வியாழன், நவம்பர் 19, 2020

மூன்றாம் வகுப்பாசிரியருடன் சினிமா பார்த்த கதை!

 மூன்றாம் வகுப்பாசிரியருடன் சினிமா பார்த்த கதை!

 

 மு.சிவகுருநாதன்



 

       எங்களூரில் ‘டூரிங் டாக்கீஸ்’ எனப்படும் சினிமாக் கொட்டகை இல்லை. அப்போது கிராமங்களில் கீற்றுக் கொட்டகையில்தான் சினிமா. பக்கத்து ஊரான துளசியாப்பட்டினத்தில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது; பெயர் கதிரவன் திரையரங்கம். இது இஸ்லாமியர் ஒருவரால் நடத்தப்பட்டது. 

 

       கும்பகோணம்  ஶ்ரீகிருஷ்ணா பள்ளி  தீ விபத்தால் பள்ளிகளில் கீற்றுக் கொட்டகைகள் இல்லாமல் ஆக்கப்பட்டதுபோல், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ஒரு திரையரங்கில் நடத்த தீவிபத்தால் கீற்றுக் கொட்டகைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. 29.07.1979 இல் தூத்துக்குடி லூர்து அம்மாள்புரம் லட்சுமி டூரிங் டாக்கீஸில் சிவாஜிகணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, தேவிகா நடித்த ‘பாவ மன்னிப்பு’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 115 பேர் கருகி மாண்டனர். அதன் பிறகு கீற்றுக் கொட்டகைகளுக்கு உரிமம் ரத்தானது. எனவே 1979 இல் ஆறு வயதுடன் எனது டூரிங் டாக்கீஸ் அனுபவம் முற்றுப்பெற்றது.

 

     எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் நிறைய இங்குதான் பார்த்திருக்கிறோம். மணல் தரையில் மேடாக்கி உட்கார்ந்து பாதிப்படம் பார்த்து, மீதிப்படத்தில் தூங்கி, படம் முடிந்ததும் எழுந்து வந்திருக்கிறோம். தரை டிக்கெட் 25, 50 பைசா அளவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 

      சினிமாவிற்குச் செல்ல அப்பாவிடம் ஒருவழியாக அனுமதி வாங்கி, கிளம்புவதற்குள் 'நலந்தானா...' பாடல் ஒலிக்கத் தொடங்கிவிடும். இது திரைப்படம் தொடங்குவதற்கான ஒரு குறியீடு; இப்பாடல் முடிந்தபிறகு திரைப்படம் போடப்படும். சில நாள்களில் நீயுஸ் ரீல் (News Reel) போடுவார்கள். அதில் உலகப்போர் பற்றிய படங்களே அதிகமிருந்ததால் மக்கள் அதை வார் ரீல் (War Reel) என்றே சொன்னார்கள்.

 

    எங்கள் வீட்டிலிருந்து முக்கால் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திரையரங்கின் போடும் ரெக்கார்டு ஒலி நன்றாகக் கேட்கும். ஓட்டமும் நடையுமாக விரைந்து டிக்கெட் பெற்று அந்த அரங்கில் நுழைவோம். 

 


 

 

      எங்கள் பக்கத்து வீட்டில் அஞ்சல்காரராகப் பணிபுரிந்த திரு சந்திரன் அங்கு சீட்டுக் கிழிப்பார். அஞ்சல் துறையின் புறநிலை ஊழியர்களுக்கு அன்று வெகு சொற்ப ஊதியம். அதனால் அவர்கள் அந்த வேலை தவிர்த்த நேரங்களில் பிற பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம். இன்றும் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை.

 

        எப்போதும் தரை டிக்கெட்தான். பெஞ்சுகள் மற்றும் ஒரு வரிசை நாற்காலிகள் இருக்கும். எப்போதும் தரை டிக்கெட்டுக்குதான்  வீட்டில் பணம் கிடைக்கும்.

 

        தாத்தா, பாட்டி, அம்மா, அக்கா, அண்ணன்களுடன் இங்கு படம் பார்த்த அனுபவம் உண்டு. அப்பாவுடன் படம் பார்த்ததில்லை. அவர் எங்களுடன் வரமாட்டார்; தனியாகவும் செல்லவும் மாட்டார். கோயில் திருவிழாக்களுக்கும் எங்களுக்கு பணம் கொடுத்தனுப்புவார். அவர் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பார் அல்லது எங்காவது வெளியூர் சென்றுவிடுவார்.  அவர் ஊதியமாகப் பெற்றுவரும் புதிய 1,2 மற்றும் 5 ரூபாய் புதிய நோட்டுகளை திருவிழா செலவிற்கு அளிப்பார். அந்தப் புதிய நோட்டைச் செலவளிக்க மனமின்றிப் பத்திரப்படுத்துவோம்.

  

         முத்துப்பேட்டை சின்னம்மா வீட்டிற்குச் செல்லும்போது வேதநாயகி திரையரங்கில் படம் பார்த்திருக்கிறோம். திருவாரூர் மாமா வீட்டிற்கு வரும்போது அம்மையப்பா, செங்கம் தியேட்டரில் படம் பார்த்த அனுபவங்கள் உண்டு. இப்போதைய நடேஷ் திரையரங்கம்தான் அப்போதைய அம்மையப்பா. அன்று செங்கம் தியேட்டரில் தமிழ்ப் படங்கள் ஓடின.

 


     ஒருமுறை அப்பா திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் இருந்தபோது நண்பர் திரு வை.அன்பழகனுடன் பார்க்க வந்தேன். அப்போது பணம் கொடுத்து தியேட்டருக்கு அழைத்துச் செல்லச் சொன்னார் அப்பா. அன்று திருத்துறைப்பூண்டி வாசன் தியேட்டரில் கமல்ஹாசனின் ‘காக்கிச்சட்டை’யைப் பார்த்தோம். 

 

       மிகவும் கண்டிப்பான அந்த மூன்றாம் வகுப்பாசிரியர், எங்கள் வீட்டிலும் ஆசிரியராகத்தான் இருந்தார். எனவே அம்மாவுடன்தான் நாங்கள் நெருக்கமாக இருந்தோம். 

 

        தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தபோதிலும் குறைவான ஊதியம், பெரிய குடும்பம் என்பதால் வசதிகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதிக எண்ணிக்கையிலான உடைகள் இருக்காது. ஆண்டுக்கு இருமுறை புதுத்துணி கிடைக்கும். 1980 களின் இறுதியில் தான் டி.வி., கிரைண்டர் ஆகியன கிடைத்தன. அதுவரையில் ஆட்டுக்கல்லில் அம்மாவுக்கு உதவியாக மாவாட்டுவோம். 

 

      ஒரு சமயம் தீபாவளி சமயத்தில் அம்மா உடல்நலக்குறைவால் இருந்ததால், 2018 இல் காலமான பெரியப்பா வீட்டு அண்ணன் சந்தானகிருஷ்ணனுடன் சேர்ந்து மாவரைத்து, இட்லி, புரோட்டா என பலகாரங்கள் செய்தது நினைவுக்கு வருகிறது.

 

      கிரைண்டரில் மாவரைக்கத் தொடங்கியாயிற்று. ஆனால் டி.வி.யில் உடனே படம் பாத்துவிட முடியுமா என்ன? தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிலையங்கள் சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களில் இருந்தன. கும்பகோணம், நாகப்பட்டினம் (சிக்கல்), காரைக்கால் ஒளிபரப்பு மையங்கள் அப்போது கிடையாது. 

 

   சென்னை ஒலிபரப்பு இங்கு கிடைக்க வாய்ப்பில்லை. கொடைக்கானல் ஒளிபரப்பும் வெறும் புள்ளிகளாகத் தெரியும். அதற்கு மிக உயரமான ஆன்டெனா அமைக்க வேண்டும். 60 அடி உயரத்தில் ஆண்டெனா அமைக்க முடிவாயிற்று. டி.வி. ரிப்பேரிங் கடை வைத்திருக்கும்  'ஊசி' என்று பிரியமாக அழைக்கப்பட்ட திரு இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு நாங்கள் மூவரும் பட்டுக்கோட்டை சென்று ஒன்றுக்குள் ஒன்றாக பொருந்துமாறு வடிவமைக்கப்பட்ட 20 அடி இரும்புக்குழாய்கள் மூன்று வாங்கினோம்.  மாலை நேரம் மெக்கானிக்கை மட்டும் ஊருக்கு அனுப்பி விட்டோம்.

 

       அதை ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பேருந்தின் மேல் ஏற்றித்தான் கொண்டு செல்ல வேண்டும். அரசுப் பேருந்துகளில் ஏற்ற இயலாது. விடியற்காலை வேளையில் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக வேதாரண்யம் வரும்  'குருவி' எனும் தனியார் பேருந்தில்தான் ஏற்றிச் செல்ல வேண்டும். அதற்கான முன்னேற்பாட்டுடன்தான் கிளம்பியிருந்தோம். 

 

      கடல் நீல வண்ணத்தில் இருக்கும் குருவி சோப் அப்பகுதியில் பிரபலம்; டிடர்ஜெண்ட் அல்ல, சோப்பு. அந்த நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான  இரண்டு பேருந்துகள் இருந்தன. ஒன்று இவ்வழியாகவும் மற்றொன்று புதுக்கோட்டைக்கும் சென்றுகொண்டிருந்தது. 

 

       நள்ளிரவு 12 மணிக்கு மேல் தஞ்சாவூரில் கிளம்பும் இப்பேருந்து 1:30 வாக்கில் பட்டுக்கோட்டை வந்து 2:30 க்கு மேல் கிளம்பி சுமார் 4:00 மணியளவில் எங்களூரை அடையும். இதன் பணியாளர்கள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் குட்டித்தூக்கம் போட்டுப் பணியாற்றுவார்கள்.

 

      ஆண்டெனாவிற்கு வாங்கிய  இரும்புக் குழாய்களை பேருந்து நிலையம் ஏற்றி வந்தாகிவிட்டது. நள்ளிரவு 2:00 மணிக்குப் பேருந்தில் ஏற்றும் வரை அதற்குக் காவல் காக்க வேண்டியதுதான். 

 

       அருகிலுள்ள அன்னப்பூர்ணா தியேட்டரில் 'கோபுர வாசலிலே...' என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது. டீ குடித்துவிட்டு அப்பா இரவுக்காட்சி பார்ப்பதற்குக் கிளம்பினார். நான் காவல்; பின்னிரவுக் காட்சியில் நான் படம் பார்க்க வேண்டும்; அப்போது அவரது காவல்.

 

      இரவு 10 மணிக்கு மேல் அதிக கூட்டமிருக்காது. நான் தனியே நிற்க வேண்டியிருக்கும். அதனால் நான் முதலில் சென்று திரும்பி விடுகிறேன். டிபன் சாப்பிட்டு விட்டு நீ செல்லலாம் என்றார் அப்பா. 

 

     அதன்படி அப்பா முதலில் படம் பார்த்துவிட்டு வந்தார். இருவரும் டிபன் சாப்பிட்டோம். பிறகு என்னிடம் பணம் கொடுத்து இரண்டாம் காட்சிக்கு அனுப்பினார்.

 

    ‘கோபுர வாசலிலே…’ 1991 மார்ச்சில் வெளியான படம். நாங்கள் சென்றது ஏப்ரல் மாதமாக இருக்கலாம். பிரியதர்ஷன் இயக்கத்தில் பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவில் கார்த்திக், பானுப்பிரியா, விசித்ரா, மோகன்லால், ஜனகராஜ், சார்லி, வீ.கே.ராமசாமி, நாகேஷ் என பெரும் பட்டாளமே நடித்திருந்த நன்றாக ஓடிய படமிது. படம் முடிந்து வந்ததும் படம் நல்லாயிருந்ததா எனக்கேட்டார்; தலையாட்டினேன்.

 

    விடியற்காலை  பேருந்தில்  ஏற்றி வீட்டில் இறக்கி, ஒரு வழியாக கொடைக்கானல் ஆண்டெனாவைப் பொருத்தினோம். புள்ளிகளுடன்தான் படம் தெரிந்தது. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், சில படங்கள், தூர்தர்ஷன் செய்திகள் என்பதாக அன்றைய தொலைக்காட்சிப் பார்வைகள் இருந்தன. 

 

    இலங்கைத் தமிழ் தொலைக்காட்சியான ‘ரூபவாகினி’ மிகத் தெளிவாகத் தெரியும். மாலையில் தமிழ் நிகழ்ச்சிகள் போடுவார்கள். 6:30 க்கு தமிழ்ச் செய்திகள். தெளிவாக இருப்பதால் சிங்கள நிகழ்ச்சிகளையும் மலையாள மொழி போலப் பார்த்து ரசித்ததுண்டு. 

 

    அப்பா அடிக்கடி சென்னை செல்வார். அப்போது இந்தப் புள்ளியாட்டத்திலிருந்து தப்பிக்க Hitachi VHS Player வாங்கி வந்தார். கூடவே கல்யாணப் பரிசு, மனோகரா, வீரப்பாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல், ஒளியும் ஒலியும் என ராஜ் வீடியோ விஷனிலிருந்து நிறைய அள்ளி வந்தார். அதையும் கொஞ்சநாள் பார்த்து ரசித்தோம். பெரும்பாலும் அவர் இல்லாத நேரங்களில்தான்  ரேடியா கேட்பதும் டி.வி. பார்ப்பதும் நடைபெறும்.

 

     இந்த உயரமான ஆண்டெனா மழைக்காற்றில் திரும்புவதும் உடைவதும் வாடிக்கை. ஒரு முறை நண்பர் க.அண்ணாதுரையுடன் (அன்புடன் ஜீயே) பழுது பார்க்கும்போது அண்ணன் இராமநாதன் கைவிரலில் பைப் நழுவி விழுந்து பெருங்காயம் ஏற்பட்டு கூரையில் மயங்கி விழுந்தார். மெதுவாக அவரை தரை இறக்கினோம். பிற்காலத்தில் சிக்கல் ஆண்டெனா வைத்து ஓரளவுத் தெளிவான ஒளிபரப்பைப் பார்த்தோம். 

 

     வீட்டில் மிகவும் கண்டிப்பாக இருப்பார் அப்பா. அவர் வீட்டுக்கு வரும்போது வீடே அமைதியாகிவிடும். அனைவரும் கொல்லைப்புறம் சென்றுவிடுவோம். ஆனால் வெளியே  செல்லும்போது மட்டும் வெகு இயல்பாக பல்வேறு செய்திகள், கதைகளைப் பேசிக்கொண்டே வருவார். தஞ்சாவூர், திருச்சி, ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர், சென்னை என நீண்ட பயணங்களில் பல கதைகளைக் கேட்டுள்ளேன். குழந்தையாக இருந்தபோது அப்பாவின் மரணம், அவரது இளமைப்பருவம், படிப்பை நிறுத்தி மீண்டும் தொடர்தல், தஞ்சாவூரில் ஆசிரியப் பயிற்சி, சிவகங்கை பூங்காவில் சுற்றியது என்பதாக எண்ணற்ற நிகழ்வுகளை விவரித்துள்ளார்.

 

      எங்கள் வீட்டில் அப்பாவுடன் சேர்ந்து யாரும் படம் பார்த்தார்களா என்பது தெரியவில்லை. அன்று தனித்தனியே இருவரும் படம் பார்த்தோம்.

 

        ஒருமுறை அப்பாவுடன் சேர்ந்து சினிமா பார்த்த நிகழ்வும் நடந்தது. ஆடுதுறையில் ஆசிரியர் பயிற்சியில் படித்த சமயம், முதலாமாண்டு (1990-91) விடுதி திறக்கபடாததால், ஆடுதுறை தரங்கம்பாடி சாலையில் ஒரு பழைய நாட்டு ஓடு வேயப்பட்ட வீடு ஒன்றில் சுமார்  10 மாணவர்கள்  சேர்ந்து தங்கியிருந்தோம். 

 

     அப்போது இரவில் என்னைப் பார்க்க வந்த அப்பா இரவு ஊருக்குச் செல்ல இயலாததால் எங்களுடன் தங்கினார். எனது நண்பர்கள் தியாக சுந்தரம், பன்னீர் செல்வம், மகேஸ்வரன், அகோரமூர்த்தி, ராஜகோபாலன் (அருகே வேறொரு அறையில் தங்கியிருந்தோர்)  மிகவும் மகிழ்ச்சியாக உரையாடிப் பொழுது போக்கினார். இரவு டிபனுக்குப் பிறகு அவர்களது அறைக்குச் சென்று உரையாடினோம். 

 

    இரவு கொசுக்கடி, புது இடம்  தூங்க இயலாது. எனவே தியேட்டருக்குப் போகலாம், என்றார். அருகே இருந்த ஆர்.சி.ஏ. என்ற தியேட்டரில் டாக்டர் ராஜசேகரின் தெலுங்கு டப்பிங் படம் ‘மீசைக்காரன்’ ஓடிக்கொண்டிருந்தது. ஒன்றுமில்லாத சுமாரான படம். அப்படத்தை நண்பர்கள் அனைவரும் நேற்றுதான் சென்று பார்த்திருந்தோம். எனவே நண்பர்கள் யாரும் உடன் வரவில்லை. வேறு வழியின்றி நானும் அப்பாவும் சென்று அப்படத்தைப் பார்த்துத் திரும்பினோம்.  

 

    அப்பாவிற்காக அப்படத்தை மீண்டும்  பார்த்தேன். அந்தப்பட ஷூட்டிங்கில் விபத்து (15.11.1989) நடந்த இடம் என்று ஓரிடத்தில் படத்தில் சுட்டிக் காட்டுவார்கள். இவரது டப்பிங் படங்கள் அமோகமாக ஓடிய காலமது.

 

     அப்பாவுடன் சேர்ந்து பார்த்த முதலும் கடைசியுமான படமது. அதற்கு முன்போ, பின்பே அத்தகைய வாய்ப்பு ஒன்று அமையவேயில்லை. இன்று அப்பா இல்லை; அந்த நினைவுகள் மட்டும் பசுமையாய் படர்ந்திருக்கிறது.  

 

(இன்று நவம்பர் 19 (19/11/2020) அப்பாவின் 15 வது நினைவு நாள்.)   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக