செவ்வாய், ஜனவரி 15, 2019

தமிழகக் கல்வியில் ‘குடவோலை’ நோய்


தமிழகக் கல்வியில் ‘குடவோலை’ நோய்


 (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 01) 

 
மு.சிவகுருநாதன்


 (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல்  பாடப்பகுதிகளில் 'குடவோலை' முறை பற்றிய கருத்துகள்.)


ஒரு முன்கதைச் சுருக்கம்:

(முதல் பருவப் பாடநூல் மற்றும் QR code விமர்சனத்திலிருந்து சில பத்திகள்)

   பண்டைய தமிழகத்தில், சோழர்கள் காலத்தில் குறிப்பிடத்தக்கச் சிறப்பு வாய்ந்த ‘குடவோலை முறை’ இருந்தது (பக். 175), தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் குடவோலை என்னும் வாக்களிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது (பக். 184) ஆகிய வரிகள் சங்ககால, பிற்காலச் சோழர்கள் ஆட்சியிலும் இருந்ததாகச் சொல்கிறது. பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் பிரம்மதேயங்களில் குறிப்பிட்ட சாதிக் குடும்பங்களின் தலைமையை திருவுளச்சீட்டு எடுக்கும் முறையை வாக்களிக்கும் முறை, சிறப்பு வாய்ந்த குடவோலை முறை என்று புனைவு எழுத வேண்டிய அவசியமென்ன? குடவோலை முறையில் எப்படி வாக்களிக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டுமல்லவா? NOTA, VVPAT போன்றவற்றோடு குடவோலை வாக்களிப்பையும் செருகுவதுதான் நமது ஆசிரியப் பெருந்தகைகளின் தலைசிறந்த பணியாக உள்ளது!
    +1 வரலாறு பாடத்தில் ‘உள்ளாட்சித் தேர்தலும் உத்தரமேரூர் கல்வெட்டும்’ என்றொரு பெட்டிச்செய்தி உள்ளது (பக். 187) பிராமணக் குடியிருப்புகளில் செயல்பட்ட வாரியங்களின் தலைவர்கள் சாதிமுறைப்படி திருவுளச்சீட்டு மூலம் நடந்த தேர்ந்தெடுப்பை இவர்கள் தொடர்ந்து நமது தேர்தல் முறைகளுடன் ஒப்பிடும் தீங்கிழைத்து வருகின்றனர். 

      QR code செய்திகளையும் நன்றாக உற்றுநோக்கும்போது பல்வேறு அபத்தங்கள் வெளிப்படுகின்றன. குடவோலை முறை பற்றிப் பேசும்போது ஊர் 30 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. வாரியமும் வார்டும் ஒன்றல்ல. அதைபோலவே இன்றுள்ள உள்ளாட்சி முறைக்கும் குடவோலை முறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கிடைத்த இரு கல்வெட்டுக்களில் உள்ள அக்கால கிராம சபையைத் தேர்வு செய்யும் முறையான ‘குடவோலை முறை’ என்ற திருவுளச்சீட்டு முறையை இன்றைய மக்களாட்சி முறையோடு ஒப்பிடக்கூடிய அபாயம் வரலாற்றின் அவலங்களுள் ஒன்று. 1911 இல்  எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் தொடங்கிவைத்த இந்தவேலையை தற்போது தமிழ்த் தேசியர்கள் தொடர்கின்றனர். பார்ப்பன, வருணசிரம, இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் இவர்களுக்கு ஆதாரங்களாக உள்ளனர். 

      தோட்ட வாரியம், ஏரி வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், உதாசீன வாரியம் என்ற பலதரப்பட்ட வாரியப் பொறுப்புகளுக்கு இவ்வாறு திருவுளச்சீட்டுப் பயன்படுத்தப்பட்டது. வாரியம் என்பது ஒரு பொறுப்பு அல்லது பதவி; இது வார்டு அல்ல. வேளாண்குடிகள் வாழ்ந்த இடம் ஊர் என்றும் பார்ப்பனச்சேரி, கிராமம் என்றும் அழைக்கப்பட்டன. இதனை நிர்வகிக்கும் அமைப்புகள் முறையே ஊர் (ஊரவர்), சபை என்றும் சொல்லப்பட்டன. பார்ப்பனர்களுக்கு இறையிலியாக (தானம்)  வழங்கப்பட்ட பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம் போன்ற பகுதிகளில் அச்சாதியைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் முறையில் மக்களாட்சி எங்கு வந்தது? இங்கு பழங்கால வடஇந்தியக் குடியரசுளை ஏன் பேசுவதில்லை? 
 
(பதிவு: 20.08.2018, ‘பாடநூல்களில் மொழிபெயர்ப்புக் குளறுபடிகள்’ என்னும் தலைப்பில்…)

                     குடவோலை முறை ஜனநாயகமா?     
                             
           இனம், குலம், குடி, சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பெருமைகளைப்  பேசுவதுதான்  இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலானோரின் அன்றாடப் பணியாக உள்ளது. இத்தகைய பாசிச சக்திகளின் வளர்ச்சி இன்று அபரிமிதமாக உள்ளது. வரலாறு, மொழிப்பாடங்கள் இந்த பாசிசப் போக்கை வளர்க்கும் விதமாக இங்கு கட்டமைப்படுவதுதான் வேதனை. 

   பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக்கொண்டு வேதங்கள், நால்வர்ணப் பாகுபாடு என முற்றிலும் வைதீகப் பாரம்பரிய ஆட்சி செய்த பிற்கால சோழர்களை தமிழர்களின் ஒரே அடையாளமாக முன்னிறுத்தும் போக்கு இங்குள்ளது. இவர்களது வைதீக நடவடிக்கைகளை தமிழ் மொழி, இனப் பெருமைகளாகக் கட்டமைக்கும் அரசியல் பாசிசத்தன்மை மிக்கது. 

       பார்ப்பனச் சேரிகளான பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம், அகரம்  போன்றவற்றிலுள்ள சபைகளை நிர்வகிக்க  பார்ப்பனர்களை மட்டும் தேர்வு செய்ய நடத்தப்பட்ட சீட்டுக் குலுக்கும் முறையே குடவோலை முறை என்பது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று வேதம் கற்ற பார்ப்பனராக இருக்கவேண்டும் என்பது முதன்மையானது. இந்தச் சீட்டுகளில் பார்ப்பனர்கள் பெயர்கள் மட்டுமே எழுதப்பட்டு, பார்ப்பனச் சிறுவன் ஒருவனால் திருவுளச்சீட்டாக எடுக்கப்பட்டது. இதில் எங்கே ஜனநாயகம் வந்தது? (இது குறித்த மேலதிக விளக்கம் மற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு இரண்டையும் பார்க்க: ஆய்வாளர் பொ.வேல்சாமி அவர்களின் கோவில்-நிலம்-சாதி, பொற்காலங்களும் இருண்ட காலங்களும் ஆகிய இரு நூற்கள், வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் – 629001)

   இது குறித்து நமது வரலாற்றாசிரியர்கள் சிலர் சொல்வதைக் கேட்போம்.

   “குடும்புகளால் நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் கூடிக் குடும்புக்கு ஒருவராக மொத்தம் முப்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் வாக்குப்பதிவு முறை ஒன்று பிராமணர் கிராமங்களில் கையாளப்பட்டது. அம்முறைக்குக் ‘குடவோலை முறை’ என்று பெயர்.” இது டாக்டர் கே.கே. பிள்ளையின் வரையறை. 

   வாக்குப்பதிவு முறை என்றதும் அது எப்படி நடக்கிறது என்று அறிய ஆவலாக இருக்கிறதா? அவரே தொடர்ந்து எழுதுகிறார். “குடும்பினால் நியமனம் செய்யப்பட்டவர்கள் சபைக்கு உறுப்பினராகும் தகுதியுடையவர்களின் பெயர்களை ஓலை நறுக்குகளில் எழுதி அவற்றை ஒரு  குடத்துக்குள் இடுவார்கள். பிறகு குடத்தை நன்றாக குலுக்குவார்கள். சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை ஓலை நறுக்குகளை எடுக்கும்படி ஒரு சிறுவனை ஏவுவார்கள். அவன் குடத்துக்குள் கையிட்டு வெளியில் எடுத்த ஓலைகளில் காணப்படும் பெயரினர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.” (டாக்டர் கே.கே.பிள்ளை: தமிழக வரலாறு மக்களும் பண்பாடும். வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600113) வாக்குப்பதிவு மிகவும்  அதிர்ச்சியாக இருக்கிறதா? இன்றும் இப்படியே வாக்குப்பதிவு நடத்தினால் பெரும் பொருட்செலவு குறையுமே!


   “ஓலைச் சுவடிகளில் தகுதியான ஆட்களின் பெயர்கள் எழுதப்பட்டு அவை ஒரு குடத்துக்குள் போடப்பட்டன. அக்குடத்தின் வாய் மிகக் குறுகலானது. அக்குடத்தை நன்கு குலுக்கிச் சபையின் முன்னிலையில், ஒரு குழந்தையை வரவழைத்து, எத்தனை குழுக்கள் நியமிக்கப்பட வேண்டியதிருந்ததோ அதற்கேற்ப அத்தனை ஓலைகளை அந்தக் குழந்தையை எடுக்கச் செய்தார்கள். இந்த ஏற்பாடுக்குக் ‘குட ஓலை முறை’ என்று பெயர்.” இது பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் விளக்கம். (சோழர்கள் தொகுதி 2 , பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். சென்னை 600098)

  இங்கு சபை என்பது முழுதும் பிராமணர்களுக்கானது என்பதையும் இந்த குலுக்குச்சீட்டில் பிராமணர்கள் பெயர்களைத் தவிர எவரும் வேறு இடம்பெற வாய்ப்பு இல்லை மற்றும் சீட்டு எடுப்பவன்கூட பிராமணச் சிறுவன் என்கிற உண்மைகள்  மிகக் கவனமாகத் திட்டமிட்டு மறைக்கப்படுவதை உணரலாம். 

  கிராம சபைகளில் “கிராமத்திலுள்ள அனைவரும் அங்கத்தினராவதற்குத் தடை ஏதும் இல்லையென்று தோன்றுகிறது.” “எல்லாரும் சபைக்கு வந்தாலும் அனுபவமும் திறமையும் மிக்கவர்கள் மட்டுமே, அதனை முன்னின்று நடத்திச் சென்றனர். வயது,கல்வி, செல்வம், குடிப்பிறப்பு ஆகிய காரணங்களால் சிலர் எளிதாகத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.”
 
   “பிரமதேயத்தின்பால் பரம்பரை உரிமையுடையவர்களாக இருந்தும், கிராம நிர்வாகத்தில் மற்றவர்களுக்கும் உரிய பங்கு தர முன்வந்தனர். தேவை ஏற்பட்டபோது தங்களது உரிமைகளைக் குறைத்துக் கொண்டு, கிராம நிர்வாகத்தில் பங்கு கொள்வதற்கு ஏனையோருக்கு வாய்ப்பு அளித்தனர்.” (மேற்கோள்கள் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் மேலே குறிப்பிட்ட நூல்)

      என்றெல்லாம் பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பார்ப்பனப் பெருமைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறார்.

   அவருடைய காலம் முடிந்து விட்டது. இது இன்று சூத்திர சாதி மற்றும் ஆதிக்க சாதி இந்துத்துவச் சொல்லாடலாக தொடர்ந்து மாற்றப்படுவதை அவதானிக்கலாம். இதன் பின்னாலுள்ள பாசிசக் கூறுகளை அம்பலப்படுத்துவது அவசியம். 

 (மார்ச் 2017, பாரதி புத்தகாலய  வெளியீட்ட ‘கல்விக்குழப்பங்கள்’ நூலில் உள்ள கட்டுரையின் ஒரு பகுதி.) 

   (11 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடநூல் குறிப்பையும் முழுமையாகப் பார்த்துவிடலாம்.)

உள்ளாட்சித் தேர்தல்களும் உத்தரமேரூர் கல்வெட்டுகளும்


    “பிரம்மதேயங்களில் (பிராமணர்களுக்கு வரிவிலக்குடன் அளிக்கப்பட்ட நிலம்) ஒன்றாக இருந்த உத்தரமேரூரில் (உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலம்) கிடைத்த இரு கல்வெட்டுக் குறிப்புகள் (பொ.ஆ. 919 இலும் 921 இலும் அறிவிக்கப்பட்டவை) சோழர் கால உள்ளாட்சித் தேர்தல் முறையை அறிய முடிகிறது. இவை ஒரு பிராமணக் குடியிருப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்கு வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த உறுப்பினரைத் தேர்வு செய்யும் முறையைத் தெரிவிக்கின்றன. அதன்படி, கிராமம் 30 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு உறுப்பினரைத் தேர்தெடுக்க வேண்டும். தேர்வானவர்கள் அனைவரும் சேர்ந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்குவார்கள். அவை பொதுப்பணிக் குழு, குளங்களுக்கான குழு, தோட்டங்களுக்கான குழு, பஞ்ச நிவாரணக் குழு, தங்கம் தொடர்பான குழு ஆகியனவாகும். 

   உறுப்பினராகப் போட்டியிடுவோரின் தகுதிகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். போட்டியாளர் 35 வயதுக்கு மேலும் 75 வயதுக்குக் கீழும் உள்ளவராக இருக்க வேண்டும். சொத்தும் சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும். வேதங்களிலும் பாஷ்யங்களிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும். 

   ஒரு பிரிவில் போட்டியிடக்கூடிய அனைவருடைய பெயர்களும் தனித்தனிப் பனையோலைகளில் எழுதப்பட்டு, அவை ஒரு பானையில் இடப்படும் (குடவோலை). சபையில் வயதில் மூத்தவர் ஒரு சிறுவனை அழைத்து, பானையிலிருந்து ஓர் ஓலையை எடுக்கபடி கூறுவார். அந்தச் சிறுவன் எடுக்கும் ஓலையில் உள்ள பெயருக்குரியவரே உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்”. (பக். 187, 11 ஆம் வகுப்பு வரலாறு) 

(தற்போது மூன்றாம் பருவ 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் இடம் பெறும் 'குடவோலை' வரலாறு!) 


தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் வரலாற்றுத் தொடக்கம் மற்றும் வளர்ச்சி     “காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படுகின்ற ஆதாரங்களின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு ஒரு நீண்ட வரலாற்றினைக் கொண்டதாக அறியப்படுகிறது. அக்காலத்தில் தமிழ்நாடு பல கிராம குடியாட்சியைக் கொண்ட நிலமாக விளங்கியது. பல சமூகக் குழுக்கள் தங்களது பகுதி மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பத்து மற்றும் பதினோராம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற சோழர்களது ஆட்சிக் காலத்தில் இந்த முறை உச்சநிலையை அடைந்தது. கிராம சபைகள் வரி விதித்தன; சமூக வாழ்வினை மேம்படுத்தின.  தங்களது குறிப்பிட்ட பகுதியில் நீதியையும் நிலைநாட்டின. இந்தக் கிராம சபைகள் சோழ அரசர்களுடன் வலிமையான உறவுகளைக் கொண்டிருந்தனர். கிராம சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 'குடவோலை முறை' என்ற இரகசிய தேர்தல் முறை புழக்கத்தில் இருந்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிராம தன்னாட்சி சரியவும், நிலப்பிரபுக்களின் மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை மேலோங்கவும் தொடங்கியது. இம்முறை, ஆங்கிலேய காலனி ஆதிக்க ஆட்சி உள்ளாட்சி அமைப்புகளை அவர்களுக்கு ஏதுவாக இருக்கும் விதமாக அறிமுகம் செய்யும் வரை தொடர்ந்தது”. (பக்.139, 9 சமூக அறிவியல்)

    “உள்ளாட்சி அமைப்பு இந்தியாவில் தொன்றுதொட்டு காணப்படும் கருத்துரு ஆகும். இது பிற்காலச் சோழர்கள் அல்லது தஞ்சை சோழப்பேரரசு காலத்தில் உச்சநிலையை அடைந்தது”. (பக்.136, 9 சமூக அறிவியல்)

   “சோழர் காலத்தில் கிராம நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 'குடவோலை முறை' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்”. (பக்.143, 9 சமூக அறிவியல்)

    “சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை ----------- என்றழைக்கப்பட்டது”. (பக்.144, 9 சமூக அறிவியல்)

     சென்ற பருவத்தில் ‘சிறப்பு வாய்ந்த சாதி முறை’யின் பெருமை பேசப்பட்டது. இந்த சாதி, சமூகக் குழுக்கள் சமூக வாழ்வை மேம்படுத்திய பெருமை இங்கு விண்டுரைக்கப்படுகிறது. சங்ககாலம், பிற்காலம் என்கிற வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு சோழர்கள் என்று ஒருபுள்ளியில் அனைத்தையும் குவிப்பதையும் இங்கு கவனிக்கலாம். 

     பிராமணர்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட பிரம்மதேயம் அல்லது சதுர்வேதிமங்கலத்தில் நடந்த அந்த சாதிக்குழுக்களைத் திருவுளச்சீட்டு முறையில் குலுக்கி எடுக்கும் முறையே  குடவோலை முறையாகும். இதை உள்ளாட்சித் தேர்தல் முறை, மறைமுகத் தேர்தல் முறை, வாக்குப்பதிவு, மக்களாட்சி என்றெல்லாம் சொல்வதற்கு நமது பாடமெழுதிகள் வெட்கப்படுவதில்லை. இதிலுள்ள சாதியம் மறைக்கப்பட்டு அனைவருக்கும் பொதுவான சாயம் பூசப்படுகிறது. 

    பிற்காலச் சோழர்களுக்குப் பிறகு கிராமத் தன்னாட்சி சரிவடைந்ததாம்! பிராமணிய ஆதிக்கம் நலிந்தது என்று சொல்லலாமே! ஆங்கில காலனிய ஆதிக்கம் தங்களுக்கு ஏதுவாக உள்ளாட்சியை கட்டமைத்தாம்! ரிப்பன் பிரபு அறிமுகப்படுத்திய உள்ளாட்சி முறைக்கு மாற்றாக இவர்கள் குடவோலை முறையைப் பரிந்துரை செய்கிறார்கள். பொருட்செலவில்லாத எளிமையான தேர்தல் முறை, எனவே இதையே தற்போதும் பயன்படுத்தலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டியதுதான் பாக்கி. வேதங்களில் எல்லாம் இருந்ததாகக் கருதும் சங்கிகள் இதையும் ஏற்றுச் சட்டமாக்கவும் வாய்ப்பிருக்கிறது.  
  
   சங்ககாலத்திலேயே  ‘குடவோலை முறை’  இருந்ததாகச் சொல்லப்படும்  மருதன் இள நாகனாரின் அகநானூற்றுப் பாலைநிலப் பாடல் (77) முழுமையும் கீழே தரப்படுகிறது. அதையும் வாசித்து விடுவோம்.

‘நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று’ எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் – வாழிய, நெஞ்சே! - வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த கட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர,
செஞ்செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின், கீறூர்ப்
புல் அரை இத்திப் புகழ் படு நீழல்
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
வானவன் மறவன், வணங்கு, வில்  தடக் கை,
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந்துயர் தரும் இவள், பனி வார் கண்ணே.

       - மருதன் இள நாகனார் (பாடல்: அகம்.77)

     “மக்கள், ஊராண்மை நாட்டாண்மைக் கழகங்கட்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க எண்ணும் தகுதியுடையார் பெயர்களை ஓலையில் எழுதி அவற்றைக் குடத்தில் இடுவர்; பின், குடத்தின் வாயைத் துணியால் போர்த்திக் கயிற்றால் கட்டி அதன் மீது இலச்சினையைப் பொறிப்பர்; பின்னர், ஆவணமாக்கள் பலர்முன் குடத்தின் மேலிட்ட இலச்சினையைச் சரிபார்த்து நீக்கி, உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்துத் தேர்ந்தெடுக்கபட்டோர் இவரென முடிவு செய்வர். அக்காலத்து இவ்வழக்கத்தினை இப்பாடற்பகுதியில் ஆசிரியர் சுட்டுவதைக் காணலாம். குடவோலை என வழக்குப் பெறும் இம்முறை பழைய கல்வெட்டுக்களில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது” (பக்.233, சங்க இலக்கியம் – அகநானூறு: புத்தகம் 1)

  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட (மூன்றாம் அச்சு: பிப். 2007)  இந்நூல் உரை முனைவர் இரா.செயபால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

   அறிஞர் பொ.வேல்சாமி அவர்களின் ‘கோவில்-நிலம்-சாதி’ என்னும் நூலில் (காலச்சுவடு வெளியீடு) குடவோலை முறை என்னும் திருவுளச்சீட்டு முறை பற்றிய கட்டுரை உள்ளது. அவற்றில் உத்திரமேரூர் கல்வெட்டுகள் இரண்டும் முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் வாசித்து அறியவும். 

    “குடத்திலிட்ட ஓலைகளை எடுப்பதைப் போல கழுகு போர்க்களத்தில் இறந்த வீரனது உடலிலிருந்து குடலை எடுக்கும்”, என்பதான உவமை இந்த அகப்பாடலில் சொல்லப்படுகிறது. இது சங்ககாலம் எனப்படும் கி.மு. 300 – கி.பி. 300 காலப்பகுதியைச் சேர்ந்த இந்த இலக்கியச் சான்றுக்கு உத்திரமேரூர் கல்வெட்டுகள் இரண்டையும் (காலம்: கி.பி. 916, 921) இணைத்துக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வரலாறாக்கும் வேலையை பன்னெடுங்காலமாகச் செய்து வருகின்றன. தமிழ் அறிவுலகம் இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது  வேதனைக்குரியது.  

     பழைய பாடநூல்களில் குடவோலை பற்றி இவ்வளவு விதந்தோதியது இல்லை. தமிழ், தமிழர் பெருமை என்று பாடத்திட்ட இலக்கணம் வகுத்தபோதே எச்சரிக்கை செய்திருந்தேன். இதன் மூலம் சாதிப்பெருமையும் பிற்காலச் சோழப்பெருமையுந்தான் பேசப்படுமென்று. அது தொடர் உண்மையாகியுள்ளது. 

      குடவோலை முறை பற்றிய பொய்களையும் புனைவுகளையும் மிக அபத்தமான படங்களுடன் வெளியிட்டு புராணங்களை வரலாறாக்கும் இவர்கள் இதன் மூலம் சொல்ல வருவது என்ன? மநுநீதிச் சோழன் போன்ற புராணப் புனைவுகளையும் குடவோலை போன்ற சாதியச் சடங்குகளையும் உன்னதமாகப் போற்றிக் கொண்டாட இங்கு பெருங்கூட்டமே காத்திருக்கிறது. இதன் பின்னாலுள்ள அரசியல், சமூகச் செயல்பாடுகள், ஆதிக்க, பாசிசக் கூறுகள் மிகக்கடுமையாக எதிர்கொள்ளப் படவேண்டியன.   
   
                                           (தொடரும்…) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக