வியாழன், டிசம்பர் 05, 2013

ஜெயமோகனின் வழக்குரைஞரான புரட்சி எழுத்தாளர்!



ஜெயமோகனின் வழக்குரைஞரான புரட்சி எழுத்தாளர்!
-    மு.சிவகுருநாதன்


     இனிய உதயம் டிசம்பர் 2013 இதழில் புரட்சி எழுத்தாளர் பவா.செல்லதுரை அவர்களின் நேர்காணல் வெளியாகியுள்ளது. இலக்கிய உலகில் பேச்சருவி, பேச்சுப்புயல், இடிமுரசு என்றெல்லாம் விளம்பர விரும்பிகள் பெருகிவிட்டார்கள் என்று அங்கலாய்க்கும் இவர் மட்டும் புரட்சி எழுத்தாளரான புதிர்தான் நமக்கு விளங்கவில்லை

      இவரது முன்னோடிகளான சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோர் கூட இம்மாதிரியான பட்டங்களைப் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. இவ்வளவிற்கும் பிறகு மூன்றாம்தர படைப்பாளிகளையும் சினிமாக்காரர்களையும் இலக்கிய உலகம் சகிப்பதை வெறுப்போடு பார்க்கவேண்டுமா? உங்களைப் போன்ற புரட்சி எழுத்தாளர்களையும் ஜெயமோகன்களையும் சகித்துக்கொண்டுதான் பலரும் எதிர்வினையாற்றிவருகின்றனர்.

   இந்த மாதிரியான எழுத்தாளர்கள் தங்களுக்குத் தாங்களே ஒளிவட்டமிட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் என்ன எழுதினாலும் வாசகர்கள் படிக்கவேண்டும். அந்த வாசகனொருவன் ஏதேனும் எழுதிவிட்டால் இவர்களால் பொறுத்துக்கொள்ளமுடிவதில்லை. இதுதான் சுராக்களும் பவாக்களும் ஒன்றிணையும் புள்ளி

     வாசகனை படிக்கக் கட்டாயப்படுத்தும் இவர்கள் எதையும் படிக்கவிரும்புவது கிடையாது. ஜெயமோகனை குற்றம் சொல்பவர்கள் அதற்கான தர்க்க ஆதாரங்களை எழுத்தின்முன் வைக்கவேண்டும் என்று இவர் சொல்லும்போது இவரது வாசிப்பின் ஆழம் நமக்குப் புரிந்துவிடுகிறது. வெறும் படைப்புகளை மட்டுந்தான் வாசிப்பேன் என்று தப்பித்துக் கொள்ளமுடியாது. அப்படியென்றால் இம்மாதிரியான உளறல்களை விட்டுவிடவேண்டும்

   ஜெயமோகனிடம் நட்பாக இருப்பது வேறு; அவரது எழுத்துக்களை மதிப்பிடுவது வேறு. ஒன்றிற்காக மற்றொன்றை பலியிடுவது நியாயமாகாது. கூட்டங்களில் பங்கேற்க பணம் பெறவில்லை, நல்ல அறை போட வலியுறுத்தவில்லை என்பதெல்லாம் அவரது படைப்பை மதிப்பிடக்கூடியதல்ல.

    ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. ஆகியவற்றில் நேரடி உறுப்பினர்கள் மட்டும் இந்துத்துவவாதிகள் என்று சொன்னால் சி.பி.அய்., சி.பி.எம். அல்லது தகஇபெம, தமுஎகச ஆகியவற்றில் இருப்பவர்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்கள் என்றாகும். ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான படைப்பாளிகள் கட்சி அரசியல் சார்ந்து இயங்குவதில்லை. இவர்களை படைப்பின் வழிதான் அணுகவேண்டுமே தவிர உறுப்பினர் அட்டையைக் கொண்டல்ல.

    இன்றுவரை  ஆர்.எஸ்.எஸ். கோட்சேவை தங்களுடைய ஆள் என்று ஒத்துக்கொண்ட்தில்லை. அதைப்போல விடுதலைப்புலிகள் சிவராசனை தங்களுடையவர் என்று சொன்னதில்லை

   ஜெயமோகனை அவரது படைப்புகள், எழுத்துகள் வழியே யாரும் அணுகவில்லை என்பது மிகவும் அபத்தமானது. ஜெயமோகனின் படைப்புகள், கட்டுரைகள் யாவற்றிலும் வெளிப்படும் பாசிசப்போக்கை பல நூறு பேர் பல தளங்களில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.  எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இவற்றை தெரிந்தும் தெரியாததுபோல் பேசுவது பாசிசப்போக்கின் நீட்சியாகவே இருக்கமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக