வியாழன், ஜனவரி 07, 2010

முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் - உண்மை அறியும் குழு அறிக்கை.











திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டை நகரில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன் வைத்து நடைபெறும் மதக் கலவரத்தில் முஸ்லீம்களின் வீடுகள், கடைகள், தாக்கப்பட்டுவருகின்றன. மிகக் குறுகலான பள்ளிவாசல்கள் அமைந்துள்ள பகுதிகளைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்பது முஸ்லீம்களின் நீண்ட நாள் கோரிக்கை. சமூக நல்லிணத்தில் அக்கறையுள்ளள மனித உரிமை ஆர்வலர்கள் என்கிற வகையில் 1994 முதல் நாங்கள் அவ்வப்போது இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகிறோம்.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் நிகழும் என எதிர்பார்த்த முஸ்லீம் மக்கள் உயர்நீதி மன்றத்தை அணுகி மாற்றுப்பாதையில் ஊர்வலம் செல்ல ஆணையிடுமாறு வேண்டினர். நாங்கள் இதற்கு முன் அளித்த அறிக்கைகளும் நீதிமன்றம் முன் சாட்சியங்களாக வைக்கப்பட்டன. தலைமை நீதிபதி திரு. எச்.எல். கோகலே மற்றும் நீதிபதி திரு.டி. முருகேசன் அமர்ந்த முதல் பெஞ்ச் சென்ற ஆகஸ்டு 26ல் வழங்கிய தீர்ப்பில் (ரிட் எண்.17277/2009) கீழ்க்கண்ட உத்தரவுகளை நீதிமன்றம் இட்டிருந்தது.

1. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது எத்தகைய அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏற்ப மனுதாரர்கள் முன் வைத்துள்ள மாற்றுப் பாதையை செயல்படுத்துவதற்கு திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.

2. தொடர்புடைய எல்லோரையும் கூட்டி மாற்றுப்பாதையின் அவசியம் குறித்து வற்புறுத்த வேண்டும்.

3. ஒரு சிலரே பிரச்சனைகளுக்கு காரணம் இதனால் பல அப்பாவி மக்கள் பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகின்றனர். குடிமக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வருவாய் மற்றும் காவல்துறையிடம் உள்ளதால் அசம்பாவிதங்களை எதிர்காலத்தில் தடுக்கக் கூடிய எந்த ஒரு ஆலோசனையையும் அவர்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

4. மாற்றுப்பாதை ஏற்கப்பட்டால் ஊர்வலத்தின் போது எந்த வகையிலும் பிரச்சனைக்கு காரணமாகிறவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக இப்பிரச்சனையை கவனித்து வருகின்ற வகையில் இது ஒரு வரவேற்கத்தக்கத் தீர்ப்பு என கருதுகிறோம். எனினும் விநாயகர் ஊர்வலம் நடத்துவோர் இதை ஏற்க மறுத்துள்ளதாகவும், முத்துப்பேட்டையில் பதட்டம் நிலவுவதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வந்ததையொட்டி ஊர்வலத்தின் போது என்ன நடக்கிறது என்பதை அறிய கீழ்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1) பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை.

2) கோ. சுகுமாரன், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்சேரி.

3) தய். கந்தசாமி, வழக்குரைஞர், திருத்துறைப்பூண்டி.

4) மு. சிவகுருநாதன், மனித உரிமை ஆர்வலர், திருவாரூர்.

5) ம. இளங்கோ, பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி.

இக்குழு நேற்று (02.09.2009) மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை முத்துப்பேட்டையில் தங்கி நிலைமைகளை நேரில் கண்டறிந்தது. முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகக் கட்டிடத்தில் மேல்மாடியில் நின்று ஊர்வலத்தை நேரில் பார்வையிட்டது.

எமது பார்வைகளும் முடிவுகளும்

1) நீதிமன்றம் ஆணையிட்டது போல மனுதாரர்கள் முன்வைத்த மாற்றுப்பாதையை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அமுல்படுத்தவில்லை. பிரச்சினைக்குரிய பேட்டை பெரிய பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியான பட்டுக்கோட்டை சாலை வழியாக ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டது. முஸ்லீம்கள் இதை ஏற்காத போதும் நிர்வாகம் ஊர்வலத்தை அந்த வழியே செல்ல அனுமதித்தது. இது நீதிமன்ற ஆணைக்கும் அதன் நோக்கத்திற்கும் புறம்பானது.

2) பேச்சுவார்த்தைகளின் போது ஒரு கட்டத்தில் இந்து அமைப்புகள் சில மாற்றுப்பாதையை ஏற்றுக் கொண்டதாகவும், ஊர்வலத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்த போதும் கூட இந்து முன்னணி தலைவர் இராம. கோபாலன், முத்துப்பேட்டைக்கு நேரில் வந்து ஊர்வலத்தை நடத்த வற்புறுத்தியுள்ளார். ஊர்வலத்தை அவரே தொடங்கியும் வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் இதுபோன்ற பல மதக்கலவரங்களுக்கு காரணமான இராம. கோபாலனை இத்தகைய

பதற்றம் மிகுந்த சூழலில் காவல்துறை முத்துப்பேட்டைக்குள் அனுமதித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரிசா கந்தமாலில் சென்ற ஆண்டு நடைபெற்ற மதக்கலவரங்களின் போது பதற்றத்தைக் காரணம் காட்டி மத்திய உள்துறை இணை அமைச்சரையே மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காததை இக்குழு நேரில் கண்டுள்ளது. திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் இச்செயல் நேற்றைய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

3) பா.ஜ.க.வின் மாவட்ட தலைவரான கருப்பு (எ) முருகானந்தம் முத்துப்பேட்டையில் நடைபெறும் வன்முறைகளுக்கு காரணமாக உள்ளார். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னெச்சரிக்கை அடிப்படையில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் ஊர்வலம் மாற்றுப்பாதையில் செல்வதற்கும் வழிவகுக்கப்பட்டிருக்கும். ‘இம்’ என்றால் அரசியல்வாதிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கூட ஏவத் தயங்காத அரசு நிர்வாகம் கருப்பு (எ) முருகானந்தத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று பேசுவதற்கு அனுமதித்ததை நாங்கள் நேரில் கண்டோம்.

4) ஊர்வலத்தை இருட்டுவதற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நிர்பந்திக்காமல் இரவு 8 மணி வரை முஸ்லீம் தெருக்கள் வழியே ஊர்வலம் செல்வதற்கு அனுமதி அளித்தது நிர்வாகத்தின் கவனக்குறைவை வெளிப்படுத்துகிறது. பழைய பேருந்து நிலையம் அருகில் மாலை 6.05 முதல் 6.55 வரை ஊர்வலத்தினர் குழுமியிருந்து ஆர்ப்பாட்டம் செய்ததும் அனுமதிக்கப்பட்டது. “கரைப்போம் கரைப்போம் பேட்டையில் தான் கரைப்போம்” என அவர்கள் முழக்கமிட்டுக் கொண்டு நின்றனர்.

5) பேட்டை வழியாகச் செல்வதை காவல்துறையினர் தடுத்த போதிலும் ரயில்வே கேட் அருகில் ஊர்வலத்தினர் முஸ்லீம்களுக்கு எதிரான சில வன்முறையில் இறங்கியதை காவல்துறை தடுக்கவில்லை. ஊர்வலத்தில் சுமார் 500 பேர் இருந்தனர். கலவரத் தடுப்பு பயிற்சி பெற்ற காவல்துறையினர் சுமார் 400 பேர் இருந்தனர். இருந்தும் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. செக்கடிக் குளம் அருகில் ரஹ்மத் பள்ளி எதிரில் உள்ள முகமது ஜவால் ஹுசைன் என்பவரது வீட்டு கண்ணாடி சன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் பள்ளி, விருந்தினர் இல்லம், ரஹ்மத் பெண்கள் பள்ளிவாசல், முஸ்லீம்களுக்கு சொந்தமான பெஸ்ட் வாட்டர் சர்வீஸ், அப்பார்ட்மெண்ட்கள் முதலியவையும் தாக்கப்பட்டுள்ளன. இவற்றை காவல்துறையால் தடுக்க இயலவில்லை. முஸ்லீம் தரப்பில் காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

6) விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் முத்துப்பேட்டையிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. (செப்டம்பர் 01, 02, 03) மாணவர்களுக்கு மூன்று நாள் பாடஇழப்பு ஏற்பட்டுள்ளது. முத்துப்பேட்டை நகரில் நேற்றும் முழுவதும் கடைகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதி போல் காட்சியளித்தது. சுமார் 50 இலட்சம் ரூபாய் வரை வணிகம் தடைப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக அப்பகுதி மக்கள் குறிப்பாக முஸ்லீம்கள் இதையொட்டி பெருத்த பீதிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர். நோன்பு நேரத்தில் அவர்கள் நிம்மதியாக தங்கள் மதக்கடமைகளை நிறைவேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க நிலை. இதற்கு அரசு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.

7) எனினும் 15 ஆண்டு காலமாக ஊர்வலம் நடந்து வந்த பிரச்சனைக்குரிய பேட்டை பகுதி வழியே முதல் முறையாக ஊர்வலம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பெரிய அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதையும் இக்குழு பாராட்டுகிறது.

8) முத்துப்பேட்டையில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனை தங்களுக்கு தொடர்பு இல்லாதது என்பது போல் ஒதுக்கியிருப்பது வருந்தத்தக்கது. இது மறைமுகமாக கருப்பு (எ) முருகானந்தம் போன்றவர்களின் வன்முறைக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது. அரசியல் கட்சியினர் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

திருவாரூர். 03.09.2009.

தொடர்புக்கு :

அ. மார்க்ஸ்,

3/5, முதல் குறுக்குத் தெரு,

சாஸ்திரி நகர்,

அடையாறு,

சென்னை - 600 020.

செல் : 9444120582

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக