நாக்புரில்
உருவான தேசிய கல்விக் கொள்கை 2019
மு.சிவகுருநாதன்
பெரும்பாலான
ஆசிரியர்களை பூர்ஷ்வாக்களாகவும், அடிப்படைவாதிகளாகவும், சுய சிந்தனையற்றவர்களாகவும்
நமது கல்வியமைப்பு உருவாக்கி வைத்துள்ளது. பாடத்திட்டங்கள், பாடநூல்கள், பொதுப்புத்திகள்,
ஊடகங்கள் ஆகியன இவற்றை செய்து முடித்துள்ளது. ஒருவாறாக சுயசிந்தனை என்பது அனைத்து சமூக
மட்டங்களிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அறிவு என்றால் என்ன? “வேதம் என்றால் அறிவு”; எனவே
“வேதமே அறிவு”, என்கிற நிலைதான்!
ஆசிரியர்கள்
சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள். மேல்மருவத்தூர் பங்காரு வீட்டுத்
திருமண நிகழ்வுப்படங்களை வெளியிட்டு ஆடம்பரத் திருமணம் என்ற கூச்சல் போடுகின்றனர்.
மறுபுறம் ஜக்கி வாசுதேவ் எனும் ‘கார்ப்பரேட்’ சாமியாரின் காவிரியின் கூக்குரல், ரூ. 42 க்கு மரம் நடுதல்
ஆகியவற்றுக்கு விலையில்லாத விளம்பரம் செய்கின்றனர்.
மேல்மருவத்தூர் பங்காரு X ஜக்கி வாசுதேவ்
மாதவிலக்குத் தீட்டை மறுத்தல், பெண்களை வழிபாட்டில்
ஈடுபடுத்துதல் போன்ற மாற்றுப் பண்பாட்டை பங்காருவிடம் காணலாம். (இதையும் வணிகமயமாக்கிய
தன்மையைக் கொண்டாட வழியில்லை.) ஊரான் விட்டு பெண்களை மொட்டையடித்துத் துறவியாக்கிவிட்டு,
தனது பெண்ணுக்கு மட்டும் ஆடம்பரத் திருமணம் செய்த ஜக்கி, காடுகளையும், யானை வழித்தடத்தையும்
மொட்டையடித்து சிவன் சிலை என்ற பேரில் தனக்குச் சிலையமைத்து பிரதமர் மோடியை வைத்து
திறந்தவர். இவர் அழித்த மரங்களின் எண்ணிக்கையை யாராவது எண்ணிப் பார்த்தோமா? ஒரு மரத்திற்கு
ரூ. 42 பெற்று, எங்கு மரம் நடுவதாக இந்த ஏமாற்று வேலை? வனங்களைப் பாழாக்கியதோடு காற்றையும் மாசாக்க ஆயிரக்கணக்கில் இரு சக்கர வாகனப்பேரணி.
இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் ஏமாறப் போகிறோம்?
இன்று (14.09.2019) வரும் வழியில் ஒரு தனியார்
சுயநிதி மற்றும் உதவிபெறும் பள்ளியின் மாணவர்கள் ‘காவிரியின் கூக்குரல்’ பதாகைகளுடன்
ஊர்வலம் அழைத்துச் செல்லப்படுவதைக் கண்டேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த சுவரொட்டியைப்
பிடித்துக் கொண்டு நிற்கின்றனர். சீமான், விசிக. ரவிக்குமார் என்று யாரும் விதிவிலக்குகள்
இல்லை. யாரும் எதையும் கேள்வி கேட்பதில்லை; யாருக்கும் குற்ற உணர்ச்சிகளும் இல்லை.
அறிவு நமது ஆசிரியப் பெருந்தகைகளிடம் எவ்வாறு
செயல்படுகிறது? பணியிடைப் பயிற்சியின்போது கல்விக்கொள்கையை விவாதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புதிய கல்விக்கொள்கை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறதாம்! டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்
குழு 1-5 வகுப்பு முடிய தாய்மொழிக்கல்வி பரிந்துரை (5 ஆண்டுகள்) செய்தது. கே.கஸ்தூரிரங்கன்
குழுவும் 5 ஆண்டுகளுக்கு தாய்மொழிக்கல்வியை வலியுறுத்துகிறது. ஆனால் Pre KG, LKG,
UKG, I, II ஆகிய 5 வகுப்புகளுக்கு மட்டும்! ஆசிரியர்கள் எதையும் படிப்பதில்லை, மாணவர்கள் மட்டுமே
படிக்க வேண்டியவர்களாக கற்பிதம் செய்யப்படுகிறது. மாணவர்களைப் பெயிலாக்கி வடிகட்டும்
தேர்வுகளுக்கு 90% மேற்பட்ட ஆசிரியர்கள் அமோக
ஆதரவு தருகின்றனர்.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா கல்விக்கொள்கையை
யாரும் எதிர்க்கக்கூடாது, என்று கருத்துரைத்தபோது, பார்த்தீர்களா, இந்தக் கன்னடத் துணைவேந்தரை? என்று சொல்லப்பட்டது. இதர பூர்வகுடி தமிழ்த் துணைவேந்தர்கள்
என்ன செய்துகொண்டுள்ளனர்? முந்தைய வாஜ்பேயி அரசின் திட்டப்படி தமிழ்ப் பல்கலைக் கழகம்
சோதிடம் கற்றுத் தருகிறது. எஞ்சியவையும் ஆர்.எஸ்.எஸ். பரப்புரைக் கூடங்கள்தானே!
அனைத்துப் பல்கலைக் கழகங்களும் திரைமறைவில் ஆர்.எஸ்.எஸ்.
கும்பல்களுடன் இணைந்து அவர்களது ஏற்பாட்டில் கல்விக்கொள்கையின் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அவற்றில்
முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் அனைவரும் காக்கி டிரவுசர்
(இப்போது காக்கி பேண்ட்) போடாத சுயம் சேவக்காக வரிசையில் நிற்கின்றனர். ‘தேசிய சிந்தனைக்
கழகம்’ என்ற பெயரில் ஒரு கூட்டச் செய்தி வந்தது.
‘கழகம்’ என்றால் சங் பரிவார் கும்பலுக்குப் பிடிக்குமா? ‘பிரக்ஞா பிரஹாஹ்’ என்ற சமஸ்கிருதப்
பெயரில் தமிழ் வடிவமே இதுவாம்! “தேசமே தெய்வம்!
தேசியமே செல்வம்!!”, என்ற கொள்கை முழக்கத்துடன் நம்ம ஆட்கள் கல்விக்கொள்கைக்குக் கொடி
பிடிக்கின்றனர்.
சினிமா நடிக, நடிகைகள் விளம்பரத்திற்கு வருவது
போல, அறிவுத்தளத்தில் இஸ்ரோ அல்லது அணுசக்தித்
துறை ஆள்கள் பயன்படுத்தப்படுகின்றனர். (எ.கா)
அப்துல் கலாம், கே.கஸ்தூரிரங்கன், மயில்சாமி அண்ணாதுரை, நாளை சிவன்? (இஸ்ரோ); ஹோமி
ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய், ராஜா ராமண்ணா, அனில் ககோத்கர் (அணு சக்தி).
கூடங்குளம் அணு உலை 2 மணிநேரம் பார்வையிட்ட
கலாம் ஒரு 30 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டது நினைவிருக்கிறதா? அதில் அணு உலை பாதுகாப்பானது,
7° C விடக் குறைவான வெப்பநிலை உயர்வுதான் வெளியேற்றப்படும் நீரில் இருக்கும் என்றார்.
அணுக்கழிவு 10% கூட இருக்காது. கழிவுகள் மறுசுழற்சி
செய்யப்படும் என்றார். இப்போது கழிவுகளை கூடங்குளத்தில்; புதைக்கும் திட்டம் வருகிறது.
படிச்சவன் பொய் சொல்லமாட்டான் என்று சமூகம் இன்னுமா நம்புகிறது?
அறிவுக்கும் இஸ்ரோ, அணு சக்தி ஆகியவற்றுக்கான
உறவு பிரிக்க இயலாதது! அறிவு இஸ்ரோவின் ஊற்றெடுக்கும் அபாயத்தை இதன்மூலம் விளங்கிக்
கொள்ளலாம். இந்தப் போலியான அறிவுப்புனைவை பாடநூல்களும் ஊடகங்களும் அனைவரது பொதுப்புத்தியில்
நிரப்பி வைத்துள்ளன. இதிலிருந்து மீளுவதுதான் கல்வியின் விடுதலை. கல்வியால் வளர்ந்த
துறைதான் ‘இஸ்ரோ’ என்பதைத்தவிர கல்விக் கொள்கைக்குப் பங்களிக்க இந்த ‘இஸ்ரோ’விடம் ஒன்றுமில்லை.
இஸ்ரோவில் பணிபுரிந்தால் அவர்கள் கல்வியாளர்களாகவும்
விஞ்ஞானிகளாகவும் ஆகிவிட முடியாது; அவர்கள் தொழிநுட்ப வல்லுநர்கள் (Technocrat) மட்டுமே.
நாட்டின் எதிர்காலத்தைத் திட்டமிட அவர்களால் இயலாது. கல்விக் கொள்கை எதிர்ப்பு என்பது
அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களைக் குறித்தே பெரும்பாலும் இருக்கிறது. இதன்
மறுதலையாக இந்த கல்விக்கொள்கை இக்குழுவில்
உள்ளவர்களின் பின்னணி, கல்விக்கொள்கை உருவான விதத்தை இக்கட்டுரைத் தொகுப்பிலுள்ள 30
கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.
கர்நாடக
மாநில அறிவாணைய முன்னள் உறுப்பினர் செயலாளர், கர்நாடக மாநில புத்தாக்கக் குழுவின் முன்னாள்
உறுப்பினர் ஶ்ரீதர் என்பவரின் முழுப் பங்களிப்பு இதில் வெளிப்படுகிறது. முழுநேர ஆர்.எஸ்.எஸ்.
ஊழியரான அவரும், ‘ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2016’ இல் வரவேற்புக் குழுத்
தலைவராக சேவையாற்றிய ‘விஞ்ஞானி’ கே.கஸ்தூரிரங்கன் கல்விக்காக தங்களது முழு உழைப்பையும்
எவ்வாறு நல்கியுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவருடன் பங்கேற்ற மற்றொரு
பிரபலம் ஆடிட்டர் ‘துக்ளக்’ குருமூர்த்தி. ‘ஹிந்து ஆன்மீகக் கண்காட்சி’யில் ‘விஞ்ஞானி’
கே.கஸ்தூரிரங்கனுக்கு என்ன வேலை? உண்மையான விஞ்ஞானிகள் யாரும் இதில் கலந்துகொள்வார்களா?
சர்.சி.வி.ராமன், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் போன்ற விஞ்ஞானிகளை யாரும் அழைத்திருந்தால்
இவ்வாறு சென்றிருப்பார்களா? கட்டாயம் சென்றிருக்க மாட்டார்கள். சர்.சி.வி.ராமன் இறுதிவரை மூடநம்பிக்கைகளுக்கு எதிராக
இருந்தவர்; வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சங்
பரிவார் கும்பல் இந்திய அறிவியல் மாநாடுகளை சீரழித்ததைக் கண்டு மனம் வெதும்பியவர்.
இவர்கள்தான் உண்மையில் விஞ்ஞானிகள். பதவி ஓய்வுக்குப்பிறகு ஆர்.எஸ்.எஸ். சேவகம் செய்வோர்
எப்படி விஞ்ஞானிகளாக இருக்க முடியும்? மேலும் இந்தியக் கல்விக்கு இவர்களால் என்ன பங்களிப்பைத்
தர இயலும் என்பது அவர்களது அறிக்கையே சான்று.
11 பேர்
கொண்ட குழு ஒன்பதானது, இவர்களது இந்துத்துவப் பின்புலம், அறிக்கை அளித்தது எப்போது
தொடர்பான சர்ச்சை, குழுவின் ஒத்திழைவு உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டு, பின்பு
பதவி விலகிய ராஜேந்திர பிரதாப் குப்தா மீதான
ஊழல் புகார்கள் என அதிர்ச்சியளிக்கும் பல்வேறு தகவல்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன.
தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019 குறித்த முதல் விமர்சனத் தொகுப்பை வெளியிட்ட (இந்தியக்
கல்வியின் இருண்ட காலம்) பாரதிப் புத்தகாலயம் இந்த அவசியமான நூலையும் வெளியிட்டிருப்பது
பாராட்டிற்குரியது. பல்லாண்டுகளாக இந்துத்துவ ஆபத்து பற்றியும் பாடநூல்களில் இந்துத்துவ
பாசிசம் பற்றியும் அ. மார்க்ஸ் பல நூல்களில் எழுதியுள்ளார். எஸ்.வி.ராஜதுரை போன்றரது
நூல்களும் இந்த ஆபத்தை நமக்கு உணர்த்துபவை. அவற்றின் பின்புலத்தில் இந்நூலையும் வாசிக்கலாம்.
ஏ.பி.வி.பி. போன்ற அமைப்புகளில் பொறுப்பு வகித்த அறிவிஜிவி ஒளிவட்டம்
பூண்ட முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஶ்ரீதரின் முழுக்கட்டுப்பாட்டில், பகுதிநேர சுயம்
சேவக்குகள் மற்றும் அனுதாபிகளைக் கொண்டு நாக்பூர் கும்பல் இந்த கல்விக்கொள்கையை உருவாக்கியுள்ளது
தெளிவாகிறது.
இக்கல்விக்குழுவின் பெருமைக்குச் சான்றாக சில குறிப்புகள்:
- இந்திராகாந்தி தேசிய பழங்குடி பல்கலைக் கழக துணைவேந்தர் கட்டிமணி எழுதிய நூல்கள்: ஸ்வாச் பாரத், மேக் இன் இந்தியா, ஏக் பாரத் – சிரேஸ்த் பாரத். உண்மைதான் நம்புங்கள்!
- SNDT மகளிர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வசுதா காமத் தலைகீழ் வகுப்பறை எனும் ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகள் என்னும் ‘வீட்டுக்கல்வி’ (Home Schooling) முறையை ஆதரிப்பவர். பெற்றோர்களே கற்பிக்கவும், குழந்தைகள் சமூகத்துடன் உறவாடுவதைத் தடுக்கும் நவீன தீண்டாமை இது.
- ஆர். பிராண்ட் பிராட் கணிதப் பேராசிரியர் மஞ்சுல் பார்கவா (பிரிஸ்டன் பல்கலை.) ‘சாஸ்த்ரா’வின் ராமனுஜன் விருதாளர்; தனது தாத்தாவிடம் (புருஷோத்தம்லால்) கற்ற சமஸ்கிருதமும் ஜாகிர் ஹுசேனின் தபேலாவும் தனது கணித அறிவை மேம்படுத்துவதாக நம்பும் இவர் பத்மபூஷன் விருது பெற்றவர்.
- முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி K.J. அல்போன்ஸ் பா.ஜ.க. உறுப்பினராகி மத்திய இணையமைச்சர் ஆனவர். 2019 எர்ணாகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அருகேயுள்ள சாலக்குடியில் வாக்கு கேட்டுத் தேர்தலில் தோற்றுப் போனவர். பதவி விலகிய பிறகும் இவருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றனர்.
- உத்திரப் பிரதேச மாநில உயர்நிலை மற்றும் இடைநிலைத் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் கிருஷ்ண மோகன் திரிபாதி வித்யா பாரதி அகில பாரதீய சிக்ஷா சன்ஸ்தான் என்ற அமைப்பின் ஆய்வு நிறுவனமாக பாவ் ராவ் தேவ்ரஸ் தூண்டுதலால் தொடங்கப்பட்ட ‘பாரதீய சிக்ஷா சன்ஸ்தன்’ என்ற ஆய்வு அமைப்பின் தலைவராக இருந்தவர்.
இது பெரியார் மண், அம்பேத்கர் கொள்கைகளை ஏற்று செயல்படுத்திய
மண் என்றெல்லாம் பெருமிதக் கற்பனைகளோடு இங்கு பெருங்கூட்டம் வீணாக சோம்பித் திரிகிறது.
இங்குள்ள கட்சிகளில் பல்வேறு குழுக்கள். ஆனால் சங் பரிவாரங்கள் பல்வேறு பெயர்களில்
தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டாலும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைகின்றனர். அதுவே நாக்பூர்
தலைமை.
சிறுபான்மையினர்களுக்கு
எதிராக தலித்கள் மற்றும் பழங்குடி மக்களைத் திரட்டிய குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா
போன்ற மாநில உதாரணங்களைப் போன்று தமிழகத்திலும் சிறுபான்மையினருக்கு எதிராக மீனவர்கள்,
அடித்தட்டு மக்கள், இடைநிலைச் சாதிகள் என அந்தந்த வட்டாரங்களுக்கேற்ற அணிதிரட்டலை இந்துத்துவ
கும்பல் தீவிரப்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டை, நாகூர் போன்ற பகுதிகளில் இத்தகைய அணி
சேர்க்கைகள் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. விநாயகர் ஊர்வலம், உள்ளூர் கோயில்கள் நிகழ்வுகள்
ஆகியவற்றில் இந்தத் அணிதிரட்டல் நடக்கிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை
மட்டுமல்லாது தற்போது பணியிலிருப்போரையும் அவர்களது பிரச்சாரகர்களாகப் பயன்படுத்தும்
நிலை உள்ளது.
கல்வியைக் காவிமயப்படுத்தும் வேலைகள் வாஜ்பேயி
காலத்திலேயே தொடங்கிவிட்டன. அதற்குப் பல்வேறு RSS அமைப்புகளின் வாயிலாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இவற்றில் நாம் அறிவாளிகளாகவும் விஞ்ஞானிகளாகவும் மதிக்கும் ஆளுமைகள் (?!) செயல்படுவது
அதிச்சியூட்டும் உண்மை.
இந்நூல் அடையாளம் காட்டும் சில
அமைப்புகள்:
01. அகில
பாரதீய வித்யார்த்தி பரிஷத் ABVP: 1949 சென்னை டாக்டர் சுப்பையா என்பவரால் தொடக்கங்கப்பட்டது.
RSS பிரச்சாரகர் சுனில் அம்பேத்கர் இதன் அமைப்புச்செயலாளர்.
02. வித்யபாரதி:
வித்யா பாரதி அகில பாரதீய சிக்ஷா சன்ஸ்தான் 1952 இல் உ.பி., கோரக்ப்பூர் குழந்தைகள்
சரஸ்வதி ஆலயம் என்ற பெயரில் தனது முதல் பள்ளியைத்
தொடங்கி, இன்று 4373 தொடக்கப்பள்ளிகள், 5168 நடுநிலைப்பள்ளிகள், 2381 உயர்நிலைப்பள்ளிகள்,
1145 மேனிலைப்பள்ளிகள் என 35 மாணவர்கள் 1.5 லட்சம் ஆசிரியர்கள் எனப் பரந்து விரிந்த
அமைப்பு. தமிழகத்தில் 277 பள்ளிகள் மூலம் சுமார்
65000 மாணவர்கள் இருக்கின்றனர். கல்வியை இந்தியமயப்படுத்துவது, (அதாவது இந்துமயப்படுத்துவதுதான்)
தேசியப்படுத்துவது, ஆன்மீகப்படுத்துவது ஆகியவை
இவ்வமைப்பின் குறிக்கோள்.
03. பாரதீய
சிக்ஷன் மண்டல்: RSS தலைவர் பால சாஹேப் தேவ்ரஸ் உடன் 25 கல்வியாளர்கள் இணைந்து 1969
ராமநவமி அன்று தொடங்கப்பட்டது. கல்விக்கொள்கைகளில்
தாக்கம் அதிகம். இதன் ஆலோசகர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன்.
04. சிக்ஷா
பச்சாவோ அந்தோலன்: 1946 இல் குருஷேத்ரா கீத வித்யாலயா பள்ளி நடத்திய, வித்ய பாரதி அமைப்பைச்
சேர்ந்த தினநாத் பத்ரா 2004 இல் தொடங்கிய அமைப்பு. வெண்டி டோனிகரின் ‘இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு’,
நூலைத் தடை செய்ததிலும் பாடநூல்களில் இந்துக்களுக்கு
ஆதரவான திருத்தங்களை மேற்கொண்டதிலும் பங்கு வகுத்த அமைப்பு. ஆன்மீக கதைகளை வரலாறாக்கும் கொள்கையைக் கொண்டது.
05. சிக்ஷா
சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ்: 2007 இல் தினநாத்
பத்ரா, அதுல் கோத்தாரி, பேரா. ஜே.எஸ்.ராஜ்புத் போன்றோர் இதன் பொறுப்பாளர்களாக இருந்தவர்.
ஜே.எஸ்.ராஜ்புத் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்
குழு இருந்தவர்; கே.கஸ்தூரிரங்கன் குழுவின் ஆலோசகர்; வரைவை மீளாய்வு செய்தவர்.
06. அகில
பாரதீய இதிகாஸ் சங்களன் யோஜனா: நாக்பூர்
1973 இல் ஆப்தே சமரக் சமீதி என்ற பெயரில் ஆரம்பித்து,
1993 இல் பெயர் மாற்றப்பட்டது. சமஸ்கிருதத்தைப் பரப்புவதும், வரலாற்றை மீளாக்கம் செய்வதும்
இதன் முதன்மை வேலைத்திட்டங்கள்.
07. விஞ்ஞான்
பாரதி (விபா): 1991 அக். 21 இல் நாக்பூரில் ஆரம்பிக்கப்பட்டது. 2015 இல் சுதேசி அறிவியல்
காங்கிரஸ் மாநாட்டை கேரளாவின் மலப்புரத்தில் நடத்தியது. இதன் புரவலர்கள் ‘இஸ்ரோ’ முன்னாள்
தலைவர் மாதவன் நாயர், அனில் ககோத்கர், V.N. ராஜசேகரன் பிள்ளை, V.K. சரஸ்வத் ஆலோசகளில் ஒருவரான V.K. சரஸ்வத் தற்போது
நிதி ஆயோக் உறுப்பினராகவும் உள்ளார்.
08. அகில
பாரதீய ராஷ்ட்ரிய ஷைக்ஷிக் மகாசங்: ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான அமைப்பு. இந்தியாவெங்கும் இவர்களைத் திரட்டுகிறது.
09. சமஸ்கிருத
பாரதி: 1981 இல் ‘சம்ஸ்கிருதம் பேசுவோம்’ என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
10. அகில
பாரதீய சாகித்ய பரிஷத்: 1966 அக். 27 இல் தொடங்கப்பட்ட
இவ்வமைப்பு இன்று 21 மாநிலங்களில் தனது கிளைகளைப்
பரப்பியுள்ளது.
11. சன்ஸ்கார்
பாரதி: 1981 இல் கலைகள், நுண்கலைகள், கலாச்சாரம்
ஆகியவற்றைக் கவனிக்கிறது. கடவுள் பற்று, மதப்பற்று, தேசப்பற்றை கலைகள் மூலம் உருவாக்குதல்
இதன் நோக்கமாகச் சொல்லப்படுகிறது.
இவற்றில்
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பாரதீய சிக்ஷன்
மண்டல், சிக்ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ் போன்ற அமைப்புகள் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்
குழுவின் அறிக்கையை குப்பைக்கூடைக்கு அனுப்பியது, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
ஸ்மிருதி ரானியை மாற்றி பிரகாஷ் ஜவ்டேகரை நியமிக்க அழுத்தம் கொடுத்து, அதன் மூலம் கே.கஸ்தூரிரங்கன்
தலைமையிலான புதிய குழுவை அமைக்கவும் திரைமறைவில்
செயலாற்றியதும் குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பின்னணி அரசியலைப் புரிந்துகொள்ளாமல்
புறநானூற்றுப் பாடல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றது, ஐ.நா. சபையில் மோடியில் “யாதும்
ஊரே யாவரும் கேளிர்”, என்றது போன்றவற்றிற்கு மயிர்க்கூச்சறிவதும் பெரியார் மண் பெருமையில்
மிதப்பதும் நமக்கான குழியை நாமே வெட்டுவது போலாகும்.
(14.09.2019
சனியன்று திருவாரூர் பவித்திரமாணிக்கம் நடுநிலைப்பள்ளியில் தோழர் செ. மணிமாறன் ஒழுங்கு
செய்த நூல் அறிமுகக் கூட்டத்தில் பகிர்ந்து கொண்ட கருத்துகளின் விரிவான எழுத்து வடிவம்.
நூலையும் குறிப்புகளைத் தொலைத்துவிட்டதால் இந்த கால தாமதம்.)
நூல்
விவரங்கள்:
தேசிய
கல்விக்கொள்கை: பின்னணி மர்மங்கள்
(தொ)
முனைவர் தா. சந்திரகுரு
வெளியீடு:
பாரதி புத்தகாலயம் (தமுஎகச. கல்வி உரிமை மாநாடு – சிறப்பு வெளியீடு)
முதல்
பதிப்பு: ஆகஸ்ட் 2019
பக்கங்கள்:
272
விலை:
ரூ. 250
தொடர்புக்கு:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
பேச: 044 – 24332424,
24332924, 24356935
மின்னஞ்சல்:
thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக