தமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின்
அக்கறையும்…
- மு.சிவகுருநாதன்
தமிழகப்பள்ளிகள் நாளை ஜூன் 01 (01.06.2015) வழக்கம்போல
திறக்கப்படவிருக்கின்றன. இது ஒவ்வோராண்டும் நடைபெறும் வழக்கமான நிகழ்வுதான். ஒன்றிரண்டு
முறைகள் வெயிலின் தாக்கத்தைச் சொல்லி பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2011 இல்தான் சமச்சீர்க் கல்வி வழக்கின் காரணமாக நீண்ட நாட்கள் பள்ளித் திறப்புத் தள்ளிப்போனது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நாள் வேலை நாளாக இருக்கும்
பட்சத்தில் அன்றைய தினமே பள்ளிகள் திறப்பது என்பது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை.
சிற்சில சமயங்களில் நமது திராவிடப் பகுத்தறிவுப் பூசாரிகள் நல்லநாள் பார்த்து பள்ளியைத்
திறந்ததும் தனிக்கதை.
எப்போதும் தமிழகத்தைப் பார்த்து செயல்படும் புதுச்சேரி
இம்முறை ஜூன் 02 (செவ்வாய்) பள்ளித்திறப்பு என அறிவித்துவிட்டு பிறகு வெயில் காரணமாக ஜூன் 12 (வெள்ளி) திறப்பதாகச்
சொல்லியுள்ளது. நாள், நட்சத்திரம் பார்ப்பதற்கு இதைக்கூட உதாரணமாக சொல்லலாம் என்று
தோன்றுகிறது. ஜூன் 01 திங்கள் தவிர்க்கப்பட்டது, வார இறுதியான வெள்ளியைத் தேர்வு செய்தது
போன்றவை இதைத்தான் நமக்கு நினைவூட்டுகிறது. தமிழகப் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தை
மாற்றிவிட்டு மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தைப் (CBSE) பின்பற்றும் முடிவை எடுத்துவிட்ட
புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி அதை பள்ளித் திறப்பிலும் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்.
புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி முந்திக்கொண்டதைத்
தொடர்ந்து தமிழகத்து அரசியல் கட்சிகள் இத்தகைய கோரிக்கைகளை எழுப்பின. இதை நம்மால் புரிந்து
கொள்ளமுடிகிறது. அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவும் அதிலுள்ள
பல்வேறு ஆசிரிய இயக்கங்களும் புதுச்சேரியைப் பின்பற்றி பள்ளித்திறப்பைத் தள்ளிவைக்கவேண்டும்
எனக் கோரியதுதான் வியப்பளித்தது. இன்னும் ஒரு சிலர் ஜூன் 12 க்கு (வெள்ளி) பள்ளித்
திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என விரும்பினர். சனி, ஞாயிறு என அடுத்த இரு நாட்கள்
விடுமுறை என்றபோதும் ஜூன் 12 வெள்ளியன்று ஏன் பள்ளியைத் திறக்கவேண்டும் என்பதை இவர்கள்
விளக்கவில்லை.
ஆசிரியர்
இயக்கங்கள் இதற்கு சொன்ன காரணங்கள்தான் மேலும் வியப்பளிக்கக் கூடியவை. அரசுப்பள்ளிகளில்
குடிநீர், கழிப்பிட, காற்றோட்ட, ஆய்வக வசதிகள் இல்லை; எனவே பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்கவேண்டும்
என்பதே இவர்களது கோரிக்கைகள். இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். இக்குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும்
என இவர்கள் கோரவில்லை. மாறாக பள்ளிகள் திறப்பை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும்
என்பதே இவர்களது நிலைப்பாடு. இதனை நாம் எப்படி விளங்கிக் கொள்வது?
இந்த ஒரு வார காலத்தில் அரசு தாமாக முன்வந்து இவற்றைக்
களையும் என்று ஆசிரியர் இயக்கங்கள் எதிர்பார்க்கின்றனவா? இவ்வாறு அரசுக்குக் கோரிக்கைகள்
வைப்பது தங்களது பணியல்ல என்பதை இவர்கள் முன்பே
நிருபித்துவிட்டார்கள். அண்மையில் 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்டப்
போராட்டங்களை நிகழ்த்திய இவர்கள் மருந்திற்கு கூட மாணவர், சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை
விடுக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை. இது குறித்து நிறைய எழுதியாகிவிட்டது.
அரசுப்பள்ளிகளில் மட்டுமல்ல; அரசு உதவிபெறும் பள்ளிகள்,
சுயநிதிப்பள்ளிகள் என அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகள் அறவே இல்லை அல்லது குறைபாடுகளுடன்
உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது. நிதியாண்டு இறுதியில் இருக்கின்ற நிதியை
செலவளிப்பதற்காகவே பல வேலைகள் அவசரகதியில் யாருக்கும் பயன்பாடாத கழிப்பறைகள் கட்டுவது
முதற்கொண்டு செய்யப்படுவனவற்றைத் தவித்து ஒவ்வொரு கோடை விடுமுறையை பள்ளிகளைச் சீரமைக்கும்
நாட்களாக நடைமுறைப்படுத்தினால் நன்றாயிருக்கும். ஆனால் இவற்றைச் செய்வதற்கு அரசோ, கோரிக்கை
வைக்க ஆசிரிய இயக்கங்களோ, அரசியற்கட்சிகளோ முன்வராத நிலைதான் இன்றுள்ளது.
இவைகள் எவற்றையும் கண்டுகொள்ளாத பள்ளிக்கல்வித்துறைச்
செயலாளர் வழக்கம்போல் ஜூன் 01 பள்ளி கண்டிப்பாகத் திறக்கப்ப்டுமென அறிவித்திருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பள்ளி ஜூன் 01 பள்ளி திறக்கப்படுவதை உறுதிசெய்து, செல்போன்
பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை ஆசிரியர்களுக்கு
வழங்கியுள்ளார். 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிய உணவு இடைவேளையில்கூட படிக்கவேண்டும்
என்று சொல்வர்கள் இப்படியும் சொல்லக்கூடும். “பள்ளிகளில் கழிவறைகள் இருந்தால் மாணவர்கள்
அங்கு செல்வதால் அவர்களது படிப்பு பாதிக்கக்கூடும்”.
எம்மாதிரியான
உலகில் நாம் வாழ சபிக்கப்பட்டிருக்கிறோம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக