சோலை சுந்தரபெருமாளுக்கான வண்டல் விழா
(நிகழ்வுப் பதிவு)
மு.சிவகுருநாதன்
சோலை சுந்தர பெருமாள் குடும்பத்தினரும் 'பேசும் புதியசக்தி' இதழும் இணைந்து ஏற்பாடு செய்த “சோலை சுந்தர பெருமாள் நினைவு சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா” 11/05/2024 அன்று மாலை 6:00 மணிக்கு திருவாரூர் செல்வீஸ் டைமண்ட் ஹாலில் நடைபெற்றது. மறைந்த தோழரை நினைவுகூறவும் அவரது படைப்புகள் குறித்து விவாதிக்கவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்நிகழ்வு களம் அமைத்துத் தந்தது எனலாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பலர் சோலை சுந்தரபெருமாளைக் கொண்டாடிய இவ்விழாவில் பங்கேற்று அணிசெய்தது நிகழ்வின் சிறப்பாகும்.
சோலையின் நெருங்கிய நண்பரும் திரு.வி.க. அரசுக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமான பேரா.தி.நடராசன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து அவரது சிறப்புரையில் சோலையின் வண்டல் எழுத்துகள் குறித்தும் செந்நெல் நாவல், கீழத்தஞ்சை விவசாயத்தின் அழிவைப் பேசும் பால்கட்டு, எல்லைப் பிடாரி நாவல்கள் குறித்தும் அவர் பெற்ற பரிசுகள் குறித்தும் விரிவாகப் பதிவு செய்தார். வண்டல், வண்டல் மண் மற்றும் மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த பெருவிருப்பத்தை எடுத்துக்காட்டினார். செந்நெல், மரக்கால், தாண்டவபுரம் ஆகிய நாவல்களை எழுத அவர் மேற்கொண்ட கள ஆய்வுகளையும் எடுத்துச் சொன்னார்.
தமுஎகச மாவட்டத் தலைவர் மு.சௌந்தரராஜன் தனது சிறப்புரையில், பல நாவல்களையும் நிறைய சிறுகதைகளையும் எழுதியிருக்கும் சோலை குறித்து பலருக்குத் தெரியாது. அவரது ஊரில் நடந்த இறுதியஞ்சலி நிகழ்வின் மூலம் அந்த ஊர் மக்களே அறிந்துகொண்டனர். இந்நிகழ்வு தொடரவேண்டும். அடுத்த ஆண்டிலிருந்து தமுஎகச வையும் இணைத்து இவ்விழாவை எடுக்க வேண்டும் என்றும் பேசினார்.
தமுஎகச முன்னாள் மாவட்டச் செயலாளர் இரெ.பகவான்ராஜ் தனது சிறப்புரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் எனவும், அவர் எப்போது வந்தாலும் சோலை பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரிப்பார் என்றும் சோலை குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். 'தாண்டவபுரம்' நாவல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டபோது திருவாரூர் பேருந்து நிலையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரா. அ.மார்க்ஸ் அவர்கள் பங்கேற்றதையும் நினைவுபடுத்தினார்.
பின்னர் எனது சிறப்புரையில், 10 நாவல்கள், 6 குறுநாவல்கள், 78 சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியிருக்கும் சோலை சுந்தரபெருமாள் ‘செந்நெல்’ நாவலுக்குப் பிறகு மக்கள் அரசியல் பேசும் படைப்புகளை எழுதினார். அதனால்தான் என்னவோ சாகித்ய அகாதெமி போன்ற விருதுகள் அவருக்கு கிடைக்கவில்லை. வண்டல் எழுத்து என்ற வகையினத்துடன் வண்டல் உணவு என்று அதன் பண்பாட்டு அடையாளங்களை நிறுவ, மீட்டெடுக்க முயன்றார். தஞ்சை வட்டார வழக்குச் சொல்லகராதியைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அது இன்னும் அச்சு வடிவம் பெறவில்லை.
ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் சிறுகதைகளை கா.சி.வேங்கடரமணி முதல் யூமா. வாசுகி வரை, உ.வே.சாமிநாதய்யர் முதல் சிவகுமார் முத்தய்யா வரை என இரு தொகுதிகளைக் கொண்டு வந்தார். தனது படைப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு உரிய மதிப்பளித்தார். செந்நெல், தப்பாட்டம் நாவல் குறித்த விமர்சனங்களைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டார். தன்மீது மட்டும் ஒளிவட்டம் பாய்ச்சாமல் இளைஞர்களின் எழுத்தை ஊக்குவித்துப் பாராட்டினார். இந்தச் சிறுகதைப் போட்டிக்குத் திருவாரூர் பகுதியிலிருந்துகூட நிறைய எழுத்தாளர்கள் கலந்துகொண்டிருப்பது தெரிகிறது. அவர்களை உற்சாகப்படுத்த சோலை போன்ற ஆளுமை இன்றில்லை.
கல்விப்புலத்தில் பணியாற்றியதால் அதன் மீதான விமர்சனங்களை பல்வேறு சிறுகதைகளில் எழுதியுள்ளார். பண்ணையாரான வாத்தியார் காலை முதல் விவசாயப் பணிகளை மேற்பார்வையிட்டு விட்டு 10 மணிக்குப் பள்ளிக்குச் சென்றதும் கட்டுரை நோட்டுக் கட்டுகளைத் தலையணையாக்கித் தூங்குவதை ‘தூண்’ கதையில் பதிவு செய்து எதிர்ப்பைச் சம்பாதித்தார். இதைப்போன்ற 14 கதைகளை ‘வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். (பாரதி புத்தகாலயம், செப்.2011)
‘கோக்காலி’ என்றொரு சிறுகதை எழுதினார். கோக்காலி என்பதை வைக்கோலை அள்ளும் ஒரு வேளாண் கருவி; அதாவது வளைந்த குச்சி. உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர் என்று வினவுவார். அவற்றைப் பற்றிய தரவுகளைத் திரட்டுவதிலும் ஆராய்வதிலும் ஆர்வம் காட்டுவார். அவருடைய படைப்புகள் பரவலாகச் சென்றடைய அவற்றை நாட்டுடைமையாக்க வேண்டும், என்றும் கூறினேன்.
போட்டிக்கு வந்திருந்த 200க்கு கதைகளில் பலகட்ட பரிசீலனைக்குப் பிறகு 25க்கு மேற்பட்ட சிறந்த கதைகளைத் தேர்வு செய்தோம். பார்த்தவுடன் நிராகரிக்கும் மோசமான கதைகளும் பல நல்ல கதைகளும் இருந்தன. மூன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இது கடினமான ஒன்றாகவே இருந்தது. பரிசு பெற்ற கதைகள் ‘பேசும் புதியசக்தி’ இதழில் வரும் மாதங்களில் தொடர்ந்து வெளியாகும்.
முதல்பரிசு பெற்ற வானவனின் ‘கூந்தாலிக்கூடு’ வெள்ளாமையையும் ஆடுகளையும் பாதுகாக்க கயிற்றுக் கட்டிலுடன் நொச்சிக் குச்சிகளை வளைத்து தென்னங்கீற்று பாவிய காவலுக்குப் படுக்கும் ஒரு நடமாடும் கூடாரமாகும். இக்கதை விதைநெல் கோட்டைக் கட்டுதல், விவசாயம், ஊர்த் திருவிழா என்று கிராம வாழ்வை யதார்த்தமாகப் படம் பிடிக்கிறது.
இரண்டாம் பரிசு பெற்ற கோ.சுனில் ஜோகியின் ‘ஓயி’ (வெள்ளம்) கதை சென்னை வெள்ளத்தையும் நீலகிரி கனமழைப் பொழிவை இணைக்கும் ஒரு அழகானக் கதையாகும். இன்று மனிதச் சமூகம் இயற்கையைப் பேரிடராக்க் கருதும் பொதுப்புத்திக்கு வந்துள்ளது. இம்மாதிரியான படைப்புகள் இயற்கை மற்றும் மனிதர்கள் மீதான நேசத்தைப் பேசுகின்றன.
மூன்றாம் பரிசுபெற்ற புலியூர் முருகேசனின் ‘புரூதர் எனும் டால்ஃபின்’ மதக் கலவரங்கள், போர்கள் அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள், அகதிகள் பற்றிப் பேசும் fantasy கதையாக உள்ளது. பில்கிஸ் பானு 2002 லிருந்து நீதிக்காகப் போராடி வருகிறார். அவருக்கான நீதி இன்னும் கிடைத்தபாடில்லை. மதவெறியில் கொலையுண்ட அவரது சலீகா எனும் மூன்று வயது குழந்தையும் பிறக்காமலேயே கொல்லப்பட்ட குழந்தையும் இக்கதையின் கதாபாத்திரங்களாக வருகின்றன.
இம்மூன்று கதைகளும் வெவ்வேறு சூழலை அடையாளம் காட்டும் வகையில் அமைந்தவை. தேர்வாகாத பிற கதைகள் மோசமானவை என்பதல்ல; அவற்றிலும் பல நல்ல கதைகள் இருந்தன, என்றும் கூறி இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அவரது குடும்பத்தினர், பேசும் புதியசக்தி ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன், தமுஎகச, தகஇபெ தோழர்கள் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தேன்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் பேரா.இரா.காமராசு அவர்கள் தனது தலைமையுரையில், சோலை முதலில் கலை இலக்கியப் பெருமன்றத்தில்தான் இருந்தார். அன்று அங்கிருந்த இறுக்கமான மொழிநடையும் இலக்கியமும் சோலைக்கு ஒத்துவரவில்லை. அதன்பிறகு தமுஎகச வந்தார். சோலை சுந்தரபெருமாள், சி.எம்.முத்து, உத்தமசோழன் ஆகிய மூவரும் சமகாலத்தில் தஞ்சை மண்ணின் படைப்பாளிகளாக இருந்தனர். வண்டல் மண் சார்ந்த மருதநில அரசியலைப் பேசியதால் பிறரைவிட சோலை முதன்மை பெற்றார்.
டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா போன்றோர்களின் தத்துவ, வரலாற்று மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து அவை குறித்து விவாதித்தும் தொடர்ந்து உரையாடியும் வந்தார். தன்னுடைய படைப்புகள் விரிவான உரையாடல்களையும் விவாதத்தையும் விரும்பினார். சோலை மாதிரியான எழுத்தாளர்களுக்கு விருது கிடைக்காது. அதற்கென பெரிய ‘லாபி’ உள்ளது. எனவே நாட்டுடைமை அவரின் வாசக தளத்தை விரிவாக்கும், என்றார்.
பேரா.கி.நாச்சிமுத்து திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது சோலையைக் கொண்டு வண்டல் ஆய்வுகள், இருக்கை எனப் பெரிய முயற்சிகள் மேற்கொண்டார். அவை ஈடேறாமல் போய்விட்டன. அவர் இறுதிக்காலத்தில் பலவேறு உடல்நல மற்றும் வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். இன்று குடும்பமும் குழந்தைகளும் நல்ல நிலையில் இருக்கும்போது அவர் இல்லை எனபது வருத்தம் தருகிறது, என்றும் குறிப்பிட்டார்.
பரிசு பெற்ற மூவருக்கும் தமுஎகச எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பரிசு வழங்கிச் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது குறிப்பிட்டதாவது:
ஒரு படைப்பாளியை நான்கு அளவுகோல்களை வைத்து மதிப்பிடுவது வழக்கம். இவை என்னுடைய அனுபவத்தில் சரியாகவே இருந்திருக்கின்றன. சோலை சுந்தர பெருமாள் என்னும் எழுத்தாளர் எதை எழுதினார், எப்படி எழுதினார், யாருக்காக எழுதினார், யாராக இருந்து எழுதினார் என்ற கேள்விக்களுக்கான விடையே அவரை மகத்தான எழுத்தாளராக பறைசாற்றுகின்றன.
தஞ்சை மண் ஏராளமாக எழுத்தாளர்களைப் பார்த்திருக்கிறது. காவிரியாற்றில் சுழித்தோடும் நீர், இசை தொடர்பாக எழுதிக் குவித்தவர்கள் ஏராளம். இங்கு நாட்டியத்தைச் சொல்லமாட்டேன், அது களவாடப்பட்டது. இந்த மண்ணையும் மக்களையும் மொழியை அவர்கள் எழுதவே இல்லை. வேளாண் உற்பத்தியில் ஈடுபடாத பிராமண எழுத்தாளர்களுக்கு இந்த மண், மக்கள் பற்றிய ஒவ்வாமை இருந்தது. விதிவிலக்காக கு.ப.ரா.வின் இரு கதைகளில் மட்டும் வெளிப்படுகிறது (ஒன்று: பண்ணைச் செங்கான்). கு.ப.ராஜகோபாலன் கரிச்சான் என்ற பெயரில் எழுதியவர். அவரது சீடராக கரிச்சான் குஞ்சு என்ற புனைப்பெயரில் எழுதிய ஆர்.நாராயணசாமி, மௌனி போன்றவர்களிடம் இந்த ஒவ்வாமை இருந்தது. மௌனியின் படைப்புகள் குறித்து எழுத்தாளர் ஜாமலன் ‘மௌனியின் இலக்கியாண்மை’ (காலக்குறி பதிப்பகம்) எனும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். மௌனி தனது படைப்புகளை வெளியிட சமஸ்கிருதமும் ஆங்கிலமும்தான் ஓரளவு ஒத்துவருகிறது; தமிழ் போதவில்லை என்றெல்லாம் சொன்னவர்.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் புராணங்களை எழுதி வைத்துள்ளனார். இவற்றைக் கேள்விக்குள்ளாக்க, அவற்றைப் படிக்க அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் சோலை துணிச்சலுடன் களமிறங்கி அடித்தார். ‘தாண்டவபுரம்’ நாவலில் திருஞான சம்மந்தருக்குத் திருமணம் செய்வித்து சைவ மட ஆதீனங்களை நேரடியாக எதிர்கொண்டார். இது தொடர்பான வழக்கையும் எதிர்கொண்டார். எப்போதும் விவாதிக்கும் எழுத்திற்காகச் சண்டையிடும் நபராக சோலை விளங்கினார்.
கி.ரா. கரிசல் இலக்கிய வகைமையை உருவாக்கி அதன் பிதாமகனாக இருந்ததைப்போல வண்டல் இலக்கியத்தை உருவாக்க வேன்டும் என்று கனவு கண்டார். நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை. அதுகுறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டும், என்றும் சொன்னார்.
சோலை படைப்புகளை அரசுடைமையாக்குவது அவரது குடும்பத்தினர் விருப்பத்தினரைப் பொறுத்தது. அவர்கள் விரும்பினால் அரசிடம் இது குறித்து பேசலாம். இன்று பதிப்பகங்கள் எழுத்தாளர்களுக்கு ‘ராயல்டி’ அளிப்பதில்லை. அச்சிட்டு விநியோகம் செய்யும் தங்களுக்கே முழு உரிமை என பதிப்பகங்கள் எண்ணுகின்றன. நூல்களை அரசுடையாக்கினால் பலர் பதிப்பிப்பார்கள். தமிழ் இணையக் கழகத்தில் மின்னூலாக வெளியாகும். படைப்பு பரவலான வாசகர்களைச் சென்றடையும். அரசு கொடுக்கும் பரிவுத் தொகையை இம்மாதிரியான விழாக்களுக்குப் பயன்படுத்தலாம், என்றார்.
பரிசுபெற்ற வானவனின் ‘கூந்தாலிக்கூடு’ கதை எவ்வித அரசியலையும் பேசாது கிராம வேளாண் வாழ்க்கையை அதன்போக்கில் பதிவு செய்கிறது. கோ.சுனில் ஜோகியின் ‘ஓயி’ மழை, வெள்ளம், மின்வெட்டு, சார்ஜ் இல்லாத அலைபேசி என வாசகர்களை பதற்றத்தில் வைத்து கதை சொல்கிறது. புலியூர் முருகேசனின் ‘புரூதர் எனும் டால்ஃபின்’ உலக அரசியல் பேசுகிறது. போர், மதவெறிப் பாதிப்புகளை இறந்த குழந்தைகள் வாழும் கற்பனைத் தீவில் கதை நிகழ்த்தப்படுகிறது.
இந்த விழாவை ஏற்பாடு செய்த அவரது குடும்பத்தினர், இவ்விழாவிற்கு ஓட்டுநராக இருந்து வெகு சிறப்பாக நடத்திக் காட்டிய பேசும் புதியசக்தி ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன், தமுஎகச தோழர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெற்றார்.
பேசும் புதியசக்தி முதன்மை ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன் பேசும்போது, சோலை எனது தந்தை எழுத்தாளர் ராஜகுருவின் நண்பர். தந்தையைப் போன்ற அவர் எனக்கும் நண்பர். இலக்கியம், எழுத்துகள் குறித்து அவருடன் நேரம் போவதே தெரியாமல் உரையாடிய காலங்கள் உண்டு. கடந்த மூன்றாண்டுகளாக அவரது துணைவியாரைத் தொடர்புகொண்டு, சோலையின் பெயரில் எதாவது செய்ய வேண்டும் என்றுத் தொடர்ந்த நச்சரிப்பின் விளைவாக இந்த விழா ஏற்பாடாகியுள்ளது. இடங்கள், பரிசுத் தொகை, முக்கியமல்ல. 200க்கும் மேற்பட்ட கதைகளிலிருந்து 25 நல்ல கதைகளைத் தேர்வு செய்து அவற்றிலிருந்து மூன்று வெவ்வேறு பாணிகளுக்கு இந்தப் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை தேர்வு செய்த நடுவர் குழுவினர், போட்டியில் பங்கேற்றவர்கள், விழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
பரிசு பெற வந்திருந்த வானவன் தனது குடும்பத்தினருடனும் கோ.சுனில் ஜோகி, புலியூர் முருகேசன் ஆகியோர் அவர்களது நணபர்களுடன் வந்திருந்தனர். விருதாளர்களின் ஏற்புரைக்கு தலா 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. மூவரும் சில நிமிடங்களில் ஏற்புரை வழங்கி விழாவை இனிதே நிறைவடைய உதவினர்.
மரபு, இயற்கை ஆர்வலராகச் செயல்பட்டு மரம் நடுதல், விதைகள் வழங்குதல், இயற்கை வேளாண்மை என பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த நான் நண்பர்களின் வேண்டுகோளால் எழுத்துலகில் நுழைந்தேன். சென்ற ஆண்டு நான் எழுதிய ‘உரக்குழி’ எனும் நாவல் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (புது எழுத்து பிரசுரம்) பதிப்பகத்தால் தேர்வுபெற்று நூலாக வெளிவந்தது, என்று வானவன் குறிப்பிட்டார்.
நீலகிரி தோத்தகிரிப் பகுதியிலிருந்து வரும் நான் வாழ்வில் மூன்றாவது முறையாக ரயிலில் பயணம் செய்து, முதல்முறையாக திருவாரூர் வண்டல் மண்ணை மிதித்துள்ளேன் என்றார் கோ.சுனில் ஜோகி. சோலையின் படைப்புகளை கல்லூரியிலிருந்தே படித்துவருவதாகவும் தற்போது அவரது ‘தப்பாட்டம்’ நாவலை ரயில் பயணத்தை வாசிப்பதாகவும் சொன்னார். சோலையின் ‘மண்ணாசை’ சிறுகதை குறித்தும் குறிப்பிட்டார்.
மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், இயற்கையைப் பாதுகாப்பது பற்றியெல்லாம் இங்கு பேசினார்கள். இயற்கையைப் பாதுகாப்பது ஒருபக்கம் இருக்கட்டும். அந்தப் பேரிடர்களிடமிருந்து மீள நமக்குத் தரவேண்டிய பல்லாயிரம் கோடிப் பணத்தைத் தரமறுத்து, கண்துடைப்பாக 250 கோடியை மட்டும் கொடுக்கும் அரசியலை விமர்சிப்பதே எனது எழுத்தின் பணியாக இருக்கும், என்று புலியூர் முருகேசன் தனது ஏற்புரையில் தெரிவித்தார்.
சோலையின் துணைவியார் திருமதி சு.பத்மாவதி அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது. விழாவில் புலவர் எண்கண் மணி, பேரா. க.ஜவகர், சிவகுமார் முத்தய்யா, பத்தரிக்கையாளர்கள் நவமணி, எஸ். நீதிராஜன்,சு.தியாகராஜன், சிம்ளி இரா. விஜயன், சு.பொன்முடி, சு.கமலநாதன் மற்றும் பெயர் தெரியாத, உடனடியாக நினைவிற்கு வராத பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(கூட்டத்தில் பங்கேற்ற நினைவுகளிலிருந்து எழுதப்பட்டது. விடுபடல்கள், சொற்களில் மாறுபாடு இருக்கலாம்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக