செவ்வாய், மே 12, 2026

காலநிலை மாற்றம்

 

காலநிலை மாற்றம்

மு.சிவகுருநாதன்


 

               காலநிலை மாற்றம் (climate change) என்பது சாதாரணமான சொல் அல்ல. இன்று உலகம்  முழுதும் உச்சரிக்கப்படும் எச்சரிக்கைச்  சொல்லாக இருக்கிறது. இதன் தாக்கம் பெரிது; எனவே இதுகுறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் உள்ளது. உலகளவில் தட்ப வெப்பநிலைகளில் நீண்டகாலத்தில் ஏற்படும் மாற்றமே காலநிலை மாற்றம் என்று வரையறுக்கப்படுகிறது. இதற்கு புவி வெப்பமயமாதல் முதன்மைக் காரணியாக இருக்கிறது. இதன் தொடர் விளைவுகள் பூமிப்பந்தைப் பெரிதும் பாதிப்பதாக அமைகிறது.

      புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக இருப்பது பசுமை இல்ல வாயுக்கள் (Green House Gases) ஆகும்.  கரி அமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடு (Carbon dioxide), ஹைட்ரோ கார்பனான மீத்தேன் (Methane) நைட்ரஸ் ஆக்சைடு (Nitrous oxide),  ஹைட்ரோ புளுரோ கார்பன்கள் (Hydrofluoro carbons (HFCs),  குளோரோ புளுரோ கார்பன்கள் (Chlorofluoro carbons (CFCs) போன்ற பசுமை இல்ல வாயுக்கள் புவியின் வெப்பநிலை உயருவதற்கு முக்கியக் காரணியாக உள்ளன. இவை புவியில் இயற்கையாக உருவாவதைவிட மனித செயல்பாடுகளால் உற்பத்தியாவது மிக அதிகமாக உள்ளது.

       காலநிலை மாற்றம் உலகின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கிறது. இது உலக சராசரி வெப்பநிலையை அதிகரித்து, வெப்ப அலைகள் உருவாகவும் வழிவகுக்கிறது. வெப்பநிலை உயர்வு இறப்பு விகிதத்தை அதிகரித்து, உற்பத்தித்திறனை மேலும் குறைக்க காரணமாக அமைகிறது. துருவப்பகுதிகளில் பனிப் படலங்கள் உருகி, கடல் மட்டம் உயர்கிறது. சில பகுதிகளில், தீவிர வானிலை நிகழ்வுகளும் மழைப்பொழிவும் அடிக்கடி நிகழ்கின்றன, மறுபுறம் மற்ற பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகளும் வறட்சிப் பாதிப்புகளும் உண்டாகின்றன. இவை எல் நினோ மற்றும் லா நினா நிகழ்வுகள் என அழைக்கப்படுகின்றன.

      அதிகரிக்கும் வெப்பநிலை காலநிலை மண்டலங்களின் மீது தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இது தாவர மற்றும் விலங்குகளின் பரவலையும் எண்ணிக்கையையும் பாதிக்கும். அதிக வெப்பநிலை நீராவிப்போக்கை அதிகரிக்கிறது. இது பருவமழை பொய்த்து, கடுமையான வறட்சிக்கு வித்திடுகிறது. மேகவெடிப்பு எனும் நீரிடிகள் மூலம் கிடைக்கும் திடீர் அதீத மழையால்  நன்னீரின் தரம் மற்றும் அளவு பாதிப்படையும்.  கடல் நீர் நிலத்தடி நீர் மட்டங்களுக்குள் ஊடுருவுவதால், நன்னீரின் அளவு குறைந்து, வேளாண்மையையும்  குடிநீரும் பாதிக்கப்படும்.


 

      வறட்சியானது போக்குவரத்து, வேளாண்மை, வனம், நீர் மற்றும் பல்லுயிர் பெருக்கம் போன்றவற்றில் தொடர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன்மூலம்  ஆறுகள் மற்றும் நிலத்தடி நீரின் அளவு குறைந்து, தாவரங்களின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. இதன் தொடர் நிகழ்வாக பூச்சித் தாக்குதல்கள் அதிகரிப்பதுடன், காட்டுத்தீப் பரவலும்  கூடுகிறது.   

           காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மக்கள், உள்கட்டமைப்புகள், வணிகச் சங்கிலிகளில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படும். காலநிலை மாற்றம் மிக வேகமாக நிகழ்வதால், பல தாவர மற்றும் விலங்கினங்கள் அதைச் சமாளிக்கப் போராடுகின்றன. காலநிலை மாற்றத்தால் மண் அரிப்பு, மண்ணில் கரிமப் பொருட்களின் குறைவு, உவர்மயமாதல், மண்ணில் பல்லுயிர் இழப்பு, நிலச்சரிவுகள், பாலைவனமாதல் போன்ற அச்சுறுத்தலுக்கு நிலம் உள்ளாகும்.   

     கோடை மற்றும் குளிர்கால நோய்கள் அதிகரிப்பு, வெள்ளம், காட்டுத்தீ, புயல் போன்றவற்றால் உண்டாகும் பாதிப்புகள், புதிய நோய்க் கடத்திகள், நீர் அல்லது உணவு மூலம் பரவும் நோய்கள், மகரந்தங்களின் ஒவ்வாமை தொடர்பான் நோய்கள், வைரஸ், பூச்சி மற்றும் விலங்குவழி நோய்கள் என பாதிப்புகளைப் பட்டிலிட்டால் நீளும்.

           நீர்வாழ் உயிரிகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை வரம்பைத் தாங்கிக்கொள்ளும் சக்தி கொண்டவை என்பதால் நீர்வாழ் சூழியல் அமைப்புகளின் நலத்தைத் தீர்மானிக்கும் காரணியாக நீரின் வெப்பநிலை இருக்கிறது. காலநிலை மாற்றங்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளின் நீர் வெப்பநிலையை அதிகரித்து, பனிப் போர்வையைக் குறைத்துள்ளன. இதன் விளைவாக, நீரின் தரம் மற்றும் நன்னீர் சூழல் அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன. காலநிலை மாற்றம் மனிதனது நலத்திற்கும் மட்டுமின்றி  தாவர மற்றும் விலங்குகளின் நலத்திற்கும் ஒரு அச்சுறுத்தலாகும்.

         காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்பது நம்முன் எழும் கேள்வியாகும். கால்நிலை மாற்றம் தொடர்பாக தொடர் நடவடிக்கை இல்லையென்றால் இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் வெப்பநிலை 2°C அளவிற்கு அதிகரிக்கும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான அளவாகும்.  காலநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான மற்றும் மீளமுடியாத தாக்கங்களைக் குறைப்பதற்காக, புவி வெப்பமயமாதலை 2°Cக்குக் கீழேயும், அதிகளவாக 1.5°Cக்குள்ளும் குறைக்க பெரும்பாலான நாடுகள் 2015இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில்  உறுதியளித்தன. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் மீது நெருக்கடிகளை ஏற்படுத்துவத்காகவும் ஒருபுறம் சொல்லப்பட்டது. இருப்பினும் இது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஒரு முதன்மையான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

       இவ்வொப்பந்தம் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பு, உலகளாவிய ஒத்துழைப்பு,  மீள்திறன் மிக்க மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான நீடித்த, கார்பன் உமிழ்வைக் கட்டுக்குள் வைக்க ஒரு முக்கிய கட்டமைப்பாக விளங்குகிறது. காலநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, 2050 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய நிகர சுழிய (zero) பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அடைவது என்ற ஒரே குறிக்கோளை நோக்கி முன்னேறும் படியாக பார்க்கப்படுகிறது.

      எல்லாம் கார்ப்பரேட்மயமாகியுள்ள இன்றைய சூழலில் சூழலியலும் அவர்களது கைகளுக்குச் சென்றுவிட்டது.  தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) இவர்களுக்கு ஏற்ற வகையில் சூழலியல் பரப்புரைகளை மேற்கொள்கின்றன. மார்ச் 28, 2026 அன்று இரவு ஒரு மணி (8.30-9.30) நேரம் மின்விளக்குகளை அணைத்து காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவது போன்ற கோமாளித்தனங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றை நக்கீரன் போன்ற சூழலியர்கள் ஃபேஷன் சுற்றுச்சூழல் என்று அழைக்கின்றனர்.

       கார்பன் உமிழ்வைக் குறைத்து புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரபு சாரா, புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்திப் பயன்பாடு என்பது ஒரு சிறந்த தீர்வாகும். இதன் மூலம் காலநிலை மாற்றத்தை சீர் செய்ய முடியும். கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த மின் வாகனங்களைப் பயன்படுத்துவது என்பது ஒரு முறையாகும். எனவே சந்தையில் இருசக்கர, நான்கு சக்கர மின் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் இந்தச் சந்தை அம்சத்தைக் கணக்கில் கொண்டு சூழலியல் கோமாளிகளாக மாறி தங்களது மூலதனத்தை பெருக்க முயற்சிக்கின்றனர். எரிவாயுவுக்கு (CNG) அடுத்தகட்ட நிலையில் மின் வாகனங்கள்  உள்ளன.

      இவ்வகைக் கார்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு, சார்ஜ் மையங்கள் என முதலாளித்துவம் தனது எல்லைகளை விரிவாக்கிக் கொள்கிறது. உண்மையில் சூழலுக்கு நன்மை செய்ய வேண்டுமெனில் சூரிய சக்தி, காற்றாலை, கடல் அலைகள், உயிரிக்கழிவுகள் போன்றவற்றிலிருந்து மின்னுற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. கார்ப்பரேட் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது மூலதன எல்லைகளை விரிவாக்க சுற்றுச்சூழல் என்கிற ஆயுதம் பயன்பட்டதுதான் மிச்சம்.

      இங்கு மின்னுற்பத்தி பேரளவில் நிலக்கரி (அனல் மின்சக்தி) மூலமே செய்யப்படுகிறது. நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களை எரிப்பதன் வாயிலாகவே புவி வெப்பமடைதல் அதிகமாகிறது. நம்மூர் மாசடையாமலிருக்க எண்ணூர், நெய்வேலி, மேட்டூர் போன்ற இடங்கள் புகை மண்டலமாக மாற நினைப்பது உண்மையான சுற்றுச்சூழல் அக்கறையல்ல. குறைந்தபட்சம் வீட்டின் மேற்கூரையில் சூரியஒளி மின் தகடுகளைப் பொருத்திவிட்டு, அதன் பின்னர் தங்களுக்குத் தேவையான இருசக்கர, நான்கு சக்கர மின் வாகனங்களை வாங்கி ஓட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

        குப்பைகள் உள்ளிட்ட எவற்றையும் எரிக்காமலிருத்தல், மிதிவண்டிகளைப் பயன்படுத்துதல், தேவையற்ற வாகனப் பயன் பாட்டைக் குறைத்தல், வாகனங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் (car pooling)  போன்ற எளிய செயல்பாடுகள் வாயிலாகவும் புவி வெப்பமடைதலைத் தடுத்து, காலநிலை மாற்றத்திற்கு எதிராக நாமும் முன்கை எடுக்கலாம் என்பதை உணர வேண்டிய தருணம் இதுவாகும். 

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் மே 2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக