புதன், மே 01, 2013

இன்று நாட்டார் வழக்காற்றியல் கார்ப்பொரேட்களின் கையில் இருக்கிறது.


இன்று நாட்டார் வழக்காற்றியல் கார்ப்பொரேட்களின் கையில் இருக்கிறது.
                                          -மு.சிவகுருநாதன் 


  (மே தினமான இன்று (01.05.2013) திருவாரூர் ஹோட்டல் செல்வீஸ் கோல்டன் ஹாலில் நடைபெற்ற பேரா.முனைவர் தி.நடராஜன் தொகுத்த கீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் வெளியீட்டு விழா குறித்த பதிவு இது.)

    தமுஎகச வின் வண்டல் இலக்கிய சந்திப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட இரா.தாமோதரன் தலைமையில் நடந்த இவ்விழாவில் சு.தியாகராஜன், கே.வேதரெத்தினம், மு.செளந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

   இந்தத் தொகுப்பு நூல் பற்றிய அறிமுக உரையாற்றிய எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள், கீழைத்தஞ்சை மாவட்ட மக்களின் வரலாறு திருவாரூர் தேர்க்கால் ஓடிய தடத்தில் பன்னெடுங்காலமாக மறைக்கப்பட்டு வந்துள்ளது என்றார்.

    தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வராததால் அவரது உரை தமுஎகச மாவட்டத் தலைவர் கே.வேதரெத்தினத்தால் வாசிக்கப்பட்டது. அறிவொளி இயக்கம் , திரையிசை மற்றும் பாவலர் வரதராஜன் பாடல்கள் இத்தொகுப்பில் இருப்பதை அவரது உரை சுட்டிக்காட்டியது. இவற்றையும் நாட்டார் பாடலாகவே கருதவேண்டும் என்றும் சொன்னார். 

   தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக   தமுஎகச மாநில துணைத்தலைவர் ஈரோடு சி. தங்கவேல் நூலை வெளியிட திருவாரூர் என்.எஸ். அண்ணாமலைச்செட்டியார் & கோ உரிமையாளர் கோ.சுப்பிரமணியன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.  அவர் பேசும்போது ராமன் வரலாற்று நாயகனாக மாற குரு காரணம் அதுபோல தி.நடராஜனுக்கும் வாய்த்தது என்றார். படிக்க சிரமப்பட்டபோது பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ 1000 மதிப்பில் எல்.இ.டி. விளக்கு வாங்கிக் கொடுத்தது பற்றியும் குறிப்பிட்டார்.

   ஆய்வாளர் சி.அறிவுறுவோன் பேசும்போது, நாட்டுப்புறவியல்தான் செவ்வியலுக்கு அடிப்படை, நாட்டுப்புற இசைதான் செவ்வியல் இசைக்கு அடிப்படை என்றும் 60 களில் பாலும் பழமும் திரைப்பட மெல்லிசைக்குப் பிறகு நாட்டார் இசை மெல்ல அழியத்தொடங்கியது என்றார். 

     தொடக்கத்தில் நாட்டார் வழக்காற்றியலை பிரிட்டிஷ்காரர்கள் கையிலெடுத்தார்கள் நம் மக்களைப் புரிந்துகொள்வதற்காக. அப்போதுதான் நம்மை அடிமைப்படுத்த வசதியாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். இன்று நாட்டார் வழக்காற்றியல் கார்ப்பொரேட்களின் கைகளுக்குப் போய்விட்டது என்று பேசிய தகஇபெம மாநில பொதுச்செயலாளர் இரா.காமராசு, பெண்களின் பாடல்கள் அதிகம் பதிவாகியுள்ளதை குறிப்பிட்டார். பேச்சு பெண்களுக்கு மிக முக்கியமானது என்பதை விளக்க ஏ.கே.ராமானுஜம் சொன்ன நாட்டார் கதையைக் கூறி அவர் தமது உரையை முடித்தார்.

   ஆய்வுரையாற்றிய பேரா.ஆறு.இராமநாதன், தனது களப்பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பொதுவாக நாட்டார் பாடல்களுக்கு வட்டார எல்லையை நிர்ணயம் செய்யமுடியாது என்று சொல்லி வெண்மணி பற்றிய பாடல்கள் கடலூர் வட்டாரத்திலும் கிடைக்குமென்றார். 38 ஆண்டுகளுக்கு முன்பு (1976 – 1980) தாம் சேகரித்த பாடல்களில் வரதட்சணை கொடுமைகள் இல்லை. இந்நூலில் அவை புதியன என்று கூறினார்.

    நிறையுரையாற்றிய ஈரோடு சி. தங்கவேல்,  தமுஎகச வால் நாட்டார் ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் 80 பேரில் களத்திற்குச் சென்றவர்கள் 9 பேர் மட்டுமே என்றும் அதில் ஒருவர் நடராஜன் என்றும் கூறினார். மக்களின் பண்பாட்டு வாழ்வியலை நாட்டார் பாடல்களில் வழியேதான் அறியமுடிகின்றது. ஈரோடு பகுதியில் இருக்கும் பேச்சியம்மன் வழிபாடு, பெண்ணாடு பலியிடல்  அதற்குப் பின்னாலுள்ள வரலாற்றை கள ஆய்வு செய்து வெளிக்கொண்டு வந்ததைக் குறிப்பிட்டு இம்மாதிரியான கள ஆய்வுகள்தான் அவற்றைச் செய்யமுடியும். சாமானிய மனிதர்களிடம் வெகு இயல்பாகப் பேசி மிகுந்த சிரமங்களிடையேதான் அவற்றை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.

    இறுதியில் நிறையுரையாற்றிய தொகுப்பாசிரியர் தி.நடராஜன், தனது குடும்பத்தினர் அளித்த ஒத்துழைப்பையும் உற்சாகத்தையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். தனக்கு பல கண்கள் மற்றும் பல தாய்கள் என்றும் பெருமையுடன் குறிப்பிட்ட அவர் தனக்கு வாசிப்பாளராக இருந்த 5 பெண்களுக்கு நன்றி சொன்னார். அவர்களுள் ஒருவரான கவிதாவை மேடைக்கழைத்து நூலின் பிரதி ஒன்றினை வழங்கினார். அப்பெண்களின் சிரமங்களை  தந்தை திருநாவுக்கரசு தெரிவித்தார். தன்னுடைய களப்பணிக்கு உறுதுணையாக இருந்த செ.மணிமாறன் போன்ற தனது மாணவர்கள் செய்த உதவிகளை பெருமை பொங்க விவரித்தார். தனது தத்துவார்த்த குருவாக சி.அறிவுறுவோனையும் தந்தை போன்ற வழிகாட்டியாக சோலை சுந்தரபெருமாளையும் குறிப்பிட்டார்.  

    தமுஎகச கிளைச் செயலாளர் மனிதநேயன் நன்றியுடன் விழா முடிவுற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக