வெள்ளி, மார்ச் 13, 2020

எழுத்தாளர்களின் சொந்த மண்ணில் ஒரு பாராட்டு விழா


எழுத்தாளர்களின் சொந்த மண்ணில் ஒரு பாராட்டு விழா

(சூழலியல் நூல்கள் அறிமுகம்  மற்றும் எழுத்தாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு)

மு.சிவகுருநாதன்

        திருவாரூரில் பிப். 09, 2020 (09.02.2020) ஞாயிறு மாலை ரோட்டரி ஹாலில் ‘நீர் நிலை பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் தோழர்கள் செ.மணிமாறன், ஜி.வரதராஜன், அன்பழகன் ஆகியோரது முன்னெடுப்பில் சூழலியல் நூல் அறிமுக அரங்கும் எழுத்தாளர்களுக்குப் பாராட்டு நிகழ்வும் அரங்கேறியது. 










    சூழலியல் புனைவெழுத்திற்கு விஷ்ணுபுரம் சரவணனின்  ஒற்றைச் சிறகு ஓவியா’ எனும் நாவலும் அபுனைவிற்கு எழுத்தாளர் நக்கீரனின் 'நீர் எழுத்து'  எனும் 360° கோணத்தில் ஆய்வு செய்யும் தண்ணீர் ஆவண  நூலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன் தலைமையேற்றார். 

    அவர் தனது தலைமையுரையில், நீரைக் கொண்டாடும் மருதநில விளைச்சல் கலாச்சாரத்திற்கும், தீயை முதன்மைப் படுத்தும் மேய்ச்சல் நாடோடி கலாச்சாரத்திற்கும் உள்ள முரண்களையும் பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை குறித்தும் விரிவாகப் பேசினார். சிறார் இலக்கியம், சூழலியல் குறித்த விரிவான அறிமுகம் ஒன்றையும் தந்தார்.  

      விஷ்ணுபுரம் சரவணனின்  ஒற்றைச் சிறகு ஓவியா’ நாவலை தோழர் இரா. எட்வின் அறிமுகம் செய்தார். “இந்நாவலை மிகை புனைவு என்கிறார்கள். நான் ஏற்க மாட்டேன். குழந்தைகளின் உலகம் இயல்பாகவே அப்படித்தான் உள்ளது. ஆசிரியர்கள் அதிகாரத்தால் அவர்களால் குழந்தையோடு ஒன்ற முடியாது. இந்த நாவலில் வரும் ‘தாத்தா’ குழந்தைகளுடன் கலந்து விடுகிறார். போபால் நச்சு வாயுப் படுகொலைக்கு எதிராக சென்னையில் குழந்தைகள் பங்கேற்கும் பேரணி நடந்தது. அதற்கு கவிஞர் இன்குலாப், வேண்டும்! வேண்டும்!! இப்பூமியில் வாழ உரிமை வேண்டும்!!! என முழக்கம் எழுதிக் கொடுத்தார். சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் இந்நாவலில் பேசப்படுகின்றன. இன்று இன்குலாப் ஆனந்த விகடனின் வேலை செய்வதாகவே நான் நினைக்கிறேன். எங்களிடம் மணிக்கணக்கில் கதை சொல்லியிருக்கிறான் சரவணன். இந்நிகழ்வில் இன்னொருவர் இருந்திருக்க வேண்டும், அவர் கவிஞர் கம்பீரன்”, என்று தனக்கேயுரிய நகைச்சுவையுடன் எட்வினின் உரை அமைந்திருந்தது. இச் சிறார் நாவல் குறித்து ஆசிரியர் மனத்துணைநாதன் தனது வாசகப் பார்வையைப் பதிவு செய்தார்.

    விஷ்ணுபுரம் சரவணன் தன்னுடைய ஏற்புரையில், சூழலியலை அவசியத்தை குழந்தைகளின் வழியே முன்னெடுக்கவும் அவர்களை ஈடுபடுத்தவும் வேண்டும். அதை fantasy சார்ந்த இக்கதையின் வாயிலாக செய்திருக்கிறேன், என்றார். 
 
     நக்கீரனின் ‘நீர் எழுத்து’   நூலை  எழுத்தாளர், செயல்பாட்டாளர்  பிரேமா ரேவதி அறிமுகம் செய்தார். படுகொலை செய்யப்பட்ட தோழர் லீலாவதிக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டதைச் சுட்டி, நீருக்காக பெண்கள் மற்றும் விளிம்பு நிலையினர் படும் அவலங்கள் குறித்து இந்நூல் கவனப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.  பேரா. நிதின் அரசு இந்நூல் குறித்த கருத்துகளைப் பதிவு செய்தார். 

    நிறைவாக நக்கீரன் ஏற்புரை வழங்கினார். மேட்டுக்குடிகளிடம் இருந்த சூழலியலை நமக்கானதாக மாற்ற நிறைய சண்டையிடவும் உழைக்கவும் வேண்டியிருந்தது. இதற்காக மொழிநடையை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. குழந்தை எழுத்து, கவிதை ஆகியவை எழுதிய அனுபவம் இதற்கு உதவிகரமாக இருந்தது. வெறும் சில நூறு பேர்களுக்கு எழுதும் இலக்கிய வகை நமது தேவையல்ல; பல்லாயிரக்கணக்கான வெகு மக்களை நோக்கியதாக எனது எழுத்து இருக்கும். அந்த வகையில் ‘நீர் எழுத்து’ வெற்றி பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது, என்று குறிப்பிட்டார்.   

     இவ்விழாவில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தோழர்கள் ஜீ.வரதராஜன், சண்முகசுந்தரம், இரணியன், சூனா செந்தில் ஆகியோரும், எழுத்தாளர்கள் புலியூர் முருகேசன், பாமனி, கவிஞர்கள் நிதா எழிலரசி, ஸ்டாலின் சரவணன், சூ.சிவராமன், குடவாசல் நலங்கிள்ளி, தோழர்கள் நாகை அருண், ஓவியர் நடராஜன்,  வடமட்டம் சுவாமிநாதன், ராஜவேல், இரா.சக்திவேல், சக்தி, திருமாறன், டேவிட் அமலநாதன், பாபு எழில்தாசன்,  பேரா. தி. நடராஜன், செ.ராஜசேகரன் உள்ளிட்ட பல வாசகர்களும் சூழலியல் ஆர்வலர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இவ்விழாவில் நக்கீரன், விஷ்ணுபுரம் சரவணன், செ.மணிமாறன் ஆகியோரது குடுபத்தினரும் பங்கேற்றனர்.  

      150 பேருக்கு மேல் அரங்கம் நிரம்பி வழிந்த கூட்டம் மாலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி நீடித்தது. தொடக்கத்தில் பேசியவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இறுதியில் அனைவரும் சுருக்கமாக நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

    எழுத்தாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு  நினைவுப் பரிசுகள் வழங்கிப்பட்டன.  நாளை’ அமைப்பின் சார்பில் தோழர் செகுரா விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் துணிப்பைகள் வழங்கினார். ‘வனம்’ கலைமணி மற்றும் அவரது அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் விருந்தோம்பலில் பங்கெடுத்தனர். 

    இவ்விரு எழுத்தாளர்களின் சொந்த மாவட்டத்தில் இந்த அறிமுகம் மற்றும் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றதும் இதன் தாக்கம் சூழலியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உந்துதலாக அமையும்.

(இப்பதிவின் ஒரு பகுதி மார்ச் 2020 'காக்கைச் சிறகினிலே...' இலக்கிய மாத இதழில் வெளியானது.)

நன்றி: காக்கைச் சிறகினிலே...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக