பாதியில் முடிவுற்ற சிவப்புச் சிந்தனையாளனின் பயணம் மு.சிவகுருநாதன்
“இன்னும் 20 வருடங்கள் வாழ்ந்தால்தான் உலகப் புரட்சிகர மாற்றத்திற்கும் இந்தியப் புரட்சிக்கும் உரிய பங்களிப்பைச் செய்ய முடியும்” என்றும்,
“கன்னியாகுமரி வள்ளுவர் சிலையிலிருந்து புறப்பட்டு, சென்னை உழைப்பாளர் சிலை வரையில் இடதுசாரிகள் ஒற்றுமை குறித்த பிரச்சார நடைபயணம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.”
என்றும் தீவிர வேட்கையோடும், துடிப்போடும் செயல்பட்ட தோழர் இல. கோவிந்தசாமி (எல்.ஜி.எஸ்) இடது ஒற்றுமை, பகை முரண்பாட்டை ஒதுக்கித் தள்ளி நட்பு முரண்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தல், தமிழ் தேசியம் உள்ளிட்ட அனைத்து தரப்பையும் தோழமை சக்தியாகப் பார்த்தல் போன்றவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு இறுதி வரை செயல்பட்டவர். தத்துவார்த்த - கருத்தியல் தளங்களில் விரிவான விவாதங்கள் செய்ய வேண்டியிருப்பதை ஓயாது வலியுறுத்தினார். ‘சமரன்’, ‘செந்தாரகை’ போன்ற தத்துவார்த்த இதழ்களில் பணியாற்றியதன் விளைவாக கருத்தியல் போதாமைகள் பற்றிய புரிதலுடன் கருத்தியல் மற்றும் செயல் தளத்திற்குமான இடைவெளியை குறைக்க முயன்றவர். விஷயங்கள், பாதைகள் மூன்று மூன்றாக வருகின்றன. வலது - இடது - தீவிர இடது - இதில் நடுவாந்திரபாதை தான் முக்கியமெனச் சொல்லி அதைத் தேர்வு செய்து அதற்கான கருத்தியல் விவாதங்களை முன்னெடுத்தார்.
அறவியல் முக்கியத்துவம், கருத்தியல் பிரச்சினை, திட்ட அணுகுமுறை, செயல்திட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய நான்கு ஆவணங்களை வெளியிட்டு வெளிப்படையான விவாதத்திற்கென முன் வைத்தார். குழந்தை நலம், பெண்ணுரிமை, தலித் எழுச்சி, தொழிலாளர் - விவசாயிகள் நலன், தேசிய இன தன்னுரிமைப் போராட்டம், மதச்சார்பின்மை, சாதிய ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடியுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள், மக்கள் பண்பாட்டு இயக்கம் ஆகிய செயல் திட்டங்களின் படியான இந்திய மக்களாட்சி இயக்கத்தை (இ.ம.இ. IDM -Indian Democratic Movement) முன்னெடுக்க விரும்பினார்.
38 ஆண்டு கால இடதுசாரி இயக்க அனுபவங்களடிப்படையில் இடதுசாரி ஒற்றுமை, நேச சக்திகளின் கூட்டுறவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்தடைகிறார். மரபு சிந்தனைகளிலிருந்து ஒருபோதும் மீள முடியாதவராகவும் உள்ளார். எம்.ஜி.ஆர், வேதாத்ரி மகரிஷி, ராமகிருஷ்ண பரமகம்சர், விவேகானந்தர், கண்ணதாசன், வைரமுத்து போன்ற பலரிடம் தனக்குள்ள ஈர்ப்பு பற்றியும் எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படையாக பேசுகிறார்.
மனித நலனுக்காக போராடுபவர்கள் எந்தவித அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஒத்துப்போக வேண்டும் என்கிறார். பகைவனுக்கு அருள்வதுதான் நமது தத்துவ மரபு என அடித்துக் கூறுகிறார். எதிராளியிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருப்பதாகக் கூறுகிறார். மாவோ சியாங்கே - ஷேக்கை ‘நெகட்டிங் டீச்சர்’ என்று கூறியதை உதாரணமாகக் காட்டுகிறார். ஏ.எம்.கேயும் (ஏ.எம். கோதண்டராமன்) ஆர்.கேயும் (ஆர். குசேலர்) இல்லை என்றால் நான் இல்லை என்று தீர்மானமாக கூறும் இவர் அவர்களிடம் உள்ள குறைகளை சுட்டிக் காட்டத் தயங்குவதில்லை.
கோ. கேசவனையும், தன்னையும் ஒரே கருத்தியல் போக்குள்ளவர்களாக கணிக்கிறார். கோ. கேசவனுக்கு அடுத்தப்படியாக குணாவை சிறந்த மார்க்சிய அறிஞர் என்று புகழ்கிறார். எஸ்.என். நாகராஜன் போன்றோர் முன் வைக்கும் ‘கீழை மார்க்சியம்’ என்ற கருத்தோடு அறவியல் மார்க்சியம் சார்ந்து உடன்படுகிறார். விமர்சனத்தால் யாரும் புண்படக் கூடாது, பாதிக்கப்படக் கூடாது என்று கருதுவதனால் எதிர்மறை அம்சங்களை கணக்கில் எடுப்பதில்லை. காந்தியை நேர்மறையாக அணுக வேண்டும் என்றும், இடது சாரிகளின் காந்தி பற்றிய பார்வை குறைபாடு உடையது என்றும் கூறுகிறார்.
மரபைத் தேடுதல் என்ற ஒரு அம்சத்தில் எல்.ஜி.எஸ், எஸ்.என்.என் ஆகியோருக்கு ஒற்றுமைகள் உண்டு. ஆனால், இருவரும் தேடும் மரபுகள் வேறு வேறானது என்பதாகத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறாக மரபைத் தோண்டும் போது அல்லது தேடும்போது எல்.ஜி.எஸ் வார்த்தைகளில் சொல்வதனால் “கிணறு வெட்ட கிளம்பும் பூதங்கள்” போன்று நிறைய பூதங்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. இவற்றைக் கண்டு கொள்ளாமல் நாம் எதையும் கட்டமைக்க முடியாது. நட்பு முரண்பாட்டுக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து எதிர்மறையான கூறுகளை கணக்கில் எடுக்க மறுப்பது எல்.ஜி.எஸ்-ன் மிகப் பெரிய பலவீனமாக உள்ளது.
“கருத்தியல் வேறுபாடுகள் கிடக்கட்டும்; காரியம் ஆனால் சரி”, என்று இந்துத்துவத்துடன் சுற்றுச் சூழலியர்கள் உறவு கொண்டது பழங்கதை. இப்போது தமிழகத்தில் ஈழ ஆதரவை முன் வைத்து தமிழ் தேசியர்களும், இந்துமத அடிப்படைவாதிகளும் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ளும் கூத்து அரங்கேறி வருகிறது.
எஸ்.என்.என். தென்கலை - தமிழ்மறை - வைணவ - கைங்கர்ய மரபுடன் மாவோயிசத்தை இணைத்து அதுதான் ‘கீழை மார்க்சியம்’ என்று கட்டமைக்கிறார். எல்.ஜி.எஸ் சமணத்தை ஏற்க மறுத்தாலும் சமண நூலான திருக்குறளையும் பவுத்தத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்திய அறவியலை கட்டமைப்பு செய்கிறார்.
உழைப்பாளி வர்க்கத்திலிருந்து தோன்றியவர் என்றும் தமிழகத்தில் தனி மனித நலம் - வளம் குறித்து சிந்தித்தவர் என்றும் வேதாத்ரி மகரிஷியை நேர்மறையாக அணுகுகிறார். இதன் பின்னால் இருக்கக்கூடிய கூட்டம், அவற்றின் வர்க்க நலன், வியாபாரம் போன்றவற்றை மார்க்சியவாதி கவனம் கொள்ளாமல் இருக்க முடியாது. எல்.ஜி.எஸ். அந்த நல்வாய்ப்பை தவறவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
சிவப்புக் காளன் பற்றியும் அதை வெளிப்படுத்திய ஜப்பானியரான லிம் பற்றிய தனது கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடுகிறார். ஒரே டிராகன், ஒரே சந்தை, ஒரே நோக்கம், என்ற DXN என்ற கம்பெனி கோட்பாட்டையும் இடைத்தரகர், விளம்பரம் போன்றவை இல்லை எனவும் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை ஒரே கம்பெனிதான் கையாளும் என்பதையும் குறிப்பிடுகிறார். AMWAY என்ற அமெரிக்கக் கம்பெனியும் இவ்வாறாகவே செய்கிறது. உலகமயச் சூழலில் இவற்றை நேர்மறையாக பார்க்க முடியாது என்றே கூற வேண்டும். எல்லாவிதமான ரசாயன உரம் மற்றும் பூச்சிமருந்துகளால் உலகையே நாசமாக்கி விட்டு, இயற்கை உரத்தை மட்டும் போட்டு மூலிகைச் செடி வளர்த்து அதிலிருந்து மருந்து எடுக்கிறோம் என்று சொல்வதையெல்லாம் அப்படியே நம்பிவிட வேண்டியதில்லை. ஓய்வு - உணவுக்கட்டுப்பாடு - மருந்து என்ற வாழ்க்கை நெறி வைத்திருக்கும் எல்.ஜி.எஸ் எளிதில் நம்பி வேதாத்ரி மகரிஷி,DXN சிவப்புக் காளான், எம்.ஜி.ஆர் என்று எதில் வேண்டுமானாலும் ஐக்கியம் ஆகி விடுகிறார்.
நம்மையெல்லாம் பொறுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மரபுச் சிந்தனைகளையும் புராண - இதிகாசக் குப்பைகளையும் இடையிடையே உதாரணங்களாக அடுக்குகிறார். லிம் திசு வளர்ப்பு முறையில் சிவப்புக் காளானை உருவாக்கியதை சிவனின் நெருப்புப் பொறிகள் தெறித்து ஆறுமலர்களில் ஆறு குழந்தைகள் உருவாகி, பார்வதி தேவி அவற்றைத் தழுவ ஓருடல் ஆன முருகன் கதையுடன் ஒப்பிடுகிறார். இங்கு அவசியமான திசு வளர்ப்பினால் உண்டாகும் பக்க விளைவுகள் கண்டு கொள்ளப்படாமல் விடப்படுகின்றன.
சிவப்புக் காளான் லிம் - பிரம்மா (கண்டுபிடிப்பு) RG - காப்சூல் - சிவன் (நச்சுக்களை அகற்றுதல்) கெனோசீலியம் GL - விஷ்ணு (உடல், மனம், உயிர், பாதுகாப்பு) என்றெல்லாம் புராண ஒப்பீடு நிகழ்த்துகிறார். ஆதிசங்கரர் வெள்ளுடை தரித்த காரணத்தால் அவருடைய தொடர்ச்சியை வள்ளலாரில் காண்பதும் அவருடைய தொடர்ச்சியை வேதாத்ரி மகரிஷியிடம் காண்பதும் வித்தியாசமாக இருக்கிறதே தவிர நேர்மையான ஆய்வு முறைகளினால் அல்ல என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறாக எல்.ஜி.எஸ் பல்வேறு முரண்பாடுகளைத் தன்னுள் கொண்டவராக அவற்றை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி அதற்கான விமர்சனங்களையும், விவாதங்களையும் எதிர்கொள்ள தயாராக இருந்தார் என்பது முக்கியமான விஷயம். கருத்தியல் தளத்தில் மட்டும் செயல்படாமல் களப்போராளியாகவும் இறுதிவரை செயல்பட்டவர் என்ற பெருமை எல்.ஜி.எஸ்-க்கு உண்டு. உடல் நலிவுற்ற நிலையிலும், கருத்துச் சுதந்திர அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்றார். மார்க்சியம் புறக்கணித்த தனிமனிதன், அறவியல் சார்ந்த சிக்கல்களை பிரதானப்படுத்தவும், முழுமையற்ற ஒன்றை முழுமைப்படுத்தவும், ஆங்காங்கே உள்ள சில கூறுகளை அவை மார்க்சியத்திற்கு எதிராக இருப்பினும் முரணை பெரிதுபடுத்தாமல் ஏற்றுக் கொள்வது என்ற நிலைப்பாட்டுக்கு வர அவருக்கான நியாயங்கள் உண்டு. ஆனால், சமகாலத்தில நடக்கக் கூடிய, மொழி, சாதி, மத வெறித்தனங்கள், மரபு, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை எளிதில் வரையறுக்க முடியாத சூழல், உலக மற்றும் உள்ளூர் அளவில் ஏற்படும் மாற்றங்கள், ஜனநாயக முறைமைகளுக்கான நெருக்கடிகள், அனைத்து தளங்களிலும் நிலவும் வெற்றிடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் பகைமையை ஒழிப்பது மட்டுமே தீர்வாக இருக்க முடியாது என்றே கருத வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக