காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும்
(மகாத்மாவின் கதை தொடரின் பதினொன்றாவது அத்தியாயம்.)
மு.சிவகுருநாதன்
பஞ்சாப் உண்மையறியும் குழுவின் அறிக்கையை காந்தி மிகைப்படுத்தல்கள், சந்தேகத்திடமான சாட்சியங்கள் இல்லாத வகையில் தயாரித்தார். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒவ்வொன்றும் நிருபிக்கப்பட்ட உண்மைகளாகும். சாட்சியங்களில் அய்யமிருந்தால் அவற்றை காந்தி அறிக்கையில் அனுமதிக்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டுவருவது மட்டும் குழுவின் நோக்கமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆளுகை நிலைக்க எத்தகைய காட்டுமிராண்டித்தனங்களிலும் ஈடுபடும் என்பதற்கு இந்த அறிக்கை சான்றாகும். அமிர்தசரஸ் காங்கிரஸ் நடவடிக்கைகளில் பங்குபெற்றதன் மூலம் காந்தியின் தேசிய இயக்க நுழைவு தொடங்கியதாகக் கொள்ளலாம். அந்த அறிக்கை பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. 1919 இல் வெளியான இந்த அறிக்கை சில மாதங்களில் தமிழில் வெளிவந்தது. ‘பஞ்சாப் துயரம்’ என்று பெயரிடப்பட்ட இந்நூல் இரு பாகங்களாக 1920 இல் சென்னை, திருவல்லிக்கேணி எஸ். கணேசன் அண்டு கோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. (முதல் பாகம் 372 பக்கங்கள்; இரண்டாம் பாகம் 184 பக்கங்கள்.)
இதன்பிறகு தில்லியில் இந்து-முஸ்லீம் கூட்டு மாநாட்டில் கலந்துகொள்ள காந்திக்கு அழைப்பு வந்தது. அதில் ஹக்கீம் அஜமல் கான் சாகிப், ஆசப் அலி போன்றோர் கையொப்பமிட்டிருந்தனர். சுவாமி சிரத்தானந்தாஜியும் அம்மாநாட்டு வருவார் எனச் சொல்லப்பட்டது. கிலாபத் மற்றும் பசுப் பாதுகாப்பு ஆகியவற்றை இம்மாநாட்டில் விவாதிப்பதாகச் சொல்லப்பட்டதை காந்தி ஏற்கவில்லை. இந்த இரண்டையும் ஒன்றாக்குவதோ பேர உணர்ச்சியுடன் விவாதிப்பதையோ காந்தி விரும்பவில்லை. இந்தக் கருத்தை மாநாட்டில் எடுத்துக் கூறி அனைவரையும் காந்தி ஏற்குமாறு செய்தார். இம்மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்துக்களும் முஸ்லீம்களும் சுதேசி விரதம் மேற்கொள்ள வேண்டும், அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அன்றைய நாளில் கதர் அதற்குரிய இடத்தைப் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல் மட்டும் போதுமானதல்ல; குறித்த காலத்தில் நமக்குரிய சுதேசித் துணிகளை உற்பத்தி செய்வதைப் பற்றிய கவலைகளும் இருந்தன. நமக்குத் தேவையான கதர்த் துணிகளை உற்பத்தி செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கை அன்று காந்தியிடம் இல்லை. 1909 இல் ‘இந்திய சுயராஜ்யம்’ நூலில் இந்தியாவின் வறுமையைப் போக்குவதற்கு கைத்தறி அல்லது கைராட்டினமே தீர்வு என்று எழுதினார். ஆனால் அதற்கான திட்டங்கள் ஏதும் அப்போது இல்லை.
1915இல் சத்தியாகிரக ஆசிரமத்தில் சில கைத்தறிகளை வைத்தனர். ஆனால் அங்கு இருந்த எவரும் கைத்தறியை பயன்படுத்தும் திறனற்றவர்கள். அவர்களுக்குத் தேவையான துணிகளை அவர்களே நெய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமிருந்தாலும் அவை உடனடியாகச் சாத்தியப்படவில்லை. எனவே மில்துணிகளைக் கைவிட்டு கைத்தறித் துணிகளை வெளியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தினர். கைத்தறியாளர்களும் உயர்ரக மில்நூல்களைப் பயன்படுத்துவதால், கைத்தறி நூல்களைப் பயன்படுத்தும் நெசவாளர்களைத் தேடிப்பிடிக்க வேண்டியிருந்தது.
1917 இல் புரோச் கல்வி மாநாட்டிற்காக சென்றபோது கங்காபென் மஜூம்தார் என்ற துணிச்சல் பெண்மணியைக் கண்டார். நம்மூர் மணலூர் மணியம்மாவைப் போல தீண்டாமையை விட்டொழித்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் பழகி அவர்களுக்காக சேவையாற்றி வந்தார். நல்ல திடமான உடலும் குதிரைச் சவாரி செய்யும் திறனும் பெற்ற அவரிடம் காந்தி ராட்டினத்தை கண்டுபிடித்துத் தர வேண்டினார். அவரும் குஜராத் முழுதும் தேடி இறுதியில் பரோடா சமஸ்தானத்தில் வீஜாப்பூர் அருகே பயனற்றது என பரணுக்கு அனுப்பப்பட்ட ராட்டையை மீண்டும் கண்டுபிடித்துத் தந்தார்.
ராட்டைக்குத் தேவையான பட்டை போட்ட பஞ்சு கிடைப்பது அரிதாக இருந்தது. மில் முதலாளி உமார் சோமானி மூலம் பஞ்சு ஏற்பாடு செய்யப்பட்டது. மில்லில் தயாரிக்கப்பட்ட அவற்றைப் பயன்படுத்தலாமா என்கிற அறக்கேள்வியும் முன்நின்றது. பஞ்சு பட்டைப் போட்டுத்தர மாதம் ரூ.35 கூலிக்கு ஆள் அமர்த்தினார்கள். இவ்வேலைகளைச் செய்வதற்கு சில இளைஞர்களுக்கு கங்கா பென் பயிற்சியளித்தார். ராட்டைகளின் ஓசை இனிய இசையாகவும் மனித உடலில் மாற்றத்தை உண்டாக்கும் சக்தியாகவும் இருந்ததை காந்தி உணர்ந்தார். கங்கா பென் 45 அங்குல கதர் வேட்டிகளை நெய்து கொடுத்து காந்தியின் கதர் அணியும் ஆவலைப் போக்கினார். கதர் இயக்கம் சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக வளர்ந்தது.
கிலாபத் மாநாட்டில் அகிம்சை, ஒத்துழையாமை பற்றியும் விவாதிக்கப்பட்டது. அம்மாநாட்டில் ஒத்துழையாமைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அகிம்சையோடு கூடிய ஒத்துழையாமை சாத்தியமா என்கிற கேள்வி எழுந்தது. அவற்றைக் காந்தி தெளிவு ஏற்படுத்தினார். பின்னர் குஜராத் மாகாண காங்கிரஸ் மாநாட்டிலும் காந்தி ஒத்துழையாமைத் தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரஸ் அமைப்பு முடிவெடுக்கும் முன்பு மாகாண மாநாட்டில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்ற இயலாது என சிலர் எதிர்த்தனர். முன்னோக்கிச் செல்லும் பயணத்தில் இத்தகைய தீர்மானங்கள் கொண்டுவர அமைப்பிற்கு தகுதி இருக்கிறது, அது அவைகளின் கடமை, இது தாய் அமைப்பின் மதிப்பை உயர்த்து முயற்சி என்றெல்லாம் காந்தி வாதிட்டார். அப்பாஸ் தயாப்ஜி அம்மாநாட்டின் தலைவராக இருந்தார். தயாப்ஜி, வல்லபாய் படேல் போன்றோரின் முயற்சியால் அதிக ஆதரவுடன் அத்தீர்மானம் நிறைவேறியது.
இதுகுறித்து விவாதிக்க 1920 செப்டம்பரில் கல்கத்தாவில் காங்கிரஸ் சிறப்பு மாநாடு கூட்டப்பட்டது. லாலா லஜபதி ராய் அம்மாநாட்டில் தலைவர். டாக்டர் அன்னிபெசன்ட், பண்டித மதன்மோகன் மாளவியா, சேலம் சி.விஜயராகவாச்சாரியார், பண்டித மோதிலால் நேரு, தேசபந்து உள்ளிட்ட பல தலைவர்கள் இங்கு வந்திருந்தனர். பம்பாயிலிருந்து காங்கிரஸ், கிலாபத் சிறப்பு ரயில்களில் ஏராளமானோர் கூடினர். மௌலானா சவுகத் அலி கேட்டுக் கொண்டதன் பேரில் ரயில் பயணத்தில் ஒத்துழையாமைத் தீர்மான நகலைக் காந்தி தயாரித்தார்.
பஞ்சாப், கிலாபத் கொடுமைகளுக்குத் தீர்வு காண ஒத்துழையாமையைக் கடைப்பிடிக்க தீர்மான வாசகம் வலியுறுத்தியது. இது சில தலைவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் விருப்பப்படி சுயராஜ்ய கோரிக்கையும் இணைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற இனிமையான விவாதங்களில் ஒத்துழையாமையின் வேலைத்திட்டங்களை நிறைவேற்றும் ஆற்றல் பொதுமக்களிடம் இருக்குமா என்ற சந்தேகம் மோதிலால் நேருவிற்கு எழுந்தது. பின்னர் வந்த நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் மோதிலால் நேருவும் லாலா லஜபதி ராயும் அதை முழுமையாக ஏற்றனர்.
பாலகங்காதர திலகர் இல்லாததன் மனவருத்தம் காந்திக்கு அதிகமிருந்தது. அவர் இத்தீர்மானத்தை வரவேற்று தன்னை ஆதரித்திருப்பார் என காந்தி பெரிதும் நம்பினார். ஒருவேளை எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அதை ஒரு பாக்கியமாகவும் போதனையாகவும் மதித்திருப்பேன் என்று காந்தி கூறினார். இந்த இழப்பின் வருத்தத்தை மாநாட்டில் பங்குபெற்ற ஒவ்வொரு தலைவரிடமும் காண முடிந்தது.
கல்கத்தா காங்கிரஸ் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை 1920 டிசம்பரில் நாக்பூர் ஆண்டு மாநாட்டில் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. சேலம் சி.விஜயராகவாச்சாரியார் இம்மாநாட்டின் தலைவர். லாலா லஜபதி ராய் கொண்டுவந்த பள்ளிப் புறக்கணிப்பில் திருத்தம், பிரநிதிகளின் எண்ணிக்கை 1500லிருந்து 6000 ஆக உயர்த்துதல் போன்ற மாற்றங்களுடன் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. பண்டித மதன்மோகன் மாளவியா, முகமது அலி ஜின்னா போன்றோர் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்து-முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதர் குறித்த தீர்மானங்களும் நிறைவேற்றிய இந்த காங்கிரஸ் மாநாடு சிறப்புக்குரியதாகும்.
1919 ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சட்டமன்றங்களைப் புறக்கணித்தல், அரசுப்பள்ளிகளைக் குழந்தைகளும் புறக்கணித்தல், பிரிட்டிஷ் அளித்த பட்டங்கள், பதவிகளைத் துறத்தல், அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைப்பை மறுத்தல், நீதிமன்றங்களை வழக்குரைஞர்கள் புறக்கணிப்பது, அரசு விழாக்களில் பங்கேற்பதில்லை, அந்நியப் பொருட்களை புறக்கணித்தல், சுதேசிக் கொள்கைகளைப் பரப்புவது போன்ற அம்சங்கள் ஒத்துழையாமை இயக்கக் கோட்பாடுகளாக அமைந்தன.
ஒத்துழையாமை இயக்கத்தின் வழியாக காந்தி நாடறிந்த தலைவரானார். அவருக்கான மதிப்பும் நற்பெயரும் கூடின. நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். அங்கெல்லாம் பெருந்திரள் மக்கள் கூட்டம் எழுச்சியோடு பங்கேற்றது. அவர் சென்ற இடங்களில் எல்லாம் அந்நியத் துணிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஆங்கில நிறுவனங்கள் புறக்கணிப்பிற்கு உள்ளாயின. பல்லாயிரக்கணக்கில் அரசுப் பணிகளைத் துறந்தனர். மாணவர்கள் பள்ளிகளைப் புறக்கணித்தனர். வேல்ஸ் இளவரசரின் இந்தியப் பயணம் புறக்கணிக்கப்பட்டது.
1922 பிப்ரவரி குஜராத் பர்தோலியில் வரிகொடா இயக்கப் பரப்புரையைக் காந்தி தொடங்கினார். நாடெங்கும் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமடைந்தது. 1922 பிப்ரவரி 5இல் உத்திரப்பிரதேசம் கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்னுமிடத்தில் பேரணி நடைபெற்றது. அப்பேரணியில் காவல்துறையினர் சினமூட்டும் செயல்களை மேற்கொண்டனர். இது மக்கள் வன்முறையாக மாறியது. காவலர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் காவல் நிலையத்திற்கு தங்களைப் பூட்டிக் கொண்டனர். ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் 22 காவலர்களுடன் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் அனைவரும் உயிரிழந்தனர். காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை உடனே திரும்பப்பெற்றார். காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
அகிம்சை, சத்தியாகிரகப் போராட்டம் நடத்தும் அளவிற்கு இந்தியர்கள் இன்னும் தயாராகவில்லை என்ற காந்தியின் எண்ணத்தைப் பிரதிபளிப்பதாக இது அமைந்தது. சிறைக்குள்ளும் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் அதற்கான செயல்திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்தினார். இடைப்பட்டக் காலத்தில் காங்கிரஸ் போராட்ட வரலாற்றில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதனால் சில தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் காந்தி தனது சிந்தையில் கருத்தியல் தெளிவோடு அவற்றை எதிர்கொண்டார்.
இக்காலகட்டத்தில் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகிய தலைவர்கள் 1923 ஜனவரி 1இல் சுயராஜ்ய கட்சியைத் தொடங்கினர். இக்கட்சியை காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அமர்வு ஒன்று அங்கீகரித்த நிகழ்வும் நடந்தது. இந்தியாவின் இம்பீரியல் (பேரரசு) சட்டசபையில் சுயராஜ்ய கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேசியத்தை முன்னெடுக்க இதை அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினர்.
1919 இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டையாட்சி அறிமுகமானது. இதன்படி நிதி, பாதுகாப்பு, காவல் துறை, நீதித்துறை, வருவாய், நீர்ப்பாசனம் போன்றவை ஆங்கிலேயர்களுக்கும் உள்ளாட்சி, பொது சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வனம், பொதுப்பணிகள், மீன் வளம் போன்றவை இந்திய அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன. இந்நிலை 1935 மாகாண சுயாட்சி அறிமுகமாகும்வரை நீடித்தது. சுயராஜ்ய கட்சியினர் வங்காளத்தில் அரசுடன் ஒத்துழைக்க விரும்பாததால் ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்க மறுத்தனர். 1925 சி.ஆர்.தாஸ் மறைவுக்குப்பின் சுயராஜ்ய கட்சி செயலிழந்தது.
சௌரி சௌரா நிகழ்வுக்குப்பின் காந்தி மக்களுக்கு அகிம்சை குறித்த தீவிரப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டார். இதன்மூலம் இம்மண்ணில் பல நூற்றாண்டுகளாக வழக்கொழிந்துபோன அகிம்சைத் தத்துவத்தை மீட்டெடுக்க முடியுமென திடமாக நம்பினார். அதற்காக இந்து-முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதர் போன்றவற்றில் கவனம் குவித்தார். இவற்றிற்காக இளைஞர்களைத் திரட்டி, உரிய பயிற்சியளித்து சுயராஜ்ய வீரர்களாக மாற்ற காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுறுத்தினார். அதற்கானச் செயல்திட்டங்களை முன்னெடுத்தார். காந்தியின் இச்செயல்பாடுகள் அடுத்த கட்டப் போராட்டத்திற்கான முன்னேற்பாடாக அமைந்ததை 1930இல் நடந்த சட்டமறுப்பு இயக்கம் உலகிற்கு நிருபித்தது.
1927 நவம்பர் 8 அன்று இந்திய அரசியல் சட்டச் சீர்திருத்த ஆணையம் (Indian Statutory Commission) ஒன்றை ஆங்கில அரசு அறிவித்தது. இதற்கு சர் ஜான் சைமன் தலைமையில் எழுவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1928இல் இந்தியப் பயணம் மேற்கொண்டது. இதில் இந்தியர் ஒருவரும் இடம்பெறவில்லை. இதனால் இந்தியர்கள் சினமும் ஆத்திரமும் கொண்டனர். காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய அமைப்புகளும் சைமன் குழுவைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தன. “சைமனே திரும்பிப் போ” என்ற முழக்கம், பதாகைகளுடன் இந்தியாவெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
போராட்டக்காரர்கள் காவல் துறையினரின் ஈவிரக்கமற்ற கொடிய தாக்குதலை எதிர்கொண்டனர். பெரும்பாலும் திருப்பித் தாக்கவில்லை. அத்தகைய கொடியத் தாக்குதலில் படுகாயமடைந்த லாலா லஜபதி ராய் பின்னாளில் மரணமடைந்தார். ஒத்துழையாமை இயக்க வீழ்ச்சியில் இருந்த இந்தியாவும் காங்கிரசும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட அகிம்சைப் போருக்குத் தயாராயின.
சைமன் குழுவின் பரிந்துரைகளுக்கு மாற்றாக இந்திய அரசியல சாசனம் உருவாக்க 1928 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் மோதிலால் நேரு தலைமயில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் வரைவு அறிக்கை 'நேரு அறிக்கை' எனப்பட்டது.
இவ்வறிக்கையில் இந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை, மத்திய-மாகாணச் சட்டப் பேரவைகளுக்குக் கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதியுடன் தேர்தல் நடத்துதல், அனைவருக்கும் பொது வாக்களிப்பு முறை சிறுபான்மை முஸ்லீம் மாகாணங்களில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதைப் போல முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு போன்ற பல்வேறு அம்சங்கள் இருந்தன.
பிரிட்டிஷ் அரசின் கீழில் தன்னாட்சி உரிமையில் சில காங்கிரசார் திருப்தி அடையவில்லை. அவர்கள் முழுமையான விடுதலையை வலியுறுத்தினர். 1929 டிசம்பரில் லாகூர் காங்கிரஸ் அமர்வு ஜவகர்லால் நேரு தலைமையில் கூடியது. 1930 இல் நடத்தப்படும் முதல் வட்டமேசை மாநாட்டைப் புறக்கணிப்பது என்றும் 1930 ஜனவரி 26 ஐ இந்திய விடுதலை நாளாகக் கொண்டாடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்றவற்றை வன்முறையற்ற அதாவது அகிம்சை வழியில் தொடங்கி நடத்த காந்திக்கு இந்திய தேசிய காங்கிரஸ் முறைப்படியான அனுமதியை அளித்தது. இம்மாநாட்டில்தான் காந்தியும் நேருவும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். இருவரது எண்ணவோட்டங்களும் சம அலைவரிசையில் இருந்ததைப் பின்னாளில் உலகம் கண்டு கொண்டது.
(தொடரும்…)
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் நவம்பர் 2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக