ஞாயிறு, ஜனவரி 29, 2017

61. இந்து மதத்தை அம்பலப்படுத்துவதும் மாற்றுகளைக் கண்டடைதலும்



61. இந்து மதத்தை அம்பலப்படுத்துவதும்  மாற்றுகளைக் கண்டடைதலும் 

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)

(பகத்சிங் மக்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் தொகுத்து, ஜனவரி  2017 –ல் வெளியிட்ட இரண்டு சிறுவெளியீடுகள் பற்றிய அறிமுகப்பதிவு.)



      மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் இதுவரையில் வெளியிட்டுள்ள துண்டறிக்கைகள், சிறு வெளியீடுகள் ஆகியவற்றைத் தொகுத்து வெளியிட்டால், அது மிகச் சிறந்த சமூக, அரசியல், மனித உரிமை ஆவணமாக அமையும்.

    இந்திய சமூகத்தைப் பீடித்துள்ள சாதிய நோய்க்கூறைத் தகர்க்க, இந்து மதக் கட்டுமானங்களைத் தகர்க்க வேண்டிய அவசியத்தை அம்பேத்கர் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார். எனவேதான் அவரது பல்வேறு பணிகளுக்கிடையில் இவற்றின் மீதும் உரிய கவனம் செலுத்தினார். 

   தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் மாமனிதர் அம்பேத்கரது எழுத்துகள் தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. தமிழில் 38 தொகுதிகள் வந்திருக்கின்றன. 128 முதல் 1138 பக்க அளவுள்ள இந்நூல்கள் ஒன்றின் விலை ரூ. 40 மட்டுமே. அம்பேத்கர் பவுண்டேஷன் வெளியிட்ட இந்த நூல்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் விற்பனையில் கிடைக்கின்றன. இத்தொகுப்பிலுள்ள சுமார் 10 நூல்களாவது வாசிப்பது மிகவும் அவசியம்.



   பொதுவாக வாசிப்பதில் இருக்கும் ஆர்வமின்மை, அதுவும் பெரிய புத்தகங்களை நிராகரிக்கும் தன்மை போன்றவற்றால் இந்த அரிய கருவூலங்களைத் தவறவிடுகிறோம். கல்கி போன்றோரது புனைவுகள் பலவற்றைத் திரும்பத் திரும்ப வாசிக்கும் வேலையை இந்தச் சமூகம் செய்து கொண்டுதான் உள்ளது. ஆனால் இவ்வாறான அறிவுலகச் செயல்பாடுகளில் தமிழ்ச் சமூகம் தேங்கியிருப்பதும் இன்றைய சமூக அவலங்களுக்கு ஒரு காரணியாகவும் அமைந்துவிடுகிறது.

   அம்பேத்கர் முதன் முதலில் தொடங்கிய இயக்கமான ‘பகிஷ்கரித் ஹிதகரணி சபா’ என்னும் விலக்கப்பட்டோர் சங்கத்தின் முழக்கமாக வெளியான ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்பதில் இன்னும் முதல்படியைத் தாண்டாத நிலையில்தான் இருக்கிறோம். கற்பித்தல்  சரிவர நடைபெறாத காரணத்தால்தான் இன்னும் இந்தச் சமூகம் சீரழிவிலிருந்து விடுபடவில்லை. 

    இதற்கு புத்தர், அம்பேத்கர், பெரியார், பகத்சிங் போன்ற சாதியொழிப்புப் போராளிகளை ஆழமாகக் கற்கவேண்டிய தேவையும் அவசியமும் இருக்கிறது. இவர்களது கருத்தியல் தேவை முன்னெப்போதையும் விட தற்போது இன்றியமையாத ஒன்றாக உள்ளதை சூழலைக் கூர்ந்து அவதானிப்பவர்கள் எளிதில் உணரமுடியும். சமணம், பவுத்தம், ஆசிவகம் போன்ற அவைதீக இயக்கங்களுக்குள் பார்ப்பனியம் சாதூர்யமாக உள்நுழைந்து, அவற்றைக் கைப்பற்றிச் சீரழித்தது போன்றே இன்றைய தலித், திராவிட மற்றும் இதர பிற்பட்டோர் இயக்கங்களுக்குள்ளும் நடந்துள்ளது. எனவே கற்பதை, கற்பிப்பதை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

     அவ்வகையில் புத்தரும் அவரது தம்மமும், சாதியொழிப்பு போன்ற நூல்களும், இந்து மதத்தை, பார்ப்பனீயப் புரட்டுகளை அம்பலப்படுத்திய சூத்திரர்கள் யார்?, இந்து மதத்தில் புதிர்கள், பணடைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் போன்ற நூல்கள் முதன்மையானவை. 

   எனவே இவற்றின் சாரப்பிழிவுகளை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் சிறு வெளியிடுகளாகக் கொணரும் முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது. அந்த வகையில்


  • புத்தத்தை ஆதிக்க ஒழிப்பு இயக்கமாக்குவோம்!
  • இந்து மதத்தின் அடையாளங்கள் 


என இரு குறு நூல்களை பகத்சிங் மக்கள் சங்கம் தற்போது வெளியிட்டுள்ளது. 

     பகுத்தறிவு சார்ந்த இந்திய சிந்தனை மரபைப் புறக்கணித்து, வேத மதப் பார்ப்பனீய சிந்தனைகளை இந்திய சிந்தனைகளாக மாற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோர் செய்த புரட்டுகள் எண்ணிலடங்காதவை. இவை அம்பேத்கர், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோசாம்பி ஆகியோரது ஆய்வுகளால் தகர்க்கப்படுகின்றன. 

   ‘புத்தத்தை ஆதிக்க ஒழிப்பு இயக்கமாக்குவோம்!’, என்னும் குறுநூலில் ‘புத்தரும் அவரது தம்மமும்’, என்ற அண்ணலின் நூலதன் சாரம் 40 பக்கங்களில் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. நால் வர்ணக் கோட்பாட்டில் புத்தருக்கு இருந்த வெறுப்பு, பிராமணர்களின் சதியால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட சூத்திரர்களின் நிலை, குறிப்பாக மனிதன் சுதந்திரமடைவதற்குள்ள ஒரே வழியான ஆயுதம் ஏந்தும் உரிமையை சூத்திரர்களுக்கு இல்லாதாக்கியது விளக்கப்படுகிறது. 

   புத்தரது போதனைகளில் சிறப்பானது மனத்தைப் பண்படுத்துவதே. உலகினின்று தப்பியோட முனைதல் தவறு, தவசிக்குக் கூட தப்பித்தல் சாத்தியமில்லாதது. எனவே தப்பித்தல் அவசியமற்றது. உலகை மாற்றுவதும் அதைச் சிறப்புற செய்வதுமே அவசியம் என்பதை உணர்ந்தவர் புத்தர் (பக். 14).


  • மனிதனைப் பகுத்தறிவுப் பாதைக்கு வழிநடத்துவது.
  • உண்மையைத் தேடிச்செல்ல அவனை சுதந்திரமாக்குவது.
  • மூட நம்பிக்கையின் மூலத்தை – அதாவது எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையைத் தகர்த்தெறிவது,


என்ற இயற்கை கடந்த தத்துவங்களைப் புறக்கணிக்கும் புத்தரின் மூன்று நோக்கங்கள் முதன்மையானவை (பக். 20).



   அறிவைப் பெறுதல் அனைவருக்கும் உரித்தாக்கப்பட இயலாது என்ர பிராமனீயக் கோட்பாட்டை மறுத்து கற்றலை அனைவருக்கும் உரித்தாக்க வேண்டும் என்றவர் புத்தர். இல்லறத்தார், துறவறத்தார் (பிக்குகள், பிக்குணிகள்) கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நியதிகள் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

  அறிஞர் பிரேம்நாத் பசாஸ் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை விடியல் பதிப்பகம் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ என்னும் நூலிலிருந்து சில கருத்துகள் முன்னுரையாக சேர்க்கப்பட்டுள்ளன. அம்பேத்கர், பகத்சிங், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, டி.டி.கோசாம்பி, பிரேம்நாத் பசாஸ் ஆகியோரது பல நூல்கள் இன்று தமிழில் கிடைக்கும் நிலையில் அவற்றை வாசிப்பதும் இவற்றை ஒரு இயக்கமாக்குவதும் இன்றையத் தேவையென உணர்த்துவதும் இதன் வெற்றியாகும். 


    ‘சூத்திரர்கள் யார்?’ என்னும் மிகச்சிறந்த ஆய்வு நூல் மூலம் பல புதிய உண்மைகளை உலகிற்கு எடுத்துக்காட்டிய அண்ணல் அம்பேத்கரை ஒரு தலித் தலைவராகச் சித்தரிப்பது இந்தியச் சூழலின் அவலமே. பார்ப்பனீய இந்து மதப்புரட்டுகளை அம்பலப்படுத்தும் அம்பேத்கரது நூல்களுள் ஒன்று ‘இந்து மதத்தின் புதிர்கள்’ என்னும் நூலாகும். இந்து மத வெறியர்கள் இன்று நவீன மின்னணு ஊடகங்களில் நச்சுப் பரப்புரைகளில் ஈடுபடும் நிலையில், இளைஞர்களிடம் இம்மாதிரியான ஆய்வு உண்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும். 

   ‘இந்து மதத்தின் அடையாளங்கள்’, என்னும் இரண்டாவது குறுநூல் (48 பக்கங்கள்) “மிகவும் ஒழுக்கங்கெட்ட அரசன் இராமன்” (வால்மீகி), “மிகமிகத் தரங்கெட்ட பிறவியே கிருஷ்ணன்” என்ற கருத்துகளை சுட்டிக்காட்டி, “இந்து மதமே பார்ப்பனியம், பார்ப்பனியமே இந்து மதம்”, என்னும் உண்மையை நிறுவுகிறது. 

    அம்பேத்கரது தமிழ்த் தொகுப்பு நூல் வரிசையில் எட்டாவதாக ‘இந்து மதத்தின் புதிர்கள்’ வெளியாகியுள்ளது. இந்நூலில் 24 புதிர்கள் மிக விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. இந்தப் புதிர்களில் சில இக்குறு நூலின் பின் உள் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரது நூலில் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்ட இரு கட்டுரைகளின் சுருக்கமே இக்குறுநூல். இவ்விரண்டு கட்டுரைகளும் இராமன், கிருஷ்ணன் ஆகிய இருவரது ஒழுக்ககேடுகளை வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட இந்து மதப் புராணங்களின் வழி நின்று நிறுவுகிறது. மூன்றாவதாக ‘சஞ்சாரம்’ முதல் இதழில் (மார்ச் 2008) வெளியாகி, ‘இராமர் பால அரசியல்’ என்னும் ‘சுழல்’ வெளியீட்டகத்தால் (திருத்துறைப்பூண்டி அமானுல்லா) சிறு வெளியீடாகவும் வந்த ‘இராமன் கடந்த தொலைவு’ என்னும் பேரா. அ.மார்க்சின் கட்டுரையின் ஒரு பகுதியும் உள்ளது. 

    எதையும் மேலோட்டமாக அணுகுவது அம்பேத்கரது பணியல்ல. மாறாக மிக ஆழமாக ஆய்வு செய்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் அன்றைய காலத்தில் அவருக்கு நிகரில்லை. பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்துதான் பவுத்தம், இந்து மதம் குறித்த நூல்களை எழுதினார் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

   இராமனை முன்னிறுத்தி அதன் காரணமாக இன்று மேலுக்கு வந்துள்ள இந்துத்துவ அரசியலையும் அவற்றின் பின்னணிகளையும் விளங்கிக்கொள்ள அம்பேத்கரது சிந்தனைகள் உதவுகின்றன. இராமர் அரசியலுக்கு மாற்றாக உத்திரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் முன்வைக்கப்படும் கிருஷ்ணர் அரசியலும் சீரழிவின் வடிவம்தான் என்பதைக் கண்டடைய இது போதுமானதாக இருக்கிறது. உடனடி எதிர்வினையாக இது உவப்பானதாக இருக்க முடியுமே தவிர தொலைநோக்கில் எவ்விதப் பலனும் ஏற்படப்போவதில்லை என்பதை இதுவரை நடைபெற்ற செயல்கள் நமக்கு உணர்த்துகின்றன. 

   இதற்கு மாற்று ஒன்று வேண்டுமல்லவா! அந்த வகையான மாற்றை அம்பேத்கரது வழியில் பவுத்தத்தை மதமாக அன்றி ஓர் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டிய தேவை வழக்கறிஞர் பொ.இரத்தினம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். புத்தரின் அறிவை, போர்க்குணத்தை அவரைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ள கற்பிதங்களிலிருந்து வெளியேற்றி புத்தரது உண்மை நோக்கத்தைச் சென்றடைய வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்கு நம் முன்னால் இருக்கும் சவால்களைக் களைவதும் திறந்த மனத்துடன் சிந்திப்பது முதல்படியாக இருக்க முடியும்.

     அறிவியல் உண்மைகளுக்கு மாறாக புராணக்குப்பைகளை ஆதாரமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இராமர் பால (ஆதம்) அரசியலை நாத்திகவாதியான பரமசிவ அய்யரின் நூல் புவியியல் ஆதாரங்களுடன் நிறுவதை நேர்மறையாக அணுகவும் இந்துத்துவப் புரட்டை எதிர்கொள்ளும் கருவியாகவும் நாம் பார்க்க முடியும். இந்த வகையில் பரமசிவ அய்யரின் ‘Ramayana and Lanka’ ஆங்கில நூல் குறித்த அறிமுகம் குறிப்பிடத்தக்கது. 

   பார்ப்பனிய இந்து மதம் புதுப்புது புனைவுகளையும் பொய்மைகளையும் இன்றும் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது. இதைப் படித்தவர்கள் உள்ளிட்ட பெருமளவு மக்கள் நம்பக்கூடிய நிலை இருக்கிறது. இதை உணர்ந்து கொள்ள அக்‌ஷய முகுல் எழுதி, அறவாணன் மொழிபெயர்த்து விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘இந்து இந்தியா – கீதா பிரஸ்: அச்சும் மதமும்’ (டச. 2016 வெளியீடு, விலை ரூ. 650) என்னும் நூல் வாசிக்க வேண்டிய ஒரு நூலாகும்.

  பெரியார், அம்பேத்கர் செய்த பணிகளை இன்றைய திராவிட மற்றும் தலித் இயக்கங்கள் செய்யத் தவறியவற்றை செய்யவேண்டிய மாபெரும் பணி நம்முன் நிற்கிறது. இது ஒன்றும் அவ்வளவு எளிமையான் பணி அல்ல. இவற்றின் பிரச்சினைப்பாடுகளை எதிர்கொள்வதும் அனுபவப் பாடங்களை உணர்தலும் ஆழ்ந்து வாசித்து நமக்கானக் கொள்கைத் திட்டங்களை வகுப்பது முக்கியமானதாகும்.

   அந்த வகையில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களும் பகத்சிங் மக்கள் சங்கமும் முன்னெடுக்கும் முயற்சிகளும் பரப்புரை முயற்சியாக மேற்கொள்ளப்படும் சிறு வெளியீடுகளும் பாராட்டிற்குரியன.



புத்தத்தை ஆதிக்க ஒழிப்பு இயக்கமாக்குவோம்!
நன்கொடை: ரூ. 40

இந்து மதத்தின் அடையாளங்கள்
“மிகவும் ஒழுக்கங்கெட்ட அரசன் இராமன்” (வால்மீகி),
“மிகமிகத் தரங்கெட்ட பிறவியே கிருஷ்ணன்”
நன்கொடை: ரூ. 20


வெளியீடு:
அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் &
பகத்சிங் மக்கள் சங்கம்

223,
கன்னங்குறிச்சி மெயின் சாலை,

அஸ்தம்பட்டி,

சேலம் – 636 007.

தொடர்புக்கு:
                                                                   94434 58118  

 

 
   

வெள்ளி, ஜனவரி 20, 2017

அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா



அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா,
பகத்சிங் மக்கள் சங்கம் அறிமுக விழா



நாள்: 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.


இடம்: டாக்டர் விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகக் கட்டிடம் (மாடிப்பகுதி)
செரி ரோடு, 

சேலம்.


(இது அமைப்பு விளக்கத் துண்டறிக்கை. பங்கற்பாளர்கள் பட்டியல் நிகழ்ச்சி நிரலுடன் பின்னர் வெளியாகும்.)



      இந்திய அரசியல் சட்டத்தை மீறிச்செயல்படுகிற அரசுகளும், நிர்வாகங்களும் கூடிக்கொண்டுள்ளன. எங்கு பார்த்தாலும் ஊழலும் பணமோசடிகளும் கொடிகட்டிப் பறக்கின்றன. மனித உரிமைப் பாதுகாப்பிற்கான சட்டங்கள், நீதிமன்றங்கள், ஆணையங்கள் அனுபவமுள்ளவர்களைக் கொண்டு செயல்பட்டாலும் நீதி கிடைக்காத சூழல் தலைவிரித்தாடுகிறது. இளைஞர்களிடம் சமூகச் சீரழுவுகளைக் கண்டும் அதற்கான காரணிகளை வேரறுக்க வேண்டும் என்ற அக்கறை பின்னோக்கித்தான் செல்கிறது. 


     இந்தச் சூழல் நல்லவர்களை விரக்திக்குத் தள்ளுகிறது. கொடியவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதாக அமைகிறது. ஆனாலும் அங்கும் இங்குமாக சில பணிகள் ஆக்கப்பூர்வமான வகையில் நடக்கவும் செய்கின்றன. 

 
     எனவேதான் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமைச் செயல்பாட்டாளர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், பேராசிரியர்கள் பகத்சிங் மக்கள் சங்கத்தை ஆதரிக்கின்றனர். 


   இச்சங்கம் மதுரையில் புத்தாண்டு தினமான ஜனவரி 01 -ல்  தொடக்கப்பட்டது. மாறுபட்ட தளங்களில் செயல்படும் போராளிகள் கூடி விவாதித்தனர். செயல்திட்டத்தை விரிவு செய்ய தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த நிகழ்ச்சியைப் பரவலாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 
    அதன் விளைவே 29.01.2017 –ல் சேலத்தில் நிகழ்ச்சி. அத்தோடு அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் என்ற அமைப்பையும் அன்று தொடக்கி வைக்க உள்ளோம். இந்த சங்கம் மற்ற மாவட்டங்களிலும் செயல்படவேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. 

 
    காவல்துறை போன்ற அதிகார வலுமிக்க அமைப்பு உட்பட அரசின் நிர்வாகம் அரசியல் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் தன்போக்கில் செயல்படும் அந்நிய அதிகார மையங்களாக இருக்கின்றன. அரசாங்கம் என்ற நிர்வாகம் இல்லாத சூழலைத்தான் நாள்தோறும் பார்க்க முடிகின்றது.

    சட்டங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பைக் கொடுக்கும் சட்டக் கல்லூரி நிலையங்கள் செலவுமிக்க வியாபார நிலையங்களாக உள்ளன. அடுத்த மாநிலங்களில் பெரும் செலவில் சட்டப்படிப்பு விறபனைக்குக் கிடைக்கும் நிலையில் உள்ளது. இங்கு மாலைநேர சட்டக் கல்லூரிகளை மூடிவிட்டு இந்தச் சட்டக்கல்விக் கொள்ளைக்கு வழியாக்கி விட்டனர்.

     எனவே மக்களிடம் சட்ட விழிப்புணர்வை வளர்க்கவும், செயல்படவும் அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் என்ற அமைப்பைத் துவங்குகிறோம். இதனைச் சாதிக்கும்படியான செயல்திட்டங்களை உருவாக்கவேண்டும். இன்றைய சீரழிந்த அரசியல் மற்றும் சமூகச் சூழலில் இந்தப் பணி மிகமிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் நிறைய உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து எல்லாப் பகுதிகளிலும் செயல்பட வழிவகை செய்யவேண்டும். இதுவே நமக்குக் கிடைக்கின்ற அனுபவப் பாடங்களாகும். 


    நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி ஆகியோர் இந்தியத் தலைமை நீதிபதிகளாகச் செயல்பட்ட காலத்தில் சட்ட உதவி இயக்கத்தை அடையாளப்படுத்தினார்கள். அதனை வலுமிக்கதாக வளர்த்தெடுக்க பலவகை முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் சந்தர்ப்பவாதிகள் அந்த இயக்கம் வலுப்பெறாமல் முடக்குவதி வெற்றி பெற்றனர். 


    ஆகவே இதனை மக்கள் சார்ந்த இயக்கமாக பரவலாக்க வேண்டும் என்ற அக்கறையோடுதான் செயல்படுகிறோம். நீதித்துறையின் ஒரு பகுதியினரது பிற்போக்கான போக்குகள் சட்ட ஆட்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன. படிநிலைச் சாதி நிறுவனம் மிகச் சீரழிந்த கொடுமைகள் செய்தாலும் நீதி நிறுவனங்கள் வேடிக்கைப் பார்க்கும் கசப்பான அனுபவங்கள் பலரை திகைக்க வைக்கின்றன, நம்பிக்கைகளைச் சீரழிக்கின்றன. ஆனாலும் இன்றைய சமூகத் தேவை இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஊக்கப்படுத்துகின்றது. 

  
    எனவேதான் மாமனிதர் அம்பேத்கரின் ஊக்கத்துடன், உற்சாகத்தையும் கொடுக்கும் வழிகாட்டலை உள்வாங்கவேண்டும். ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்பதும் “நம்மிடம் நேர்மை இருக்கின்றது. நம்மிடம் முழுமைபெற்ற நியாயம் இருக்கின்றது. நமது மாண்பினை மீட்டெடுக்க நாம் ஏன் தயங்கவேண்டும்?”, என ஒடுக்கப்பட்ட மக்களின் படைத்தளபதியாக வாழ்ந்து காட்டினார்.



எனவே நாமும் சமூக இயக்கம் நடத்துவோம்!

சமூக நீதி மறுக்கும் தளங்களை நொறுக்குவோம்!

அரசியல் சட்ட நோக்கங்களுக்காக செயல்படுத்துவோம்!

அரசியல் சீரழிவுகளை கலையெடுப்போம்!

ஆதிக்கமற்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்குவோம்!


தவறாமல் வாங்க!

நண்பர்களோடு வாங்க!!

நேரத்துக்கு வாங்க!!!

அமைப்புக்குழு

பொ. இரத்தினம், வழக்கறிஞர், 94434 58118

. மாணிக்கம், சமூகபோராளி, 98427 71751

மு. ஜாகீர் அஹமத், வழக்கறிஞர், 99439 99001

. யுவராஜ், வழக்கறிஞர், 94826 65265

பெங்களூர் ஆரோக்கியராஜ், சித்த மருத்துவர், 94816 49708



அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் &
பகத்சிங் மக்கள் சங்கம்

223, கன்னங்குறிச்சி மெயின் சாலை,

அஸ்தம்பட்டி,

சேலம் – 636 007.