திங்கள், ஜூன் 27, 2022

அரசுப் பள்ளிகளில் தனிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை!

அரசுப் பள்ளிகளில் தனிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை!

 

மு.சிவகுருநாதன்

 

      கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய ஆசிரியரும் தலைமையாசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவரும் மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். இம்மாதிரியான நிகழ்வுகள் ஏன் பள்ளிகளில், வகுப்பறைகளில் நடைபெறுகின்றன? இத்தகைய செயல்களைச் செய்கின்ற ஆசிரியர்களது மனநிலை என்னவாக இருக்கிறது என்பது விரிவான ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்று.

 

      பள்ளிகள் அனைவருக்கும் பொதுவான இடம். அரசு சாராத, தனிப்பட்ட, சாதி, மத விவகாரங்களுக்கும் அவை சார்ந்த நிகழ்வுகளுக்கும் பள்ளிகளில் இடம்தர இயலாது. ஆயுதபூசை, சரஸ்வதி பூசை போன்ற மதப் பண்டிகைகள் பள்ளிகளில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்ததால் அவை கூடாது என அரசாணைகளும் சுற்றறிக்கைகளும்  வெளியிட்ட நிகழ்வுகளும் உண்டு. 

 

       அரசுப்பள்ளிகளில் அரசு மதிய உணவு வழங்குகிறது. ஆசிரியர்கள் தங்களது சொந்தச் செலவிலோ, நன்கொடைகள் மூலமோ மாணவர்களுக்கு உணவு அளிக்க வேண்டிய தேவை என்ன?  வேண்டுமானால் நூல்கள், எழுதுபொருள்கள் என பரிசளிக்கலாம்.  உணவு விருந்து அளிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? கோயில்களில் நடக்கும் அன்னதானங்களைப்போல பள்ளியை மாற்றலாமா? இதில் ஆசிரியர் புரவலர் மற்றும் வள்ளலாக மேனிலையாக்கம் பெறுகிறார். இங்கு கொடுப்பவர், பெறுபவர் என்ற உணர்வுடன் ஆதிக்கமும், அதிகாரமும் நிலைநாட்டப்படுகிறது. இவற்றைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் அவலமும் நடக்கிறது.

 

      இதுபோன்ற நிகழ்வுகளை அவர்கள் விடுமுறை நாள்களிலோ, பள்ளி நேரத்திற்குப் பின்பு பள்ளி வளாகம் தவிர்த்த தனியார் வாடகை இடங்கள், கூட்ட அரங்குகளில் யாரை வேண்டுமானாலும் அழைத்து நடத்தத் தடையேதும் இல்லை. பள்ளியில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆசிரியர்களின்  மனப்பான்மை  மிக மோசமானதாகும். குழந்தைகளுக்கும் இவ்வாறு செய்கிறோம் என்று சொன்னாலும் அது கண்டிக்கத்தக்கது. வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தால் அங்கு கற்றல்-கற்பித்தல் எப்போது நிகழும்? பொதுத்தேர்வு நேரங்களில் மாணவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபடும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. வீட்டில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஆசிரியர்கள் செய்யத் தொடங்கினால் ஆசிரியர்களின் பணியை யார் செய்வது என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

 

     மதச்சார்பற்ற நாட்டில் மதச்சார்பற்ற பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றே சொல்லவேண்டும். கல்வித்துறை என்றில்லாமல் அனைத்துத் துறைகளும் மதம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்டே இயங்குகின்றன. அடிக்கல் நாட்டுதல்,  பூமி பூசை, புதிய கட்டிடம் திறப்பு, யாகங்கள் செய்தல், அணைத்திறப்பு என அனைத்தும் மதச்சடங்காக நடத்தி முடிக்கப்படுகின்றன. மழைவேண்டி யாகம் நடத்த உத்திரவிட்ட துறையும் தமிழகத்தில் இருக்கிறது. 

 

       தனிப்பட்ட நிகழ்வுகளும் மதம் சார்ந்தவைதான். பொது நிகழ்வுகளை மதம் சாராத வகையில் அனைவருக்கும் பொதுவானதாக நடத்தும் செயல்திட்டங்கள எங்கும் இல்லை. இதற்கான தெளிவான வரைமுறைகள்  வகுக்கப்பட வேண்டும். 

 

     பள்ளிகளில் அரசின் ‘கல்வி வளர்ச்சி நாள்’ போன்ற விழாக்கள் மட்டுமே கொண்டாடப்பட வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் மதிய, மாலை விருந்துகளும் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும். பள்ளிகள் என்பவை பிற அலுவலகங்கள் போலில்லை. இங்கு குழந்தைகள் கல்வி பயில்கிறார்கள். எனவே, அவர்கள் பார்வையில் ஆசிரியர்கள் விருந்துண்ணும் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் குழந்தைகளை அதற்கு ஏவலாளாகப் பயன்படுத்துவதும் வன்மையான கண்டனத்திற்குரியவை. பிற விழாக்களும் தனிப்பட்ட விருந்துகளும் தடை செய்யப்பட வேண்டும். பள்ளி வளாகத்தை இதரப் பணிகளுக்கு தனியார் மற்றும் பிற அமைப்புகள் பயன்படுத்துவதை முற்றாகத் தடுக்க வேண்டும்.

   

           கல்விப்பணியில் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த இவ்வாறு விருதுகள் வழங்குகிறோம் என்ற கருத்தும் ஏற்புடையதல்ல. உண்மையில்  ஊக்கப்படுத்தப்பட வேண்டியது மாணவர்களான குழந்தைகள் மட்டுமே. ஊதியம் பெறும் ஆசிரியர்களைவிட பல்வேறு கடினச் சூழல்களில் கல்விபெறும் அடித்தட்டுக் குழந்தைகளுக்கு உணவு விருந்துகளைவிட பரிசுகள், பாராட்டுகள் அவர்களது கல்வியை மேம்படுத்தும். தூய்மைப் பணியாளர், செவிலியர், அஞ்சல்காரர், இரவுக்காவலர் என பல்வேறு வகையான சமூகச் சேவகர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. கொரோனாவிற்கு முன்பு தூய்மைப் பணியாளர்கள் எவ்வாறு பலரால் கண்டுகொள்ளப்பட்டனர்? அதன்பிறகும் வெறும் பாதபூசை செய்வதும் மாலைபோடுவதும் என்றாகிப் போன நிலையையும்  நாம் கண்டு வருகிறோம்.  

 

       தங்களது முகத்தை வெளிக்காட்டாமல் பல ஆசிரியர்கள் திறம்பட பணியாற்றி வருகின்றனர். மறுபுறத்தில் விருதுகள், புகழ், ஊடக வெளிச்சம் படவேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுப் பணியாற்றும் பலர் ஊடுருவி இருக்கின்றார்கள். இவர்கள் கல்வியில் களைகளைப் போன்றவர்கள். ஒன்றிய - மாநில நல்லாசிரியர் விருதுகள், ரோட்டரி - லயன்ஸ் கிளப் விருதுகள், அச்சு - காட்சியூடக விருதுகள் மற்றும் இதர அமைப்புகளில் அளிக்கும் விருதுகளுக்கான செயல்படும் பல்வேறு விளம்பரப் பிரியர்கள் நிரம்பியதாக இன்றைய கல்வித்துறை இருக்கிறது. இது கல்விக்கு  வளம் சேர்க்காது; மாறாக கல்வியை கேலிக்கூத்தாக்கும்.

 

      இவர்கள் எதையும் விருதுகளுக்கும் சுய விளம்பரத்திற்கான கச்சாப்பொருளாக மற்றும் நுட்பம் கைவரப்பெற்றவர்கள். வலதுகரம் கொடுப்பதை இடதுகரம் அறியாது என்பது பழங்கதை! இவர்கள் எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளத் தயங்காதவர்கள். அந்த விளம்பர போதை ஒருபுறமும் விருதுக்கான பின்னணி வேலைகளிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இது கல்விச்சூழலுக்கு ஏற்புடையதல்ல.

 

 

       கல்வியை 'அவுட் சோர்சிங்காக' மாற்ற விரும்பும் அரசுகள் இவற்றை மறைமுகமாக ஆதரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு கட்டடம் கட்டி சில ஆண்டுகளில் பழுதடைகிறது. இதற்குக் காரணம் தரமற்ற கட்டுமானம், ஊழல்.  இதுகுறித்து யாரும் புகார் செய்வதில்லை. அங்குப் பணியாற்றும் சில ஆசிரியர்கள் நன்கொடைகள் அல்லது சொந்தப் பணத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு விளம்பர வெளிச்சம் கிடைக்கிறது. கூடவே ஊழலும் மூடி மறுக்கப்படுகிறது. 

 

       நல்லாசிரியர் விருதுகளுக்குப் பின்னாலுள்ள திரைமறைவு பேரங்கள், ஊழல்கள் மற்றும் அரசியல் யாவரும் அறிந்த ஒன்று. இவ்விருதுகளை விண்ணப்பித்துப் பெறும் முறையே வழக்கில் உள்ளது. இதுவும் மிகவும் மோசமான நிலையாகும்.  எனவே அரசுகள் இவற்றை நிறுத்திவிடுவது சாலச்சிறந்ததாகும். தனியார் அமைப்புகள் சார்ந்த விருதுகளையும் பெறுவதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தடைவிதிக்க வேண்டும். அவர்கள் வேண்டுமானல் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கட்டும். அவர்கள்தான் மிகக்குறைவான ஊதியத்தில் பணிபுரிகிறார்கள். ஆகவே, விருதுகளாவது அவர்களை எட்டட்டுமே!

 

     அரசுப்பள்ளிக் குழந்தைகளை ஏதிலிகளாக நடத்துவதை  அரசும் ஆசிரியர்களும் கைவிட வேண்டும். கல்வி சார்ந்த உதவிகளை பெருமளவு அரசு செய்கிறது. பிற உதவிகளை ஆசிரியர்கள் செய்ய நினைத்தால் விளம்பரம், ஒளிப்படங்கள் இன்றி செய்யலாம். ஆனால் பெரும்பாலும் விழாக்கள், விருந்துகள், இணைய ஊடகங்களில் குழந்தைகளின் படங்கள், காணொளிகளை வெளியிட்டு இவர்களது வள்ளல்தன்மையை நிருபிக்கும் நிலை கொடூரமானதாகும்.

 

              பொதுத்தேர்வுகள் குழந்தைகளை மனதை வெகுவாகப் பாதிக்கின்றன. இதனால் தேர்வு முடிவுகள் வரும்போது தற்கொலைகள் நடக்கின்றன. இக்குழந்தைகளுக்குள்ள குடும்ப, சமூக, பள்ளி நெருக்கடிகளுக்கு இணையாக காட்சி மற்றும் அச்சு ஊடகங்கங்களும் ஆலோசனை என்று தம் பங்கிற்கு கிளம்பிவிடுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் நடைபெற வேண்டிய நிகழ்வுகள் குறித்த வரையறைகளும் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு அவற்றைப் பின்பற்றக்கூடிய சூழலும் உருவாக வேண்டும்.

ஞாயிறு, ஜூன் 26, 2022

தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா?

 தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா?

 

மு.சிவகுருநாதன்

 

         தமிழகத்தில் நிலவிவந்த மாநில வாரியக் கல்விமுறை, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல், நர்சரிப்பள்ளிக் கல்வி என 5 வகையான கல்விமுறைகளுக்கு மாற்றாக சமச்சீர் கல்வி  தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட பேரா.ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு (2006) அளித்த பரிந்துரையில் சில மட்டுமே ஏற்புக்கு வந்தன.

 

        தாய்மொழி வழிக்கல்வி, மழலையர் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல், பாடச்சுமை நீக்கம், மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம், தேர்வு முறை போன்றவற்றை ஆசிரியர்கள் - பெற்றோர்கள் இணைந்து முடிவு செய்தல், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் குவிந்திருக்கும் அதிகாரங்களைப் பரவலாக்குதல் போன்ற பல்வேறு பரிந்துரைகளை அக்குழு செய்திருந்தது.

 

       உலக நடைமுறைப்படியும், தேசிய அளவில் அமைக்கப்பட்ட கல்விக் குழுக்களின் பரிந்துரைப்படியும் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முழுமையும் தமிழ் வழியாக அளிக்கப்பட வேண்டும்.  மேலும் தாய்மொழி வழிக் கற்பதுதான் சாலச்சிறந்து என்பதை பொதுமக்களும் பெற்றோரும் உணரச் செய்து தாய்மொழி/தமிழ் மொழிவழிக் கற்பதை ஊக்குவித்து ராமமூர்த்தி குழுப் பரிந்துரைகளைப் படிப்படியாகச் செயல்படுத்த அரசு முயலவேண்டும், என்ற பரிந்துரைகளும்  இருந்தன. ஆனால் இவை கண்டுகொள்ளப்படவில்லை.

 

       ராமமூர்த்தி குழு (1990) என்ன சொல்கிறது? தேசியக் கல்விக் கொள்கை 1986 ஐ மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இக்குழு பொதுப்பள்ளி, அருகாமைப்பள்ளி, மழலையர் கல்வி, கல்வி உரிமை, பெண்கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி போன்றவற்றை வலியுறுத்துகிறது. சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துதாக சொல்லும் தமிழக அரசு அவற்றை முழுவடிவில் செயல்படுத்த விரும்பவில்லை.

 

           தொடக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் இல்லாத நிலையில் மழலையர் வகுப்புகள் தொடங்கி பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து மிகக்குறைவான ஊதியத்தில் ஒருவரை பணியமர்த்தியது.  அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்த நிலையில் அதை அதிகப்படுத்தும் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது. அரசுக்கு இதில் உண்மையான அக்கறை இல்லை என்பதை அவர்களின் தொடர் நடவடிக்கைகள் உணர்த்தின. மழலையர் வகுப்பிற்கு உரிய பயிற்சி பெற்ற போதிய ஆசிரியர்களும் உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலையிலும் தொடக்கப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஓராசிரியர் இல்லாத நிலையில் பணிநிரவல் என்கிற பெயரில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பியது. அங்கன்வாடிகளையும் முறையாக நிர்வகிக்காமல் மழலையர் வகுப்புகளையும் பெயருக்குத் தொடங்கி குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடும் அவலம் தொடர்ந்தது.

 

         தற்போது அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் (LKG & UKG) மூடப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டு அடுத்த நாளே  திரும்பப்பெற்றுள்ளது. இதுவே கல்வித்துறையின் வழக்கமான நடைமுறையாக உள்ளது. மழலையர் வகுப்பு தொடங்கப்பட்ட பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளை நடத்த போதுமான மாணவர்கள், ஆசிரியர்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே தமிழ்வழி மூடுவிழா கண்டுள்ளது. தமிழைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் பலரும் இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

 

                 ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையிலுள்ள சாத்தியமான இடங்களில் குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு முடிய அல்லது வாய்ப்பு இருந்தால் 8 ஆம் வகுப்பு அதற்கு மேலும் தாய்மொழி/உள்ளூர் மொழியில் கல்வி என்பதனூடாக மும்மொழிக் கொள்கை, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் மறைமுகச் செயல்திட்டங்கள் உள்ளன. இவை உண்மையாக பிராந்திய மொழிகள் குறித்த அக்கறையால் வந்ததல்ல.

 

       மேனிலை (+1, +2) வகுப்புகளில் செயல்பட்ட தொழிற்கல்விப் பிரிவுகளை ஆசிரியர்களை நியமிக்காமல், அவற்றைப் படிப்படியாக மூடிவிட்டு 9, 10 வகுப்புகளில் தொழிற்கல்வியைத் தொடங்குகின்றனர். இது ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையையும் குலக்கல்வித் திட்டத்தையும் பிரதிபளிக்கிறது. தற்போது 9 ஆம் வகுப்பிற்கு இல்லை; 10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வி உண்டு என்கின்றனர்.

 

                  பொதுவாக எந்த முடிவும் மேலிருந்து எடுக்கப்படும் அதிகார, ஆதிக்க, 'குளிர்பதன அறைகளின் முடிவாக' உள்ளன. முடிவெடுக்கும் முன்னர் தொடர்புடைய எவரையும் கலந்தாலோசிப்பதில்லை. அதிகாரத்துவப் பாசிச நோக்கோடு முடிவுகள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இவ்வளவும் மக்களாட்சி என்று பெயரில் நடப்பது மிகக் கொடுமை.

 

        மழலையர் வகுப்பிற்குரிய அடிப்படை வசதிகளையும் முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களையும் நியமிக்காமல் வெறும் வகுப்புகளை மட்டும் தொடங்குவது எப்படிச் சரியாக இருக்க முடியும்?         பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற சுயநல நோக்கோடு மட்டுமே இத்திட்டம் செயல்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. ஆங்கில வழியும் தரமின்றி இயங்கி வருகிறது. அடித்தட்டு, கிராமப்புறக் குழந்தைகளின் கல்வியுடன் இவ்வாறு விளையாடக்கூடாது. இதன் மூலம் தாய்மொழிக் கல்வியை முற்றாக அகற்றும் வேலையை அரசு செய்துவருகிறது.  எல்லா அரசுகளுக்கும் இவ்வாறான மறைமுகச் செயல்திட்டங்கள் இருக்கின்றன. இவை பொதுக்கல்வியையும் சமூகத்தையும் பாழடிக்கின்றன.

 

          எங்கோ ஓரிடத்தில் விதிவிலக்காக சில பள்ளிகள் நன்றாக இயங்கலாம். பொதுவாக மொத்தத்தில் இப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஏதேனும் ஆய்வுகள் நடத்திருக்கின்றவா என்றால் அதுவும் இல்லை.

 

      தொடக்கப்பள்ளிகளில் ஈராசிரியர்கள்; நடுநிலைப்பள்ளிகளில் நான்கு அல்லது ஐந்தாசிரியர்கள் என்கிற நிலைதான் உள்ளது. இதனால் தமிழில் எழுதப்படிக்கவும் அடிப்படைத் திறன்கள் இல்லாமலும் 6 மற்றும் 9 வகுப்புகளை மாணவர்கள் எட்டும் நிலை இருக்கிறது. அதனால்தான் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு கரோனா மட்டும் காரணமல்ல; அதற்கு முன்பிலிருந்தே இதே நிலைதான். விழுக்காடு அளவில் சிறு மாற்றம் இருக்கலாம். நடுநிலைப்பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓராசிரியர் இல்லை. ஒரு பட்டதாரி ஆசிரியர்களுடன் செயல்படும் பள்ளிகள் ஏராளம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் பலருக்கு மாற்றுப்பணி வழங்கி இயங்கும் பள்ளிகளையும் முடக்கியுள்ளனர்.

 

        குறிப்பாக சமவெளிப்பகுதிகளில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் அருகருகே பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் தற்போது குழந்தைகள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும் சில இடங்களில் வெகுவாகவும் குறைந்துபோனது. இப்பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைத்து அக்குழந்தைகளைக் காப்பாற்றலாம். அருகில் உயர்நிலை/மேனிலைப் பள்ளிகள் இருந்தும் இத்திட்டத்தின் கீழ் அதிகளவில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரமுயர்த்தி 6-8 வகுப்பு மாணவர்களை கல்வியைவிட்டு அகற்றும் வேலையை அரசுகள் செய்துள்ளன.

 

        6-8 வகுப்புகள் தொடக்கக்கல்வித் துறைக்குத் தேவையற்ற சுமை. போதுமான ஆசிரியர்கள் செயலூக்கமான நடவடிக்கைகளுஇம் இல்லையென்றால் ‘எண்ணும் எழுத்தும்’ உள்ளிட்ட எந்தத் திட்டமும் வெற்றி பெறாது. இப்பள்ளிகளை மாணவர் எண்ணிக்கை இருப்பின் உயர்நிலைப்பள்ளியாக தரமுயர்த்தலாம், எண்ணிக்கை குறைவாக இருப்பின் அருகிலுள்ள உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கலாம். தொடக்கக் கல்வியுடன் தாய்மொழிக் கல்வியும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

 

        தொலைவு அதிகமிருக்கின்ற சமவெளி அல்லாத மலைப்பகுதிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாது வகுப்பிற்கு ஓராசிரியர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் இந்திய அளவில் கல்வியில் இரண்டாமிடம் என்பது விரைவில் கானல் நீராக மாறும்.     

சனி, ஜூன் 25, 2022

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் வெறும் இரு துருவ மோதலா?

 

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள் வெறும் இரு துருவ மோதலா?

 

மு.சிவகுருநாதன்

 

          பள்ளி மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள், ஒழுங்கீனங்களை ஆசிரியர்-மாணவர் இரு துருவ மோதலாகச் சித்தரிக்கும் போக்குக் காணப்படுகிறது. இது மிகவும் தவறான முன்முடிவாகும். அரசு, பள்ளிக் கல்வித்துறை, சமூகம், பெற்றோர், சூழல் என அனைவரும் பொறுப்பெற்க வேண்டிய ஒன்று. இதை வழக்கம்போல தமிழ் சினிமா பாணியில் இரு துருவப் பிரச்சினையாகக் கட்டமைப்பதும் அணுகுவதும் பிரச்சினைகளின் வேர்களைத்தேடி அவற்றைக் களைய முற்படுவதை விடுத்து திசை திருப்பும் உத்தியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

         இது அரசுப்பள்ளிகளில் மட்டும் நடப்பதாகவோ தனியார் பள்ளிகளின் சூழ்ச்சி என்றெல்லாம் காரணங்களைத் தேடுவது உண்மைகளை ஒளிக்கும் முயற்சியாகும். அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளி அனைத்திலும் பரவலாக இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் இவை அடக்கி ஒடுக்கப்படுகின்றன. இப்பள்ளிகளிலிருந்து 9, 10 ஆம் வகுப்புகளில் எவ்வளவு பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்கிற புள்ளிவிவரங்கள் இவற்றைச் சுட்டும்.

          குழந்தைகளும் பள்ளிகளும் சமூகத்தைப் பிரதிபளிக்கும் கண்ணாடிகள் என்றால் மிகையில்லை. அவர்கள் சமூகநிலையை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்கள். கொரோனாவிடம் பழியைச் சுமத்திவிட்டு வெறுமனே இருப்பதும் தப்பித்துக்கொள்வதும் சரியாகாது. கொரோனாவிற்கு முன்பும் இத்தகைய நிகழ்வுகள் நடந்தது. இணைய ஊடகப் பெருக்கம், திறன்பேசிகள் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால் இதன் வீச்சு அதிகமாக உள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் இதுதான் நிலை என்று சொல்ல இயலாது. ஆங்காங்கே தென்படும் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க உரிய முயற்சி செய்யாவிட்டால் எதிர்கால கல்விச் சூழல் இருண்டுபோகும்.

        மது மற்றும் பிற போதைப் பழக்கங்கள், சமூகத்தில் கூர்மையடையும் சாதியுணர்வு, காட்சியூடக வன்முறைகள், பாலியல் பிறழ்வுகள், பெண்கள் குறித்தான சமூகப்பார்வை, ஆண் குழந்தைகள் வளர்ப்பு முறை, குழந்தைத் தொழிலாளராகும் மாணவர்கள், அதன்மூலம் கிடைக்கும் பணப்புழக்கம், ‘இல்லம் தேடிக் கல்வி’ போன்ற திட்டங்களால் பள்ளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அரசு மற்றும் கல்வித்துறையின் செயல்பாடுகள், தேர்வு மையக்கல்வி,  தனிப்பயிற்சிக் கொள்ளைகள் என காரணங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.  

      தமிழக அரசே டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்கிறது. சில பத்தாண்டுகளாக மதுக்கடைகளின் எண்ணிக்கைப் பெருகியுள்ளது. இன்று குக்கிராமங்களிலும் மதுக்கடைகள் உண்டு. தமிழகத்துப் பெருமைகள் பட்டியலில் மது நுகர்வு அதிகரிப்பு, சாலை விபத்துகளில் முதலிடம், கஞ்சா புழக்கம் போன்ற சிறுமைகளையும் நாம் எளிதில் கடந்துவிட இயலாது. சீருடையணிந்த பள்ளி மாணவர் அரசின் டாஸ்மாக்கில் மதுவாங்க நடைமுறையில் எவ்விதத் தடையுமில்லை. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனைச் செய்யக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இதுவும் அவர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கிறது. அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற கஞ்சா 2.0 வேட்டை போதைப்பொருள் வலைப்பின்னலை எடுத்துக்காட்டியது. சரக்குகள் பிடிபட்டதே தவிர இந்த வலைப்பின்னலின் கண்ணிகள் அறுபடவில்லை. இதனால் அந்தக் கும்பல்களுக்கு சிறு இழப்பு, அவ்வளவுதான்.

      ஆண்டுதோறும் குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருள்கள் தடை செய்யப்படுகின்றன. ஆனால் இவை எப்போதும் எங்கும் கிடைக்கின்றன. தமிழகத்தில் தனியார் மதுவிற்பனை செய்தபோது கள்ளச் சாராயம் மிக அதிகளவில் புழக்கத்தில் இருந்தது. அரசே மது விற்பனை செய்யத் தொடங்கியபிறகு கள்ளச் சாராயம் பெருமளவு ஒழிக்கப்பட்டுவிட்டது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது அரசின் கைகளில் உள்ளது. அதில் அவர்களுக்கு விருப்பார்வமும் செயலுறுதியும் வேண்டும். இன்றைய தலைமுறையை மட்டுமல்லாது வருங்காலத் தமிழகத்தை முடக்கிப்போடும் இந்த முயற்சிகளைத் தடுக்க ஏன் தயக்கம் என்றும் தெரியவில்லை. தமிழகத்தை வீழ்த்தும் இச்சூழ்ச்சியின் பின்னணியில் யாரிருக்கிறார்கள் என்பதை அறிவதும் அவசியம். பலமடங்கு வருவாய் தரும் கனிமங்கள், மணலைவிட ஒப்பீட்டளவில் குறைவான வருவாய் தரும் டாஸ்மாக்கை நம்பி எதிர்காலத் தமிழகத்தை அழிவில் தள்ளுவது நியாயமானதுதானா!

        பொதுப்பள்ளிகளான அரசுப்பள்ளிகள் பெரும்பாலும் பொதுச்சமூகத்தின் புறக்கணிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. மிகவும் வறிய நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்களின்  குழந்தைகளே அரசுப்பள்ளிகளுக்கு வருகின்றன. இவர்களது வாழ்விடச் சூழலில் மது, போதைப் பொருள்கள், பாலியல் நெறிபிறழ்வுகள் இயல்பாக நடக்கின்றன. மாணவர்கள் விடுமுறை மாற்றும் வாய்ப்புள்ள நாள்களில் விருந்துகளுக்கு உணவு பரிமாறுதல், புட்டிக் குடிநீர் விநியோகம், கட்டிட வேலைகள் போன்ற  பல்வேறு பணிகளுக்குச் செல்கின்றனர். இதன்மூலம் இந்தத் குழந்தைத் தொழிலாளர்களுக்கு சொற்ப வருமானம் கிடைக்கிறது. இப்பணம் அவர்களது உடை உள்ளிட்ட சொந்தத் தேவைகளுக்கோ, குடும்பத் தேவைகளுக்கோ பயன்படாமல் மது, போதைப் பொருள்களைப் பயன்படுத்தத் தூண்டுகிறது. மிக எளிதாகக் கிடைக்கும் இப்பொருள்கள் அவர்களை எளிதில் ஆக்ரமிக்கின்றன. மிக வறிய நிலையில் இருக்கும் அவர்களுக்குக் கிடைக்கும் சிறிய அளவிலான பணம் சீர்கேட்டிற்கு அடிப்படையாக அமைவது மிகக்கொடுமை.

        ஆசிரியர்களிலும் சாதிய உணர்வுகள் மற்றும் குடிநோய்க்கு அடிமையானவர்கள் உண்டு. இவர்களை தலைமையாசிரியர் கவுன்சிலிங் செய்து சரி செய்துவிட முடியுமா? போதைப் பழக்க அடிமைகளை ஆசிரியர்களால் ஒன்றும் செய்ய இயலாது. பொதுவாக போதை அடிமைகளை மருத்துவர்கள் கூட கையாள்வது சிரமமாக உள்ளது. ஆசிரியர்களுக்கு கையேடுகள், பயிற்சிகள் அளித்துவிட்டால் போதுமென அரசு நினைக்கிறது. மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்துறை போன்றவற்றுடன் இணைந்து செயல்திட்டம் வகுக்க வேண்டும். மது உள்ளிட்ட போதைகளுக்குச் சிறுவர்கள் ஆளாகாமலிருக்க  தொலைநோக்குத் திட்டங்கள் தேவை. இவை பள்ளிகளால் மட்டும் ஆகக்கூடியவை அல்ல.

     பொதுவாக ஆண் குழந்தைகளை சமூகம் அனைத்து சுதந்திரங்களைக் கொடுத்து வளர்க்கிறது. இதனூடாக பெண்களுக்கு மட்டும் அதிகக் கட்டுப்பாடுகள். பெண்கள் குறித்தான சமூகப்பார்வை மிக மோசமாக உள்ளது. இந்தப் பார்வையே ஆசிரியைகளை நோக்கியும் திரும்புகிறது. இணையவழி ஆபாசங்கள் இவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன. உயர்நிலை, மேனிலை வகுப்புகளில் ஆசிரியைகள் அச்சத்துடனும் ஒருவிதக் கூச்சத்துடனும் பணியாற்றுகின்றனர். இவர்கள் சில நேரங்களில் பாலியல் ரீதியான சீண்டல்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. தமிழக ஆசிரியைகள் புடவைதான் கட்டவேண்டும் என்கிற அறிவிக்கப்படாத விதி உள்ளது. இந்த உடை கூட வகுப்பறைகளில் அவர்களுக்கு உறுத்தலாக உள்ளது. இதைவிடக் கண்ணியமான மாற்று உடையைத் தேர்வு செய்யவேண்டிய தேவை உள்ளது. சுடிதார் அணிந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வால் இது குறித்துப் பேசவே ஆசிரியச் சமூகங்கள் அஞ்சும் நிலை  ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குபவை.

     ‘இல்லம் தேடிக் கல்வி’த் திட்டத்தின் அருமை பெருமைகளை பேசிப் பொழுதைப் போக்குவதல்ல கல்வியாளர்களின் பணி. ஒருவகையில் இத்திட்டம் இருக்கின்ற பள்ளிகளைச் சீரழிக்கவும் தனிப்பயிற்சியை ஊக்கப்படுத்தவும் செய்கிறது. ‘நீட்’ கோச்சிங்கை எதிர்க்கும் நாம் தமிழகத்தில் பரவலாக ஒழிந்துபோன தனிப்பயிற்சிக் கொள்ளையை மீட்டெடுக்க உதவுவதை எப்படி ஆதரிக்க முடியும்? இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இப்பணிக்காக முழுநேரம் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனக்குத் தெரிந்த சுமார் 140 மாணவர்கள் பயிலும் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருக்கும் ஒரே ஒரு பட்டதாரி ஆசிரியர் இப்பணிக்காக விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பள்ளியில் தலைமையாசிரியர், இரு இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 1-8 வகுப்புகளைக் கவனிக்கின்றனர்.

             வகுப்புக்கு ஓராசிரியர் என்கிற நிலை இல்லாதபோது தொடக்கக் கல்வியில் 6-8 வகுப்புகள் பெரும்சுமையே! எனவே நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றப்பட்டுப் பள்ளிக்கல்வித்துறைக் கட்டுப்பாட்டில் வரவேண்டும். தொடக்கப்பள்ளி 1-5 வகுப்புகளுடன் வெறும் அடிப்படைத் திறன்களை மட்டுமாவது பயிற்சி தரும் நிலை இருக்க வேண்டும். தேவையற்ற புள்ளிவிவரங்கள், இணைய வருகைப்பதிவு, எந்தப் பலனையும் அளிக்காத பயிற்சிகள், பல்முனை அதிகாரக் கட்டமைப்பின் இறுக்கம், பதிவேடுகளுக்கு மட்டும் அளிக்கும் முதன்மை போன்றவற்றிலிருந்து ஆசிரியர்களை  விடுவித்துக் கற்றல்-கற்பித்தல் ஓரளவாவது நிகழ வாய்ப்பளிக்க வேண்டும்.

        இல்லம் தேடிக் கல்வி என்பதெல்லாம் முறைசாராக் கல்வித்திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டியது. இதன் மூலம் செயல்படும் பள்ளிகளை முடக்குவது கடும் கண்டனத்திற்குரிய ஒன்று. தமிழகத்தில் இதற்குப் பெரிதான எதிர்வினையே இல்லை எனலாம். ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைக் குழந்தைகளுக்காக பழங்குடியினர், ஆதிதிராவிடர், சீர்மரபினர் நலப்பள்ளிகள் உருவாக்கப்பட்டன. ஊழலால் இவைகள் நலிந்து இலக்கை அடைவதில் பின்தங்கியுள்ளன. இவையும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படுதல் அவசியம்.  தொடர்புடைய துறைகள் நிதி ஒதுக்கீடு மட்டும் செய்யட்டும். இல்லம் தேடிக் கல்வி மூலம் இவர்களுக்குப் பயனென்றால் தொடர்புடைய துறைப்பள்ளிகள் என்ன செய்துகொண்டுள்ளன?

        விளையாட்டு, ஓவியம், சிற்பம், இசை உள்ளிட்ட நுண்கலைகள், நூலக வாசிப்பு, பிற படைப்புத்திறன் போட்டிகள் போன்றவற்றால் மாணவர்களை ஓரளவு மீட்டெடுக்க இயலும். இதற்கான வாய்ப்புகள் வெறும் ஏட்டளவிலேயே உள்ளன. பொதுத்தேர்வுகள் இவற்றைத் தின்று வளர்கின்றன! 10, +1,+2 ஆகிய பொதுத்தேர்வுகள் உள்ள வகுப்புகளுக்கு இவற்றை நினைத்துப் பார்க்கவும் நேரமிருப்பதில்லை. புதிய கல்விக்கொள்கை அமலானால் 3, 5, 8 வகுப்புகளும் இக்குடையின் கீழ் வந்துவிடும்! தேர்வு மையக் கல்வியின் உபவிளைவாகவும் மாணவர் பிறழ் நடத்தையைப்  பார்க்கலாம்.

       ஒன்றிய, மாநில அரசுகள் இரண்டுமே இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மட்டும் கல்வியை வழிநடத்த முடியும் என்று நம்புகின்றன. கல்வி பற்றிய அடிப்படை அறிவும் தொலைநோக்கும் ஆசிரியர்கள்-மாணவர்களைப் புரிந்துகொள்ளும் திறனும் கொண்ட அமைச்சரும் உயர் அதிகாரிகளும் பள்ளிக் கல்வித்துறைக்குத்  தேவைப்படுகின்றனர்.

       பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தேவைதான். அவற்றை அனைத்திற்கும் நிவாரணியாக ஏற்கமுடியாது. உள்ளூர் ஆதிக்கக் குழுக்கள் ஆதிக்கத்தைத் தவிர்க்க இயலாது. இதன் மூலம் பள்ளி மற்றும் கல்வியின் தரம் மேம்படுத்துவதைக் காட்டிலும் இக்குழுக்களை  ‘அவுட் சோர்சிங்’காக அரசுகள் அணுகுகின்றன. அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளிலிருந்து அரசுகள் விலகிக்கொள்ளவே விரும்புகின்றன.

          18 வயதிற்குட்பட்ட முன் – பின் வளரிளம் பருவக் குழந்தைகளின் பிரச்சினைகளும் ஒரு படித்தானவை அல்ல. அவர்களது நெறிபிறழ் நடத்தைகளுக்குச் சட்டரீதியான தண்டனைகள் வழங்கவும் இயலாது. நடத்தை சரியில்லை என மாற்றுச் சான்றிதழ் அளிப்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்றவை. பள்ளியும் ஆசிரியர்களும் இவர்களைச் சரிசெய்திட முடியும் என்பது மூட நம்பிக்கையாகவே இருக்கும். மாணவர்களிடம் மட்டுமல்லாது சமூகத்திடமும் உரையாட வேண்டும். இந்த உரையாடல் அதிகாரமற்ற சமத்துவ வெளியில் நிகழவேண்டும். கல்வியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் அத்திசையில் பயணிப்பதாக இல்லை என்பதை இங்கு வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

வெள்ளி, ஜூன் 17, 2022

மிகை மதிப்பீடு!

 

மிகை மதிப்பீடு!

 

மு.சிவகுருநாதன்

 

         இன்றைய (16/07/2022) தலையங்கத்தில் குறிப்பிடப்படும் பள்ளிக்கல்விப் பேரெழுச்சி என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. நாளை வெளியாகவிருக்கும் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கான டிரெய்லர் போல இது உள்ளது. (தேர்வு முடிவுதள்ளி வைக்கப்பட்டுவிட்டது.) இவ்வளவு பாராட்டிற்குப் பள்ளிக்கல்வித் துறை தகுதியானதுதானா என்ற கேள்வி நம்முன் எழுகிறது.

 

            தொடக்க/நடுநிலைப் பள்ளிகள் பெரும்பாலும் 2 அல்லது 4 ஆசிரியர்களைக் கொண்டு இயங்குகின்றன. 'இல்லம் தேடிக் கல்வி'த்திட்டத்திற்காக பல ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 'எண்ணும் எழுத்தும்' போன்ற திட்டங்களின் பயன்கள் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்க பெருமுயற்சியெல்லாம் தேவையில்லை.

 

       தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படும் 'இல்லம் தேடிக் கல்வி'த்திட்டத்தை மேற்பார்வையிட ஏன் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்? முழுநேரப் பணிவிடுவிப்பில் பலர் இருப்பதால் பள்ளிகள் எப்படி இயங்கும்?

 

          இந்த மேற்பார்வைப் பணிகளை வட்டார வளமைய ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்வி அலுவலர்கள் செய்ய இயலாதா? 4 பேர் பணியாற்றும் நடுநிலைப் பள்ளியிலிருந்து ஒருவர் மாற்றுப்பணியில் சென்றால் கற்றல் பாதிக்காதா?

 

          இத்திட்டத்தை முறைசாராக் கல்வியுடன் இணைத்து நடத்தலாமே! நடக்கின்ற பள்ளிகளை ஏன் சீரழிக்க வேண்டும்?

 

          பழங்குடியினர் மலைப்பகுதிகளுக்கு இன்னும் கல்வி ஏன் சென்று சேரவில்லை? இத்தனை ஆண்டுகாலம் இவ்வாறு இருந்ததற்காக நாம் வருந்தவேண்டும். இல்லம் தேடிக் கல்விதான் அவர்களுக்கு வாய்ப்பு என்றால் பள்ளிகள் இதுவரை என்ன செய்கின்றன? தொடர்புடைய துறைகள் என்ன செய்துகொண்டுள்ளன?

 

           மழலையர் வகுப்புகளுக்கு ஏன் ஆசிரியர் நியமனம் இல்லை. உள்ளூர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் மிகக் குறைவான ஊதியத்தில் பணியாற்றுவோர் பற்றிய விவரங்கள் அரசிடமும் இருக்காது. ஊடகங்களும் கண்டுகொள்ளாது. வெறும் பாராட்டு மழை பொழிவதா ஊடக அறம்! கவுரவ விரிவுரையாளர்களைவிட எவ்வித ஒருங்கிணைப்பும் இன்றி பல்லாயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளிலும் உள்ளனர்.

 

             மழலையர் வகுப்புகள் இனி இல்லை என்று சொல்லி, உடனே பின்வாங்கி உள்ளனர். கொரோனா காலத்திலும் மாணவர் சேர்க்கை நடந்தபோது இவ்வாண்டு மாணவர் சேர்க்கை நடத்தாமல் தனியாருக்குச் சாதகமாகத் தமிழகக் கல்வித்துறை செயல்பட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளில் கூடுதலாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனங்கள் இல்லை.

 

          பள்ளிக் கல்வித்துறையும் உயர்கல்வித்துறை இன்று முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. ஒன்றிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று சொல்லிக் கொண்டே, மறைமுகமாக அவற்றைச் செயல்படுத்தும் துறைகளாக உருமாறியுள்ளன.

        தமிழக கல்விக்கொள்கை உருவாக்கும் குழுகூட ஒன்றியக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால் பரிசீலிக்கப்படும் என்கின்றனர். கல்வியில் தன்னார்வலர்கள், 9,10 வகுப்புகளில் தொழிற்கல்வி எனும் குலக்கல்வி, கலவைக் கற்றல் முறை என்று பல்வேறு நல்ல அம்சங்களைக் கண்டெடுத்துதான் செயல்படுத்துகிறார்கள் போலும்!

 

        இருமொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டே தனியார் சுயநிதிப்பள்ளிகளில் இந்தி கற்பிக்க அனுமதிக்கிறார்கள். பிற பாடவேளைகளை இந்தி விழுங்கிக் கொள்கிறது. இதைப்பற்றி யாரும் கேள்வி கேட்டதுண்டா? இதன்மீது ஊடக வெளிச்சம் பட்டிருக்கிறதா? பள்ளி நேரம் அல்லாத பிற நேரங்களிலா அங்கு இந்தி வகுப்புகள் நடக்கின்றன?

 

        கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ஊடகங்கள் மோடியைப் பாராட்டுவதைத் தொழிலாகச் செய்துவருகின்றன. அதைப்போல தமிழகத்திலும் ஆள்வோரைப் பகைத்துகொள்ளாமலிருக்கும் குயுக்திகள் இதழியல் அறமாகாது. மக்களாட்சியின் நாலாவது தூண் இவ்வாறு செயல்படுவது அவற்றை வலுப்படுத்தாது.

 

(இன்றைய 'இந்து தமிழ் திசை' (16/06/2022) தலையங்கத்திற்கான எதிர்வினை.)

பாடநூல்களும் தமிழக ஆளுநரும்

 

பாடநூல்களும் தமிழக ஆளுநரும்

 

மு.சிவகுருநாதன்

 

        இந்தியாவை சனாதன தர்மமே ஆட்சி செய்கிறது என்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒருவகையில் இது உண்மைதானே! கடந்த எட்டாண்டுகளாக பல நேர்வுகளில் அரசியல் சட்டமும் நீதிமன்றமும் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது.

 

      சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக சிலரும் சில அமைப்புகளும் மாற்றப்பட்டுருக்கின்றவே! இதைத்தான் மநுதர்மத்தின் ஆட்சி என்று புரிந்துகொள்ள வேண்டும் போலும்!

 

         தமிழகத்தில் எழுந்த இத்தகைய எதிர்ப்புணர்வை வேறு மாநிலத்தில் கண்டிருக்க முடியாது. இனி இவ்வாறு உளறும் முன் இந்த எதிர்க்குரல்கள் அவரைத் தடுக்கும் என நம்பலாம்.

 

       நமது பாடநூல்கள் ஆளுநர் சொல்வதை வேறுமொழியில் சொல்கின்றனவே! ஸ்மிருதிகளைக் கொண்டாடுகின்றன. மநு தர்மத்தை சமூகக் கடமையாக கட்டமைக்கின்றன. இன்றைய நீதி வழங்கல் முறையுடன் மநு நீதியை ஒப்பிட்டு விதந்தோதுகின்றன. மநு நீதிச்சோழன் கதை வழியே அறத்தைப் (!?) போதிக்கின்றன. இவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு ஆளுநர் பேச்சை மட்டும் எதிர்ப்பது அறமாகுமா?

 

         நேற்று (15/06/2022) தமிழகக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்ட முடிவில் தமிழக வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

 

          இதைப்போன்ற வாசகங்களை பாடநூல்கள் உருவாக்கத்தின்போதும் கேள்விப்பட்டோம். தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றை மையப்படுத்தி பாடநூல்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

 

          வெளிவந்த புதிய பாடநூல்கள் பிற்காலச் சோழப்பெருமை, சைவ-வைணவப் பெருமைகள், குடவோலை முறை மக்களாட்சி, மநுதர்மப் புகழ்பாடுதல் என்பதாக பாடநூல்கள் அமைந்தன.

 

     தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றிற்கான வரையறைகள் என்ன என்பது முக்கியமானது. பொதுவாக தமிழக வரலாறு இடைக்காலத்துடன் அப்படியே உறைந்துபோயுள்ளது. எனவேதான் சோழ, சைவ, குடவோலைப் பெருமையுடன் தமிழக வரலாறு நின்றுபோகிறது. களப்பிரர்களை அதே எள்ளலுடன் அணுகும் போக்கு தொடர்கிறது.

 

      கல்விக்கொள்கை என்பது தொலைநோக்குச் செயல்திட்டம். ஒன்றிய அரசு தனது கொள்கையில் சமஸ்கிருத இந்துத்துவப் பெருமை பேசுவதைப்போல தமிழ், சைவப் பெருமைகளை மட்டும் பேசிவிட்டால் போதுமா?

 

       பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி, தாய்மொழிக் கல்வி, சமத்துவ, சமூகநீதிக் கல்வி, கல்வியில் அரசின் நிதி ஒதுக்கீடு உயர்வு, அனைவருக்குமான கல்வி, சுய சிந்தனை, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் கல்வி, மனித மனத்தின் ஆழ்மனக் கசடுகளை வெளியேற்றும் கல்வி, ஆதிக்கமற்ற, மனித நேய, குழந்தை நேயக் கல்வி, தேர்வுகளை மையப்படுத்தாத கல்வி, தனியார் ஆதிக்கத்தை, கட்டணக் கொள்ளைகளை தடுக்கும் கல்வி என்று பல தளங்களில் கல்விக் கொள்கை விரிவடைய வேண்டும். மாறாக சுயபெருமைகள் மூலம் சமூகத்தைக் கீழ்நோக்கி நகர்த்துவதல்ல.

 

         சனாதன, வர்ண எதிர்ப்பு இம்மண்ணின் குணம். அதற்கு மாற்றான வாழ்வியல் நமக்கு உண்டு. மீண்டும் அந்நிலை வர முயற்சிக்க வேண்டுமே ஒழிய பழம்பெருமைகளில் சமூகத்தை மூழ்கடிக்கும் தவற்றைச் செய்யக்கூடாது.