செவ்வாய், டிசம்பர் 24, 2013

தமிழக காவல்துறை செய்த கொலை


தமிழக காவல்துறை செய்த கொலை
                                    -மு.சிவகுருநாதன்
  அண்மையில் சென்னையில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்ட்த்தில் லாக்கப் மரணங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியது நினைவிருக்கலாம். உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம், மனித உரிமை ஆணையங்கள் பலமுறை அளித்துள்ள நெறிமுறைகளை காவல்துறை பின்பற்றுவதேயில்லை. தமிழகத்தில் லாக்கப் கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
   
  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலிவலம் காவல் சரகம் கீரக்களூர் சிற்றூராட்சிக்குட்பட்ட நங்காளி கிராமத்தைச் சேர்ந்த்த 34 வயது இளைஞர் சுந்தர் என்பவரை அவருக்குத் தொடர்பில்லாத திருட்டு வழக்கொன்றில் 23.12.2013 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் திருத்துறைப்பூண்டி, ஆலிவலம் காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்டோர் சட்ட விரோதமாக வீடு புகுந்து இழுத்துச் சென்று கடுமையாக தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

  இக்கொலையைக் கண்டித்து அவ்வூர் மக்கள் திருத்துறைப்பூண்டி – மன்னார்குடி சாலையில் விளக்குடி என்னுமிடத்தில் 24.12.2013 அன்று சாலை மறியல் செய்தனர். அதன்பிறகு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகழ்விடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அம்மக்களிடம் உறுதியளித்துள்ளார். அதன்பின்பு சாலைமறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

  இன்று (24.12.2013) இரவு காவல்துறையால் கொலை செய்யப்பட்ட சுந்தரின் உடல் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீதிபதி முன்னிலையில் மூவரடங்கிய மருத்துவக் குழுவினரால் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

  மரணமடைந்த சுந்தர் சாதாரண ஏழை கூலித்தொழிலாளி. விவசாய வேலைகள், டிராக்டர் ஓட்டுவது போன்ற வேலைகள் செய்து வாழ்க்கை நடத்துபவர். இவருக்கு வயதான பெற்றோரும் மூன்று சகோதரிகளும் உண்டு. இன்று இவர்கள் கவனிக்க ஆளில்லாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடு ஆகியிருந்த்தாகவும் சொல்கிறார்கள். காவல்துறையின் இத்தகைய அத்துமீறல் மூலம் அப்பாவி ஒருவரின் மரணத்துடன் அவரின் குடும்பம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது.

  இனி செய்ய வேண்டியது:

01.இதில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது இ.பி.கோ. 302 பிரிவின்படி கொலைவழக்குப் பதிவு செய்து அவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.

02.உடற்கூராய்வு முறையாக நடைபெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் மீண்டும் உடற்கூராய்வு வேறு மருத்துவக் குழுவினர் கொண்டு நடத்தப்படவேண்டும்.

03.மரணமடைந்த சுந்தரின் குடும்பத்திற்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.

04.இந்த லாக்கப் மரணம் மற்றும் அதற்குக் காரணமான சுந்தர் மீது போடப்பட்ட வழக்கு குறித்து முறையான நீதி விசாரணை நடத்தப்படவேண்டும்.

05.இனியும்  லாக்கப் மரணம் போன்ற மனித உரிமைகளை காவல்துறை மீறாமலிருக்க உரிய தொடர் நடவடிக்கைகள் அவசியம். எவர் ஒருவரை கைது செய்யும் முன்பு நீதிமன்றங்கள் வலியுறுத்தும் ஆணைகள் பின்பற்றப்பட அரசும் நிர்வாகமும் மெத்தனம் காட்டாமல் செயல்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக