வெள்ளி, ஜூன் 22, 2018

‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…


‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…

மு.சிவகுருநாதன்

(குங்குமம் தோழி (ஜூன் 16-30, 2018) இதழில் வெளியான கட்டுரை இங்கு பதிவிடப்படுகிறது.)     வேதகாலம் தொட்டே பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது. சங்ககாலத்தில் பெண்கல்வி சிறப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதன் தொடர்கண்ணி அறுபட்டு போயுள்ளது.

   20 ம் நூற்றாண்டில் பல சமூக இயக்கங்கள் பெண் கல்வியை முன்னிறுத்திப் பணி செய்தன. தமிழகம் போன்ற மாநிலங்கள் பெண்கல்வியில் உயரிய இடத்தைப் பெற்றன. பிற மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்கமுடியாமல் இருந்தபோது தமிழகத்தில் முதல் பெண் மருத்துவரே உருவாகிவிட்டார். விடுதலைக்குப் பிறகும் இந்நிலை தொடர்ந்தது.

   இந்நிலையை உலகமயத்திற்குப் பின் வந்துள்ள வலதுசாரி, தீவிர இந்துத்துவ மோடி அரசு நாட்டைப் பின்நோக்கித் தள்ளி வேதகாலத்துக்கு  அழைத்துச்செல்லும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலொன்று நம்மீது திணிக்கப்படும் ‘நீட்’. 

   குடும்பம், சமூகம், கல்வி நிறுவனங்கள் என எதிலும் பெண்கல்விக்கான சூழல் இல்லாதபோதும் பெண்கள் தங்களுடைய உறுதித்தன்மையால் இவற்றையும் தாண்டி சாதனை புரிந்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் தேர்ச்சி விழுக்காடு, அதிக மதிப்பெண்கள் ஆகியவற்றில்  முதலிடத்தில் உள்ளனர். போட்டித்தேர்வுகளில் பெண்களது சாதனை அதிகம். விளையாட்டுத்துறைகளிலும் பெண்களது சாதனை அளப்பரியது. தமிழகத்து பெண்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனைகளை நிகழ்த்தி வருவது சிறப்பான ஒன்று. தடைகளைத் தாண்டி உழைக்கும் மனவுறுதி முதன்மையானது.    ‘நீட்’ தேர்வு கெடுபிடிகளை, குறிப்பாக  பெண் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் அவர்களது மனவுறுதியை குலைக்கும் நடவடிக்கை என்பதில் அய்யமில்லை.

     கல்வி பொதுப்பட்டியலில் இருந்தபோதும் மத்திய அரசு அதிகாரத்தை முற்றாகக் கைக்கொண்டு ‘நீட்’ போன்ற இந்தியத் தேர்வுகள் மூலம் சமூக நீதியையும் பெண்கல்வியையும் ஒருங்கே கேள்விக்குறியாக்கி வருகிறது.

    அலோபதி மருத்துவப் படிப்பிற்காக ‘நீட்’ தேர்வு இவ்வாண்டு முதல் ஆயுஷ் (சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம்) படிப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் பொறியியல், இளங்கலை படிப்புகளுக்கு போட்டித்தேர்வு முறை அமலாகும் வாய்ப்பு இருக்கிறது.

    இந்தப் போட்டித்தேர்வுகளை மத்திய அரசு தனது கல்வி வாரியப் பாடத்திட்டம் (CBSE) மூலம் நடத்துவது சமூக அநீதி மட்டுமல்ல; நமது அரசியல் சட்டத்திற்கு எதிரானதும் கூட. உச்சநீதி மன்றம் சி.பி.ஐ. போல மாறியது நமது நாட்டின் சாபக்க்கேடு. இதனால் நீதி நிலை நாட்டப்படவில்லை. தொடந்து நடைபெற வேண்டிய சட்டப்போராட்டம், ‘நீட்’ தேர்வு தயாரிப்பு என்ற வகையில் சுருங்கிப் போயுள்ளது.

     மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டத்திற்கு மாறுவது ஏற்புடையதல்ல. ஏனெனில் அந்தப் பாடத்திட்டங்களும் பாடநூற்களும் 10 ஆண்டுகளுக்கு முந்தியவை. தமிழகக் கல்விப் பாடநூல்கள் இப்போது மாற்றப்பட்டுள்ளன. இன்னும் இரண்டாண்டுகளில் மொத்தப் பாடங்களும் மாறிவிடும். ‘நீட்’ தேர்வுக்கு அடிப்படையிலான +2 க்கு புதிய பாடம் வரும் கல்வியாண்டில் வந்துவிடும். இதிலுள்ள குறைபாடுகளைச் சரிசெய்து உடன் சரிசெய்து செழுமைப் படுத்திவிடலாம்.

   ‘நீட்’ தேர்வை மையமாகக் கொண்டு பெற்றோர்களும் தனியார் சுயநிதிப் பள்ளிகளும் சிபிஎஸ்இ யை நோக்கி படையெடுக்கும் நிலை காணப்படுகிறது. இது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையை உண்டாக்கும். சிபிஎஸ்இ இல் பாடச்சுமை குறைப்பு பற்றியும் பேசப்படுகிறது. இதற்கு இணையான தமிழகப் பாடத்திட்டம் சிறப்பானது இருந்தபோதிலும் இதனடிப்படையில் ‘நீட்’ கேள்விகள் அமையும் என்பதில் உத்தரவாதமில்லை. இனி +1,+2 வகுப்புகளைத் தாண்டி பிற வகுப்பிலிருந்து வினாக்கள் கேட்டால் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை. ஏற்கனவே ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வினாத்தாள் அளித்தவர்கள்தானே!

    சில லட்சம் பேருக்குத் தேர்வு நடத்த எவ்வித அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத மத்திய வாரியம் ‘நீட்’ தேர்வு நடத்துகிறது. அதன் குளறுபடிகள் எண்ணற்றவை.  20 லட்சம் பேருக்குக்கூட முறையாக தேர்வுகள் நடத்தக்கூடிய தமிழகப் பள்ளிக் கல்வித்  தேர்வுத்துறை மற்றும் தேர்வாணையம் இந்தப் பணியை செய்யும் நிலை வரவேண்டும்.

     சில ஆண்டுகளில் மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டம் மாற்றப்படுமேயானால் உடனே நமது பாடத்திட்டத்தையும் மாற்றிட முடியாதல்லவா! ‘நீட்’ தேர்வுக்கு தற்காலிக அல்லது நிரந்தர விலக்கு கோருவது ஒருபுறம். +1,+2 வில் மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வை தமிழக அரசே நடத்தவேண்டிய உரிமையை நிலைநாட்டுவது அவசியம். ஜிப்மரில் தனி நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசால் முடியுமெனில் மாநில அரசால் ஏன் முடியாது? 

     +1,+2 பாடங்களை முழுமையாகப் படிக்காமல், பள்ளிக்கே செல்லாமல் ‘நீட்’ தேர்வில் முதலிடம் பெறமுடியும் என்பதை பீகார் மாணவி நிருபித்திருக்கிறார். நுழைவுத்தேர்வு நடந்தாலும் +1,+2 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவது அவசியம்.

      ‘கோச்சிங்’ சென்டர்களாக கல்வி நிறுவனங்களை மாற்றுவது உலகமயத் தந்திரம். கல்வியை மேலும் வணிகமயமாக்க இது உதவும்.  நம்மிடம் உள்ள சுமார் 2000 மருத்துவ இடங்கள் கைவிட்டுப் போகும்போது, பிற மாநில இடங்களை நமது மாணவர்கள் பெறுவார்கள் என்று வீம்பு பேசுவது அநியாயம். இரண்டு அல்லது பல ஆண்டுகள் பயிற்சிகள் இல்லாமல் இது சாத்தியமில்லை. கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு இதற்கான வாய்ப்பு துளியுமில்லை.

     அனிதா, பிரதீபா, சுபஶ்ரீ என ‘நீட் படுகொலைகள்’ இனியும் நிகழாதிருக்க பெண்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான ‘நீட்’ தேர்வு ஒழிக்கப்படவேண்டும். தேர்வு அவசியமென்றால் பிற தகுதித்தேர்வு போன்று அதைத் தமிழக அரசே நடத்த வேண்டும். இல்லாவிடில் சமூகநீதியும் பெண்கல்வியும் கேள்விக்குறியாகிவிடும். 

நன்றி: குங்குமம் தோழி (ஜூன் 16-30, 2018)

வியாழன், ஜூன் 21, 2018

மொழிப் பாடநூல்களின் அரசியல்


மொழிப் பாடநூல்களின் அரசியல்


மு.சிவகுருநாதன்


(தமிழகப் பள்ளிக் கல்வியின் புதிய தமிழ்ப் பாடநூல்கள் குறித்த பார்வை.)ஒரு முன் குறிப்பு: 
    இந்தக் கல்வியாண்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் 6, 9, 11 தமிழ் மற்றும் 11 சிறப்புத்தமிழ் ஆகிய பாடநூல்கள் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை. நான் இந்தப்பாடங்களில் புலமை பெற்றவன் அல்லன். ஒரு இலக்கியப் பிரதி அல்லது திரைப்படத்தை வாசித்து, பார்த்து, விமர்சிப்பதைப் போன்று இதையும் பலர் விமர்சிக்க வேண்டும் என்று கருதுகிறேன். அந்தப்பணியை நானும் செய்ய முயல்கிறேன்.

     தமிழ்ப்பாடநூலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல புதியன சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. சில குறிப்பிடத்தகுந்த அம்சங்களைத் தொகுத்துக் கொள்வோம். • ·   தமிழ்ப்பாடநூலில் வழக்கமான கடவுள் வாழ்த்து இடம் பெறாத புதிய அணுகுமுறை வரவேற்கத்தக்கது.

 •  எர்னஸ்ட் ஹெமிங்வே யின் கடலும் கிழவனும் (6 -ம் வகுப்பு) படக்கதையாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
 • கந்தர்வன்  சிறுகதை (6 -ம் வகுப்பு) இடம் பெறுகிறது.
 • ஆமினா – முகிலன் – மெர்சி, ஆனந்தி – மும்தாஜ் – டேவிட், பாத்திமா – செல்வன் - அன்புமேரி  (9 -ம் வகுப்பு) என்று பன்மைத்தன்மையை வலியுறுத்தும் பெயர்கள் உரையாடல்களில் இடம் பெறுகின்றன.
 • பாடத்திற்கு வெளியேயாவது ‘மொழியை ஆள்வோம்’ என்ற தலைப்பில் யூமா.வாசுகியின் கவிதை, நாட்டுப்புறப்பாட்டு  (9 -ம் வகுப்பு) இடம் பெறுவது நன்று.
 • இருமொழிக் கலைச் சொற்கள் பட்டியல் உண்டு.
 • சில பாடங்களில் ‘அறிவை விரிவு செய்’ நூல் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
 • நேர்காணல் என்னும் இலக்கிய வடிவம் அறிமுகமாகிறது. (9 –ம் வகுப்பு, பக். 107)
 • உயிருக்கு வேர் என்னும் தண்ணீர் பற்றிய பாடம் சிறப்பானது. மறைநீர் என்னும் அறிவியல் -  சூழலியல் கருத்து இடம்பெறுகிறது. (9 –ம் வகுப்பு, பக். 62)
 • வழமையான பழமொழிகள் மொழிபெயர்ப்புகளுக்குப் பதிலாக பொன்மொழிகள் சில மொழிபெயர்க்கப்பட்ட்டுள்ளன.
 • இலக்கணம் மாணவர்களுக்கு இனிப்பாக ‘கற்கண்டு’ என்ற பெயரில். ஆனால் இலக்கணத்தை இனிப்பாக்க எந்த புதிய உத்திகளும் இல்லை.
     மொழிப்பாடத்திறன்களை விட அவற்றில் உள் அரசியல் முதன்மையானது  என்று நான் கருதுகிறேன். மொழித்திறன்கள் குழந்தையின் தொடக்கக் காலத்திலிருந்தே வளர்ந்து வரும் ஒன்று. அவற்றை மேம்படுத்துவது, மொழியாளுமையை ஏற்படுத்துவது ஆகியன நாம் கூடுதல் கவனம் கொள்ளும் புள்ளிகள். எத்தகைய அரசியலை நோக்கி பாடம் பயணிக்கிறது என்பது முக்கியமானது. நம்மிடம் எல்லாம் உண்டு என்னும் ‘மந்த வாயு’ (Noble Gas) மனப்பான்மை மொழியியலுக்கு ஊறு செய்வது. இவற்றை ஒழித்துக்கட்டுவது சாதாரண வேலையல்ல. தன்னிலை அழிந்து, விலகி நின்று, அறிவியல் மனப்பான்மையுடன் கூர்ந்தாராயும் மனநிலை அவசியம். 


    முந்தைய தமிழ்ப்பாடநூல்களிலிருந்து பல்வேறு அம்சங்களில் புதியன சேர்க்கப்பட்டுள்ள புதிய பாடநூல்களை வரவேற்போம்; பாராட்டுவோம். +1 தமிழ் மற்றும் சிறப்புத்தமிழ் கல்லூரிப் பாடநூல்களை விட சிறப்பாக உள்ளது. இருப்பினும் இன்னும் அதிக எதிர்பார்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.  இதை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒவ்வாததாக பார்க்கும் சூழல் இருக்கிறது. அவற்றைக் களைந்து ஆசிரியர்களிடம் கொண்டு சென்ற பிறகே மாணவர்களிடம் சென்றடையும். தமிழ்ப் பாடநூலில் உள்ள  ஒன்றிரண்டு  சிக்கல்களைப் பார்க்கலாம். 


       

    செய்யுள்களைக் குறைத்து  ஓசை நயமுள்ள பாடல்களைப் பாடத்தில்  இணைக்கலாம். தயவுசெய்து இவற்றைக் கவிதைகள் என அறிமுகம் செய்யாதீர்கள்! பாடத்திற்கு வெளியே இணைப்பதிலும் உள்ளே இணைப்பதிலும் வேறுபாடு உண்டு. கவிதை, கதை போன்றவற்றை  எழுதிய எழுத்தாளர்கள் உயிரோடு இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத விதியாகக் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிகிறது. கந்தர்வன் கதை பாடத்திலும் யூமா.வாசுகி கவிதை வெளியேயும் இருக்க இதுவே காரணம். வைரமுத்து போன்ற ‘பென்னம்பெரிய’ ஆட்களுக்கெல்லாம் இது பொருந்தாது.  மேனிலைப் பாடநூலில் இம்முறை கடைபிடிக்காதது மகிழ்ச்சி.
     சுஜாதா, வைரமுத்து, இறையன்பு போன்ற வணிக எழுத்தாளர்களுக்குப்  பதிலாக காத்திரமான இலக்கியங்கள், படைப்பாளிகளை அறிமுகம் செய்வது அவசியம். அதேசமயம்  சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம் போன்ற வகைமாதிரிகளையும் தாண்டி தமிழ் இலக்கியப் பரப்பு இருப்பதை மாணவர்கள் உணர வேண்டுமல்லவா!
    புலம் பெயர் இலக்கியத்தில் அ.முத்துலிங்கம் தவிர்த்து எவ்வளவோ ஆளுமைகள் இருக்கின்றனர். இதில் ஏதோ சார்புத்தன்மை  வெளிப்படுவதாகத் தெரிகிறது. உலகத்தமிழ் இதழ் என்று சொல்லிக்கொள்ளும் ‘காலச்சுவடு’ முன்னிலைப்படுத்துவது மட்டுமே நல்ல இலக்கியம் ஆகாது.
          இஸ்ரோ (ஏவூர்தி, செயற்கைக்கோள்), அணுசக்தித் துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் மட்டுமே இங்கு அறிவியல் அறிஞர்கள் என்ற பழங்கதையில் எவ்வித மாற்றமும் இல்லாதது வருத்தமளிப்பது. ‘அறிவியல் தொழில்நுட்பம்என்னும் ஆறாம் வகுப்பில் இயல் மூன்றும், ஒன்பதாம் வகுப்பில் இயல் நான்கும் இதை அடியொற்றி ஒரே மாதிரியாகவே உள்ளது. இன்னும் பிற வகுப்புகளில் திரும்பத் திரும்ப என்ன பாடங்கள் வரப்போகின்றனவோ


    தமிழில் பயின்ற அறிஞர்கள் பட்டியலில்கூட அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் (பக். 17, 6 –ம் வகுப்பு) ஆகிய இஸ்ரோ ஆட்களைத்தவிர வேறு அறிஞர்கள் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதன்மூலம் தமிழ்வழிக் கல்வியைப்  பரப்புரை செய்யமுடியாது என்பது தெளிவு. 


       6 ஆம் வகுப்பு ‘அறிவியல் தொழில்நுட்ப’த்தில்  நெல்லை சு.முத்துவின் அறிவியல் ஆத்திச்சூடி உள்ளது. இதன் ஆசிரியர் குறிப்பிலும்  (நூல் வெளி) அப்துல்கலாம் கதைதான்! ‘அறிவியலால் ஆள்வோம்’ என்னும் பாடநூல் குழு எழுதிய பாடலிலும் விண்வெளி, செயற்கைக்கோள் மயமே! விரிவானம் பகுதியில் ‘ஒளி பிறந்தது’ என்னும் அப்துல்கலாம் நேர்காணல் உள்ளது. 


   9 ஆம் வகுப்பில் ‘ஓ, என் சமகாலத்தோழர்களே!’ என்னும் வைரமுத்துவின் பாடல் உள்ளது. இதிலும் செயற்கைக்கோள், ஏவூர்தி படமே இருக்கிறது. இதை கவிதைப்பேழை என்று வகையில் சேர்த்துள்ளனர். கவிதைக்கும் பாடலுக்கும் வேறுபாடுகள் உண்டன்றோ!  விரிவானம்பகுதியில்விண்ணைச் சாடுவோம்’  பகுதியில் இஸ்ரோ தலைவர் சிவனின் நேர்காணல் இடம்பெறுகிறது. இங்கு விக்ரம் சாராபாய், அப்துல்கலாம், வளர்மதி, அருணன் சுப்பையா, மயில்சாமி அண்ணாதுரை போன்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் பெட்டிச்செய்திகளில் அறிமுகம் ஆகின்றனர். இப்பாடத்தின் இறுதியில் வேதகாலத்தில் விமானம், பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் இருந்தது என்பதற்கு நிகரான பாவலர் கருமலைத்தமிழாழன் பாட்டு ஒன்றும் உள்ளது. 


    விண்வெளி, அணுசக்தி ஆகிய இரு துறைகளும் இந்தியாவில் பூடகமாக இயங்கக்கூடியவை. இவற்றில் அறிவியல் உண்மைகள் எந்தளவிற்குச் செயல்படுகின்றன என்பது அய்யத்திற்குரியது. சந்திராயன் 1 இல் ஏற்பட்ட தவறுகள், தோல்விகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, அணுசக்திக் குளறுபடிகளை மூடிமறைப்பது போன்றவற்றால் இவர்கள் உண்மையில் அறிவியலாளர்களா என்ற அய்யம் உண்டாகும். இவர்கள் தொழிற்நுட்ப வல்லுநர்கள் (Technocrats) மட்டுமே! இவர்களை சர் சி.வி.ராமன், ராமானுஜம் அளவிற்கு இங்கு கற்பிதம் செய்து,  திருவுருக்களாகக் கட்டமைக்கப்படுவது இங்கு மோசமான அரசியல். பாடநூல்களும் தொடர்ந்து அதைச் செய்வது சரியல்ல. அறிவியலும் பன்மைத்துவம் காக்கப்படவேண்டும்.


    ‘ஒளி பிறந்தது’ நேர்காணலில் அப்துல்கலாம் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படியிருக்கும் ? மூன்று அபத்தமான பதில்கள் கிடைக்கிறது. ("இந்தியா ஒளிர்கிறது" என்னும் வெற்று முழக்கமே நினைவுக்கு வருகிறது.) கற்பனை உரையாடலானாலும் உண்மையில் அவர் இப்படித்தான் சொல்லியிருப்பார் என்பதில் அய்யமில்லை. நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற வலுவான கல்விமுறைக்கு அவர் குடியரசுத்தலைவராக இருக்கும்போதே குழி தோண்டியாயிற்றே! அது போகட்டும்.  இயற்கைவளங்கள் எல்லாம் தீர்ந்துபோனபிறகு இங்கு இருக்கும் எவருக்கு செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியை அளிக்கும்? அப்துல்கலாம் போன்ற 'சூப்பர்மேன்கள்' இங்கு வசிப்பதாகக் கொண்டாலும் சூரியசக்தி தீர்ந்தே போகாதா? 


     சூரிய வெப்பத்தைத் தாங்கும் கருவிகள் கண்டறியப்பட்டால் சூரியனைச் சென்றடையலாமாம்! இங்கு எல்லாவற்றிற்கும் 'சூப்பர்மேன்கள்' தேவைப்படுகின்றனர்! சூரியனின் ஒளிரும் தன்மை முடிந்தபிறகு அங்கு செல்லலாம் என்று வேண்டுமானால் சொல்லி வைக்கலாம். சூரியனின் அருகிலுள்ள புதனுக்கே செல்ல முடியாதபோது, இம்மாதிரி அபத்தங்களை குழந்தைகளிடம் விதைக்கலாமா? சுஜாதா போன்ற அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் தோற்றார், போங்கள்! 100 ஆண்டுகளில் செவ்வாயில் குடியேறுதல் என்று சொல்வதெல்லாம் பூமியை எப்படி வேண்டுமானாலும் சீரழியுங்கள் என்பதன் மறு வடிவமே. கேள்வி கேட்பதுதான் அறிவியலில் அடிப்படை என்றால் ஏன் இங்கு வினாக்கள் எழவில்லை. இங்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரிடம் கூட கேள்வி கேட்க  வழியில்லை. இதில் அப்துல்கலாமிடம் எப்படி?  2020 க்கு இன்னும் 18 மாதங்களே உள்ளன. அவரின் கனவுகள் நனவாகிவிட்டனவா, என்று யாரேனும் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? 
                ‘சூழலியல் மொழி’ என்று தமிழைப் பெருமையோடு பலர் குறிப்பிடும் நிலையில் ராணுவ வலிமையைப் பெருக்குவதும் செயற்கைக்கோள், ஏவூர்தித் தொழிற்நுட்பங்களை விரிவாக்குவதும் மட்டுமே அறிவியலாகப் பார்க்கப்படுவது சமூகத்திற்கு நல்லதல்ல. தேவையின்றி அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள், அதன் மூலம் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள், விண்ணில் சேரும் குப்பைகள் பற்றியெல்லாம் “கடலில் வீணாகக் கலக்கும் நீர்”, என்று பேசும் ‘அறிஞர்கள்’ கண்டுகொள்வதில்லை. 


      அடுத்தடுத்த வகுப்புகளில் நாராயணமூர்த்தி, நாதெள்ளா, சுந்தர் பிச்சை, சந்திரசேகரன், போன்றோர் இடம்பெறலாம். இம்மாதிரியான நபர்கள் மூலம் எத்தகைய மதிப்பீடுகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கப் போகிறோம் என்பதே நமது கேள்வி.


    ஆறாம்வகுப்பு தமிழ் இணையச் செயல்பாடுகளில் தமிழ் விசைப்பலகைகள் (தமிழ் 99, செல்லினம்) இணைத்திருப்பது பாராட்டிற்குரியது. கணினியில் எழுத -கலப்பை போன்றவற்றின் அறிமுகம் மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் ஆசிரியர் தமிழ் அல்லது ஆங்கிலத்தைப் பயன்படுத்தாமல் தமிழ் ஒலியை ஆங்கிலத்தில் எழுதும் அவலம் அரங்கேறுகிறது. நவீன வசதிகள் எவ்வளவோ உருவாகிவிட்ட நிலையில் ஆசிரியர் சமூகம் புதியன கற்காமல் இருப்பது கல்விக்கு அழகல்ல. எனவே மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் இத்தகைய பயிற்சிகள்  இன்றியமையாதது.           
பட்டிமன்றம் (பட்டி மண்டபம்) என்பது ஒருகாலத்தில் சிறப்பான வடிவமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது மிகவும் சீரழிந்த வடிவம். நகைச்சுவை என்கிற பெயரில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சகமனிதர்கள்  அனைவரையும் இழிவாகவும் கேலிக்கு உட்படுத்தும் இந்த வடிவம் உகந்தது அல்ல. இன்று பொதுவெளியில் உள்ள மாதிரிகளையே ஆசிரியர்களும் மாணவர்களும் பின்பற்றுவர். உள்ளூர் திருவிழா மற்றும் காட்சியூடகங்களில் இதுதான் இலக்கிய நிகழ்வு. திரைப்படப் பாடலுக்கும் நடனமாடுவதைவிட இது மோசமான விளைவைத் தரும். பெரும்பாலானோர் திரைப்பாடல்களில் வரிகளை கவனிப்பதில்லை. ஆனால் உரை அப்படியல்ல; இது எதிர்மறைத் தாக்கத்தை உண்டாக்கும். 


     'Sea Turtles' 'When the trees walked' 'A Visitor from Different Lands' போன்ற ஆங்கிலப் பாடங்களுக்கு  இணையான தமிழ்மொழிப்பாடங்களை எழுத முடியாததைத் தோல்வி என்றே கருதவேண்டும். இருப்பினும்  9 ஆம் வகுப்பில் 'Goal Setting' என்னும் ஸ்ரீகாந்தின் பாடம் உள்ளது. கிரிக்கெட் போன்றவற்றைக் கொண்டு சிறந்த மதிப்பீடுகளை உண்டாக்க முடியுமா என்பது கேள்விக்குறி. கிரிக்கெட்டைப் பற்றிப் பாடமில்லாத ஆங்கிலப்பாடநூல் இருக்கக்கூடாதா என்ன? பிற விளையாட்டுக்கள் பற்றி எப்போது பேசுவீர்கள்?  இதைப் பதிலீடு செய்யும் விதமாக கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பறையாட்டம், பொம்மலாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து போன்ற தொல்கலைகளைப் பற்றிப் படத்துடன் விளக்கியிருப்பது நன்று. ஆனால் இவற்றையெல்லாம் பாடத்திற்கு வெளியே தள்ளும் அரசியல் எது? (அடுத்தபகுதியில் 11 தமிழ் மற்றும் சிறப்புத்தமிழ்.) 


(தொடரும்)

வியாழன், ஜூன் 14, 2018

கலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை

கலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை


மு.சிவகுருநாதன்

(6 மற்றும்  9 ஆம் வகுப்பு புதிய அறிவியல் பாடநூற்கள் குறித்த மேலோட்டமான பார்வை. சமூக அறிவியல் தொடர்பான முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாக இதை வாசிக்கலாம்.) 
6 –ம் வகுப்பு அறிவியல்

     டெல்டா (Delta), கழிமுகம் (Estuary)  ஆகியவற்றை ஒன்றாகக் கருதும் போக்கு உள்ளதைப்போல, உப்புகளை பிரித்தெடுப்பது, இதர மாசுகளை நீக்குவது ஆகிய இரண்டையும் ஒன்றாக்கும் தன்மை சரியல்ல.

      பெரும்பாலான இல்லங்களில் நீரில் உள்ள மாசுக்களை நீக்குவதற்காகவும், நீரில் உள்ள நுண்கிருமிகளை புறஊதாக் கதிர்களைக் அழிப்பதற்காகவும் வணிக ரீதியான வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர் சவ்வூடு பரவல் (RO) என்ற முறையில், குடிப்பதற்கென நீரில் உள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது,” (பக். 56, 6 அறிவியல்

    எதிர் சவ்வூடு பரவல் (Reverse Osmosis) நீரில் கரைந்துள்ள, உப்புகளை அகற்றும் முறையாகும். பொதுவாக கடல்நீரை குடிநீராக்கப் பயன்படும் முறை இது. மாசுகள், உப்புகள் அகற்றும் முறைகளை ஒன்றாக இணைப்பது ஏன்

    மாசுக்கள், உப்புக்கள் என்று வல்லினம் மிகுதல் தவறு; முறையே மாசுகள், உப்புகள் என்றே எழுதவேண்டும். குருத்துகள் (பக். 99) என்று சொல்வதும் தவறு. தேவையான இடங்களில் மிகாமையும் தேவையற்ற இடங்களில் மிகுதலும் பெருவழக்காக உள்ளது. (குறைப்பாட்டு நோய்?!) 

   பறிமாற்றம், ஊர வைத்தல் (பரிமாற்றம், ஊறவைத்தல்) என்று பல இடங்களில் வேறுபாடின்றி எழுதப்படுகிறது. இறுதிக்கட்டத்தில் எழுத்துப்பிழைகளைக் களைந்து செம்மைப்படுத்தியிருக்க வேண்டும்.  

    கிரந்த எழுத்துப் பயன்பாட்டில் பெருங்குழப்பம் நீடிக்கிறது. ஒரே பக்கத்தில் ஸ்கர்வி, லென்டில்ஸ், ரிக்கெட்ஸ், முட்டை கோசு (முட்டைக்கோஸ்) என்று எழுதப்படுகிறது. சோயாபீன்ஸ், ஸ்டார்ச், கார்போஹைட்ரேட் என்றெல்லாம் எழுதும்போது இங்கு மட்டும் கிரந்தபோபியா ஏன்?  கிரந்தத்தை பயன்படுத்த மறுப்பது தேவையில்லை.

     அறிவியல் பாடநூல்களில் கலைச்சொல்லாக்கம் சார்ந்து பல இடங்களில் சிக்கல் இருக்கிறது. இவற்றில் நிறைய குளறுபடிகள். இதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். Electronic machine மின்னணு இயந்திரம் என்று சொல்லிவிட்டு அடைப்புக்குறிக்குள் (பக். 114) மின்சாரத்தால் இயங்கும் இயந்திரம் என்று தேவையற்ற விளக்கம் அளிப்பது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். மின்சாரத்தால் இயங்காத மின்னணு இயந்திரம் உண்டோ!இங்கு மின்னியல், மின்னணுவியல் குழப்பம் தேவையின்றி உருவாக்கப்படுகிறது.

   Meat இறைச்சி அல்லது மாமிசம் என்று மொழிபெயர்ப்பது நடைமுறை. ஆனால் இங்கு கறி, இறைச்சி, மாமிசம்  என மாறிமாறி சொல்லப்படுகிறது (பக். 94). சாக்லெட், பர்கர் ஆகியவற்றை அப்படியே பயன்படுத்தும்போது, சிப்ஸை உருளைப் பொறித்தல் என்று சொல்வது நகைப்பிற்கிடமாக உள்ளது. உருளைச் சிப்ஸ் மட்டுந்தானா? பிற சிப்ஸ்கள் இல்லையா! உருளைக்கிழங்கை மட்டுமா எண்ணெயில் பொறிக்கிறோம்?  

   Sun screen lotion என்பதை சூரியத் திரை பூச்சு (பக். 99) (திரைப்பூச்சு என்றிருக்க வேண்டும்) என்று சொற்களுக்குச் சொல்லாக மொழிபெயர்ப்பது அபத்தம்.
 
   வலசை போதல் பெட்டிச்செய்தியில்வெளிநாடுகளான சைபீரியா மற்றும் ரஷ்யா” (பக். 86) என்பது பொருத்தமாக இல்லை. சைபீரியா நாடல்ல; ஒரு புவியியல் பிரதேசம்.
 
  செஞ்சிலுவைச் சின்னத்தை நலம் மற்றும் சுகாதாரத்திற்குப் பயன்படுத்தலாமா? (பக். 91)

  பாலாலான தயாரிப்புகள் (பக். 99) என்பது படிப்பதற்கே சிக்கலை உண்டு பண்ணும். பால்ப் பொருள்கள் என்று சொல்லலாம்

   9 –ம் வகுப்பு அறிவியல்

    பூச்சிக்கொல்லி மருந்து (பக். 100, 220), பூகோளம் பொன்றவற்றை இன்னுமா மாற்றக்கூடாது?  சூழலியியல் விழிப்புணர்வு வளர்ந்துள்ள இன்றைய நிலையில் நாளிதழ்கள் கூட (தினமணி, தி இந்து)  பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட நல்ல சொல்லாக்கங்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றைப் பாடநூல்களில் பயன்படுத்த மறுக்கலாமா

     பதங்கமாதல் பற்றிக் குறிப்பிடும்போது, “இந்தியர்களின் வீட்டுப் பொருளாகப் பயன்படும் கற்பூரம் பதங்கமாதலுக்குட்பட்டு நறுமணத்தைத் தரவல்லது”, (பக். 89) என்று சொல்கிறார்கள். இது நறுமணத்தை மட்டுமா தருகிறது? கோயிலுக்கு உள்ளே இதை ஏன் அனுமதிப்பதில்லை? இதனால் கேடுகள் உண்டே! மத நம்பிக்கைகள், பழக்கங்கள் ஆகியவற்றை அறிவியலில் இணைக்கத் தேவையில்லை. உதாரணம் சொல்வது வேறு; இந்தியர்களின் வீட்டுப்பொருள் என்பதாக இதைப் பொதுமைப்படுத்துவது சரியா?  கங்கைநீர் தூய்மையானதுஎன 15 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவியல் பாடம் எழுதப்பட்டது. இன்றும் அதே நிலை நீடிக்கலாமா?  அறிவியல் பார்வையை, மனப்பான்மையை  மழுங்கடிக்க வேண்டாம்.

   திடம் - திண்மம், திரவம்நீர்மம், பசுங்கணிகம்பச்சையம் போன்ற சொற்களை மாற்றிப் பயன்படுத்தாமல் ஒரே சொற்களைக் கையாள்வது நல்லது

   நரம்பிய தூண்டு விப்பி (பக்.226) என்றெல்லாம் மொழிபெயர்ப்பது அதிர்ச்சியூட்டுகிறது. இவையெல்லாம் மாணவர்களை கல்வியில் ஈடுபாடு கொள்ளாமல் செய்துவிடும்

     கதிரியக்க முறையில் உணவைப் பாதுகாத்து, பதப்படும் முறைகள் சொல்லப்படுகின்றன (பக். 215) வேதிப்பொருள்கள், தேவைக்கு அதிகமான உப்பு, சர்க்கரை போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லும்போது கதிரியக்கத்தால் பாதிப்பே இல்லை என்று சொல்வதுதான் அறிவியலா? சூழலியல் சீர்கேடுகளில் கதிரியக்கத்தை சேர்ப்பதில்லை என்பதே பொதுவிதியாக உள்ளது

   புட்டியில் நிரப்பிய நீர் குழாய் நீரைவிட சிறந்தது (பக். 224) சொல்லும்போது அதிலுள்ள பூச்சிக்கொல்லிகள், அதன் பாதிப்புகள் ஆகியவற்றை முடி மறைப்பதேன்? நீர் வணிகத்திற்கு உதவி செய்வது பாடநூலின் பணியாக இருக்க முடியாது.

   தொற்று கொண்ட பெண் அனாபிலஸ் கொசுக்கள் மூலமாக பிளாஸ்மோடியம்” (பக். 182)  என்பது கொசுக்கள் கடிப்பதன் மூலம் என்றிருப்பின் நலம்

   வல்லினம் மிகும் மிகா இடங்கள் கவனிக்கப்படுதல் அவசியம். செல்ல பிராணிகள், தலை பிரட்டைகள் என்றில்லாமல் செல்லப் பிராணிகள், தலைப் பிரட்டைகள் என்று எழுதுவது பற்றி யோசிக்கலாம். மேலும்பிராணிகள்’ ‘விலங்குகள்ஆகிவிட்டனவே

  பூச்சிகளின் மல ஜலங்கள்”, (பக். 220) என்னும் மொழிபெயர்ப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். “பூச்சிகளின் கழிவு, சிறுநீர்”, என்று எழுதலாமே

    பல்வேறு நல்ல அம்சங்கள் கொண்டிருப்பினும் சிற்சில பிழைகளும் சொல்லாக்கக் குளறுபடிகளும் இருப்பது கண்ணுக்குத் தெரிகிறது. அடுத்த பதிப்பில் இவைகள் களையப்படவேண்டும். அடுத்த பருவம் மற்றும்  அடுத்த வகுப்புப் பாடநூல்களில் இக்குறைபாடுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதும் அவசியம்.