செவ்வாய், செப்டம்பர் 29, 2015

மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்க இயலாமல் ‘அறிவு நிரம்பி வழியும்’ பெருங்கூட்டத்தில் இப்படியும் சில ஆசிரியர்கள்!

மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்க இயலாமல் ‘அறிவு நிரம்பி வழியும்’ பெருங்கூட்டத்தில் இப்படியும் சில ஆசிரியர்கள்!
 
                                                                                                                  - மு.சிவகுருநாதன்


     சுட்டி விகடனுக்கு அடுத்தபடியாக ‘புதிய தலைமுறை கல்வி’ 05, அக்டோபர், 2015 இதழில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தோழர் செ.மணிமாறன் அவர்களின் செயல்பாடுகள் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
     தோழர் செ.மணிமாறன் அவர்களின் இதர செயல்பாட்டுடன் ‘கருத்து சுதந்தரப் பெட்டி’ என்ற நடைமுறை இங்கு பாராட்டப்படுகிறது. மாணவர்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பெற்று அதன்மூலம் பள்ளியின் அன்றாடச் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டால் கற்றலின் இனிமை உண்டாகும். நாமும் இவரது தொடர்பணிகளைப் பாராட்டுவோம்.
பள்ளி ஆசிரியர்கள் குறித்து பொதுமக்கள் வைக்கின்ற குற்றச்சாட்டுகளில் குழந்தைகளோடு பழகிப் பழகி இவர்கள் சிறுபிள்ளைகள் போலவே செயல்படுவார்கள் என்பதும் ஒன்று. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதைக் குற்றச்சாட்டாக அன்றி பாராட்டாகவே எடுத்துக்கொள்ள நான் விரும்புகிறேன். 

     தாய்மையைப்போல குழந்தைமையும் ஓர் சிறந்த பண்பல்லவா? இதில் என்ன குற்றம், குறை இருக்கமுடியும்? மீண்டும் குழந்தையாகும் ஏக்கம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியப்படாது. ஒருவகையில் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழந்தையாக மாறவும் குழந்தைமையைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு அது.
 
     நம்மில் எத்தனைபேர் அவ்வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோம்? நல்லமுத்து, மணிமாறன் போன்ற சிலர் மட்டுமே இத்தகைய சுகத்தை அடையும் பேறு பெற்றவர்கள். குழந்தைகளாகவே இருங்கள் என இவர்களை வாழ்த்துவோம்.
 
      பெரும்பாலான ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்? இன்றைய வங்கி முறைக் கல்வியின் தூணாக இருக்கிறார்கள். தேர்வுகள், மதிப்பெண்கள் என மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள். பாடநூலுக்கு ‘நோட்ஸ்’ போடும் வேலையைச் செய்பவர்கள். ஏன்? எதற்கு? எப்படி? என மாணவர்களை வினாக்கள் கேட்கவைக்க விரும்பாதவர்கள். 
 
       இவைகள் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் உள்ள ‘அறிவு நிரம்பி வழியும் தன்மை’ மிகக் கொடூரமானது என்று கருதுகிறேன். எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., பி.எட்., எம்.எட்., எம்.ஃபில்., பி.எச்டி. என்று பல்வேறு பட்டங்கள் பெற்ற காரணத்தாலே தங்களுக்கு அறிவு நிரம்பி வழிவதாக கனவு காணும் இவர்கள் புதிய, மாற்றுச் சிந்தனைகள் எதையும் உள்வாங்க மறுப்பவர்கள். மாணவர்களையும் சிந்திக்கவிடாமல் மழுங்கடிப்பவர்கள். 
 
       இவர்கள் ஒப்பீட்டளவில் அரசுப்பள்ளிகளைவிட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளில் மிக அதிகளவில் காணப்படுகின்றனர். அறிவு, தேர்வு, மதிப்பெண் சார்ந்த இந்நோய் தற்போது அரசுப்பள்ளிகளையும் தொற்றியுள்ளது. அரசுப்பள்ளிகளில் இதைத் தடுப்பது உடனடித் தேவை. 
 
      பள்ளி ஆசிரியர்களிடம் காணப்படும் இத்தகைய அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது மிக அவசர அவசியமானதாகும். நமது நாட்டில் மதச்சார்பின்மை, பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, அறிவியல் மனப்பான்மை, மக்களாட்சி, சமூக நல்லிணக்கம் போன்ற பல்வேறு கூறுகள் தழைத்தோங்க கல்விமுறை ஆதாரமல்லவா? எனவே இதற்கு இம்முயற்சிகள் துணைநிற்கும் என்பது உறுதி.

திங்கள், செப்டம்பர் 28, 2015

கல்விக் குழப்பங்கள் - தொடர் பகுதி 25 முதல் 30 முடிய.




 கல்விக் குழப்பங்கள் - தொடர் பகுதி 25 முதல் 30 முடிய.
                                          
                                                                                         - மு.சிவகுருநாதன்

26. குமரிக் (லெமூரியா) கண்டக் கற்பனையும்   போலித் தமிழ்ப் பெருமையும்    (முதல் பகுதி)                         

                                                      
    நமது கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டின் செத்த மூளைகள் (நன்றி; எழுத்தாளர் சாருநிவேதிதா) வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் லெமூரியாக் கண்டம் பற்றிய புனைவுகளை பாடநூற்களில் அவிழ்த்துவிட்டுக் கொண்டுள்ளனர். (ஆறாம் வகுப்பு சமூக அறிவியல், ஒன்பதாம், பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூற்கள்) இங்கு சங்க இலக்கியப் புனைவுகள் வழி தமிழக வரலாறு எழுதுவதும் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியின் புனைவுகளின் ஊடாக சோழர்களின் வரலாறு எழுதப்படுவதுமான கூத்துகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன.

   இந்து மேன்மையைப் பேசிய அதே பிரம்மஞான சபை கும்பல்தான் லெமூரியாக் கண்டம் குறித்தான புனைவுகளை உற்பத்தி செய்து பரப்பக் காரணமாக இருந்தனர். இதன் தொடர்ச்சியை உத்தர்கண்ட் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தியுமான தருண் விஜய் செய்யும் திருக்குறள் பரப்புரைகளில் கூட காணமுடியும். இந்துத்துவாவின் மறைமுக அரசியல் செயல்திட்டங்களுள் இதுவும் ஒன்று.

   நிலவியல் (Geology) ஆய்வாளர் சு.கி.ஜெயகரன் அவர்களின் ‘குமரி நிலநீட்சி  குமரிக்கண்டம் (லெமூரியா) – ஓர் ஆய்வு’ என்ற நூலின் முதல்பதிப்பு டிச. 2002 வெளியாகி, திருத்தப்பட்ட நான்காவது பதிப்பு டிச. 2012 இல் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவரது முந்தைய ஆய்வு நூற்களில்  மூதாதயரைத் தேடி (க்ரியா), தளும்பல் (உயிர்மை), மணல் மேல் கட்டிய பாலம் (காலச்சுவடு) ஆகிய சில.

  இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள அறிஞர் எஸ்.வி.ராஜதுரை, “அறிவியல் நலன் கருதி லெமூரியா கருதுகோள்களை இனியேனும் கைவிட்டுவிடுவதுதான் அறிவுடைமை” என்கிறார். இந்நூலுக்கு அறிஞர் பொ.வேல்சாமி காலச்சுவடு ஆகஸ்ட் 2005  இதழில் ‘அபத்தங்களை மறுக்கும் அறிவியல் ஆய்வு’ என்ற விரிவான மதிப்புரை எழுதினார். இது அவரது ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’ தொகுப்பில் (காலச்சுவடு பதிப்பகம்) உள்ளது. 

  குமரிக்கண்டம் (லெமூரியா) குறித்துப் புனையப்பட்ட கற்பனைகளையும் ஆய்வாளர் சு.கி.ஜெயகரன் வந்தடைந்த முடிவுகளையும் சுருக்கமாக தொகுத்துக் கொள்வோம்.

    லெமூரியா புனைவிற்கு ஆதாரமாகக் காட்டி, மறைந்து போனதாகச் சொல்லப்படும் ‘செங்கோன் தரைச்செலவு’ நூல் போலியானது. தாப்புலிப்பா என்கிற பாவகை சங்கத்தமிழில் இல்லாத ஒன்று. இந்நூலை வையாபுரிப்பிள்ளை ஏற்கவில்லை.

   உ.வே.சா. வால் அச்சேற்றப்பட்ட ‘தமிழ் விடு தூது’ கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம். குமரி ஆற்றைத் தென் எல்லையாகக் குறிப்பிடும் இந்நூலில் குமரிக்கண்டம் குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. 

  இப்போது நாம் பயன்படுத்தும் கண்டம் (continent) என்ற சொல் பெரும் நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்படுகிறது. பழங்காலத்தில் அது நாடு என்ற பொருளையேக் குறித்தது. சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் துறை ஆற்றின் கரைப்பகுதியைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். 

    குமரிக்கண்டத்தில் ‘ஏழ்’ என்ற அடைமொழியுடன் ஏழு நாடுகள் கூட்டாக 49 நாடுகள் இருந்ததாக விளக்கப்படுகிறது. ‘ஏழ்’ என்னும் சொல்லை ‘ஏழு’ என்ற எண்ணாகக் கருதுவதால் உண்டான குழப்பம். ‘ஈழம்’ என்ற சொல்லின் பெயர்காரணம் மூலம் இதை விளங்கிக்கொள்ளலாம். 
 
   ‘பஃறுளி’ (பல்+துளி) ஆறு இப்போதுள்ள பழையாற்றின் திரிபே. கடல் மட்டம் தாழ்ந்திருந்த 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய குமரியிலிருந்து 25 – 30 கி.மீ. தள்ளியிருந்த நிலப்பரப்பில் ஓடிக் கடலில் கலந்திருக்க வாய்ப்புண்டு. 

  சிங்கள வம்ச வரலாற்றைக் கூறும் பாலி மொழியில் எழுதப்பட்ட தீபவம்சம், மகாவம்சம் ஆகியன சிறந்த வரலாற்று ஆதாரங்களாக உள்ளன. வங்கம், மகதம், பாண்டிய நாடு, சோழ நாடு, இலங்கைத்தீவு, சிங்களரின் கடற்பயணம் பற்றியும் விளக்கமாகக் கூறும் மகாவம்சத்தில் தெற்கிலிருந்ததாகக் கூறப்படும் பெரும்நிலப்பரப்பு குறித்த எந்தத் தகவலும் இல்லை.

  கடலோடிகளின் மிகைப்படுத்தலகளுக்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. ஒன்று கடலில் வாழும் பாலூட்டியான ஆவுலியாவை (Dugong) பெண் பாதி, மீன் பாதி என கடற்கன்னியாக்கியது. மெகஸ்தனிஸ் போன்றவர்களும் இலங்கையின் சுற்றளவை நான்கு மடங்கு மிகைப்படுத்துகின்றனர். இதையே குமரிக்கண்டப் புனைவாளர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர். 

  சங்கம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. பவுத்த மத அடிப்படைக் கோட்பாடுகளைக் குறிக்கும் இச்சொல் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் புழக்கத்தில் வந்தது. சங்க இலக்கியம் எதிலும் சங்கம் பற்றி ஏதுமில்லை. 

     தென்மதுரை, கபாடபுரம், மதுரை என முச்சங்களும் இங்கு  10,000 ஆண்டுகள் இருந்ததாகக் கூறுவது அறிவியல் பூர்வமானதல்ல. மதுரா என்பது உத்திர மதுராவை குறிப்பது. தமிழல்லாத இச்சொல் மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தது. அன்று மதுரை ‘கூடல்’ என்றே வழங்கிவந்துள்ளது. முதல்ச் சங்கத்தவர் தமிழல்லாத மதுரை என்ற பெயரைத் தனது தலைநகருக்கு சூட்டியிருக்க வாய்ப்பில்லை. 

 தமிழறிஞர்கள் கா.அப்பாதுரையார், தேவநேயப்பாவாணர், ந.சி.கந்தையாப்பிள்ளை ஆகியோரால் உயர்த்திப்பிடிக்கப்பட்ட லெமூரியாக் கண்டப் புனைவு திராவிட இனம், தமிழ் மொழிக்காகச் சொல்லப்பட்டது அல்ல. இதை இவர்களும் உணராமற்போதுதான் தமிழின் பேரவலம். ஆரியர்களின் மேன்மையை வலியுறுத்த பிரம்ம ஞான சபையினரால்  கண்டுபிடிக்கப்பட்ட ஓர் கற்பனைக் கோட்பாடு இது. இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள், கிழக்கத்திய மறைஞான நூற்கள், உள்ளுணர்வு (Intution), புலன் கடந்த உணர்வு (Extrasensor Perception) ஆகியன மட்டுமே. இதுவே குமரிக்கண்டப் புனைவைத் தகர்க்கப் போதுமானது. 


26. அ. குமரிக் (லெமூரியா) கண்டக் கற்பனையும்   போலித் தமிழ்ப் பெருமையும்    (இரண்டாம் பகுதி)                         


      எர்ன்ஸ்ட் ஹிக்கல் (Ernst Haeckel) என்கிற ஜெர்மானிய உயிரியல் அறிஞர் ஆரிய (வெள்ளை) இனம் பரிணாம வளைர்ச்சியில் உயர்ந்த் இனம் என்று அறிவியல் ஆதாரமற்ற கோட்பாட்டை வெளியிட்டார். இது நாஜிகளின் இனவெறி அரசியலுக்குப் பயன்பட்டது. இப்போது புரிகிறதா, ஹிட்லரும் முசோலினியும் இந்துத்துவ ஆட்களுக்கு மட்டுமல்ல தமிழ் தேசியர்களுக்கும் ஏன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று?

    ‘லெமூரியா’ சொல்லின் பெயர்க்காரணமே மிகவும் இழிவானது. இதன்மூலம் திராவிட மற்றும் தமிழ்ப் பெருமை பேசுவது அபத்தம் மட்டுமல்ல; நல்ல நகைச்சுவையும் கூட. பரிணாம வளர்ச்சியில் சற்றே கீழேயுள்ள ப்ரோசிமியன் பிரிவைச் சேர்ந்த லிமர் (Lemur) வகை விலங்குகள் மடகாஸ்கர் தீவுகளில் வாழ்பவை. 30 கிராம் எடையுடைய எலி லிமர் (mouse lemur) முதல் 7 கிலோகிராம் எடையுள்ள இந்திரி, சிஃபாகா   லிமர் வரை பலவகை இதில் உள்ளது. நம்மூர் தேவாங்குகளும் (loris) இப்பிரிவைச் சேர்ந்தவையே.

  வெக்னரின் கண்டப் பெயர்ச்சிக் கோட்பாடு உருவாவதற்கு முன்னதாக ஹிக்கல் ‘நிலப்பாலம்’ என்ற கருதுகோளை உண்டுபண்ணுகிறார். இவர் புவியியல் வல்லுநர் அல்ல என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். லிமர்கள் போன்ற விலங்குகள் இந்தியா, மலேசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுவதால் இவற்றின் நிலம் ஓரு காலத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதே ‘நிலப்பால’க் கருதுகோளாகும். இந்த நிலப்பாலத்திற்கு இங்கிலாந்து உயிரியல் அறிஞர் ஃபிலிப் ஸ்க்லேடர் (Philip Sclator)) ‘லெமூரியா’ எனப் பெயரிட்டார். 

    லெமூரியாக் கண்டம் பற்றி அதை உருவாக்கிய பிரம்ம ஞான சபையினரும் அதை அப்படியே ஏற்றுக்கொண்ட நம்மவர்களும் உருவாக்கிய அறிவியல், வரலாறு, நிலவியல் போன்ற அனைத்திற்கும் அப்பாற்பட்ட அபத்தக்களஞ்சியங்கள் ஏராளம். அதில் ஒன்றிரண்டை மட்டும் பார்ப்போம். 

 பிரம்ம ஞான சபையைத் தொடங்கிய ரஷ்யப் பெண்மணி ஹெலினா ப்ளாவெட்ஸ்கியால் (Helena Blavatsky) தனது ‘ரகசிய சித்தாந்தம்’ (The Secret Doctrine) எனும் நூலின் வழி உள்ளுணர்வால் பதிவு செய்யப்பட்டு லெமூரியா மற்றும் அட்லாண்டிஸ் கண்டங்கள் பற்றிய கற்பனைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அட்லாண்டிஸ் கண்டம் பற்றியப் புனைவை உருவாக்கியவர் தத்துவ அறிஞர் பிளேட்டோ. இவரும் நிலவியல், அறிவியல், மானுடவியல் அறிஞரல்ல. இங்கும் கூட அப்படித்தானே நடக்கிறது? உதாரணம் அப்துல்கலாம் அணுசக்தி, நதிநீர் இணைப்பு பற்றியெல்லாம் பேசியது. 

  ஏழு மூல இனங்கள் ஒவ்வொரு கண்டத்திலும் வாழ்ந்து பரிணாம வளர்ச்சியடைந்தன. இதில் பரிணாம உயர்வு பெறாத மூன்றாம் மூல இனம் ஒன்று லெமூரியாவில் இருந்தது. இது முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் விலங்கு. பிறகு வந்த நான்காவது மூல இனத்திற்கு பாலுணர்வு இருந்தது. அவை மிருகங்களை புணர்ந்ததால் வாலில்லாக் குரங்குகள் போன்ற விலங்குகள் உருவாயின. அந்த இனமே கடலில் மூழகிப்போக, அட்லாண்டிஸ் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்ற ஐந்தாவது மூல இனம் அதாவது ஆரிய  (வெள்ளை) இனம் தோன்றியது. ஆரிய மேன்மை பேசிய ஒரு கற்பனைக் கோட்பாட்டை  அப்படியே ஏற்றுக்கொண்டு இங்கு திராவிட, தமிழ்ப்பெருமை பேசுவது எப்படி சாத்தியமானது?

  ஸ்காட் எலியட் (W. Scott Elliot) 1904 இல் ‘மறைந்த லெமூரியா’ (The Lost Lemuria) என்னும் நூல் மனித இனத்தின் ஐந்து மில்லியன் வரலாற்றைப் பதிவு செய்கிறதாம்! உலகில் மனித இனம் தோன்றி ஒன்றரை மில்லியன் ஆண்டுகளே ஆன நிலையில் இதன் நம்பகம் கேள்விக்குரியது. லெமூரியாக் கற்பனையின் தமிழக ஆதரவாளர்கள் இவரது நூலையே ஆதாரமாகக் காட்டுவர். 

    லெமூரியர் ஒரு சொல் வார்த்தைகளைப் (mono-syllables) பேசினர். எனவே இவர்கள் பேசிய மொழி சீன மொழி. தமிழ் மொழி, திராவிட இனம் பற்றி எங்கும் குறிப்பு இல்லை. இதுகூட பரவாயில்லை. அவர்களின் உருவம், உடலமைப்பு பற்றிய சொல்லாடல்கள் வெறும் பிதற்றல். 

  லெமூரியர்கள் நுங்கு போன்ற நெகிழ்வான உடலமைப்பைப் பெற்றிருந்துப் பின்னர் திடமான உருவைப் பெற்றனர். அவர்கள் 4 லிருந்து 5 மீட்டர் உயரமானவர்கள். அவர்களுக்கு மூன்றாவது கண் பின்னால் இருந்தது. முன்னால் நடப்பது போன்று அவர்களால் பின்னாலும் நடக்க முடிந்தது. இவர்களது கற்பனைகளுக்கு எல்லையே இல்லை பாருங்கள்!

  அலெக்ஸாந்தர் கோந்த்ரதோவ் (Alexander Kondratov) எழுதிய ‘இந்துமாக்கடல் மர்மங்கள் (லெமூரியக்கண்டம்) என்ற நூலை  ஆர்.பார்த்தசாரதி தமிழில் பெயர்த்துள்ளார். அந்நூலில் உள்ள குறிப்பான எட்டு முரண்பாடுகளை அறிஞர் சு.கி.ஜெயகரன் விளக்கமாக மறுக்கிறார். 

  தமிழறிஞர் கா.அப்பாதுரையார் குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்ற நூலில் லெமூரியா கண்ட நிலம், மக்கள், உயிரினம் பற்றிக் கூறும்போது, “இலெமூரியக் கண்டத்தின்  கிழக்குப்பகுதியின் மேல்பகுதியில் சில உயர்ந்த மலைகளே இன்று பசுபிக் கடலின் தீவுகளாகியிருக்கின்றன. இவை எரிமலைகளாகும். எரிமலைகளும், நில அதிர்ச்சிகளும் அக்கண்ட முழுமையையும்   என்றும் குலுக்கிக்கொண்டே இருந்தன. இலெமூரியா வாழ்க்கைக்காலம் நடுக்கற்காலமாகும். உள்நாட்டு சதுப்புநிலங்களிலும், கடற்கரையோரங்களிலும் டினோஸார்கள் வாழ்ந்தன. 100 அடிக்கு மேற்பட்ட டினோஸார்கள் லெமூரியாவின் மிகப்பெரிய உயிரினம். ஊன் வெறியால் அவை உறுமும்போதும், மரஞ் செடிகொடிகளை நெரித்து அவை நடக்கும் அரவம் கேட்கும்போதும் இலெமூரிய மக்கள் கவலையும் முன்னெச்சரிக்கையும் கொள்வர்.  இலெமூரிய மக்கள் தற்கால மக்களைவிட நெட்டையானவர். ஆறடிக்கு மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர். உடலின் எடை 160 – 200 கல் என்று கூறப்படுகிறது.” ( குமரி நில நீட்சி நூலிலுள்ள மேற்கோள்.) இன்றைய ஸ்டீபன் ஃபீல்பர்க்கை மிஞ்சிய கற்பனையைப் பாருங்கள்!

  டினோசர்கள் அழிந்து பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியதாக அறிவியல் சொல்கிறது. டினோசர்களையும் ஆதிமனிதனையும் சமகாலத்தவராக்கியது மிகப்பெரிய கால முரண் என்பதை சு.கி.ஜெயகரன் குறிப்பிடுகிறார். 

   தீவு, தீபகற்பம் ஆகிய சொல் – பொருள் வேறுபாடுகள் இல்லாத காலகட்டத்தில் பாலி, பிராகிருதம் போன்ற வடமொழி நூற்கள் இந்தியத் தீபகற்பத்தை ஜம்புத்தீவு என்று அழைத்தன. ஜம்பு என்பது நாவல் மரத்தைக் குறித்ததால் நாவலந்தீவு, நாவலன் தண்பொழில் என்றெல்லாம் தமிழில் வழங்கப்பட்டது.

  கடல்கோள்கள் நிறைய நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கியிருக்கின்றன. இன்றிருக்கின்ற தமிழகத்தின் சிலபகுதிகள் கடலால் அழிபட்டிருக்கிறது. இது குமரிக்கண்டமல்ல; குமரி நிலநீட்சி என்பதை அறிஞர் சு.கி.ஜெயகரன் தெளிவான அறிவியல். நிலவியல், வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவுகிறார். 

  தற்கால அறிவியல் உலகம் கண்டங்களின் பெயர்ச்சி தொடர்பான ஆல்ஃபிரட் வெக்னரின்  (Alfred Wegener)  கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. இதையே புவியியல் பகுதியில் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் வரலாற்றில் லெமூரியாக் கண்டப் புனைவை அறிவியல் போல சொல்லவேண்டிய தேவை என்ன என்பதுதான் நமது வினா. தமிழ்ப்பாடநூற்கள் அபத்தங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. இங்குள்ள திராவிட இயக்க அரசியற்கட்சிகள் தங்களது சுயலாபங்களுக்காக உலகத்தமிழ், செம்மொழி மாநாடுகளை அரங்கேற்றுகிறார்கள். ஒவ்வொரு மாநாட்டின் போதும் லெமூரியாக் (குமரி) கண்டப் புனைவு மீள்கண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. 

  தமிழ் மொழிக்கு இருக்கின்ற தொன்மை போதுமானது. இன்றைக்கு முன் (இ.மு.) 35,000 ஆண்டுகளுக்கு முன்னதாக உலக அளவில் நடைபெற்ற நாகரீக வளர்ச்சியை இந்நூலில் ஆசிரியர் பட்டிலிட்டு அவற்றைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறார். அதைப்போல தமிழ்நாட்டு நாகரீக வளர்ச்சியை சங்காலியா பகுப்பில் அடிப்படையில் இ.மு. 50,000 – 75,000 முதல் ஆறுகட்டங்களாகப் பட்டியலிடப்படுகிறது. 

   மேலும் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்திய சிந்துசமவெளி நாகரீகம் குறித்த பல்வேறு ஆய்வுகள் தமிழின் தொன்மைக்குச் சான்றாக உள்ளது. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்ற பல அறிஞர்கள் சிந்துவெளி சித்திர எழுத்துக்குறியீடுகள் தொடர்பான  ஆய்வுகள் இதற்கு உதவுகிறது. 

     இதைப்போல தமிழ் மொழி, தமிழ் இனத்தின் தொன்மைக்கு ஏராளமான அறிவியல், நிலவியல், மானுடவியல், வரலாறு, தொல்லியல் சான்றுகள் இருக்க குமரிக்கண்டம் குறித்த புனைவின் வழி தமிழ்த் தொன்மையைக் கட்ட முனைவதும், ஆரிய இனமேன்மையை வலியுறுத்திய கோட்பாடுகளை இனியும் உயர்த்திப்பிடிப்பதும் பொருளற்றவை. 

   உண்மையில் கடல்கொண்ட நிலப்பகுதியைக் கண்டமாக்கி கூடவே டினோசர்கள் காலத்திற்கு மனித இன வாழ்காலத்தைப் பின்தள்ளி போலியான வரலாறு புனையவேண்டிய அவசியமே தமிழுக்கு இல்லை. யூத இன அழிப்பிற்கும் ஆரிய மேன்மைக்கும் பயன்பட்ட கற்பனையான ஓர் கருதுகோள் மூலம் தமிழ்த் தொன்மையை பறைசாற்ற முடியாது.

27. பொற்கால சோழப்பேரரசு தமிழ்மொழிக்குச் செய்தது என்ன?    (முதல் பகுதி)                         


    ஆட்சி முறை, நிர்வாக அமைப்பு, நீதி பரிபாலனம், சமூகப் பொருளாதார நிலை, பொதுமக்களின் வாழ்க்கைத்தரம், வாணிகம், தொழில்கள், சமயநிலை, சமயப்பொறை, போர், கல்வி, கலை, இலக்கியம் போன்ற பலதரப்பட்டக் காரணிகளைக் கொண்டே ஓர் முடியரசுக் காலத்தை பொற்காலமா, இருண்டகாலமா என்பதைத் தீர்மானிக்க முடியும். ஆனால் இங்கு வேறு அளவுகோல்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

   இந்திய அளவில் குப்தப் பேரரசின் காலம் பொற்காலமாகவும் தமிழகத்தில் பிற்காலச் சோழப்பேரரசின் ஆட்சிக்காலம் பொற்காலமாகவும் பார்க்கப்படுகிறது. 

    இங்கு இலக்கியம் என்ற ஓர் காரணியை மட்டும் எடுத்துக்கொள்வோம். சோழர்களது ஆட்சிக்காலத்தில் தமிழுக்கும் தமிழ்மொழிக்கும் கிடைத்த கொடைகள் என்ன? இதை அறிந்துகொள்வதற்கு முன்பு ஓர் ஒப்பீட்டுக்காக இருண்டகாலமாகச் சொல்லப்படும் களப்பிரர் காலத்தில் இலக்கிய நிலை பற்றி அறிவது நல்லது. இதை ‘சங்கம் மருவிய காலம்’ என்றும் சொல்கிறார்கள். ‘சங்கம்’ தமிழ்ச்சொல் அல்ல. இது பவுத்தம் சார்ந்த பாலிமொழிச் (வடமொழி) சொல். உண்மையில் களப்பிரர் காலமே ‘சங்கம் நிலவிய காலம்’. சோழர் காலத்தில் சங்கம் மருவியிருக்கலாம். 

  களப்பிரர் கால (கி.பி. 250 முதல் கி.பி. 575 வரை.) தமிழிலக்கியங்கள் குறித்த நீண்ட பட்டியலை மயிலை சீனி.வேங்கடசாமி தனது ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ நூலில் தருகிறார். இவற்றில் பவுத்த சமய இலக்கிய நூல்கள் இல்லை. இவை அழிக்கப்பட்டன அல்லது அழிந்துபோயின. 

யாப்பிலக்கண நூல்கள்

·        அவிநயம்
·        காக்கைப்பாடினியம்
·        நத்தத்தம்
·        பல்காப்பியம்
·        பல்காப்பியப் புறனடை
·        பல்காயம்

சமணர் இலக்கிய நூல்கள்

·        நரி விருத்தம்
·        எலி விருத்தம்
·        கிளி விருத்தம்
·        விளக்கத்தார் கூத்து
·        சீவகசிந்தாமணி (கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு)
·        பெருங்கதை (உதயணன் கதை / மாக்கதை / கதை)
சீவகசிந்தாமணி, பெருங்கதை இரண்டும் சமணக் காவியங்களாகும்.

சைவ சமய இலக்கிய நூல்கள்

·        இறையனார் அகப்பொருள் (களவியல்)
·        மூத்த திருப்பதிகங்கள் (காரைக்கால் அம்மையார்)
·        திருவிரட்டை மணிமாலை (காரைக்கால் அம்மையார்)
·        அற்புதத் திருவந்தாதி  (காரைக்கால் அம்மையார்)
·        கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி
·        திரு ஈங்கோய்மாலை எழுபது
·        திருவலஞ்சுலி மும்மணிக் கோவை
·        திருவெழு கூற்றிருக்கை
·        பெருந்தேவபாணி
·        கோபப் பிரசாதம்
·        காரெட்டு
·        போற்றிக் கலிவெண்பா
·        திருக்கண்ணப்பதேவர் திருமறம் (நக்கீர தேவ நாயனார் – களப்பிரர் காலம்)
·        திருக்கண்ணப்பதேவர் திருமறம் (கல்லாட தேவ நாயனார் - களப்பிரர் காலம்)
·        மூத்த நாயனார் இரட்டை மணிமாலை
·        சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை
·        சிவபெருமான் திருவந்தாதி (கபிலதேவ நாயனார்)
·        சிவபெருமான் திருவந்தாதி (பரணதேவ நாயனார்)

கீழ்க்கணக்கு நூல்கள்

   களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட பிறநூல்கள் பிற்காலத்தில் கீழ்க்கணக்கு நூல்கள் என பதினெட்டாக தொகுக்கப்பட்டன.  இவற்றில் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக் காஞ்சி ஆகியன கடைச்சங்க காலத்திலும் (கி.பி. 250 க்கு முன்) நாலடியார் களப்பிரர் ஆட்சிக்குப் பின்னும் (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இயற்றப்பட்டவை. அந்த 14 கீழ்க்கணக்கு நூல்களின் பட்டியல் பின்வருமாறு. 


  • ·        நான்மணிக்கடிகை
  • ·        இனியவை நாற்பது
  • ·       இன்னா நாற்பது
  • ·        திரிகடுகம்
  • ·        ஆசாரக்கோவை
  • ·        பழமொழி நானூறு
  • ·        சிறுபஞ்சமூலம்
  • ·        ஏலாதி
  • ·        கார் நாற்பது
  • ·        ஐந்திணை ஐம்பது
  • ·        ஐந்திணை எழுபது
  • ·        திணைமாலை நூற்றைம்பது
  • ·        கைந்நிலை


மொழி வளர்ச்சி நிலைகள்

    பிராமி எழுத்து மாற்றம் பெற்று வட்டெழுத்து முறை உருவானது.

    பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய வடமொழிச் சொற்களை எழுத கிரந்த எழுத்துமுறை உருவாக்கப்பட்டது.

    கடைச்சங்க காலம் வரை (கிபி.250 க்கு முன்னர்) தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு பாவகைகளே இருந்தன. இவற்றோடு தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்கள் அமைக்கப்பட்டு பன்னிரண்டு வகைச்செய்யுள்கள் இயற்றப்பட்டன.

·        ஆசிரியப்பா – ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம்

·        வெண்பா – வெண்டாழிசை, வெண்டுறை, வெளி விருத்தம்
·        கலிப்பா – கலித் தாழிசை, கலித் துறை, கலி விருத்தம்
·        வஞ்சிப்பா – வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம்

      ஆகியன புதிய பாவினங்களாகும். இவற்றால் தமிழின் தனித்தன்மையும் இயல்பும் மறைந்துவிடவில்லை. 

      தமிழர்கள் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய வடமொழிகளை பயிலும் வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியன வடமொழிச் சொற்களால் அவற்றின் தனித்தன்மைக்கு ஊறு நேர்ந்ததுபோல தமிழில் நடைபெறவில்லை.

      போர் / வீரம் பற்றிப் பாடுவது புறப்பொருள் என்றும் காதலைப் பாடுவது அகப்பொருள் என்றும் இங்கு வரையறை செய்யப்பட்டிருந்தது. சமண, பவுத்த சமயங்களில் வரவால் இவற்றில் சிந்தனை மாற்றம் உண்டானது.

      மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களை அடக்கி காமம், வெகுளி, மயக்கம் என்னும் அகப்பகையை வெல்லுவது போர்க்கலத்தில் பகைவரை வெல்வதைவிட மேலானது என்ற புதுக்கருத்து தோன்றியது. 

    அகப்பகையை வென்ற அருகர் (தீர்த்தங்கரர்), புத்தர் ஆகியோரது வெற்றியே மனிதனை உயர்ந்தகதிக்கு அழைத்துச் செல்லக்கூடியது என்று வலியுறுத்தப்பட்டது. போர்க்கள வெற்றியைவிட ஐம்புல வெற்றியைப் பாடுதல் என்ற நிலை உருவானது ஓர் தலைகீழ் மாற்றம்.

·        புத்தம் சரணம் கச்சாமி
·        தம்மம் சரணம் கச்சாமி
·        சங்கம் சரணம் கச்சாமி

  இது புகழ்மிக்க பவுத்தச் சொல்லாடல். பவுத்தத பிக்கு / பிக்குணிகளின் கூட்டத்திற்கு சங்கம் என்று பெயர். இது தமிழ்ச்சொல் அல்ல; மாறாக பாலி (வட) மொழிச்சொல். சமணத்துறவிகளின் கூட்டத்திற்கும் சங்கம் என்ற பெயர் வழங்கப்பட்டது. இதன் வேறுபெயர் கணம். சங்கம், கணம் இரண்டும் ஒன்றே. களப்பிரர் ஆட்சிக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் தமிழுக்காக ஏற்படுத்தியது தமிழ்க்கழகமாகும். பிற்காலத்தில் இதுவும் புத்த, சமணத் தாக்கத்தால்  சங்கமாக்கப்பட்டுவிட்டது.

    அக்காலத்தில் சமணத்துறவிகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். அச்சங்கம் நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என நான்காகப் பிரித்திருந்தனர். இவற்றில் கச்சை, அன்வயம் என்ற உட்பிரிவுகளும் இருந்தன. நான்கில் நந்திகணம் புகழ்மிக்கது. இந்தப் பிரிவைச் சேர்ந்த வஜ்ரநந்தி கி.பி.470 இல் நந்திகணத்தை இரண்டாகப் பிரித்து திரமிள சங்கத்தை உண்டாக்கினார். இதுவே திராவிட கணம், தமிழ்ச்சங்கம் என்றல்லாம் சொல்லப்படுவது. இவற்றில் சமணத்துறவிகள் மட்டுமே இருந்தனர். மதப்பரப்புதலே இதன் வேலை. பாண்டிய தமிழ்ச்சங்கம் போன்ற சங்கம் இதுவல்ல என மயிலையார் தெளிவுப்படுத்துகிறார். 

   பட்டியல் மிகவும் நீண்டுவிட்டாதா? என்ன செய்வது? இருண்ட காலமாயிற்றே! நாளை இரண்டாம் பகுதியில் பொற்காலப் பட்டியல்! 
  

27.அ பொற்கால சோழப்பேரரசு தமிழ்மொழிக்குச் செய்தது என்ன?    (முதல் பகுதி)                         

                                                                                      
பொற்காலப்பட்டியல்

     தமிழகத்தின் பொற்காலம் என்று அழைக்கப்படும் பிற்காலச் சோழர்கள் ஆட்சி கி.பி. 850 இல்  விஜயாலனால் தொடங்கப்பட்ட அரசாகும். இவ்வரசு  மூன்றாம் இராஜேந்திரன் பாண்டியர்களால் தோற்கடிக்கப்படும் கி.பி. 1279 முடிய நீடித்தது. நான்கு நூற்றாண்டுகள் நீடித்த இந்த பிற்கால சோழ அரசு கி.பி. 1050 வாக்கில் உச்சத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

    முதலாம் ராஜராஜன் (கி.பி. 985 – 1014), முதலாம் ராஜேந்திரன் (கி.பி. 1012 – 1044), முதலாம் ராஜாதிராஜன் (கி.பி. 1018 – 1054) ஆகிய மன்னர்களின் காலப்பகுதியில் நடைபெற்ற போர்கள், வெற்றிகள், அரசின் எல்லைகள், பரப்பளவு, கட்டப்பட்ட பிருமாண்ட தஞ்சாவூர் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில்கள், இவர்கள் செய்த சைவத்தொண்டுகள் போன்றவை மட்டுமே பொற்காலத்தைக் கட்டமைக்க நமது வரலாற்றாசிரியர்களுக்குப் போதுமானதாக உள்ளது.

     ஒட்டுமொத்த காலத்தை எடுத்துக்கொண்டால் சைவ இலக்கியம் உள்ளிட்ட சில தேறுகிறது. இவர்கள் கட்டமைக்கும் இக்கால கட்டப்பகுதியில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சி அறவே இல்லை எனலாம்.

   இல்லாவிட்டால் என்ன? அந்தக் காலகட்டத்தில் இங்கு வடமொழிகளுள் ஒன்றான சமஸ்கிருதம் இங்கு அரசமொழியாகவே கோலோச்சியிருந்தது. அதைப் பற்றி சில குறிப்புகள் மட்டும்.

·        நாடெங்கும் சமகிருதம் கற்பிக்க வேதபாடசாலைகள் தொடங்கப்பட்டன. 

·        சம்ஸ்கிருத அறிஞர்கள் குமாரிலர், சங்கரர் இவர்கள் காலத்தவர்கள்.

·        இவர்களின் மெய்கீர்த்திகளைக்கூட (பிரசஸ்தி)  சமஸ்கிருதத்தில்தான் எழுதினர்.

·        காவிரியின் தென்கரையில் வேங்கடாச்சார்யா – சுந்தரி என்கிற பார்ப்பனரின் மகன் வேங்கட மாதவர் ரிக் வேதத்திற்கு மிகவிரிவான பாஷ்யம் (உரை) எழுதினார். உலகத்திலேயே மிகவும் புகழ் நிறைந்த வீரதீரப் போர்வீரனின் நாட்டில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்ததாக அவர் கூறுகிறார். இவரை ஆதரித்த அரசன் வீரசோழன், வீரராஜேந்திரன் என்றெல்லாம் புகழப்பட்ட முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – கி.பி. 955) ஆவான். 

·        தஞ்சைப் பெரியகோயிலில் நடிப்பதற்காக இராஜ ராஜஸ்வர நாடகமும் திருப்பூந்துருத்தி கோயிலில் படிப்பதற்காக இராஜராஜ விஜயம் என்ற காவியமும் இருந்ததாக கூறப்படுகிறது. பெயரைப் பார்க்கும்போதே இது தமிழில் இல்லை என்பது விளங்கும். 

·        முதலாம் இராஜேந்திரனைப் பற்றிய திருவாலங்காட்டுச் செப்பேட்டை வரைந்தவர் நாராயண கவி என்ற சமஸ்கிருதப் பண்டிதர். 

·        தென்னார்க்காட்டில் எண்ணாயிரம் என்ற ஊரில் பெரிய சமஸ்கிருதக் கல்லூரி நடத்தப்பட்டது. இவ்வூர் இராஜராஜச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. திருபுவனை என்னுமிடத்திலும் சமஸ்கிருதக் கல்லூரி இருந்தது. இவ்வாறாக நாடெங்கும் இருந்த வேதபாடசாலைகள் எண்ணற்றவை.

·        சமஸ்கிருத இலக்கணப் பயிற்சி அளிப்பதற்காக ‘வியாகரணதான வியாக்யான மண்டபம்’ திருவொற்றியூர் கோயிலில் கட்டப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கள் காவனூர் எனும் ஊரை இதற்கு இறையிலியாக்கக் கட்டளையிட்டான்.

·        சைவத்திருமுறை வகுத்ததையும் ஓதுவார்களைக் கொண்டு தஞ்சைப் பெரியகோயிலில் 48 ஓதுவார்களை நியமித்ததையும் இவர்கள் ஆகச்சிறந்த தமிழ்ப்பணியாக சொல்கிறார்கள்.

·        தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கில் தேவரடியார்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலை இவர்களது கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கோயிலுக்கும் பொருந்தும். 

·        முதலாம் குலோத்துங்கன் சமஸ்கிருதப் புலமைகொண்ட சைவப் பிராமாணர்கள் ஒரு கிராமத்தை நிர்மாணித்தான். அக்கிராமத்தில் வாழ்ந்த கேஸவ ஸ்வாமின் இரண்டாம் இராஜராஜனிடம் பணிசெய்தார். அவரை சமஸ்கிருதப் பேரகராதி  உருவாக்க அரசர் கட்டளையிட்டார்.

      இம்மாதிரியான சமஸ்கிருத சேவைகளுக்கு இடையேதான் தமிழ் கொஞ்சம் தலைகாட்டியது. அதுவும் சோழ அரசின் இறுதிப்பகுதியில் நடைபெற்றது மறைக்கமுடியாத உண்மை. சோழ அரசின் முதல் பாதியில் இராஜகுருக்கள், முதல் அமைச்சர்கள், படைத்தலைவர்கள் என அனைவரும் வட இந்தியப் பார்ப்பனர்களாகவே இருந்தனர். அவர்களுடைய ஆதிக்கத்தில்தான் மன்னர்கள் பெயரளவில் பொம்மைகளாக ஆண்டுவந்ததாக கருத இடமுண்டு. 

   சோழர்களின் இறுதிக் காலத்தில்தான் சூத்திரச் சாதியைச் சேர்ந்த தமிழர்கள் அதிகாரிகளாகவும் நிலவுடைமையாளர்களாகவும் இருந்துள்ளனர். இருபினும் இவர்களுக்கு மததலைமைப் பொறுப்பு வழங்கப்படவில்லை. சூத்திர மடங்களைப் பொறுக்காத பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டவையே ‘குகையடிக் கலங்கள்’ என தெ.பொ.மீ. குறிப்பிடுகிறார். 

    சீவக சிந்தாமணி, பெருங்கதை (உதயணன் கதை) ஆகிய களப்பிரர்கால நூல்களை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி உள்ளிட்ட பலரும் சோழர் கால நூலாகவேக் குறிப்பிடுகின்றன. இதில் குழப்பம் உள்ளது. 

   திருஞான சம்மந்தர் பாடிய பதிகங்களை முதல் மூன்று தேவார திருமுறைகளாகவும் திருநாவுக்கரசர் பதிகங்களை 4, 5 , 6 வது திருமுறையாகவும் சுந்தரர் பாடல்களை 7 வது திருமுறையாகவும்  முதலாம் இராஜராஜன் வகுத்ததாகச் சொல்வதும் கேள்விக்குரியது. 

    கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஜெயங்கொண்டார், சேக்கிழார்  ஆகியோரின் படைப்புகள்தான் மிஞ்சுகின்றன. இதில் உள்ள ஓர் அம்சம் இங்கு கட்டாயம் குறிப்பிடவேண்டியது. முதலாம் இராஜேந்திரனின் மகளான அம்மங்காதேவிக்கு பிறந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சாளுக்கிய மரபிற்கேற்ப ஏழாம் விஷ்ணுவர்த்தனன் எனும் பெயர்பெற்ற முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 – கி.பி. 1122) , அவனது மகன் விக்கிரமச் சோழன் (கி.பி. 1122 – கி.பி. 1135), அவனது பேரன் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133 – கி.பி. 1150) ஆகியோர் ஆட்சிக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் என்பதுதான் அது. 

  முதலாம் குலோத்துங்களின் ஆட்சியின் இறுதியில் ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி பாடுகிறார். தீபங்குடிப் பத்து என்னும் நூலை இயற்றிய இவர் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உள்ளது.
   மூன்றாம் குலோத்துங்கனி
ன் காலத்தில் கம்பர்  இராமாயனம் எழுதுகிறார். ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிகோவை ஆகியவையும் கம்பர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. 

  ஒட்டகூத்தர் மூவருலா, ஈட்டி எழுபது, எழு எழுபது, தக்கயாகப்பரணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். புகழேந்திப்புலவர் நளவெண்பாவையும் சேக்கிழார் பெரிய புராணத்தையும் படைத்தனர். 

    வடமொழிகளின் இலக்கண அமைப்பை தமிழாகக் காட்டிய புத்தமித்தரர் எழுதிய வீர சோழியம், பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் போன்றவையும் உள்ளன. 

  களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகவும் அதற்கு மாற்றாக சோழர் காலத்தைப் பொற்காலமாக மாற்றி இதுவரை வரலாறு கட்டமைத்தவர்களும் இன்று தமிழ் தேசியம் பேசும் பலரும் ஓரணியில் இருப்பதைக் காணமுடிகிறது. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் வேற்றுமொழியினரின் சேவை தமிழுக்குத் தேவையில்லை என்றும் அவர்களைத் தூற்றும், மறைக்கும் போக்கு இன்று தமிழகத்தில் மேலோங்கியுள்ளது. 

    இன்று தமிழ் தேசியப் பாசிஸ்ட்கள் ஈ.வே.ராமசாமியை கன்னட வடுகர் என்று நிராகரிக்கின்றனர். தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அவரது படத்தைக்கூட வைக்க இவர்கள் விரும்பவில்லை. ஆனால் இவர்கள் சோழ அரசின் பொற்காலப் பெருமைகளை விதந்தோதுபவர்களாகவும் இருக்கின்றனர். குலோத்துங்கன் கால இலக்கியத்தை விரும்பும் இவர்களால் அவைதீக மதங்களான புத்தம், சமணம், களப்பிரர்கள், பெரியார் ஆகியவற்றை ஏற்க இயலவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.  

  வரலாற்றை நேர்மையாக புறவயமான அணுகுமுறையுடன் எதிர்கொள்ளாமல் சுய விருப்பு, வெறுப்பு, சாதி, இனம், மொழி என்கிற குறுகிய கண்ணோட்டத்துடன் அணுகும் இந்திய, தமிழக வரலாற்றெழுதியலின் (Historiography) அவலம் இது. 

துணை நின்றவை:

01.களப்பிரர் ஆட்சியில் தமிழகம்  - மயிலை சீனி.வேங்கடசாமி
02.சோழர்கள் (தொகுதி1,2) – கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
03.தமிழக வரலாறும் பண்பாடும் – டாகடர் கே.கே.பிள்ளை
04.சோழர் வரலாறு – டாக்டர் மா.இராசமாணிக்கனார்


28. இரு   வாழ்விகள் (Amphibians)  ஏன்?                 



     பொதுவாக தாவர விலங்குகள் ஓர் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வாழத்தேவையான தகவமைப்புக்களைப் (Adaptation) பெற்றுள்ளன. வாழிடம் மற்றும் தட்ப வெப்பநிலைகளுக்கேற்ப இவைகள் தகுந்த பண்புகளைப் பெற்று வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

   ஒரு சில குறிப்பிட்ட உயிரினங்கள் இருவேறு சூழல்களில் வாழக்கூடிய தன்மையைப் பெற்று விளங்குகின்றன. இவற்றை நாம் இருவாழ்விகள் (Amphibians)  என்று அழைக்கிறோம். குளிர் ரத்தப் பிராணிகளான இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில் உருமாற்றம் நிகழ்கிறது. தாவரங்களிலும் இருவாழ்விகள் உண்டு. பிரையோஃபைட்டா பிரிவைச் சார்ந்த தாவரங்களும் இருவாழ்விகளே. (எ.கா.) லிவர்வொர்ட்ஸ் (ஈரல் வடிவம்), ஹார்ன்வொர்ட் (கொம்பு வடிவம்), மாஸ்கள், ரிக்‌சியா. 

  முதலில் ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இருக்கும் பாடப்பகுதி அப்படியே கீழேத் தரப்படுகிறது.

      “இருவாழ்விகள் முதுகெலும்புடைய குளிர் இரத்தப் பிராணிகள் ஆகும். இருவாழ்விகளின் உடலில் செதில்கள் காணப்படுவதில்லை. இவை நீரிலும், நிலத்திலும் வாழும் திறனைப் பெற்றுள்ளன. இருவாழ்விகள், முதுகெலும்பிகளில் மிகச்சிறிய வகுப்பாகும். இருவாழ்விகளின் தோலில் உரோமங்கள் இல்லை. இவை சுவாசித்தலுக்காக செவுள்கள், நுரையீரலைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் ஈரமான தோலும் சுவாசத்தின்போது வாயு பரிமாற்றத்தில் உதவுகிறது. தவளைகள், சாலமாண்டர்கள், தேரைகள் ஆகியவை இருவாழ்விகளுக்கு எடுத்துக்காட்டாகும். இருவாழ்விகளின் இதயம் மூன்று அறைகளைக் கொண்டது. அவை இரு ஆரிக்கிள்கள், ஒரு வெண்டிரிக்கிள் ஆகும்.”

மேலும் அறிந்துகொள்வோம் – பகுதியில்…

    “இருவாழ்விகள் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதில் அதிகத்திறன் கொண்டவை. தோல் மூலமாகவும் சுவாசம் நடைபெறும் காரணத்தால் கதிரியக்கம், சுற்றுச்சூழல் மாசு, வாழுமிடத்தில் ஏற்படும் தடைகள் போன்றவற்றை இவை எளிதாக உணர்கின்றன. சுற்றுப்புறத்தில் ஏற்படும் அறிகுறிகளை இருவாழ்விகளால் முதலில் உணர இயலும் என்று அறிவியல் அறிஞர் நம்புகின்றனர். அமில மழை, ஓசோன் படல பாதிப்பு, வேதியச் சூழ்நிலைக்கேடு ஆகிய காரணங்களால் இரு வாழ்விகளுள் சில இனங்கள் கடந்த 20 ஆண்டுகளில் அழிந்துவிட்டன.” 

     இவை இருவாழ்விகளாக இருக்கவேண்டிய அவசியம் குறித்த எந்த விளக்கமும் இதில் இல்லை. அறிவியல் அறிஞர்களின் நம்பிக்கையைச் சொல்பவர்கள் உண்மையைச் சொல்ல மறப்பதேன்? வெறும் நம்பிக்கைகளைப் பேசுவது அறிவியல் அணுகுமுறை அல்ல. எவ்வித விளக்கமும் இல்லாமல் இவ்வாறு சொல்வதைத் தவிர்த்து இருவாழ்விகள் குறித்து சொல்லவேண்டிய தகவல்களை விட்டுவிடுகிறார்கள். 

     தவளைகள், சாலமாண்டர்கள் போன்றவை வெளிக்கருவுருதல் நடைபெறும் உயிரிகளாகும். பெண் உயிரிகள் கருவுருறாத முட்டைகளை நீரில் பீய்ச்சுகின்றன. நுரை போன்று மிதக்கும் இம்முட்டைகளின் மீது ஆண் உயிரிகள் பீய்ச்சும் விந்தணுக்கள் வெளியில் இணைந்து கருவுருதல் நடைபெறுகிறது. இதைதான் நாம் வெளிக்கருவுருதல் என்கிறோம்.  இவைகள் இருவாழ்வியாக இல்லாதபடசத்தில் இனப்பெருக்கம் சாத்தியமில்லை. (ஆமைகள் கூட நீரில் வாழ்ந்தாலும் முட்டையிட நிலத்திற்கு வந்து குழிதோண்டி முட்டையிடும். இவை ஊர்வன வகுப்பில் வகைப் படுத்தப்படுகின்றன.)

   முட்டையிலிருந்து வெளிவரும் இளம் உயிரி தலைப்பிரட்டை மீனைப் போன்றது. எனவே இவை செவுள்களால் நீரில் மட்டுமே சுவாசிக்க முடியும். உருமாற்றம் முழுமையடையும் போதுதான் இவற்றால் நிலத்தில் வசிக்கமுடியும். அதாவது தோல் மற்றும் நுரையீரலால் சுவாசிக்க முடியும். 

    தவளைகள் உருமாற்றத்தில் தலைப்பிரட்டை, வாலுள்ள தவளை என்று இறுதியாக வாலை இழக்கின்றன. எனவே ‘வாலில்லாதது’ என்ற பொருள்தரக்கூடிய அனுரா (Aunra) என்ற வகைப்பாட்டியல் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. 

  சாலமாண்டர்கள் 4 கால்கள், வால் ஆகியவற்றுடன் பல்லி போன்று காணப்பட்டாலும் இவை ராட்சதப் பல்லி அல்ல. பல்லிக்கும் இதற்கும் ஓர் ஒற்றுமையும் உண்டு. பல்லி போன்ற சில உயிரினங்களுக்கு இழப்பு மீட்டல் சக்தி உண்டு. பல்லி இழந்த வாலை மட்டுமே திரும்பப் பெறும். ஆனால் சாலமாணடர்கள் வால் மற்றும் 4 கால்களும் இழப்புமீட்டல் திறன் மிக்கவை. (இழப்புமீட்டல் திறன் பற்றி பிறிதொரு சமயத்தில் பார்ப்போம்.) 

    தாவரங்களில் பிரையோஃபைட்டுகள் இரு வாழ்விகளாகும். இதன் வாழக்கைச் சுழற்சியில்  சந்ததிமாற்றம் இருக்கிறது. இவற்றில் கருவுறுதல் நடைபெற  நீர் தேவையாக உள்ளது. பரிணாமக் கொள்கைகளை விளங்கிக் கொள்ள இத்தகைய உயிரினங்கள் நமக்கு உதவுகின்றன.

29. அறிவியலில்  தொன்மத்திற்கு இடமேது?

         உலகில் உள்ள அனைத்துப்பொருள்களும் பஞ்சபூதங்களால் ஆனவை. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்.” (பக். 195, முதல் பருவம், அறிவியல், எட்டாம் வகுப்பு)  அறிவிலில் பூதங்களுக்கு இடமில்லை, அதுவும் பஞ்சபூதங்களுக்கு.

   சில பக்கங்களுக்குப் பிறகு (பக். 201) தூய பொருட்கள், தனிமங்கள், சேர்மங்கள் பற்றியெல்லாம் பேசப்படுகிறது. இங்கு பஞ்சபூதங்களைக் காணோம். 

  பொருட்கள் மூலக்கூறுகளால் (மூலகங்கள்) ஆனது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை என்று சொல்வதில் இவர்களுக்கு என்ன சிக்கல் என்று தெரியவில்லை. 

  புளுட்டோ கோள்களுக்குரிய பண்புகளைப் பெறாததால் சூரிய குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டு தற்போது  புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய எட்டு கோள்கள் பட்டியலிடப்படுகின்றன. இனி நமது பாடப்புத்தகங்களில் சனி, ராகு, குரு, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், கேது என நவக்கிரகங்களும் பட்டியலிடப்போகும் நாள் தொலைவில் இல்லை!  வான சாஸ்திரம் என்று சொல்லப்படும் ஜாதகத்தில் மேற்கண்ட ஒன்பதும் கிரகங்களாக கணிக்கப்படுவது  அனைவரும் அறிந்த ஒன்று.

  இந்துமதம் பஞ்சபூதங்களை சிவனுடன் தொடர்புப் படுத்துகிறது. இதுவே மாயாவாதம்.  பவுத்தம் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு அடிப்படைகள் உள்ளதென விவரிக்கிறது. 

  சாத்விக குணம் (வெள்ளை), ராட்சத குணம் (சிவப்பு), தாமச குணம் (கருப்பு) ஆகிய முக்குணங்களின் சேர்க்கையால் இவ்வுலகம் உருவானதாக சாங்கியம் சொல்கிறது. ஐம்பூதங்களின் சேர்க்கையை பஞ்சீகரணம் என்றும் சாங்கியம், வேதாந்தம் ஆகியவை குறிப்பிடுகிறது. 

   இங்கு நம்முன் எழும் கேள்வி, அறிவியலுடன் தொன்மத்தை இணைக்கவேண்டிய தேவை என்ன என்பதுதான். வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தர்மங்கள் போன்ற அனைத்திலும் அறிவியல் இருப்பதான ஓர் பொய்மை இங்கு தொடர்ந்து பரப்பப்படுகிறது. இதற்குக் குழந்தைகளைப் பலியாக்க வேண்டாம் என்பதே நமது கரிசனம். 

 
30. தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியின் சாதனைகள்!


    கி.பி. 1676 முதல்  கி.பி. 1856 முடிய தஞ்சாவூரை ஆண்ட மராட்டியர்களின் சிறப்புகள் நமது பாடநூற்களில் கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்படுகின்றன.


  • ·        நிர்வாகத்தில் புரோகிதர்களுக்கு உயர்வான இடம்
  • ·        ராமபத்ர தீட்சிதர், பாஸ்கர தீட்சிதர் சமஸ்கிருத அறிஞர்கள் ஆதரிக்கப்படுதல்.
  • ·        ஆந்திரக் காளிதாசர் எனப்பட்ட ஆளுரிக் குப்பண்ணா என்ற தெலுங்குக் கவிஞர் துல்ஜாஜியால் போற்றப்படுதல்.
  • ·        துல்ஜாஜிக்கு  ஓவியம், இசை, தத்துவம், வானவியல் மற்றும் நடனத்தில் ஆர்வம்.
  • ·        தென்னிந்தியாவின் மிகப்பெரிய நூலகம் மற்றும் உயர்கல்வி ஆய்வு மையமான சரஸ்வதி மஹால் இரண்டாம் சரபோஜியால் கட்டப்பட்டது.
  • ·        இங்கு ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மனி, கிரேக்கம், சம்ஸ்கிருதம் போன்ற மொழி நூல்களும் ஓலைச்சுவடிகளும் ஏராளமாக உள்ளன. (சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு)

    இங்கு தமிழ் ஓலைச்சுவடிகளே இல்லையா? மராத்தி மொழி ஆவணங்களுக்கு ‘மோடி ஆவணங்கள்’ என்று பெயர். ‘மோடணே’ என்றால் மராத்தி மொழியில் உடைதல் என்று பொருள். அதுவே ‘மோடி’ என மருவியிருக்கக் கூடும். 

   மராத்தி மொழிக்கு தனி வரி வடிவம் இல்லாததால் ‘தேவநாகரி’ லிபியைப் பயன்படுத்தினர். தேவநாகரி எழுத்தை சிதைத்து குறில், நெடில் வேறுபாடின்றி விரைவாகவும் ரகசியமானதுமான சுருக்கெழுத்து முறை இதுவாகும். எழுதுகோலை எடுக்காமல் காகிதத்தில் தொடர்ந்து எழுதும் முறையான இவற்றைப் புரிந்துகொள்ள அனைவராலும் இயலாது. முறையான பயிற்சி அவசியம். 

  இரண்டாம் சரபோஜி அழகிய தோற்றம், வீரம், புகழ், ஒழுக்கம் நிரம்பியவர். இவர் கல்வி, கலைகளில் வாழ்வை செலுத்தி புனித வாழ்வு வாழ்ந்ததாக ஆங்கிலேய ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறார். 

    பொதுவாக அரசர்களின் பலதார மணம் போன்ற பழக்கங்கள் முகலாய மன்னர்களுக்கு மட்டுமே உரித்தானதாக ஓர் தவறான கருத்து பாடநூற்களில் வெளிப்படுகிறது. இரண்டாம் சரபோஜிக்கு  (கி.பி. 1777 – கி.பி. 1832) 20 மனைவிகள் கல்யாண மஹால் (கல்யாண விலாசம்) என்னும் அரண்மனையில் இருந்தனர். ‘இருட்டு மஹால்’ எனச் சொல்லப்படும் உல்லாச நீர் விளையாட்டுக் குளமும் காதல் உணர்வை கிளர்த்த வரையப்பட்ட ‘கிருஷ்ண லீலை’ களும் இருக்கின்றன. முக்தாம்பாள் என்னும் ஆசை மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க ஒரத்தநாட்டில் முக்தாம்பாள் சத்திரம் (முக்தாம்பாள் புரம்) அமைத்தார்.

   இவரது 48 வைப்பாட்டிகள் மங்கள விலாச மகளிர் என்னும் பெயரில் ‘மங்கள விலாசம்’ என்னும் தனி மாளிகையில் தங்க வைக்கப்படிருந்தனர். இவர்களில் மராத்தி, தெலுங்கு, தமிழ்ப் பெண்களும் பிராமணர், நாயுடு, கிருத்தவ பெண்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

  1855 இல்  சரபோஜி மறைந்தபிறகு 1858 இல் செரி என்கிற ரெசிடெண்ட் (ரெசிடெண்ட்கள், கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகளாக தஞ்சையை ஆண்ட அதிகாரிகள். இவர்களுக்கு மராத்திய மன்னர்களே ஊதியம் வழங்கினர்!)    அப்போது உயிரோடிருந்த 15 மனைவிகளைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். 20 வயதான் சமராயி சாட், 12 வயதான சுந்தலியா ஆகியோர்  அவருக்குப் பதில் சொல்லியுள்ளனர். மங்களவிலாஸ் மகளிரை ரெசிடெண்ட் விசாரிக்கவில்லை. அதிகாரப்பூர்வ கல்யாண விலாசத்தில் குழந்தை அரசிகள் இருந்தபோது மங்கள விலாசில் இல்லையென்று சொல்ல வழியில்லை. 

   பெண் குழந்தைகளை விற்கும் அடிமைமுறை வழக்கில் இருந்தது. இளம் பெண் குழந்தைகளை தமது பாலியல் வேட்கைக்கு பயன்படுத்தும் போக்கு மிகுந்திருந்தது. பூப்படையாத பெண்குழந்தைகளை பாலுறவு கொள்ளும் இவர்களது வக்கிரபுத்தியின் வெளிப்பாடாக இதைக் கொள்ளலாம். இத்தகைய அடிமை முறை குறித்து புகார் எழும்போது, அதைத் தடுக்க முயலாமல் ஆங்கிலேயர்  அடிமை வியாபாரத்திற்கு துணை நின்றது வரலாற்று ஆதாரங்களாக நீண்டிருக்கிறது. 

   துல்ஜாஜி தன்னுடைய தத்துப்பிள்ளையான சரபோஜியை சுவார்ட்ஸ் பாதிரியாரிடம்  கல்வி கறக ஏற்பாடு செய்திருந்தார். பாதுகாவலர் அமர்சிங். சரபோஜிக்குப் பதிலாக ஆங்கிலேயர்களால் அமர்சிங் பதவியில் அமர்த்தப்பட்டார். சரபோஜி மற்றும் அவரது ஆட்கள் அமர்சிங்கால் கொடுமைப்படுத்தப்பட்டனர். சரபோஜி கொலை முயற்சியிலிருந்து சுவார்ட்ஸ் பாதிரியார் உதவியுடன் தப்பி னார். காரன்வாலிஸ் பிரபு (கி.பி. 1786 – கி.பி. 1793) அமர்சிங்கை நீக்கிவிட்டு இரண்டாம் சரபோஜியை அரசராக்கினர்.

    இந்தியாவின் தலைமை ஆளுநராக வெல்லஸ்லி பிரபு (கி.பி. 1796 – கி.பி. 1805) இருந்த காலத்தில்  (1798)  ஆங்கிலேயருடன் இரண்டாம் சரபோஜி ஒப்பந்தம் செய்துகொண்டு ஓய்வூதியம் பெறும் பொம்மை அரசரானார். 

  இந்த ஒப்பந்தத்தின்படி தஞ்சையும் வல்லமும் அரசரிடம் இருக்கும். எஞ்சியவை சென்னை மாகாணத்துடன் இணைக்கப்படும். ஆங்கியேய அரசு சரபோஜிக்கு இரு லட்சம் வராகனும் அமர்சிங் குடும்பத்திற்கும் ஓய்வூதியம் வழங்கும். பதவியில் இருக்கும்போதே ஓய்வூதியம் பெற்றவர் இவராகவே இருக்கக்கூடும். 

   எனவே பொம்மை மன்னர் என்ன செய்வார்?  இலக்கியம், கலை, ஓவியம், நடனம், கட்டடக்கலை என்னும் பல்வேறு நுண்கலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன் காரணமாக சரஸ்வதி மஹால் நூலகம், மனோரா போன்றவையும் அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்  இயற்றிய சரபேந்திர பூபாளக் குறவஞ்சி ஆகிய இலக்கியங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. இதைக்கொண்டு மட்டும் தஞ்சை மராட்டியர்களை மதிப்பிடுவது சரியாக இருக்க முடியாது. 

  இரண்டாம் சரபோஜியின் ஆங்கிலேய விசுவாசத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு மனோரா (மனோரதம்) ஆகும். மாவீரன் நெப்பொலியன் கி.பி. 1813 இல் லிப்சிக் (Leipzig) என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார். ஆங்கிலேய விசுவாசியான சரபோஜி அவர்களது வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு பட்டுக்கோட்டையிலிருந்து சேதுபாவாசத்திரம் போகும் வழியில் சாளுவ நாயக்கன் பட்டினம் (சரபேந்திர ராஜப்பட்டினம்) என்னுமிடத்தில் மனோரா உள்ளது. 

  அறுங்கோண அமைப்புடைய ஒன்பது அடுக்கு உப்பரிகை 23.3 மீட்டர் உயரம் கொண்டா கோபுரமாகும். அகழி, கோட்டைச்சுவர், அறைகள் என பல்வேறு அமைப்புகள் இதில் உள்ளன. 

 இதே மாதிரியான புறாக்கூண்டு போன்ற அறுங்கோண  அமைப்பை நாகூர் தர்ஹாவிலும் நாம் காணலாம். ‘மினார்’ என்றும் சொல்லப்படும் மினாரட் (Minaret) என்பது பின்னாட்களில் மருவி ‘மனோரா’ என்று ஆகியிருக்கலாம்.

  இந்திய – இஸ்லாமிய கட்டிடக்கலை பாணிகள் இணைந்த சரசானிக் (Saracenic) கலைபாணியைச் சார்ந்தது இத்தகைய கட்டங்கள். தஞ்சையில் உள்ள பல்வேறு கட்டடங்களில் இத்தகைய பாணியை நாம் கண்டுகளிக்கலாம். 

    இந்திய – கிரேக்க சிற்பக்கலை இணைவை காந்தாரக்கலை பாணியை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் நமது கல்வியாளர்களும் அவர்கள் தயாரிக்கும் பாடநூற்களும் ஏன் இவற்றைச் சொல்ல முன்வருவதில்லை? 

   நமது பாடநூற்கள் படையெடுப்புகள், கொள்ளையடித்தல், மதமோதல்கள், சகிப்புத்தன்மையின்மை, பலதாரமணம், ஆங்கிலேய ஆதரவு போன்ற பல காரணிகளுக்கும் இஸ்லாமிய மன்னர்களின் மீது மட்டும் குற்றம் சுமத்தி  வெறுப்பு அரசியல் வரலாறு எழுதும் வேலையைத்தான் செய்கின்றன. 

    இத்தகைய வெறுப்பு அரசியல்தான் மகாத்மா காந்தியைக் கொன்றது. வெறுப்பு அரசியலை இளம் பிஞ்சுகளிடம் விதைப்பதைப் போன்ற கொடிய பாதகச்செயல் வேறில்லை. அதுவும் பெரியார் பிறந்த மண் என்று பெருமை பேசப்படும் தமிழ்நாட்டிலும் திராவிட இயக்கத்தின் நெடுங்கால ஆட்சியும் நடப்பது மாபெரும் அவலம்.

(1777, செப்டம்பர் 24, இரண்டாம் சரபோஜியின் பிறந்தநாள்.)

உதவியவை: 

தமிழகத்தில் அடிமை முறை – ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் (மார்ச் 2007)