தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு
உதவும் என்பது மோசடியே!
மு.சிவகுருநாதன்
பொதுவாக போட்டித்தேர்வுகள் தொடர்புடைய பணிக்கான
திறனைச் சோதிப்பதில்லை. தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற சில பணியிடங்களைத் தவிர எஞ்சியவற்றுக்கு
பணித்திறன் பற்றிய அளவுகோல்கள் இல்லை. பாடங்களில் அவர்கள் பெற்றிருக்கும் அறிவு (மனப்பாட
அறிவு) அவர்களது பணித்திறனில் எதிரொளிக்கும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவை
வடிவமைக்கப்படுகின்றன. “படித்தவன் தவறு செய்ய மட்டான்; சிவப்பானவன் பொய் சொல்ல மாட்டான்”,
என்பதைப் போல இதுவும் ஒரு கற்பிதம்.
கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட எந்தத் தேர்வுகளும்
இப்படித்தான். ஆசிரியர்களுக்கான தேர்வுகளும் அவர்களது மனப்பாட அறிவையே சோதிக்கின்றன.
அவர்களது கற்றல், கற்பித்தல் திறன், புதிய உத்திகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை அளப்பதில்லை.
எவரும் பணியில் சேர்ந்த பிறகே பணியைக் கற்றுக்கொள்ளும் அவலம் நீடிக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி II மற்றும் II A) தேர்வுக்கான பாடத்திட்டத்தை அண்மையில் மாற்றம் செய்தது. முதல்
நிலைத்தேர்வில் தமிழ்ப்பாடம் நீக்கப்பட்டு, புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்தது.
அதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, மேலும் கிராமப்புற
மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆறாம் வகுப்பிலிருந்து படித்த பாடங்களே
தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, திருக்குறளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது
என்றெல்லாம் கூறியுள்ளனர்.
தமிழ்ப்பாட வினாக்களை நீக்கிவிட்டு தமிழுக்கும்
திருக்குறளுக்கும் இடமளிப்பதும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வினா அளிப்பதும் கிராமப்புற, தமிழ் வழியில் படித்தோருக்காக செய்யப்படுவதாக
சொல்வது மிகப்பெரிய அபத்தம். முதலில் பாடத்திட்டம், வினாத்தாள் குறித்து சுருக்கமாக
அறிந்து கொள்வோம்.
முதல்
நிலைத்தேர்வு கொள்குறி வகையில் கீழ்க்கண்ட 9 தலைப்புகளில் 175 வினாக்களும் மனத்திறன்
தேர்வில் 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படுகின்றன. மொத்த மதிப்பெண்கள்
300, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 (நேர்காணல் பதவிகளுக்கு மொத்த மதிப்பெண்கள் 300+40, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்
102).
- பொது அறிவியல்
- நடப்பு நிகழ்வுகள்
- இந்தியாவின் புவியியல்
- இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
- இந்திய ஆட்சியியல்
- இந்தியப் பொருளாதாரம்
- இந்திய தேசிய இயக்கம்
- தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்
- தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
முதன்மைத்
தேர்வுக்கான (விரிவான எழுத்துத்தேர்வு) வினாத்தாளில் கீழ்க்கண்ட வகை வினாக்கள் இருக்கும்.
மதிப்பெண்கள் அடைக்குக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. மொழி பெயர்ப்பைத் தவிர எஞ்சிய வினாக்களுக்கு தமிழ்
அல்லது ஆங்கிலத்தில் விடையளிக்க வேண்டும்.
- தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தல் (50)
- ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் (50)
- சுருக்கி வரைதல் (40)
- பொருள் உணர்திறன் (40)
- சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் (40)
- கொடுக்கப்பட்ட 6 தலைப்புகளில் திருக்குறள் கட்டுரைகள் வரைதல் (40)
- அலுவல் சார்ந்த கடிதம் வரைதல் (40)
இவற்றில்
முதல் ஐந்திற்கான பாடத்திட்டம் பின்வருமாறு:
- தமிழ் நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- தமிழ் மொழிவளர்ச்சியில் சங்ககால இலக்கியமும் வரலாற்றுச் சான்றுகளும்
- தமிழ்நாட்டின் இசைமரபு
- நாடகக் கலை
- சமூகப் பொருளாதார வரலாறு
- பகுத்தறிவு இயக்கங்கள்
- தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு
- பெண்ணியம்
- இக்காலத் தமிழ் மொழி
பாடத்திட்டமும் வினா அமைப்பும் யாரை, எதனை நோக்கி
அமைக்கப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை. கிராமப்புற ஏழை, அரசுப்பள்ளிகளில் தமிழ்
வழியில் படித்தோர் பயனடையும் வகையில் உள்ளது என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி என்பதும்
தெளிவாகும்.
தமிழ்
எழுத, படிக்கத் தெரியாதவர்கள் அரசுப் பணிகளில் நுழைவது இது தடுக்குமென, பா.ம.க. நிறுவனர்
இராமதாஸ் இம்முறையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மொழிபெயர்ப்பு வினாவைத் தவிர எஞ்சியவற்றை
ஆங்கிலத்தில் எதிர்கொள்ள ஏதேனும் தடை இருக்கிறதா? இல்லையே. பிறகெப்படி தமிழ் படித்தவர்கள்
மட்டுமே இத்தேர்வை எழுத முடிவதாகச் சொல்ல இயலும்?
பாடத்திட்டத்தில் தமிழ் என்ற பெயரில் மிகுதியான
வரலாற்றுப் பாடங்களே நுழைக்கப்பட்டுள்ளன. இவை யாருக்குச் சாதகம் என்பதை எளிதில் உணரமுடியும்.
போட்டித் தேர்வுகளுக்குப் பலர் வரலாற்றை நாடுவது உண்டு. அவர்களுக்கு ஏற்ற வகையில் தமிழென்னும்
போர்வையில் வரலாற்றை அதிகம் நுழைத்திருப்பதை அறிய முடிகிறது. போட்டித் தேர்வுகளுக்கு
தயாரிக்கும் தொழிற்சாலைகளை விரிவாக்கும் நடவடிக்கையாகவே இது இருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழ்ப் பாடத்தை அகற்றிவிட்டு திருக்குறளுக்கு
முதன்மை தருவது என்பதும் மற்றொரு அபத்தமே. தமிழுக்கான விரிவான இடத்தை திருக்குறளுக்குத்
தருகிறோம் என்பதும் ஏற்புடையதல்ல.
விரிவான
எழுத்துத் தேர்விற்காக பாடத்திட்டமும் இதனை மையப்படித்தியிருப்பதை உணரலாம். எனவே கோச்சிங்
கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கும். தனியார் பள்ளிகளில் தொடக்கநிலை (1-5) குழந்தைகளுக்குக்கூட
‘நீட்’ பயிற்சிக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
‘கோச்சிங் சென்டர்கள்’ பல்கிப் பெருகுவதையும்
அதன்மூலம் கல்வி சூதாட்டமயமாவதும் தடுக்க முடியாத ஒன்றாக மாறும். வணிகமயக் கல்வியின் போட்டித் தேர்வுகளை ‘கோச்சிங்
சென்டர்கள்’ சூதாட்டமாக்கியுள்ளன. பள்ளிக்கே செல்லாமல் ‘நீட்’ தேர்வில் முதலிடம் பெறுதல்,
ஆள் மாறாட்டம், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாதல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு ‘கோச்சிங் சென்டர்களே’ அடிப்படையாக இருக்கின்றன.
இந்த ‘கோச்சிங் சென்டர் கல்வி’ செல்லும் பாதை மிகவும் அபாயகரமானது; அழிவைத் தரவல்லது.
இவற்றை ஊக்குவிக்கும் வழிகளில் மக்கள் நல அரசு
செயல்படக்கூடாது.
மேலும் இவை கோடிகள் புரளும் தொழில். பெருநகரங்களில்
செயல்படும் இவை வசூலிக்கும் கட்டணங்கள், பிற செலவீனங்கள் சாதாரணமானவர்களுக்கு கற்பனை
செய்ய முடியாத தொலைவு. இதனால் கல்வியைப் போலவே அரசுப்பணியும் சாமான்யர்களுக்கு எட்டாக்
கனியாகிவிடும்.
மறுபுறம் இதற்கேற்ற வகையில் பள்ளிகளில் நடைபெறும்
தேர்வுகளை போடித்தேர்வுகள் ‘பாணிக்கு’ மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. கல்வியின் பணி
சந்தைக்கு ஆள்களை உற்பத்தி செய்வது மட்டுமல்ல.
மாறிவரும் சூழலுக்கெற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதின் தேவையை
நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இருக்கின்ற பாடத்தை மாற்றி வேறொன்றைத் திணிக்கும்போதுதான்
கேள்வி எழுகிறது. தமிழ்ப் பாடத்திற்கு உரிய இடமளிப்பதும் தமிழ்நாட்டில் தமிழ் பயின்றோருக்கே
அரசுப்பணி எனச் சட்டம் வகுப்பதும் இன்றைய உடனடித் தேவையாகும்.
(இக்கட்டுரையின் ஒரு பகுதி குங்குமச் சிமிழ் - கல்வி வேலை வழிகாட்டி அக். 16-31, 2019 மாதமிருமுறை இதழில் வெளியானது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக