கிரிக்கெட் திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்!
மு.சிவகுருநாதன்
09/07/2022 சனியன்று கவிநிலா, கயல்நிலாவுடன் தஞ்சை சென்று வரலாம் என்று கிளம்பினோம். மதியம் 2:10 (14:10) காரைக்கால்-திருச்சிராப்பள்ளி பயணியர் தொடர்வண்டியில் (எண்:56711) செல்லலாம் என்று நினைத்தோம். கொரோனாவால் நிறுத்தப்பட்ட அத்தொடர்வண்டி இன்னும் இயக்கப்படவே இல்லையாம்! பேருந்துகளின் நிலையும் அவ்வாறுதான் உள்ளது. இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். மணிக்கணக்கில் காத்திருந்தும் தஞ்சாவூர்-திருச்சி வழியில் செல்லும் பேருந்துகள் வரவில்லை.
நேரமாகிவிட்டதால் தஞ்சை சென்று திரும்புவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் கும்பகோணம் பேருந்தில் ஏறினோம். அது ஒரு தனியார் பேருந்து. மெதுவாக இயக்கும் மிதிவண்டிப் போட்டியைப் பார்த்திருப்போம். 40 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்கும் அளவிற்கு அவ்வளவு மெதுவாகப் பேருந்து ஊர்ந்து சென்றது. இரவும் பேருந்திற்கு மணிக்கணக்கில் காத்திருந்து திரும்ப வேண்டியிருந்தது. போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இரவுநேரப் பேருந்துகள் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டன. சென்னைக்கு மட்டுமே பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன. பெருநகரங்கள் வாழ்ந்தால் போதுமென்ற மனப்பான்மை மிகக் கொடியது.
கும்பகோணத்திலிருந்து சிற்றுந்தில் ஏறி தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை அடைந்தோம். கவி முன்பொருமுறை வந்திருக்கிறார். கயலுக்கு இது முதல் முறை. கோயில் வளாகம் கிரிக்கெட் விளையாடுமிடமாக மாறியுள்ளது. உரிய பராமரிப்பின்றி குப்பை மேடாக புல்தரைகள் உள்ளன. கிரிக்கெட் விளையாடுவதாலும் நீரின்றியும் அவைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. எங்கு நின்றாலும் கிரிக்கெட் பந்துகள் உரசிச் செல்கின்றன. கிட்டத்தட்ட ஐந்தாறு அணிகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளன.
காதலர்கள் என்றால் ஒதுக்குப்புறமாகச் சென்றுவிடலாம்! பிறர் பந்தடிபட்டு சாக வேண்டியதுதான். யுனெஸ்கோவால் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடமாகத் தெரியவில்லை. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய மூன்று கோயில்களும் யுனெஸ்கோ மரபுப் பட்டியலில் பிற்காலச் ‘சோழர் பெருங்கோயில்கள்’ என்ற பெயரில் இடம் பெறுபவை. இவற்றை பழமை மாறாமல் பராமரித்துப் பாதுகாப்பது தொல்லியல் துறையின் பணி. அத்துறைக்கு சரஸ்வதி நதியை அகழ்வாய்வு செய்து கண்டுபிடிக்கும் பல்வேறு பணிகள் இருக்கின்றன!
கீழடி அகழ்வாய்வில் இந்தியத் தொல்லியல் துறை மற்றும் ஒன்றிய அரசின் உண்மை முகம் வெளிப்பட்டதைக் கண்டோம். மாநில அரசும் இவர்களுக்கு ஒன்றும் சளைத்ததில்லை. கோயில்களில் குடமுழுக்கு மற்றும் அன்னதானங்கள் நடத்திவிட்டால் போதுமென்று நினைக்கும் கூட்டம்தான் இங்குள்ளது. 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மரபுச் சின்னத்தை இவ்வாறு சீர்கெட அனுமதிப்பது தகுமா? தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் தற்போதைய நிலைகள் தெரியவில்லை. கண்டிப்பாக கிரிக்கெட் திடலாக மாறியிருக்காது என்று நம்புவோம்.
இலவசக் கழிப்பிட வசதி உள்ளது. உள்ளே சென்றால் ரூ. 5 கேட்கிறார்கள். கட்டணமில்லாக் கழிப்பிடத்தில் வசூல் செய்யப்படுகிறது. பேரூராட்சியாக இருந்த தாராசுரம் கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இங்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்யவும் பராமரிக்கவும் எந்த முயற்சியும் இல்லை.
இக்கோயில் வாசலில் நந்தியருகே இசைப்படிக்கட்டுகள் என்று சொல்லக்கூடிய படிகள் இருக்கின்றன. இவற்றை மக்கள் சோதித்துப் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க கம்பிவலைத் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அவற்றிலும் துளைகளை ஏற்பட்டு கற்கள் மற்றும் காசுகளை வீசி இசையை சோதிக்கும் நிலை இருப்பதைக் காணமுடிகிறது.
ராஜராஜேஸ்வரம் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படும் இக்கோயில் கி.பி. 1143-1173 காலகட்டத்தில் ஆண்ட பிற்காலச் சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது. பிற்காலச் சோழ மரபில் மன்னர்கள் தங்களுக்காகவே இத்தகைய கோயில்களை நிர்மாணித்தனர். தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வரிசையில் இக்கோயிலும் இடம்பெறுகிறது. அவர்கள் தங்களை மன்னனாக மட்டுமல்லாது கடவுளாகவும் எண்ணிக்கொண்டவர்கள். அவர்களது செயல்பாடுகள் பலவும் இதை நோக்கியே அமைந்தன. இங்கு இறைவிக்கான (பெரிய நாயகி அல்லது தையல் நாயகி) கோயிலைத் தனியே அமைத்திருப்பதையும் காணமுடிகிறது. இரண்டாம் ராஜராஜனுக்கு மகப்பேறு இல்லை. எனவே விக்கிரமச் சோழனது மகள் வயிற்றுப் பேரனான எதிரிலிப் பெருமான் என்பவரை வளர்த்து ராஜாதிராஜன் (இரண்டாம்) என்று கி.பி. 1163 இல் இளவரசுப் பட்டம் சூட்டுகிறார். இதற்குரிய தொடர்புகள் குறித்தும் ஆராய வரலாற்றில் இடமுண்டு.
இவ்வூர் முன்பு ராஜராஜபுரம் என்றே வழங்கப்பட்டு வந்தது; பின்னர் தாராசுரம் என்று மருவியது. இங்கும் சோழ அரண்மனை இருந்திருக்க வேண்டும். பிற்காலச் சோழர்களின் வரலாற்று ஆசிரியர்களும் பிறரும் சோழப்பெருமைக்கு ஆட்பட்டவர்கள். இதனால் வரலாற்றெழுதியலுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். அதுவும் தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகியோரின் பெருமை பாடுவதே இதன் மையமாக இருக்கும். சாளுக்கிய-சோழ மரபை பாராட்டும் மரபு இவர்களிடம் இல்லை. இதற்குள்ளாக ஊடாடும் இனத்தூய்மை போன்றவற்றையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. “குலோத்துங்கன் உடலில் பெருமளவு ஓடியது சோழர்குலக் குருதிதான்”, என்று மரபணு ஆய்வு செய்யும் (!?) டாக்டர் கே.கே.பிள்ளை அவர்களின் வரிகள் இதனை மெய்ப்பிக்கும். (காண்க: பக். 290, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, டாக்டர் கே.கே.பிள்ளை)
“இந்தக் கோயில் கட்டியபோது ஆட்சி செய்த இரண்டாம் ராஜராஜன் பெயரால் கல்வெட்டுக்களில் இராஜராஜேஸ்வரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மூன்றாம் குலோத்துங்கச் சோழனும் இந்தக் கோயிலில் புதிதாக பல திருப்பணிகளைச் செய்திருக்கிறான்”, (பக்.949, சோழர்கள் – தொகுதி 02, பேரா.நீலகண்ட சாஸ்திரி) என்று மிக எளிதாகக் கடந்து விடுகிறார் சாஸ்திரி.
இது கிட்டத்தட்ட பிற்காலச் சோழர்களின் இறுதிக் காலகட்டமாகும். இரண்டாம் ராஜராஜனுக்குப் (கி.பி. 1146 – கி.பி. 1163) பின்னர் இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1163 – கி.பி. 1178), மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 – கி.பி. 1218), மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 – கி.பி. 1256), மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 – கி.பி. 1279) போன்றோரின் ஆட்சி நடைபெற்றாலும் பிற்காலச் சோழர்களின் ஆதிக்கமும் அதிகார பலமும் நலிவடைகிறது.
இவரது காலத்தில் போர் பற்றிய குறிப்புகள் இல்லை, எனவே நாடே அமைதியாக இருந்தனர், மக்கள் நலமுடன் வாழ்ந்தனர் என்று வரலாறு எழுதுகின்றனர். அதிகமாக இவர்கள் நம்புவது மெ(பொ)ய் கீர்த்திகளைத்தான்! இத்தகைய வரலாற்றெழுதியல்கள் எங்கும் நிறைந்துள்ளன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திருவாரூர் கோயில்களைப் பற்றி தலையணை அளவுகளில் நூல் எழுதியுள்ளார் குடவாயில் பாலசுப்பிரமணியன். இவைகளும் சோழப்பெருமிதங்களின் விளைச்சலாகவே இருக்கின்றன. அத்துடன் தல புராணங்களை வரலாறாக எழுதும் தன்மையும் மிகுந்துள்ளது.
எனவே அறிவுப்பூர்வமான வரலாற்றாய்வுகளுக்கு பர்ட்டன் ஸ்டெய்ன், நொபொரு கரஷிமா போன்றோர்களின் ஆய்வுகளையே நாட வேண்டியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக