வெள்ளி, மே 31, 2013

கே.வேலாயுதபுரம்: அருந்ததியருக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் - உண்மை அறியும் குழு அறிக்கை

கே.வேலாயுதபுரம்: அருந்ததியருக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் - உண்மை அறியும் குழு அறிக்கை

                                                                                                                                     மே 30, 2013                                                                                                                                              மதுரை                                                                                                                             
        தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் வசிக்கும் சுமார் 35 அருந்ததியர்  குடும்பங்கள் மீது, அதே கிராமத்தில் வசிக்கும் சுமார் 360 ரெட்டியார் குடும்பத்தினர்  காலங்காலமாக  மேற்கொண்டு வரும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும், அவற்றுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடிவருவது பற்றியும் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டுள்ளன.. சென்ற ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த மு.கருப்பசாமி (52) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதை ஒட்டி அருந்ததிய மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகக் கிராமத்தில் குவிந்த மாவட்ட அதிகாரிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக அங்கு ரெட்டியார் சாதியினரால் அமைக்கப்பட்டிருந்த இரும்பாலான தீண்டாமை முள்வேலிகளை அகற்றியுள்ளதோடு (ஏப்ரல் 13, 2013) கருப்பசாமி கொலை தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த 13 ரெட்டியார் இனத்தவரைக் கைது செய்துள்ள செய்தியும் பத்திரிக்கைகளில் வந்தன.

      அதே நேரத்தில் இக்கிராமத்தில் 40 தலித் குடும்பங்கள் 400 ரெட்டியார் குடும்பங்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும்,அகிராமத்தில் உள்ள ரெட்டியார் குடும்பங்கள் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளதாகவும் சமீபத்தில் பா.மக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சினைக்குரிய மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் பேசியுள்ளதும் பத்திரிக்கைகளில் வந்தது. தீண்டாமைக்குள்ளாகி வரும் அருந்த்தியக் குடும்பங்களைச் சந்திக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் வன்னிஅரசு இங்கு வந்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட ரெட்டியார் இனத்தவர் கம்பு, தடிகளுடன் கூடி நின்று அவருடன் வந்திருந்தோரை ஆபாசமாகத் திட்டியதோடு தடுத்து நிறுத்தியும் உள்ளனர். ஆக, அங்கு ஒரு கலவரச் சூழல் நிலவுவதாகவும், அருந்ததிய மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் அறிந்த நாங்கள் இது தொடர்பான உண்மைகளை அறிய மனித உரிமைப் போராளிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தோம்...

   இக்குழுவில் மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தைச் (PUHR) சேர்ந்த பேரா.அ.மார்க்ஸ் (சென்னை), வழக்குரைஞர் ரஜினி (மதுரை), முக்கிய தமிழ் எழுத்தாளர் கோணங்கி (கோவில்பட்டி), தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக வழக்குரைஞர் ஏ.முகம்மது சஃபி (மதுரை), ஆகியோர் பங்கு பெற்றனர்.

       இக்குழுவினர் சென்ற மே 27 (2013) அன்று  வேலாயுதபுரம் சென்று பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்களைச் சந்தித்துப் பேசினர். இப்பிரச்சினையைக் கடந்த பத்தாண்டுகளாக எடுத்துப் போராடி வரும் ‘மனித உரிமைக் களம்’ என்னும் அமைப்பைச் சேர்ந்தவரும், மனித உரிமைப் போராளிகளுக்காக நெதர்லாந்து அரசு ஆண்டுதோறும் வழங்கிவரும்  ‘துலிப்’ எனும் பன்னாட்டுப் பரிசை 2012ல் பெற்றவருமான பரதனையும், ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த சங்கர், கலைக்கோவன் ஆகியோரையும் திருநெல்வேலியில் சந்தித்தனர். வேலாயுதபுரம் ரெட்டியார் மக்களின் சார்பாக அவ்வகுப்பைச் சேர்ந்தவரும், அக்கிராமப் பஞ்சாயத்துத் தலைவருமான திருமதி அமராவதியச் சந்தித்தபோது, தமிழகத்தில் பெரும்பான்மையான கிராமங்களில் நடைமுறையில் உள்ளது போல இங்கும் அவர் சார்பாக அவரது கணவர் வே.பழனியே எங்களுடன் பேசினார். காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்களிடமும் பேசினோம்.

வரலாறு: கே.வேலாயுதபுரம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் இருந்து வருகின்றன. தலித்கள் கிராம எல்லைக்குள் சைக்கிள் முதலான வாகனங்களில் செல்லக் கூடாது, செருப்பணிந்து செல்லக் கூடாது, பொதுக் குளத்தில் இறங்கக் கூடாது, பொது இடங்களில் உட்காரக் கூடாது, மோட்டார் சைக்கிள் வைத்திருக்கக் கூடாது, வழக்குகளுக்குக் காவல் நிலையம் போகக் கூடாது, ரெட்டியார்களிடம் அனுமதி பெறாமல் திருவிழா நடத்தகூடாது, தங்களிடம் பணிந்து போகவில்லை என்று ரெட்டியார்கள் கருதினால் பஞ்சாயத்தார் முன்னிலையில் காலில் விழுந்து வணங்க வேண்டும், கூலி இல்லாமல் பிணம் எரிப்பது  முதலான வேலைகளைச் செய்ய வேண்டும்...இப்படி இங்கு இருபதுக்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்ததாக அருந்ததியர்கள் கூறுகின்றனர்.

2000க்குப் பின் அருந்ததியர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வின் விளைவாக அவர்கள் சற்றே சுய மரியாதையுடன் நடக்கத் தொடங்கியவுடன் பிரச்சினைகள் உருவாயின, ஊர்ப் புறக்கணிப்பு, பொய் வழக்குகள், தாக்குதல், கொலை என்கிற அளவில் ரெட்டியார்கள் இவற்றை எதிர் கொண்டனர். இது தொடர்பாக நாளிதழ்களிலும், ஆங்கிலக் கட்டுரைகளிலும் வெளிவந்த சில முக்கிய பதிவுகள்:

Gladwin Emmanuel, ‘Caste Hindus won’t have a Dalit Postmaster’, NIE, July 14, 2004: ஜெயபிரகாஷ் என்கிற நைனாம்பட்டியச் சேர்ந்த அருந்ததியர் ஒருவர் வேலாயுதபுரம் கிளைத் தபால் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது,  தலித் என்பதற்காக அவர் தங்கிச் செயல்பட இடம் மறுக்கப்பட்டு, இறுதியில் அந்தத் தபால் நிலையமே அருகிலுள்ள கூழையத்தேவன்பட்டிக்கு மாற்றப்பட்டது தொடர்பான செய்தி.

S.Viswanathan, ‘Defying Casteism, Frontline’, July 14, 2006: தங்களின் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவை ரெட்டியார்களிடம் அனுமதி பெறமல் நடத்தியதற்காக அருந்ததியக் குடும்பங்கள் ஊர்ப் புறக்கணிப்பு செய்யப்பட்டது மற்றும் அதை ஒட்டி ஆர்.டி.ஓ அலுவலகத்தை அருந்ததியர் முற்றுகை இட்டது தொடர்பான விரிவான கட்டுரை. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதன் விளைவாக அருந்ததியர் ‘தளபதி ஒண்டிவீரன்’ பெயரில் தேநீர்க் கடை ஒன்று திறந்தது பற்றிய குறிப்பும் அதில் உள்ளது. எஸ்.கணேசன் என்கிற மாற்றுத் திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர வண்டியை வேலாயுதபுரத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை குறித்தும் படத்துடன் செய்தி உள்ளது. ஊர்ப் புறக்கணிப்பு மற்றும் ஆர்.டி.ஓ அலுவலக முற்றுகைச் செய்தி தினகரன், தினபூமி முதலான பல தமிழ், ஆங்கில நாளிதழ்களிலும் (ஜூன், 13, 2006) வெளிவந்துள்ளது.

‘சாதி வெறியர்களின் கொடுமையால் அருந்ததியப் பெண் தற்கொலை’, தீக்கதிர், ஆகஸ்ட் 11, 2006: அருந்ததியப் பெண்கள் வேலைக்குச் செல்லும் ஆட்டோவை மறித்து இழிவாகப் பேசியதை ஒட்டி சுபா எனும் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். .ஆத்திரமடந்த ரெட்டியார் சமூகப் பெண்கள் சிலர் சுபாவைக் கடுமையாகச் சாதி சொல்லி இழிவு செய்ததை ஒட்டி சுபா தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான செய்தி.

‘கழுகுமலை: ஆடுமேய்க்கும் தொழிலாளி தற்கொலை, உறவினர் போராட்டம்’, தினமணி, ஏப்ரல் 13, 2013: வழக்கம்போல ஆடு மேய்க்கச் சென்ற அருந்ததியத் தொழிலாளி ரெட்டியார் ஒருவரின் தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது மற்றும் அதை ஒட்டி கொலையாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், ரெட்டியார் சமூகத்தினர் அமைத்துள்ள தீண்டாமை வேலியை நீக்கக் கோரியும் அருந்ததியர் நடத்திய போராட்டம் குறித்த செய்தி.

‘தீண்டாமை வேலி அகற்ற ஆர்.டி.ஓ நடவடிக்கை’, தமிழ் முரசு, ஏப்ரல் 13, 2013: தீண்டாமை வேலியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வாக்களித்த செய்தி. 2002ம் ஆண்டில் அருந்ததியப் பெண் ஒருவர் தீக்குளித்து இறந்ததை ஒட்டி வேலாயுதபுரத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் இருந்தது எனவும். கடந்த நான்கு ஆண்டுகளாக அங்கே தீண்டாமை வேலி உள்ளது எனவும் இச் செய்தியில் பதியப்பட்டுள்ளது.

M.Aruloli, ‘Untouchability Fence Pulled Down by Officials’  DC, April 14, 2013: தீண்டாமை வேலியை அரசு அதிகாரிகள் அகற்றிய செய்தி.

சுருக்கம்  கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து நாளிதழ்களும் வேலாயுதபுரத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமை குறித்தும், அருந்ததிய மக்களின் போராட்டங்கள் குறித்தும் விரிவாகச் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மக்களின் கருத்துக்கள்:   

     நாங்கள் சென்றபோது தீண்டாமை வேலி அகற்றப்பட்டிருந்தது. எச்ச சொச்சமாக எஞ்சியுள்ளவற்றைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். அருந்ததிய மக்கள் ஒரே இடத்தில் கூடித் தங்கள் மீது இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து விரிவாகக் கூறினர். கொல்லப்பட்ட கருப்பசாமியின் மனைவி மாரியம்மாள், மகள் மற்றும் மைத்துனர் சுப்பிரமணி ஆகியோர் கொலைச் சம்பவம் குறித்து விரிவாகச் சொன்னார்கள்.. சிலரது கூற்றுக்களிலிருந்து:

சுப்பிரமணி: இந்தக் கொலயோட முடியப் போறது இல்ல. இன்னும் நாலஞ்சு பேரைக் கொல்லத் திட்டம் போட்டுள்ளதாக் கேள்விப்பட்டுறோம். இதுக்காக பல லட்ச ரூபா எல்லா ரெட்டியார்களிடமும் பணம் திரட்டி வச்சிருக்காங்க. உள்ளூர் போலீசு ரெட்டியார்களுக்கு ஆதரவா இருக்கு. கழுகுமலை இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் கோலை நடந்த அன்னிக்கு போனைக் கூட எடுக்க மாட்டேன்னுட்டார். நாங்க ஒரு ஆறு பேர் இங்கே மோட்டார் சைக்கிள் வாங்கினோம். உடனே எங்க ஆறு பேர் மேலேயும் பைப்களை உடைச்சதா பொய் வழக்கு போட்டுட்டாங்க. கழுகுமலை – கயத்தாறு சாலையை இணைக்க எங்க பகுதியிலேருந்து தனி ரோடு போட்டாத்தான் எங்களுக்கு நிம்மதி. கலெக்டர் உத்தரவுல பலதடவை நில அளவை பண்ணியும் ரோடு வேலை நடக்கல. ரெட்டியார் தரப்பில போஸ், அரிபாலு, சுப்புராசு, ராசேந்திரன், மணிகண்டன் இவங்கதான் எல்லாத்துக்கும் காரணம்.

முத்தம்மாள் க / பெ சுப்பிரமணி: நான் பஞ்சாயத்துல துபுரவுத் தொழிலாளியா வேல செஞ்சேன். இப்ப வேலைல இல்ல.  எந்த ஒய்வு ஊதியப் பணமும் கொடுக்கல.

சண்முகப் பிரியா க / பெ பாண்டிய ராஜ்: எங்களுக்கு வர்ர தபால் எல்லாம் அவங்ககிட்டதான் கொடுக்கிறாங்க. எனக்கு ரண்டு தடவ இன்டெர்வியூ வந்து சரியான நேரத்துல கொடுக்காம ரெண்டு தடவையும் பிரயோஜனமில்லாம போயிட்டு.. பள்ளிக் கூடத்துல எங்க பிள்ளைகளை தனியா உக்காரா வச்சிடறாங்க. சரியா சொல்லிக் கொடுக்கிறதுல்ல.

ரெட்டியார்கள் தரப்பில் எங்களிடம் விரிவாகப் பேசிய வே.பழனி அருந்ததிய மக்களின் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அங்கு தீண்டாமைக் கொடுமைகளே எந்நாளும் கடைபிடிக்கப் பட்டதில்லை என ஒரேயடியாக மறுத்தார். 2002 முதல் பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளிவந்துள்ள செய்திகள் குறித்துக் கேட்டபோது, “பத்திரிக்கைகாரங்க அப்படித்தான் போடறாங்க. எல்லாம் பொய்” என்றார். தீண்டாமை வேலி பற்றிக் கேட்டபோது, “எங்க நிலங்களைச் சுத்தி பாதுகாப்புக்காக நாங்க வேலி போட்டுக்குறோம். அது எங்க உரிமை. அதை ஏன் தீண்டாமை வேலிங்குறீங்க?” என்றார். ஊர் உலகத்தில் எல்லாம் சாகுபடி நடக்குது. அங்கெல்லாம் இப்படி வேலியா போட்டுக் கொண்டிருக்காங்க என நாங்கள் கேட்டபோது, “எங்க இஷ்டம் நாங்க போட்டுக்கிறோம்” என்பது தவிர அவரால் எந்தப் பதிலையும் சொல்ல இயலவில்லை. கருப்பசாமி கொலை பற்றி நாங்கள் கேட்டபோது, “அது போலீஸ் விசாரணையில் இருக்கு. எங்கள்ல 13 பேரைக் கைது பண்ணிருக்காங்க. நாங்க என்ன ஓடியா போனோம். வழக்கு நடக்கட்டும் பார்போம்.” என்றார். அருந்ததிய மக்களுக்குத் தனிச் சாலை அமைப்பது பற்றிக் கேட்டபோது, “அப்படி அமைக்கிறதால அவங்களுக்கு புதுசா என்ன பாதுகாப்பு கிடைக்கப் போகுது? புதுசா ரோடு போடணும்னா நிலம் எல்லாம் வேணும்ல?” என்றார்.

    தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புதிதாக இங்கு பொறுப்பேற்றுள்ளார். துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரனிடம் தொடர்பு கொண்டோம், “தொடர்ந்து இங்கு தீண்டாமைப் பிரச்சினை இருப்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி ஏன் இந்தப் பகுதியை. ‘வன்கொடுமைகள் நிறைந்த பகுதியாக’ அறிவிக்கக் கூடாது?” எனக் கேட்டோம். “தொடர்ந்து பிரச்சினை இருப்பதாகச் சொல்ல இயலாது. 2006, 2007ல ஒரு பிரச்சினை இருந்தது, அப்புறம் இப்பத்தான் பிரச்சினை,  எனவே அப்படியான பரிந்துரை எதையும் நாங்கள் செய்யவில்லை. அப்படிச் செஞ்சா அது இன்னும் பிரச்சினையை aggravate பண்ணத்தான் செய்யும்” என்றார். புதிய சாலை அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பார்த்துச் சென்றுள்ளதாகவும், அது தொடர்பான வேலைகள் நடப்பதாகவும் சொன்னார். வழக்கு விசாரணை தவிர, அருந்ததியர்களுக்குப் பிற வேலை வாய்ப்பு முதலான முயற்சிகளிலும் தாங்கள் இருப்பதாகச் சொன்னார்.

எமது பார்வைகள்: 

 1. கருப்பசாமியின் கொலை சொந்தப் பகை, அல்லது லாபம் கருதிச் செய்யப்பட்டது அல்ல. அருந்ததியர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற நோக்கில் யாராவது ஒரு அருந்ததியரைக் கொல்வது என்று இக்கொலை செய்யப்பட்டுள்ளது.

2. துணைக் கண்காணிப்பாளரின் பேச்சிலிருந்து காவல்துறையும் அரசும் இதை ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டுமே பார்ப்பது விளங்குகிறது, சட்டம் ஒழுங்கு கெடும்போது மட்டுமே பிரச்சினை உள்ளதாகவும், பிற நேரங்களில் அமைதி நிலவுவதாகவும் கருதுகின்றனர், ‘அமைதிக் காலங்களில்’ நடக்கும் தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கவலை அவர்களுக்கு இல்லை.

3. களம் எனும் மனித உரிமை அமைப்பு, ஆதித் தமிழர் பேரவை, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியனவே இப்பிரச்சினையைக் கையிலெடுத்துள்ளன. பிற கட்சிகள் எதுவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. தீண்டாமைக்குக் காரணமான ரெட்டியார்கள் சிலர் மதிமுக, அ.தி.மு.க முதலான கட்சிகளில் உள்ளனர். இக்கட்சிகள் இத்தகையோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல் அவசியம்.

4. இங்கு 40 அருந்ததியக் குடும்பங்கள் 400 ரெட்டியார் குடும்பங்களை அடிமைப் படுத்தி வைத்துள்ளதாக டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதில் எந்த உண்மையும் கிடையாது.

5. வேலாயுதபுரம் பஞ்சாயத்தில் உள்ள ஐந்து வார்டு உறுப்பினர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. ரெட்டியார், கவுண்டர், நாயக்கர் ஆகியோரிடையே வார்டு உறுப்பினர் பதவி காலங்காலமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. தலித்கள் வசிக்கும் கிராமங்களில் கட்டாயமாக அவர்களுக்குக் குறைந்த பட்சம் ஒன்று அல்லது அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்கள் பதவி ஒதுக்கப்பட வேண்டும்.

6. தெலுங்கு பேசுகிற அருந்ததியரும் தெலுங்கு பேசும் நாயக்கர், ரெட்டியார் முதலியவர்களும் கிராமப்புரங்களில் இணைந்து கொண்டு தமிழ் பேசும் தலித்களைக் கொடுமை செய்கின்றனர் அல்லது தெலுங்கு பேசுகிற நாயக்கர் மற்றும் ரெட்டியார் போன்ற சாதியினர் தமிழ் பேசும் தலித்கள் மீது கொடுமை புரிவதை அருந்ததியர்கள்  கண்டுகொள்வதில்லை என்றொரு கருத்தை இங்கே சிலர் முன்மொழிகின்றனர். வேலாயுதபுரத்தில் சாதிக்கொடுமை புரிபவர்களும், கொடுமைக்கு ஆளாகிறவர்களும் ஒரே மொழி பேசுகிறவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைகள்:
  1. உள்ளூர் காவல் துறை மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லை. கருப்பசாமி கொலை வழக்கு முறையாக விசாரிக்கபட்டுக் குற்றவாளிகள் தன்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும்.
  2. மேலும் சிலர் கொல்லப்படலாம் என அருந்ததியர் மக்கள் மத்தியில் நிலவும் அச்சம் போக்கப்படுதல் அவசியமாகவும் உடனடித் தேவையாகவும் உள்ளது. அவர்கள் கோரும் வண்ணம் அவர்களுக்கான தனிச் சாலை வசதியைப் போர்க்காலத் துரிதத்துடன் செய்து முடிக்க வேண்டும். தற்போது பாதுகாப்புக்காக அக்கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போலீசார் ரெட்டியார்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ளனர். பாதுகாப்பு யாருக்குத் தேவையோ அவர்கள் மத்தியில் பாதுகாப்புக் காவலர்கள் யாரும் இல்லாதது மிகப் பெரிய முரண். இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போலீசார், ஆதிக்க சாதியினரிடம் நெருக்கமாகப் பழகிக் கொண்டும், அவர்களது உபசரிப்புகளை அனுபவித்துக் கொண்டுமிருப்பதை நேரில் கண்டோம். அருந்ததியர் பகுதியில் புறக் காவல் நிலையம் அமைத்தல் அவசியம்.
  3. அருந்ததிய மக்களுக்கு ஆதரவாக உள்ள அமைப்புகள் அவர்களைச் சென்று பார்க்கும் முயற்சிகளை சட்டம் ஒழுங்கின் பெயரால் காவல்துறை தடுப்பதை நிறுத்த வேண்டும். அவ்வாறு வருபவர்களைத் தடுத்து நிறுத்தும் சாதி ஆதிக்க சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. அரசுப் பள்ளி, ரேஷன் கடை முதலிய அனைத்தும் ரெட்டியார்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ளன. அவை பரவலாக்கப்பட வேண்டும். அருந்ததியர் வசிக்கும் பகுதிக்கு இவற்றில் சில இடம் மாற்றப்பட வேண்டும். அருந்ததியர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தாண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் வருவதில்லை. உடனடியாக அரசு இக்குறைபாட்டை நீக்க வேண்டும்.
  5. அருந்ததிய மக்கள் மத்தியில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் கல்வி வீதம் மிகக் குறைவாக உள்ளது. பெரும்பாலும் ஆடு மேய்ப்பது, மூட்டம் போடுவது முதலான பணிகளையே இம்மக்கள் செய்து வருகின்றனர். இவர்களது கல்வியில் அரசு அக்கறை செலுத்தவேண்டும். சுய வேலை வாய்ப்பு முதலானவற்றை அரசு ஏற்படுத்த வேண்டும்.
  6. தொடர்ந்து தீண்டாமை கடைபிடிக்கப்படும் இப்பகுதியை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 17 வது பிரிவின்படி வன்கொடுமை நிறைந்த பகுதியாக அறிவிக்க வேண்டும். தொடர்ந்து வன்கொடுமை புரிவோரைக் கண்டறிந்து, இச்சட்டத்தின் மூன்றாவாது அத்தியாயத்தில் கண்டுள்ளபடி, அவர்கள் ஊருக்குள் நுழைவது தடை செய்யப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து அது அவ்வப்போது இபகுதியைப் பார்வையிட்டு மக்களின் குறைகளைக் களைய வேண்டும்.
  7. ‘மனித உரிமைக் களம்’ என்கிற தொன்டு நிறுவனத்தைச் சேர்ந்த திரு பரதன் இம்மக்களின் பிரச்சினையை எடுத்துத் தொடர்ந்து போராடி வருகிறார். தீண்டாமைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வரும் அவர் மீது அரசு கொலை முயற்சி உட்பட 23 வழக்குகளைத் தொடுத்துள்ளது. பரதனுக்கு இக்குழு தன் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
         
தொடர்பு: 

அ.மார்க்ஸ்,
3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
சென்னை- 20
  செல் : 94441 20582

நன்றி: அ.மார்க்ஸ்

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி இகழ்ச்சி சொல்லல் பாவம்
என்றான் பாரதி. ஆனால் இன்று,,,,
பாரதியின் வரிகளாலேயே சொல்வதென்றால்
நெஞ்சு பொறுக்குதில்லையே,,

கருத்துரையிடுக