சனி, மே 11, 2013

மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை

மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை 
                                                                                                                                              மே 7, 2013

                                                                                                                                                                                                        சென்னை

     சென்ற ஏப்ரல் 25 அன்று சென்னை– புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மரக்காணம் கிராமத்தை ஒட்டியதலித் குடியிருப்பு ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. வன்னியர்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்துகிற சித்திரை முழுநிலவுக் கொண்டாட்டத்திற்குச்சென்ற வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கூட்டத்தினர் கட்டையன்தெரு என்னும் தலித் குடியிருப்பிலுள்ள ஏழு வீடுகளையும் மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகிலும்,கூனிமேட்டிலும் உள்ள சாலையோரக் கடைகள் சிலவற்றையும் தாக்கி நாசப்படுத்தியுள்ளனர். மரக்காணத்திற்கும்கூனிமேட்டிற்கும் இடையிலுள்ள சுங்கச் சாவடியும் தாக்கப்பட்டுள்ளது.

      இதை ஒட்டி நடந்த சாலை மறியல் மற்றும்கலவரத்தில் மூன்று அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட ஆறு வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.சாலை விபத்தில் இறந்த ஒருவர் உட்பட மூவர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தலித்.இருவர் வன்னியர்.இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், அன்புமணி, கோ,க.மணி,காடுவெட்டி குரு உள்ளிட்ட முக்கிய பா.ம.க தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மரக்காணம் காவல்நிலையத்தில் கீழ்க்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன:

1. முதல் தகவல் அறிக்கை 272/2013 – 300 பேர். குற்றஎண்கள் இ.த.ச 147,148, 294 (பி), 323, 324, 506 (2) rw வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்3 (1) (10), 3 (2) (3).

2. முதல் தகவல் அறிக்கை 273/2013 – 200 பேர். குற்றஎண்கள் இ.த.ச 147,148,  rw பொதுச் சொத்துக்கள்சேதம் விளைவித்தல் சட்டம் பிரிவு (3).

3.  முதல்தகவல் அறிக்கை 277/2013 – 10 பேர். குற்ற எண்கள் இ.த.ச 147,148, 435,2) rw பொதுச் சொத்துக்கள்சேதம் விளைவித்தல் சட்டம் பிரிவு (3) (4). 2. முதல் தகவல் அறிக்கை 273/2013

4. முதல் தகவல் அறிக்கை 278/2013 - 300 பேர். குற்றஎண்கள் இ.த.ச 147, 353,  rw பொதுச் சொத்துக்கள்சேதம் விளைவித்தல் சட்டம் பிரிவு (3).


    இவை தவிர அரியலூர் பி.செல்வராஜ் மற்றும் தஞ்சை எஸ்.விவேக்ஆகியோரது மரணம் தொடர்பான இரு குற்றப்பத்திரிக்கைகள் (274 மற்றும் 275/2013). பிரேதபரிசோதனை அறிக்கையில் செல்வராஜ் தலையில் வெட்டுக்காயம் பட்டு இறந்துள்ளார் எனத் தெரிந்தபின்அவரது மரணம் கொலை என்பதாக இப்போது விசாரிக்கப்படுகிறது. இருவரும் வன்னியர் சங்க மாநாட்டில்கலந்து கொள்ள வந்தவர்கள். இத்துடன் தலித் ஒருவரும் இறந்துள்ளார். சென்ற 27 அன்று ஜிப்மர்மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்பட்டபோது இறந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட கட்டையன் தெருவைச்சேர்ந்த மு.சேட்டும் பா.ம.கவினரின் தாக்குதலின் விளைவாகவே இறந்துள்ளார் என அவரது உறவினர்களால்புகாரளிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பா.ம.க தலைவர்களின் கைதை ஒட்டி மேலும் சுமார் 4500 பேர்தமிழகமெங்கும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இக் கைதை ஒட்டி ஆங்காங்கு வன்முறைகள்பேருந்துகள் தாக்கப்படுதல் முதலியன நடந்துகொண்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர்தீக்குளித்ததாகவும் அறிகிறோம்.


உண்மைஅறியும் குழு: 

                 கீழ்க்கண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மைஅறியும் குழு ஒன்று இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் சென்றஏப்ரல்26,27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப்பார்வையிட்டனர். அங்குள்ள மக்களிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் பேசினர். 

இக்குழுவில்பங்குபெற்றோர் :


1.  பேரா.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்(PUHR), சென்னை,
2.  கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு(FPR), புதுச்சேரி,
3.  பேரா.மு.திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்,(CPML-ML), சென்னை,
4.  வி.சீனிவாசன், சுற்றுச் சூழல் மற்றும் சிவில் உரிமைஆர்வலர், சென்னை,
5.  கி.நடராசன், மக்கள் வழக்குரைஞர் கழகம், சென்னை,
6.  ப.பரிமளா, தமிழர் காப்பு இயக்கம் (Save TamilsMovement), சென்னை,
7.  இரா.முருகப்பன். இளைஞர் சமூக விழிப்புணர்வு மையம்,திண்டிவனம்,
8.  இரா.பாபு, இளைஞர் சமூக விழிப்புணர்வு மையம், கடலூர்,
9.  சி,செந்தளிர், தமிழர் காப்பு இயக்கம் (SaveTamils Movement), சென்னை,
10.  ப.பூவிளங்கோதை,தமிழர் காப்பு இயக்கம் (Save Tamils Movement), சென்னை,
11.  அ.சாதிக்பாட்சா, இந்தியன் தவ்ஹீத் ஜமாத், கூனிமேடு, மரக்காணம்.


சம்பவமும்பின்னணியும் :

              வன்னியர் சங்கத்தினர் பல ஆண்டுகளாக மாமல்லபுரத்தில்சித்திரை முழு நிலவுக் கூடல் நடத்தி வருகின்றனர். அதில் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தோர்பெருந்திரளாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து குவிவது வழக்கம். ஒருகுறிப்பான சாதி அடையாளத்துடன் கூடிய பெருமிதமும், கொண்டாட்ட மனநிலையும் கூடிய இம்மக்கள்,தமது ‘மற்றமையாக’ (other) தலித் மக்களைக் கருதுவது யாவரும் அறிந்த ஒன்று.
கிழக்குக் கடற்கரைச் சாலையில்புதுச்சேரி தொடங்கி மாமல்லபுரம் வரை, குறிப்பாகச் சென்னையிலிருந்து 95 கி.மீ தொலைவில்அமைந்துள்ள மரக்காணம் பகுதியை ஒட்டி தலித்கள், வன்னியர்கள், கிராமணிகள், முஸ்லிம்கள்முதலானோர் வசித்து வருகின்றனர்.  சாதிப் பெருமிதமும்கொண்டாட்ட மனநிலையும் கலந்து வரும் வன்னியர் சங்கத்தினர் தலித் மக்களுடன், அவ்வப்போதுமோதலில் ஈடுபடுவது உண்டு. இந்தக் கொண்டாட்ட மனநிலை பெரிய அளவு மதுப் பயன்பாட்டுடன்இணைந்த ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை.  இன்று பிரச்சினைக்குள்ளாகியுள்ள இதே இடத்தில்2002ல் ஒரு மோதல் நடந்து கொலையிலும் முடிந்துள்ளது. அதை ஒட்டிச் சில ஆண்டுகள் சித்திரைத்திருவிழாவும்கூட நிறுத்தப்பட்டுள்ளது.


     கடந்த இரு ஆண்டுகளாக பா.ம.க மற்றும்வன்னியர் சங்கத்தினர் மிகத் தீவிரமாக சாதி அரசியலை மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்தஒன்று, தலித்கள் தவிர்த்த ஆதிக்க சாதிக் கூட்டணி ஒன்றையும் அவர்கள் இப்போது கட்டி வருகின்றனர்.தமிழகமெங்கும் இக்கூட்டணியினர் மாநாடுகள் நடத்துகின்றனர், சாதி மீறிய திருமணங்களுக்குஎதிராகக் கடு மொழி பேசி வருகின்றனர். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வன்முறைதொனிக்கவும், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சாதியினரை இழிவாகப் பேசுவதிலும்வல்லவர் என்பது ஊரறிந்த ஒன்று.

   இப்போது கிட்டத்தட்ட அதே அளவு வேகத்துடன் மூத்த தலைவர்இராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோரும் பேசத் தொடங்கியுள்ளனர்.


     சென்ற ஆண்டு இதே சித்திரை விழாவில்குரு உமிழ்ந்த வெறுப்புத் தீ தருமபுரி தலித் குடியிருப்புகளை எரித்த கதையை நாம் அறிவோம்.பலர் கைது செய்யப் பட்டனர். உடனடியாக சுமார் 150 பேர்கள் அங்கு கைது செய்யப்பட்டபோதும்,மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் நீதிமன்றத் தலையீட்டால் பாதிக்கப்பட்டோருக்குக் குறிப்பிடத்தக்கஅளவு இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டபோதும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு கண்டுள்ள பலரும்இன்றுவரை கைது செய்யப்படவில்லை. குரு முதலானோர் வெறுப்பு உமிழும் பேச்சுக்களைத் தொடர்ந்துஉமிழ அனுமதிக்கப்பட்டனர். தலித்களைத் தவிர்த்த ஆதிக்க சாதி மாநாடுகளை மாவட்டந்தோறும்ராமதாஸ் நடத்தக் கூடிய நிலையும் தொடர்ந்தது.
 

    இந்நிலையில் இந்த ஆண்டுச் சித்திரைத்திருவிழா குறித்து வன்னியர் சங்கம் மூன்று மாதங்கள் முன்பிருந்தே தமிழக அளவில் விளம்பரங்களைச்செய்யத் தொடங்கியது அப்போதே தமிழக அரசு எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். மாமல்லபுரத்தைநோக்கிய சாலைகளில் உள்ள தலித் குடியிருப்புகளுக்குப் போதிய பாதுகாப்பு அளித்திருக்கவேண்டும்.  சாதிகளுக்கிடையே பகையை வளர்க்கும்பேச்சுக்கள், தீண்டாமையை வலியுறுத்தும் பேச்சுக்கள் கடும் குற்றங்கள் என்பது குறித்தவிளம்பரங்களையும் எச்சரிக்கைகளையும் செய்திருக்க வேண்டும்.

      தமிழக அரசு இவற்றில் கவனம் செலுத்தவில்லைஎன்பதோடு, ஏற்கனவே கலவரம் நடந்துள்ள மரக்காணம் போன்ற பகுதிகளிலும் கூடப் போதிய அளவுகாவல் துறையினரை நிறுத்தவில்லை. அன்றும் (ஏப்ரல் 25, 2013) சாதிவெறியும் மதுவெறியும்கலந்த போதையுடன் சாரி சாரியாக ஆயிரக் கணக்கான வாகனங்களில் திருவிழாக் கூட்டம் வந்துள்ளது.காலி சாராய போத்தல்களைத் தூக்கி எறிவது, கடைகளில் சாப்பிட்டுவிட்டுக் காசு கொடுக்காமல்தகராறு செய்வது, பெண்களை நோக்கி ஆபாசச் சைகைகள் செய்வது என்பதாகத் தம் கொண்டாட்ட மனநிலையைவெளிப்படுத்தி வந்த கூட்டத்தினர் மரக்காணம் பெட்ரோல் பங்குக்கு எதிரில் இருந்த இளநீர்க்கடையில் இப்படித் தகராறு செய்துள்ளனர். அப்போது மணி சுமார் 12.30 இருக்கும். சாலை ஓரத்தில்வண்டிகளை நிறுத்திச் சாப்பிடவும் தொடங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த கட்டையன் தெருஎனும் தலித் குடியிருப்பைச் சேர்ந்த டில்லிபாபுவின் மகன் ரமேஷைத் தாக்கியுள்ளனர்.

புதுச்சேரி – மாமல்லபுரம் கிழக்குக்கடற்கரைச்சாலையில் சாலைக்கு இடப்புறமாகச் சுமார் ஒரு.கி.மீ உள்ளே தள்ளி மரக்காணம் கிராமம்,காவல்நிலையம் முதலியன உள்ளன. சாலைக்கு வலப்புறம் சுமார் 400மீ தள்ளி கட்டையன் தெருஉள்ளது. சாலைக்கும் கட்டையன் தெருவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமானயூகலிப்டஸ் மற்றும் முந்திரி மரங்கள் நெருக்கமாக அமைந்த காடு உள்ளது.  சாலையிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெருவைப் பார்க்கஇயலாத அளவிற்கு இக்காடு அமைந்துள்ளது.

சாலையில் தாக்குதல் நடைபெற்றதைஅறிந்த கட்டையன் தெரு தலித் மக்கள் சுமார் முப்பது பேர் ஓடி வந்து சாலையில் குழுமியுல்ளனர்.இது போக்குவரத்தைத் தடை செய்துள்ளது. இரு புறமும் வாகனங்கள் தேக்கமடைந்துள்ளன, சிறிதுநேரத்திற்குப் பின் அங்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தியுள்ளனர்.இதில் கட்டையன் தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் பிரவீண் குமார் காயமடைந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

    இதற்கிடையில் காட்டினூடே புகுந்துமரங்களை ஒடித்துக் கொண்டு கட்டையன் தெருவிற்குள் நுழைந்த பா.ம.கவினர் அங்கிருந்த பெண்களிடம்ஆபாசமாகப் பேசியுள்ளதோடு பேன்டை அவிழ்த்துக் காட்டுவது முதலான ஆபாசச் செயல்களிலும்ஈடுபட்டுள்ளனர். வீடுகளுக்குத் தீவைத்துள்ளனர். பெட்ரோல் நிறைந்த பாட்டில்களைக் கொளுத்திவீசி (பெட்ரோல் குண்டுகள்) இவ் வீடுகள் எரிக்கப்பட்டதைப் பலரும் கூறினர், ஒரு கோவில்உட்பட ஏழு வீடுகள் எரிந்து சாம்பலாயின. பலாமரங்களும் எரிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குக்குஎதிரிலிருந்த ஏகப்பன் மகன் அசோகனின் பெட்டிக்கடையும் எரிக்கப்பட்டது.


    எரிக்கப்பட்ட வீடுகளில் இருந்தநகைகள், ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் முதலியனவும் எரிந்தும் காணாமற்போயும் உள்ளன.27ந்தேதியன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஆறுமுகத்தின் மகள் அனுசூயாவின் சீர்வரிசைப்பொருட்கள் எரிந்து போனதை ஒட்டி இன்று அவர் திருமணம் நின்றுள்ளது. 

சில வாக்குமூலங்கள் :


நதீமாக/பெ முருகன் :

எனக்கு அஞ்சு பிள்ளங்க. அவரு வீட்ல இல்லை. 2.45மணி இருக்கும் கையில் தடி, கம்பி, கத்தியோட சுமார் 300 பேர் ஓடிவந்தாங்க.  சாதி சொல்லிப் பேசுனாங்க. அசிங்கமா வேட்டியெல்லாம்தூக்கிக் காமிச்சாங்க.. என் வயசுக்கு வந்த பொண்ணை (வயது 12) கூப்பிட்டாங்க. நாங்க பயந்துஓடிப் போயிட்டோம். ராத்திரி 7 மணிக்குத் திரும்பி வந்தபோது எல்லாம் சாம்பலா கிடந்துச்சு.பத்து பவுன் நகை, 1,90,000 பணம் எல்லாம் எரிஞ்சு போச்சு.


கலைவாணன் த/பெ கண்ணப்பன் : 

 (தலைக் காயங்களுடன் பேச இயலாமல் பேசினார்) நான்பெரியார் போக்குவரத்துக் கழக்கத்துல வேல செய்துட்டு இருந்தேன். உடம்பு சரியில்லாம வேலையவிட்டுட்டேன். அன்னைக்கு வீட்ல படுத்திருந்தேன். சத்தம் கேட்டு வெளியில வந்து பாத்தப்பவீடெல்லாம் எரிஞ்சுட்டு இருந்துச்சு. நான் சத்தம் போட்டேன். என் வீட்டு மேலையும் ஒருபந்தத்தை எரிஞ்சாங்க. என்ன தலயில அடிச்சதுல கீழ விழுந்துட்டேன். “சத்தமா போடுற” ன்னுசொல்லி என் நாக்கையும் கொஞ்சம் அறுத்துட்டாங்க. இலங்கைத் தமிழர ஆதரிக்கிறதா ராமதாஸ்சொல்றாரே அதுக்கு என்னா அர்த்தம்? நாங்க எல்லாம் தமிழருங்க இல்லியா?

அல்லிமுத்துத/பெ துரைராஜ் :  

கூலி வேலை செய்யிறேன். வீடுகளை எரிக்கிறவங்களைத்தடுக்கிறதுக்காக ஒரு 15 பேர் ஓடுனோம்.என்னைப் பிடிச்சு என் கை விரலுங்களை வெட்டப் பாத்தாங்க. விரல் நரம்புங்க அறுந்து போச்சு.

அசோகன்த/பெ ஏகப்பன்:

பெட்ரோல் பங்குக்கு எதிர பெட்டிக்கடை வச்சிருக்கேன்.இளநியும் விக்கிறேன் என் கடைய எரிச்சுட்டாங்க. 30,000 ரூபா சாமான் போச்சு. கம்பி வாங்க20,000 ரூபா வச்சிருந்தேன். அதுவும் போச்சு.

     சாலையில் நின்றிருந்த வாகனங்களும்எரிக்கப்பட்டுள்ளன. மூன்று அரசுப் பேருந்துகள், ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் எனக்குறைந்த பட்சம் ஆறு வாகனங்கள் எரிந்துள்ளன. பேருந்துகள் பலவற்றின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.

    தாக்குதலில் ஈடுபட்ட வன்னியர்சங்கத்தினரைக் கலைக்க போலீசார் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர். ரப்பர் குண்டுகளாலும்சுட்டுள்ளனர். இதில் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பெரிய அளவில் கிழக்குக் கடற்கரைச்சாலையில் வாகனங்கள் தேங்கி நின்றதை ஒட்டி, நின்றிருந்த வாகனங்களை, அகரம் என்னுமிடத்திலிருந்துமீண்டும் புதுச்சேரி நோக்கிச் செல்லுமாறு காவல்துறையினர் பணித்துள்ளனர். மாநாட்டுக்குச்செல்ல இயலாமல் திருப்பி அனுப்பட்டதால் ஆத்திரமடைந்த வன்னிய சங்கத்தினர் கூனிமேட்டிலுள்ளஃபான்சி ஸ்டோர் ஒன்றைத் தாக்கி உடைத்துக் கொள்ளை அடித்துள்ளனர். கறிக்கடை ஒன்றையும்எரித்துள்ளனர். பள்ளி வாசலுக்குள் பீர் பாட்டிகளை வீசியுள்ளதோடு முஸ்லிம் பெண்களிடம்ஆபாசச் சைகைகள் காட்டியுள்ளனர்.

இரு வாக்குமூலங்கள்:

ஆனந்திக/பெ பஞ்சநாதன் : 

 (சரவணா ஃபேன்சி ஸ்டோர் உரிமையாளர். இவர் ஒரு மீனவர்.கணவர் ஒரு தலித்)  மூணரை அல்லது நாலு மணி இருக்கும்.கடைல புகுந்து அலமாரிக் கண்ணாடிகளை உடைச்சாங்க, வெளியில் தொங்க விட்டிருந்த சட்டைகள்,மேட், பிளாஸ்டிக் சாமான், என்னோட செல் போன் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க. என் அஞ்சுவயசு மகன் சித்தார்த்தையும் அடிச்சாங்க..

கூனிமேடுஊராட்சி மன்றத் தலைவர் ஏ.எச். சகாபுதீன் : 

 11 குடியிருப்புகள் சேர்ந்ததுஇந்தப் பஞ்சாயத்து. மாநாடுக்குப் போகாம திருப்பி விடப்பட்டவங்க கடைகளை உடைச்சது உண்மைதான்.(பள்ளிவாயிலுக்குள் பீர் பாட்டில்களை வீசினார்களாமே, முஸ்லிம் பெண்களிடம் ஆபாசச் சைகைகள்காட்டினதெல்லாம் உண்மையா? எனக் கேட்டவுடன்) உண்மைதான். சொல்ல அவமானமா இருந்துச்சு.அதனால சொல்லல.
கூனிமேட்டில் இவ்வாறு தாக்குதல்நடந்தவுடன் அக்கிராமத்தைச் செர்ந்த முஸ்லிம்கள், தலித்கள், மீனவர்கள் மற்றும் உள்ளூர்வன்னியர்களில் சிலர் எல்லோரும் சேர்ந்து திருப்பித் தாக்கியுள்ளனர்.

மூவர்மரணம் :

மரக்காணத்திற்கும் கூனி மேட்டிற்கும் இடையில் தஞ்சையைச் சேர்ந்தவிவேக், அரியலூரைச் சேர்ந்த செல்வராஜ் என இரு வன்னியர் சங்கத்தினர் அன்று சந்தேகத்திற்குரியவகையில் மரணமடைந்துள்ளனர். இதில் விவேக் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜ், தலையிலுள்ள வெட்டுக் காயத்தால் மரணமடைதுள்ளதுஉறுதியாகியுள்ளது. அந்த வகையில் இது கொலை என்கிற நோக்கில் இப்போது புலன் விசாரிக்கப்படுகிறது.தலித்களால் தாக்கப்பட்டு இவர் கொல்லப்பட்டார் என பா.ம.கவினர் கூறுகின்றனர். ஆனால் கொலைநடந்ததாகச் சொல்லப்படும் பகுதியில் பெரிய அளவில் தலித்கள் கிடையாது. அதோடு பெருந்திரளாகமாநாட்டுக்கு வந்தோரைச் சில தலித்கள் சென்று கொன்றிருக்க இயலுமா என்கிற கேள்வியை விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் எழுப்பினார். அப்படியானால் நாங்களேஎங்கள் ஆட்களிக் கொன்று கொண்டோமா என்கிற கேள்வியைப் பா.ம.க வினர் கேட்கின்றனர். .

     அதேபோல 27ந்தேதி ஜிப்மர் மருத்துவமனைக்குஇறந்த நிலையில் கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்ட கட்டையன் தெரு செல்லன் மகன் சேட்டுவின்மரணம் பா.ம.கவினரின் தாக்குதலால்தான் நடந்துள்ளது என அவரது உறவினர்களால் இப்போது புகார்அளிக்கப்பட்டுள்ளது. 25ந்தேதி மதியம் தனது கொத்து வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த சேட்டை அவர் கட்டையன் தெருபக்கம் திரும்பியதைக் கண்டவுடன் சாலையில் குழுமியிருந்தவன்னியர் சங்கத்தினர் தாக்கியுள்ளனர். அடிபட்ட சேட்டு கடற்கரைப் பக்கமாக ஓடி எக்கேரிக்குப்பம் கடற்கரையில் ஒளிந்துள்ளார். 26 மாலை அப்பகுதி மீனவர்கள் கட்டையன் தெருவுக்குவந்து சேட்டு மயங்கிக் கிடப்பது குறித்துச் சொல்லியுள்ளனர். முதலில் மரக்காணம் மருத்துவமனைக்கும், பிறகு ஜிப்மருக்கும் அவரைத் தூக்கிச் சென்றபொழுது அவர் இறந்திருந்ததாக மருத்துவமனையில்கூறப்பட்டுள்ளது. பா.ம.கவினரின் தாக்குதலிலேயே அவர் இறந்ததாகக் கட்டையன் தெரு மக்கள்கருதுகின்றனர்.


இழப்பீடுகள்:

    எரிந்தவீடுகள் ஒவ்வொன்றிற்கும் 50,000 ரூ நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை வீடு கட்டும்திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எமதுபார்வைகள் : 
 
    பாதிக்கப்பட்ட மக்க்கள் தவிர  விடுதலைச் சிறுத்தைகளின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர்வெற்றிச் செல்வன், மரக்காணம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தயாளன், செல்வம் ஆகியோருடனும்பேசினோம். பா.ம.க தரப்பில் எவ்வளவு முயன்றும் யாரையும் சந்திக்க இயலவில்லை. சந்தித்தசிலரும் பேசத் தயாராக இல்லை. கூனிமேட்டில் கடை வைத்துள்ள வன்னிய இளைஞர் காத்தவராயன்என்பவரிடம் பேசியபோது அவர் “எல்லாத்தையும் மக்கள் டி.வியில பார்த்துத் தெரிஞ்சுக்குங்க”எனச் சொல்லி முடித்துக் கொண்டார். எனினும் 25ந்தேதி சம்பவம் குறித்து மருத்துவர் இராமதாஸ்,அன்புமணி, குரு ஆகியோரது உரைகள் மற்றும் அறிக்கைகளை விரிவாகப் பரிசீலித்தோம். அவர்கள்சார்பாக இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட காட்சிப் பதிவுகளையும் பார்த்தோம்.

    மரக்காணம்காவல்நிலையத்திற்குச் சென்றபோது அங்கு முக்கிய அதிகாரிகள் யாரும் இல்லை, விசாரணை அதிகாரியானடி.எஸ்.பி முருகேசன் அவர்களைத் தொடர்புகொண்டபோது விசாரணையில் உள்ள இவ்வழக்கு குறித்துஎதுவும் பேச இயலாது எனக் கூறிவிட்டார். விழுப்புரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்மனோகரனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.விசாரணையில் உள்ளவை, தெரிவிக்க இயலாதவை எனக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது நாங்கள்வற்புறுத்துவதில்லை. தமிழகமெங்கும் உயர் அதிகாரிகள் எங்களுடன் சிறந்த முறையுல் ஒத்துழைத்துவருகின்றனர், அவர்கள் கூறும் கருத்துக்களை நாங்கள் எந்த மாற்றமும் இன்றி வெளியிடுகிறோம்.இதன்மூலம் காவல்துறையின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைகின்றன. ஆனால் இது போன்று மிகச்சில அதிகாரிகள் எங்களைப் போன்றோருடன் பேச மறுப்பது வருந்தத்தக்கது. எங்களைப் போன்றமனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகளை, “ஒரு மூன்றாவது விசாரணை மையம். இவர்களின் செயல்பாடுகள்பல நேரங்களில் உண்மைகளை வெளிக் கொணர்வதில் பெரும் பங்காற்றியுள்ளன. இவர்களின் செயல்பாடுகளைத்தடுக்க இயலாது.” என மதுரை உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு கூறியது குறிப்பிடத் தக்கது.

1.சென்ற ஆண்டுச் சித்திரைத் திருவிழாப்பேச்சுக்கள் தருமபுரிக் கலவரத்திற்குக் காரணமாக இருந்ததையும், அதன்பின் அதே திசையில்இன்னும் உக்கிரமாகப் பா.ம.கவினர் நகர்ந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தமிழக அரசுதவறியுள்ளது. இப்படியான ஒரு தாக்குதலை அரசும் காவல்துறையும் எதிர்பார்த்திருக்க வேண்டும்உரிய வகையில் காவல் கண்காணிப்புகளையும், தலித் குடியிருப்புகளுக்குப் பாதுகாப்பையும்அளித்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு பழைய வழக்குகளைத் தேடிப் பிடித்து ராமதாசின்மீது பிரயோகித்து அவர் மீது  அநுதாபம் ஏற்படஒரு வாய்ப்பைத் தந்திருப்பதைக் காட்டிலும் காவல்துறை இதில் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

2, தருமபுரித் தாக்குதலில்500க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர் என்பதே காவல்துறையின் மதிப்பீடு. முதல் தகவல்அறிக்கையும் அவ்வாறே பதிவு செய்யப்பட்டது. எனினும் இரண்டு மாதங்களுக்குப் பின் 150பேர்களுக்கு மேல் ஒருவரையும் கைது செய்ய வேண்டியதில்லை என அரசு முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு. காடுவெட்டி குரு முதலானோர் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து சாதிவன்முறையைத் தூண்டும் வகையில் பேச அனுமதிக்கப்பட்டதும், மருத்துவர் இராமதாஸ் மாவட்டந்தோரும்தலித்கள் அல்லாத ஆதிக்க சாதி மாநாடுகள் நடத்துவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததும் இத்தகைய வன்முறைகள் தொடர்வதற்குக்  காரணமாயிருந்துள்ளன.

3. தலித்கள் தவிர்த்த ஆதிக்க சாதிமாநாடுகள் நடத்தப்படுவதை மற்ற கட்சிகள் ஒப்புக்குத் தான் கண்டித்தனவே ஒழிய அதற்கெதிராகக்காத்திரமான எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. தருமபுரி தாக்குதலை ஒட்டி உடனடியாகப் போட்டிபோட்டுக் கொண்டு அங்கே ஆறுதல் சொல்லப் பறந்த கட்சிகள் எதுவும் அங்கு அது தொடர்பான வழக்குகள்எவ்வாறு நடத்தப்படுகின்றன, குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனரா என்பதையெல்லாம்தொடர்ச்சியாகக் கவனித்து எதிர்வினையாற்றத் தவறின.

4. மரக்காணம் பகுதியில் இதே நிகழ்ச்சியைஒட்டி 2002ல் கலவரம் நிகழ்ந்திருந்தும் 25 அன்று உரிய காவல் பாதுகாப்பு அன்று இப்பகுதியில்தரப்படாதது வியப்பாக உள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அன்று மாமல்லபுரத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்த நிலையில், மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகில் இப்படியான பிரச்சினையைஒட்டி போக்குவரத்து ஸ்தம்பிக்கக்கூடிய நிலையைக் காவல்துறை தவிர்த்திருக்க வேண்டும்.உடனடியான பேச்சுவார்த்தைகள் மூலம்போக்குவரத்துத் தடையை நீக்கியிருக்க வேண்டும். அதேபோலகலவரத்திற்குப் பின் தேங்கியிருந்த வாகனங்களை மீண்டும் புதுச்சேரி நோக்கித் திருப்பிஅனுப்பியதும் கூனிமேட்டுத் தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளது.

5. 25 அன்று மதியம் 12 மணி தொடங்கிமாலை 5 மணிவரை கலவரம் நடந்துள்ளது தலித்களது வீடுகளும் கடைகளும் கொளுத்தப்பட்டுள்ளன.அப்படி இருந்தும் அன்றிரவு மாமல்லபுரத்தில் நடந்த மாநாட்டில் மருத்துவர் இராமதாஸ்,அன்புமணி, காடு வெட்டி குரு முதலானோர் இப்படியானதற்குக் குறைந்தபட்சமாக வருத்தம்கூடத்தெரிவிக்காதது மட்டுமல்ல, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையிலும், தரக் குறைவாகவும்பேசியுள்ளது வருந்தத் தக்கது மட்டுமல்ல வன்மையாகக் கண்டிக்கத் தக்கதும் கூட.

6. அடையாள அரசியல் என்பது இருபக்கமும் கூரான கத்தி போன்றது என்பார் அமார்த்ய சென். ஒரு பக்கம் அது இதுகாறும் அடையாளம்மறுக்கப்பட்டவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அதனூடான ஒரு தன்னம்பிக்கையையும் வழங்கியபோதும்இன்னொரு பக்கம் அது பிற அடையாளங்களின் மீதான வன்முறையாகவும் மாறிவிடுகிறது, ஆதிக்கநிலையினர் இந்நிலை எடுக்கும்போது அது மிகவும் ஆபத்தாகிவிடுகிறது. தவிரவும் அடையாள அரசியலில்ஒவ்வொரு அடையாளத்தின் ஆதரவுத் தொகுதிக்கும் ஒரு அதிகபட்ச எல்லை வரையறுக்கப்பட்டு விடுகிறது,வன்னியர்களது மக்கள் தொகை வீதம் 11 சதம் என்றால் அதற்குமேல் ஒரு வாக்குகூட பா.ம.கவுக்குவிழப்போவதில்லை. எனவே இந்தப் 11 சதத்தையும் உச்சபட்சமாகத் தன் பிடிக்குள் கொண்டு வரவேண்டும்என்கிற நிலை பா.ம.கவுக்கு வந்து விடுகிறது. எனவே அது வேறு எது குறித்தும் கவலைப்படாமல்அதிகபட்ச வெறுப்பை பிறர்மீது கட்டமைக்கிறது. மருத்துவரது குடும்ப அரசியல் முதலான காரணங்களுக்காகபா.ம.கவின் வன்னிய ஆதரவு சற்றே பலவீனப்பட்டிருந்த நிலையில் அதை ஈடுகட்ட இத்தகைய தீவிரநிலையை அது எடுக்கிறது.


கோரிக்கைகள்

1.   வன்முறைக்குக்காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பொருத்தமான பிரிவுகளின் கீழ்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். மாமல்லபுரம் மாநாட்டில் பேசியகளில் தலைவர்களில் சிலர் தலித்களைச் சாதி ரீதியாக இழிவு செய்து பேசியுள்ளனர். இன்னும்சிலர் வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளனர், அவர்கள் மீது பொருத்தமானபிரிவுகளின் கீழ் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும்.தாக்குதலில் பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகஇருக்கலாம் என்கிற எண்ணத்திற்கு வித்திடுகிறது. காவல்துறை இந்தக் கோணத்திலிருந்தும்புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

2.   காவல்துறைப்பாதுகாப்பில் அன்று ஏற்பட்ட குளறுபடிகளையும், தலித் குடியிருப்பின்  மீதான அன்றைய தாக்குதலையும் ஆய்வு செய்ய நீதித்துறைவிசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். தவறிழைத்த மற்றும் கவனக் குறைவாக இருந்த காவல்துறைஅதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

3.   மாநாட்டுக்குவந்தவர்கள் தரப்பில் அரியலூர் செல்வராஜ் என்பவர் தலையில் வெட்டுப்பட்டு இறந்துள்ளார்.அதேபோல கட்டையன் தெருவைச் சேர்ந்த சேட்டுவின் மரணத்திலும் அய்யங்கள் உள்ளன. அவரது பிரேதபரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. எனினும் அவர் 25ம் தேதியன்று மாநாட்டுக்குவந்தவர்கள் தாக்கியதன் விளைவாகவே இறந்தார் என அவரது குடும்பத்தினர், குற்றம் சாட்டுகின்றனர்.இரு வழக்குகளும் முறையாக விசாரிக்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

4.   வன்னியர்சங்கம் நடத்துகிற சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் இத்தகைய கலவரங்களுக்குக் காரணமாகிறதுஎன்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இதற்கு அனுமதி மறுக்க வேண்டும்.

5.   இழப்பீடுகளைப்பொருத்த வரையில் எரிக்கப்பட்ட வீடுகளைப் பசுமைத் திட்டத்தின் கீழ் கட்டித் தருவது ஏற்புடையதுஅல்ல. இத் திட்டத்தின் கீழ் அரசு அளிக்கும் உதவி வெறும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்கள்மட்டுமே. தவிரவும் பயனாளிகள் ஒவ்வொரு கட்டமாக வீட்டைக் கட்டிவிட்டுப் பின் அரசிடம்தொகையைப் பெறவேண்டும் இது சாத்தியமில்லை என்பதால் 5 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரசுஅவர்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும்.

6.   எரிக்கப்பட்டதாகச்சொல்லப்படும் சொத்துக்கள், கடைச் சாமான்கள் ஆகியன உரிய முறையில் மதிப்பிடப்பட்டு விரைவாகஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். எரிக்கபட்ட குடும்ப அட்டை முதலான ஆவணங்கள் விரைவாகவழங்கப்பட வேண்டும்.

7.   இறந்துபோனவர்கள்மற்றும் காயம்பட்டவர்களுக்கு இதுவரை இழப்பீடுகள் வழங்கப்படவில்லை, அவர்களுக்கு உரியஇழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் தலித்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கண்டவாறுஇந்த இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும்.

8.   கிழக்குக்கடற்கரைச் சாலைக்கும் கட்டையன் தெருவுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரிசர்வ் காடுதங்கள் பாதுகாப்பிற்கு இடையூறாக இருப்பதாக அம்மக்கள் கருதுகின்றனர், எனவே அவ்வனப்பகுதியைஅவ்விடத்திலிருந்து நீக்கி வேறு இடத்தில் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். 
 


9.   சாதி வெறுப்புதொனிக்கப் பேசுவது, தலித் மக்களைச் சாதி அடிப்படையில் இழிவு செய்வது ஆகியன குற்றம்எனவும் அதற்கு எந்த அளவு தண்டனைகள் உண்டு என்பதை விளக்கியும் அரசு அவ்வப்போது இதழ்களில்விளம்பரம் செய்ய வேண்டும். கிராமங்களில் விளம்பரப் பலகைகள் நடவேண்டும்.
 
தொடர்புக்கு:

அ.மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
அடையாறு, 
சென்னை- 600 020
செல்:+91 94441 20582

நன்றி: அ.மார்க்ஸ்

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

என்று தணியும் இந்த சாதியின் மோகம்.

கருத்துரையிடுக