ஞாயிறு, ஜனவரி 17, 2010

உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவ சினிமாதமிழ் சினிமா வெளியாவதற்கு முன்பு மீடியாக்கள் உருவாக்கும் எண்ணற்ற புனைவுகள், கதைத்திருட்டு, நீதீமன்ற வழக்கு போன்றவைகள் மூலம் மக்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டும் விளம்பர உத்தியாகவும் உலக சினிமா, தொழில்நுட்ப அசத்தல், பொருட்செலவு போன்ற இன்னபிற விளம்பரங்களுடன் வெளிவந்திருக்கிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' (அதிக பணம் செலவழித்து எடுக்கப்படும் சினிமா சிறந்த உலக சினிமா என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது).

10 அவதாரங்கள், 2 ஆண்டுகள் தயாரிப்பு, 70 கோடி செலவு (தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் 700 கோடி செலவில் ஜாக்கிசானை வைத்து மற்றொரு உலக சினிமாவை தயாரிக்கப்போகிறாராம். தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்!) செய்து தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் 'உலகநாயகன்' என தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ளும் கமல்ஹாசன், ஷங்கர் போன்றோரின் அரைவேக்காடு அயோக்கியத்தனத்திற்கு தானும் இம்மியும் குறைந்தவனில்லை என்பதை தனது முந்தைய குருதிப்புனல், ஹேராம் போன்ற படங்கள் ஊடாகவும் இதிலும் நிரூபித்திருக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதை நடந்த சில சம்பவங்களுடன், 12 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களின் ஆதாரங்களைச் சேகரித்தும், எங்கள் கற்பனைகளைக் கலந்தும் அமைக்கப்பட்டுள்ளது" என்ற குறிப்போடு படம் தொடங்குகிறது. உலக உருண்டை வழியே உலக சினிமா உலக நாயகனின் கண்ணுக்குள் குடிபுகுகிறது. " உலகமெங்கிலும் உன்னை வென்றிட யாரு?" என்ற பாடல் ஒலிக்கிறபோது மேடையில் ஜார்ஜ் டபிள்யு புஷ் (கமலின் ஒரு அவதாரம்; பெருமாளின் ஒரு அவதாரமும் கூட,) டான்ஸே ஆடுகிறார். "இனி ஐ. நா-வும் உன்னை அழைக்கும் என்ற பைத்தியக்காரத்தனமும் வேறு. (ஐ.நா.ஆஸ்கார் விருது அளிக்கிற அமைப்பா என்ன?).


மணல் கொள்ளையன் (பி.வாசு.). "உலகத்தை ஒத்தை ஆளாக காப்பாற்ற நீ என்ன உலகநாயகனா? " என்று கேட்கும் போது வின்சென்ட் பூவராகவன் அசடு வழிய, "ஆமாம், நான் உலக நாயகன்தான்" என்று சொல்கிறார். முதல்வர் கருணாநிதி போன்ற பட்டம் விரும்பிகள் இவருக்கு இப்படத்தை அளித்து மகிழ்கிறார்கள்.


அதற்குப் பதிலாக கமல், 2004 டிசம்பர் 20-ல் தொடங்கி 26-ஆம் தேதி சுனாமியுடன் முடியும் கதையில், விஞ்ஞானி கோவிந்தராமசாமிக்கு கருணாநிதி, மன்மோகன்சிங், புஷ் சகிதம் பாராட்டுவிழாவில் இடம் அளித்து சொரிந்து கொள்கிறார். ஜெயலலிதா சுனாமியைப் பார்வையிடுகிறார். 2008-ல் 'தசாவதாரம்' கேசட் விழாவில் ஜாக்கிசானுடன் கருணாநிதி பங்கேற்றார். அதற்குப் பதிலுதவியா? இல்லை 4 ஆண்டு விஞ்ஞானிக்கு சிறைத்தண்டனையா?


"கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா எனபது பிரச்சனை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்சனை" (சாய்பாபாவுடனான விழாவில் மு. கருணாநிதி) என்ற கருணாநிதியின் பேச்சுக்கு இணையாக படத்தின் இறுதியில் வரும் வசனம் ஒன்று. "நான் கடவுள் இல்லையின்னு எங்கங்க சொன்னேன். இருந்தா நால்லாயிருக்குன்னுதான் சொன்னேன்". (வருங்காலத்தில் பேருந்துகளில் எழுதி வைக்க பொன்மொழிகள் தயார்!).

"என் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! இந்தியர்களே!! (?!) என விளித்து கோவிந்தராஜ சுவாமிகள் சாமிக்கதை சொல்கிறார். "யேசுவும், அல்லாவும் இந்தியாக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் புகாத நூற்றாண்டு, சிவனும், விஷுனுவும் மோதி விளையாடா வேறு கடவுள்கள் இல்லாத காலம். அதனால் அவ்விரு கடவுள்களும் தம் பக்தர்கள் வாயிலாக தம்முள் மோதிக்கொண்ட நூற்றாண்டு " (12 ஆம் நூற்றாண்டு) என்ற கதை சொல்லலில் வரலாற்றுப் புரட்டும் அரசியல் சார்பும் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கு இன்னொரு ஏ. பி. நாகராஜனாக கமல்ஹாசன் அவதாரம் எடுத்து விஷ்ணுவின் திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார்.

சமண - பவுத்தத்தை துடைத்தெறிந்த சைவ - வைணவக் கூட்டணி, சமண - பவுத்தர்களை வேட்டையாடிக் கொன்று குவித்த வரலாற்று உண்மைகள் கவனமாக தவிர்க்க/திரிக்கபட்டுள்ளன. சைவ - வைணவ மோதல்கள் கூட உண்மையான மோதல்கள் அல்ல. அவை சிவன் (அ) பெருமாளின் திருவிளையாடல்கள். சைவ - வைணவர்களுக்குமான உண்மையான எதிரி பின்னாளில் வந்த இஸ்லாமியர்களும், கிருத்துவர்களுமே என்பதை தொடக்கத்திலேயே அடையாளம் காட்டி அந்தத் திசையில் படம் முழுக்க பயணிக்கிறது.

"சக நிகழ்வுகளின் கோர்வைதான் உலக சரித்திரம். உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்மந்தமுடையவை" என்றும் "ஓரிடத்தில் படபடக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் பிறிதோரிடத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணமாக இருக்கக்கூடும்" என்ற காயாஸ் தியரியுடன் முடுச்சுப் போட்டு 12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் போன விஷ்ணு 2004-ல் உலகை அழிக்கும் கிருமியை அழிப்பதற்காக சுனாமியாய் வந்து உலகைக் காப்பாற்றியதாக திரைக்கதை அமைத்து காதில் பூ சுற்றி இந்துத்துவ கொடுங்கோன்மைக்கு அரியணை ஏற்றியிருக்கிறார் கமல்.

இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் சைவர்களுடன் விஷ்ணு-வுக்காக மோதிப் போராடி கடலில் விஷ்ணுவுடன் சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படுகிறான் ரங்கராஜ நம்பி. "வாய்ப்பேச்சில் வீரர்தான் வைணவர்" என்று மன்னனாலேயே பாராட்டப்பெற்று சிவமந்திரத்தை உச்சரிக்க மறுத்து வைணவ மந்திரத்தை உச்சரித்து கடலில் மூழ்கி உயிரைவிடுகிறான். "ரங்கராஜ நம்பி செத்தது சிவனும் செயலும் அல்ல. அந்த நம்பி நம்பியும் பிழைக்காமற்போனது விஷுணுவின் சூழ்ச்சியுமல்ல" என்று விளக்கமளிக்கிறார் கதை சொல்லியான விஞ்ஞானி. எல்லாம் பெருமாளின் திருவிளையாடல்! பின்பு 2004 சுனாமியாய் வெளியே வரும் வரை பல்வேறு சேஷ்டைகளில் ஈடுபடுகிறார் பெருமாள்.

ரங்கராஜ நம்பிக்கு முதல் கல்லடி ஒரு குழந்தையினுடையது. கமலுக்கு குழந்தைகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ தெரியவில்லை? குருதிப்புனலில் குழந்தைகளை அதுவும் " ஜாரே.." பாடிவரும் தேசபக்திக் குழந்தைகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்ப்பது போல காட்சி வைப்பார். " ஜாரே..." பாட்டு இங்கேயும் உண்டு. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கிருமியுடன் பெருமாள் அவதாரம் வரும் விமானம் இறங்கும் பின்னணியில் ஒலிக்கிறது இப்பாடல். என்னே! தேசப்பற்று! கூடவே மதப்பற்றும்.

"அமெரிக்க செப்டம்பர் 11 க்கு பிறகு தன்னை பயோ ஆயுத தற்காப்புக்குத் தயார்படுத்திக் கொள்கிற மும்மரத்தில் இருந்ததாம். "பாவம் - பாருங்கள்! அமெரிக்காவுக்கு வேறு வழியேயில்லை. உலகமெங்கும் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பயோ ஆயுதம் மூலமே அமெரிக்கா தன்னை தற்காத்துக் கொள்ளமுடியும் என்று கதையளக்கிறார். புஷ்-ஆல் பாராட்டப்படும் விஞ்ஞானியொருவன் இப்படித்தான் பேசமுடியும். அமெரிக்காவின் பயோ வார் ஏதோ செப்டம்பர் 11-க்கு பிறகுதான் என்று சொல்வதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது.

தஞ்சை ராமசாமி நாயக்கர் மகன் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி பயோ டெக்னாலஜியில் பி.ஹெச்.டி படித்தவர். ('ரா' அதிகாரி பல்ராம்நாயுடு பயாலஜியில் பி.ஹெச்.டி. என்கிறார்). ரங்கராஜ நம்பியின் மனைவி கோதை, நம்பி கடலில் மூழ்கியதும் தனது தாலியைக் கழற்றி வீச அது சிலையில் தொங்குகிறது. பிற்காலத்தில் அவளே ஆண்டாளாக "முகுந்தா முகுந்தா" பாடும் போது கிருஷ்ண அவதாரத்திலிருந்து கோவிந்த் இறங்கி வருகிறார். ('இருவர்' - படத்தில் மோகன்லாலின் மனைவியாகவும், காதலியாகவும் ஐஸ்வர்யா ராய் வருவார். அதுபோல இங்கு அசின்). அப்போதே கோவிந்தராஜன் - ஆண்டாள் சேர்க்கை முடிவாகிவிட்டது. (அப்போது ஒரு டூயட் வைத்து அசினின் வருத்தத்தைப் போக்கியிருக்கலாம்) பெருமாள், விவரமின்றி செத்துப்போன ரங்கராஜ நம்பிக்கு மாற்றாக மிகவும் விவரமான சூத்திர விஞ்ஞானியால் பதிலீடு செய்யப்படுகிறார்.


"ரா" அதிகாரி பல்ராம் நாயுடுவின் (இந்திரன் - சந்திரன் கமல்) தெலுங்கு பாசத்தின் வழி தமிழ்ப்பாசம் கிண்டலடிக்கப்படுகிறது. கோவிந்த் ஆங்கிலத்தில் பேச பல்ராம் நாயுடு, "தமிழ் எப்படி வாழும்?" என்று கேட்க, உங்கள மாதிரி தெலுங்குக்காரங்க யாராவது வந்து வாழ வைப்பாங்க, விடுங்க" என்கிறார். செல்போனில் தெலுங்குப் பாடல் ரிங்க்டோன். தன் உதவியாளர் தெலுங்கு என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுதல். கூரியர் ஆபீஸில் 'நரசிம்மராவ்' என்ற பெயரைக் கேட்டவுடன் தெலுங்கா? என்று கேட்டு 'கன்னடம்' என்று தெரிந்தவுடன் 'ரெண்டு லாங்க்வேஜ்க்கும் ஒரே ஸ்கிரிப்ட் தான்' என்று சமாளிக்கும் பல்ராம் நாயுடு. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? இதுவரையும் இனியும் தமிழை வாழவைக்கப் போகிறவர்கள் பிறர்தான் என்றா?

ஐ.எஸ்.ஐ. லஷ்கர் - அய். தொய்பா, அல் - கொய்தா, ஒசாமா பின்லேடன் போன்றவற்றை அடிக்கடி உச்சரிக்கும் பல்ராம் நாயுடு, சிதம்பரம் வைணவ மடத்தில் விசாரணை செய்யும் போது "மடத்தில் தப்பு நடக்காதா? என்று பொத்தாம் பொதுவாகக் கேட்டு வைப்பார். காமெடியன் இல்லாத குறையைப் போக்க கலிஃபுல்லாவை உயரமாகவும், வேற்று நாட்டு முஸ்லீம் போலவும் கேலிப் பொருளாகவும் ஆக்கி, விசாரணையில் பல்ராம்நாயுடு, "நீ என்ன, ஐ.எஸ்.ஐ. யா, லஷ்கர் அய் தொய்பா - வா, அல் கொய்தா-வா?" என்று கேட்பார். "அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார், என்றதும் "அதெல்லாம் ஒண்ணும் இல்லாம ஒரு மனுஷன் எப்படி எப்படி இருக்க முடியும்?' என்பார் நாயுடு. இங்கே ஒரு சின்ன திருத்தம், "மனுஷன்" என்பதை 'முஸ்லீம்' என்று மாற்றிக்கொள்ள வேண்டும்.

"ஏணி மாதிரி உயரமா இருக்கிறே. உன்பெயர் என்ன பின் - லேடரா?" என கலிஃபுல்லாவை கிண்டலடித்துக் கொண்டே, "எல்லோருமே டெரரிஸ்ட்தான்" எனச் சான்று வழங்கி, "200 பேரையும் (முஸ்லீம்கள்) புடிச்சு மசூதியில போட்டு கொஸ்டின் பண்ணு" என்று உத்தரவிடுகிறார் நாயுடு. அப்பாவிகளை இவ்வாறு கொடுமைப் படுத்துகிறார்களே என்று பார்வையாளர்கள் யாராவது வருத்தப்பட்டால் இறுதியில் அதற்கான காரணத்தை அறிந்து மிகவும் மகிழ்வார்கள். விசாரணைக்காக மசூதியில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லீம்கள் அனைவரும் சுனாமியில் தப்பிக்க, "நாம 200 பேரும் மசூதிக்குள் இல்லாது இருந்திருந்தால் இவங்க எல்லாரோடையும் சேர்ந்து நாமளும் மவுத்துதான். எல்லாம் அல்லாவோட கருணை" என்கிறார். இஸ்லாமியரான நாகேஷ். ஆனால் இவை நடப்பதே பெருமாளின் கருணையால்தான். கமலின் இந்துத்துவா சார்பு வெளிப்பட்டு முற்போக்குச் சாயம் வெளுக்கிறதல்லவா?

இங்கே ஒரு இடையீடு :

தமிழக சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகளிடம் அண்ணா நூற்றாண்டு பொது மன்னிப்பு அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தகுதியான கைதிகள் முஸ்லீம் என்பதால் நீதி மறுக்கப்படுகிறது. இங்கே இப்படி என்றால், இந்தியா முழுவதும் சொல்ல வேண்டியதில்லை. நிலைமை இவ்வாறிருக்க முஸ்லீம்கள், போலீஸ்/பெரும்பான்மையினர் கஸ்டடியில் இருப்பதுதான் அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பானது என்று சொல்ல வருகிறார்கள்.

வழக்கமான 'விஜயகாந்த்' பாணி தமிழ்ப் படங்களிலிருந்து, பெரிதும் சிலாகிக்கப்படும் மணிரத்தினம் படங்கள் வரை இஸ்லாமியரைத் தீவிரவாதிகளாவே காட்டும்போக்கு தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இப்படத்தில் ஃபிளேட்சர் என்ற வில்லனொருவன் இருந்தும் முஸ்லீம் காமெடியனாக சித்தரிக்கப்பட்ட போதிலும் விசாரணை, சிறை, என்கவுண்டர் என்று அனைத்து வகையிலும் அலைக்கழிக்கப்படுதல் இந்துத்துவா விடுக்கும் எச்சரிக்கையாகவே கொள்ள முடியும். வைணவ மடத்திற்குள் ஃபிளேட்சர் வருகை, அங்கு நடக்கும் அசம்பாவிதம், கொலைகள் போன்றவற்றாலும் வைணவர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தமுடியாது. ஆனால் மணல் லாரியில் விபத்துக்குள்ளாகி வில்லனால் கடத்தப்படும் அப்பாவி முஸ்லீம் குடும்பம், தீவிரவாதி முத்திரை குத்தப்படுவதையும், அதனால்தான் உயிர்பிழைத்தோம் என்று சந்தோஷிப்பதையும் படமாக்குவது கூட மோடி வகை பாசிசந்தான்.

இங்கு தலித்தின் உடலும், பெயரும் கூட கேலிப்பொருளாகிறது. படத்தில் வருகிற கபிலனின் பாடல் :

"மை போல உடம்பு இருக்க மனசெல்லாம் வெள்ளையையா அருவா மீசை வச்ச அய்யனாரு பிள்ளையய்யா"

Funny Name (வசனம் : கமலஹாசன்) என்று சிறுவனால் கிண்டலடிக்கப்படுகின்ற வின்சென்ட் பூவராகவனின் கருப்பு நிறத்தை குறிப்பிடுகிறார்கள். தலித் என்றால் இவ்வளவு கருப்பாகவும், விகாரமுமாகத்தான் இருக்க வேண்டுமா? மண்ணுக்கான போராட்டத்திலும், பூவராகவனின் இறப்புக்கும் கபிலனால் புலம்பப்படுகின்ற வைரமுத்து பாணி கவிதைகள் திராவிட இயக்கபாணியை கிண்டலடிப்பவை. அவை இங்கு தலித்தியத்தின் மீது வெறுப்பை கக்கப் பயன்படுகிறது. (இருவர் படத்தின் இறுதியில் மோகன்லால் (எம்.ஜி.ஆர்) மறைவிற்கு பிரகாஷ்ராஜ் (மு.க.) இறங்கற்கவிதை வாசிக்கும் போது திரையில் இறுதி ஊர்வலம் நடக்கும்).

மணல் மாபியாவின் ஆள் (சுந்தர்ராஜன்) பூவராகவனின் காலில் விழும்போது, அவர் தடுத்து, "வயசுக்கு மரியாதை இல்லையா? என்று கேட்க "அதெல்லாம் இந்த காலத்துல எதுக்கு தம்பி" என்று பதிலளிப்பார் சுந்தர்ராஜன். அரசியலில் அடித்தட்டு மக்கள் அடைகிற எழுச்சி பிறரால் இவ்வாறு கணிக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம். மேலும் படிக்காத மேதையாக பூவராகவன் மட்டும் இருக்க அவர்கள் கூட்டத்தில் இப்போது படிக்காதவர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. அனைவரும் படித்து பட்டங்கள் பெற்று எங்கோ உச்சத்துக்கு சென்றுவிட்டார்கள். (இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் கவனிக்க)" என்னோட படித்தவர்கள் இருபது பேர். அதுல நாலு பேர் முஸ்லீம். அவங்க மைனாரிட்டி கோட்டாவுல வேலைக்குப் போயிட்டாங்க" என்றொரு வசனம் 'கற்றது தமிழ்' படத்தில் வரும். அதைப்போலத்தான் இதுவும். மேலும் தலித்துக்கள் பணம், சாப்பாடு, மது, புகழ் ஆகியவற்றிற்கு அடிமைப்பட்டு கிடப்பவர்கள் என்று சொல்லக்கூடிய காட்சிகளும் உண்டு.

தோழர்கள் மதுவில் கட்டுண்டு கிடக்க, வெகுண்டு கிளம்பும் பூவராகவனைப் பார்த்து, 'நில்லு' அதையும் பார்த்துட்டு போ" என மணல் கொள்ளையன் (பி.வாசு) சொல்வது புதிய உத்தியாக இருக்கலாம். ஆனால் தலித்தின் மரணம் இங்கு நிச்சயக்கப்படுகிறது. "நான் மண்ணுக்காக சாவுறேன். ஆனால் உன் சாவு அசிங்கமாகத்தான் இருக்கும்" என்று பூவராகவன் சொன்னபடியே குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு சுனாமியில் உயிர்த்தியாகம் செய்கிறார். அந்த மரணத்தை "உனக்கு நல்ல சாவு" என்று சான்று தந்து அடிமை சாசனத்தை மீண்டும் நிலை நாட்டுகிறது ஒடுக்கும் வர்க்கம். மகாமக குளத்தில், தஞ்சைப் பெரியகோயில் தீயில் இறந்தாலும், நல்ல சாவுதான். சிதம்பரம் நந்தன், வடலூர் வள்ளலார் எரிக்கப்பட்டதும் கூட நல்ல சாவுதான். காக்கும் கடவுள் பெருமாளுக்கு யாரைக் காக்க வேண்டும் என்று தெரியாதா என்ன?

95 வயது கிருஷ்ணவேணி பாட்டி, (ரொம்ப வயதான அவ்வை சண்முகி) 50 ஆண்டுகளுக்கு முன்பு வக்கீலுக்குப் படிக்கச் சென்ற தன் மகன் இறந்துபோக, அது தெரியாமல் சித்த சுவாதினமின்றி, அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் பெருமாளை பூஜித்து வருபவர். சுனாமியில் இறந்த பூவராகவன் வழியே கிருஷ்ணவேணி தம் மகன் ஆராமுதனைக் கண்டடைய பெருமாள் அருள்பாலிக்கிறார். தலித்பிணம் பொது சுடு அல்லது இடுகாட்டிற்குச் செல்ல முடியாமலும், தனிச்சுடு/இடுகாட்டிற்கு கூட செல்லும் வழியில்லாத இந்த நாட்டில் பிணம் கூட தியாகத்தின் உருவாய் ஆதிக்க சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது.

வைரஸ் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் மேலதிகாரி வைரஸ் குப்பியை தீவிரவாதிகளிடம் விற்கும் அநியாயத்தை கண்டு, "நாம் என்ன செய்ய முடியும்? என்று இருக்கும் யுகா, ஃபிளேட்சரால் கொல்லப்படுகிறாள். அவளது தந்தையான ஜப்பானிய வீரர் நரஹஷி கோவிந்துவை பழிவாங்க வந்து, இறுதியில் உண்மைக் கொலையாளி ஃபிளேட்சர் என்பதை அறிந்து, சுனாமி நேரத்தில் வில்லனோடு மோதி, அவனது முடிவு கண்டு திருப்தியடைந்து திரும்புகிறார்.

ஃபிளேட்சரை தீவிரவாதி அல்லது வில்லன் என்று சொல்வது கூட அவ்வளவு சரியாக இருக்காது. ஹீரோவுக்கு இணையாக மல்லிகா ஷராவத்துடன் ரொமான்ஸ் பண்ணுகிறார். அவருக்குத் தேவை வைரஸ் குப்பி மட்டுமே. முடிந்த வரையில் மனிதாபிமான வில்லனாகவும், சாகசக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறார். பெருமாள் அருளால் குப்பி இருக்குமிடம் சிதம்பரம் என்பதைக் கூட அனாயசமாகக் கண்டடைகிறார். தன்னுடைய மொழி பெயர்ப்பாளினி (மல்லிகா ஷெராவத்) யானையால் தூக்கி வீசப்பட்டு குற்றுயிராய் இருக்க, வேறு வழியின்றி அவரை கருணைக் கொலை செய்கிறார். இவை எல்லாவற்றிற்கு மேலாக, தன் மனைவிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு குரலை இழந்தாவது உயிரோடு இருக்க எண்ணும் பஞ்சாபி பாப் பாடகர் அவ்தார் சிங்கின் தொண்டைக்குள் இருக்கும் கேன்சர் பகுதியை வெளியே எடுத்துச் சென்று, அவரை குணப்படுத்தி விடுகிறது ஃபிளேட்சரின் துப்பாக்கி குண்டு.

இறுதியாக ஃபிளேட்சர் வைரஸ் குப்பி தன் கையில் கிடைத்த பின்னும் தப்பிக்க வழியின்றி தன்னிடமுள்ள உயிரி ஆயுதத்தை பிறர் மீது பயன்படுத்த வாய்ப்பு இருந்தும் உலகைக் காக்க விஷ்ணு விஷத்தை உண்டது போல் தானும் வைரஸை உண்டு மரணமடைகிறார். உடன் கிருமியை அழிக்கவேண்டும், என்ன செய்வது? ஆரம்பத்தில் குரங்கு வைரஸை சாக்லேட் என்று நினைத்து தின்று சாக, கிருமிகளை அழிக்க டன் கணக்கில் சோடியம் குளோரைடு கொட்டப்படுகிறது. கடற்கரையில் உடனடியாக பல டன் சூயஊட க்கு எங்கே செல்வது? 12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் மூழ்கிய பெருமாள் சுனாமியைக் கொண்டு வந்து, அதன் மூலம் பல டன் சூயஊட - ஐ வெளிக்கொண்டு வந்து இந்த உலகைக் காக்கிறார். ஒரு பெரிய மரம் வேரோடு சாயும் போது சிற்சில உயிர்கள் அழியத்தான் செய்யும். (நன்றி : முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி!) அந்த மாதிரி அழிவு தான் இந்த சுனாமிச் சாவுகள். சுனாமி பிணக்குவியல்கள் இயந்திரங்கள் மூலம் புதைக்கப்பட்டு, எங்கும் மரண ஓலம் நிறைத்துக்கொண்டிருக்க எந்த பிரக்ஞையுமின்றி கோவிந்தும், ஆண்டாளும் சேரமுடியுமா - முடியாதா..., காதல், கடவுள் பற்றி விவாதம் செய்கின்றனர். கூடவே 12 ஆம் நூற்றாண்டு விஷ்ணுவும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ரங்கராஜ நம்பியின் எலும்புகளுடன் கரையேறி இருக்கிறார்.

பத்து அவதாரங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் பயன்படும் அவதாரங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று கலிஃபுல்லா; மற்றொன்று வின்சென்ட் பூவராகவன். கிருஷ்ணவேணி பாட்டியை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. சித்த சுவாதினம் இல்லாதவர் என்று கூறப்பட்டாலும் 'அவ்வை சண்முகி-யைப் போல நிறைய சாகசங்கள் செய்து வைரஸ் குப்பியை பெருமாளோடு சேர்த்து அனைவரையும் காப்பாற்றுபவர்.

பல்ராம் நாயுடுவால் 'லைட்ஹவுஸ்' என்று கிண்டலடிக்கப்படுகிற கலிஃபுல்லா கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அளவுக்கு கேலிக்குள்ளாக்கப்படுபவர் எவருமில்லை. அவர் உயரம், உடை, பேச்சு, நடை, தோற்றம் போன்ற பலவற்றாலும் கேலி செய்யப்படுகிறார். முஸ்லீம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமல் 12 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டு மக்கள் தொகையைப் பெருக்குபவர்கள் என்ற சங்பரிவாரின் சொல்லாடல் நிகழ்த்தப்படுகிறது. தலித் தலைவராக வரும் வின்சென்ட் பூவராகவனும் உடல், நடை, உடை, பேச்சு, மொழி, நிறம் போன்றவற்றால் கிண்டலடிக்கப் படுவதோடு மட்டுமல்லாது, தியாகம் செய்வதாகக் காட்டி சாகடித்தும் விடுகிறார்கள்.

படம் முழுக்க பெருமாளே மையமாக இருக்கிறார். அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். யாரைக் காக்க வேண்டும், யாரை சாகடிக்க வேண்டும் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார். காக்கும் கடவுளான விஷ்ணு எல்லாரையும் காக்காவிட்டாலும், தனக்கு வேண்டியவர்களை மட்டுமாவது காத்து அருள்புரிவார்.

மேம்பாலத்திலிருந்து கோவிந்த் ராமசாமி குதிக்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. 'ஸ்ரீராம ஜெயம்'! ரங்கராஜ நம்பியை விஷ்ணுவுடன் சேர்த்து கட்டி இழுத்துச் செல்லும் போது ஒரு பருந்து வந்து அமரும். ஃபிளேட்சர் கையில் வைரஸ் குப்பியுடன் பெருமாள் கிடைக்கும் போது ஆயிரக்கணக்கில் பருந்துகள் அணிவகுக்கின்றன. பார்ப்பனீய - இந்துத்துவா ஆதரவு அதிகரித்திருப்பதை குறியீட்டுத் தளத்தில் உணர்த்துகின்றன. மணல் மாஃபியா ஆள் (சந்தானபாரதி) ஆண்டாளின் துகிலை உரியும் போது 'நாராயணா' என்று கத்த எங்கும் ஒளி வெள்ளம். மைக் சகிதம் பூவராகவன் கூட்டமாக மண்ணைக் காக்க வருகிறார். (குடும்பத்துடன் காண வேண்டிய கற்பழிப்புக் காட்சி ; மண் - பெண் கற்பழிப்பு என்ற வியாக்கியானமும் உண்டு).

புராணக் குப்பைகளை கேள்வி கேட்டு மறு பரிசீலனை செய்யக்கூடிய படைப்புகள் தமிழில் நிறைய வெளியாகின்றன, அவ்வாறில்லாமல் புராண - இந்துத்துவ மதிப்பீடுகளை உயர்த்திப் பிடித்து, அதற்கு அறிவியல் பகுத்தறிவு முலாம்பூசிய தங்கத்தட்டில் இந்துத்துவ மலத்தை அள்ளி தமிழகத்திற்கு ஏன் உலகிற்கே வாரி வழங்கியுள்ளார் 'உலகநாயகன்' கமல்ஹாசன். திராவிட இயக்கச் சீரழிவுகளும், தமிழகத்தில் இந்துத்துவா, சங்-பரிவார் கும்பலுக்கு அடித்தளம் அமைத்தவர்களும் உண்டு, உச்சி மோந்து பாராட்டி ஒருவருக்கொருவர் சொறிந்து கொள்ளட்டும்.

இறுதியாக ஒரு குறிப்பு :


கமலின் இந்த அவதாரங்களைப் பார்த்தப் பிறகு முக்தியடையும் வாய்ப்பை சுஜாதாவுக்கு பெருமாள் அளிக்காமல் போய்விட்டார். உயிர்மை ஜூலை 2008 இதழில் விமர்சனம் எழுதியிருக்கும் நண்பர் சாரு நிவேதிதா படத்தை சரியாகப் பார்க்காதவர் போல கமல் உடனான நட்பு, காயாஸ் தியரி, உலக சினிமா பற்றியெல்லாம் எழுதிவிட்டு, இந்துத்துவா அரசியல் பற்றி தொலைக்காட்சி பேட்டியில் விளக்கவேண்டும் என்று கை ஏந்துகிறார். 105 வயது ருக்மணிப்பாட்டி என்கிறார். கலிஃபுல்லா, அவதார்சிங் ஆகிய இரண்டு அவதாரங்களும் கதைக்குச் சம்மந்தம் இல்லாதவை என்கிறார்.(கதை என்று இதில் ஒன்று உண்டா சாரு?) சாருவின் வைணவ - இந்துத்துவ சாய்வு கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

Courtesy: adhikaalai.com
30.07.2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக