ஞாயிறு, நவம்பர் 19, 2023

அப்பாவும் தஞ்சாவூரும்

 

அப்பாவும் தஞ்சாவூரும்

மு.சிவகுருநாதன்


 

                அப்பா மிகுந்த சிரமங்களுக்கிடையே தொடக்கக் கல்வி முடித்து,  பள்ளிக்காகக் காத்திருந்து எட்டாம் வகுப்பை (ESLC) நிறைவு செய்து ஆசிரியர் பயிற்சிக்குச் செல்கிறார். இது 1948-1950 காலகட்டமாக இருக்கலாம். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அரசினர் ஆதாரப் பயிற்சிப் பள்ளி செயல்பட்டிருக்கிறது. அங்குதான் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தார். அதனால்தான் என்னவோ தஞ்சை அவருக்கு மிகவும் பிடித்த ஊராக மாறியிருந்தது.

         எங்களை தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பயணநேரத்தில் அது பற்றிய சம்பவங்களை விவரிப்பார். ஒருமுறை சிவகங்கைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். தான் படிக்கும்போது அடிக்கடி இங்கு வந்து சுற்றியதையும் சாப்பாட்டிற்கு பட்ட கஷ்டங்களையும் தெரிவித்திருக்கிறார்.

         விடுமுறை நாட்களில் அடிக்கடி வெளியூர் கிளம்பிவிடும் பழக்கம் அப்பாவிற்கு இருந்தது. எங்கு செல்கிறேன் என்று சொல்லிச் செல்லும் பழக்கமெல்லாம் கிடையாது. பயண ஆயத்தம், கையோடு எடுத்துச் செல்லும் பை, பிறரிடம் பேசுவதைக் கேட்டல், ஏறுகின்ற பஸ், அதன் திசை, திரும்பும் நேரம் அல்லது நாள், வாங்கிவரும் பொருள் போன்ற பலவற்றைக் கொண்டு அவர் செல்லும் ஊரைக் கண்டுபிடிப்போம். எப்போது  திரும்புவார் என்பதையும் நாமாக கணிக்க வேண்டியதுதான்!

           எங்களது வீடு வேதாரண்யம் - பட்டுக்கோட்டை  சாலையில் இருந்தது. வேதாரண்யம் பேருந்தில் சென்றால் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம்; பள்ளி சார்ந்த அலுவலகப்பணிகள்.  பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை. அப்போது எங்கள் ஊர் பட்டுகோட்டைக் கல்வி மாவட்டத்தில் அமைந்திருந்தது. இன்று பட்டுக்கோட்டைக் கல்வி மாவட்டமே இல்லை. கும்பகோணத்திற்காக 1960களில் உருவான பட்டுக்கோட்டைக் கல்வி மாவட்டத்தைப் பலிகொடுத்துள்ளனர்


 

        எங்கள் ஊரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு தனியார் நகரப் பேருந்து ஒன்று சென்று வந்தது. எங்களுக்கு அருகிலுள்ள சிறிய நகரம் திருத்துறைப்பூண்டி. பொருட்கள், டீசல், சிறிய மருத்துவ வசதி ஆகியற்றுக்கு இங்கு செல்வது வழக்கம். சென்னை செல்லும்போது பயண ஆயத்தத்தைக் கொண்டு அறிவோம். சங்கப் பணிகளுக்காக திருவாரூர், கும்பகோணம், புதுக்கோட்டை, சென்னை போன்ற இடங்களுக்குப் பயணம் தொடரும். வேறு எவருக்கும் உதவி, ஊர் வழக்கு என்பதாகவும் இவரது பயணம் அமையும். விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு ஒருமுறை நண்பர் கள்ளக்குறிச்சி நடத்துநர் டி.சந்தானம் உதவியுடன் சென்றுவந்தார். ஒட்டன்சத்திரம் ஆஸ்த்மா மருத்துவம் செய்ய செல்லும்போது பழனி சென்று வந்தார். நான் செல்லும்போது இருமுறையும் ஒட்டன்சத்திரத்துடன் திரும்பினோம்.

         பெரிதாக வேலை இல்லை என்றாலும் தஞ்சை, பட்டுக்கோட்டையில் இருந்த நண்பர் ராஜப்பா போன்றவர்களை சந்திக்கவும் ஊர்சுற்றவும் இவ்வாறு கிளம்பிவிடுவது ஏதாவது வழக்கமாக இருந்தது. மொத்தத்தில் தஞ்சாவூர் அவருக்கு மிகவும் பிடித்தமான ஊராக இருந்தது. அங்கு தங்கிப் படித்ததனால்  ஏற்பட்ட ஈர்ப்பு எனலாம். பெரியகோயில், சோழ வரலாறு ஆகியவற்றால் அல்ல என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

         2005இல் உடல்நலிவுற்றிருந்த நிலையில் திருவாரூர் அருகே வீடு கட்டுவது குறித்து சொன்னேன். மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் உடனே பார்க்கக் கிளம்பினார். இருப்பினும் தஞ்சாவூரில் கட்டியிருக்கலாம் என்ற ஏக்கம் அவரிடம் வெளிப்பட்டது. நான் முன்னதாகவே அத்தகைய முயற்சிகளில் இறங்கி தோல்வி ஏற்பட்டதைச் சொன்னேன்


 

         தஞ்சாவூரில் பல இடங்களுக்குச் சென்றும் நண்பர் ஆ.மகேஸ்வரன் மூலம் தரகரிடம் சொல்லி பல இடங்களுக்குச் சென்று பார்த்தேன். மாரியம்மன் கோயில் உள்ளிட்ட எல்லா இடங்களும் நமது பட்ஜெட்டுக்கு (ஒரு சதுரடி சுமார் ரூ.50) ஒத்துவரவில்லை. சதுரடி ரூ.100 அல்லது அதற்கு மேல் இருந்ததால் அம்முயற்சியைக் கைவிட்டு திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சிக்குட்பட்ட தியானபுரம் பகுதியில் வீடு கட்டினேன். அருகே வீடு இல்லையே, காடு போல் இருக்கே  என்கிற கவலையெல்லாம் அப்பாவுக்கு இருந்தன. இருப்பினும் மகிழ்ச்சியில் வீட்டு வேலைகள் முழுதாக நிறைவடையும் முன்பு வீட்டில் பால் காய்ச்சிச் சென்றார். வீடு முழுமையடைந்த பிறகு அதைப் பார்க்க அவர் இல்லை. 

(இன்று 19/11/2023 அப்பாவின் 18வது நினைவு நாள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக