உண்மை அறியும் குழு அறிக்கைகள்



முத்துப்பேட்டையில் மதக்கலவரங்கள் (2007)-உண்மை அறியும் குழு அறிக்கை


முத்துப்பேட்டையில் மதக்கலவரங்கள் (2007)உண்மை அறியும் குழு அறிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை – திருத்துறைப்புண்டி சாலையில் உள்ள சிறு நகரம் முத்துப்பேட்டை. சுமார் 10,000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இவ்வ+ரில் வசிக்கின்றனர். சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும் இந்து மக்கள் வசிக்கின்றனர். முஸ்லீம்கள் பெரும்பாலும் வணிகம் செய்கின்றனர். சிறுகடைகள் வைத்துள்ளனர். தென்னந்தோப்பு, வாழைத் தோப்பு உடைமையாளர்களும் உண்டு. அருகிலுள்ள ஜாம்பவானோடை தர்ஹா, நாகூர் தர்ஹாவிற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற ஒன்று. நகருக்குள் நெருக்கமான வீதிகள் உள்ள பகுதிகளில் இவர்களது பள்ளிவாயில்களும் குடியிருப்புகளும் அமைந்துள்ளன.

1993ம் ஆண்டு தொடங்கி சுமார் 15 ஆண்டுகளாக இங்கே வினாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது. நகரிலும் சுற்றுக் கிராமங்களிலும் செயல்பட்டுக் கொண்டுள்ள, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி முதலான அமைப்புகள் இதை முன்னின்று நடத்துகின்றன.

முஸ்லீம்கள் முத்துப்பேட்டை நகரின் மூன்று மெட்;ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். ‘ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பெண்கள் பள்ளி’, ‘பிரில்லியண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி’, ‘வின்னர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி’ ஆகிய இம்மூன்று பள்ளிகளிலும் இந்து - முஸ்லிம் மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.


முத்துப்பேட்டையிலும் சுற்றுக்கிராமங்களிலும் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையாக தேவர் (அகமுடையார்) சாதியையும் அடுத்ததாக முத்தரையர் மற்றும் தலித் சாதியினரும் உள்ளனர். மற்ற பிரிவினர் சிறிய அளவில் உள்ளனர். தேவர் இனத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இந்துத்துவ அமைப்புகளில் முன்னணியில் உள்ளனர். எல்லா முக்கிய கட்சிகளிலும் கூட தேவர் இனத்தவரே முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

முஸ்லீம்கள் பாரம்பரியமாக வசித்து வரும் தமிழக ஊர்களில் முத்துப்பேட்டை குறிப்பிடத்தக்கது. பல காலமாக இருதரப்பினரும் ஒற்றுமையாக, பிரச்சனைகள் ஏதுமின்றி “அண்ணன் தம்பிகளாக” வாழ்ந்து வந்துள்ளதை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் கடந்த 15 ஆண்டுகளாக, அதாவது வினாயகர் ஊர்வலம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அங்கே கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. ஏதோ இருதரப்பினரும் மோதிக் கொள்கின்றனர் என்று சொல்ல இயலாத அளவிற்கு இரு தரப்பினருக்கே பெருத்த பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கும் அவர்களே ஆளாகியுள்ளனர். இவ்வாறு பொருள் இழப்புக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருப்போர் முஸ்லீம்கள்தான் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

சென்ற 1993ல் (செப்டம்பர் 19) பேருந்தில் வந்து கொண்டிருந்த முஸ்லிம்பெண்கள் இருவரைப் பேருந்திலிருந்து இறக்கி 30 பேர் கொண்ட ஒரு கும்பல், பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு புகார் வந்தது. 1994ல் (ஏப்ரல் 18) இந்து முன்னணியினரின் பொதுக்கூட்டத்தில் முஸ்லீம்களை இழித்துப் பேசியதை ஒட்டி ஏற்பட்ட கலவரத்தில் பரக்கத் டிம்பர் டிப்போ, ராயல் ஸ்பேர் பார்ட்ஸ், எம்.கே. ஜுவல்லரி ஆகிய முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டதோடு, முஸ்லீம்களுக்குச் சொந்தமான தென்னை, வாழைத் தோப்புகள் வெட்டி வீழ்த்தப்பட்டதையும் அறிந்து பி.ய+.சி.எல். சார்பாக ஒரு உண்மை அறியும் குழு அனுப்பப்பட்டது. மேற்படி இழப்புகள் அனைத்தும் உண்மை எனவும், முஸ்லீம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சொத்திழப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் அளவு இருக்கும் எனவும் அக்குழுவின் அறிக்கை மதிப்பிட்டது.

தொடர்ந்து 1995, 96, 97, 98, 2003 ஆண்டுகளில் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முஸ்லீம்களுக்கே இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முஸ்லீம்கள் கூறுகின்றனர். 2005ல் நடத்தப்பட்ட வினாயகர் ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இரண்டு முஸ்லிம்இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்கடைகள் தாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்தரப்பில் 37 பேரும், இந்துக்கள் தரப்பில் 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் ஒவ்வொருவர் மீது NSA போடப்பட்டுள்ளது. 2006லும் ஒப்பந்தத்தை மீறி பழைய பாதையிலேயே வினாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் இந்த ஆண்டில் (2007) கலவரம், தொடர்ந்து பஸ்களில் தனியே பயணம் செய்யும் முஸ்லீம்கள் தாக்கப்படுதல் குறித்த புகார்கள் மனித உரிமை அமைப்புகளுக்கு வந்த வண்ணமிருந்தன.

இதை ஒட்டி சென்ற நவம்பர் 1, 2007 அன்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த எழுவர் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று முத்துப்பேட்டைக்குச் சென்றது.


குழுவில் பங்கு பெற்றிருந்தோர் :

பேரா. சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL)
திரு. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி
நல்லாசிரியர். அ. சண்முகம், முன்னாள் தலைமை ஆசிரியர், அரசு
உயர்நிலைப் பள்ளி, செங்கப்படுத்தான்காடு
பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR)
திரு. ஆளுர் ஷாநவாஸ்;, ஆவணப்பட இயக்குநர்.
திரு. மு. சிவகுருநாதன், ஆசிரியர், சஞ்சாரம் காலாண்டிதழ்
திரு. மணலி. அப்துல்காதர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்
(PUHR)

இக்குழு முத்துப்பேட்டை நகரம், பழைய , புதிய பேருந்து நிலையங்கள், கடைத்தெரு, ஆசாத் நகர், ஜாம்பவானோடை, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று இருதரப்பினரையும், கட்சித் தலைவர்களையும் சந்தித்தது. ஒன்றிய பெருந்தலைவர் எம். கல்யாணசுந்தரத் தேவர் (சி.பி.ஐ) அ.தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.பி. நடராஜன், தி.மு.க.வின் ஒன்றியச் செயலரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ந.உ.சிவசாமி, ஒன்றியத் துணைத் தலைவர் சித்திரவேல் (ம.தி.மு.க.), சி.பி.ஐ. கட்சியின் ஒன்றியச் செயலாளர் முருகையன், சி.பி.ஐ. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஜே. தாஹிர் ஆகியோரையும் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் தரப்பில் முன்னால் ரோட்டரி தலைவர் ஜி. பஷீர் அஹமது, ஐக்கிய ஜமாத் தலைவர் எம். பஷீர் அஹமது, வழக்குரைஞர்கள் அஷ்ரஃப் அலி, உமர் ஹத்தாம் ஆகியோரையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருத்துறைப்ப+ண்டி தாலுகாவின் செய்தி தொடர்பாளர் திருநாவுக்கரசையும் இன்னும் பலரையும் இக்குழு சந்தித்து சம்பங்கள் குறித்து தகவல்கள் பெற்றதோடு, சமூக நல்லிணக்கத்திற்கான அவர்களின் கருத்துக்களையும் தொகுத்துக் கொண்டது. தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் எனச் சொல்லப்படும் இந்த்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த கருப்பு (எ) முருகானந்தம், மகேஷ், குமாரவேல் ஆகியோர் நாங்கள் சென்ற நேரத்தில் தலைமறைவாக இருந்ததால் அவர்களைச் சந்திக்க இயலவில்லை. அப்போதைய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் ஐ.பி.எஸ். அவர்களையும் சந்தித்தோம்.

நாங்கள் விசாரித்தறிந்த தகவல்களின் அடிப்படையில் சமீபத்திய நிகழ்ச்சிகள் தொடர்பான உண்மைகள் வருமாறு:

01. 15 ஆண்டுகளுக்கு முன்பு வினாயகர் ஊர்வலம் தொடங்கிய பின்னரே வன்முறைகள் தொடங்கியுள்ளன. இவ்வன்முறைகளில் முஸ்லீம்களின் சொத்துக்களே அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமான கடைகள் தவிர, தென்னந்தோப்புகள் முதலியனவும் அழிக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களில் பலர் (சுமார் 50 பேர்) சிறிய, பெரிய காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். ஓரிரண்டு ஆண்டுகள் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்துக்களில் ஒருவர் தாக்கப்- பட்டுள்ளார். ஒரு தேநீர்க் கடை மட்டும் நொறுக்கப்பட்டுள்ளது.

02. தொடர்ந்த தாக்குதல்களின் விளைவாக முஸ்லீம்கள் குறைந்த விலைக்குச் சொத்துக்களை விற்க நேர்ந்துள்ளது. தாக்குதல்களுக்குள்ளான ர ஹ்மான் ஸ்பேர் பார்ட்ஸ் கடை முதலானவை இன்று அங்கு இல்லை. வணிகர்களில் சிலர் ஊரை விட்டு சென்றுள்ளர். அமைதி வேண்டி காப்புப் பணம் கொடுக்கும் நிலைக்கும் முஸ்லீம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

03. பாரம்பரியமாக நடைபெற்று வந்த தர்ஹா ஊர்வலங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

04. பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்துக் கோவில் திருவிழா ஊர்வலங்கள், காவடி ஊர்வலங்கள் முதலியவற்றால் எந்தப் பிரச்சனையும் ஏற்படுவதில்லை.

05. முத்துப்பேட்டை நகரத்திற்குள் நெருக்கடியான சந்துகளில் அமைந்துள்ள முஸ்லிம்வீடுகள், பள்ளிவாசல்கள் வழியாகவே வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. நெருக்கமான முஸ்லிம்வீதிகளில் பட்டாசுகளைக் கொளுத்துதல், “துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு”, “இந்த நாடு இந்து நாடு, இந்து மக்களின் சொந்த நாடு” என்பது போன்ற முழக்கங்கள் இட்டுச் செல்லுதல், பள்ளிவாசல்களில் செருப்பு முதலானவற்றை வீசுதல், இவற்றின் விளைவாக முஸ்லிம் இளைஞர்கள் ஆத்திரப்பட்டு எதிர் வினையாற்றல், அதையொட்டி முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுதல் என்பதாகவே இக்கலவரங்கள் அமைந்துள்ளன.

06. 2005ம் ஆண்டில் இவ்வாறு முஸ்லிம் வீதிகள் வழியாக வினாயகர் ஊர்வலத்தை (செப்டம்பர் 12) நடத்துவதறகு அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையில் முஸ்லீம்களை இழிவு செய்கிறதாகவும் மதவெறியைத் தூண்டுவதாகவும் உள்ள முழக்கங்கள் இடக்கூடாது எனக் கூறி உயர்நீதி மன்றத்தில் ‘ரிட்’ மனு ஒன்று முஸ்லீம்கள் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டது. வினாயகர் ஊர்வலத்தில் எழுதிக் கொடுத்த ஒன்பது முழக்கங்களில் “இந்த நாடு இந்து நாடு, இந்து மக்களின் சொந்த நாடு” என்ற முழக்கம் தவிர “ராமர் கோயில் கட்டுவோம்” என்கிற முழக்கம் உட்பட மற்ற அனைத்தையும் அனுமதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. (ரிட் எண் : 28996/2005) எனினும் தடுக்கப்பட்ட இந்த முழக்கம் உட்பட வழக்கமான எல்லா இழிவான முழக்கங்களையும் ஊர்வலத்தினர் முழங்கியதோடு பட்டாசுகளையும் வெடித்துள்ளனர். இதன் விளைவாக எழுந்த எதிர்ப்பை ஒட்டி நடந்த தாக்குதலில் இரு முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடைகள் சூறையாடப்பட்டன. முஸ்லிம் தாக்கியதில் தண்டாயுதபாணி என்பவர் வெட்டப்பட்டார். இது தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற முன்னாள் ரோட்டரி சங்கச் செயலரும்;, மத நல்லிணக்கக் குழுவின் நிரந்தர உறுப்பினருமான ஜி.பஷீர்அஹமது, வர்த்தக கழக செயலாளர் ஏ. அன்சாரி, த.மு.மு.க. மாவட்டச் செயலர் எஸ். முகம்மது மாலிக் உட்பட 37 முஸ்லிம்கள் கைது செய்யப்- பட்டுள்ளனர். அன்சாரியை அடித்து இழுத்து வந்துள்ளனர். இந்துக்களில் 35 பேர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பிலும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பாவிகள். வன்முறைக் காரணமாக மகேஷ் என்பவரையும் முன் குறிப்பிட்ட ஜி.பஷீர்அஹமதையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பஷீர் அஹமது இவ்வாறு கைது செய்யப்பட்டதில் எந்த நியாயமும் இல்லை என இக்குழு கருதுகிறது. மகேஷை கைது செய்ததை “ஈடுகட்டுவதற்காக” ஒரு முஸ்லிமையும் கைது செய்தாக வேண்டும் என காவல்துறை கருதுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.

07. மேற்படி கலவரத்தைக் காரணம் காட்டி கடந்த 100 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த அரபு சாஹிப் பள்ளி தர்ஹா ஊர்வலத்தை (05.11.2005) காவல்துறை தடை செய்தது. மீண்டும் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்கமான பாதையை விட்டு விட்டு முஸ்லிம் தெருவுக்குள்ளேயே ஊர்வலம் நடத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணையை ஏற்க முஸ்லிம்கள் தமது 100 ஆண்டு மரபை விட்டுக் கொடுத்து, இதே நடைமுறை வினாயகர் ஊர்வலத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என எழுத்து மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும் 2006ல் அப்போது செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி பழைய பாதையிலேயே முஸ்லிம் தெருக்கள் வழியாக வினாயகர் ஊர்வலத்தை அரசும் காவல்துறையும் அனுமதித்தது. முஸ்லிம் அமைப்புகள் மட்டும் எதிர்த்தன. உள்ளுர் அரசியல் கட்சிகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை.

08. 2006 டிசம்பரில் வேதநாயகி திரையரங்கில் முஸ்லிம் ஒருவர் குடித்து விட்டு வந்து கரைச்சல் ஏற்படுத்தியதை ஒட்டி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஒன்று ஏற்பட்டது. இதை சாக்காக வைத்து பா.ஜ.க.வைச் சேர்ந்த குமாரவேலு தலைமையில் திரண்டக் கும்பல் திரையரங்கிற்கு அருகில் உள்ள முஸ்லிம் வீடுகளைத் தாக்கினர். தகராறுக்குக் காரணமானவர் ஒரு முஸ்லிம் என்பதாலேயே இதை ஒரு மத மோதலாக மாற்றித் தாக்குதல் நடத்தப்பட்டது. வழக்கம் போல பா.ஜ.க. தரப்பைக் காட்டிலும் முஸ்லிம் தரப்பில் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர். முஸ்லிம்கள் 25 பேரும் இந்துக்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

09. 2007 அக்டோபரில் நடைபெற்ற சம்பவங்களை ஒட்டியே எமது உண்மை அறியும் குழு அங்குச் சென்றது. 11ந்தேதி காலை 10.30 மணிக்கு ஆசாத் நகரில் செல்போன் கார்டு விற்பனைக் கடை ஒன்றின் உரிமையாளர் நஜிபுதீன் என்பவருக்கும் சங்கர் என்ற நபருக்கும் இடையில் பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. தான் கொடுத்த 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படவில்லை என சங்கர் தகராறு செய்துள்ளார். வேண்டுமானால் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் எனச் சொன்னதையும் சங்கர் பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. சங்கரை போலீசில் ஒப்படைத்து விட்டு வர்த்தக கழகத் தலைவர் அன்சாரி, செயலாளர் ராஜராம் ஆகியோருடன் நஜிபுதீன் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது, வழியில் ஒன்றியப் பெருந்தலைவர் எம்.கல்யாணசுந்தரம், “கருப்புத் தம்பி, ஸ்டேஷனில் நிற்கிறார், டென்சனாக இருக்கிறது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” எனச் சொல்லி திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கிடையில் கருப்பு மற்றும் பா.ஜ.க.வினர், முஸ்லிம் கடையொன்றில் இந்து ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் அப்பாவிகள் தாக்கப்பட்டனர். முஸ்லிம் கடைகள் தீ வைத்து எறிக்கப்பட்டன. முஸ்லிம் ஒருவரின் ஆட்டோ நொறுக்கப்பட்டது. பா.ஜ.க.வைச் சேர்ந்த முருகானந்தம் (கருப்பு), மகேஷ், குமாரவேல் ஆகியோர் தலைமையில் திரண்ட வன்முறைக் கும்பல் பேருராட்சித் தலைவர் கார்த்திக், ஒன்றியப் பெருந்தலைவர் கல்யாணசுந்தரம் தடுத்தும் கேளாமல் முஸ்லிம் தெருவில் நுழைய முற்பட்ட போது முஸ்லிம் இளைஞர்கள் திரண்டு அவர்களைத் தாக்கியுள்ளனர். இந்து ஒருவரின் டீக் கடையும் தாக்கி நொறுக்கப்பட்டுள்ளது. நஜிபுதீன், அன்சாரி, த.மு.மு.க நகரச் செயலாளர் முகம்மது அலீம், கல்லூரி மாணவர் தாஜ்தீன் உட்பட முஸ்லிம் 38 பேர் கைது செய்யப்பட்டனர். இந்துக்களிலும் 38 பேர் கைது செய்யப்பட்டனர். கலவரத்திற்குக் காரணமான கருப்பு, மகேஷ், குமாரவேல் ஆகியோர் தலைமறைவாகி சிலகாலத்திற்கு முன் ஜாமீன் பெற்று இன்று வெளியில் உலவுகின்றனர்.

10. அன்றிரவே (அக்டோபர் 11, 2007) பட்டுக்கோட்டையிலிருந்து 13ம் எண் பேருந்தில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்து இப்ராஹீம் தாக்கப்பட்டு வெட்டப்பட்டுள்ளார். புகார் கொடுத்தும் யாரும் கைது செய்யப்படவில்லை. மீண்டும் அடுத்த இரண்டாம் நாள் (அக்டோபர் 13) அதே பேருந்தில் வந்து கொண்டிருந்த ஜாபர் சாதிக் தாக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டைக்கும் முத்துப்பேட்டைக்கும் இடையில் பரக்கலக்கோட்டை, தம்பிக்கோட்டை பகுதியில் இத்தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

11. ரம்ஸான் பண்டிகைக்கு அடுத்த நாள் (அக்டோபர் 15, 2007) அரபு சாஹிப் பள்ளி தர்ஹா ஊர்வலம் நடந்தது. காவல்துறை கண்காணிப்பாளர் அனிஷா உசேன் ஐ.பி.எஸ். தலைமையில் நூற்றுக்கணக்கில் போலீஸ் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். ஊர்வலம் புது பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் பா.ஜ.க. அலுவலகம் அருகில் வந்த போது ஊர்வலத்தின் மீது பெட்ரோல் பந்தம் ஒன்று வீசப்பட்டது. இது தொடர்பாக சம்பவத்துடன் எந்த தொடர்புமில்லாத அருந்ததிய இனத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். வேறு யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்கிடையில் நாச்சிகுளம் பள்ளிமேடு தர்ஹா ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.

12. எங்கள் குழு சென்று வந்த பின் நடந்த ஒரு சம்பவம் குறித்து எங்களுக்கு வந்துள்ள தகவல்: சென்ற பிப்ரவரி 8 (2008) அன்று அப்துல் லத்தீப் என்பவர் பட்டுக்கோட்டையிலிருந்து ஸ்ரீராம் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த போது தம்பிக்கோட்டை கீழக்காடு அருகில் வரும்போது பஸ்சில் நால்வர் ஏறியுள்ளனர். காலில் மிதிக்காமல் தள்ளி நில்லுங்கள் என லத்தீப் கூறியவுடன் அவரை கடுமையான வார்த்தைகளில் திட்டி தாக்கியுள்ளனர். பஸ்ஸை நிறுத்திய நடத்துனர் தகராறு செய்த நால்வரோடு லத்தீபையும் கீழே இறக்கி விட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து என உணர்ந்த ஓட்டுனரும், மற்ற பயணிகளும் லத்தீபை ஏற்றிக் கொள்ளுமாறு சொல்லியும் நடத்துனர் கேட்காமல் பஸ்சை ஓட்டச் சொல்லியுள்ளார். எனினும் நகரும் பஸ்சில் ஓடி வந்து லத்தீப் ஏறித் தப்பித்துள்ளார். பேருந்து முத்துப்பேட்டையை அணுகியவுடன் சம்பவத்தைக் கேள்விப்பட்ட முஸ்லிம் கூட்டமொன்று பஸ்சை மறித்து சாலை மறியல் செய்துள்ளனர். நடத்துனரை அடித்தும் உள்ளனர். போலீஸ் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. தகராறு செய்தவர்களை அடையாளம் காட்டுவதாக நடத்துனர் சொன்னவுடன் கூட்டம் கலையத் தொடங்கியது. அப்போது மின்சாரமும் இல்லை. கலைந்து செல்பவர்களிலிருந்து வருவது போல போலீஸ் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டது. வீசியவரைப் பார்த்து விட்ட உதவி ஆய்வாளர் மணிவேல் துரத்திச் சென்று அவரைக் கைது செய்துள்ளார். பா.ஜ.க.வைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அவர். அவரது செல்போனில் குண்டு வீசும் முன் அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த மகேஷிடம் பேசியுள்ளது தெரிந்தது. அடுத்த நாள் மகேஷ், குமாரவேல், கருப்பு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 436 மற்றும் 153ஏ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும் அதற்குரிய வகையில் மதக்கலவர நோக்குடன் குண்டு வீசப்பட்டதாக வழக்கைப் பதிவு செய்யாமல் வெறுமனே தீப்பந்தம் வீசியதாக மட்டுமே பதிவு செய்ததால் அவர்கள் இன்று மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தைரியமாக நடவடிக்கை எடுத்த உதவி ஆய்வாளர் மணிவேல் இன்று மாற்றப்பட்டுள்ளார். உள்ளுர் அரசியல் கட்சித் தலைவர்கள் இதன் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில் இரு சமூகங்களுக்கிடையேயான மத ஒற்றுமை என்பதைக் காட்டிலும் தங்களின் வாக்கு வங்கி சிதையக் கூடாது என்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர். எல்லா அரசியல் கட்சிகளிலும் குறிப்பிட்ட பெரும்பான்மைச் சாதியினரே தலைவர்களாக உள்ளனர். கலவரங்களுக்குக் காரணமான இந்துத்துவ சக்திகளை அவர்கள் தம் சாதிக்காரர்களாகவே காணுகின்றனர். ஒன்றியப் பெருந்தலைவர் எம். கல்யாணசுந்தரத் தேவரை (சி.பி.ஐ) நாங்கள் சந்திக்கச் சென்ற போது அவரது அறையில் சிவசாமி (தி.மு.க.), ஆர்.கே.பி.நடராஜன் (அ.தி.மு.க.), சித்திரவேல் (ம.தி.மு.க.) ஆகியோர் இருந்தனர். வௌ;வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாயினும் இவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசியது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. சமூக அமைதி கருதி இரு தரப்பினரின் ஊர்வலங்களையும் ரத்து செய்து விடலாமே என நாங்கள் கூறிய போது எல்லோருமே ஆத்திரமடைந்தனர். இரு தரப்பு ஊர்வலங்களையும் ரத்து செய்து விடலாம் என்பது முஸ்லிம் தரப்புக் கோரிக்கையாகவும், அது கூடாது என்பது இந்துத்துவக் கோரிக்கையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. “இது இந்து - முஸ்லிம் பிரச்சினை இல்லை. இரு தீவிரவாதிகளுக்கிடையே உள்ள பிரச்சினை. இது தரப்பினரும் மோசம். ஊர்வலத்தை தடைசெய்வதன் மூலம் பிரச்சினை தீராது” என்றும் இந்தத் தலைவர்கள் நால்வரும் கூறினர். முஸ்லிம் தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்வதையாவது தடுக்கலாமே என்ற போது, “போற பாதையிலேயே போறதுதான் நல்லது” என்றனர் “முஸ்லிம் பள்ளிவாசல்களில் அவர்களே குண்டு வைக்கிறாங்களே” என்றார் திரு. சிவசாமி.

ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் திருநாவுக்கரசை நாங்கள் சந்தித்த போது அவரும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களையே சொன்னது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தை நிறுத்த முடியாது என அவர் கறாராகச் சொன்னார். “அவர்களுக்கும் ஊர்வலம் நடத்த உரிமை உண்டு. நடத்திக்கட்டும்” என்றார். “இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கும்வரை இந்து - முஸ்லிம் பிரச்சினை இருக்கும். முஸ்லிம்கள் கணிசமாக உள்ள இடத்தில் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அஜ்மீர் பள்ளிவாசலில் குண்டு வீசியது முஸ்லிம்கள்தானே?” என்றார். “கோயில் இடத்தில் முஸ்லிம்கள் குடியிருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றணும்” என்றார். “சேதுமணி மாதவன் என்கிற காவல்துறை ஆய்வாளர்தான் எல்லாத்துக்கும் காரணம். முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக நடந்தார். குமாரவேலைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவரது வீட்டில் புகுந்து வன்முறை செய்தார்” என்றும் குறிப்பிட்டார். இந்த சேதுமணி மாதவன் குறித்து முஸ்லிம் தரப்பிலும் இதர பொதுவானர்கள் தரப்பிலும் நல்ல பெயர் உள்ளது. இந்து முஸ்லிம் பிரச்சினையில் நடுநிலையாக செயல்பட்டதாகப் பலரும் கூறினர். வசதிகள் குறைந்த தனது தோட்ட வீட்டிலிருந்த திருநாவுக்கரசு நாங்கள் சென்றபோது ஹாரிபாட்டார் படித்துக் கொண்டிருந்தார். (Muslim Intolerance) பற்றி அடிக்கடி பேசினார்.

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் “குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதோடு நிறுத்திக் கொண்டார். காவல்துறை இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து வலுவாக வழக்குப் பதிவு செய்வதில் தயக்கம் காட்டுகிறது. பிரச்சினை வருகிற போதெல்லாம் வன்முறைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்து தண்டிப்பது என்பதற்குப் பதிலாக இருதரப்பிலும் சமமாகக் கைது செய்வது என்கிற போக்கைக் கையாளுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க மோசமான போக்கு. பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வழி வகுக்காத போக்கு. இரு தரப்பிலும் பெரும்பாலும் அப்பாவிகள் கைது செய்யப்படுவதற்கே வழி வகுக்கும் போக்கு.

காவல்துறையின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கையற்றுள்ளனர். கலவரத்துக்குக் காரணமான மகேஷைக் கைது செய்யாமல் தோளில் கை வைத்து சமாதானம் செய்தார் டி.எஸ்.பி. பேரிச்சாமி என்றொருவர் வருத்தத்தோடு குறிப்பிட்டார். “நீங்க தான் குண்டு வீசினிங்கன்னு நாங்க சொன்னா என்ன செய்வீங்க” எனத் துணை ஆய்வாளர்; சந்திராவும், அலட்சியமாக நடந்ததாகத் துணை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி குறித்தும் மனம் நொந்து பேசினர். குற்றவாளிகளைத் தேடுவதாகச் சொல்லி முஸ்லிம் வீடுகளில் புகுந்து அத்துமீறுவதையும் வேதனையோடு குறிப்பிட்டனர்.

மதமும் சாதியும் கை கோர்க்கும் ஒரு நிகழ்வாக முத்துப்பேட்டை அமைகிறது. சிறுபான்மை முஸ்லிம்கள் அரசியல் கட்சிகள் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்திய கம்ய+னிஸ்ட் கட்சி (சி;.பி.ஐ) மீது மட்டும் சிறிதளவு நம்பிக்கைக் கொண்டுள்ளனர். அவர்களும் கூட இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகக் குற்றவாளிகளைக் கண்டிக்க வேண்டும் என்பதையும் கூறினர். நாங்கள் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்களில் சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த முருகையன் ஒருவரே நடுநிலையாகப் பேசினார். இவர் ஒரு தலித் என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க இயலவில்லை.

தலித்களும், முத்தரையர்களும் கணிசமாக இருந்த போதிலும் மௌனமான நடுநிலையாளர்களாகவே அவர்களால் இருக்க இயல்கிறது.

முஸ்லிம்கள் தரப்பில் தமது நூறாண்டு காலப் பாரம்பரியமான தர்ஹா ஊர்வலங்களைக் கூட விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளனர். வினாயக சதுர்த்தி ஊர்வலமே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதால் அதைத் தடுத்து நிறுத்தினால் போதும் என்கின்றனர். குறைந்த பட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் தெருப் பகுதியில் வராமல் பாதையை மாற்றியாவது போக வேண்டும் எனச் சிலர் குறிப்பிட்டனர்.

பஸ்களில் தனியே வெளிய+ர் செல்ல இயலாத நிலை ஒரு முற்றுகையிட்ட மனநிலையை முஸ்லிம்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதை நாங்கள் உணர முடிந்தது. எந்தத் துரும்பையாவது பற்றி சமாதானத்தை நிலை நாட்ட முடியுமா என்கிற தவிப்பு அவர்களின் பேச்சுகளில் மட்டுமல்ல கண்களிலுங்கூட வெளிப்பட்டது.

பத்தாயிரம் முஸ்லிம்கள் வசிக்கும் ஓரூரில் எல்லா வகையான மனிதர்களும் இருக்கவே செய்வர். யாரேனும் ஒருவர் சிறிய பிரச்சினைகளில் (எ.டு.: தியேட்டரில் குடித்துவிட்டு கரைச்சல் செய்வது) ஈடுபடக்கூடும். இத்தகைய சந்தர்ப்பங்களில் குற்றவாளி தண்டிக்கப்படுவது நியாயமே. ஆனால் தவறிழைத்தவர் என்பதற்காகவே குற்றத்தைச் சமுதாயக் குற்றமாக (Collection Crime) மாற்றி முஸ்லிம்கள் அனைவரையும் தாக்கி சொத்துக்களை அழிக்கும் நடைமுறையை இந்துத்துவ சக்திகள் வெற்றிகரமாக நடத்துகின்றனர். மதச்சார்பற்ற நடுநிலையாளர்கள் சாதி, மத உணர்வு பாராமல் தலையிட்டால் இதைத் தடுத்து நிறுத்துவது கடினமல்ல.

எமது குழு முன்வைக்கும் பரிந்துரைகள்:
01. அரசியல் கட்சிகள் தமது உள்ளுர்த் தலைமைகளின் சாதி, மத ஆதரவுப் போக்குகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல், வாக்கு வங்கி என்கிற குறுகிய நோக்கில் செயல்படக் கூடாது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பங்கு பெறும் நிரந்தர சமாதானக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதில் ஒவ்வொரு கட்சியி;லிருந்தும் உள்ளுர் தலைவர்கள் தவிர பெரும்பான்மைச் சாதி, மதத்தைச் சாராத மாவட்ட அல்லது மாநில அளவிலான தலைவர்களும் பங்கு பெற வேண்டும்.
02. வன்முறை மற்றும் மதக் கலவரங்களுக்குக் காரணமான குற்றவாளிகளைக் காவல்துறை கைது செய்யத் தயங்கக் கூடாது. அவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். ‘பேலன்ஸ்’ பண்ணுவது என்கிற பெயரி;ல் இரு தரப்பிலும் ‘சமமாக’ கைது செய்யும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறை மீதே பெட்ரோல் குண்டு வீசியவர்களும் கூட சுதந்திரமாக உலவுவது கவலைக்குரியது. கருப்பு (எ) முருகானந்தம், மகேஷ், குமாரவேல் முதலியவர்களே எல்லா வன்முறைகளுக்கும் காரணம். சுதந்திரமாக அவர்கள் உலவுவது சமூக அமைதிக்குக் கேடானது.
03. தேர்தல் நேரங்களில் ‘பார்வையாளர்களை’ நியமிப்பது போல கலவரச் சூழல் மற்றும் திருவிழாக் காலங்களிலும் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும்.
04. மதக் கலவரங்களைத் தூண்டக்கூடிய வெறுப்புப் பேச்சுப் பேசப்படும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. வெறுப்புப் பேச்சாளர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
05. வினாயகர் ஊர்வலமே எல்லாக் கலவரங்களுக்கும் காரணம் என்பதால் அது தடை செய்யப்பட வேண்டும். தேவையானால் நூறாண்டுப் பாரம்பரியமிக்க தமது தர்ஹா ஊர்வலங்களையும் கூட நிறுத்திக் கொள்வதற்கு முஸ்லிம்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

06. ஒரு தரப்பினர் பேருந்துகளில் பயணம் செய்ய இயலாது, அச்சத்தில் உறைவது ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் நிலை. இது உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை வரை செல்லும் சாலையில் ஆயுதம் தாங்கிய “போலீஸ் பெட்ரோல்” 24 மணி நேரமும் செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாகத் தம்பிக்கோட்டை, பரக்கலக்கோட்டைப் பகுதியில் சாலை ஓரத்தில் 24 மணி நேரமும் காவலர்கள் இருக்கும் போலீஸ் அவுட் போஸ்ட்கள் அமைக்கப்பட வேண்டும்.
07. கலவரங்களில் இழந்த சொத்துக்களுக்கு அரசு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும்.
08. முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த ‘மதக் கலவரத் தடுப்பு மசோதா’ உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு உரிய அழுத்தத்தை மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும்.
நவம்பர் 01, 2007 நன்றி: வானம் வெளியீட்டகம்