ஞாயிறு, மே 17, 2015

காஞ்சீபுரம் புரிசை கிராமத்தில் தலித் இளைஞர்கள் மீது வன்கொடுமை - உண்மை அறியும் குழு அறிக்கை

காஞ்சீபுரம் புரிசை கிராமத்தில் தலித் இளைஞர்கள் மீது வன்கொடுமை - உண்மை அறியும் குழு அறிக்கை


சென்னை, மே,15 2015  

    காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம்வட்டத்தில் உள்ளது புரிசை கிராமம். இதில் 630 குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலோர்வன்னியர்கள். உடையார் முதலான பிற சாதியினரும் இங்குள்ளர் எனினும் இவர்கள் எண்ணிக்கையில்மிகச் சிறியர். இங்குள்ள கீழ்க் காலனியில் சுமார் 50 தலித் குடும்பங்கள். வசிக்கின்றன.விவசாயம் மற்றும் கட்டிட  வேலைகள், வாகனங்கள்ஓட்டுதல் முதலான பணிகளை இவர்கள் செய்கின்றனர். தமிழகத்தின் வழக்கமான சேரிப் பகுதிகளைப்போலன்றி ஓரளவு சுமாரான கான்க்ரீட் வீடுகள் நிரம்பியதாகக் கீழ்க் காலனி அமைந்துள்ளது.நான்கைந்து குடும்பங்களுக்கு சிறிய அளவில் நிலம் உள்ளது. மூவர் பட்டப் படிப்புகள் படித்துள்ளனர்.இங்கு காலங் காலமாகப் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை இருந்து வருகிறது. காலனியைச் சேர்ந்தஇளைஞர்கள் ஓரளவு படித்தவர்களாகவும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் உருவாகியுள்ளதால்தீண்டாமை நடவடிக்கைகளுக்குப் பழைய தலைமுறைகளைப்போல அவ்வளவு எளிதாகப் பணிந்து போகிறவர்களாகஇந்தப் புதிய தலைமுறை இல்லை. எனவே தீண்டாமைக் கொடுமைகளை அவர்கள் அவ்வப்போது எதிர்க்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனினும் இது குறித்துப் புகார்கள் பல கொடுக்கப்பட்டிருந்தும்இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

   இந்தப் பின்னணியில் சென்ற பிப்ரவரி 28 அன்று புரிசையில் நான்குதலித் இளைஞர்கள் கட்டி வைத்துச் செருப்பால் அடிக்கப்பட்ட செய்தி வெளிவந்தது. அடுத்த18 நாட்கள் வரை குற்றவாளிகள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு அவர்கள்யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்களே கைது செய்யப்பட்டசெய்தி அதிர்ச்சி அளித்தது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடிதம் கொடுத்துவம்பு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

   மேற் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது..

உறுப்பினர்கள்

1.   பேரா.அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
2.   வழக்குரைஞர்ரஜினிகாந்த்,  உயர்நீதிமன்றம், சென்னை,
3.   வழக்குரைஞர்தமிழினியன், உயர்நீதிமன்றம், சென்னை,
4.   வழக்குரைஞர்மனோகரன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு வழக்குரைஞர் சங்கம்,, சென்னை,
5.   கவிஞர்யாக்கன், சென்னை,
6.   பிரின்ஸ்கஜேந்திரபாபு, கல்வியாளர், சென்னை,
7.   வழக்குரைஞர்இளையராஜா, வேதாரண்யம்,
8.   வழக்குரைஞர்ஏழுமலை, தமிழ்நாடு முற்போக்கு வழக்குரைஞர் சங்கம், சென்னை,
9.   வழக்குரைஞர்அசந்தாமணி, தமிழ்நாடு முற்போக்கு வழக்குரைஞர் சங்கம், சென்னை,
10.  வழக்குரைஞர்அசோக்குமார், தமிழ்நாடு முற்போக்கு வழக்குரைஞர் சங்கம், சென்னை,

    இக்குழுவினர் சென்ற மே 14 அன்று புரிசைக் கிராமமம் கீழ்க் காலனியைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட நான்கு இளஞர்கள் உள்ளிட்ட தலித் மக்களையும், புரிசை கிராமத்தைச்சேர்ந்த தன் மகள் துன்புறுத்தப்பட்டதாகப் புகார் அளித்துள்ள குடும்பத்தினர் உள்ளிட்டபிற வன்னியர் சமூகத்தினரையும், வழக்கை விசாரிக்கும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாரதிமற்றும் துணைக் கண்காணிப்பாளர் பி.பாலசுப்பிரமணியம் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப்பேசினர்.

பிப்ரவரி28 நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட நான்கு இளைஞர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்உள்ளிட்ட தலித் மக்கள் கூறுவது:

    கீழ்க் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் அலெக்சான்டர் (17), கோபால்மகன் பிரசாந்த் (17) ஆகிய +2 படித்துக் கொண்டுள்ள இரு தலித் மாணவர்கள் சென்ற பிப்ரவரி28 மாலை 6.30 லிருந்து 7 மணிக்குள் வன்னியர்கள் பகுதியில் உள்ள ஒரு கடைக்குத் தங்கள்செல்போனை ரீ சார்ஜ் செய்யவும் செராக்ஸ் எடுக்கவும் சென்றனர். உடனடியாக அதைச் செய்துதராமல் கால தாமதம் செய்யவே சற்று சந்தேகத்துடன் அவர்கள் புறப்பட முனைந்தபோது நீண்டநேரம் அவர்கள் திரும்பி வராததைக் கண்ட பிரசாந்தின் அண்ணன் குமரேசன் போன் செய்துள்ளார்.அவரிடம் பேசிவிட்டு போனை நிறுத்தியபோது அங்கு வந்த ஆனந்தன், ராஜதுரை, யோகா, பூவரசன்,ஜீவகாந்தன், கிரி, நவீன்குமார், அசோகன், மனோகரன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட வன்னியஇளைஞர்கள், “யார்கிட்டடா பேசுனீங்க?” எனக் கூறி செல் போனைப் பிடுங்கிக் கொண்டு அவர்களைஅடித்து அங்குள்ள ஒரு ‘க்ரவுண்டு’க்கு அழைத்துச் சென்று முட்டி போடச் சொல்லி அடித்துள்ளனர்.பின்னர் அருகில் இருந்த மின் கம்பத்திற்கு இட்டுச் சென்று அதில் கட்டிப் போட்டு அடித்துள்ளனர்.இதற்கிடையில் மணி மகன் கோவேந்தன் (24) மற்றும் தசரதன் மகன் சரவணன் என்னும் இரு தலித்இளைஞர்கள் இதைக் கேள்விப்பட்டு பிரசாந்த், அலெக்ஸ் இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.அடித்துக் கொண்டிருந்தவர்கள் போனை எடுத்து, பிரசாந்திடம் கொடுத்து அழைத்தவர்களிடம்பேசுமாறும். அவர்களை அங்கே கூப்பிடுமாறும் கூறியுள்ளனர். அவர்கள் அழுது கொண்டே தாங்கள்அடிக்கப்படுவதைச் சொன்னபின் கோவெந்தனும் தசரதனும் அங்கு ஓடினர். உடையார் தெருவில் உள்ளஒரு மின் கம்பத்தில் அலெக்சான்டர், பிரசாந்த் இருவரையும் கட்டி வைத்துச் செருப்பாலடித்துக்கொண்டிருந்ததைக் கண்டனர். கேட்க வந்த இந்த இருவரும் அவர்களோடு மின் கம்பத்தில் வைத்துசெருப்பால் அடிக்கப்பட்டனர்.. சுமார் 20க்கும் மேற்பட்ட கும்பல் இந்தத் 

    தாக்குதலை நடத்தியுள்ளது.சுற்றிலும் ஆண்களும் பெண்களுமாய் நூற்றுக்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர். தாக்கியவர்கள் அனைவரும் புரிசையைச் சேர்ந்த வன்னிய சாதியினர்.தாக்கிய கும்பலில், திருஞான சம்பந்தம், வேலு, ரங்கன், சுரேஷ், ராஜேஷ், கமலஹாசன், சிவதாஸ்,பாஸ்கர் மனோகரன் ரவி, முருகவேல், சேட், உமாபதி, சேகர், சரவணன், ஜீவானந்தம், கிரி, ஆனந்தன்மற்றும் வடவாண்டைத் தெருவைச் சேர்ந்த குமார், பார்த்திபன், துளகாபுரத்தைச் சேர்ந்தவிக்கி, மகேஷ், பிரகாஷ் ஆகியோரை அடிபட்ட இளைஞர்கள் இப்போது அடையாளம் காட்டுகின்றனர்.சுமார் இரண்டு மணி நேரம் அவர்கள் இவ்வாறு கட்டி வைத்து அடிக்கப்பட்டதாகக் கூறினர்.இடையில் வந்த முத்து, ஜெயராமன், அவர் மகன் ஜெயகாந்தன் ஆகிய மூவர் மட்டும் இவர்களை அடிக்கவேண்டாம் எனத் தங்கள் சாதிக்காரர்களை வேண்டிக் கொண்டனர்.

     செருப்பால் அடித்ததோடு, மிகக் கேவலமாக அவர்களின் சாதியைச் சொல்லித்திட்டியும் அவமானப் படுத்தியுள்ளனர். தங்கள் பிள்ளைகள் இவ்வாறு அடிபடுவதைக் கண்டு ஓடிவந்து கதறிய பெற்றோர்களும் அசிங்கமாகத் திட்டித் தாக்கப்பட்டுள்ளனர். அலெக்சான்டரின்தாய் மதனா, பிரசாந்தின் தாய் மஞ்சுளா ஆகியோரும் அடிக்கப்பட்டதோடு அவர்களின் உடைகளும்கிழிக்கப்பட்டதாகக் கூறினர்.

      சுமார் 10.30 மணி வாக்கில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாரதி,மற்றும் சில காவலர்கள் அங்கு வந்தனர். ஆய்வாளர் சாரதி இப்படிக் கட்டி வைத்துச் செருப்பால் அடித்த யாரையும்கைது செய்யாமல், ஊர்த் தலைவர் திருஞானசம்பந்தத்திடம் சிறிது நேரம் தனியாகப் பேசியபின்,கட்டி வைக்கப்பட்டிருந்த நால்வரும் கட்டவிழ்க்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். புறப்படும்போது உதவி ஆய்வாளர் கண்ணன் அங்கு வந்துள்ளார். காவல்நிலையத்தில் நால்வரையும் லாக்கப்பில் அடைத்துள்ளனர். அடிபட்டிருந்த நால்வரும் கெஞ்சியும்கூட மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படவில்லை. பக்கத்துக் கடையிலிருந்து மாத்திரைகள்வாங்கி வந்து தந்துள்ளதோடு நிறுத்திக் கொண்டனர்.

    தலித் இளைஞர்களை அடித்தவர்கள் மீது புகார் கொடுக்கவந்த அவர்களின்பெற்றோர்களிடம் புகார்களைப் பெற மறுத்ததோடு, ஆய்வாளர் சாரதியும் உதவி ஆய்வாளர் கண்ணனும்அவர்களைத் தரக்குறைவாக இழித்துப் பேசியதாகவும் கூறினர். விடிந்தவுடன் அடிபட்ட நால்வர் மீதும் புரிசை கிராமம் பிராமணர்தெருவில் வசிக்கும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் 14 வயது மகள் கீதாவைத் துன்புறுத்தியதாக (haraasment of  women) ஒரு வழக்குப் பதிவு செய்து, இவர்களைக் கட்டாயமாகக்கையெழுத்திடச் சொல்லி மாலை 3 மணி வாக்கில் நீதிமன்றத்தில் நிறுத்தி கோவேந்தன், சரவணன்ஆகிய இருவரையும் வேலூர் மத்திய சிறையில் ரிமான்ட் செய்தனர்.

      அடுத்த இரண்டு வாரம் வரைக்கும் எவ்வளவு வற்புறுத்தியும் இவ்வாறுகட்டி வைத்துச் செருப்பால் அடித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் போட மறுத்துவந்தனர்.

    தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் முன்னணி முதலான அமைப்புகள்இதற்கு எதிராக ஆர்பாட்டங்களச் செய்த பின் சென்ற மார்ச் 16 அன்று தாக்கியவர்களில் சிலர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

     அடிக்கப்பட்ட நால்வரையும் நாங்கள் விசாரித்தபோது அவர்கள் தாங்கள்கீதா என்ற பெண்ணைப் பார்த்ததே இல்லை எனவும் அந்தப் பெண்ணைத் தாங்கள் துன்புறுத்தியதாகக்கொடுத்துள்ள புகார் முற்றிலும் பொய் எனவும் கூறினர். கீழ்க் காலனியில் எத்தனையோ தலித்இளைஞர்கள் உள்ளபோது உங்கள் நால்வரை மட்டும் ஏன் இவ்வாறு குறி வைத்துத் தாக்கிப் புகாரும்கொடுத்துள்ளனர் என நாங்கள் கேட்டபோது முன்னதாக நடந்த சில சம்பவங்களை அவர்கள் கூறினர்.

    1.பரந்தூரிலுள்ள பள்ளிக்குப் பஸ்சில் செல்லும்போது வன்னிய மாணவர்கள்தாங்கள் சார்ந்த சாதி அமைப்புப் பாடல்களைச் செல்போனில் ஒலித்துச் செல்வர். அடிபட்டவர்களில்ஒருவரான அலெக்சான்டர் அம்பேத்கரைப் போற்றிய சில பாடல்களை இவ்வாறு ஒலித்தபோது வன்னியஇளைஞர்கள் அதை எதிர்த்துள்ளனர். அலெக்ஸ், பிரசாந்த் ஆகியோர் அதற்குப் பணியவில்லை.2. நால்வரும் கட்டி வைத்து அடிக்கப்பட்டத்ற்குச் சுமார் ஒரு வாரம் முன் நடந்த ஒரு சம்பவம்:மேல்காலனியைச் சேர்ந்த சந்திரலேகா (பி.காம் 2ம் ஆண்டு) எனும் தலித் மாணவி கல்லூரியிலிருந்துபேருந்தில் திரும்பி வந்து இறங்கும்போது துளசாபுரத்தைச் சேர்ந்த வன்னிய இளைஞன் விக்கிஎன்கிற விக்னேஷ், அப் பெண்ணின் காலைத் தடுக்கியுள்ளார். விழாமல் சமாளித்து வந்த அந்தப்பெண் இதைத் தன் உறவினர்களிடம் கூறியுள்ளார். அடுத்த நாள் பஸ் வரும் நேரத்தில், தற்போதுகட்டிவைத்து அடிக்கப்பட்ட இளஞர்களும் அவர்களில் ஒருவரான கோவேந்தனின் தந்தை மணியும்பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.  அன்றும்அந்த விக்கி இவ்வாறு செய்ய முயற்சிப்பதைக் கண்ட இவர்கள் அவரைப் பிடித்து எச்சரித்துஅடித்தும் உள்ளனர். இப்போது இந்த நால்வரையும் கட்டி வைத்துத் தாக்கியதில் இந்த விக்கிமுக்கியமானவர்.  இந்த விவகாரங்களில் கோவேந்தன், அலெக்சான்டர்,பிரசாந்த், சரவணன் ஆகியோர் முன்நின்றதால் அவர்களைப் பழி வாங்கும் முகமாகவே கட்டி வைத்துஅடித்துப் பெண் ஒருவரைத் தொல்லை செய்ததாக வழக்கும் தொடுத்துள்ளனர் என பாதிக்கப்பட்டதலித் இளைஞர்கள் கூறுகின்றனர்.

     தாக்கியவர்களுக்கு இவர்கள் மீது வன்மம் இருந்தது என்பதற்குச் சான்றாக இன்னொரு சம்பவத்தையும் தலித் மக்கள்சுட்டிக் காட்டினர். அடித்த சம்பவத்திற்குப் பிறகு சென்ற ஏப்ரல் 3ம் தேதியன்று கட்டிவைத்து அடிக்கப்பட்டவர்களில் ஒருவரான கோவேந்தனின் அண்ணன் கோபியின் திருமணம் நடந்துள்ளது,திருமணத்திற்காக வைக்கப்பட்ட ஃப்லெக்ஸ் போர்டில் தாக்கப்பட்ட நான்கு தலித் இளைஞர்களின்படங்களும் இருந்தன. இந்த போர்டைக் கிழித்ததோடு அதில் இருந்த இந்த நால்வரின் படங்களையும்தலையை வெட்டுவது போலக் கிழித்துள்ளனர். இதற்கு எதிராக வன்னிய சமூகத்தினர் மீது கோவேந்தனின்தந்தை மணி   ஒரு புகாரும் கொடுத்துள்ளார்..

வன்னியர்கள்தரப்பில் சொன்னவை

   புரிசை கிராமப் பஞ்சாயத்துத் தலைவி லோகநாயகி என்பவரை வீட்டில்சென்று சந்தித்தோம். தன் கணவர் வீட்டில் இல்லை எனவும், தனக்கு எதுவும் தெரியாது எனவும்அவர் கூறினார். வேறு யாராவது பெரியவர்கள் இந்தப் பிரச்சினை குறித்துச் சொல்வார்களாஎனக் கேட்டபோது முன்னாள் கவுன்சிலர் செல்வத்திடம் கேளுங்கள் என்றார்.

    உடையார் தெரு ஆலமரத்தடிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில்தான்நால்வரும் கட்டி வைத்து அடிக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்திற்கு நாங்கள் சென்ற போது அங்குசிலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர், சடகோபன் (63) என்கிற பெரியவரிடம், “இந்தமரத்தில்தான் கட்டி அடித்தார்களா?” என நாங்கள் கேட்டபோது, “ஆம்” என அவர் ஒத்துக் கொண்டார்.“நீங்களே சொல்லுங்க சார் ஒரு பொம்புளைப் புள்ளைகிட்ட போய் மிரட்டுறானுங்க. மூஞ்சிலதுணியைக் கட்டிட்டுப் போயி கண்ணுல பவுடர் தூவுறானுங்க. அசிங்கமா லெட்டர் குடுக்குறானுங்க.உங்க வீட்டுப் பொண்ணா இருந்தா விட்டிடுவீங்களா, கேக்க மாட்டீங்களா? ஏதோ அன்னைக்கு அந்தப்பசங்க எங்கப் பயக கையில அகப்பட்ட உடனே கொஞ்சம் அடிச்சுட்டாங்க. இது ஒரு பொம்புளப் புள்ளகிட்டதகராறு பண்ண விஷயம். இப்ப இதை சாதிப் பிரச்சினையா ஆக்குறாங்க” என்றார். அந்தப் பெண்ணிடம்வம்பு செய்தவர்கள் யார் என உறுதியாகத் தெரியாது எனவும், அந்த நான்கு தலித் இளைஞர்களும்சந்தேகத்திற்கிடமாக அன்று மாட்டிக் கொண்டதால் அடிக்க நேர்ந்தது எனவும் கூறினார். புறப்படுமுன்மீண்டும் கேட்ட போது கட்டியெல்லாம் அடிக்கல. இந்த இடத்தில வச்சு விசாரிச்சாங்க என்றார்.

     முன்னாள் கவுன்சிலர் செல்வத்திடம் (67) கேட்டபோது தங்கள் ஊரில்சாதிப் பிரச்சினையே இல்லை எனவும் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும் இடையில் அந்தப்பெண்ணுக்குக் கடிதம் கொடுத்ததுதான் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது என்றும் கூறினார், கடிதம்கொடுத்தது யார் என யாருக்குமே தெரியாது என அவர் உறுதியாகக் கூறினார்.

     இந்த நால்வர் மீதும் தன் பெண்ணிடம் வம்பு செய்ததாகப் புகார்கொடுத்துள்ள ஏகாம்பரம் மகன் வேங்கடேசன், அவரது மனைவி ராணி, மகள் கீதா மற்றும் வெங்கடேசனின்சகோதரர் ஆகியோரை வெங்கடேசனின் இல்லத்தில் சந்தித்து விரிவாகப் பேசினோம். முதலில் பேசத்தயங்கிய வெங்கடேசன் பின் யாரிடமோ தொலை பேசியில் பேசிவிட்டு வந்து தன் மனைவியை அழைத்துநடந்ததைக் கூறச் சொன்னார். அவர் சொன்னது:

    “எங்களுக்கு மூன்று பெண்கள். ஆண் பிள்ளை கிடையாது. மூணாவது மகள்கீதா 9 வது படிக்கிறா. போன மாசம் கிருத்திகை அன்னிக்கு (பிப் 20) காலையில 9 மணிக்குஎன் மகள் கீதா பக்கத்தில் இருக்கிற ஸ்கூலுக்கு வீட்லருந்து குறுக்குப் பாதையில போனா.எங்க வீட்டுக்காரர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர். பள்ளிக்கூடச் சாவி எங்க வீட்லதான்இருக்கும். காலையில சீக்க்கிரமா எங்க சின்னப் பொண்ணுதான் சாவியைக் கொண்டு போவா. அன்னிக்குகுறுக்குப் பாதையில் யாரோ மூணு பேர் பல்சார் பைக்கில வந்து எங்க பொண்ணு கண்ணுல ஏதோபவுடர் தூவி இருக்காங்க. கையைப் பிடிச்சு கீறி இருக்காங்க, அப்புறம் ஓடிட்டாங்க. எங்கபொண்ணு வந்து அழுதா. இனி பள்ளிக்கூடம் போக முடியாதுன்னா. அடுத்த நாள் போகல. அப்புறம்சமாதானப் படுத்தி மூணாவது நாள் ஸ்கூலுக்கு அனுப்பி வச்சோம். அன்னிக்கு இடை வேளையில்11.30மணிக்கு அதே பசங்க பைக்கில வந்து, “கீது, செல்லக்குட்டி, ஏன் நேத்து ஸ்கூலுக்கு வரலே”அப்டீனு ஏதோ பேசிட்டு ஒரு லெட்டரையும் குடுத்துட்டு ஓடிட்டாங்க. எங்க பொண்ணு மறுபடியும்அழுதா. நாங்க சமாதானப் படுத்துனோம். அடுத்த நாள் காலையில வீட்டைத் திறந்தா வாசல்ல ஒருலெட்டர். காத்துல பறக்காம மேலே ஒரு கல்லு. அதுலேயும் அசிங்கமா என்னென்னவோ எழுதி இருந்துச்சு.அப்புறந்தான் நாங்க தலைவர்கிட்ட எல்லாம் சொல்லி இது யார்னு தேட ஆரம்பிச்சோம். இந்தஅடிச்ச சம்பவம் நடந்த அன்னிக்கு எங்க பொண்ணு சாயந்தரம் டியூஷன் போற போது  இந்தப் பசங்களை அந்த செல்போன் கடையில பாத்துட்டுஎங்களுக்குச் சொன்னா”.

    டியூஷன் முடிந்து வரும்போது இந்த நால்வரும் வந்து அந்தப் பெண்ணைமறித்து வம்பு செய்து மிரட்டி கன்னத்தில் அடித்ததாகவும், அதைத் தொடர்ந்து அவ்வூர் இளைஞர்கள்அந்த நால்வரையும் பிடித்துவிட்டதாகவும், அவர்கள் நால்வரும் தப்பி ஓடிவிட்டதாகவும் பெயர்களைக்குறிப்பிட்டு வெங்கடேசன் புகார் அளித்துள்ளார்.

  சிறுமி கீதாவை அழைத்து நாங்கள் கேட்டபோது கையை நீட்டி ஆறிப்போயிருந்தஇலேசான ஒரு கீறல் தழும்பைக் காட்டினாள். கடிதம் கொடுத்தது எல்லாவற்றையும் சொன்னாள்.பைக்கில் வந்து தம்மைக் காயப்படுத்தியவர்கள் முகத்தில் துணி கட்டி இருந்ததால் தனக்குஅடையாளம் தெரியவில்லை என்றாள். இந்த நால்வரையும் உனக்கு முன்னர் தெரியுமா என்றபோதுமாணவர்கள் இருவரை மட்டும் பள்ளியில் பார்த்திருப்பதாகச் சொன்னதோடு பெயர்களையும் குறிப்பிட்டாள்.தாக்கியவர்களைத்தான் தெரியாது என்றாயே எனக் கேட்டபோது அவங்களைத் தெரியாது, இவங்க தாக்கியவுங்ககூட வந்தாங்க என்றாள். இவ்வளவு நடந்துள்ளது, பைக்கில் வந்து ஏதோ பவுடரைத் தூவிக் காயப்படுத்தியுள்ளார்கள், உடனடியாக நீங்கள் என் போலீசில் புகார் கொடுக்கவில்லை என நாங்கள்கேட்டபோது “பெண்ணாக இருப்பதால் ஏதாவது கசமுசா ஆகிவிடக் கூடாது” என்றுதான் தாங்கள் இதைபோலீஸ் அளவுக்குக் கொண்டு போகாமல் ஊர்த் தலைவரிடம் மட்டுமே தெரிவித்ததாகச் சொன்னார்கள்.

  அந்தச் சிறுமியிடம் தைரியமாக இருக்க வேண்டும், இதற்காகவெல்லாம்பள்ளிக்குப் போக மாட்டேன் எனச் சொல்லக் கூடாது. 
இந்தச் சம்பவத்தை மறந்து விட்டு நல்லாப்படிக்கணும்” எனச் சொல்லி அகன்றோம்.

   ஊர்த் தலைவர் திருஞானசம்பந்தத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தான் 15 வருடமாகத் தலைவராக இருப்பதாகவும் ஊரில் சாதிப் பிரச்சினையே கிடையாதுஎனவும் சாதித்தார். “கட்டி வச்சு அடிச்சதுங்கிறதெல்லாம் பொய்யிங்க. அடிச்சிட்டாங்க.அது பெரிய தப்புத்தான். நான் அப்ப ஊர்ல இல்ல. கடைசியாத்தான் தெரியும். முதல்லேயே இருந்திருந்தாதடுத்திருப்பேன். போன ஊர்த் திருவிழாவுல கூட அந்தப் பயலுக தகராறு பண்ணாங்க. அப்ப நானேஅவங்க தெருவுக்குப் போயி அவன்களைக் கூப்பிட்டு, ‘என்னடா, திருவிழாவுக்கு வெளியூர்லருந்தெல்லாம்வருவாங்க. நாம அவங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும். நாமளே சண்டை போட்டுக்கலாமாடா’ன்னு சமாதானப் படுத்தினேன்” என்றெல்லாம் விரிவாகப் பேசினார். 

   “ஊரில் பலரையும் கேட்டபோது லலெட்டர் கொடுத்ததெல்லாம் உண்மைதான்,ஆனால் யார் குடுத்தாங்கன்னு தெரியாதுன்னு உங்க ஆட்களே சொல்றாங்களே?”  என நான் கேட்டபோது, “இல்லிங்க சார் அந்தப் பசங்கதான்செஞ்சாங்க. பள்ளிக்கூடத்தில படிக்கிறாங்களே அந்த ரெண்டுப் பசங்களுந்தான் செஞ்சது” என்றார்.

பதியப்பட்டுள்ளவழக்குகள்

    மின் கம்பத்தில் கட்டி வைக்கபட்டுச் செருப்பால் அடிக்கப்பட்டநான்கு தலித் இளைஞர்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விவரம்:
B3 – Kanchi Taluk Police Station FIR No: 205 / 2015 Dt23–02-2015 ; IPC Sec 294 (b), 323, 506(1), and 4of Tamilnadu  Prohibition of Harassment of Women Act, 1998.
இந்த நால்வரில் +2 மாணவர்களான அலெக்சான்டர், பிரசாந்த் இருவரும்ரிமான்ட் செய்யப்படவில்லை. கோவேந்தன், சரவணன் இருவரும் ரிமான்ட் செய்யப்பட்டு 17 நாட்களுக்குப்பின் தற்போது பிணையில் உள்ளனர்.

    கடும் அழுத்தங்கள் கொடுத்தபின் மரத்தில் கட்டி வைத்துச் செருப்பால்அடித்தவர்களில் பாஸ்கர், மனோகரன், பார்த்திபன்,, ராஜேஷ், ரவி, முருகவேல், சேட்டு, உமாபதி,சேகர் ஆகிய 9 பேர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவரம்:
B3 – Kanchi Taluk Police Station FIR No: 269/2015 Dt.16-03-2015; IPC Sec 147, 342, 323, 294 (b), 506 (1) and of SC/ST Prevention of AtrocitiesAct 3(1) (10)
இவர்கள் ஒன்பது பேர்களும் தற்போது முன் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
தற்போது கு.வி.மு.ச 107 பிரிவின்படி ஆர்.டி.ஓ விசாரணைக்காக வரும்மே 18 அன்று காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வன்னியர் தரப்பிலிருந்து 15 பேர்களும்மற்றும் சிலரும், தலித் தரப்பிலிருந்து ஆறு பேர்களும் அழைக்கப் பட்டுள்ளனர்.

காவல்துறைகருத்து

   நாங்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்ற போது துணை ஆய்வாளார்கண்ணன் விடுப்பில் இருந்தார். ஆய்வாளர் சாரதி எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்.

   “நீங்கள் சென்ற போது அந்த நால்வரும் கம்பத்தில் கட்டப்பட்டுஇருந்திருக்கிறாங்க. அடிபட்டு இருந்திருக்காங்க. அவங்க மேல வழக்குத் தொடுத்த நீங்கஏன் அடிபட்டவங்க கொடுத்த புகாரை வாங்க மாட்டேன்னீங்க? பதினெட்டு நாள் வரைக்கும் ஏன்நடவடிக்கை எடுக்கல?” என நாங்கள் தொடங்கியவுடன் அவர், கு.வி.மு.ச 107வது பிரிவின்படிவழக்கு இப்போது ஆர்.டி.ஓ விடம் போய்விட்டதாகவும், தான் ஏதும் பேச இயலாது எனவும் கடுகடுவெனக்கூறி அகன்றார்.

   துணை ஆய்வாளர் கண்ணனிடம் தொலைபேசியில் கேட்டபோது தான் சம்பவஇடத்திற்கே போகவில்லை எனவும் நால்வரையும் அழைத்து வந்தபோதுதான் அங்கு சென்றதாகவும்கூறினார்.
வழக்கை விசாரிக்கும் துணைக் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் எங்களிடம்விரிவாகப் பேசினார். நாங்கள் கேட்டவற்றிற்கு அவர் அளித்த விரிவான பதில்களின் சுருக்கம்:

  “ஆய்வாளரும் காவலர்களும் அங்கு சென்ற போது அவங்க நாலு பேரையும்கம்பத்தில கட்டி வச்சிருக்கல. ஆனா பின்னால விசாரிச்ச போது அவங்கள கம்பத்தில கட்டி வச்சுஅடிச்சது உண்மைன்னு தெரிஞ்சது. நாங்க ஏன் அடிச்சவங்க பேர்ல வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைஉடனடியாப் போட்டுக் கைது செய்யலன்னா, அதை ஒரு பெரிய சாதிக் கலவரப் பிரச்சினையா ஆக்கிடக்கூடாதுன்னுதான். நீங்க இன்னைக்கு விசாரிச்சுட்டுப் போய்டுவீங்க. ஆனா நாங்கதான் எல்லாத்தையும்சமாளிக்கனும். எங்களுடைய முதல் கட்ட விசாரணையில் வெளியிலேருந்து வந்த சிலர்தான் இந்தலெட்டர் குடுத்ததெல்லாம் பண்ணி இருக்காங்க. ஆனா இந்த நாலு பெரும் அதுக்குத் துணையாஇருந்திருக்காங்க. படிக்கிற பையங்களுக்குப் பிரச்சினை வரக் கூடாதுன்னுதான் +2 படிக்கிறரெண்டு பேரையும் நாங்க ரிமான்ட் கூட பண்ணல. அடிச்சவுங்க முன் ஜாமீன் கேட்டபோது நான்லீவில் இருந்தேன். ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பிதான் இன்சார்ஜா இருந்தார்.”

   அவரது பதில்களில் இருந்த முரண்களைச் சுட்டிக்காட்டி. இனி உடனடியாகமேற்கொண்டு செய்ய வேண்டியவைகளையும் முன்வைத்துப் புறப்பட்டோம்.

எமது பார்வைகள்

1.   கோவேந்தன்,சரவணன், அலெக்சான்டர், பிரசாத் ஆகிய நான்கு தலித் இளைஞர்களும் மின் கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்டதை எங்களிடம் காவல் துறை விசாரணை அதிகாரியே ஏற்றுக் கொண்டார். அவர்கள்செருப்பால் அடிக்கப்பட்டது மட்டுமின்றி, எச்சில் உமிழப்பட்டு, சாதி சொல்லி இழிவாகப்பேசப்பட்டுள்ளனர். அவர்களை விடச் சொல்லி கெஞ்சி வந்த பெற்றோர்களும் சாதி சொல்லி இழிவுசெய்து அடிக்கப்பட்டுள்ளனர். 

2.   வன்னியர்சமூகத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி கீதாவிடம் கடிதம் கொடுத்து வம்பு செய்தவர்களைஅந்தப் பெண்ணாலும் அடையாளம் காட்ட இயலவில்லை. அவ்வூர் வன்னிய மக்களே அது யார் என இதுவரைகண்டுபிடிக்க முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

3.   அந்தச்சிறுமி இவ்வாறு யாரோ சிலரால் துன்புறுத்தப்பட்டது கண்டிக்கத் தக்கது என்பதில் அய்யமில்லை.அதற்குரிய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டித்திருக்கப்பட வேண்டும் என்பதிலும்கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் அப்படிச் செய்தால் சாதிக் கலவரம் ஏற்படக் காரணமாகும்என்பதால் அவ்வாறு செய்யவில்லை எனக் காவல்துறை இன்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதன் விளைவாக இன்று அப்பாவி தலித் இளைஞர்கள் நால்வர் அவர்களது இளமையும் எதிர்காலமும்பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்குக் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.

4.   தலித்இளைஞர்கள் நால்வர் ஆதிக்க சாதியினரால் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என அறிந்தும் வன்கொடுமைக்குஆளானவர்கள் மீதே வழக்குத் தொடர்ந்து சிறையில் தள்ளிவிட்டு வன்கொடுமையை மேற்கொண்டவர்கள்மீது அடுத்த 18 நாட்கள் வரை வழக்குப் பதிவு செய்யாதது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை வாங்க மறுத்த காஞ்சிபுரம்தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாரதி, துணை ஆய்வாளர் கண்ணன் ஆகியோரே இதற்குப் பொறுப்பேற்கவேண்டும்.

5.   14 வயதுச்சிறுமி கீதாவிடம் கடிதம் கொடுத்து வம்பு செய்தது பெற்றோர்களுக்குத் தெரிந்த உடனேயேஅவர்கள் உடனடியாகக் காவல்துறையை அணுகிப் புகார் அளித்திருக்க வேண்டும். பெண்ணின் பெயர்கெட்டுவிடக் கூடாது என அவர்கள் அஞ்சியதென்பது சமூகத்தில் நிலவும் மிக மோசமான ஆணாதிக்கக்கருத்தையே காட்டுகிறது. நாடகக் காதல் என்றெல்லாம் சொல்லிச் சாதி உணர்வைத் தூண்டும்இயக்கங்கள் இத்தகைய சூழலை எதிர்கொள்ளும்போது முறைப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்குறித்துத் தங்கள் அணிகளுக்குப் பயிற்சி அளிக்காதது வருந்தத் தக்கது. இங்கு அப்படிநடந்திருந்தால் இன்றைய சாதி வன்முறை தடுக்கப்பட்டிருக்கும்.

6.   தங்கள்பெண்ணுக்கு இவ்வாறு சங்கடம் நேர்ந்தவுடன் பெற்றோர் காவல்துறையை அணுகாமல் ஊர்த் தலைவரைஅணுகியுள்ளனர். இரண்டு மூன்று நாட்கள் பிரச்சினை தொடர்ந்தவுடன் அவர்கள் யார் இதற்குக்காரணம் எனத் தேடவும் தொடங்கியுள்ளனர். ‘பல்சார்’ பைக்குடன் யாரும் உள்ளனரா எனத் தம்பகுதிக்குத் தேடி வந்ததாகத் தலித் மக்களும் சொல்கின்றனர். யார் எனத் தெரியாத நிலையில்சாதி அரசியலால் தூண்டப்பட்டுள்ள சில வன்னிய இளைஞர்களுக்கு தலித் பகுதியில் சற்றுத்துடிப்புடன் இருக்கும் இந்த நால்வர் மீது கவனம் திரும்புகிறது. ஏற்கனவே இவர்களின் அத்துமீறல்களை இந்த நான்கு தலித் இளைஞர்களும் கண்டித்தவர்கள் என்கிற கோபம் வேறு அவர்களுக்குஇருந்திருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 28 அன்று மாலையில் கீதா டியூஷன் செல்லும் வேளையில்  பிரசாந்த், அலெக்சான்டர் இருவரும் செல் போன் சார்ஜ்செய்ய வந்ததைக் கண்ட வன்னிய இளைஞர்கள அவர்களைக் கொண்டு சென்றதோடு அவர்களின் செல்போனையும்பறித்துக் கொள்கின்றனர். அவர்களோடு இருப்பவர்களை அடையாளம் காணவும் அதைப் பயன்படுத்துகின்றனர்கோவேந்தன், சரவணன் இருவரும் அந்த செல்போன்களுக்குத் தொடர்பு கொண்டவுடன் அவர்களையும்அழைக்கின்றனர். பிறகு நடந்ததை அறிவோம்.

7.   கடிதம்கொடுத்து வம்பு செய்தது யார் எனத் தெரியவில்லை என்பது எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால்அதற்குள் காரியம் மிஞ்சி விடுகிறது. அப்பாவி தலித் இளைஞர்கள் தாக்கப்படுகின்றனர். நாடகக்காதல் முதலான வசனங்களால் சாதி உணர்வூட்டப்பட்ட இளைஞர்கள் அவர்கள் மீது வன்முறையை மேற்கொள்கின்றனர்.களத்திற்கு ஆய்வாளர் சாரதி வந்த்வுடன் ஊர்த் தலைவரும் அவரும் தனித்துப் பேசுகின்றனர்.தாக்கப்பட்ட தலித் இளைஞர்களே கடிதம் கொடுத்துத் தொல்லை செய்தவர்கள் என்பதாகப் புகார்கொடுக்கப்படுகிறது. வன்கொடுமைக்கு ஆளானவர்களே குற்றவாளி ஆக்கப்படுகின்றனர். காவல்துறைஇதற்குத் துணை போகிறது. நடந்தது இதுதான்.

8.   புரிசையில்உள்ள ஆதிக்க சாதிக் குடும்பங்களின் எண்ணிக்கை 600 க்கும் மேல். தலித் குடும்பங்களோவெறும் 50. அருகில் காவல்நிலையம் கூட இல்லை. இந்நிலையில் தலித் பகுதியைச் சேர்ந்த பள்ளிமாணவர்கள் வன்னியர்கள் செறிந்துள்ள பகுதிக்குச் சென்று ஒரு பெண்ணிடம் வம்பு செய்வதுஎன்பது சாத்தியமே இல்லை. இது முற்றிலும் பொருந்தாத ஒரு அபத்தக் குற்றச்சாட்டு என்பதுகொஞ்சம் சிந்தித்தாலே விளங்கும். 

9.   இன்றுவரை அந்தக் கடிதங்கள் கையெழுத்து நிபுணர்களால் பரிசோதிக்கப்படவில்லை. யார் அந்தக் கடிதங்களைக்கொடுத்தவர்கள் என அந்தப் பெண் உட்பட யாருக்கும் தெரியவில்லை. காவல்துறைக்கும் தெரியவில்லை.ஆனால் யார் கடிதம் கொடுத்து வம்பு செய்திருந்தாலும் அவர்களுக்கு இந்த தலித் இளைஞர்கள்துணையாக இருந்துள்ளனர் என விசாரணை அதிகாரி சொல்வது காவல் துறை முன் தீர்மானத்துடன்இயங்குவதைக் காட்டுகிறது. இத்தகைய அணுகல் முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படிநீதி கிடைக்கும்?

கோரிக்கைகள்

1.   கைது செய்யப்பட்டநான்கு தலித் இளைஞர்களும் குற்றமற்றவர்கள். அவர்கள் மீதான குற்ற ஆவணம் ரத்து செய்யப்பட்டுஅவர்கள் உடனடியாகக் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

2.   வன்கொடுமைக்குஆளான தலித் மக்களிடம் புகாரை வாங்க மறுத்து, பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்கள் மீதே வழக்குத்தொடர்ந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாரதி, துணை ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டு அவ்ர்கள் மீது கடமை தவறியதற்காக வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்வழக்குத் தொடர வேண்டும்.

3.   அடித்து,இழிவு செய்து, பொய் வழக்கும் போடப்பட்டுள்ள தலித் இளைஞர்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்படி உரிய இழப்பீட்டை உடன் தர வேண்டும்.

4.   ஒரு கிராமமேசேர்ந்து இந்த இளைஞர்களைத் தாக்கியுள்ளதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளவாறுகிராமத்தில் உள்ள அனைவருக்கும் கூட்டு அபராதம் விதிக்க வேண்டும்.

5.   வன்கொடுமைபுரிபவர்கள் முன் ஜாமீன் பெற்று எளிதில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காகவே வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தில் முன் ஜாமீன் மறுக்கப்படுகிறது. ஆனால் இதை மீறி உயர் நீதிமன்றங்கள்இத்தகையோருக்கு முன் ஜாமீன் வழங்குவது சட்டத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல். இந்தவழக்கிலும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேர்களும் இப்போது முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.முன் ஜாமீன் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது அதற்கு வலுவான எதிர்ப்பை அளிக்காமல்காவல்துறையும் ஒத்துழைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் வெளியில் நடமாடுவது அப்பகுதி தலித்மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அத்துமீறல்களை எதிர்த்து வழக்குத்தொடர்ந்துள்ல கீழ்க் காலனி மணி முதலானோர் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு வன்கொடுமை புரிந்தோர்க்குமுன் ஜாமீன் வழங்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட அனைவரதுமுன் ஜாமீனும் ரத்து செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

6.   கீதாவுக்குக்கடிதம் கொடுத்துத் துன்புறுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்துத்தண்டனை வழங்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நவீன ஆய்வு முறைகளைப் பயன்படுத்திஅந்தக் கடிதங்களுக்கு உரியவர் யார் என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.

7.   பாதிக்கப்பட்டுள்ளசிறுமி கீதாவுக்கு உரிய கவுன்சிலிங் அளித்து அவளைத் தைரியப் படுத்த வேண்டும்.

8.   சாதிப்பிரச்சினை ஆழமாக உள்ள இப்பகுதியில் அருகாமையில் காவல் நிலையங்களே இல்லை. இந்தப் பகுதிக்குரியகாவல் நிலையம் 25 கி.மீ தொலைவில் நகரத்தில் அமைந்துள்ளது. இந்தக் குறை சரி செய்யப்படவேண்டும் அதுவரை புரிசையில் காவல் அவுட் போஸ்ட் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அச்சத்தில்உறைந்துள்ள தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தல் வேண்டும்.

நன்றி: அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக