வியாழன், ஜனவரி 28, 2010

மாற்றுக்களுக்கான ஒரு தளம் - மு. சிவகுருநாதன்

மாற்றுக்களுக்கான ஒரு தளம் - மு. சிவகுருநாதன்


இது பத்திரிக்கைகளின் யுகம். தமிழில் இன்று இதழ்களுக்குப் பஞ்சமில்லை. எந்த மாதிரியான எழுத்து என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. ‘சஞ்சாரம்’ இதழை ஜனவரி 2008-ல் வெளியிட முடிவு செய்து சிறு பத்திரிகளுக்கேயுண்டான பல்வேறு காரணங்களால் மார்ச் 2008-ல் வெளியிடுகிறோம். இலக்கியம் மட்டுமல்லாது அரசியல், சமூகச் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, இவ்விதழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதழ் குறித்தான அறிக்கை ஒன்றை நவம்பர் 2007-ல் வெளியிட்டோம். (அது வேறொரு பக்கத்தில் பிரசுரமாகி உள்ளது.)


மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களின் நேர்காணல், வழக்குகளில் அவரது நீண்ட, நெடிய போராட்டங்களுடன் பவுத்தம், அம்பேத்கரியம், மார்க்சியம் தொடர்பான அவரது ஈடுபாட்டைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

சாதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதைகள், கட்டுரைகளைத் தொடர்ந்து அவரது கடிதங்கள் மூன்று நண்பர் ராமாநுஜம் மொழிப் பெயர்ப்பில் ‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள், வெளியாகிறது. பிற கடிதங்கள் அடுத்த இதழ்களில் தொடர்ந்து வெளியாகும். 1950 களில் எழுதப்பட்ட இக்கடிதங்கள் இன்றைய சூழலிலும் மிகுந்த பொருத்தப்பாடு மிக்கவை. அமெரிக்காவுடனான 123 அணுசக்தி ஒப்பந்தம், இதர சார்பு நடவடிக்கைகள் போன்றவற்றைக் கூட இக்கடிதங்கள் நமக்கு ஞாபகமூட்டுகின்றன. மண்ட்டோவின் எழுத்தில் காணப்படும் எள்ளல் மிகுந்த நையாண்டி மிகவும் ரசிக்கத்தக்கது. தமிழில் இம்மாதிரியான ஒரு அரசியல் அங்கதத்தை, எழுத்தை காணமுடியுமா என்பது அய்யமே.


‘இராமர் - சேது’ பிரச்சினையில், பெரியாரின் பார்வை வெளிச்சத்தில் தமிழ்நாட்டுத் தலைவர்களின் கருத்துக்கள், குறிப்பாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி போன்றோரின் பேச்சு இந்தியா முழுமையிலும் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அதிரவைத்தது. (தி.மு.க. வில் உள்ள பிற தலைவர்கள் இவ்விதம் அணுகுவார்களா என்பது கேள்விக்குறியே). ராமலீலா நடத்தி இராவண வதத்தை கொண்டாடும் இந்தியாவில் இராவண காவியம் எழுதிய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. 1930களில் எழுதப்பட்ட இராமாயணத்தின் புவியியலை ஆய்வு செய்து இராமன் நர்மதைக்கு தெற்கே வரவேயில்லை என்று ஆதாரங்களுடன் நிறுவிய T.பரமசிவ அய்யரின் ‘Ramayana and Lanka’ என்ற ஆங்கில நூலை ‘அறியப்படாத அரிய நூல்கள்’ வரிசையில் அ.மார்க்ஸ் அறிமுகம் செய்கிறார்.


1990களில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி தமிழில் எழுச்சி பெற்ற தலித்திய செயல்பாடுகள், தற்போது எதிர்கொண்டு வரும் சவால்களை அ.மா.வின் கட்டுரை பேசுகிறது. பவுத்தத்தின் அறவியலும் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்றோரின் அறிவுச் செல்வமும் தலித் அரசியலின் கருத்தியல் பலமாக மாற்றப்பட வேண்டியதன் தேவையைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் அ.மா.வின் மொழி பெயர்ப்புக் கட்டுரை பெரியார் கூறியது போல் நமது நீதிமன்றங்கள் எவ்வாறு சாதி காப்பாற்றுபவையாக இருக்கின்றன என்பதை விளக்குகிறது.


தமிழக முதல்வர் மு. கருணாநிதி ஜனவரி 06, 2008-ல் தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள இலவச ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். இத்திட்டம் 11 மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 11 இலட்சம் குழந்தைகளுக்கு ரூ. 7.2 கோடி செலவில் தடுப்பூசி போடப்படுகிறது. இத்தடுப்பூசியின் பக்க விளைவுகள், யாருக்குக் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக் கூடாது, இதன் பின்னால் இருக்கும் அமெரிக்க மருந்துக் குழுமங்களின் வர்த்தக நலன், பாதிப்புகள் பற்றி மருத்துவர் வீ.புகழேந்தியின் கட்டுரை ஆராய்கிறது.


ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற ரங்கராஜனின் (சுஜாதா) மறைவு வருத்தத்திற்குரியதே. ஆனால் பார்ப்பனர்கள் அதிகமாக வருத்தமடைய நியாயங்கள் இருக்கின்றன. பார்ப்பன சங்க விருதைப் பெற்றது, மேற்படி சங்கத் தலைவரை தலைவராக ஏற்றுக்கொண்டது, பூணூல் மகிமை பற்றி கதையெழுதியது, இட ஒதுக்கீட்டின் Victim-களாக பார்ப்பனர்களை சித்தரித்தது, பார்ப்பனர்களுக்கு ஆதரவாக வரலாற்றை திரித்தது போன்றவைகளுக்காக, இரண்டாவதாக அதிக வருத்தமடைய வேண்டியவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து காசு பார்த்த மனுஷ்யபுத்திரன் போன்ற ஜீவிதங்கள்.


முடிந்த வரையில் ‘சஞ்சாரம்’ மாற்றுக்களுக்கான ஒரு தளமாக செயல்படும். பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கும்
விவாதக் களம் அமைக்கவும் ‘சஞ்சாரம்’ முயலும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக