பொய்மைகள் வென்றதில்லை; அறம் வெல்லும்
மு.சிவகுருநாதன்
இந்திய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா ஏற்கனவே 2023இல் 106வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டது. அச்சட்டம் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையின் இடங்களை 543 லிருந்து 816 ஆக உயர்த்தவும், ஒன்றிய அரசு அரசியலமைப்பு 131 வது திருத்த மசோதாவுடன் 2026 இல் தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கவும், ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்த மகளிர் 33% இட ஒதுக்கீட்டு மசோதாவையும் இணைத்து புதிய மசோதா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஏப்ரல் 16 தாக்கல் செய்யப்பட்டது.
தொகுதி மறுவரையறை 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் அமையும் என்று மசோதாவில் இடம்பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்துத் தவறாக வழி நடத்தினர். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த தீ இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அமோக ஆதரவால் இந்த அரசியல் சாசன மசோதா ஏப்ரல் 17இல் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாகத் தோற்கடிக்கப்பட்டது. இம்மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன. அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நூற்றாண்டுக்கும் மேல் பழமையான பாரம்பரியம் கொண்ட ஆங்கில ஏட்டின் தமிழ்ப்பதிப்பு “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தோல்வி” என்று ஏப்ரல் 18இல் தலைப்புச் செய்தி வெளியிடுகிறது. இதே நாளிதழ் ஏப்ரல் 16இல் “தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் ஆகிறது”, என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை என்ற போர்வையில் திமுக, திருணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி போன்ற எதிர்க்கட்சிகளின் மீது வன்மம் கக்கி இந்திய ஜனநாயக மாண்புகளைக் குழி தோண்டி புதைத்துள்ளார்.
இத்தகைய நிகழ்வுகள் இந்திய ஜனநாயகம் தடம் மாற்றப்பட்டு சர்வாதிகாரம் நோக்கிச் செல்லும் பாதையையும் நமது ஆட்சியாளர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்களாக இருக்கிறார்கள் என்பதையும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படக் கூடிய ஊடகங்கள் துளியும் அறமற்று செயல்படுவதையும் வாய்மை வெல்லும் என்ற சொல் பொருளிழந்து போவதையும் ஒருங்கே உணர வைக்கிறது. இருப்பினும் பொய்மைகள் வென்றதில்லை; அறம் என்றும் வெல்லும் என்ற நம்பிக்கையும் விதைத்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான இடங்களின் எண்ணிக்கையையும், அவற்றின் எல்லைகளையும் நிர்ணயிப்பது தொகுதி மறுவரையறை (delimitation) என்றழைக்கப்படுகிறது. இப்பணியை நாடாளுமன்றம் அமைக்கும் தொகுதி மறுவரையறை ஆணையம் மேற்கொள்ளும். நமது நாட்டில் 1951, 1961 மற்றும் 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டன. 1971இல் இந்திய மக்கள் தொகை சுமார் 55 கோடியாக இருந்தபோது, மக்களவையின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் குறிப்பாக தென்னக மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கும் என்பதால் 1976 மற்றும் 2001 இல் இந்த மறுவரையறை தலா 25 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டது. 2026இல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டியிருப்பதால் அதை எதன் அடிப்படையில் செய்வது என்பது இங்கு பிரச்சனையாகியுள்ளது.
மக்களவை இடங்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 543லிருந்து 816 ஆக உயர்த்துதல், தொகுதி மறுவரையறை செய்ய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு அளித்தல், பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பதிலாக 2011ஆம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது. இதன்மூலம் பெண்களுக்கு சுமார் 272 இடங்களை ஒதுக்குவதாகச் சொல்லப்படுகிறது. 2011 அடிப்படையில் தற்போது மறுவரையறை செய்து சட்டமாக்கிவிட்டால் 2027 கணக்கெடுப்பிற்குப் பிறகு மீண்டும் புதிய மறுவரையறையை நாடாளுமன்றப் பெரும்பான்மை மூலம் முடிவு செய்து 2029 பொதுத்தேர்தலில் தங்களது வெற்றியை உறுதிசெய்யும் பாஜகவின் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கும் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று தொகுதி மறுவரையறை மசோதா குறிப்பிட்டிருந்த நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கை, விகிதாச்சார அடிப்படையில் 50% அதிகரிக்கப்படுவதால் மக்களவையின் பிரதிநிதித்துவத்தின் தற்போதைய விகிதத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்ற மசோதாவில் இடம்பெறாத ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாய்மொழி உத்தரவாதத்தை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. மொத்த 543 தொகுதிகளில் 39 தொகுதிகள் என்பது 7.18% ஆகும். இந்த அடிப்படையிலான விகிதாச்சாரப் பகிர்வு அனைத்து மாநிலங்களுக்கும் செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்பே வைக்கப்பட்டுவிட்டது. அதை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு குயுக்தியாக 50% என்ற பொய்யைச் சொல்லியும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.23% மாக உயரும் என்றும் ஏமாற்றப் பார்த்தது.
இந்திய ஜனநாயகத்தில் “ஒரு குடிமகன்-ஒரு வாக்கு-ஒரு மதிப்பு” என்ற அடிப்படையில் அரசு தேர்வாகிறது. தற்போதைய மக்கள் தொகை கணக்கில் கொள்ளப்படாததால் இந்தக் கொள்கை மதிப்பிழந்து போவதாக ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் கொள்கைத் திட்டத்தின்படி மக்கள் தொகையைக் குறைத்த தென்னிந்திய மாநிலங்களுக்கு இதனால் ஏற்படும் பாரிய தாக்கங்களை சர்வாதிகாரப் போக்குடைய ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. எடப்பாடி கே.பழனிசாமி, சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், டி.டி.வி.தினகரன் போன்ற தென்னகத்திலுள்ள பாஜக கூட்டாளிகள் தங்களது சொந்த நலனுக்காக மாநில உரிமைகளை அடகு வைத்துள்ளனர். மாறாக மக்களவையின் விரிவாக்கத்தால் அதிக இடங்களைப் பெற வாய்ப்புள்ள, சமாஜ்வாதி கட்சி போன்றவையும் தங்களது எதிர்ப்பில் உறுதியாக இருந்தது பாராட்டிற்குரியது.
பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இது குறித்த நாடு தழுவிய விவாதத்திற்கு வழிவகுத்ததுடன் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் காலத்தில் கொல்லைப்புறம் வழியாக சதிசெய்து கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவைத் தோற்கடித்து பாஜக விற்கு உரிய பாடம் புகட்டினார். சில முரண்பாடுகள் இருப்பினும் இந்தியா கூட்டணிக் கட்சியினரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் பாராட்டிற்குரியதாகும்.
இந்திய ஜனநாயக நடைமுறைகளையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் மதிப்பளித்த வரலாறு கிடையாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இத்தகைய ஜனநாயக அமைப்புகளைக் குலைப்பதிலும் அவற்றின் மாண்புகளைச் சிதைப்பதிலும் இவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். 2019 தொடங்கி மக்களவைக்குத் துணை சபாநாயகர் பதவியே இல்லை. இப்பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவது ஜனநாயக மரபான நடைமுறையாகும். சென்றமுறை (2019-2024) காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதிக்குக் குறைவான எண்ணிக்கை இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்தமுறை (2024-2029) காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிக்கு உரிய எண்ணிக்கையை பெற்றபோதும் துணை சபாநாயகர் பற்றி ஆளுங்கட்சி வாய் திறப்பதில்லை.
நாடாளுமன்றத்தில் ஜனநாயக அடிப்படையிலான விவாதங்களைக்கூட ஆளும் பாஜக அரசு விரும்புவதில்லை. எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு விவாதமின்றி நூற்றுக்கணக்கான மசோதாக்கள் நிறைவேறியிருக்கின்றன. ஆகஸ்ட் 5, 2019இல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசமாக மாற்றும் மசோதா, வேளாண் சட்ட மசோதாக்கள் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான இத்தகைய செயல்பாடுகளை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றனர். தொகுதி மறுவரையறை, சிறப்புத் தீவிர திருத்தம் (SIR), மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்றவற்றின் மூலமாக இந்துத்துவா சக்திகள் இந்தியாவின் பன்முகத்தைக் குலைத்துத் தங்களுக்கான இந்தியாவைக் கட்டமைக்க முயல்கின்றனர்.
2015 இல் குடியரசுத் தலைவர் உரை தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஒரு திருத்தம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏற்க வேண்டிய நிலைக்கு உள்ளானது. பட்ஜெட் போன்ற பண மசோதாக்கள் மீது மாநிலங்களவை வாக்களிக்க இயலாது. இவை சட்டமாக மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை. எனவே ஆளும் பாஜக “பண மசோதாக்கள்” என்ற போர்வையில் நிதி சாராத மசோதாக்களையும் அறிமுகம் செய்யத்தொடங்கியது. தற்போது மாநிலங்களவையே ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் பன்முகத்தைப் பிரதிபளிக்கும் வகையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என்ற ஈரவைச் சட்டமன்றமாக இந்திய நாடாளுமன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கும் அதன் கட்சிகளுக்கும் ஓரளவு பிரதிநித்துவம் கிடைக்கிறது. உதாரணமாக அஇஅதிமுகவிற்கு மக்களவையில் ஒரு தொகுதிகூட இல்லையென்றாலும் கூட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களவையில் அதற்கு இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு 238 உறுப்பினர்களும் துறைசார்ந்த அறிஞர்கள் 12 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இதன் எண்ணிக்கை குறித்த பேச்சே இல்லை. தற்போது மாநிலங்களவை மக்களவையை விட 2.2 மடங்கு பெரிதாக உள்ளது; விரிவிற்குப் பிறகு 3.3 மடங்கு பெரிதாக மக்களவை மாறுவதால் மாநிலங்களவை தனது மதிப்பை இழக்கும். மக்களவையிலேயே ஆளுங்கட்சிக்கு அதீதப் பெரும்பான்மை கிட்டிவிடுவதால் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லாமல் போய்விடும். மாநிலங்களவையில் 106 உறுப்பினர்களை மட்டும் கொண்ட பாஜக அதை ஒரு செயல்படாத அமைப்பாக மாற்றத் துடிக்கிறது. இவர்களது ஒற்றை அதிபராட்சி முறைக்கு இவையெல்லாம் இடையூராகத் தெரிவதில் வியப்பொன்றுமில்லை. மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டதிலிருந்து இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
கோவிட் பெருந்தொற்றுக்கிடையே புதிய நாடாளுமன்ற கட்டடம் 888 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டபோதே முன்னுணர்த்தப்பட்ட செய்திதான் தொகுதி மறு வரையறை. இதற்கான எதிர்ப்புப் பரப்புரைகள் தமிழ்நாட்டில் முன்பே தொடங்கிவிட்டது. இப்போதுள்ள 543 இடங்களில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு செய்து 179 இடங்களைத் தருவதில் எவ்விதத் தடையுமில்லை. ஆண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 500 அல்லது 400க்கு குறையக் கூடாது என்றெல்லாம் சட்டத்தில் சொல்லப்படவில்லை. 850 அளவிற்கு இடங்களை உயர்த்தி அதில் 272 இடங்களைப் பெண்களுக்கு வழங்குகிறோம் என்பதே ஏமாற்று வேலையாக உள்ளது. மேலும் தற்போதைய அவை அதிக நாட்கள் செயல்படுவதில்லை; விவாதங்கள் முறையாக நடைபெறுவதில்லை. எனவே எண்ணிக்கை அதிகரிப்பால் அவை பொதுக்கூட்ட மேடையாகுமே தவிர ஜனநாயகத்திற்கு எவ்வித பலனையும் தராது.
உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற இந்தி பேசும் மாநிலங்களைக் கொண்டே தங்களது பெரும்பான்மையை நிறுவிக் கொள்ளும் முயற்சியாக இது உள்ளது. படிப்படியாக நமது அரசியலமைப்பை மாற்றி ஒற்றையாட்சி முறையை நிறுவ இம்மாதிரியான செயல்பாடுகள் படிக்கட்டுகளாக அமைகின்றன. தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் உறுப்பினர்கள் அதிகம் பங்கேற்கவில்லை என்றால் அதைச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று பாஜக தரப்பு மறைமுக தந்திரங்களைப் பயன்படுத்தியது.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை நிரந்தரமாகவோ அல்லது அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து இப்போதிருக்கிற விகிதாச்சார அடிப்படையில் இடங்களை அதிகரிப்பதே இதற்குரிய தீர்வாக அமையும். ஆளும் பாஜக இத்துடன் அமைதியாக இருந்துவிடப்போவதில்லை. மீண்டும் மீண்டும் தனது பாசிச கொடுங்கரங்களை நீட்டிக் கொண்டே இருக்கும். காங்கிரஸ், திமுக, திருணாமுல், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா, ஆம் ஆத்மி போன்ற பாஜக எதிர்ப்பாளர்களின் ஒற்றுமை, தொடர்ந்த மக்கள் இயக்கம் மூலமே இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது செயல்பாடுகளை அதற்கேற்ற வகையில் வடிவமைத்துக் கொள்ளாவிட்டால் காங்கிரசுக்கு மட்டுமல்ல; இந்தியா ஜனநாயகத்திற்கும் எதிர்காலமில்லை.
நன்றி: பேசும் புதியசக்தி - மாத இதழ் மே 2026






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக