வெள்ளி, அக்டோபர் 07, 2011

தமிழகத்தில் செத்துப்போன மனச்சாட்சிகள்

தமிழகத்தில் செத்துப்போன மனச்சாட்சிகள்

                                                  - மு. சிவகுருநாதன்

















        செப்டம்பர் 09, 2011 ஆம் தேதி கமுதிக்குப் பக்கத்திலுள்ள மண்டலமாணிக்கம் என்ற கிராமத்திற்கருகில் உள்ள பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் பழனிக்குமார் (16) மிகவும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். இச்சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுகிறார்.

      செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடியில் நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்விற்கு வந்த ஜான் பாண்டியன் திருநெல்வேலி மாவட்ட எல்லையில் தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சட்ட விரோதக் காவலில் வைக்கப்படுகிறார்.

       தமிழக காவல்துறையின் முன்னேற்பாட்டின்படி ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட பரமக்குடி கலவரம் அரங்கேற்றப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 6 அப்பாவி தலித் உயிர்கள் மாண்டு போயின. நூற்றுக்கணக்கானோர் காயம்பட்டனர். நாய், பன்றிகளை தெருவில் சுட்டு இழுத்துச் செல்வதைப் போல இறந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் மிகவும் கேவலமான முறையில் நடத்தியதை ஊடகங்கள் நமக்குக் காட்டின.

      ஏழு அப்பாவி தலித் உயிர்களை காவு வாங்கியும் அடங்காத அரசு எந்திரமும் காவல்துறையும் நடந்து கொண்ட விதமும் முதல்வரும் எதிர்க்கட்சியும் எதிர்வினையாற்றியதும் சமூகத்தின் மனச்சாட்சியை அசைத்துக் கூட பார்க்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

        சட்டசபையில் முதல்வர் ஜெ. ஜெயலலிதா பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியும் சாதி மோதல் என்று சொல்லி காவல்துறையின் சாதிவெறித் தாக்குதலுக்கு துணை நின்றார். கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவன் பழனிக்குமார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை இழிவு செய்து எழுதினான் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் அம்மாணவனை குற்றவாளியாக்கித் தீர்ப்பெழுதினார். இதற்குப் பிறகு எதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷ­ன்? முதலமைச்சரே முன் முடிவு எடுத்து தீர்ப்பெழுதிய பிறகு இத்தகைய விசாரணைகள் எதற்கு நடத்தப்பட வேண்டும்?

       முதல்வரின் உயர் சாதி மனோபாவத்திற்கும் தலித் விரோதப் போக்கிற்கும் இணையாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் (தே.மு.தி.க.) பேச்சு அமைந்திருந்ததும் அந்தக் கட்சியின் உயர் சாதி ஆதரவுப் போக்கை வெளிப்படுத்திக் காட்டியது. சமச்சீர் கல்வி உள்ளிட்ட எந்தப் பிரச்சினையிலும் எவ்வித கொள்கையுமற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருப்பது இன்னொரு அவலம்.

        இவ்வளவு நடந்த பிறகும் இந்நிகழ்வுகள் தமிழகத்து மக்களின் மனச்சாட்சியில் எவ்வித உறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களுடைய இடைநிலைச் சாதிப்பற்றை விட்டு விட மனமில்லாமல் ஏதோ ஒப்புக்கு ஒரு கண்டன அறிக்கை வெளியிடுவதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக கருதுகின்றன.

      உள்ளாட்சித் தேர்தல் காலம் என்பதால் இழப்பீடு வழங்கவும் சில கட்சிகள் முன் வந்தது சுயலாபங்களுக்காகத்தான். தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்படுவது அன்றாட நிகழ்வாகப் போய்விட்ட போதிலும் வேதாரண்யம் - புஷ்பவனம் மீனவர் படுகொலையை ஜெ. ஜெயலலிதா சட்டசபைத் தேர்தல் சமயத்தில் பயன்படுத்திக் கொண்டதை நாம் இத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.

       ஒவ்வோராண்டும் அக்டோபர் 30இல் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை அரசே முன் நின்று விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்கிறது. அந்த நாளில் அங்கு குவியாத அரசியல் கட்சித் தலைவர்களை நாம் பார்க்க முடியாது. அங்கு செல்ல எந்தக் கட்சித் தலைவருக்கும் எப்போதும் தடை விதிக்கப்பட்டதில்லை. ஆனால் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற ‘ஆப்பநாடு மறவர் சங்க’ விருப்பத்தினை சாதிவெறி கொண்ட காவல்துறை நிறைவேற்றியுள்ளது. அரசு எந்திரத்தின் இந்த சாதிவெறி சூழ்ச்சிக்கு அப்பாவி தலித்கள் பலியாகியுள்ளனர்.

       ஆதிக்க சாதி ஆதிக்கம் மிகுந்த மண்டலமாணிக்கம் கிராமத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பள்ளப்பச்சேரி கிராமம் உள்ளது. இங்குள்ள தலித் மாணவர்கள் படிக்க வேண்டிய பள்ளி மண்டலமாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகும். சுமார் 300 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்கள் எண்ணிக்கை 28. அதில் 23 பேர் இக்கல்வியாண்டின் தொடக்கத்தில் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு மாறியுள்ளனர். மீதம் உள்ள 5 பேரும் இவ்வாண்டு வெளியேறிவிடும் வாய்ப்புக்கள் மிகுதி. அரசுப் பள்ளியில் கூட தலித் மாணவர்கள் படிக்க முடியாத சாதி வெறி ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இந்த மண்டலமாணிக்கம் கிராமம் உள்ளது. இங்கு தலித் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. தலித் மாணவர்கள் கல்வி கற்க அனுமதிக்காத ஆதிக்க சாதி வெறிக்கும்பல் தலித் ஆசிரியர்களை அங்கு பணியாற்ற விடுமா?

         படுகொலை செய்யப்பட்ட பதினொன்றாம் வகுப்பு மாணவர் பழனிகுமார் மண்டலமாணிக்கம் சாதி வெறியால் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்காமல் 8 கி.மீ. தொலைவில் உள்ள வேறு ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் படித்து வந்தவர். பார்ப்பதற்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறிய உருவத்தில் உள்ள பழனிகுமார் எட்டடி உயரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடச் சுவரில் தேவரைப் பற்றி அவதூறு எழுதினான் என்பது நம்பக் கூடியதல்ல.

       அடியாள் போலீஸின் அறிக்கையை முதல்வர் ஜெ. ஜெயலலிதா வேண்டுமானால் நம்பிக் கொண்டிருக்கலாம். நேரில் ஆய்வு செய்பவர்களோ, மனச்சாட்சி உள்ளவர்களோ இதை நம்ப முடியாது. முதல்வரின் உண்மை கண்டறியும் முறைப்படி அம்மாணவன் எழுதியதாக வைத்துக் கொண்டாலும் கோழி கழுத்தை அறுப்பது போல் அம்மாணவனை கொலை செய்வதுதான் அதற்குரிய தண்டனையா என்பதை ஜெ.ஜெயலலிதா விளக்க வேண்டும். தலித் மக்களுக்கு எதிராகவும் சாதியக் கொலை வெறியர்களுக்கு ஆதரவாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாக ஒரு மாநில முதல்வர் பேசுவது முறையற்றது; காட்டுமிராண்டித்தனமானது.

       வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சொல்லும் காவல்துறை காயம்பட்டவர்களை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல் கோர வெறித் தாண்டவம் ஆடியதால்தான் பலரின் உயிரைக் காப்பாற்ற கூட முடியாமல் போயிருக்கிறது. குமார், தீர்ப்புக்கனி ஆகிய இருவரும் உயிருடன் பிணவறையில் போடப்பட்டுள்ளனர். காலம் கடந்த சிகிச்சையால் குமார் மட்டுமே பிழைத்துள்ளார். தீர்ப்புக்கனி மரணமடைந்தார். இதிலிருந்தே இந்த துப்பாக்கிச் சூடு தமிழ்நாடு காவல்துறையின் திட்டமிட்ட சதிச்செயல் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

       அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் மறுக்க வேண்டும் என்கின்றனர். நாம் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மு. கருணாநிதியோ, ஜெ. ஜெயலலிதாவோ நமக்கு இடும் பிச்சை அல்ல இந்த இழப்பீடு?. மாறாக நமது அரசியல் சட்டபடியான உரிமை. அரசு எந்திரம் நடத்திய இந்த கொலை வெறியாட்டத்திற்கு நீதிமன்றத்திடம் பதில் சொல்ல வேண்டிய அதே வேளையில் இழப்பீடு அளிப்பதும் தவிர்க்க முடியாதது.

       சாதிவெறி இயக்கங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஏதோ ஒரு வகையில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளன. ஆனால் இந்த துயரமான காலகட்டத்தில் பாதிக்கப்பட்டும் ஆளும் அரசு வன்முறையால் நிர்க்கதியாயிருக்கும் தலித் மக்களுக்கு நம்பிக்கையூட்ட ஒருங்கிணைந்த போராட்டங்கள், அறிக்கைகள், கண்டன ஒன்று கூடல் போன்றவற்றை தலித் இயக்கங்கள்இணைந்து முன்னெடுத்திருக்க வேண்டும். இன்னமும் இது நடக்காதது ஆதிக்க சக்திகளுக்கு இனிப்பான செய்தியாகவே இருக்கிறது.

      தமிழகத்தில் மூன்று பெரும் பிரிவாக இருக்கும் தலித் இயக்கங்களுக்குள் கொள்கை முரண்பாடுகள் இருப்பது உண்மைதான். உள் ஒதுக்கீடு போன்ற பல்வேறு சிக்கல்களில் மாற்றுக் கருத்து உள்ளது. ஆனால் இந்த மாதிரியான பொதுவான நோக்கங்களுக்காக தலித் மக்கள் பாதிப்படையும் போது இவர்கள் அனைவரும் ஒன்று திரளவில்லையென்றால் பிறகு எதற்கு, யாருக்காக இவர்கள் இயக்கம் நடத்துகிறார்கள்?.

     தேவேந்திரர்களின் தலைவர்களான டாக்டர். கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தொல். திருமாவளவன், பழ. அதியமான், சிவகாமி போன்ற தலித் தலைவர்கள் தலித்கள் பாதிக்கப்படும் இத்தகைய பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். இவர்கள் அனைவரும் தனித்தனி அறிக்கைகள், போராட்டங்கள் நடத்துவதை விட ஓரணியில் திரள்வதுதான் இன்றையச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவும் அதற்கு எதிர் வினையாற்றவும் உதவும். இப்போதும் அது நடக்கவில்லை என்றால் இவர்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தலித் மக்களுக்கு வேறு எவரும் துரோகமிழைக்க வேண்டியதில்லை.