புதன், மே 08, 2024

காந்தியின் ரத்த வாரிசுகள்

 

காந்தியின் ரத்த வாரிசுகள்

 (மகாத்மாவின் கதை தொடரின் பதினேழாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்


 

                 மகாத்மா காந்தி தேசத்தந்தை என்று புகழப்பட்டிருந்தாலும் அவரது பெயர் பிற்காலத்தில் குழப்பத்திற்கு உள்ளாகிவிட்டது. ஜவகர்லால் நேருவின் மகளான இந்திரா பிரியதர்சினி பார்சி (ஜொராஸ்டரியம்) சமயத்தைச் சார்ந்த பெஃரோஸ் காந்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆண்வழிச் சமூக வழக்கப்படி இந்திரா பிரியதர்சினி இந்திரா காந்தி ஆனார். அவரது இரு மகன்களுக்கு ராஜூவ் காந்தி, சஞ்சய் காந்தி எனப் பெயரிட்டார். நேருவின் மறைவுக்குப் பின் இந்திரா காந்தி பிரதமரானார். இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்பு ராஜூவ் காந்தி பிரதமரானார். சோனியா காந்திராகுல் காந்தி, மேனகா காந்திவருண் காந்தி என்ற பெயர் சூட்டல்கள் இவ்வாறு குழப்பம் ஏற்படக் காரணமாயிற்று. ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் ஆகிய இருவரில் நேருவை அரசியல் வாரிசாக காந்தி தெரிவுசெய்த வரலாற்றின் பின்னணியில் இந்தப் பெயர்சூட்டல் தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. மேலும் மகாத்மா காந்தியின் ரத்த வாரிசுகள் தேர்தல் அரசியல் களத்தில் இல்லை. அவரது கொள்கை வாரிசுகள் சிலர் அரசியலில் பங்குபெற்றனர். காந்தியின் குடும்ப வாரிசுகள் ஆலமரத்தின் விழுதுகளாய் எங்கும் பரந்து விரிந்து அவரது பெருமையைப் பறைசாற்றும் விதமாக வாழ்கின்றனர்.

         காந்திக்கு  ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் என நான்கு ஆண் குழந்தைகள். மூத்தமகன் ஹரிலால் 23 ஆகஸ்ட் 1888இல் பிறந்தார். இவர் பிறந்தவுடன் காந்தி பாரிஸ்டர் படிப்பிற்கு இங்கிலாந்து சென்றார். ஆடம்பர வாழ்க்கையை விரும்பிய அவர் மீது எளிய வாழ்வு திணிக்கப்பட்டதை ஏற்க இயலவில்லை. தந்தையைப் போலவே தாமும் பாரிஸ்டராக விரும்பினார். ஆனால் மேற்கத்தியக் கல்விமுறையை எதிர்த்துப் புதிய கல்விமுறையை உருவாக்கிய காந்தி இதற்கு இசையவில்லை. காந்தி தனது சோதனை முயற்சிகளுக்கும் அனைத்துப் பணிகளுக்கும் குடும்பத்தினரை ஈடுபடுத்தத் தயங்காதவர். இதுவே இருவருக்குமிடையே முரண்பாடுகள் தோன்றக் காரணமாக அமைந்தது. காந்தியின் கொள்கைகளைத் தனது செயல்பாடுகள் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். இவர்களுக்கிடையே நடந்த பாசப்போராட்டங்கள் ஒருவகையில் காவியத்தன்மை மிக்கவை.

       காந்தியின் விருப்பமின்றி 1906இல் குலாப் காந்தியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு பெண்கள் மூன்று ஆண்கள் என 5 குழந்தைகள்; இரு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்தனர். ஹரிலால் தந்தைமீது கொண்ட பாசத்தால் மூத்த ஆண் குழந்தைக்கு காந்திலால் எனப்பெயரிட்டார். ரசிக்லால் சாந்திலால் ஆகிய இருவரும் சிறுவயதிலேயே இறந்தனர். ராணி, மனு என இரு பெண்களும் இருந்தனர். காந்திலாலுக்கு சாந்திலால், பிரதீப் என குழந்தைகளும் ராணிக்கு அனுஷ்ரியா, பிரபோத், நீலம், நவ்மாலிகா என நால்வரும் மனுகாந்திக்கு உர்மி என்ற குழந்தையும் பிறந்தனர்.

         1918இல் இன்ஃப்ளுயன்சா தொற்றால் குலாப் காந்தி மரணமடைந்தார். குழந்தை விதவையான குலாப்பின் சகோதரியை குமி அடலாஜாவை இரண்டாம் திருமணம் செய்ய நினைத்தார். அதுவும் நடைபெறவில்லை. அதன்பிறகு குடும்பத்தைவிட்டுப் பிரிந்து மது, மாது என தெருவோர வாழ்க்கையில் ஈடுபட்டார். பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் உண்டு. அது தொடர்பான வழக்கறிஞர் அறிவிக்கையில் 1915 முதல் பிரிந்து வாழ்வதை காந்தி உறுதிப்படுத்தினார்.  ஹரிலால் 1947 வரை அவ்வப்போது காந்தியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அவரை மனந்திருந்தி வாழ காந்தியும் பெருமுயற்சி மேற்கொண்டார். ஆனால் அவையனைத்தும் தோல்வியில் முடிந்தன.  காந்தியின் சொற்களை அவர் துளியும் செவிமெடுக்கவில்லை. காந்தி ஹரிலாலுக்கு எழுதிய கடிதங்களில் குடிப்பழக்கம், மோசமான நடத்தைகளைக் கண்டித்தார். ஹரிலால் காந்தி ஒருகட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார்.

        1936இல் அப்துல்லா காந்தி என்ற பெயருடன் முஸ்லீம் மதத்தைத் தழுவினார். சில ஆண்டுகளில் மீண்டும் இந்துவானார். காந்தி அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்க இயக்கம் நடத்திய நிலையில் இவர் அந்நியப் பொருள்களை விற்பனை செய்தார். விடுதலைப் போராட்டத்தைவிட ஹரிலால் காந்தியைச் சமாளிப்பது கூடுதல் பிரச்சினையாக இருந்ததை காந்தி தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.  ஹரிலாலின் மகள் மனுபென் காந்தி 1943 முதல் காந்தியின் உதவியாளராக இருந்தார். காந்தி என் தாய் (Bapu My Mother) எனும் நூலை எழுதினார். காந்தி படுகொலைக்குப் பின் குஜராத் பவநகரில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி, தனது 40 வயதில் காலமானார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரது நாட்குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டு வெளியானது.

       காந்தியின் இறுதிச் சடங்கில் ஹரிலால் அலங்கோலமான அடையாளத்துடன் கலந்துகொண்டார். அவரை அடையாளம் காணமுடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. அதன்பிறகு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூன் 18, 1948இல் பம்பாயில் உள்ள முனிசிபல் மருத்துவமனையில் 55 வயதில் காசநோயால் இறந்தார். பம்பாய் காமாதிபுராவில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் காந்தியின் மகன் என்று அங்கு யாரிடமும் கூறவில்லை. இறந்தபிறகு அவரது பையில் கிடைத்த ஆதாரங்களில் அடிப்படையில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

       அவரது பேத்தி நீலம் பரீக் Ganghiji’s Lost Jewel: Harilal Gandhi என்ற நூலில் அவரது வாழ்க்கையை எழுதினார். இதனடிப்படையில் எடுக்கப்பட்ட பெரோஸ் அப்பாஸ் கானின் Gandhi, My Father என்ற திரைப்படம் காந்திஹரிலால் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. காவியத்தன்மையுடைய இந்த தந்தை-மகன் உறவைப் பற்றி பல்வேறு படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. இவரது வாழ்வின் முற்பகுதியை ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று கலைச்செல்வி தமிழில் நாவலாக எழுதியுள்ளார். இரண்டு தந்தையர்எனும் சுந்தர் சருக்கையின் நாடகத்தை சீனிவாச ராமானுஜம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 

        பிப்ரவரி 10, 1940இல்  பிறந்த ஹரிலால் காந்தியின் பேரன் சாந்திலால் காந்தி ஓர் புகழ்பெற்ற இதய மருத்துவர். 1967இல் அமெரிக்கா சென்று அங்கேயே குடியுரிமை பெற்றுத் தங்கினார். 2012 கான்சாஸ் மாகாணப் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். காந்தியின் வழித்தோன்றல் என்று சொல்லி இவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை. ஒர் இதய மருத்துவர் என்று குறிப்பிடப்படுவதையே  பெரிதும் விரும்பினார். இவர் ஜனவரி 12, 2015இல் காலமானார்.

       இரண்டாவது மகன் மணிலால் காந்தி அக்டோபர் 28, 1982இல் ராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் காந்தி இவரை தென்னாப்பிரிக்காவிற்கு உடன் அழைத்துச் சென்றார். ஃபீனிக்ஸ் குடியிருப்பிலும் டால்ஸ்டாய் பண்ணையிலும் இவரது இளமைப்பருவம் கழிந்தது. 1915இல் காந்தியிடன் இந்தியா திரும்பினாலும் குஜராத்தி மற்றும் ஆங்கில வார இதழான ஒப்பீனியன் பணிகளுக்காக 1917 மீண்டும் தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்டார்.  அவ்விதழின்ஆசிரியராக 1920 முதல் மரணமடையும் வரை (1956) பணியாற்றினார். தண்டி அணிவகுப்பில் சென்ற 78 பேரில் ஒருவர். விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர்.

      1926இல் தென்னாப்பிரிக்காவில் வாழும் பாத்திமா கூல் என்ற இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்தார். அவரை மணம்புரிய தந்தையின் அனுமதியை வேண்டினார். மதமாற்றம் அதர்மம் என்றும் நம்பிக்கைகள் ஆடை போன்று மாற்றிக்கொள்ளக் கூடியதல்ல என்ற காந்தி இதனை ஏற்க மறுத்தார். இந்தச் சிக்கலைத் தீர்க்க சேவாகிராமத்தில் வாழ்ந்த கிஷோர்லால் மஷ்ருவாலாவின் உறவுக்காரப் பெண் சுசீலாவை 1927இல் மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு சீதா (1928), எலா (1940) என்ற மகள்களும் அருண் (1934) என்ற மகனும் பிறந்தனர். இவர்களது வம்சாவளியினர் இன்றும் தென்னாப்பிரிக்காவில் வசிக்கின்றனர். அருண்லால் காந்தியும் எலா காந்தி சமூக, அரசியல் செயல்பாட்டாளர்கள்.

          சீதா துபேலியாவின் மகள் கீர்த்தி மேனன் ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழக மூத்த இயக்குநர், கல்வியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். அந்நாட்டின் கல்விக் கொள்கை உருவாக்கம், செழுமைப்படுத்துதலில் பங்காற்றியவர். இவரது மகள் சுனிதா மேனன் பத்தரிகையாளராக உள்ளார்.

            1940 ஜூலை 1இல் டர்பனில் பிறந்த எலா காந்தி படிப்பு முடிந்ததும்  மேவா ராம் கோபின் என்பவரை மணந்தார். இவருக்கு ஐந்து குழந்தைகள். இவர் சமூகச் செயல்பாட்டாளராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தார்.  நடால் பெண்கள் அமைப்பில் நிர்வாகக் குழுவில் பங்கேற்றார். நடால் இந்தியக் காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக முன்னணி போன்றவற்றிலும் பங்கேற்றார். நிறவெறிப்போரின் போது ஓன்பது ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1994-2004 காலத்தில் தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். வாடகைத் தாய்களின் உரிமைகள், குடும்ப வன்முறைத் தடுப்பு போன்றவற்றில் இவரது பணிகள் அளப்பரியது. மகாத்மா காந்தி உப்பு யாத்திரைக் குழு, மகாத்மா காந்தி  மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவராகச் செயல்படுகிறார். சர்வதேச அமைதி விருது, பத்ம பூஷன் விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்.    

        அருண் மணிலால் காந்தியுடன் வசிக்க  சேவாகிராமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  1947இல் 13 வயதில்  மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்குப் பெற்றோருடன்  சென்றார். 1987 தனது மனைவி சுனந்தாவுடன் அமெரிக்கா சென்றார். அங்கு காந்தி பெயரில் அகிம்சை நிறுவனம் அமைத்தார். காந்தி மற்றும் அகிம்சை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். 21 பிப்ரவரி 2007இல் இவர் மரணமடைந்தார். இவரது மகன் துஷார் காந்தி எழுத்தாளர் மற்றும்  சமூகச் செயல்பாட்டாளர் ஆவார். இவரது மனைவி சோனல் தேசாய் காந்தி; மகன் ராவல் காந்தி. மகளுக்கு கஸ்தூரிபா நினைவாக கஸ்தூரி காந்தி எனப் பெயரிட்டார். 1998இல் குஜராத் வதோராவில் மகாத்மா காந்தி அறக்கட்டளையைத் தொடங்கி அதன் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளை இன்று மும்பையில் இயங்குகிறது.

        துஷார் காந்தி 2005இல் தண்டி யாத்திரையின் 75வது நிகழ்விற்குத் தலைமையேற்றார். ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக பைலிருனாப் பாசியைப் பயன்படுத்தும் பரப்புரைக்கு நல்லெண்ணத் தூதுவராகச் செயல்பட்டார்.  காந்தியின் இறுதி நாட்கள், காந்திப் படுகொலை, சதி, விசாரணை, கபூர் ஆணையம், இந்து தீவிரவாதம் குறித்து Let’s Kill Gandhi எனும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். 2018இல் பசுப் பாதுகாப்புக் குண்டர்களைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வென்றார். காந்தி அறக்கட்டளை ஆராய்ச்சி ஊழியர்கள் இந்தூர் கஸ்தூரிபா ஆசிரமத்தில் சேதமடைந்திருந்த கஸ்தூரிபாவின் நாட்குறிப்பைக் கண்டுபிடித்தனர். குஜராத்தியில் எழுதப்பட்ட இவற்றைப் பதிப்பித்தார். ‘The Lost Diary of Kastur, My Ba’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவரது பணிகள் இன்றும் தொடர்கின்றன.

       மூன்றாவது மகன் ராம்தாஸ் காந்தி தென்னாப்பிரிக்கா நடால் காலனியில் ஜனவரி 2, 1897இல் பிறந்தார். 14 வயதில் தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். இந்தியாவில் சம்ப்ரான் சத்தியாகிரகத்திலும் கைதானார். 1919இல் நவஜீவன் வார இதழின் ஆசிரியராகப் பணி செய்தார். பட்டேல் நிறுவிய பர்தோலி ஆசிரம நிர்வாகியாகவும் செயல்பட்டார். நிர்மலா காந்தியை மணந்தார். இவருக்கு கனு காந்தி எனும் மகனும் சுமத்ரா காந்தி, உஷா காந்தி என்ற மகள்களும் உண்டு.

          காந்தியின் வாழ்க்கைமுறை மற்றும் கோட்பாடுகள் பிறருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதை உணர்ந்திருந்தார். விடுதலைப் போராட்டத்தில்  நீண்டகாலம் சிறை வாழ்வை அனுபவித்தார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. காந்தியின் விருப்பப்படி காந்தியின் இறுதிச் சடங்கைச் செய்தார். இளைய சகோதரர் தேவதாஸ் காந்தி சடங்கில் உடன் பங்கேற்றார். 1969 ஏப்ரல் 14, தனது 72வது வயதில் காலமானார்.

       காந்தியின் புகைப்படத் தொகுப்புகளில் அவரது கைத்தடியைப் பிடித்து இழுத்துச் செல்லும் சிறுவன் இடம்பெறும் படம் ஒன்று இருக்கும். அச்சிறுவன் காந்தியின் பேரன் கனு காந்தி. 1928இல் பிறந்த இவர் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, நாசா மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்தார். இவருக்குக் குழந்தைகள் இல்லை.  2014இல் இந்தியா திரும்பிய இவர் நவம்பர் 7, 2016இல் தனது 87வது வயதில் சூரத் நகரில் காலமானார்.

          நான்காவது மகன் தேவதாஸ் காந்தி தென்னாப்பிரிக்காவில் மே22, 1900இல் பிறந்தார். விடுதலைப் போராட்டங்களிலும் காந்தியின் ஆசிரமப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராகப் பணியாற்றினார். ராஜாஜியின் மகள் லெட்சுமி மீது காதல்வயப்பட்டார். அப்போது தேவதாசுக்கு வயது 28; லெட்சுமிக்கு வயது 15. ஐந்தாண்டுகள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளக் கூடாது என்று காந்தி இவர்களுக்கு நிபந்தனை விதித்தார்.  நிபந்தனையைப் பூர்த்தி செய்த்தும் இவர்களும் 1933இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ராஜ்மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, ராமச்சந்திர காந்தி ஆகிய மூன்று மகன்களும் தாரா காந்தி என்ற மகளும் பிறந்தனர். 1918இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட தட்சணபாரத் இந்தி பிரச்சார சபாவின் (DHHPS) முதல் பிரச்சாரகர் இவரே. தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதே இதன் நோக்கமாகும். ஆகஸ்ட் 3, 1957இல் இவர் இயற்கை எய்தினார்.

        ராஜ்மோகன் காந்தி 1935 ஆகஸ்ட் 7இல் பிறந்தார்.  எழுத்தாளர், வரலாற்று அறிஞர், ஆய்வாளர், பேராசிரியர், சூழலியர், சமூக ஆர்வலர் எனப் பன்முகங்கள் கொண்டவர். தென்னாசியா மற்றும் மத்தியக் கிழக்கு படிப்பிற்கான ஆய்வுப் பேராசிரியராக இருந்தார். அமெரிக்க இலினாஸ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். உஷா காந்தியை மணந்தார். இவருக்கு சுப்ரியா, தேவதத்தா என இரு மகள்கள்.

        இந்தியாவின் நம்பிக்கைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் போன்றவை பாதுகாக்கவும் ஊழல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் மாற்றத்திற்கான சிந்தனைகளை விதைத்து வருகிறார். பஞ்ச்கனி மலை வாழிடப் பாதுகாப்பு இவரது சூழலியல் பங்களிப்பாகும். ஹிம்மத் வார இதழ் மூலம் நெருக்கடிநிலைக் கொடுமைகளுக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். 1989 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராஜூவ்காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  பின்னர் மாநிலங்களவை உறுப்பினராத்  தேர்வானார். 2014இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கிழக்குத் தில்லித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 

      ராஜாஜி (Rajaji: A Life), பட்டேல் (Patel: A Life) வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவர் எழுதிய Understanding the Muslim Mind எனும் நூல் இந்திய முஸ்லீம் தலைவர்கள்விடுதலைப் போராட்டமும் அதற்கு அப்பாலும்என்றத் தலைப்பில் தமிழில் வெளியாகியுள்ளது. காந்தி ஏன் இன்னும் முக்கியமானவர்? - காந்தியத்தின் இன்றைய மதிப்பீடு, மோகன்தாஸ்ஒரு மனிதன், மக்கள், பேரரசின் உண்மைக்கதை, பழிவாங்குதலும் நல்லிணக்கமும்தென்னாசிய வரலாற்றைப் புரிந்துகொள்ளல், நவீன தென்னிந்தியா – 17 ஆம் நூற்றாண்டு முதல் நமது காலம் வரை, பஞ்சாப்ஔரங்கசீப் முதல் மவுண்ட்பேட்டன் வரையிலான வரலாறு, கான் அப்துல் கஃபார் கான்பக்தூன்களின் வன்முறையற்ற பாட்ஷா, எட்டு உயிர்கள்இந்து முஸ்லீம் மோதல் பற்றிய ஆய்வு போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பின் போது புனையப்பட்ட செங்கோல் கதையை விமர்சித்து கட்டுரை எழுதினார். காந்தியத்தின் வழியில் என்றும் உண்மையை உரக்கச் சொல்லும் வரலாற்று ஆசிரியராகத் திகழ்கிறார்.

          காந்தியின் இன்னொரு பேரனான கோபாலகிருஷ்ண காந்தி ஏப்ரல் 22, 1945இல் பிறந்தார். இந்திய ஆட்சிப்பணி அலுவலராக 1968-1985 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பணி செய்தார். அதன்பிறகு இந்தியக் குடியரசுத் துணைத்தலைவரின் செயலாளாராகவும், பின்பு இந்தியக் குடியரசுத் தலைவரின் இணைச் செயலாளராகவும் பணிபுரிந்தார். தென்னாப்பிரிக்கா, நார்வே, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதராகப் பணியாற்றினார். இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார்.

         தத்துவ அறிஞரான  ராமச்சந்திர காந்தி ஜூன் 9, 1937இல் பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பஞ்சாப், பெங்களூரு, விஸ்வபாரதி போன்ற பல்கலைக் கழகங்களில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறையை உருவாக்கினார். காந்தியையும் ரமணரையும் தத்துவ நோக்கில் அணுகும் நூலை எழுதினார். சீதாவின் சமையலறைநம்பிக்கை மற்றும் விசாரணை எனும் நூல் குறிப்பிடத்தக்கது. மேலும் சில நூல்களை எழுதியுள்ளார். இந்துத்துவ சக்திகள் பாபர் மசூதி இடிக்க வேண்டும் என்று பரப்புரை செய்தபோது இந்து மதத் தத்துவங்கள் அடிப்படையில் மறுப்பை வெளியிட்டார். 2002இல் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையைக் கண்டித்தார். காந்தியின் வாரிசுகள் உண்மையின் பக்கம் நின்றதை இது எடுத்துக்காட்டுகிறது. இவரது மகள் லீலா காந்தி பின் காலனியக் கோட்பாட்டாளர் ஆவார்.

        ராமச்சந்திர காந்தியின் மகள் லீலா காந்தி (1966) கவிஞர், கல்வியாளர், கோட்பாட்டாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். சிகாகோ, தில்லிப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக இருந்தார். பின் காலனியம் தொடர்பான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கவர். Post-Colonial Studies என்ற ஆய்விதழின் இணையாசிரியாகவும்   Post-Colonial Text  என்ற மின்னணு இதழின் ஆசிரியராகவும் உள்ளார். Measures of  Home இவரது கவிதை நூலாகும்.

      பின் காலனிய நெறிமுறைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள்ஒரு விமர்சன அறிமுகம் என்னும் நூல், இக்கோட்பாடுகளை அறிமுகம் செய்வதோடு பின் காலனியம், பின் நவீனத்துவம், பின் அமைப்பியல், மார்க்சியம், பெண்ணியம் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் விளக்குகிறது. மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் சைவ உணவுக் கோட்பாடுகள் பிற நாடுகளில் ஏற்படுத்திய தாக்கங்களை ஆய்வு செய்துள்ளார். பின் காலனிய நாடுகளின் மொழி, பண்பாடு போன்றவற்றையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். இவரது ஆய்வுகளும் எழுத்துகளும் கல்விப்புலத்தை செழுமைப் படுத்துகின்றன.

      காந்தியின் ரத்த வாரிசுகளின் சில குறிப்பிடத்தக்க பணிகள் மட்டும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இன்றைய இந்திய அறிவுச்சூழலில் காந்தியின் கோட்பாடுகளையும் அவற்றைத் தாண்டியும் காந்தியின் வாரிசுகள் காந்தியத்தின் சாரம் மற்றும் மக்கள் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வேறு எந்த ஆளுமைக்கும் கிடைக்காத பெருமையும் சிறப்புமாகும். அந்த வகையில் காந்தி கொடுத்து வைத்தவர் என்றே சொல்லலாம்.

 (தொடரும்…)

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் மே 2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக