சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!
மு.சிவகுருநாதன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவியின் மரண விசாரணையை சிபிசிஐடி நடத்தும்விதம் விமர்சனத்திற்குரியதாக உள்ளது. இதன்மூலம் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது.
நீதிமன்றக் காவலில் இருக்கும் குற்றஞ்சாட்டுக்கு உள்ளானவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது இயல்பான வழக்கு நடைமுறையாகும். பொதுவாக காவல்துறை கேட்கும் நாள்களில் சில நாள்களைக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிடும்.
இந்த வழக்கில் 72 மணி நேரம் அதாவது மூன்று நாள்கள் போலீஸ் விசாரணைக்குக் கேட்கப்பட்டது. நீதிமன்றம் 24 மணி நேரம் அதாவது ஒரு நாள் வழங்கியது.
ஆனால் சிபிசிஐடி வெறும் 12 மணி நேரம் மட்டும் விசாரித்து உடனே அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.
இதற்கான காரணம் யாருக்கும் விளங்கவில்லை. அப்புறம் ஏன் 3 நாள் கேட்டார்கள் என்பது வியப்பாக உள்ளது. இது வெளிப்படையான நாடகமாக இருக்கிறது.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கூட நேர்மையாக இருக்குமா என்கிற அய்யமே ஏற்படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் என இரண்டுமே குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்கத் துடிக்கும் விந்தை வழக்காக இவ்வழக்கு உள்ளது.
எனவே, உயர்நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை கண்காணிக்க வேண்டும். இவ்வழக்கில் உரிய நீதி கிடைக்கவும் நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை மக்களிடம் உறுதிப்படவும் இது மிகவும் அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக