுகளில் கல்லெறிந்து சேதம் விளைவித்ததற்காக வன்முறைக்குக் காரணமான சிலர் கைது செய்யப்பட்டதற்கு ‘பாலன்ஸ்’ பண்ணுவதற்காக இப்படி முஸ்லிகள் சிலர் மீது பொய் வழக்குப் போட்டு தொல்லை செய்கின்றனர். அதோடு இப்படிச் சில முஸ்லிகள் மீது வழக்குப் போட்டு மிரட்டினால்தான் அவர்கள் தாங்கள் கொடுத்துள்ள புகார்கள் பற்றி ஒன்றும் பேசாமல் இருப்பார்கள் எனவும் காவல்துறை கருதுவதாகத் தெரிகிறது. “எங்களுக்குக் கொஞ்சம் முஸ்லிம்கள் வேணும்” என ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

     இப்படிப் பாதிக்கப்பட்ட சிலரையும் நாங்கள் சந்திக்க முடிந்துள்ளது. நெய்யக்காரத் தெருவிலுள்ள அன்சாரி என்பவர் காவலர் சந்திரசேகர் தாக்கப்பட்ட வழக்கில் 506 (2) பிரிவில் கைது செய்யப்பட்டு நேற்று மாலைதான் பிணையில் வெளி வந்துள்ளார். சந்திரசேகரைத் தாக்கியவர்களில் ஒருவர் என இத்ரிஸ் என்பாரைத் தேடி வந்தவர்கள். இத்ரிஸ் கனி என்கிற பெயரைத் தவிர அச் சம்பவத்தோடு வேறு தொடர்பே இல்லாத அன்சாரியின் தம்பி வீட்டில் ஆகஸ்ட் 6  இரவில் காம்பவுன்ட் சுவர் ஏறிக் குதித்து கதவுகளைத் தட்டி அட்டகாசம் செய்துல்ளனர். இத்ரிஸ் அப்போது ஊரில் இல்லை. மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரது சகோதரி மகனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்ரிசின் அண்ணன் அன்சாரி கைலி பனியனுடன் காவல் நிலையம் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டு ரிமான்ட் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் சுவாமிநாதன்தான் காம்பவுன்ட் சுவரேறிக் குதித்தவர்.

     கல்கேணித் தெருவில் உள்ள காதர் ஹுசேன் என்பவர் சந்திரசேகர் தாக்கப்பட்ட போது சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு என்ன நடக்கிறது எனப் பார்க்கச் சென்றுள்ளார். அவரைத் தேடி வருவதாகச் சொல்லி  11ந் தேதி இரவு 12.45 மணி அளவில் அவரது மனைவி ரம்ஜான் பேகமும் மகளும் தனியாக இருந்தபோது எஸ்.ஐ சுவாமிநாதன் மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி குணசேகரன் தலைமையில் வந்த காவலர்கள் வெளி கேட் மற்றும் வீட்டுக் கதவுகள் உடையும்படி சேதப் படுத்தி பெண்களை அச்சுறுத்தியுள்ளனர். காதர் ஹுசேன் தான் கைது செய்யப்பட நேருமோ என அஞ்சி இப்போது தலைமறைவாக உள்ளார். காதர் ஹுசேனிடம் முன்னதாக குணசேகரன் பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
இந்தப் பிரச்சினையில் தற்போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட அன்சாரி மட்டுமல்லாமல் ஆசாத் நகர் மீரா ஹுசேன், கொய்யாத் தோப்பு ஹலீல் ரஹ்மான் எல்லோருமே அப் பிரச்சினையில் எந்தவகையிலும் சம்பந்தப்படாதவர்கள்.

      பெண்களிடம் காவலுக்கு வந்திருந்தவர்கள் செய்த சில்மிஷங்கள் குறித்து ஒரு காவல் அதிகாரி, “பாதுகாப்புக்கு இவன்களைக் கொண்டு வந்தால், இவன்களிடம் இருந்து ஜனங்களைப் பாதுகாக்க வேண்டி இருக்கு” என அலுத்துக் கொண்டதையும் சிலர் எங்களிடம் கூறினர்..

  காவல்துறைக் கண்காணிப்பாளருடன் எங்களுக்குத் தொடர்பு கிடைக்காததால் திருவாரூர் மாவட்ட ஏ..டி.எஸ்.பி அனார்கலி பேகம் அவர்களிடம் பேசினோம். ஊர்வலப் பாதையை மாற்றுவது தொடர்பான நீதிமன்ற ஆணை குறித்த தகவல்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை எனவும் தற்போது அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் அடுத்த ஆண்டு அது நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும் எனவும் கூறினார். முஸ்லிம் வீடுகளைத் தாக்கியபோது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அதிகாறிகள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். அப்பாவிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அடுத்த ஆண்டு வெளியூர்களிலிருந்து விநாயகர் ஊர்வலத்திற்கு ஆட்கள் கொண்டு வருவதையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.எமது பார்வைகளும் பரிந்துரைகளும்
 1. இப்படி ஆண்டுதோறும் முத்துப்பேட்டை வாழ் முஸ்லிம்கள் அஞ்சிக் கிடப்பதும், ஊர்வலம் முடியும் வரை அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க நேர்வதும் மிகவும் வேதனைக்குரிய ஒன்று. வெளியிலிருந்து ஒரு பெருங் கும்பல் அசிங்கமாகப் பேசி கல்வீசித் தாக்கும்போது உள்ளே அடைந்து கிடக்கும் இளம் பிள்ளைகளின் மனம் எத்தனை பாடுபடும், அது பிற்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கவலை அரசுக்கும் நிர்வாகத்திற்கும் இல்லாதது வேதனை. ஊர்வலத்தில் செல்பவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது எனத் தாங்கள் சொல்லியிருந்த போதும் பாங்கு ஒலிக்கும்போது தடுத்து நிறுத்தப்பட்டதால் சிலர் வன்முறையில் ஈடுபட நேர்ந்து விட்டது எனப் பேட்டை சிவாவும் ஏற்றுக் கொண்டார்.
 2. இப்படியான அச்சம் முஸ்லிகள் மத்தியில் நிரந்தரமாக எற்படுத்தப் பட்டுள்ளதைப் பயன்படுத்திச் சில காவல்துறையினர் மிரட்டல்கள், லஞ்ச ஊழல்கள், பணம் கேட்டுத் தொல்லை செய்தல், பொய் வழக்குப் போடுதல், பெண்களிடம் சில்மிஷம் முதலியவற்றைச் செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது.
 3. இந்த நிலைமையைத் தடுப்பதற்கான ஒரே வழி ஊர்வலப் பாதையை பட்டுக்கோட்டை சாலையிலிருந்து மாற்றி மன்னார்குடி சாலை வழியாக அனுப்புவதுதான். அரசும் மாவட்ட நிர்வாகமும் இதை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். எங்களிடம் பேசிய பேட்டை சிவா எக்காரணம் கொண்டும் ஊர்வலப் பாதையை மாற்றுவது என்கிற விஷயத்தில் எந்தச் சமரசமும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.
 4. இம்முறை ஊர்வலத்தினர் தாக்கியபோது பார்த்துக் கொண்டு அமைதி காத்த காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப் பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கருப்பு முதலானவர்கள் மீது மு,த.அ பதிவு செய்யப்பட்டிருந்த போதும், காவல் நிலையத்திற்கு வந்து அவர்கள் சவால் விட்ட பின்னும் அவர்கள் கைது செய்யப்படாமல் அனுப்பப் பட்டது குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் காவலர் சந்திரசேகரனைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட அப்பாவிகள் வழக்கிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
 5. ஊர்வலத்தில் வன்முறை செய்பவர்கள் பெரும்பாலும் வெளியிலிருந்து கொண்டு வரப்படும் ஆட்கள்தான். இம்முறை நாகப்பட்டினம், மீமிசல், ஒரத்தநாடு, நீடாமங்கலம் முதலான ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இது தடை செய்யப்பட வேண்டும்.
 6. இருபதாண்டுகளுக்கும் மேலாக விநாயகர் ஊர்வல வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இதன் சகல பரிமானங்களையும் ஆய்வு செய்யவும், நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
 7. இவ்வாறு அடிக்கடி மத வன்முறைகள் நடைபெறும் பகுதிகளில் காவல்துறையில் போதிய அளவில் சிறுபான்மையினர் நியமிக்கப்பட வேண்டும் என சச்சார் ஆணையம் பரிதுரைத்துள்ளது. இது இம்மாவட்டத்தில் குறிப்பாக முத்துப்பேட்டை பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தவிரவும் இத்தகைய பகுதிகளில் காவல் நிலையங்களில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். 

தொடர்பு : 

அ.மார்க்ஸ், 
தய்.கந்தசாமி,
 27/7, ஏ.எஸ்.என். காம்ப்ளெக்ஸ், 
திருத்துறைப்பூண்டி- 614 713.  
செல்: 
+91 94441 20582, 
+91 9486912869

நன்றி: அ.மார்க்ஸ்

ஞாயிறு, ஜூலை 20, 2014

தருமபுரி கைதுகள் : இன்று வெளியிடப்பட்ட எங்களின் கூடுதல் அறிக்கை

தருமபுரி கைதுகள் : இன்று வெளியிடப்பட்ட எங்களின் கூடுதல் அறிக்கை


[இன்று மீண்டும் எம் குழு தருமபுரி சென்றது. தற்போது அங்கு கைது செய்யப்பட்டுள்ள  எட்டு பேர்களில் அறுவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டமும் (NSA) போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அந்த ஆணை, போலீஸ் காவலில் இந்த அறுவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த இணைப்புடன் எங்கள் அறிக்கையை தருமபுரியில்  இன்று (ஜூலை 18) வெளியிட்டோம்.  காவல் துறைக் காவலில் கொண்டு செல்லப்பட்ட இந்த அறுவரும் கடும் சித்திரவதைகளுக்குப் பின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே நாங்கள் வெளிட்டுள்ள அறிக்கை முன்னதாக முகநூல் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக இன்று வெளிடப்பட்டுள்ள அறிக்கை மட்டும் இங்கே.]

இணைப்பு

1. சென்ற ஜூலை 10, 2014 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு விவேகானந்தன் முன்னதாகக் கைதுசெய்யப்பட்ட சக்தி, சந்தோஷ் முத்லான ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார் [எஸ்.சி.(தே.பா.ச) எண் 10/ 2014]..

இந்த ஆணையில் ஜூன் 28 அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சக்தி உள்ளிட்ட அறுவரும் 27 அன்று இரவு 11.30 மணிக்கு நத்தம் காலனியில் கூடி அடுத்த நாள் காலையில் மதியழகன் என்ன்பவரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் அவர்களில் மூவர் (சந்தோஷ், சங்கர், அதியமான்) தருமபுரியில் போலீஸ் காவலில் இருந்தனர். மற்ற மூவர் (சக்தி, துரை, அசோக்) அவர்களைத் தேடி தருமபுரி காவல் நிலையத்திற்கு, கவல்துறை எஸ்..பி.சி.ஐ.டி சிங்காரம் அறிவுறுத்தியபடி, வந்து கொண்டிருந்தனர். பின்னிரவு 12 மணி வாக்கில் அவர்களும் கைது செய்யப்பட்டனர். எனவே இந்த நேரத்தில் அவர்கள் நத்தம் காலனியில் சதி செய்துள்ளனர் என்பது அப்பட்டமான பொய்.

28ந்தேதி காலை 5 மணிக்கு நாய்க்கன் கொட்டாயில் மூவரும், பிறகு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தங்கன் குட்டையில் மூவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக ஆட்சியரின் ஆணையில் குறிப்பிடப் படுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் அறுவரும் போலீஸ் காவலில் இருந்துள்ளனர்.

தங்கள் வீடுகள் தாக்கப்பட்டதற்காக ஆத்திரமுற்று, அதற்குக் காரணமான சாதியினரைக் கொலை செய்ய வேண்டி. ஆயுதப் பயிற்சிக்காக, சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்ட துடி அமைப்பில் சேர்ந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்ததாகவும் மாவட்ட ஆட்சியரின் ஆணை கூறுகிறது. சமூகப் பணி செய்யும் துடி அமைப்பு எவ்வாறு ஆயுயதப் பயிற்சி அளிக்க முடியும் அந்த அமைப்பிற்கும் நக்சல்பாரி அமைப்பிற்கும் என்ன தொடர்பு, அல்லது அதையே ஒரு நக்சல்பாரி அமைப்பாக மாவட்ட ஆட்சியர் கருதுகிறாரா என்பவற்றிற்கு எந்த விளக்கமும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் கடும் சித்திரவதையின் அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளன.

ஆக மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் (without applying his mind), காவல்துறையின் கூற்றை அப்படியே ஏற்றுத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புக் காவல் அதிகாரத்தைத், தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என இக்குழு கருதுகிறது. இதை அரசும் மத்திய உள்துறைச் செயலகமும் கணக்கில் கொண்டு இந்த ஆணைக்கு ஒப்புதல்வழங்கக் கூடாது என இக் குழு வேண்டிக் கொள்கிறது.

2. சென்ற ஜூலை 14ந் தேதிய சென்னை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஒரு மேற்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மேலதிகாரிகளுக்குப் புகார் செய்துள்ளதாகவும், அது தொடர்பாக உளவுத் துறையினர், தாங்கள் அவரது தொலை பேசியை ஒட்டுக் கேட்கவில்லை, அவரது டிரைவரின் தொலைபேசியைத்தான் ஒட்டுக் கேட்டதாகக் கூறுவதாகவும் ஒரு செய்தி வந்தது. இந்த டிரைவர் அடிக்கடி காவல்துறை வாகனத்தை சேலத்திற்கு ஓட்டிச் சென்றது குறித்துப் புகார் வந்ததாகவும், அப்படி ஓட்டிச் சென்றது சுங்கச் சாவடி சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளதாக உளவுத் துறையினர் சொல்வதாகவும் அச் செய்தி கூறுகிறது.

இது தொடர்பாக ‘சவுக்கு’ எனும் ஒரு சமூக ஊடக வலைத் தளம் சில புகார்களை முன்வைக்கிறது. . காவல்துறையில் உள்ள குழு மோதல்கள் இதற்குப் பின்னணியாக உள்ளதெனவும், அந்த எஸ்.பி வேறு யாருமல்ல தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்தான் எனவும் அது கூறுகிறது. தவிரவும் காவல்துறை வாகனம் தினந்தோறும் அஸ்ரா கார்கின் மைத்துனி கீர்த்தி ஶ்ரீ என்பவரை தருமபுரியிலிருந்து அவர் எம்,டி படிக்கும் சேலம் வினாயகா மிஷன் மருத்துவமனைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிடுகிறது. இந்த மருத்துவமனையின் கிட்னி ஊழ;லை விசாரித்த ஒரு அதிகாரி எவ்வாறு அதே மருத்துவமனைக் கல்லூரியில் தன் மைத்துனியை அதிகத் தொகை கொடுத்துப் பெறக்கூடிய ஒரு மேற்படிப்பில் சேர்த்தார் என்கிற அய்யத்தையும் அது முன் வைக்கிறது.

இவை  உண்மையா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது எங்களது நோக்கத்திற்கு உட்பட்டதல்ல. ஆனால் தன் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகப் புகார் கொடுத்த அதிகாரி அஸ்ரா கார்க்தான் எனில் அவருக்கும் காவல்துறை மேல்மட்டத்திற்கும் இடையே உள்ள பிளவுக்கும் இந்தக் கைதுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இன்று இந்தக் கைது நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொண்டு மீண்டும் நக்சல்பாரி இயக்கம் இப்பகுதியில் உயிரூட்டப் படுவதாகப் பீதியைக் கிளப்புவது அவருக்குப் பயன்படலாம்.. தான் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தவர்களைக் கைது செய்யும் முக்கிய பணியில் உள்ளபோது இப்படி மேலதிகாரிகளால் பழி வாங்கப் படுவதாக ஒரு கருத்தை உருவாக்க இந்த உற்சாகம் காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

எப்படி ஆயினும் இத்தகைய அய்யங்கள் உள்ள சூழலில் தமிழகக் காவல்துறை இவ்வழக்கைப் புலனாய்வு செய்தால் நீதி
கிடைக்காது எனவும், மேலும் பல அப்பாவி தலித்கள் பழிவாங்கப்படுவதற்கும், இரு சமூகங்களுக்கும் இடையே உள்ள பகை அதிகரிக்கவுமே இது வழி வகுக்கும் எனவும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்.

எங்களைப் பொறுத்த மட்டில் வன்முறை அரசியலையும், அதற்கென ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதையும் கண்டிக்கிறோம். அது குறித்துப் புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு பொறுப்புள்ளதையும் ஏற்கிறோம். ஆனால் இந்தப் பொறுப்பு பழி வாங்கும் நோக்கில் யார் மீதும் பயன்படுத்தப்படக் கூடாது எனவும், அதைவிடவும் இது இரு சமூகங்களுக்கு இடையே உள்ள பகையை அதிகரிக்கப் பயன்படுத்தப் படக் கூடாது என்பதிலும் கவலை கொள்கிறோம்.

எனவே நாங்கள் கோருகிற நீதிபதி விசாரணையில் இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்டல் புகாரும் உள்ளடக்கப்பட்டு விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறோம். நக்சல்பாரித் தொடர்புகள் குறித்த விசாரணை தேவை எனில் வேறு புலனாய்வு முகமைகள் மூலமாக அது செய்யப்பட வேண்டும் என்கிறோம்.

ஜூலை 4 அன்று இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொலை செய்யும் நோக்குடன் ஆயுதங்களுடன் சென்ற கதை முற்றிலும் பொய் என்பதால் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பான முன் குறிப்பிட்ட முதல் தகவல் அறிக்கை முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.

நன்றி:  அ.மார்க்ஸ்

புதன், ஜூலை 09, 2014

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு அறிக்கை

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள்  

                                   உண்மை அறியும் குழு அறிக்கை


(பகுதி I )
                                                                                                                                                                சென்னை.                                                                                                                                                  ஜூலை 9, 2014

இந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்:

1.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (Peoples UNion for Human RIghts), சென்னை,
2.வி.சீனிவாசன், சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை,
3.பேரா ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயக முன்னணி (Peoples Democratic Front), பெங்களூரு,
4.பேரா. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,
5.வழக்குரைஞர் ஏ. சையதுஅப்துல் காதர், மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights), மதுரை,
6.வினோத், சேவ் டமில்ஸ் இயக்கம் (Save Tamils Movement)), பெங்களூரு,
7.ஷ்ரீலா மனோகர், சமூக ஆர்வலர், சென்னை.

      தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆயுதப் போராட்ட அமைப்புகளில் இணைந்துள்ளதாகவும், இளவரசன் நினைவு நாளன்று அப்பகுதி வன்னிய சாதியைச் சேர்ந்த சில முக்கியமானவர்களைக் கொல்லச் சதி செய்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் சென்ற மாத இறுதியில் செய்திகள் வெளிவந்தன. அதை ஒட்டி அதே வாசகங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கண்டன அறிக்கையும் வெளி வந்தது. நத்தம் காலனி தலித் மக்கள் அக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்ததோடு காவல்துறை அத்துமீறல்களால் தாங்கள் துன்புறுத்தப் படுவதாகவும் கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, மா-லெ இயக்கங்கள் ஆகியனவும் இக் கைதுகளைக் கண்டித்திருந்தன.

இந்நிலையில் இது குறித்த உண்மைகளைக் கண்டறியும் நோக்குடன் எமது குழுவினர் சென்ற ஜூலை 5 மற்றும் 8 தேதிகளில் தருமபுரி வந்திருந்து நத்தம் காலனி மக்களையும் அதிகாரிகளையும் சந்தித்தோம்.

கைது செய்யப்பட்டுள்ள துரையின் மனைவி செல்வி (37), சங்கர், அசோக் ஆகியோரின்  சகோதரி சுமதி (27), சந்தோஷின் தாய் சாலம்மா, சக்தியின் மனைவி தமிழ்செல்வி, கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ளோர், கைது நடவடிக்கைகளின்போது நேரில் இருந்த வி.சி.க பொறுப்பாளர் பழனிச்சாமி மற்றும் பல நத்தம் காலனி மக்கள் ஆகியோரைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டோம். ஆயுதப் பயிற்சி அளித்ததாகக் காவல்துறையால் குற்றம் சாட்டப்படும் ‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு, அதன் காப்பாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கிறிஸ்துதாஸ் காந்தி, இளவரசன் நினைவு நாளன்று கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ரஜினிகாந்த், அன்று இரவு தாக்கப்பட்ட அவரது வாகனத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு அவர்களது விளக்கங்களையும் பெற்றுக் கொண்டோம்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் கருத்துக்களை அறிவதற்காக ஜூலை 5 அன்று முழுவதும் முயன்றும் ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளரைச் சந்திக்க இயலவில்லை. ஒரு ஐந்து நிமிடச் சந்திப்புக்கு அனுமதி வேண்டிப் பலமுறை வேண்டியும் இருவரும் பதிலளிக்கவில்லை. வீடுகளுக்குச் சென்று அனுமதி கேட்ட போதும் சாத்தியமாகவில்லை. மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு வேலைச் சுமை இருக்கத்தான் செய்யும் என்பதை ஏற்று, எங்களுக்குச் சிரமமாயினும் மீண்டும் எல்லோரும் நேற்று தருமபுரி சென்று இருவரையும் சந்திக்க முயன்றோம். வழக்கமாக விரிவாகப் பேசக் கூடிய கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அவர்கள் “இது தொடர்பாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனது புலனாய்வு அதிகாரியைச் சந்தியுங்கள்” என்பதோடு முடித்துக் கொண்டார். புலனாய்வு அதிகாரியான கிருஷ்ணஅபுரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) காந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர், தான் கஸ்டடியில் உள்ள கைதிகளின் விசாரணையில் உள்ளதாகவும் தன்னை இப்போது சந்திக்க இயலாது எனவும் பதில் அளித்தார். நாளையேனும் சில நிமிடங்கள் பேச அனுமதி கோரி, மீண்டும் இன்று காலை நாங்கள் தொடர்பு கொண்டோம். “முதல்நாள் இரவே எல்லோரையும் கைது செய்துவிட்டு அடுத்த நாள் அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யச் சென்றபோது பிடித்ததாகப் பொய் வழக்கு போட்டுள்ளீர்களே” என முதல் கேள்வியைக் கேட்டவுடனேயே, அதை மறுக்காமல், “இதெல்லாம் நேரிலதான் பேச முடியும். இப்ப எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. தாங்க்ஸ்” எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார்.

கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த சந்தோஷ், துரை, சக்தி ஆகியோரை ‘கஸ்டடி’ எடுக்கக் காவல்துறையினர் ஜூலை 5 அன்று தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தனர். அப்போது அவர்களைப் பார்க்க முடிந்தது எம் குழுவில் இருந்த வழக்குரைஞர் அப்துல் காதர் அவர்களிடம் உரையாடினார். நேற்று அவரும் சேலம் வழக்குரைஞர் அரிபாபுவும் சேலம் சிறையிலுள்ள அதியமான், அசோகன், மைகேல்ராஜ், திருப்பதி ஆகியோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டனர். கைது செய்யப்பட்டோரின் வழக்குரைஞர்கள் தருமபுரி கபிலன், இராமமூர்த்தி ஆகியோரிடம் வழக்கு நிலை குறித்து விரிவாக விசாரித்தோம். நேற்று நத்தம் காலனிக்குச் சென்று மக்கள் எல்லோரையும் சந்தித்தோம்.

கைதுகள் குறித்துக் காவல்துறை சொல்வது

கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷின் வாக்குமூலத்தை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எண் 122/2014, கிருஷ்ணாபுரம் காவல் நிலையம், நாள் 28.06.2014) கூறப்படுவது: 1.ஜூலை 28 அன்று காலை 5.00 மணி அளவில் நாய்க்கன் கொட்டாய் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பல்சார் இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னப்பையன் மகன் சந்தோஷ் (22), சிவலிங்கம் மகன் அதியமான் (22), கோபால் மகன் சங்கர் (35) ஆகியோர் சந்தேகமான முறையில் தப்ப முயன்றனர். பிடித்து விசாரிக்கையில் பிடிபட்ட சந்தோஷ் தானாகவே முன்வந்து தாங்கள் அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க தலைவரும் 2012 நத்தம் காலனித் தாக்குதலுக்கு முக்கிய காரனமானவராகத் தாங்கள் கருதுபவருமான மதியழகனைக் கொல்வதற்காக வீச்சரிவாள்களுடன் சென்றதை ஒத்துக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். 2. இளவரசன் நினைவு நாளன்று மதியழகனைக் கொலை செய்ய, சங்கர் சக்தி, துரை, அசோகன்  எல்லோரும் சேர்ந்து சதித் .திட்டமிட்டு ஜூன் 28 காலை இரு குழுவாகப் பிரிந்து சென்றதாக ஒத்துக் கொண்டனர். இன்னொரு குழுவில் சங்கரின் சகோதரன் அசோக், ஊர்க்கவுண்டர் சக்தி, ஊர் முக்கியஸ்தர் துரை ஆகியோர் துப்பாக்கி வெடிகுண்டு சகிதம் கந்தன் குட்டை பக்கம் காத்திருந்தனர். பின்னர் இவர்களும் கைது செய்யப்பட்டனர். 3. இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் கிடைத்த பின்னணியாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படுவது: 2012 தாக்குதலுக்குப் பின் நத்தம் காலனிக்குப் பலரும் வந்து ‘ஆறுதல்’ சொல்லிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளான காளிதாஸ், சந்திரா ஆகியோர் அங்கு வந்து, தீவிரவாத இயக்கங்களின் பின்னணியோடு ஆயுதப் பயிற்சி எடுப்பது மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறினர், 4. அந்த அடிப்படையில் ‘துடி’ அமைப்பின் மூலம் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 50 பேர்களுக்கு (27 பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப் படுகின்றன.) 2013 தொடங்கி அரக்கோணம், சென்னை மெரினா பீச், கந்தன்குட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு வகை ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 5. இறுதியில் காளிதாஸ் சந்திரா இருவரும் ஒரு நாள் இரவு நத்தம் காலனி வந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு வீச்சரிவாள்கள்,மூன்று பைப் வெடிகுண்டுகள் ஆகிவற்றைத் தந்து சென்றனர். 6.ஆயுதப் பயிற்சி தொடங்கி  வன்னிய சமுதாயத்தின் முக்கிய தலைவர்களைக் கொல்வது வரைக்குமான திட்டம்  தீட்டப்பட்ட பின் இதற்கான செலவுகளுக்காக வீடு கொளுத்தப்பட்டதற்கு அரசு அளித்த இழப்பீட்டுத் தொகையிலிருந்து இம் முன்று தலித் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிதி வசூலிக்கப்பட்டது.

இப்படியான குற்றச்சாட்டைக் கோவையாக முன்வைக்கும் முதல் தகவல்.அறிக்கை, ‘கைப்பற்றப்பட்ட’ மேற்படி ஆயுதங்கள், ‘துடி’ அமைப்பு தாங்கள் ஆயுதப் பயிற்சி எடுத்ததை ‘ஒத்துக் கொண்டு’ வெளியிட்ட ஒரு அறிக்கை முதலானவற்றைக் கைப்பற்றிய வழக்குச் சொத்துக்களாகக் காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சொல்லப் படுவது

வாக்குமூலம் 1: கைது செய்யப்பட்ட சங்கர் மற்றும் அசோக்கின் சகோதரி சுமதி (27): எனது தம்பி அசோக் ஆசிரியர் பயிற்சி முடிச்சிட்டு மெடிகல் ரெப்ரசென்டேடிவா வேலை பார்க்கிறான். கைது செய்யப்பட்ட என் அண்ணன் அசோக் பி.எஸ்சி முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கான் .27ந்தேதி மதியம் 2 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் மொபைல் போன்ல கூப்பிட்டு ஏதோ பேசணும்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னாரு. சங்கர் போனான். ராத்திரி 10 மணி வரைக்கும் ஒரு தகவலும் இல்ல. போனையும் எடுக்கல. மதியம் 12 மணிக்கே அதியமானையும், மாலை 6 மணிக்கு சந்தோஷையும் இப்பிடி அழைச்சுட்டுப் போயி அவங்களும் வீடு திரும்பல. அப்புறம் ராத்திரி 10 மணிக்கு மேல சிங்காரம் போன் பண்ணி ஊர் ஆட்கள் வந்து மூணு பேரையும் அழைச்சிட்டுப் போங்கன்னாங்க. 14 ஆம்பளைங்க 5 பொம்பளைங்க புறப்பட்டுப் போனோம். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனா அலஞ்சு, கடைசியா B1 ஸ்டேஷனுக்குப் போனோம். அங்கே போனா 12 மணி வாக்கில ஊர்க் கவுண்டர் சக்தி, முக்கியஸ்தர் துரை, அசோக்கு இந்த மூணு பேரையும் புடிச்சு வச்சுக்கிட்டாங்க. எல்லாரையும் அடிச்சு ஜெயிலுக்குக் கொண்டு போய்ட்டாங்க.

வாக்குமூலம் 2: கைது செய்யப்பட்ட சங்கரின் தாயும் சின்னப்பையனின் மனைவியுமான சாலம்மா: 27ந்தேதி (ஜூன்) 12 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரமும் பூபாலன் போலீசும் வந்து துரை, சக்தி, அசோக் மூணு பேரு போன் நம்பரும் கேட்டாங்க. கொஞ்ச நேரத்தில எம் மவன் சந்தோஷை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி போன் வந்துது. எங்க குடும்ப கேஸ் ஒண்னு தொடர்பா விசாரணைன்னு சொன்னாங்க. நான் விளையாடப் போறேன், நீ போம்மான்னு அவன் சொன்னான். நான் போயிட்டு வந்தப்போ சந்தோஷைக் காணோம். நடு ராத்திரில போலீஸ் ஸ்டேஷன் போனப்பதான் அவனும் கைதாயிருக்கிறது தெரிஞ்சுது. கைது செஞ்ச எல்லாரையும் ரொம்ப அடிச்சிருந்தாங்க. சேலம் ஜெயில்ல அவங்கள நாங்க பாக்கப் போயிருந்தபோது அவங்களால நிக்க கூட முடியல.அவங்கள ஆஸ்பத்திரியில சேக்கணும்னு கேட்டுகிட்டோம். ஆனா அதுவும் நடக்கல.
வாக்குமூலம் 3: துரை என்னும் துரைக்கண்ணுவின் மனைவி. செல்வி: ஊர்ல மூணு பேர (சங்கர், அதியமான், சுரேஷ்) காணோம்னு ராத்திரி 10 மணிக்கு மேல குண்டல்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் அலைஞ்சிட்டு கடைசியா B1 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். என் கணவர் துரை ஊர் முக்கியஸ்தர். அவுரு, ஊர்க்கவுண்டர் சக்தி அப்புறம் அசோக் மட்டும் வாங்கன்னு சொல்லி அவங்களையும் கைது பண்ணிட்டாங்க. அது தெரியாம நாங்க வீட்டுக்குத் திரும்பினோம். காலையில (ஜூன் 28) 4 மணிக்கெல்லாம் நத்தம் காலனிய சுத்தி நூத்துக் கணக்கில போலீசு. என் கணவர் துரையை விலங்கு போட்டு இழுத்துட்டு வந்தாங்க. வீட்டுல மணல் கொட்டி வச்சிருந்தோம். “எடுடா, எடுடா” ன்னு போலீஸ் அவரைப் போட்டு அடிச்சாங்க. அவர் காயல்காரரு. ஆஸ்த்மா வியாதிக்காரரு. என்னாத்தங்க எடுக்கிறதுன்னு கேட்டேன். என் கண்ணு முன்னாடி அவர் கையை முதுகுக்குப் பின்னாடி வளைச்சு அடிச்சாங்க. அப்புறம் அவரை இளவரசன் சமாதிப் பக்கம் இழுத்துட்டுப் போனாங்க. எஸ்.பி அஸ்ரா கார்கும் இருந்தாரு. கொஞ்சம் போலீஸ் வந்து என்னிட்ட “கடப்பாறை, மண்வெட்டி குடுடி” ன்னாங்க. இங்க இல்ல அப்படீன்னேன். கவர்மன்ட் குடுத்தது இருக்குல்ல, அதைக் குடுடீன்னு வாங்கிட்டுப் போனாங்க. என் கணவர்ட்ட “இங்கதானடா ஆயுதங்களப் புதைச்சு வச்ச வச்ச, தோண்டி எடுடா”ன்னு சத்தம் போட்டாங்க. அப்புறம் அவங்களே லேசாத் தோண்டி, அவங்க கொண்டு வந்த துப்பாக்கிய அங்கே இருந்து எடுத்தமாதிரி காட்டினாங்க. என் 15 வயசு மகன் ஆனந்தை சமந்தாகுப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போயி “எங்கடா உங்க அப்பன் ஆயுதங்களப் புதைச்சு வச்சிருக்கான்?” னு மிரட்டுனாங்க. அவனைக் காலரைப் பிடிச்சுத் தூக்கி “உங்கொப்பனை என்கவுன்டர்ல போட்டுத் தள்ளிடுவோம்”னு பயமுறுத்துனாங்க. என் கணவர் துரை பொடாக் கைதியா இருந்தவருதான். ஆனா இப்பஎந்த அரசியல் பக்க்கமும் போறதுல்ல. யாரோடவும் தொடர்பு இல்ல. ரொம்ப உடம்பு சரி இல்ல மாஓயிஸ்டுகள் யாரும் இங்க வர்றதில்ல. 13 வருசத்துக்கு முன்னாடி வந்ததுதான். ‘துடி’ங்கிற அமைப்பைச் சேர்ந்தவங்க எங்க புள்ளைங்களப் பள்ளிக் கூடத்தில சேப்பாங்க. வேற எந்த அரசியலும் பேசுனதே இல்ல.

கைது செய்யப்பட்டு சேலம் சிறையிலுள்ள அதியமான் (22): ஆறாவது வரை படிச்சிருக்கேன். ஜூன் 27ந்தேதி எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் எங்க சவுன்ட் செட் பத்திப் பேசணும்னு அழைச்சாரு. முதல்ல தருமபுரி ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுரம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. அங்கே SP, ASP, DSP, Q Branch DSP, SBCID எல்லாம் இருந்தாங்க. என்னை ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. 2013 ஏப்ரல் 5,6 தேதிகள்ல நீர்ப்பெயல்ல ‘துடி’ அமைப்பு நடத்துன அரசாணை 92 பற்றிய விழிப்புணர்வு முகாம்ல பங்கேற்றேன். இந்த ரண்டு நாள்ல ஒரு தடவை மெரினா பீச்சுக்கு ‘ரிலாக்சேஷனுக்கு’ கூட்டிட்டுப் போனாங்க. வேற யாரையும் நான் சந்திச்சதில்ல. கொலை முயற்சி பண்ணோம்னு சொல்றதெல்லாம் பொய்.

கைது செய்யப்பட்டுச் சிறையிலுள்ள சங்கர் (35): பி.எஸ்சி வரை படிச்சிருக்கேன். பால் சொசைடி பொருள்கள விக்கிறேன். காச நோய்க்கு கவர்மன்ட் ஆஸ்பத்திரில தர்ற மருந்த சாப்பிடுறேன். 27ந்தேதி சிங்காரம் 144 தடை உத்தரவு பற்றிப் பேசணும்னு கூப்பிட்டாரு.முதல்ல B1 ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுராம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. ஜட்டி கூட இல்லாம அம்மணமா விட்டு என்னை அடிச்சாங்க. என்னமாதிரி ஆயுதப் பயிற்சி எடுத்தேன்னு கேட்டு கடுமையா அடிச்சாங்க. நான் எந்தப் பயிற்சிக்கும் போனதில்ல. துடி அமைப்போட கல்விப் பயிற்சிக்கும் போனதில்ல.

கைது செய்யப்பட்டுள்ள அசோகன் (22): M.A, B.Ed படிச்சிட்டு மெடிகல் ரெப் ஆக இருக்கேன். 28ந் தேதி காலை 12.30 மணிக்கு (27 நள்ளிரவு) எங்க ஊர் பையன்கள காணாம்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரிக்கப் போனபோது துரை, சக்தி இவங்களோட என்னையும் பிடிச்சுட்டாங்க. ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. ஆயுதப் பயிற்சி பத்தித்தான் கேட்டாங்க. யாரெல்லாம் பயிற்சி எடுத்தாங்கன்னு கேட்டாங்க. நான் எதுக்கும் போனதில்ல. துடி கல்விப் பயிற்சிக்கும் கூடப் போனதில்ல.

கைதாகியுள்ள திருப்பதி (20) இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் மாணவன். குடிப்பட்டியிலுள்ள அத்தை வீட்டுக்குப் போயிருந்த போது ஜூன் 29 காலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர். ஜட்டியுடன் அடித்து மற்றவர்களைக் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டுள்ளனர். இவர் துடி கல்விப் பயிற்சிக்குச் சென்றுள்ளார். ‘துடி’ அமைப்பில் பொறுப்பு வகித்த மைகேல் ராஜ் (22) பி.ஏ முடித்து ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளார், ஜூலை 4 காலை நாராயணபுரத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். இவரையும் ஆடையின்றி அம்மணமாக நிற்க வைத்து அடித்துள்ளனர்.

இவர்கள் யாருமே காளிதாசையோ சந்திராவையோ சந்தித்ததில்லை என்கின்றனர். ஆயுதப் பயிற்சி குறித்து எல்லோரிடமும் எஸ்.பி அஸ்ரா கார்க் விசாரித்துள்ளார்.

சுருக்கம் கருதி மற்றவர்களின் வாக்கு மூலங்களை இங்கு தவிர்க்கிறோம். எல்லோரும் ஒன்றை உறுதியாகச் சொன்னார்கள். இங்கு ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுகிறவர்கள் யாரும் வந்ததில்லை. ‘துடி’அமைப்பு கல்வி தொடர்பான பிரச்சினைகள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது கல்விக் கட்டணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை என்கிற அரசாணை எண் 92 பற்றிப் பிரச்சாரம் செய்தல் தவிர வேறெதுவும் செய்ததில்லை. அவர்கள் முயற்சியில் தம் பகுதியைச் சேர்ந்த சில மாணவர்களுக்குப் பொறியியல் மற்றும் பட்டப் படிப்பு வாய்ப்புக் கிடைத்தது, அவ்வளவுதான் என்றனர்.

Part  I

சமீபத்திய கைது நடவடிக்கைகள் : நடந்தது இதுதான்

நேரடி சாட்சிகள் பலரையும் விசாரித்து நாங்கள் அறித்த உண்மைகள்: 1. ஜூன் 27, மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிக்குள் அதியமான், சங்கர், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டனர். தன்னை பத்து போலீஸ்காரர்கள் ரவுண்டு கட்டி அடித்து அவர்கள் சொன்னபடி வாக்குமூலம் எழுதிக் கையெழுத்திட வைத்தனர் என்று சந்தோஷ் எங்களிடம் கூறினார். இவர்களை அழைத்துச் செல்ல வாருங்கள் என வஞ்சகமாக B1 போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அங்கே சக்தி, துரை, அசோக் ஆகியோரையும் கைது செய்து அவர்களையும் கடுமையாக அடித்து ஒரே மாதிரி வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. பின்னர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த 27 பேர்களில் திருப்பதி என்கிற பாலிடெக்னிக் படிக்கும் மாணவனை குடிப்பட்டி என்னுமிடத்தில் கைது செய்தனர். ஜூலை 5 அன்று கொண்டாம் பட்டியைச் சேர்ந்த மைக்கேல் ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் துடி அமைப்பில் செயல்பட்டவர்.

ஆக இது வரைக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 8 பேர். முதல் தகவல் அறிக்கை எண் 122/2014; கிருஷ்ணாபுரம் காவல் நிலையம்;நாள் ஜூன் 28,2014. குற்றப் பிரிவுகள: இ.த்.ச பிரிவுகள் : 120 (பி),153 (ஏ), 153 (ஏ ஏ): இந்திய ஆயுதச் சட்டம் பிரிவுகள்: 25 (1) (ஏ) மற்றும் 27; 1908ம் ஆண்டு வெடி பொருட்கள் சட்டம் பிரிவுகள் 4 மற்றும் 5.

இவர்களில் முதல் அறுவரும் கைதானதற்கு அடுத்த நாள் பெங்களூரு சென்ற காவற் படையினர் நத்தம் காலனியச் சேர்ந்த நால்வரைப் பிடித்து விசாரித்துப் பின் விட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகுதிகளைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் பெங்களூரில் வேலை செய்யும் இடங்களில் கண்காணிப்பது தொடர்வதாகவும், இதனால் மாஓயிஸ்ட் பயம் ஊட்டப்பட்டு இப்பகுதி தலித் இளைஞர்கள் பெங்களூருவில் வேலை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் எம்மிடம் கூறினர்.
இப்படிப் பலரும் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நத்தம் காலனி மக்கள் ஜூலை 4 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி தங்கள் குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை ஒப்படைப்பதாக அறிவித்தனர். இனி கைது ஏதும் நடக்காது, ஆனால் தேடப்படும் மற்றவர்களை ஒப்படையுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்குப் பின்னும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு என்பவரை துணைக் கண்காணிப்பாளர் நீலகண்டன் என்பவர் தொலைபேசியில் விசாரித்துள்ளார். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின் அந்த அதிகாரி அவரை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார். காவல் நிலையத்திற்கு வருகிறவர்கள் கைது செய்யப்படும் நிலை இருப்பதால் பாரதி பிரபு செல்லவில்லை. உடன் அவரது சகோதரர்கள் கந்தவேலு, சண்முகம் சகோதரர் மகன் பாலகுமார் ஆகியோரை இழுத்துச் சென்று மிரட்டி பின் விட்டுள்ளனர். தற்போது பாரதிபிரபுவும் அவ் அமைப்பைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக அறிகிறோம். 

Part  II

‘துடி’ அமைப்பு : ஒரு குறிப்பு

துடி அமைப்பை ஒரு வன்முறை அமைப்பாகவும், ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் பெரிய அளவில் ஒரு பயங்கரவாத அமைப்பு என்கிற ஒரு பிம்பத்தை தருமபுரி காவல்துறை இந்தக் கைதுகள் மூலம் கட்டமைத்துள்ளது. துடி அமைப்பையும் இடதுசாரி ஆயுதப் போராட்டக் கருத்தியலை நத்தம் இளைஞர்கள் மத்தியில் விதைத்தவராகக் காவல்துறையால் சொல்லப்படும் காளிதாஸ் மற்றும் சந்திரா ஆகியோரையும் ஒரே அமைப்பினர் போலச் சித்திரிக்கின்றனர்.. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை விரிக்கும் கதையின் முதல் அங்கம் காளிதாஸ் – சந்திரா வருகை மற்றும் ஆயுதப் போராட்டம் குறித்த அவர்களின் ஊக்க உரையோடு முடிகிறது என்றால் இரண்டாம் அங்கம் துடி அமைப்பு ஆயுதப் பயிற்சி அளிப்பதோடு தொடங்குகிறது.

ஆனால் ‘துடி’ அமைப்பை அது தொடங்கிய 2002 முதல் நெருக்கமாகக் கவனித்து வருபவர்கள் நாங்கள். தலித் மாணவர்களின் கல்வி தவிர வேறு எதிலும் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. மிக்க மரியாதைக்குரிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கிருஸ்துதாஸ் காந்தி அவர்கள் தொடக்கம் முதல் இன்று வரை அதன் காப்பாளராக இருந்து வருகிறார். நேற்று காலை நாங்கள் அவரிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறியதாவது:

கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்; “எங்கள் அமைப்பு முழுக்க முழுக்க தலித் இளைஞர்கள் மார்க்சீயம், தமிழ்த் தேசியம் முதலான எந்தக் கருத்தியலின்பாலும் ஈர்க்கப்பட்டு வீணாகாமல், குறிப்பாக எக் காரணம் கொண்டும் ஆயுதப் போராட்டம் பக்கம் சாயாமல், கல்வியிலும் அம்பேத்கர் சிந்தனையிலும் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டது. கடவுள் பிரச்சினை, காதல் திருமணம் தொடர்பான அரசியல் எதிலும் அம் மாணவர்களின் கவனம் திரும்பக் கூடாது என்பதே எங்கள் கவலை. அப்படியான ஒரு இயக்கத்தை ஆயுதப் பயிற்சி அளித்தது எனச் சொல்வதைப்போல ஒரு அபத்தம் வேறு எதுவுமே இல்லை” என ஆணித்தரமாகச் சொன்னர். காந்தி அவர்களின் இக்கருத்தில் உடன்பாடு இல்லாதவர்களுங் கூட அவர் சொன்னவை அவரளவில் உண்மையானவை என்பதை அறிவர்.

‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு கூறியது: “நாங்கள் இந்திய அரசு,தமிழக அரசு ஆகியவற்றுடன் இணைந்து தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்தோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையானவை. மத்திய அரசின் ‘இளைஞர்களின் வளர்ச்சிக்கான ராஜிவ் காந்தி நிறுவனத்தின்’ (RGIYD) நிதி உதவியுடன் நாங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். தமிழக அரசின் ‘ஆதி திராவிட நலத் துறை’யுடன் இணைந்து அரசாணை 92 குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்துள்ளோம். மேல் மருவத்தூருக்கு அருகில் உள்ள நீர்ப்பெயல் கிராமத்தில் அருட் பணியாளர்கள் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோரின் உதவியோடு நாங்கள் நடத்திய கல்விப் பயிற்சியில் 70 மாணவிகளும், 50 பையன்களும் பங்கு பெற்றனர். இவர்களில் 12 பேருக்கு எஞினீரிங் படிப்பில் இடம் கிடைத்தது. இருவரை லயோலா கல்லூரியில் சேர்த்தோம். ரிலாக்சேஷன் மற்றும் psychological counciling”கிற்காக ஒரு முறை மெரீனா பீச்சுக்கு இவர்களை அழைத்துச் சென்றது உண்மை.
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் ‘தமிழ்ப் பண்பாட்டில் பவுத்தம்’ என்கிற தலைப்பில் ஆய்வு செய்த பாரதி பிரபு தாங்கள் செய்த கல்விப் பணிகளை மிக விரிவாகச் சொன்னார். நத்தம் பகுதியிலும் அவர்கள் இப்படி தலித் மாணவர்கள் மத்தியில்  கல்விப் பணி செய்து வந்ததை நாங்களும் கவனித்து வருகிறோம். சென்ற 2013 ஜூன் 8 அன்று கூட தருமபுரி பெரியார் மன்றத்தில் அரசாணை  92 குறித்த விழிப்புணர்வுக் கூடலை நடத்தியதை அறிவோம். வி.சி.க, மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அவர்கள் இதைச் செய்தனர்.

இப்படி நிறையச் சொல்லலாம். துடி போன்ற ஒரு அமைப்பை ஆயுதப் போராட்டத்துடன் தொடர்பு படுத்டுவதைப் போல ஒரு அபத்தம் எதுவும் கிடையாது என எம் குழுவும் உறுதியாகக் கருதுகிறது.

இது தொடர்பாக எஸ்.பி அஸ்ராகார்க் அவர்களிடம் நாங்கள் பேசத் தொடங்கியவுடன், “அதில் கவனமாக இருக்குமாறு நான் என் புலனாய்வு அதிகாரியிடம் சொல்லியுள்ளேன்” என்றார்.

காவல்துறை அவிழ்க்கும் கதையில் உள்ள முரண்பாடுகளும் பொய்களும்

1. கைது செய்யப்பட்டுள்ள முதல் ஆறு பேர்களும் ஜூன் 27 மதியம் 12 மணிமுதல் நள்ளிரவு வரை கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு ஊர் மக்கள் நேரடி சாட்சிகளாக உள்ளனர். B1 நிலையத்தில் ஊர் மக்களுக்கும் காவல் துறைக்கும் விவாதம் நடந்துள்ளது. இது தொடர்பான உரையாடல்கள் செல்போன்கள் மூலமாக ஊர் மக்களுக்கும் எச்.பி அஸ்ரா கார்க் மற்றும் சி.பி.சி.ஐ.டி சிங்காரம் ஆகியோருடக்கும் இடையில் நடந்துள்ளது. இப்படி காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்கள் ஜூன் 28 காலை 5 மணிக்கு கையில் ஆயுதங்களுடன் பா.ம.க மதியழகனைக் கொல்லச் சென்ற போது நாய்க்கன்கொட்டாய்க்கு அருகில் பைக்கிலும் கந்தன் குட்டைக்கு அருகிலும் கைது செய்யப்பட்டனர் என்பது முற்றிலும் பொய்.

2. நத்தம் கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது கைப்பற்றப்பட்டது? ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை? இது தொடர்பாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இருட்டாக இருந்ததால் உங்களை அழைக்கவில்லை என்று எஸ்.பி பதிலளித்துள்ளார். இது ஒரு பதிலா? அப்படியானால் எந்த இரவு அது நடந்தது?

3. கடந்த பல மாதங்களாக அப் பகுதிக்கு தீவிரவாதிகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும் காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இளவரசன் நினைவு நாள் வரும் வரை காத்திருந்தனர்?

4.இளவரசன் சமாதிக்கு அருகில் கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது சமாதிக்கு வருபவர்களை மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா? இளவரசன் சமாதி அருகில் ஆயுதத்தை துரை புதைத்து வைத்தார் என்றால் அதை சிசிடிவி படம் எடுக்கவில்லையா?

5.மெரீனாவிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா? தருமபுரி காவல்துறை ஒரு வேளை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத் துறைகளைக் கிண்டல் செய்கிறதா?

6.துடி அமைப்பு வெளியிட்டுள்ளதாக் ஒரு துண்டறிக்கையை காவல்துறையினர் காட்டுகின்றனர். தேதி,முகவரி இல்லா இந்தத் துண்டறிக்கை ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுவதோடு நூறு பேர் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கிறது. மக்கள் மத்தியில் வினியோகிக்கப்படும் ஒரு துண்டறிக்கையில் யாராவது தம் அமைப்பில் எத்தனை பேர் ஆயுதப் பயிற்சி எடுத்தனர் என்றெல்லாம் அச்சிடுவார்களா?

எமது பார்வைகள்

1. 2012ல் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராமங்களில் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பின் பல அமைப்பினரும் அங்கு அடிக்கடி சென்று வதுள்ளனர். நாங்கள் கூட மூன்று முறை அங்கு சென்று வந்துள்ளோம். கடும் போலீஸ் கண்காணிப்பு, உளவுத்துறை இருப்பு முதலியன அங்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையால் கடுமையாகத் தேடப்படும் ஆயுதப் போராளிகள் யாரும் அங்கு வந்து செல்வதற்கு வாய்ப்பில்லை. அப்படி வந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இளவரசன் முதலாம் ஆண்டு விழாவை ஒட்டி இந்தக் கைது செய்துள்ளதற்கு உள் நோக்கம் இருப்பதாகவே கருதுகிறோம். முதலாம் ஆண்டு கடுமையாக நடவடிக்கை எடுத்து ஒடுக்கிவிட்டால் பின் எப்போதும் இளவரசன் சமாதியை மையமாக வைத்து தலித் இளைஞர்கள் ஒருங்கிணையமாட்டர்கள் என்ப்பதற்காக அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ள சதியாகவே நாங்கள் இதைக்கருதுகிறோம். தாங்கள் காவல்துறை அனுமதி மறுப்பை மீறி நீதிமன்றத்தில் அனுமதி ஆணை பெறுவதற்கு முயற்சித்தது பிடிக்காமல்தான் எஸ்.பி அஸ்ரா கார்க் தம்மிடம் இப்படி மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார் என நாங்கள் சந்தித்த மக்கள் அனைவரும் கூறினர். அஸ்ரா கார்க் மீது தலித் மக்கள் மிக்க நம்பிக்கை வைத்திருந்ததை நாங்கள் அறிவோம். மதுரை வில்லூர் போன்ற இடங்களில் அவர் சாதிக் கலவரங்களைக் கையாண்டதை நாங்களும் கூடப் பாராட்டியுள்ளோம். ஆனால் இந்தப் பிரச்சினையில் அவர் இந்த நம்பிக்கைகளை முற்றாக இழந்துள்ளார். விரிவாக எங்களுடன் பேசக்கூடிய அவர் எங்களைத் தவிர்த்ததும் பேச மறுத்ததும் அவரிடம் எங்கள் கேள்விகளுக்குப் பதிலில்லை என்பதையே காட்டுகிறது. எனினும் இந்தக் கைதுகள் மற்றும் தீவிரவாதப் பிரச்சாரங்களை அஸ்ராகார்க் என்கிற ஒரு அதிகாரியின் ‘ஈகோ’ பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. இதற்குப் பின் அரசு மற்றும் காவல்துறை மேல்மட்ட அதிகாரம் ஆகியன உள்ளன என்றே கருதுகிறோம்.

2.கடுமையான சாதிப் பிளவு (polarisation) நடந்துள்ள ஒரு பகுதியில், இந்த அடிப்படையிலேயே ஆதிக்க சாதியினர் ஒரு தேர்தல் வெற்றியைச் சாதித்து, வெற்றிப் பெருமிதத்துடன் திரியும் சூழலில் இப்படி தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்து முக்கிய ஆதிக்க சாதித் தலைவர்களையும், பா.ம.கவினரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், கொலை செய்யப் பயங்கர ஆயுதங்களுடன் வந்தபோது தாங்கள் கைது செய்ததாகவும் அப்பட்டமான ஒரு பொய்யை ஊடகங்களின் துணையோடு தருமபுரி மாவட்டக் காவல்துறை பிரச்சாரம் செய்வதை நாங்கள் மிகவும் கவலையுடன் நோக்குகிறோம். குறிப்பாக முன்னதாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டுக் காவலில் இருந்தவர்கள் துப்பாக்கி, வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் அகிதம் ஒரு பா.ம.க தலைவரைக் கொல்லப் போனார்கள் என்பது நூற்று சதம் பொய். இது சாதிப் பகையை மேலும் வளர்க்கும்.

எதிர்பார்த்ததுபோலவே இதைப் பயன்படுத்தி பா.ம.க தலைவர்கள் இராமதாஸ் அன்புமணி ஆகியோர் உடனடியாக அறிக்கைகள் விட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அரசும் காவல்துறையும் உணர்ந்துதான் செய்கின்றனவா, இல்லை அவர்களின் நோக்கமே இப்படிச் சாதிப் பகையை மூட்டுவதுதானா? ஆதிக்க சாதியினரின் நினைவு நாட்களை அரசே கொண்டாடும் நிலையில் தலித் மக்களின் இதகைய முயற்சிகளை ஏன் இத்தனை கடுமையாக ஒடுக்க வேண்டும்? முதலமைச்சர் அவர்கள் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

3. தலித் மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் ‘துடி’ போன்ற ஒரு

நன்றி: அ.மார்க்ஸ்