செவ்வாய், ஜூன் 11, 2013

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி - அறிக்கை

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி - அறிக்கை                                                                                                                                                                                                                                                                சென்னை
                                                                                                                                                                                                                                                               ஜூன் 09, 2013            
சென்ற ஆண்டு தமிழக அரசு 19,000 ஆசிரியப் பணியிடங்களை நிரப்பியதாகப் பெருமையுடன் அறிவித்தது. இதில் மிகப் பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக ஆசிரியத் தகுதியுள்ள சுமார் 3,00,000 பேர்களுக்கு விதிமுறைகளின்படி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியத் தகுதிச் சான்று  மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இட ஒதுக்கீடு பெறும் சுமார் 15,000 பேர் உடனடியாகப் பெற்றிருக்கக் கூடிய வேலை வாய்ப்பும் பறிபோயுள்ளது. நமது அரசியல் சட்டக் கடப்பாடு,  தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் (NCTE) விதிமுறை, நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை அப்பட்டமாக மீறி இம்மோசடி நடை பெற்றுள்ளது.

விளக்கம் :  முதலில் நாம் சில உண்மைகளை மனம் கொள்ள வேண்டும். அவை :

1.நமது அரசியல் சட்டத்தின்படி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

2. ஆசிரிய வேலை வாய்ப்பிற்கு அதற்குரிய D.T.Ed, B.Ed, M.A/ M..Sc முதலான கல்வித் தகுதிகள் தவிர NET, SET, TET முதலான தகுதித் தேர்வுகளிலும் (Eligibility Tests) வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

3. இந்தத் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான குறைந்த மதிப்பெண்களை, இட ஒதுக்கீட்டுத் தகுதியுள்ள ஒவ்வொரு பிரிவினர்க்கும் அவர்கள் பயன்பெறும் வண்ணம் தனித்தனியே நிர்ணயிக்க வேண்டும்.  இந்தக் குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கு உரிய சான்றிதழ் அளிக்க வேண்டும்.அந்தச் சான்றிதழை அவர் அடுத்த குறிப்பீட்ட சில ஆண்டுகளுக்கு வேலை கிடைக்கும் வரை பயன்படுத்தலாம். அவர் தன் மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ள விரும்பினால் அடுத்தடுத்த தேர்வுகளில் பங்கும் பெறலாம்.

4. இந்தத் தகுதித் தேர்வு ஆசிரியப் பணி நியமத்திற்கான போட்டித் தேர்வு அல்ல. வெறும் கல்வித் தகுதி அளிக்கும் தேர்வு மட்டுமே. ஆசிரிய நியமனத்திற்கான காலிப் பணியிடங்களின் அடிப்படையில் இதைச் செய்யக் கூடாது. அதாவது எவ்வளவு காலி இடங்கள் உள்ளனவோ அந்த அடிப்படையில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்களை அறிவிக்க இயலாது. எப்படி B.Sc., B.Ed என்பது போன்ற கல்வித் தகுதி எவ்வளவு காலி ஆசிரியப் பணிகள் உள்ளன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு கல்வித்தகுதி என்கிற அடிப்படையில் வெற்றி பெறும் எல்லோருக்கும் வழங்கப்படுகிறதோ அவ்வாறே தகுதித் தேர்வுச் சான்றுகளும் வழங்கப்பட வேண்டும். தகுதிச் சான்றுகள் பெற்றவர்கள் குறிப்பிட்ட காலம் வரை காலிப் பணியிடங்கள் அறிவிக்கப் படும்போதெல்லாம் அவ் வேலைக்குத் தகுதிபடைத்தவராக இருப்பர்..

5. பணி நியமனம் என்பது முறையாகத் ‘தனி அறிவிப்பு (separate notification) வெளியிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டும். இவ் அறிவிப்பில் ஒவ்வொரு பாடத்திற்குமான காலி இடங்களின் எண்ணிக்கை,  அதில் ஒவ்வொரு வகுப்புவாரிப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்ந்தெடுக்கும் முறை, (வேலை வாய்ப்புப் பதிவு மூப்பு, போட்டித் தேர்வு அல்லது வேறு ஏதேனும் முறை) ஆகியவை குறிப்பிடப்படவேண்டும். அதன் அடிப்படையில் முறையான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, பிறகு, ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குமான ‘கட் ஆஃப் மதிப்பெண் அல்லது கட் ஆஃப் பதிவுத் தேதி ஆகியன வெளியிடப்பட வேண்டும். பின் இந்த அடிப்படையிலேயே பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

6. பணி நியமனத்தின்போது, சட்டவிதிகளின்படி, முதலில் பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நிரப்ப வேண்டும், ஏனெனில் பொதுப் பிரிவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. ‘ரேங்க்’ வரிசையில் உள்ள யார் வேண்டுமானாலும் அதில் இடம் பெறலாம். அதாவது பொதுப் பிரிவு என்பது இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு (முற்பட்ட வகுப்பினர்) மட்டுமானது அல்ல. பட்டியல் மற்றும் பிற்படுத்தப் பட்டவர்க்கும், அவர்கள் உரிய மதிப்பெண்கள் பெற்றிருக்கும் பட்சத்தில் அதில் இடம் பெறலாம். இப்படி பொதுப் பிரிவு நிரப்பப்பட்ட பின்னரே பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவுகள் நிரப்பப்பட வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? : இதுவரை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதைப் பார்த்தோம். இனி சென்ற ஆண்டு தமிழக அரசின் ஆசிரியத் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் சவுத்ரி இதை எப்படி நடத்தினார் என்பதைப் பார்ப்போம்.

1.எந்த முறையான அறிவிப்பும் இன்றி ஆசிரியப் பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டது. எவ்வளவு காலிப் பணி இடங்கள் இருந்தன என்பது கடைசி வரை அறிவிக்கப்படவே இல்லை. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அரசு தரப்பில் கூறப்பட்டவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியப் பணிகளில் சுமார் 35,000 காலி இடங்கள் இருந்தன எனலாம்.  ஆனால் இறுதியில் 19,000 இடங்களே நிரப்பட்டன. இதுவும் கூட எப்படி நடந்தது? முதலில் ஒரு ’டெட்’ தேர்வு நடத்தி அதில் இந்த இரு ஆசிரியப் பணிகளுக்கும் மொத்தத்தில் சுமார் 2500 பேர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளதாக 2012 ஆகஸ்ட் 24 அன்று அறிவிக்கப்பட்டது. அதிகக் காலி இடங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி மறுபடி ஒரு டெட் தேர்வு நடத்தியபோது இம்முறை மொத்தம் 19,000 பேர் தகுதியுடையவர்களாயினர் என அறிவித்துப் பணி நியமனம் அளிக்கப்பட்டது. ‘தகுதி பெறாததால்’ இரு ஆசிரியப் பணிகளிலும்  சுமார் 17,000 காலி இடங்கள் நிரப்பப்படாமற் போயின. பட்டதாரி ஆசிரியப் பணிகளில் மாத்திரம் அரசு அறிவிப்பு ஒன்றின்படி, 19,500 காலிப் பணி இடங்கள் இருந்தன. ஆனால் நிரப்பாப்பட்டதோ வெறும் 8,718 இடங்கள்தான். தகுதி உடையவர்கள் இல்லாததால் பிற இடங்கள் நிரப்பப்படவில்லையாம். இது உண்மையா?

2.முழுப் பொய். பொய் என்பதைக் காட்டிலும் மோசடி. ஏனெனில் முன்னர் குறிப்பிட்டபடி டெட் தேர்வு என்பது பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு அல்ல. தகுதித் தேர்வு. குறிப்பிட்ட எண்ணிக்கைகளுக்கான ஒரு போட்டித் தேர்வைப் போல டெட் தேர்வை நடத்தி அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்ய இயலாது. சரி, இப்படி நடத்தப்பட்ட இந்த டெட் தேர்வும் சரியாக நடத்தப்பட்டதா?

3.இல்லை. மிகப் பெரிய மோசடி இதில் நடந்தது. தேசிய ஆசிரியக் கல்விக் கழக நெறிமுறைகளின் 9ம் விதிப்படி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிபெண்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன.  தமிழக அரசுத் தேர்வாணையம், கல்லூரி ஆசிரியர்களுக்கு நடத்தக்கூடிய தகுதித் தேர்வுகளிலும் இம்முறை கடைபிடிக்கப்படுகிறது. அதே போல அருகிலுள்ள ஆந்திர அரசு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்துகிற டெட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் பிற்படுத்தப்பட்டவர் ஆயின் 50 சதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 40 சதமும், பிறர் (அதாவது முற்பட்ட வகுப்பினர்) 60 சதமும் பெற வேண்டும் என விதித்துள்ளது. தமிழக அரசு ஏன் இந்தச் சட்டபூர்வமான நெறிமுறையை செயல்படுத்தவில்லை? நமது மாநிலத்திற்குரிய வகையில் (1) பிற்படுத்தப்பட்டோர் (2) மிகப் பிற்படுத்தப்பட்டோர் (3) தாழ்த்தப்பட்டோர் (4) ஏன் அருந்ததியர் மற்றும் ஆதரவற்றோர், விதவையர். முன்னாள் இராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தனித் தனியே தகுதி மதிப்பெண்களை அறிவித்து ஏன் தேர்வை நடத்தவில்லை?   அடிப்படையான இந்த இட ஒதுக்கீட்டுக் கடப்பாட்டைத் தமிழக அரசு இந்தத் தேர்வில் மீறியதன் விளைவு என்ன? 

4. இந்த டெட் தேர்வில் மொத்தம் 6,80,000 பேர் பங்கு கொண்டனர். இதில் தகுதி பெற்றவர்களாக சுர்ஜித் சவுத்ரி அறிவித்தது வெறும் 19,000 பேர்கள் மட்டுமே. ஆனால் தேசிய ஆசிரியப் கல்விக் கழகத்தின் இட ஒதுக்கீட்டு நெறிமுறை பின்பற்றப்பட்டிருந்தால், ஒரு கணக்கீட்டின்படி இந்தத் தேர்வில் சுமார் 3,00,000 பேர் தகுதி பெற்றிருப்பர். இவர்களால் 35,000 காலிப் பணி இடங்களும் நிரப்பப்பட்டிருக்கும். அதாவது மேலும் 17,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும். அல்லது அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அடித்தளச் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் 17,000 ஆசிரியர்கள் கிடைத்திருப்பர். அது மட்டுமா? 

5.தகுதி பெற்ற மூன்று லட்சம் பேர்களில் வேலை கிடைத்த 35,000 பேர்கள் போக எஞ்சியுள்ளோர் ஆசிரியப் பணிக்குத் தகுதி பெற்றவர்களாகத் தொடர்ந்து காலிப் பணி இடங்கள் வரும்போதெல்லாம் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்து கொண்டிருக்கலாம். இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாதால் வாய்ப்பிழந்த பல்லாயிரக்கணக்கானோரும் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் என்பதும் கவனிக்கத் தக்கது,

6.சுர்ஜித் சவுத்ரியின் மோசடி இத்தோடு முடிந்துவிடவில்லை.இத்துடன் தொடர்பில்லாத இன்னொரு ஆசிரியப் பணி நியமனத்தில் சுர்ஜித் சவுத்ரியின் கீழுள்ள த.நா ஆசிரியத் தேர்வாணையம் மேற்கொண்ட ஒரு இட ஒதுக்கீட்டு மோசடியை உயர் நீதி மன்றம் சென்ற அக்டோபர் 1, 2012 அன்று கடுமையாகக் கண்டித்தது. அந்தத் தீர்ப்பின் 27-வது பத்தியில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் இந்த நீதிமன்றத்தில், அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ‘பொதுப்பிரிவு(GT) இடங்களை முறைப்படி, எப்படி நிரப்ப வேண்டுமென இதுவரை நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் முற்றிலும் அறிந்திருக்கவில்லை என்பதும் இதுநாள் வரையிலும் அவர்கள் தேர்வு செய்து வெளியிட்டுள்ள பட்டியல்கள் அனைத்தும் தவறான முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என்பதும் தெளிவாகத் தெரிகிறது! எனவே, இதுவரை வெளியிடப்பட்டுள்ள அனைத்துப் பட்டியல்களையுமே திரும்பப்பெறுமாறு உத்தரவிடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நடந்தது இதுதான். ஒவ்வொரு பிரிவினருக்குமான கட் ஆஃப் மதிப்பெண்ணை வெளியிடாததோடு, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவர் பெயருக்கும் முன்னால் அவர்களது இட ஒதுக்கீட்டுப் பிரிவைக் குறிப்பிட்ட தேர்வாணையம், முற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் GT அதாவது பொதுப் பிரிவு எனப் பதிவு செய்திருந்தது. இப்பட்டியலின்படி இட ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்தால் முதலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களது இடங்கள் அவர்களால் நிரப்பப்படும், பொதுப் பிரிவில் இடம் பெற வாய்ப்புள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவினரையும் அவரவர் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் முடக்குவதன் மூலம் பொதுப் பிரிவு முழுமையையும் முற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் வாரி வழங்க வாய்ப்பளிக்கப்பட்டது. இது மொத்தத்தில் பிற பிரிவினர் பெறும் வாய்ப்புகளைக் குறைத்தது. தனது தவறை ஆணையம் ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஆனால், “இதுவரை வெளியிடப்பட்டுள்ள அனைத்துப் பட்டியல்களையுமே திரும்பப்பெறுமாறு” நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் நாம் இப்போது பேசிக் கொண்டுள்ள டெட் தேர்வில் முதலில் வெளியிடப்பட்ட (ஆகஸ்ட் 24, 2012) பட்டியலை தேர்வு ஆணையம் ரத்து செய்து திருத்தவில்லை. அது மட்டுமா?

7.நியமிக்கப்பட்ட 19,000 ஆசிரியப் பணிகளிலும் திரும்பவும் நீதிமன்றக் கண்டனத்தையும் மீறி    மறுபடியும் பொதுப் பிரிவை இறுதியாகப் பூர்த்தி செய்து, அதன் மூலம் பொதுப் பிரிவின் அனைத்து இடங்களையும் முற்பட்ட சாதியினருக்கு ஆணையம் தாரை வார்த்துள்ளது. தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய வேலை எண்ணிக்கைகளைக் குறைத்தது. 


எமது பார்வைகளும் கோரிக்கைகளும்
  1. சமீபத்தில் தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் (TANSCHE) சார்பாக இனி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளில் ஆங்கில மீடியத்தில் படிப்பவர்கள் assignment, thesis ஆகியவற்றை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பரவலாக எதிர்ப்பு எழுந்த பின் தமிழக அரசு அதைத் திரும்பப பெற்றுக்கொண்டது. உயர் கல்வி மன்றத் துணைத் தலைவராக இருந்த சிந்தியா பாண்டியன் பதவி விலகினார். ஆனால் இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து அரசு மௌனம் காப்பதைப் பார்க்கும்போது இந்த இட ஒதுக்கீட்டு மோசடி அரசின் மேல்மட்ட ஒப்புதலுடனேயே நடந்துள்ளதாகத் தெரிகிறது. இது ஆகக் கீழான அடித்தள மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை  மிகவும் தந்திரமாகப் பறிக்கும் செயல். இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அரசு இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். நீதிமன்ற ஆணைகளை அவமதித்ததோடு, அடிப்படை விதிகளையும் மீறிய தேர்வாணையத் தலைவர் சுர்ஜித் சவுத்ரி தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இக் குற்றங்களுக்காக  விசாரித்துத் தண்டிக்கப்பட வேண்டும்.
  2. சென்ற ஆண்டு நியமனம் செய்யப்பட்ட 19,000 பணிகளையும் உடனடியாக ரத்து செய்து ஆணையிட வேண்டும்.,தேர்வுத் தகுதி மதிப்பெண்களைப் பிரிவு வாரியாக நிர்ணயித்து அந்த அடிப்படையில் டெட் தேர்வு முடிவுப் பட்டியலை புதிதாக வெளியிட்டுச் சான்றிதழ்களையும் வெளியிட வேண்டும். காலியாக உள்ள அனைத்து ஆசிரியப் பணியிடங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு முறையான அறிவிக்கை வெளியிட வெண்டும். பின்னர் கட் ஆஃப் மதிப்பெண் அல்லது கட் ஆஃப் பதிவுத் தேதி ஆகியவற்றை முறைப்படி தனியாக வெளியிட்டு காலியாகவுள்ள சுமார் 35,000 ஆசிரியப் பணி இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். முந்தைய பணி நியமனத்தை ரத்து செய்வதால் அப்படிப் பணியமர்த்தப்பட்டவர்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் 19,000 பேரில் முறையற்றுப் பணி நியமனம் பெற்றுள்ள சில முற்படுத்தப்பட்ட சாதியினர் ,மட்டுமே பாதிக்கப்படுவர். மாறாக மேலும் 17,000 பேருக்கு ஆசிரியப் பணி உடனடியாகக் கிடைக்கும்.
  3. அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நீதிமன்றம் தன்னிச்சையாக (suo moto) இதைக் கவனத்தில் ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வெறும் இட ஒதுக்கீடு மோசடி மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும் கூட என்பது குறிப்பிடத் தக்கது.
  4. தமிழகத்திற்கு ஒரு நீண்ட இட ஒதுக்கீட்டுப் பாரம்பரியம் உண்டு. அப்படியும் கூட இந்த இட ஒதுக்கீட்டு மோசடி இதுவரை பரவலான கவனத்தை ஈர்க்காதது வருந்தத்தக்கது. இட ஒதுக்கீட்டில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு போராட வேண்டும்..

பேரா. அ.மார்க்ஸ், முன்னாள் இயற்பியல் பேராசிரியர், சென்னை, செல்: 94441 20582
பேரா. முனைவர் ப.சிவகுமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை, செல்: 95511 22884
பேரா, மு, திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை, செல்: 98401 80048
வழக்குரைஞர் ரஜினி, மதுரை, 944329 4892

தொடர்பு: தங்கத் தமிழ் வேலன், தமிழ்நாடு மக்கள் கட்சி, 4/29,புதுத் தெரு, கண்ணம்மாப்பேட்டை, தி.நகர், சென்னை – 17, செல்: 99529 30165

நன்றி: அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக