புதன், நவம்பர் 11, 2020

அந்தக் காலத்தில் கூரைகள் இருந்தன!

 

அந்தக் காலத்தில் கூரைகள் இருந்தன!

 

மு.சிவகுருநாதன்

 

 

      இன்று (09/11/2020)  குழந்தைகள் கவிநிலா, கயல்நிலா இருவருக்கும் நான் படித்த தொடக்கப்பள்ளியைச் சுற்றிக் காட்டினேன். நான் இங்குதான் ஒன்று முதல் அய்ந்து முடிய 5 ஆண்டுகள் (1978 - 1983) என மொத்தம் 7 (1976 - 1983)  ஆண்டுகளைக் கழித்த இடமாகும். 

 

     கூடுதலாக ஏன் இரண்டாண்டுகள் என்ற அய்யம் ஏற்படலாம். 5 வயதில் பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே மூன்று வயதிலிருந்தே அக்கா மு.மங்கையர்க்கரசி, அண்ணன் மு.இராமநாதன் ஆகியோருடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். மூன்றாம் வகுப்பைத் தவிர  பிற வகுப்புகளில் அந்த இரண்டாண்டுகள் கழிந்தது. 

 

       நான் பிறப்பதற்கு முன்பு வரையில்  எங்களது குடும்பம் பள்ளி அருகே இருந்தது. எனவே எங்கள் அனைவருக்கும் பள்ளியும் வீடும் ஒன்றுதான்; பெரிதான வேறுபாடுகள் இல்லை.  அப்பா வீட்டிலும் பெரும்பாலும் ஆசிரியராகவே இருந்தார். 1972 வாக்கில் எங்கள் குடும்பம் அண்ணாப்பேட்டையிலிருந்து திருக்குவளைக்கட்டளை வேதாரண்யம் பட்டுக்கோட்டை சாலையை ஒட்டி  முனியன் கோயில் அருகே குடிபெயர்கிறது. 

 

         மூன்றாம் வகுப்பில் மட்டும் ஏன் உட்கார்வதில்லை என்றால் அவ்வகுப்பாசிரியர் மீதான பயம்தான்! இன்னொன்றையும் சொல்ல மறந்தேன்.  அந்த மூன்றாம் வகுப்பாசிரியர், அப்பள்ளியின் நிறுவனரும்  அப்போதைய மேலாளருமான திரு ச. முனியப்பன் அவர்கள்தான் எனது தந்தையார்.  1952 இல் தொடங்கப்பட்ட இந்த வ.உ.சி. உதவித் தொடக்கப்பள்ளிக்கு  01/11/1954 இல் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

    அப்போது தலைமையாசிரியராகவும் அய்ந்தாம் வகுப்பாசிரியராகவும் இருந்த திரு சிங்காரம் அவர்கள் தகட்டூரில் இருந்து வருவார். நாள்தோறும் வண்ண மிட்டாய்களை தாளில் மடித்து வாங்கி வந்துத்தருவார்.  இன்றுள்ள நவீன சாக்லெட்டுகள் அன்று கிடையாதல்லவா! அக்கா, அண்ணன் வகுப்புகள்  என இரண்டாண்டுகள் ஓடின. 

 

        முதலிரண்டு வகுப்புகளுக்கு மருதூர்  திரு சி.வீராச்சாமி அவர்கள் ஆசிரியராக இருந்தார். நான்காம் வகுப்பாசிரியர் திரு இல. கணேசன் அவர்கள். 5 வகுப்புகளில் 4 ஆசிரியர்கள்; இவர்களில் எனது தந்தையும் திரு வீராச்சாமி அவர்களும் இன்று உயிருடன் இல்லை. 

 

        அன்று  சுமார் 200 மாணவர்கள் படித்தோம்; இன்று மாணவர் எண்ணிக்கை சுமார் 80 இருக்கும். இரண்டு கூரைக்கட்டிடங்களுடன் இப்பள்ளி இயங்கியது. கூரையில் தென்னங்கீற்றுக்கு மேலாக வைக்கோல், பனை மட்டை வேயப்பட்டதாக இருந்தது. தற்போது  ஓட்டுக் கட்டிடமாக உள்ள இப்பள்ளியை  எனது அண்ணன் திரு மு.செந்தில்நாதன் நிர்வகித்து வருகிறார். அரசு உதவிபெறும் தமிழ் வழி மட்டுமே; சுயநிதி வகுப்புகள் கிடையாது. 

 

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கரியாப்பட்டினம் என்னும் ஊரில் பிறந்த எனது தந்தையார் அன்றிருந்த இறுக்கமான சாதீயச் சூழலில் தொடக்கப்பள்ளி (1938 - 1943) முடித்து 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்காக ஆயக்காரன்புலம் அரசுப்பள்ளிக்குச் செல்ல இயலவில்லை.  தனது ஊரில் 6 ஆம் வகுப்பு தொடங்கும் வரையில் மூன்றாண்டுகள் (1943 - 1946) வீட்டிலேயே இருக்க நேரிட்டது.  

 

       பிற்காலத்தில் நான் அதே ஆயக்காரன்புலம் பள்ளியில் +1, +2 வகுப்புகளை  (1988 - 1990) நிறைவு செய்தேன். வேறு வழியின்றி பள்ளிகளில் நாங்கள் படிக்க அனுமதிக்கப்பட்டோமே தவிர, இறுக்கமாக சாதீய ஆதிக்கம் தொடரவேச் செய்தது. இதை நாங்கள் நேரடியாக உணர்ந்தோம். 

 

       எடுத்துக்காட்டாக, ஏதேனும் ஒன்றிற்காக எந்த ஊர் என்று வினவப்பட்டு, அண்ணாப்பேட்டை என்று கூறியவுடன் ஏன் இங்கு படிக்க வந்தீர்கள்? முத்துப்பேட்டை செல்ல வேண்டியதுதானே! என்று கேட்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.

 

        அன்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் ஆகியன இல்லை; எல்லாம் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமே.  வேதாரண்யம் வட்டம் மேற்கே துளசியாப்பட்டினம்  வளவனாற்றங்கரை  வரையில் உள்ளபோதும், வாய்மேட்டைத் தாண்டி கணக்கில் கொள்ளாத காலமது. 

 

       அன்று (1988 - 1990)  சரபோஜிராஜபுரம், தாணிக்கோட்டகம், தகட்டூர், இடும்பாவனம்,  தில்லைவிளாகம்   ஆகிய ஊர்களில் மேனிலைப்பள்ளிகள்  இல்லை. சில இடங்களில் உயர்நிலைப்பள்ளிகள்  கூட கிடையாது. 

 

        அண்ணாப்பேட்டையிலிருந்து ஆயக்காரன்புலம் 12 கி.மீ.; ஒரே ஒன்றியம், வட்டம். முத்துப்பேட்டைக்கு 20 கி.மீ.; மேலும் வேறு ஒன்றியம், வட்டம். மேலும் அன்று விலையில்லா பேருந்துப் பயண அட்டையெல்லாம் கிடையாது. அரசுப்பேருந்துகளில் பணம் கொடுத்துத் தான் சென்றோம். காலையும் (08:30) மாலையும் (05:30) பட்டுக்கோட்டையிலிருந்து மதுக்கூர்  வழியாக வேதாரண்யம் செல்லும் ஒரு தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை அளித்தனர். அன்று SPT என்றழைக்கப்பட்ட ஸ்ரீபெரியநாயகி அம்மாள் டிரான்ஸ்போர்ட் பேருந்தில்தான் பள்ளி சென்றோம்.  ஏன் முத்துப்பேட்டை போகவில்லை என்பது சாதியாதிக்கத்தின் குரலாகத்தான் இருந்தது.  எனது அப்பா காலத்தில் வகுப்பறையிலிருந்து மாணவர்களை விரட்டியடிக்கும் நிலை இருந்தது. இன்று சூழல் சற்று மாறியுள்ளது; இருப்பினும் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் அதிகம்.

       

 

   அன்று பிற்பட்ட வகுப்புகளிலும் ஆதிக்கச் சாதி அடக்குமுறைகளால்  கல்வி எட்டாக்கனியாக இருந்தது. இந்த நிலையில் தலித் மக்களின்  எவ்வளவு பேருக்குக் கல்வி கிடைத்திருக்கும்? ஏதோ ஒரு வழிகளில் இத்தகைய ஒடுக்குமுறைகள் தொடர்வது பெருங்கொடுமையல்லவா! 

 

 

    07/03/1931 அப்பாவின் உண்மையான பிறந்த நாள்; பள்ளிச்சான்றுகளின் படி 07/03/1933.  மூன்று ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு மூன்றாண்டுகளில்  (1946 - 1949)  எட்டாம் வகுப்பை முடித்து, தஞ்சாவூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி (அப்போது   தொழிற்கல்வியுடன் கூடிய ஆதார ஆசிரியர் பயிற்சி) முடிக்கிறார் (1949 - 1951). 

 

      அன்றுள்ள சூழலில் இப்பகுதிகளில் உள்ள பிற உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்ற விருப்பமில்லாத நிலையும், தன் அனுபவமும் தன் முனைப்பும் உந்தித்தள்ள அவரது அக்கா கண்ணம்மா ஊரில் (அண்ணாப்பேட்டை) 1952 இல் பள்ளி தொடங்குகிறார். 

 

      மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் தலித்களும் நிறைந்த இவ்வூரில் பள்ளி தொடங்கியது அவர் அனுபவித்த கொடுமைகள் மற்றும் மறுப்புகளின் பாதிப்பால் நிகழ்ந்தது. பெரியளவில் இல்லாவிட்டாலும் அப்பகுதிக் குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியாவது அளிக்க முடிந்தது. 

 

    அன்று பள்ளியில் கிளை அஞ்சலகமும் செயல்பட்டது. அதன் தலைவராகவும் எனது தந்தையார் இருந்தார்.  காலையிலும் பள்ளி இடைவேளை நேரங்களிலும் கிளை அஞ்சலகம் செயல்படும்.  மதிய உணவு இடைவேளையில் அரக்கு உருக்கி சீலிடும் வாசனை எங்கும் நிறையும். அஞ்சல்காரராக  திரு கோவிந்தசாமி இருந்தார். அவரும் காலமாகிவிட்டார். 

 

       பழம் நினைவுகளுடன் குழந்தைகளுடன் சுற்றிப்பார்த்துப் படமெடுத்துக் கொண்டோம்.  காங்கிரீட் வகுப்பறைகள்  இல்லை. இல்லாவிட்டால் என்ன?மரங்கள் அடர்ந்த இயற்கையான சூழலில் பள்ளி இருக்கிறது. 

 

       வகுப்பறைகள், மைதானம் ஆகியவற்றைப் பார்த்த பிறகு கஜா புயல் நிவாரணமாக தோழர் செ.மணிமாறன் ஏற்பாட்டில் ஆரோக்கியம்  & நல்வாழ்வு முகநூல் குழும நண்பர்கள்  3.5 லட்சம் மதிப்பில் கட்டிக்கொடுத்த சமையறையைப் பார்த்துத் திரும்பினோம்.

 

       இன்று ஆடு மற்றும் கன்றுகுட்டியை  மட்டுமே கொஞ்ச முடிந்தது. நாய்கள் விருந்தில் 'பிசி'யாகிவிட்டன, என்ன செய்வது?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக