வெள்ளி, ஜனவரி 25, 2019

‘கல்வி அறம்’ நூல் முன்னுரையிலிருந்து…


‘கல்வி அறம்’ நூல் முன்னுரையிலிருந்து… 

மு.சிவகுருநாதன்


(42 –வது சென்னைப் புத்தகக் காட்சியின் இறுதி நாளன்று -ஜனவரி 20, 2019 -  ‘கல்வி அறம்’ எனும் எனது இரண்டாவது நூல் வெளியானது. பாரதி புத்தகாலயத்தின் ‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் முன்னுரையிலிருந்து சில பகுதிகளும் நூல் விவரமும் இங்கு தரப்படுகிறது.)
             நமது நாட்டில் கல்விசார் நெருக்கடிகள் ஏராளம். இதற்கு அரசின் கொள்கைகள், செயல்பாடுகள், கல்விசார் சமூகத்தின் அலட்சியம் போன்ற பல்வேறு காரணிகள் உள்ளன. அவைகள் அவ்வளவு எளிதில் களையப்படும் என்று நம்பும் சூழல் இல்லை. மாற்றங்களைப் பற்றி வெளியே எவ்வளவுதான் பேசினாலும் உள்ளுக்குள் நடக்கும் செயல்கள் அவற்றிற்கு முரணாகவே அமைகின்றன. கல்வியை வெளியே நின்று அணுகுவதும் அதன் அமைப்பு உள்ளிலிருந்து அணுகுவதும் முற்றிலும் வேறுபட்ட பார்வைக் கோணங்களைத் தரும். 

   மெக்காலே கல்விமுறை குறைபாடுடையது என்று கருதும் நமது ஆசிரியச் சமூகம் பெரும்பாலும் குருகுலக்கல்வியிடந்தான் சரணடைகிறது. இதற்கு  மெக்காலே கல்விமுறை எவ்வளவோ பரவாயில்லைதானே! உலகமயத்திற்குப் பின்பு கல்வியின் முகம் பெரிதும் மாற்றமடைந்துள்ளது; கூடவே ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் முகங்களும். 

   +1 மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, +1 மதிப்பெண்கள் மற்றும் மொழித்தாள்கள் குறைப்பு, கலைப் பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு முறை, புதிய பாடத்திட்டம் – பாடநூல்கள் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தபோதிலும் இறுதியில் இவற்றைப் பின்னுக்கு இழுக்கும் சக்திகள் வெற்றியடைவது கல்வியின் இன்றைய இழிநிலையை உணர்த்துவதாக உள்ளது.  +1 மதிப்பெண்கள் மேற்படிப்பிற்குத் தேவையில்லை, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தோல்வியடைந்த +1 மாணவர்கள் நீக்கம் ஆகியன நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. 

    பாடத்திட்டம் – பாடநூல் மாற்றங்கள், புதிய தேர்வு முறைகள் ‘நீட்’ போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்கும் ஆயிரங்கணக்கானவர்களை மட்டும்  முதன்மைப்படுத்தியிருக்கும் சூழலில் கல்விப் புலத்திலுள்ள லட்சக்கணக்கிலான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. அனைவருக்குமான வாய்ப்புகள், தேர்ச்சி, இடம் ஆகியன உறுதி செய்யப்படுவதுதான் சமூக அறமாக இருக்க முடியும். ஆனால் நடைமுறை எதார்த்தம் வேறு மாதிரி உள்ளது. இவற்றைக் களைய பெரும்பான்மையான கல்விசார் சமூகம் எவ்வித முயற்சியுமின்றி வேறு வழிகளில் பயணிக்கிறது. 

   +1, +2 மாணவர்களுக்கு அளிக்கும் சலுகைகளை 9, 10 மாணவர்களுக்கும் அளித்தால் கல்வியின் தரம் குறைந்துவிடுமா என்ன? 200, 150, 100 மதிப்பெண் தேர்வுகளை அகற்றி, 70, 90 என மாற்றியது புரட்சி என்றால் இன்னும் 10 ஆம் வகுப்பில் 75, 100 மதிப்பெண் தேர்வுகள் ஏன்? அடுத்தக் கல்வியாண்டில் (2019 -2020) 9 ஆம் வகுப்பிற்கும் இது நீளுமே! 

   மாணவர்களுக்குப் பல்வேறு விலையில்லாப் பொருள்களை வழங்கும் தமிழக அரசு மாணவர்கள் துளியும் விரும்பாத தேர்வு வினாத்தாளுக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பது அறமாகுமா என்று கேட்கத் தோன்றுகிறது. ‘கஜா’ புயலின்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் வினாத்தாள் தொகை வசூலிக்கப்பட்டது சர்ச்சையானது. ஆனால் தமிழகம் முழுமையும் இதுதானே நடைமுறை! காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத்தேர்வுகள் மற்றும் முப்பருவத் தேர்வுகளுக்கும் வினாத்தாள் கட்டணம் மொத்தமாகத் தொடர்ந்து வசூலிக்கப்பட்டுதான் வருகிறது. 

   பள்ளிக் கட்டடங்களின் தரமின்மை, பள்ளி நடைமுறைகளில் காணப்படும் சாதி மற்றும் பாலினப் பாகுபாடுகள், கழிவறை, குடிநீர், விளையாட்டிடம் போன்ற அடிப்படை வசதிகளின்மை போன்றவை நீதிமன்றங்கள் உத்திரவிட்டும் இன்னும் நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணினி, அறிவியல், மொழியியல் ஆய்வகங்கள், Smart Class ஆகியன இருக்க வேண்டுமல்லவா!

   பாடக்குறிப்புகள், (இப்போது ‘பாடத்திட்டம்’ ஆகிவிட்டது!) கற்பிக்கும் முறைகள் ஆகியவற்றைத் திணிக்கும் கல்வித்துறை ஆசிரியர் கல்விப் (பட்டயப் பயிற்சி, இளங்கலைப் பட்டம்) படிப்புகளில் புதியப் பாடத்திட்டம், நவீன கற்பிக்கும் முறைகள், புதிய உத்திகள் என மேம்பட்ட மாற்றங்கள் எதையும் அறிமுகம் செய்வதில்லையே, ஏன்? ஆசிரியர்கள் சமூக ஊடகங்களில் பாடக்குறிப்புகள், விடைக்குறிப்புகள், நோட்ஸ்கள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்வதுதான் பெருமளவில் நடக்கிறது. 

   ஆசிரியர்களுக்கு அதிக நாள்கள், நேரங்கள் பணியிடைப் பயிற்சிகள் அளித்துவிட்டால் மட்டுமே போதுமானது என்கிற என்கிற ‘குளிர் சாதன அறைத் திட்டங்கள்’ மாறுவது எப்போது? பயிற்சியின் தரத்தில்  வெறுமனேக் கூடிக் களைந்து, பொழுது போக்குதல் என்பதைத்தவிர நடக்கும் முன்னேற்றம் என்ன என்பதை கல்வித்துறை ஆய்வு செய்ததுண்டா?

   கட்டாயத் தமிழ் வழிக்கல்வி தொடக்க நிலையில் கூட இன்றும் சாத்தியமில்லாத நிலையே நீடிக்கிறது. இங்கு தமிழ் உணர்வுகளைத் தூண்டி நன்மை தேடும் அரசியல் பேசுபொருள் மட்டுமே. தொடக்கநிலையில் ஆங்கில வழியில் பயில்வோர் மேல் வகுப்பில் தமிழ் வழிக்கு வருவது அரிது. தமிழ் வழிப் பாடநூல்களின் மொழி நடை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆங்கில வழிக்குத் துரத்தவே செய்கிறது. தொடக்க நிலையில்கூட தமிழில் பாடங்கள் எழுதப்படாமல் ஆங்கிலத்தில் எழுதி மொழிபெயர்ப்பதன் விளைவு இது. இதைப் பற்றிய முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

   வளரிளம்பருவக் குழந்தைகளை நெறிப்படுத்த பாலியல் கல்வி போன்ற வாய்ப்புகளைக் கல்வி தவறவிடலாகுமா? வெறும் அறிவு, ஒழுக்கம் ஆகியனவற்றை மட்டும் முன்நிறுத்தாமல் பவுத்தம் போன்ற இந்திய அவைதீக மரபுகள் முன்னிறுத்திய அறம் என்னும் சொல்லாடலை நமது கல்விமுறை கைக்கொள்ள வேண்டும். அதுவே கல்வியை வளப்படுத்தும் வழி. கல்வியில் அக்கறையுள்ள அனைவரும் தொடர்ந்து விவாதித்து கல்வியை மேம்படுத்துவோம். 


  
நூல் விவரங்கள்:
கல்வி அறம்
மு.சிவகுருநாதன்

வெளியீடு: Books for Children (புக்ஸ் ஃபார் சில்ரன்)

(பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்)

முதல்பதிப்பு: டிசம்பர்  2018

பக்கங்கள்: 174

விலை:  ரூ. 150

தொடர்பு முகவரி: 

பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24356935, 24332924

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
 
இணையம்: www.thamizhbooks.com

வாட்ஸ் அப்: 8778074939

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக