வியாழன், ஜூலை 01, 2010

சென்னையைப் பிச்சைக்காரரகள் இல்லாத நகரமாக்கும் முயற்சி - உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னையைப் பிச்சைக்காரரகள் இல்லாத

நகரமாக்கும் முயற்சி

- உண்மை அறியும் குழு அறிக்கை


07. ஜூன் 2010
சென்னை


சென்னைநகர மேயர் வணக்கத்துக்குரிய எம்.சுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களாக சென்னையைப் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்கும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிவருவதை அறிவோம். (இந்து நாளிதழ், மே 5, மே 17, மே 21, மே 24, 2010). 179 பேர்கள் இவ்வாறு மே 24 வரை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கும் முதியோர் வாழ்வு இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பிச்சைக்காரர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஜூன் 6 முதல் தொடங்க உள்ளதாகவும் இதில் மாநகராட்சி ஊழியர்களுடன் தொண்டு நிறுவனங்களும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 18 தொண்டு நிறுவனங்களுடன் இது தொடர்பாகப் பேச்சு வார்த்தைகளையும் நடத்தியுள்ளார். தண்டையார்பேட்டையிலுள்ள தொற்றுநொய் தடுப்பு மருத்துவமனையில் (காலரா ஹாஸ்பிடல்) மே 4 அன்று நடைபெற்ற விழா ஒன்றில் மாநகராட்சி ஊழியர்கள் சென்னை நகரத் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் 420 மனநலமற்றவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் 152 பேர்கள் அன்று வரை பிடித்து வரப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் ‘பிச்சைக்காரர்களை’ வலுக்கட்டாயமாகப் பிடித்துச சென்று மனநல காப்பகத்தில் அடைப்பதில் விதிமுறைகள் மீறப்படுவதாகவும் இவர்களில் பலா; ஆரோக்கியமான மனநிலையுடன் உதிரித்தொழில்கள் புரிந்து கொண்டிருந்த வீடற்றவர்கள் மற்றும் பிற ஊர்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளிகள் எனவும் மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தகவல்கள் வந்ததை ஒட்டி இது குறித்த உண்மைகள் அறிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.


இதில் பங்கு பெற்றவர்கள்:


பேரா.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்

மதுமித்தா தத்தா, வெட்டிவேர் கூட்டமைப்பு

பேரா.மு.திருமாவளவன் முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்

சந்திரிகா, மென்பொருள் பொறியாளர்.


இக்குழுவினர் சென்ற மே 5, மே 18, மே 22 ஆகிய நாட்களில் தண்டையார்பேட்டை தொற்றுநொய் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம, மேல்பாக்கம் பிச்சைக்காரர்கள் அரசு பாதுகாப்பு முகாம் ஆகியவற்றிற்குச் சென்று உரிய அதிகாரிகளையும வாய்ப்புள்ள இடங்களில் பிடித்துவரப்பட்டிருந்த ‘பிச்சைக்காரர்களையும்’ சந்தித்துப் பேசியது. இது தொடர்பாக வேறு சிலரிடமும் கருத்துக்களைக் கேட்டு தொகுத்துக் கொண்டது.


எங்கள் ஆய்வில் கண்டறிந்த முக்கிய உண்மைகள்


• சென்னை மாநகராட்சியிலுள்ள 10 மண்டலங்களிலுள்ள சுகாதார ஆய்வாளர்களைப் பயன்படுத்தி இவ்வாறு தெருக்களில் அலைந்து கொண்டுள்ளவர்கள், உறங்குபவர்கள் பிடித்துவரப்பட்டுள்ளனர்.. பார்ப்பதற்கு அழுக்காகவும நிரந்தரத் தொழில் மற்றும் வாழ்விடங்கள் அற்றவர்களாகவும் தோன்றுகிறவர்கள் இவ்வாறு கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டுள்ளனா. வேறு எந்த விசாரணைகளோ நிருபணங்களோ செய்யப்படாமலேயே இழுத்து வரப்பட்டுள்ளனர்.. இந்த முயற்சியில் மனநல மருத்துவ நிபுணர்களோ காவல்துறையினரோ பயன்படுத்தப்படவில்லை. மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.


• பிடித்து வரப்பட்ட முறை மிகவும் மனிதாபிமானம் அற்றதாக உள்ளது. திடீரென வாகனத்தை அருகே கொண்டுவந்து நிறுத்தி, ‘உனக்கு முடிவெட்டி விடுகிறோம்’ என்று சொல்லிக் கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ‘நீங்கள் ஏற மறுத்திருக்கலாமே?’ என நாங்கள் வினவியபோது ‘‘எப்படி முடியும்? எங்களைப் பேசுவதற்கே விடவில்லை. நான்கைந்துபேர்கள் சூழ்ந்துகொண்டு கட்டாயமாக வேனில் ஏற்றினார்கள்’’ என்று கூறினார்கள்.


• பிடித்து வரப்பட்டவர்களைத் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து, குளிப்பாட்டி, மொட்டையடித்து, புதிய ஆடைகளை அணிவித்து, வார்டுகளில் பூட்டி வைத்துள்ளனர். உறவினர்கள் யாரும் வந்து அடையாள அட்டை முதலான ஆதாரங்களைக் காட்டினால் அவர்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு இதுவரை 11 பேர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மே 24 அன்று மேயர் கூறியுள்ளார். மே 4 அன்று நடைபெற்ற விழாவில் 12 பேர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மேயர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அன்றுவரை (மே4) 20 பேர்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிலர் உடல்நலமில்லாததால் சென்னைப் பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் 93 பேர்கள் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.


• எமக்குக் கிடைத்த தகவல்களின்படி இதுவரை இவ்வாறு கீழ்ப்பாக்கம் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் வருமாறு.


மே 4 - 78 ஆண்கள், 9 பெண்கள்

மே 5 - 10 ஆண்கள், 1 பெண்

மே 11 - 0 ஆண்கள், 1 பெண்

மே 20 - 9 ஆண்கள், 5 பெண்கள்

மொத்தம் - 97 ஆண்கள், 16 பெண்கள்

=113 பேர்


இவர்களில் மே 4ல் ஒரு ஆணும் மே 5 ல் ஒரு பெண்ணும் உடல்நலமின்றி பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மே 24 வரை மொத்தம் 179 பேர் மனநலக்காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேயர் மே 24 அன்று குறிப்பிட்டுள்ளார். ஜனசக்தி (மே 25) இதழில் வந்துள்ள செய்தியின்படி இதில் 31 பேர் தொண்டுநிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட மே 5 (இந்து) அறிக்கையின்படி முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் 20. அதேபோல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு அறிக்கையில் 3 எனவும் இந்த அறிக்கையில் 5 எனவும் மேயர் கூறியுள்ளார். இப்படி மேயரது அறிக்கையில் பல முரண்கள் உள்ளது கவலையளிக்கிறது.


மனநலக் காப்பகத்தில் ஒருவரை வைப்பதற்கான சட்டநெறிமுறைகள்

(இந்தியமனநோய் மருத்துவ சட்டநலவிதிகள்) வருமாறு :ஒரு மனநோயாளி தாமாகவே காப்பகத்தில் சேர்வதற்கு முன்வந்தால் 24 மணிநேரத்திற்குள் மருத்துவ அதிகாரி ஒருவரால் அவர் சோதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பது தவிர்க்க இயலாதது என பரிந்துரைக்கப்பட வேண்டும். ஒரு நோயாளியைக் கட்டாயமாக 90 நாட்கள் வரை மருத்துவமனையில் அடைத்து வைக்கலாம். ஆனால் அவர் மனநோயாளி என்பதை இரு மருத்துவநிபுணர்கள் உறுதிசெய்ய வேண்டும்.


உறவினர்கள் ஒப்புதல் இல்லாமல் 6 மாதம் வரை ஒருவரைக் கட்டாயமாக மருத்துவமனையில் வைக்க வேண்டுமென்றால் மாஜிஸ்ட்ரேட் உத்தரவு (reception order) பெறப்படவேண்டும்.


மனநோயாளி என காவல்துறை யாரையும் சந்தேகப்படுமானால் அவரைப் பிடித்து 24 மணிநேரத்துக்குள் மாஜிஸ்டிரேட் முன் கொண்டுசெல்லவேண்டும். அவர் விசாரித்து, தேவையானால் மருத்துவ நிபுணர்களின் கருத்தைக் கேட்டு மருத்துவமனையில் அடைக்க உத்தரவிடலாம். மூன்றாம் நபர் யாரும் ஒரு மனநோயாளி பற்றி தெரிவிக்க வேண்டுமெனில் மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் சொல்ல மட்டுமே முடியும்.


மனநோய் வார்டில் 10 நாட்கள் வரை வைத்திருந்து, அவர் உண்மையிலேயே மனநோய் உள்ளவர்தானா என்று கண்காணிக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிடலாம்.


மாஜிஸ்ட்ரேட்டின் இந்த அதிகாரத்தைக் காவல்துறை ஆணையர் எடுத்துச் செயல்படுத்த அனுமதியுண்டு.


நகர மேயர் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் மேற்கண்ட விதிமுறைகள் ஏதும் கடைப்பிடிக்கப்படவில்லை. கீழ்ப்பாக்கம் மனநலக்காப்பகத்தில் கொண்டுவரப்பட்ட 113 பேர்களில் மே 20 அன்று கொண்டுவரப்பட்ட 14 பேர்களுக்கு மட்டும் மாஜிஸ்டிரேட் உத்தரவு பெறப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அந்த ஆணை பெறப்படவில்லை.


மனநிலை சரியில்லாதவர்கள் என சந்தேகப்படுபவர்களைக் காவல்துறையிடம் அடையாளம் காட்டி மாஜிஸ்டிரேட் முன் அவர்களை நிறுத்தாமல், மாநகராட்சி ஊழியர்களே அவர்களைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அடைத்துப் பூட்டியுள்ளனர்


மாஜிஸ்டிரேட் ஆணையில்லாமல் எப்படி இவர்களைக் காப்பகத்தில் அனுமதித்தீர்கள் என காப்பகம் மனநல நிறுவன இயக்குனர் டாக்டர்.ஆர்.சத்தியநாதன் அவர்களை வினவியபோது, இந்திய மனநல மருத்துவச் சட்டத்தின் சிறப்புப் பிரிவுகளின் (Special Provisions) அடிப்படையில் அப்படி செய்துள்ளதாக பதிலளித்தார். அப்படி செய்துகொள்வதற்கு இரு மருத்துவ நிபுணர்கள் அவர்களைப் பரிசோதித்துச் சான்று வழங்கியிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யப்படவில்லை. நாங்கள் கேள்விப்பட்டவரை தண்டைடார்பேட்டை மருத்துவமனைக்கு சில அரசு மனநோய் நிபுணர்கள் மற்றும் தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் சுமார் 20.30 பேர்கள் மட்டுமே மனநோய் உள்ளவர்கள் எனக் கூறியதாகவும் அறிகிறோம்.


மனநோய்க் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு சுமார் இருவாரங்களுக்குப் பின்னர், அவர்களிடம் தன் விருப்பத்தின் அடிப்படையில் தானாகவே முன்வந்து காப்பகத்தில் சேர்ந்துகொண்டதாக கைநாட்டு பெறப்பட்டுள்ளது. இது மனநோய்ச்சட்டம் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளையே மீறுவது.


மனநோய்க்காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 முதல் 40 சதம் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதைக் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பக இயக்குனர் டாக்டர்.சத்தியநாதன் அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளார். அவர்களில் பலர் பேசுகிற உள்ளூர் மொழிகள் தெரிந்த மருத்துவ நிபுணர்கள் யாரும் இங்கே கிடையாது. மொழி தெரியாத நிபுணர்கள் ஒருவர் மனநோயாளியா, இல்லையா எனக் கண்டறிய இயலாது. இது குறித்தெல்லாம் சத்தியநாதன் அவர்களைக் கேட்டபோது,. ‘‘என்ன செய்வது? கார்ப்பரேஷன் அதிகாரிகள் கொண்டுவந்து சேர்க்கச் சொல்கிறாகள். ஒரு மருத்துவர் என்கிற முறையில் நான் எப்படி சிகிச்சை அளிக்க இயலாது எனச் சொல்ல முடியும்?’’ என்றார். இது மிகவும் பொறுப்பற்ற பதிலாகத் தோன்றாது. மனநலக் காப்பகம் என்பது கிட்டத்தட்ட சிறைச்சாலை போல. விருப்பமில்லாத ஒருவரை மனநோயில்லாதபோதும் இங்கே அடைத்துவைத்தால், அவருக்கு மனநோய் ஏற்படவும் கூடும். இதுகுறித்தெல்லாம் பிச்சைக்காரர் தொல்லை இல்லாத சென்னையை உருவாக்க விரும்புபவர்களுக்குக் கவலையில்லை.


பிடித்து வரப்பட்டவர்களில் சிலரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அவர்களில் பலர் ஆரோக்கியமானவர்கள். உதிரித்தொழில் புரிந்துகொண்டிருந்த இவர்கள் கட்டாயமாகப் பிடித்துவரப்பட்டுள்ளனர்.


சில எடுத்துக்காட்டுகள் :1. பாட்சா (வயது 50 இருக்கலாம்) - பாரத் தியேட்டர் ரவுண்டானா அருகில் பிடித்துள்ளனர். இரும்பு பொறுக்குவது (scrap picker) தன் வேலை என்றார்.

2. கந்தவேல் (25) - புதுப்பாளையம் போர் வண்டியில் வேலை செய்வதாகக் கூறினார்.

3. கன்னையன் - செங்கல்பட்டைச் சேர்ந்தவர். சென்னையில் பேப்பர் போடும் தொழில் செய்தவர், வீடற்றவர்.

4. மதனகோபால், சீர்காழி - கட்டிடத் தொழிலாளி/வீடற்றவர் (ஒரு சிகரெட் பெட்டி அட்டையில் தன் முகவரியை வைத்துக்கொண்டு ’எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சினார்)

5. நாகராஜன், பரமக்குடி - கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு தேநீர்க்கடையில் சரக்கு மாஸ்டராக இருந்ததாகச் சொல்கிறார்.

6. லலிதா, - பூ விற்பவர், பெரம்பூர் வீட்டு முகவரி உள்ளது.


மொழி தெரியாத இடம்பெயரும் தொழிலாளர்களிடம் எம்மால் உரையாட முடியவில்லை.


பிடித்து வரப்பட்டு உடல்நலமில்லாதவர்கள் எனக் கண்டறியப்பட்டபின் சென்னை பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதை மேயர் தனது பிந்தைய பேட்டிகளில் குறிப்பிடவில்லை. இவர்களில் இருவர் இறந்துபோனார்கள் என அறிகிறோம். ‘பெயர் தெரியவில்லை’ எனப் பதிவு செய்து இவர்கள் கதை முடிக்கப்பட்டுள்ளது.


எமக்குக் கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி மே 29 அன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் மாஜிஸ்ட்ரேட் ஆணையுடன் கீழ்ப்பாக்கம் மனநோய்க் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மனநலம் குன்றியவர்கள் (mentally retarted) எனவும் மனநோயாளிகளெனக் (mentally ill) கூற இயலாது எனவும் அறிகிறோம். விதிகளின்படி மனநோயாளிகளை மட்டுமே காப்பகத்தில் சேர்க்க முடியும். சமீபத்தில் மனநோய்க் காப்பகத்தைப் பார்வையிட்ட பரிசீலனைக்குழுவைச் (monthly review committee) சேர்ந்த மாஜிஸ்டிரேட் மனநலம் குன்றியவர்கள் உத்தரவு (reception order) பெற்றிருந்தாலும் எப்படி இங்கு அனுமதிக்கப்படலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பார்வைகள்

பிச்சைக்காரர்கள் இல்லாத சென்னையை உருவாக்குவதன்

சமூகப்பொருளாதாரப் பின்னணிஉலகமயச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக உலகத்தரமான நகரங்களை உருவாக்குதல் அமைகிறது. பளபளக்கும் நால்வழிச்சாலைகள் இணைக்கப்பட்ட நவீன நகரமாகவும் வெளிநாட்டு மூலதனம் குவியக்கூடிய மய்யமாகவும் மருத்துவச்சுற்றுலாவுக்கும் சிறப்புப்பொருளாதார மண்டலங்களுக்கும் தகுதியுடையவையாக நகரங்களை உருவாக்குவது ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. அவர்களின் கண்களுக்குத் தெருவில் அலைகிற பிச்சைக்காரர்களும் நகரின் மத்தியில் துருத்தி நிற்கும் குடிசைகளும் பெரிய உறுத்தல்களாக உள்ளன. காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஒட்டி டெல்லியில் பிச்சைக்காரர்கள் அகற்றப்படுகின்றனர். தமிழகத்துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்டங்களில் ஒன்றான சிங்காரச்சென்னையை உருவாக்கும் நோக்கில் இன்று சென்னை நகரங்களிலுள்ள குடிசைகள் அகற்றப்பட்டு லட்சக்கணக்கில் குடிசைவாழ் மக்கள் நகரத்திற்கு அப்பால் கடத்தப்பட்டுள்ளனர். சென்னை வளர்ச்சித்திட்டம், கூவம் தூய்மைத்திட்டம், அடையாறு பூங்காத்திட்டம் என்ற பெயர்களில் இவை நடத்தப்படுகின்றன. துணைமுதல்வருக்கு அணுக்கமான மாநகராட்சி மேயர் இதன் அடுத்தகட்டமாக இப்போது சென்னையை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாகச் சுத்திகரிக்க முயல்கிறார். இந்த அடிப்படையில் வீடற்ற உதிரித்தொழிலாளர்கள், மனநோய் பிறழ்ந்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பிடித்து வரப்படுகிறார்கள். நகரங்களில் திரியும் பிச்சைக்காரர்களை வேண்டாத இடையூறுகளாகக் கருதும் நமது மத்தியதர வர்க்க மனநிலை மேயரின் இந்த தூய்மையாக்க நடவடிக்கையுடன் பொருந்திப் போய்விடுகிறது. எனினும் பிச்சைக்காரர்களை ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்களாக பொதுமக்கள் கருதவில்லை என்பதற்கு நமது கோயில்கள் மற்றும் புனிதத்தலங்களில் குவிந்துள்ள பிச்சைக்காரர்களே சான்று.


பஞ்சம், வறட்சி, ஆறுகள் வற்றிப்போதல், அரசின் தவறான பொருளாதாரத் திட்டங்களால் உருவாகும் வேலையின்மை ஆகியவற்றின் விளைவாகத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வருகிற மக்கள் பல்வேறு உதிரித்தொழிலாளர்களாக சென்னை மாநகரில் வாழ்வைத் தொடங்குகின்றனர். ஒண்ட குடிசை இல்லாத இவர்கள் பிளாட்பாரம், கோயம்பேடு மார்க்கெட், பேருந்துநிலையம் முதலான இடங்களில் இரவுகளைக் கழிக்கின்றனர். பிற வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் தொழிலாளர்கள் (migrant workers) உள்ளூர் முதலாளிகளால் பெரியளவில் சுரண்டப்படுகின்றனர். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைகளும் இவர்களுக்குக் கிடையாது. எத்தகைய பாதுகாப்பும் அற்றவர்களாகவும் கடுமையாகச் சுரண்டப்படுபவர்களாகவும் இவர்கள் உள்ளனர். புதிய சட்டமன்றம் கட்டும் பணியிலும் இவ்வாறு ஏராளமான பிறமாநிலத் தொழிலாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஓசூர் போன்ற நகரங்களில் உள்ள பாதுகாப்பற்ற தொழிற்சாலைகளில் பணியாற்றும் இவர்களில் பலர் விபத்துகளில் இறக்கின்றனர், பலர் ஊனமாகின்றனர், பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து வருகிற இம்மக்களைப் பற்றி அரசோ மாநகராட்சியோ வளர்ச்சித்திட்ட இயக்குனர்களோ கவலைப்படுவதில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்களுக்கும் அகக்கட்டுமான வளர்ச்சிகளுக்கும் (infrastructural developments) தடையானவர்களாகவே பிச்சைக்காரர்கள், வீடற்றவர்கள், இடம்பெயர் தொழிலாளர்கள், குடிசைவாழ்மக்கள் முதலானவர்கள் கருதப்படுகின்றனர். இதன் ஓரம்சம் சென்னை மாநகராட்சித் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள பிச்சைக்காரர்கள் ஒழிப்புத்திட்டம்.


காலனியக் காலச்சட்டங்களின் இன்றைய பொருத்தமின்மை
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வேலையற்ற, வீடற்ற ஏழை, எளிய மக்களும் உதிரித்தொழிலாளர்களும் சட்டத்தின் உதவியோடு குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர். ஏழ்மை இதன்மூலம் குற்றமாக்கப்படுகிறது. சட்டம் இதற்குத் துணைபோகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பிச்சைக்காரர்கள் சட்டம் (1945) அப்படியே சுதந்திர இந்தியாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது (தமிழ்நாடு பிச்சை எடுப்பு தடுப்புச்சட்டம் 1954). மேல்பாக்கம் அரசு பாதுகாப்புமுகாமிற்கு நாங்கள் சென்றபோது அங்கு 105 பேர் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் மேற்குறித்த சட்டப்பிரிவுகளின்கீழ் பிச்சை எடுத்த குற்றத்திற்காக 1 முதல் 3 ஆண்டுகள் வரை மதுரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய உருப்படியான தொழிற்பயிற்சிகள் எதுவும் இந்த ‘காப்பக முகாம்களில்‘ அளிக்கப்படுவதில்லை. இன்றைய பொருளாதாரச் சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற பானை வளைதல், தச்சுத்தொழில், தையல் தொழில் முதலியவை இங்கு பயிற்சி அளிக்கப்படுவதாக அறிந்தோம். சிறைக்கைதிகளைப் போலவே இவர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். செய்யும் வேலைகளுக்குப் போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை.


முடிவுரை மற்றும் கோரிக்கைகள்


பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து வாழ வேண்டும் என்பதோ மனநோயாளிகள் சிகிச்சை இன்றி தெருக்களில் அலைய வேண்டும் என்பதோ எங்கள் விருப்பமில்லை. ஆனால் சென்னையை அழகுபடுத்தும் நோக்கத்திற்காக அவசர கோலமாக இவர்களைச் சற்றும் மனிதாபமின்றி பிடித்துச் செல்வதும் ஆரோக்கியமான உதிரித்தொழிலாளர்களை மனநோயாளிகள் என முத்திரை குத்தி மனநோய்க்காப்பகத்தில் அடைப்பதையும் இதிலுள்ள விதிமீறல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். மற்றும் இது மத்தியதர வர்க்கத்தின் கனவான சிங்காரச்சென்னை என்ற பெயரில் ஏழை மக்களை அப்புறப்படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கம் என்று நாங்கள் கருதுகிறோம். ஊடகங்களும் சென்னைமாநகராட்சி மற்றும் மேயரின் நடவடிக்கைகளின் நோக்கங்களை ஆராயாமல் இதுவரை அறிக்கைகளை வெளியிட்டுவந்துள்ளன.


1. அனாதைகளாக இருந்தபோதிலும் வீடுகள் இல்லாதபோதிலும் போதிய உணவு கிடைக்காதபோதிலும் மனிதர்கள் அடைத்து வைக்கப்படுவதை விரும்புவதில்லை. இந்த அடிப்படை உணர்வை அரசு புரிந்துகொள்ள வேண்டும். காலனிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சட்டம், பிச்சைத்தொழில் தடுப்புச்சட்டம் முதலியன நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்குத் தகுந்தவாறு திருத்தப்பட்டு மேலும் மனிதநேயமிக்கதாக மாற்றப்பட வேண்டும்.


2. சென்னை மேயரின் அறிக்கைகள் அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இது பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்கான திட்டமா, இல்லை., மனநோயாளிகளை அகற்றும் திட்டமா என்பது விளங்கவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டுக் குழப்புவதுபோலத் தோன்றுகிறது. சென்னைமாநகராட்சி இப்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், அதன் நோக்கம், எதிர்காலத்திட்டம், இதுவரை பிடிக்கப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள், அவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அதுவரை ஜூன் 6 அன்று தொடங்கியுள்ள இரண்டாம்கட்ட நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.


3. மனநோய்க்காப்பகத்தில் அடைக்கப்பட்டவர்களில் பலர் மனநோய் இல்லாதவர்கள் என அய்யம் உள்ளதால் உடனடியாக இவர்கள் அனைவரையும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மருத்துவநிபுணர் குழு ஒன்றால் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.


4. சென்னை நகரை அழகுபடுத்தும் திட்டம் என்பது உண்மையில் சென்னையில் உள்ள எல்லா மக்களுக்கும் பயன்படுகிற, எல்லா மக்களையும் மேம்படுத்துகிற திட்டமாக அமைய வேண்டும். வீடற்றவர்கள் குறித்த திட்ட ஆணையத்தின் ஆய்வை இணையதளத்தில் பரிசீலித்தோமானால், வீடற்றவர்கள் மற்றும் இடம் பெயரும் தொழிலாளர்களின் நலன் குறித்து அரசு கவலைகொள்ளாதது விளங்குகிறது. இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் வீடற்றவர்களின் பிரச்சினை மிக முக்கியமான ஒன்று. சமீபத்தில் நடைபெற்ற தாய்லாந்து நாட்டு மக்கள் எழுச்சியில் இடம்பெயர் தொழிலாளர்கள் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இவர்கள் இரவுகளில் தங்கிச்செல்ல தற்காலிக இருப்பிடங்கள் (temporary shelters) அமைக்கப்பட வேண்டும்.


5. தொண்டுநிறுவனங்களுடன் மாநகராட்சி ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகத் தெரிகிறது. தொண்டு நிறுவனங்கள் நடத்துகிற முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், மறுவாழ்வுத்திட்டங்கள் ஆகியவற்றை மாகராட்சி பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிறுவனங்கள் எத்தகைய நோக்கங்கள், விதிமுறைகள் ஆகியவற்றுடன் செயல்படுகின்றன என்பது விளங்கவில்லை. தத்தெடுப்பது (adoption) போன்ற செயல்பாடுகளில் இதுபோன்ற நிறுவனங்கள் பல செய்துள்ள ஊழல்களை நாம் அறிவோம். ‘பான்யான்‘ என்கிற அமைப்பு சில ஆண்டுகள் முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் எதிர்த்ததும் அது தொடர்பான சர்ச்சைகளும் நினைவுகூரத்தக்கன. நிலவும் மனநோய் மருத்துவச் சட்டத்தின்படி மனநோயாளிகளை மூன்றாவது நபர்கள் கையாள்வதற்கு வழியில்லை. அவர்கள் காவல்துறையிடம் புகார்கள் சொல்வதற்கு மட்டுமே அனுமதி உண்டு. எனவே எத்தகைய அடிப்படையில் தொண்டுநிறுவனங்கள் இத்திட்டத்தில் செயல்படப் போகின்றன என்பது வெளிப்படையாக்கப்பட வேண்டும்.

நன்றி :lumpini.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக