வியாழன், டிசம்பர் 21, 2023

கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த காந்தியவாதி!

 

கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த காந்தியவாதி!

அஞ்சலி: தோழர் என். சங்கரய்யா (15.07.1922 – 15.11.2023)

மு.சிவகுருநாதன்

 


 

             விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா (102) வயது முதிர்வின் காரணமாக இயற்கையில் (நவம்பர் 15, 2023) கலந்தார். தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஆத்தூர் கிராமத்தில் பிறந்த (ஜூலை 15, 1922) பிறந்த சங்கரய்யாவிற்கு முதலில் பெற்றோர் வேறு பெயர் (பிரதாப சந்திரன்) சூட்டினாலும் அவரது தாத்தாவின் பெயரே நிலைத்தது. பணியின் காரணமாக குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. எனவே பள்ளி, கல்லூரிக் கல்வியை மதுரையில் பெற்றார். பள்ளி மாணவனாக இருக்கும்போதே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார்.

          சென்னை மாணவர் சங்கத்தைப் போன்று மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக பணிபுரிந்தார். 1941இல் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து அமெரிக்கன் கல்லூரியில் கண்டனக் கூட்டம் நடத்திக் கைதானார். கல்லூரியில் படிக்கும்போது விடுதலைப் போரில் பங்கேற்றதால் இறுதித்தேர்வுக்கு முன்னதாக பிரிட்டிஷ் அரசு அவரைக் கைதுசெய்து சிறையலடைத்தது. இதனால் பட்டப்படிப்பு முழுமை பெறாமல் போனது.

          தொடக்கத்தில் திராவிட இயக்கத் தாக்கத்திற்கு ஆட்பட்டிருந்த சங்கரய்யா, 1940இல் பொதுவுடைமைக் கொள்கையின் மீது கொண்ட ஈடுபாட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். விடுதலைப் போராட்டங்களில் பலமுறையில் சிறைலடைக்கப்பட்ட சங்கரய்யா இறுதியாக மதுரைச் சதி வழக்கில் (1946) சிறை சென்று, நாட்டு விடுதலைக்கு முதல் நாள்தான் (ஆகஸ்ட் 14, 1947) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். எட்டு ஆண்டுகள் சிறைகளில் கழித்த மக்கள் விடுதலைப் போராளி சங்கரய்யா. கட்சி தடை செய்யப்பட்டபோதும் சீனப் போரின் போதும் கைதாகி சிறை சென்றார். கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை மற்றும் அடக்குமுறைகளின்போது நான்கு ஆண்டுகள் தலைமறைவுவாக இருந்து கட்சிப் பணியும் மக்கள் பணியும் செய்தவர்.

         நாட்டு விடுதலைக்குப் பின் கட்சியைச் சேர்ந்த நவமணி அம்மையாரை காதல் திருமணம் செய்துகொண்டார். இது சாதி, மத மறுப்புத் திருமணமாக அமைந்தது மட்டுமின்றி அவரகளது குழந்தைகளுக்கும் அதே வழியில் திருமணங்கள் நடக்க அடித்தளமாக அமைந்தது. கருத்தியலும் கொள்கைகளும் அவரையும் குடும்பத்தினரையும் வழி நடத்தியது. ‘தீக்கதிர்நாளிதழின் முதல் ஆசிரியர் இவரே. ‘செம்மலர்இதழ், தமுஎகச உருவாக்கத்திலும் முதன்மைப்பங்கு வகித்தார்.

       1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது அதிலிருந்து வெளியேறிய 32 தலைவர்களுள் ஒருவராக சங்கரய்யா இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது முதல் மத்தியக் குழுவில் இடம்பெற்றார். 1967, 1977, 1980 என மூன்று முறை மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொண்டாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் இவரது பணிகள் அளப்பரியது. கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக பணியாற்றினார்.  

         80 ஆண்டுக்கு மேலாக பொதுவாழ்வில் இருந்த சங்கரய்யா களப் போராளியாகவும் மக்கள் போராளியாகவும் பணி செய்தார். மார்க்சிய கருத்தியல் அவரை முன்னோக்கிச் செலுத்தியது. தமிழ்ச்சூழலில் அவருக்கு தொடக்க காலந்தொட்டே திராவிட இயக்கத் தாக்கமும் இருந்தது. தீண்டாமை ஒழிப்பு, சாதியொழிப்பு போன்ற சமூக மாற்றச் சிந்தனைகள் மேலும் செழுமையடைந்தன.

        விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டபோது சங்கரய்யா அதனை ஏற்க மறுத்தார்.  விடுதலைப் போரில் படிப்பைக் கைவிட்டதை எவ்வாறு மகிழ்வோடு எதிர்கொண்டாரே அதைப்போல அதற்கு சன்மானம் எதையும் பெற அவரது மனம் ஏற்கவில்லை. அவரது மார்க்சிய, காந்தியத் தாக்கம் இதற்கு ஒப்பவில்லை. அந்த மார்க்சியவாதிக்குள்ளும் ஒரு காந்தியர் இருந்தார். விடுதலைப் போரில் பங்கேற்றதை தமது கடமையாகக் கருதினார். 2021இல் தகைசால் தமிழர்விருதுக்கான தொகையை அரசுக்கே வழங்கினார். கம்யூனிஸ்ட் கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினரின் ஊதியம் உள்பட எதுவும் கட்சிக்கே செல்லும். தனக்கென வாழாமல் கட்சி, கருத்தியல், மக்கள் என வாழ்ந்து மறைந்த தோழர்.

        மதுரைக் காமராஜர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு தோழருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தபோது சான்றிதழில் வேந்தர் என்கிற முறையில் கையொப்பமிட மறுத்து ஆளுநர் பதவிக்கு தீராக் களங்கத்தை ஏற்படுத்தினார் ஆர்.என்.ரவி. இதை மக்களுக்கு எதிராக உருவாகும் பாசிசக் கருத்தியல் வன்முறையின் ஓரங்கமாக எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் மக்களுடன் சார்ந்த எக்கருத்தியலுடனும் நிற்கத் தகுதியற்றவர்கள். டாக்டர் பட்டத்தால் அவருக்கு எந்தப் பெருமையும் வந்துவிடப் போவதில்லை. தோழர் என்.எஸ். (என்.சங்கரய்யா) என்ற பட்டமும் பெயரும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

         எல்லா தரப்பும் இவரது மறைவையொட்டி அருங்குணங்களைப் பட்டியலிட்டு அஞ்சலி செலுத்துகின்றனர். ஆனால் சமூகத்தின் ஆழ்மனதில் இவரைப் போன்றவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்என்கிற எண்ணமும் இருக்கிறது. இன்றைய சமூகம் இடதுசாரி இயக்கத் தலைவர்களான சிங்காரவேலர், ஜீவா, பி.எஸ்,சீனிவாசராவ், நல்லசிவம், நல்லக்கண்ணு போன்றோரை பொதுவாழ்வில் எளிமை, தூய்மை, நேர்மை போன்ற அருங்குணங்களுக்காகக் கொண்டாடுகிறது.  காந்தி, காமராசர் போன்ற மறைந்த தலைவர்களை நினைவுகூறும் போதும் இத்தகைய நிலை தொடர்வதைக் காணலாம். இந்த கொண்டாட்ட, பெருமித மனநிலை   மட்டுமே இன்றைய சமூகத்திற்குப் போதுமானதாக உள்ளது கவலைக்குரியது. மறுபுறம் அத்தகைய குணங்களை தங்களது வாழ்வில் இம்மியும் கடைபிடிக்காத தன்மையையும் பலரிடம் நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். இப்பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டும். நாட்டில் பிழைக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

        கம்யூனிட் கட்சியில் உள்ளோர் மட்டும் கம்யூனிஸ்ட்கள் இல்லை. காங்கிரசில் இருப்போர் மட்டும் காந்தியர்கள் இல்லை. திராவிட இயக்கங்களில் இருப்போர் மட்டும் பெரியாரிஸ்ட் இல்லை. தலித் இயக்கங்களில் செயல்படுவோர் மட்டும் அம்பேத்கரிஸ்ட் இல்லை. இதை எல்லா இடங்களுக்கும் கருத்தியல்களுக்கும் விரிவாக்கலாம். இந்தக் கருத்தியல் செயல்பாட்டாளர்கள் வெளியிலும் இருக்கக்கூடும். வினோபா, ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இன்றில்லை. இது பெரும்பாலும் எல்லா கருத்தியலுக்குப் பொருந்தும்


 

          இன்றுள்ள சூழலில் ஒரே கருத்தியலின் ஆதிக்கம் இருப்பது சரியல்ல. சங்கரய்யாவின் எளிமைக்குள் காந்தியம் உண்டு. சாதியொழிப்புக் கண்ணோட்டத்தில் அம்பேத்கரியம் பங்களிக்கும். சுயமரியாதை, தன்னுரிமைச் சிந்தனையில் பெரியாரியத்தின் சாயல் மிகும். தொழிலாளர்கள், வர்க்கப் பார்வையில் மார்க்சிய சிந்தனை மிளிரும். இவ்வாறான மக்கள் சார்பான கருத்தியல்களின் வானவில் கூட்டணியே இன்றைய தேவை என்பதை சங்கரய்யாவின் வாழ்வும் பணியும் நமக்கு உணர்த்தி செல்கின்றன.

           மனிதர்களுக்குண்டான குறைபாடுகள் அனைவரிடத்திலும் இருக்கும். எதையும் நூற்றுக்கு நூறு சரியானதாக மதிப்பிட இயலாது. இருப்பினும் கருத்தியல் சார்ந்த நேர்மையுடன் அடுத்தகட்ட பாதை சமைப்பவர்களே சிறந்த தலைவராக விளங்க முடியும். இத்தகைய பண்புக்கூறுகளை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியாமற்போகும்போது மக்களுக்கான அரசியல் இல்லாமற் போய்விடுகிறது. பொதுவாழ்வு என்பது   அறவியல் கூறுகளை உள்ளடங்கிய அரசியலாகப் புத்தெழுச்சி பெற வேண்டும். பொதுவாழ்வில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்விலும் உயரிய குணங்களை முடிந்த அளவு பின்பற்றுவதே நாம் அவருக்கு செய்யும் வீரவணக்கமாக இருக்க முடியும். 

நன்றி: பேசும் புதியசக்தி - டிசம்பர் 2023

ஞாயிறு, டிசம்பர் 17, 2023

சட்ட மறுப்பும் உப்புச் சத்தியாகிரகமும்

 

சட்ட மறுப்பும் உப்புச் சத்தியாகிரகமும்

(மகாத்மாவின் கதை தொடரின் பனிரண்டாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்

 


               1929 டிசம்பர் 31இல் ஜவகர்லால் நேரு தலைமையில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் சிந்துவின் துணை நதியாகிய ராவி ஆற்றங்கரையில் நேரு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அம்மாநாட்டில் 1930 ஜனவரி 26 இந்திய விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வோராண்டும் கொண்டாடப்பட்டது. வரிகொடா இயக்கம், உப்பு சத்தியாகிரகம், முழுப் புறக்கணிப்பு என பல்வேறு சட்டமறுப்பு இயக்கப் போராட்டங்களை முன்னெடுத்தது. வெகுமக்கள் திரளை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்த உப்பு வரியை காந்தி ஆயுதமாகக் எடுத்துக் கொண்டார். ஒத்துழையாமையும் சட்ட மறுப்பும்  சத்தியாகிரகம் என்ற ஒரே மரத்தின் வெவ்வேறு கிளைகள் என்றார் காந்தி.

         மக்கள் அனைவரும் பயன்படுத்தும் உப்பின் மீது வரிவிதித்து ஆங்கிலேயர் பலனடைந்து வந்தனர்.  தொடக்க கால காங்கிரஸ் தலைவர்கள் இதனை அகற்ற எண்ணினர். உப்பு வரி குறித்தான விவாதங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. உப்பு வரியானது ஆங்கிலேயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடியது என்றார் தாதாபாய் நௌரோஜி. 1885 இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் எஸ்..சுவாமிநாத அய்யர் (வழக்கறிஞர், தஞ்சாவூர், ‘தஞ்சை மக்கள் பேரவைஎன்ற கட்சியின் நிறுவனர்), கந்துகூரி வீரேசலிங்க பந்துலு (தெலுங்கு எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி) ஆகியோர் உப்பு வரி உயர்வை எதிர்த்தனர்.

           யர் வர்க்க கண்ணோட்டத்தில் இருந்த அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் சிலர் உப்பு வரி நீக்கப்படுவதை விரும்பவில்லை. காங்கிரசுக்குள்ளும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன. வருமானவரிக்குப் பதிலாக உப்பு வரியை உயர்த்தலாம் என்று சொல்கிற பாசிச மேட்டுக்குடியினரும் அன்று இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிங்காரவேலர் தொழிலாளர்களும் விவசாயிகளும் உருவாக்கப்போகும் கட்சியின் செயல்திட்டத்தில் உப்பு வரி ஒழிப்பிற்கு இடமளித்தார். உப்புவரி எதிர்ப்பு பெயரளவில் இருந்ததால் ஆங்கில அரசு இக்கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. 1930 உப்புச் சத்தியாகிரகம் இந்நிலையை கொஞ்சம் மாற்றியது.

       உப்பு வரி மற்றும் உரிமம் இல்லாமல் யாரும் உப்பு தயாரிக்கக் கூடாது என்கிற சட்டத்தை மீற உப்புச் சத்தியாகிரகம்  என்ற போராட்டத்தை காந்தி வடிவமைத்தார். வெகுமக்கள் பங்கேற்புடன் இந்திய விடுதலைப் போரை தீவிரமாக்க இது உதவும் என நம்பினார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. ஆங்கிலேய அரசு இதற்கு கொஞ்சம் இறங்கி வந்தது.

          1930 ஜனவரி 31க்குள் காலக்கெடு நிர்ணயித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்) இர்வின் பிரபுவிடம் அளிக்கப்பட்டது. அதில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல், உப்பு வரியை ரத்து செய்தல், நிலவரியை 50% ஆகக் குறைத்தல், ராணுவம் மற்றும் குடிமைப்பணி சேவைக்கான செலவீனத்தை 50% குறைத்தல் போன்றவை நிறைவேறாவிட்டால் முழுமையானப் புறக்கணிப்பு அறிமுகம் செய்யப்படும் என்று தீர்மானமாக உரைக்கப்பட்டிருந்தது. உரிய காலக்கெடு தாண்டியும்  பதில் இல்லாத காரணத்தால் காந்தி சட்ட மறுப்பை முறைப்படித் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

        ஆங்கிலேய அரசின் உரிமம் இன்றி யாரும் உப்பு தயாரிக்கக் கூடாது என்கிற உத்தரவை மீறி மக்கள் தங்களுக்குத் தேவையான உப்பைத் தயாரித்துக் கொள்ளலாம் என்று காந்தி அறிவித்தார். குஜராத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 384 கி.மீ. தொலைவிலுள்ள தண்டி என்கிற கடற்கரைக் கிராமத்திற்கு நடைபயணமாக சென்று உப்புச் சட்டத்தை மீறப்போவதாக அறிவிப்பு செய்தார். 1930 மார்ச் 12 இல் 78 ஆசிரமத் தோழர்களுடன் காந்தி நடைபயணம் தொடங்கினார். இப்பயணம் மூலம் வழியெங்கும் மக்களைச் சந்தித்து அவர்களிடம் விடுதலை உணர்வை உருவாக்குவதே காந்தியின் நோக்கமாக அமைந்தது. தனது 61 வயதில் 25 நாட்கள் 384 கி.மீ. நடந்து வழி நெடுகிலும் பல்வேறு கூட்டங்களில் காந்தி உரையாற்றினர்; மக்களைச் சந்தித்தார்.

       பயணத் தொடக்க நாளில் மார்ச் 12 அஸ்லலி என்னுமிடத்தில் புள்ளிவிவரங்கள் மூலம் மக்களுக்கு உப்புவரியின் சுமையை உணர வைத்தார். “உங்கள் கிராம மக்கள்தொகை 1700க்கு 850 மணங்கு உப்பு தேவைப்படும். 200 காளை மாடுகளுக்கு 300 மணங்கு என மொத்தம் 1150 மணங்கு உப்பு தேவைப்படுகிறது. (11.25 கி.கி. எடையளவு மணங்குஎன்று சொல்லப்பட்டது.) இதற்கு நீங்கள் வரியாக ரூ.720 செலுத்துகிறீர்கள். இன்னும் கூடுதலாக உள்ள பசு மற்றும் எருமை மாடுகள் கன்றுக்குட்டிகளுக்கும், தோல் பதனிடுவோர் தோலைப் பதப்படுத்துவதற்கும் உப்பைப் பயன்படுத்தும்போது உப்புவரி அதிகமாகும். தனிநபரின் சராசரி வருமானம் 7 பைசா என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள் பல லட்சம் மக்களுக்கு ஒரு பைசா கூட வருமானமில்லை. இவர்கள் எப்படி உப்பு இல்லாமல் வாழமுடியும்? அவர்களின் துயரம் எப்படி இருக்கும்”, என காந்தி கேள்வியெழுப்பினார்.

     1930 ஏப்ரல் 5இல் காந்தி தண்டி சென்றடைந்தார். அங்கு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். பத்தரிக்கையாளர் சந்திப்பும் நிகழ்ந்தது. அதில் தனது போராட்டம் குறித்து விளக்கினார். மறுநாள் ஏப்ரல் 6ஆம் நாள் தண்டி கடற்கரையில் தடையை மீறி உப்பு அள்ளினார். இப்போராட்டத்தில் காந்தியுடன் பலர் கைது செய்யப்பட்டனர். கஸ்தூரிபா காந்தி, கவிக்குயில் சரோஜினி நாயுடு போன்றோர் இப்போராட்டத்தில் பங்கு பெற்றனர். உப்புச் சட்டங்களை மீறுவதில் பெண்களின்  பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர்கள் தண்ணீர் எடுக்கும் பாத்திரங்களில் கடல்நீரை அள்ளிச் சென்றனர். சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சவும் தொடங்கினர்.

      சட்ட மறுப்பு ஒவ்வொரு குடிமகனின் இயல்பான உரிமை. இதை விட்டுக்கொடுக்கும் எவரும் மனிதத்தன்மையை இழந்தவர் என்றார் காந்தி. அறவழியில் போராடும் சட்ட மறுப்பாளனைச் சிறைவைப்பது மனச்சாட்சியைச் சிறையிடுவது போன்றதாகும். சட்ட மறுப்பு (Civil Disobedience) என்ற சொற்றொடரில் முதலில் இருக்கின்ற சட்ட திட்டங்களை மதிக்கின்ற உணர்வே முக்கியம்; மறுப்பு அல்லது கீழ்படியாமை என்பது முதன்மையானதல்ல. சமூக இணக்கம், ஒழுங்குமுறை, அகிம்சை வழியிலான சட்ட மறுப்பே வாழ்வின் உயிரோட்டம் என்றும் அது அழிவை உண்டாக்குவதல்ல என்று தீர்க்கமாக நம்பிக்கைகளை காந்தி வெளிப்படுத்தினார்.

      சட்ட மறுப்பு இயக்கம் தன் ஆதரவிற்காக ஒரு பைசா கூடக் கேட்பதில்லை. அதற்கு தேவையும் இல்லை. வெற்றியில் திடமான நம்பிக்கை கொண்ட நெஞ்சுறுதி கொண்ட இதயங்கள் மட்டுமே தேவை. போராட்டத்தின் இழப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனத்துணிவு வேண்டும். இக்காலகட்டத்தின் தேவைகளுக்கு பிறரிடம் கையேந்தாமல் வேறு வகையான உடலுழைப்பின் மூலம் வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகளைக் காந்தி கையாண்டார்.  

      ஒவ்வொரு முறை கைது செய்யப்படும்போதும் பலத்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசை அச்சுறுத்த வேண்டும் என்கிற எண்ணம் அறவே அகல வேண்டும். சிறை செல்வது சத்தியாகிரகியின் வாழ்வில் ஒரு நிகழ்வு என்றே கருத வேண்டும். அரசு கோழைத்தனமாக நம்மீது அடக்குமுறையை ஏவுகிறது. நாமும் அரசைப்போல கோழையாக மாறி சிறைவாசத்திற்கு அஞ்சக்கூடாது. ஆயிரமாயிரம் பேர் காரணமின்றிக் கைது செய்யப்படுவதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது என்பது போன்ற கருத்துகளை காந்தி தனது பேச்சிலும் எழுத்திலும் (யங் இந்தியா) வெளிப்படுத்தினார்.

         உண்ணாவிரதம் என்பது சத்தியாகிரக ஆயுதக்கிடங்கில் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதம் என்றும் சாகும் வரை உண்ணாவிரதம் கடைசி ஆயுதம் என்ற கருத்தை காந்தி வெளிப்படுத்தினார். மனித முயற்சிகள் தோல்வியடையும்போது அகிம்சையாளன் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான் என்றார். இந்த இறுதி ஆயுதத்தை காந்தி பலமுறை பயன்படுத்தினார். பூனா ஒப்பந்தத்தில் காந்தி மீதான விமர்சனங்கள் எழுந்தபோதிலும் இந்த ஆயுதத்தை அவர் இறுதிவரை கைவிடவில்லை.

          உப்புச் சட்டத்தை மீறியதையெடுத்து காந்தி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு பூனா  அருகே எரவாடா சிறையிலடைக்கப்பட்டார். வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் எல்லை காந்திஎன்றழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கான் ஏப்ரல் 23, 1930 இல் சட்டமறுப்பு இயக்கத்திற்கு தலைமையேற்றுக் கைதானார். இவர் அமைத்த  குடாய் கிட்மத்கர்’ (செஞ்சட்டைகள்) என்றழைக்கப்பட்ட இயக்கம் பயிற்சி பெற்ற 50,000 அறப்போராட்ட செயல்வீரர்களைக் கொண்டது. பெஷாவர் நகரில் குழுமியிருந்த இவ்வியக்கத்தினரை 250 பேரை இயந்திரத் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கியது பிரிட்டிஷ் அரசு. அகிம்சைப் பயிற்சி பெற்ற இவர்கள் அக்குண்டுகளை எதிர்கொண்டு வீரமரணமடைந்தனர்.  

        தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், வங்காளம் போன்ற இடங்களில் உப்புச் சத்தியாகிரகங்கள் நடைபெற்றன. 1865, 1878 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட வனச்சட்டங்கள் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது. இச்சட்டங்களை எதிர்த்தும் வரி கொடா இயக்கம், மதுக்கடை மறியல், அந்நியத் துணிகள் புறக்கணிப்பு எனப் பல்வேறு வடிவங்களில் நாடெங்கும் சட்ட மறுப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், பழங்குடியினர் என பெருந்திரள் மக்கள் பங்கேற்கும் போராட்டமாக மாறியது. ஜவகர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் பிற கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

         தமிழ்நாட்டில் சி.ராஜாஜி தலைமையில் திருச்சியில் 1930 ஏப்ரல் 13இல் தொடங்கிய உப்பு யாத்திரை ஏப்ரல் 28 வேதாரண்யம் சென்று சட்டத்தை மீறி உப்பு அள்ளியது. ராஜாஜி, டி.எஸ்.எஸ்.ராஜன், சர்தார் வேதரத்தினம், சி.சாமிநாதர், கே.சந்தானம், ருக்மணி லட்சுமிபதி, .என்.சிவராமன், .வி.அளகேசன், கல்கி சதாசிவம், ஆர்.வெங்கட்ராமன் போன்ற தலைவர்கள் இதில் பங்கேற்று கைதாயினர். அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த தாரன் சத்தியாகிரகிகளுக்கு இடமோ உணவோ அளிப்பவர்களுக்கு சிறைத்தண்டனை என்று எச்சரித்திருந்தார். இதை மீறி திருத்துறைப்பூண்டி தென்பாதி நாயுடு உணவு வழங்கியதற்காக கைது செய்யப்பட்டார். இருப்பினும் மக்கள் மறைமுகமாக உணவுப் பொட்டலங்களையும் குடிநீரையும் மரங்களிடையே ஒளித்து வைத்து வழங்கினர்.

         வேதாரண்யத்தில் வைரப்பன் என்ற முடி திருத்தும் தொழிலாளி சாதாரண உடையிருந்த காவலர் ஒருவருக்கு முகச்சவரம் செய்துகொண்டிருந்தார். அவர் காவலர் என்றறிந்தும் வேலையைப் பாதியுடன் நிறுத்தினார். மாவட்ட ஆட்சியர் தாரன் வைரப்பனை அழைத்து  முகமழிப்பை முடிக்கச் சொல்லிப் பார்த்தார். இல்லாவிட்டால் சிறைத் தண்டனை வழங்குவேன் என்று மிரட்டியும் பார்த்தார். அப்போது 16 வயதிலிருந்த வைரப்பன் துளியும் பயமின்றி தன் முடிவில் உறுதியாக இருந்து சிறைத்தண்டனை பெற்றார்.

        டி.பிரகாசம், கே.நாகேஸ்வர ராவ் போன்றோர் சென்னை அருகே அவர்கள் தங்கியிருந்த உதயவனம் சத்தியாகிரகிகள் முகாமில் கைது செய்யப்பட்டனர். இதனால் சென்னையில் கடைகள் அடைக்கப்பட்டன. 1930 ஏப்ரல் 27இல் திருவல்லிக்கேணியில் காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் மூவர் கொல்லப்பட்டனர். ராமேஸ்வரத்தில் உப்பு யாத்திரை மேற்கொள்ள  முயன்ற தொண்டர்கள் முனகூட்டியே கைதாயினர். உப்புச் சட்டங்களை மீறிய குற்றத்திற்காக முதல் அபராதம் கட்டிய பெருமை ருக்மணி லட்சுமிபதிக்குக் கிடைத்தது.

       எரவாடா சிறையிலிருந்த காந்தி சபர்மதி ஆசிரமத்தில் செவ்வாய்தோறும் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் வாசிப்பதற்கென கடிதங்கள் எழுதினார். குஜராத்தி எழுதப்பட்ட இவை சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், உணவுக் கட்டுப்பாடு, திருடாமை, உடைமையின்மை, அச்சமின்மை, தீண்டமை அகற்றல், உழைத்து உண்ணல், அடக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் அமைந்தன. இவை மங்கள் பிரபாத் (செவ்வாய் காலையில்) என குஜராத்தியிலும் காந்தியால் சரிபார்க்கப்பட்ட வால்ஜி கோவிந்த தேசாயின் ஆங்கில மொழி பெயர்ப்பு From Yeravda Mandir (எரவாடா ஆலயத்திலிருந்து…) என்ற பெயரிலும் வெளியானது. சிறையை ஆலயம் என்று மதிப்பிட்ட காந்தியின் சிந்தனைப்போக்கை இதன் வழியே உணரலாம்.

         உப்பு யாத்திரை தொடங்கிய அன்றே காந்தி குஜராத்தியில் மொழிபெயர்த்த பகவத் கீதைஅனாசக்தி யோகம்என்ற பெயரில் விளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது.  இந்நூல் புரிந்துகொள்ள சிரமமாக உள்ளது என ஆசிரமவாசி ஒருவர் கூறியதால், கீதையை எளிமையாக விளங்க வைக்க   1930 மே 21 முதல் 1931 ஜனவரி 26 முடிய எரவாடா (பூனா) சிறையிலிருந்த நாட்களில்  குஜராத்தியில் கடிதங்கள் எழுதி வந்தார். இந்தகீதை உரைகளை வால்ஜி கோவிந்த தேசாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கீதையின் 18 அத்தியாயங்களும் இங்கு 18 கடிதங்களாக சுருக்கி வரையப்பட்டன.

         காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்த நிலையில் 1930 நவம்பரில் முதல் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. பிரிட்டன் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு மாகாண சுயாட்சியிடன் கூடிய மத்திய அரசு என்ற முன்மொழிவை வெளியிட்டார். காங்கிரஸ் இம்மாநாட்டில் கலந்துகொள்ளாத நிலையில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிறைவுற்றது. சட்ட மறுப்பு இயக்கத்தின் தீவிரத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு, இதை முடிவுக்குக் கொண்டுவர சில சலுகைகளையாவது வழங்க முடிவு செய்தது. இணக்கமான பேச்சுவார்த்தைக்கு உதவியாக  1931 ஜனவரி 21இல் காந்தியையும் பிற தலைவர்களையும் விடுவிக்கும் உத்தரவை இர்வின் பிரபு வெளியிட்டார். பிப்ரவரி 17இல் காந்தி-இர்வின் பேச்சுவார்த்தை தொடங்கியது.

        பேச்சுவார்த்தையின்போது காந்தி முன்வைத்த 6 முதன்மையான கோரிக்கைகளில் வன்முறையில் ஈடுபடாத  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல், கைப்பற்றப்பட்ட நிலங்களை திரும்பத் தருதல், பதவி விலகிய அரசு ஊழியர்கள் தொடர்பாக மென்மையான போக்கைக் கடைப்பிடித்தல் போன்ற கோரிக்கைகளை ஏற்ற பிரிட்டிஷ் அரசு உப்பு தொடர்பாக சில சலுகைகளை அறிவித்தது. நாட்டின் நிதி நிலைமை காரணமாக உப்புச் சட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது எனினும் கடலோர மக்கள் தங்களது சொந்தப் பயன்பாடு மற்றும் உள்ளூர் விற்பனைக்காக மட்டும் உப்பு தயாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

       பேச்சுவார்த்தையின் இறுதியில் மார்ச் 5 இல் காந்திஇர்வின் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இர்வின் தேநீரும் காந்தி உப்பு கலந்த எலும்பிச்சைச் சாற்றையும் பருகி தங்களது நல்லெண்ணத்தைப் பகிர்ந்து கொண்டனர். உடனடியாக சட்டமறுப்பு இயக்கத்தை ரத்து செய்துவிட்டு இரண்டாம் வட்டமேசை மாநாட்டில், கலந்துகொள்ள காங்கிரஸ் உறுதியளித்தது. அதன்படி 1931 செப்டம்பர் 7இல் நடந்த இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்தி பங்கேற்றார். முஸ்லீம், கிறித்தவர், சீக்கியர் போன்ற சிறுபான்மையினருக்கு தனித்தொகுதி வழங்கும் முடிவை காந்தி மிகக்கடுமையாக எதிர்த்தார். இதனால் இம்மாநாடும் தோல்வியில் முடிவடைந்தது.

       லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி மீண்டும் சட்ட மறுப்பைக் கையில் எடுத்தார். ஆங்கிலேய அரசு ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி 1932 ஜனவரி 4இல் காந்தியைக் கைது செய்தது. நாடெங்கும் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ராணுவத்தைக் கொண்டு கடும் அடக்குமுறையில் ஈடுபட்டது. காந்தியும் காங்கிரசும் பங்கேற்கும் வாய்ப்பை மறுத்து, அனைவரையும் சிறைவைத்த நிலையில் மூன்றாம் வட்டமேசை மாநாடு 1932 நவம்பர் 17 இல் தொடங்கி டிசம்பர் 24 முடிய நடந்தது.

         இம்மாநாட்டில் ஆகஸ்ட் 16இல் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை பிரிட்டன் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு கொண்டு வந்தார். இதன்படி முஸ்லீம்கள், சீக்கியர்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்துகொண்ட அம்பேத்கர் அட்டவணை வகுப்பினருக்கு தனித்தொகுதி வேண்டும் என்கிற கோரிக்கையை அதற்குரிய ஆதாரங்களுடன் முன்வைத்திருந்தார்.  இந்தத் தனித்தொகுதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் அளிக்கும் என அண்ணல் அம்பேத்கர் உறுதியாக நம்பினார். இதனடிப்படையில் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இரட்டை வாக்குரிமை என்றழைக்கப்பட்ட இம்முறையில் தலித்கள் தங்கள் வேட்பாளருக்கு ஒரு வாக்கும் பொது வேட்பாளருக்கு மற்றொரு வாக்கும் பதிவு செய்யலாம்.

          இத்தகைய நடைமுறைகள் இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் என காந்தி நினைத்தார். இந்திய விடுதலையை இதைப் போன்ற செயல்பாடுகள் தாமதப்படுத்தும் என நம்பினார். எனவே இவற்றைக் கடுமையான எதிர்க்க வேண்டும் என நினைத்தார். 1932 செப்டம்பர் 20இல் பூனா எரவாடா சிறையிலிருந்த காந்தி, சத்தியாகிரக கடைசி ஆயுதமான சாகும்வரை உண்ணாவிரதத்தைக் கையில் எடுத்தார். காந்தி இறந்தாலும் பரவாயில்லை, கோரிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டாம், (Let Gandhi die, Don’t withdraw.) என்று தந்தை பெரியார் அம்பேத்கருக்கு  தந்தி அனுப்பினார். அதேசமயம் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவிற்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டினார்.

             இரட்டைமலை சீனிவாசன் (1860-1945) அம்பேத்கருடன் இரு வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொண்ட ஒடுக்கப்பட்டோருக்கான தலைவர். பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்து பறையன் எனும் மாத இதழையும் நடத்தியவர். வழக்கறிஞரான இவர் 1900 இல் தென்னாப்பிரிக்கா சென்று நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளராக பணி செய்து 1921இல் இந்தியா தமிழ்நாடு திரும்பினார். அம்பேத்கருடன் இரட்டை வாக்காளர் தொகுதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார் தென்னாப்பிரிக்காவில் இவர் காந்தியுடன் கொண்டிருந்த நட்பால் லண்டனில் அவரிடம் பேசிப் பார்த்தார். ஆனால் காந்தி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. காந்தியின் வறட்டுப் பிடிவாதம், சாகும்வரை உண்ணாவிரதம் என்ற நிலையில் இரக்கத்திற்குரியவராக மாறிய நிலையில்  பூனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, கையெழுத்திட வேண்டியதாயிற்று என தன்னுடைய சுயசரிதையில் (ஜீவிய சரித்திர சுருக்கம்) குறிப்பிடுகிறார்.

       அண்ணல் அம்பேத்கர் 1924 ஜூலை 20இல் பகிஷ்கரித் ஹிதகரிணி சபா (Bahishkrit Hitakarini Sabha - ஒடுக்கப்பட்டோருக்கு இதமளிக்கும் சங்கம்) தொடங்கி ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்.  நீதிக்கட்சியில் இருந்த எம்.சி.ராஜா (1883-1943) 1928இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் (All India Depressed People Federation) என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டவர். மதன்மோகன் மாளவியா, ராஜேந்திர பிரசாத் போன்றோர் அண்ணல் அம்பேத்கர், எம்.சி.ராஜா போன்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எரவாடா சிறையில் காந்தியைச் சந்தித்து உரையாடினார். இறுதியில் உடன்பாடு ஏற்பட்டு  பூனா ஓப்பந்தம் கையெழுத்தானது.

            காந்தி சார்பில் அவரது மூத்தமகன் தேவதாஸ் காந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தலித்கள் சார்பாக அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, காங்கிரஸ் சார்பில் ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், மதன்மோகன் மாளவியா, தேஜ்பகதூர் சாப்ரூ, ஜி.டி.பிர்லா, எம்.ஆர்.ஜெயகர் போன்றோர் கையொப்பமிட்டனர். காந்தி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோருக்கான நீண்ட நாள் கோரிக்கையான தனித்தொகுதிகளை கைவிட ஒப்புக் கொண்டார். ஒடுக்கப்பட்டோருக்கு கூட்டுத் தொகுதிகள் யோசனை முன்வைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டோருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக உயர்த்தியும் மத்திய சட்டப்பேரவையில் 18% இடங்களும் ஒதுக்கப்பட்டன. முன்னதாக இந்து மகாசபைத் தலைவர் பி.எஸ்.மூஞ்சே எம்.சி.ராஜாவுடன் 1932 மார்ச் 29இல் தனித்தொகுதியை கைவிடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் பின்னணிச் சதியும் நடந்தது.

        காந்தியின் உண்ணாவிரதம் எனும் பேராயுதம் தலித் மக்களின் உரிமைகளைப் பறித்தது அம்பேத்கர் போன்ற தலைவர்களிடம் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர் நிகழ்வாய் காந்தியிடம் சில மனமாற்றங்களும் உண்டானது. சாதியமைப்பு குறித்த சிந்தனையில் சிறிய மாற்றங்கள் தென்பட்டன.  இதன்பிறகு தீண்டாமை ஒழிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து வார்தா (சேவா கிராமம்) ஆசிரமத்திற்குக் குடிபெயர்ந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா மாவட்டத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சேவா கிராமம்  அமைந்துள்ளது.  

         1932 பிப்ரவரி 11 முதல் எரவாடா சிறையிலிருந்தபோதுதான் அரிசன்’ (Harijan) எனும் வார இதழை குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.  அரிசன சேவகன்’ (Harijan Bandhu) என்னும் இந்தி வார இதழையும் தொடங்கினார். 1932 செப்டம்பர் 30இல் அரிஜன சேவா சங்கம் (Harijan Sevak Sangh) என்ற அமைப்பு தொடங்கி அதன்மூலம் அட்டவணைச் சாதியினருக்கு கல்வி, மருத்துவ வசதிகள் கிடைக்கவும் மதுப்பழக்கத்தைக் கைவிடவும் பரப்புரை மேற்கொண்டார்.ந்த அமைப்புஅகில இந்திய தீண்டாமை எதிர்ப்பு கழகம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஆலய நுழைவுப் போராட்டங்களை முன்னெடுத்தார். 1933 ஜனவரி 8ஆம் நாள் கோயில் நுழைவு நாள் என அறிவிக்கப்பட்டது.

          தீண்டாமை இன்றைய இந்து மதத்திற்கு ஓர் இழுக்கு, என்று சொன்ன காந்தி, முரண்பாடாக இந்து மதத்தின் நால் வருணமுறையை ஏற்றார்.  இந்து மதத்தின் சில கூறுகளை ஒன்றிணைக்கும் பண்பாகப் பார்த்தார். வருணம் பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டாலும் சாதிமுறைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றார். தனது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே சொன்னபடி, வாய் மூடி, செவிகளை மட்டும் தீட்டிக் கொண்டு இந்தியாவைச் சுற்றிவந்து மக்களைப் புரிந்துகொண்ட காந்தியால் காங்கிரசுக்குள் இருந்த இந்து மத ஆதிக்க சக்திகளைப் புரிந்துகொள்ள இயலாமற்போனது விந்தையே. காந்தி கீதையை வேறு கோணத்தில் அணுகினாலும் அவ்வாறு அனைவரும் புரிந்துகொள்ளவில்லை. காந்தியின் பார்வையும் ஆதிக்க சக்திகளின் பார்வையும் வேறுவேறாக இருந்ததை அவரது படுகொலை உலகிற்கு எடுத்துக்காட்டியது. 

 (தொடரும்…)

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ், டிசம்பர் 2023