சனி, செப்டம்பர் 30, 2023

சமூக இடைவெளி!

                                                             சமூக இடைவெளி!

மு.சிவகுருநாதன்


 

           கொரோனா காலத்தில் பிரபலமானது சமூக இடைவெளி எனும் சொல்லாடல். நாம் இங்கு அந்தச் சமூக இடைவெளியைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஏழைபணக்காரன், கிராமம்நகரம், அறம் சார் வாழ்க்கைபோக்கிரி வாழ்வு, சாதி, மதம், மொழி, இனம் சார்ந்த இடைவெளிகள் தொடர்கின்றன. “இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்பது மேம்போக்கான பார்வையாக நிலைத்துவிட்டது. சாதிகள் முன்பைவிட தீவிரமாக துலக்கம் பெற்றுள்ளன. பண்பாட்டு அடையாளங்களைத் தேடுதல் என்கிற பெயரில் சாதி உன்னதமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடவே பல்வேறு இடைவெளிகளும் அதிகரித்துள்ளன. இவற்றை வெறுமனே சமூக அவலம் என்று மட்டும் கடந்து செல்ல இயலாது. இன்றுள்ள நவீன வசதிகள், பொருளாதார பலம், போதைப் பொருள்கள் பயன்பாடு, சினிமா-சின்னத்திரைகாட்சியூடக வன்முறைகள் போன்றவை காரணமாக அமைகின்றன. 

            பள்ளிகளிலும் சாதியம் துலக்கம் பெற்றுள்ளது. இந்த சாதியச் சமூகத்தை எடுத்துக்காட்டும் சிறிய அலகாக அது இருக்கிறது. சாதிக்கயிறுகள் கட்டுதல் தொடங்கி சாதிய வன்முறைக்கான களமாக வகுப்பறைகளும் பள்ளிகளும் மாறிவிட்டன. இதன் தொடர்ச்சியே நாங்குநேரியில் இரு தலித் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும். இந்தச் சமூகத்தின் விளைச்சலே ஆசிரியர்கள். அவர்களில் பலரும் சாதிய உணர்வுடன் இருப்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

         ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தில் இருக்கும் சாதியப்படிநிலையும் அதன் ஆதிக்கமும் பள்ளிகளிலும் எதிரொளிக்கிறது. இது அனைத்துச் சாதியப் படிநிலைகளுக்கும் பொருந்தும் ஒன்றாக உள்ளது. தலித்கள் அதிகமிருக்கும் இடங்களின் அவற்றின் உள்சாதி முரண்கள் பெரிதாக வெளிப்படுகின்றன. அனைத்துத் தளங்களிலும் சாதியத்தின் கொடிய வேர் ஊடுருவி உள்ளதை பெரும் அபாயமாக உணரவேண்டும். 

            இன்று தமிழ்ச்சமூகம் சாதிய ரீதியாக பிளவுபட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுதான் வேண்டும். வீணானப் போலிப் பெருமிதங்கள் கதைக்கு உதவாது. முன்மைவிட சாதியம் தீவிர இறுக்கமடைந்துள்ளது. இனியும் பெரியார் மண் என்று பேசித்திரிவதில் பொருளில்லை. பெரியாரின் வழிவந்தவர்கள் அவரின் கருத்தியலுக்கு எதிராகச் செயல்பட்டதே இதற்கு முதன்மைக் காரணமாகும்.

      தமிழகத்தில் திராவிட இயக்கங்களும் மார்க்சிய இயக்கங்களும் வளர்த்தெடுக்கப்பட்ட விதம் மிகச் சாதாரணமானதல்ல. இதன் பின்னால் தலைவர்கள் மற்றும் தொண்டரணிகளின் தன்னலமற்ற உழைப்பும் தியாகமும் இருந்தன. முந்தைய தலைமுறைகளின் கருத்தியல் சார்ந்த வாசிப்பு இவ்வியக்கங்களை வளர்த்தெடுத்ததுடன் அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்தின. இன்று வாசிப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதுவும் அரசியல், கருத்தியல் சார்ந்த் தெளிவுகள் இல்லை. திரைப்படம், சின்னத்திரையில் தொடங்கிய இந்த வீழ்ச்சி இன்று சமூக வலைத்தளங்களில் மூழ்கிய சமூகமாக மாறியுள்ளது. கருத்தியல், அரசியலற்ற பேச்சு, எழுத்து என்பதாக இன்றைய தலைமுறை பிளவு சக்திகளுக்கு மறைமுகமாகத் துணைபோகிறது.

          சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பொறுப்பு அமைச்சர் செ.முத்துசாமி மதுப்பிரியர்களின் துயரங்களைப் பட்டியலிட்டு மிகவும் வருந்தப்பட்டார். கட்டிட வேலை உள்ளிட்ட மிகக்கடுமையான பணிகளுக்குச் செல்வோர் உற்சாக பானம் அருந்தினால்தான் நன்றாக வேலை செய்யமுடியும் என்பதால் காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும்; 180 மி.லி. மதுவை பகிர்ந்துக் குடிப்பதற்கு ஆள்தேடி காத்திருக்க வேண்டியிருப்பதால் அவர்களது பொன்னான நேரம் வீணாகிறது, எனவே 90 மி.லி. புட்டிகளில் (Tetra pack) மது விற்பனை செய்யவேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வந்துள்ளன என்றார். இவைகளை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளோம் என்றும் சொன்னார். இவை பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்பிருக்கிறது. இவை பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோது காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது என்றார் கடுமையாக. மாலையில் குடிப்பவர்களை வேண்டுமானால் அவ்வாறு கூறிக்கொள்ளுங்கள். கட்டிட வேலைகள் உள்ளிட்ட மிகக் கடுமையான வேலை செய்வோர்  குடிக்காவிட்டால் வேலை செய்யமுடியாது என்றும் சொல்லி அத்துடன் சாக்கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் இணைத்தார். இங்கு ஏன் எந்திரங்களைப் பயன்படுத்தவில்லை என்பது குறித்து அமைச்சர் ஏதுவும் சொல்லவில்லை.  

       நீதிமன்றங்கள் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளில் இருக்கக் கூடாது என்றது. அரசோ அவற்றை நெடுஞ்சாலைகள் இல்லை என மாற்றம் செய்தது. மதுவால் சிதறிப்போன குடும்பங்கள் மது வேண்டாம் என்று அழுது புலம்புகின்றனர். இவை அதிகாரங்களின் செவிகளில் எட்டுவதேயில்லை. மதுவால் கல்லீரல் உள்ளிட்ட உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் பற்றிய ஆய்வுகளோ, புள்ளிவிவரங்களோ அரசிடம் இருக்கின்றனவா? அரசே மது விற்பதால் இன்று  அதை போதைப்பொருள் அல்ல என்று கூறும் நிலை உருவாகியிருக்கிறது. மதுவைத் தவிர்த்துப் பிற போதைப்பொருட்களைத் தவிர்க்க உறுதிமொழியேற்கும் சடங்குகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

      மதுக்கடைக்குப் புதிய வரும் இளைஞர்கள், மிகவும் வயதான முதியவர்களை டாஸ்மாக் பணியாளர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்கவும் சிகிச்சை வழங்கவும் திட்டமிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த அமைச்சர்தான் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது, பணியாளர்கள் நின்றுகொண்டே பணிசெய்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். மதுவிலக்குப் பரப்புரையை டாஸ்மாக் மூலம் செய்யும் கொக்குத் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் முறை வெற்றிபெற நாமும் வாழ்த்துவோம்! டாஸ்மாக் பணியாளர்கள் மூலம் மதுவிலக்குப் பரப்புரை சாத்தியமா என்பதை அரசுதான் விளக்கவேண்டும்.

      மகாத்மா காந்தி கிராமங்களை பாரதம் என்றும் நகரங்களை இந்தியா என்றும் வருணித்தார். கிராமங்கள் இந்தியாவின் அடிப்படை என்பதை உணர்ந்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இவையிரண்டிற்குமான இடைவெளிகள் அதிகரிப்பது சமூகத்திற்கு கேடு என்பதை அவர் உணர்ந்திருந்தார். இன்று பெருநகரங்களை மையப்படுத்தியே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதிநவீன மருத்துவ வசதிகள் இருந்தும் சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே அடுத்தடுத்த மருத்துவமனைகள் திறக்கப்படுகின்றன. சென்னையை அடுத்து மதுரைக்கு பிருமாண்ட நூலகம் கிடைத்திருக்கிறது. கிராம, நகர நூலகங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவற்றிற்கு கிடைக்க வேண்டிய நிதிவசதிகள் பெருந்திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. சாலைகள் மாநகரில் போட்டால் போதும் என்கிற நிலை நாட்டுக்கு நல்லதல்ல. அரசுகளின் இத்தகைய புறக்கணிப்புகளும் சமூகத்தில் பாரிய விளைவுகளை உண்டாக்கும்.

       சில மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது. இதற்குக் காரணமான ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதை வேடிக்கை பார்க்கின்றன. மணிப்பூர் இன்னொரு குஜராத் ஆக மாற்றப்பட்டுள்ளது. அரியானாவிலும் இந்த வன்முறைகள் தொடர்கின்றன. சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி அதன்மூலம் ஆதாயம் பெற முயலும் சக்திகள் நாட்டில் அதிகரித்துள்ளன. இவை ஒடுக்கப்பட்டோரிடம் பிளவை மேலும் அதிகமாக்குக்கின்றன. பழங்குடி மற்றும் அட்டவணைச் சாதியினரிடம் உள்முரண்பாடுகளைத் தோற்றுவிக்க இந்த பிளவுச் சக்திகள் செயலாற்றுகின்றன. தமிழ்நாட்டின் மூன்று தலித் சமூகங்களிடம் திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் பிளவை ஏற்படுத்தி ஒருங்கிணைப்பைச் சாத்தியமில்லாமல் ஆக்கியுள்ளனர். வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு அளித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கிடையே நிரந்தரப் பிளவை வளர்த்துள்ளனர். எதிர்காலத்திற்கு மணிப்பூரைப் போன்று வன்முறைகளுக்கு வித்திடும் அரசியல் இங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது.

         வெறுப்பரசியல் கடந்த பத்தாண்டுகளாக அரசியல் யுக்தியாகவே மாற்றப்பட்டுள்ளது. குஜராத் மாடல் ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், அரியானா என்று இந்தியாவெங்கும் வெறுப்பரசியலை விதைப்பதில் மதவெறி சக்திகள் வெற்றி பெற்றுள்ளன. ரயில்வே சிக்னல் கோளாறு விபத்தையும் இவர்களால் மிக எளிதில் அந்நியச் சதியாக மாற்றிவிடமுடிகிறது. வெறுப்பரசியலின் உச்சமாக குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த கொடுமைகள் இருக்கின்றன. பொதுத்தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய வெறுப்பரசியல் உச்சம் தொட விரும்பும் சக்திகளுக்கு இனியும் ஊக்கம் தரக்கூடாது.

         சமூகத்தில் லும்பனிசம் (Lumpenism) அதிகரித்துள்ளது. நீதி செத்த உலகில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அரசியல் பெருமளவு குற்றமயமாகியுள்ளது. பொதுவாழ்விற்கு குற்றமிழப்பது அடிப்படைத் தகுதி என்றாகிவிட்டது. இவற்றில் மேல்தட்டு, நடுத்தட்டு, அடித்தட்டு என்கிற வேறுபாடெல்லாம் அழிந்து வருகிறது. தாம் வாழ பிறரை அழிப்பது என்கிற பொதுத்தன்மை பரவலாக வளர்ந்துள்ளது.

         மாணவர்களிடையே படிப்பைத் தவிர்த்த பிற செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்கள் பற்றிய கவலையின்றி ஒரு கற்பனை உலகில் வாழ நிர்ப்பந்திக்கப்படுள்ளனர். அறம் அல்லது நெறி சார்ந்த வாழ்வு பற்றிய எண்ணங்கள் பெரும்பாலும் இல்லை. பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் வன்முறை மனோபாவம் எங்கும் நிறைந்துள்ளது. இங்கு வழிவழியாக சொல்லப்படும் ஒழுக்கப் போதனைகள் இல்லாததுதான் காரணம் என்கிற மாயை பரப்பப்படுறது.  அதன் பின்னாலிருக்கும் அரசியல், சமூக நலன்கள் மறைக்கப்படுகின்றன.

     18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்ட சட்டத்தில் அனுமதியில்லை. ஆனால் ஓட்டுவதற்கு எவ்விதத் தடையுமில்லை. இவர்கள் பைக் ரேஸிலும் ஈடுபடுகின்றனர். இந்த சாசக உலகிற்கும் ஒருவித மனநோயிற்கும் இவர்கள் ஆட்பட்டுள்ளனர். பெற்றோர்கள் மீது வழக்குத் தொடுக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமிருந்தும் யாரும் கண்டுகொள்வதில்லை. இவர்களுக்கு சாலையில் நடந்துசெல்லும் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள்,  பெண்கள் குறித்து அக்கறை இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் நடக்கும் பைக் ரேஸ்தான் தலைப்புச் செய்தியாகும்.

            ஆனால் ஒவ்வொரு நகரத்திலும் சிறு கிராமத்தில்கூட இந்தக் கொடியவர்கள் இருக்கிறார்கள். சொந்தமாக பைக் வாங்க வசதியற்றவர்கள் கூட இரவல் பைக்கில் இத்தகைய சாகசங்கள் மூலம் உயிர்க்கொலைகளை செய்கின்றனர். சாலையில் செல்வோரை அச்சுறுத்துகின்றனர். ரேஷன் அரிசி எடுத்துச் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஆனால் இந்த ரேஸ் வாகனங்கள் வெறும் எச்சரிக்கையுடன் திரும்ப அளிக்கப்படுகின்றன. அவர்கள் மீண்டும் மீண்டும் சாகசங்களில் திளைக்கின்றனர்.

        போதைப் பொருள்களின் நுகர்வு பேரளவில் அதிகரித்துள்ளது. கஞ்சா போன்றவற்றின் பயன்பாடு கல்லூரி மாணவர்கள் என்ற நிலையிலிருந்து தற்போது பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும்  அளவில் வளர்ந்துள்ளது. இத்தகைய சமூக விரோதக் கும்பல்கள் அரசியல் ஆதரவுடன் செழித்து வளர்கின்றன. குற்றமயமாகும் அரசியல் வலைப்பின்னலில் இவைகளும் அங்கமாக இருக்கின்றன. போதை நுகர்வு ஏதோ தனி மனிதன் சார்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுவது வேதனையானது. இது சமூகச் சீரழிவாகப் பார்க்கப்பட வேண்டும். குழந்தைகள் இப்பழக்கத்திற்கு அடிமையாவது நாட்டின் எதிர்காலத்தைப் பாழாக்கும் என்பதை உணரவேண்டும்.

        மற்றமையைப் (Others) பற்றிய கவலைகள் யாருக்கும் இல்லை. சுயநல மோகம் மேலிருந்து கீழ்வரை ஆட்டிப்படைக்கிறது. இதில் ஏழைபணக்காரன், படித்தவன்படிக்காதவன் வேறுபாடெல்லாம் துளியும் இல்லை. கடந்த சில பத்தாண்டுகளாக வளர்ந்துவரும் நுகர்வுக் கலாச்சாரம் பெரும்பகுதி மக்களை சுயமோகிகளாகவும் சமூக அக்கறையற்றவர்களாகவும் உருமாற்றியுள்ளது. இதன் விளைவாகவே அரசியல் உணர்வும் மழுங்கடிக்கப்பட்டு வாக்குரிமையை விற்கும் நிலை வந்துள்ளது. மக்கள் சுரண்டப்படுவது குறித்த பிரக்ஞையின்றி தனிநபர் வழிபாட்டில் மயங்கிக்கிடக்கும் நிலை உருவாகிறது.

          நீதி செத்த உலகில் வாழ நேர்ந்துள்ள அறம் சார்ந்த கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் கூடுதலாக ஏற்படுகின்றன. அவர்களும் இந்த உலகில்தான் வாழ்ந்தாக வேண்டும். அவர்கள் ஒருவகையில் மனநோயாளியாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது. அறத்தை வலியுறுத்துவதும் கடைப்பிடிப்பதும் பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரத்தனங்களாக பார்க்கப்படுவது பெருங்கொடுமை. இவர்களது எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.  எனவே அறத்தின் வீழ்ச்சி எங்கும் நிக்கமற நிறைகிறது.  

         சமூகம் சாதி மற்றும் மதவெறிமயமாதலை நாம் உடனடியாகத் தடுக்க வேண்டும். வெறுப்பரசியல் எல்லாவற்றிற்கும் அடைப்படையாக உள்ளது. இந்த வெறுப்பும் அதனால் உண்டாகும் பிளவும் இளைஞர்களையும் குழந்தைகளையும் படுகுழிக்குள் தள்ளுகிறது. அறிவு செயல்படாத இடங்களில் இம்மாதிரியான மடமைகளும் வெறுப்பும் கோலோச்சுகின்றன. அறம் சார்ந்த அறிவும் வாழ்வும் நம்மை உயர்த்தும் என்கிற எண்ணம் விதைக்கப்பட்டு தழைத்தோங்க வேண்டும். இதற்கு சமூகத்தின் அனைத்து களங்களும் உதவ முன்வர வேண்டும்.

   நன்றி: ‘பேசும் புதியசக்திசெப்டம்பர் 2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக