வெள்ளி, ஜனவரி 18, 2019

மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி முறையை விளங்கிக்கொள்ளல்.


மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி முறையை விளங்கிக்கொள்ளல்.


 (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 02) 
 
மு.சிவகுருநாதன்

 (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் -  குடிமையியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.







    “கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள், கிராம ஊராட்சி என்று அழைக்கப்படுகின்றன. தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (18 வயது பூர்த்தியடைந்தோர்) அவர்களது பணிக்காலம் 5 வருடங்கள் ஆகும்.  கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார். ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமமும் கிராம ஊராட்சியாக உருமாறியுள்ளது”. (பக்.138, 9 சமூக அறிவியல்)

     ‘18 வயது பூர்த்தியடைந்தோர்’ என்று அடைப்புக்குறிக்குள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இது தேர்ந்தெடுக்கப்படுபவரின் வயதா, அல்லது வாக்களிக்கும் வயதா? பின்னது சரி; முன்னது தவறு. உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட குறைந்தபட்ச வயது 21 ஆகும். அதைப்போல சிற்றூராட்சிக்கு குறைந்த பட்ச மக்கள் தொகை 500 தானே தவிர 500 இருந்தால் அது அதை கிராம ஊராட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ‘உருமாற’வேண்டாம், உருவாகியுள்ளது எனச் சொல்லுங்கள்! 

   “ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம் மற்றும் பதவிக்காலம் நிறைவடையும் முன்பாகவே தேர்தல்கள் நடத்தப்பெற்று, புதிய அமைப்புகள் உருவாக்கப்படுதல்  வேண்டும். ஆட்சி கலைக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்”. (பக்.137, 9 சமூக அறிவியல்) என்று சொல்லிவிட்டு இரு ஆண்டுகளாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாமல் நிர்வாகம் முடங்கியிருப்பதை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. தேர்தல் நடக்கவில்லை என்கிற விவரத்தைக் கூடவா சொல்லக்கூடாது?  பிறகேன்,   “உன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியைச் சந்தித்து உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்ற விவரங்களை சேகரி”,  (பக்.144, 9 சமூக அறிவியல்) என்று செயல்பாடுகள் தர வேண்டும்?

  ஆறாம் வகுப்பிலும், “தங்கள் பகுதியில் உள்ள உள்ளாட்சி உறுப்பினர்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும். (பக். 229) என்று செயல்பாடு கொடுக்கப்படுகிறது. 2016 லிருந்து  உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதைச் சொல்லாமல் மறைத்து என்ன செய்யப் போகிறோம்?

     தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 இன் படி சிற்றூராட்சியின் கட்டாயக் கடமைகள் (பிரிவு:110), விருப்பக் கடமைகள் (பிரிவு:111) ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன. 



   “வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சிக் கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்”. (பக்.138, 9 சமூக அறிவியல்) ஆங்கில வழியில் “Maintenance of parking vehicle, slaughter houses and cattle sheds” (page: 120) என்று உள்ளது. ‘Maintenance of parking vehicle’ என்பதை ‘வாகன நிறுத்துமிடப் பராமரிப்பு’ என்று மொழிபெயர்க்காமல் “வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள் பராமரிப்பு”, என்று மொழிபெயர்க்கும் சான்றோர்களை என்ன செய்யலாம்? குருத்வாராக்களில் காலணிகளைத் தூய்மை செய்து தருவதைப்போல வாகனங்களை கழுவித் தூய்மை செய்து தருவார்களோ என்னவோ? மேலும் ‘cattle sheds’ என்பது ‘கால்நடைகளின் கொட்டகை’களைவிட ‘கால்நடைத் தொழுவங்கள்’ எனச் சொல்லலாமே!


   ‘துவக்கப்பள்ளி’ (பக். (பக்.140, 9 சமூக அறிவியல்) என்று பாடநூல் சொல்கிறது. துவக்கம், துவக்கு ஆகியன வேறு பொருள் தருவன. தொடக்கப்பள்ளி என்பதே சரி.

    “மாநகராட்சி  அலுவலகம் இவரது செயல்பாடுகளுக்கு உதவுகின்றது”. (பக்.141, 9 சமூக அறிவியல்) “He will be assisted by the office of the corporation”. (page: 122). இப்படித் தெளிவான மொழியாக்கங்களைக் கண்டு பெருமை கொள்க!   
        
  உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்களில், “உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன”. (பக்.142, 9 சமூக அறிவியல்) என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் சாதியம், மதம் ஆகியன செயல்படாத களங்கள் உண்டா? இவைகளையும் தாண்டி மக்களை நோக்கி அதிகாரம் செல்வதை ‘பஞ்சாயத்துராஜ்’ சட்டங்கள் உறுதி செய்கின்றன. ‘காஃப்’ பஞ்சாய்த்து போன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க இவை பெரிதும் உதவி புரிகின்றன.  எனவே இவை உள்ளாட்சி அமைப்பிற்கான சவால்கள் மட்டுமல்ல. “கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவது”. (பக்.138, 9 சமூக அறிவியல்) என்பது போன்ற ஆளும் அதிகார வர்க்க நடவடிக்கைகள், ஊழல்கள், குறித்த கால இடைவெளியில் தேர்தல் நடத்தாதது  ஆகிய பல காரணங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை. 

   ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. (பக்.140, 9 சமூக அறிவியல்) இது தவறு. ஆறாம் வகுப்பில் 32 மாவட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கும்போது ஏன் 31 மாவட்ட ஊராட்சி என்ற சிந்தனை வினா வருகிறது. இதைப் பாராட்டலாம். “சென்னை மாவட்டம் தவிர்த்த பிற மாவட்டங்களில்  மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது”, என்று சொல்வதே சரி. கிராமப்புற உள்ளாட்சி என்பதையும் மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி முறையும் தெளிவாக விளக்கிச் சொல்வதேயில்லை. 9 சமூக அறிவியல் பக்.142 இல்  முக்கோண விளக்கப்படம் ஒன்றுள்ளது. மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி முறையை ஆற்றல் முக்கோணம் போல விளக்க இயலாது. இது வெறும் எண்ணிக்கை அடிப்படையிலானது மட்டுமல்ல; அதிகாரப் பகிர்வின் ஓர் அங்கம். 




   மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி முறையை தகுந்த விளக்கப்படம் மூலம் விளக்க 6, 9 ஆகிய இரண்டு வகுப்பிலும் உரிய முயற்சி இல்லை. மாணவர்களைவிட ஆசிரியர்களுக்கும் இதில் பெருத்தக் குழப்பம் உண்டு.

“மேலும் ஒன்பது கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய பயோமாஸ் (gasifier) என்னும் அமைப்பினை உருவாக்கி அனைத்து கிராமங்களுக்கும் தேவையான குடிநீரை இறைக்க பயன்படுத்துகின்றனர்”, (பக். 142, 9 சமூக அறிவியல்) ஆங்கில வழி கீழ்க்கண்டவாறு இருக்கிறது. “Moreover the panchayat had installed a 9 kw biomass gasifier Power generation system to substitute the grid electricity for pumping drinking water. (page: 123)

   ‘biomass gasifier’  என்பது ‘பயோமாஸ்’ (gasifier) எனத் தமிழில் மாற்றமடைவது ஏன்? உயிரிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை இருமொழிச்  சொற்களாகக் குழப்பது ஏனோ?

  ஒன்பதாம் வகுப்புக் குடிமையியல் பகுதி:  ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒற்றை ஆட்சிமுறை அம்சங்கள்’ என்ற தலைப்பில் ‘அரசியமைப்பின் நெகிழ்வுத்தன்மை’ (பக்.129) என்றும் ‘இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி முறை’ அம்சங்களில் ‘நெகிழும் தன்மையற்ற அரசியல் அமைப்பு’, (பக்.130) என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஓரிடத்தில் நெகிழும் தன்மை என்றும் பிறிதோரிடத்தில் நெகிழாத தன்மை என்பது ஏன்? இவற்றில் எது சரி? ஒன்றா அல்லது இரண்டுமா?

   ஆங்கில வழியில், ‘Flexibility of the Constitution’ (page: 111) ‘Rigid  Constitution’ (page: 112) என்றும் சொல்லிக் குழப்பது ஏன்?

    “அதிபர் மக்களாட்சி முறை என்பது சட்டமன்றத்திற்குப் பொறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாகம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும்”. (பக்.131, 9 சமூக அறிவியல்)  இது உங்களுக்குப் புரிகிறதா? புரிந்தால் கொஞ்சம் விளக்குங்களேன்! ஆங்கில வழியின் பத்தியையும் இத்துடன் தருகிறேன். முயன்றுப் பார்க்கவும்!

    “The Presidential Form Of Government is also known as non - responsible or non - parliamentary or fixed executive system of government, basically built on the principle of separation of power and is prevalent in USA, Brazil, Russia and Sri Lanka among others”. (Page: 112)

   “இந்த இமாலய அரசின் எதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சிக்குப் புத்துயிர் அளிக்கப் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் கோரினர்”. (பக்.131, 9 சமூக அறிவியல்)

  “The millions of citizens who made up the people's movement demanded an end to autocratic rule of monarchy and Restoration of total democracy in the Himalayan kingdom”. (Page: 113)

   ‘இமாலய அரசு’ இமயமலையிலுள்ள நேபாள அரசு என்பது புரிகிறது. ஆனால் ‘இமாலய’ என்று சொல்வதற்கு வேறு பொருளும் உண்டே! பூடானும் ‘இமாலய’ அரசு தானே! இமாலய (மிகப்பெரிய) அரசாக நேபாள அரசைக் கற்பனைச் செய்தால் அது ‘இமாலய’த் தவறாகப் போய் முடியுமே! நேபாள அரசு என்று சொல்லிவிடுவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்ன?

  “It is important for children about road safety rules and regulations. Here are few basic road safety rules for children” (page: 130) என்று ஆங்கில வழியில் இருக்கும் வரிகளில் “குழந்தைகள் சாலை பாதுகாப்பு விதிகளைத் தெரிந்துகொள்வது இன்றியமையாதது  எனினும் அவர்களின் எல்லைக்கு மேல் தகவல்களைத் திணிக்கக்கூடாது. குழந்தைகளுக்கான சில அடிப்படை சாலை பாதுகாப்பு விதிகளைக் காண்போம்” (பக். 149, 9 சமூக அறிவியல்) என்று கூடுதலாகத் திணிப்பது ஏன்?

    வான்சுக், வாங்சுக் என்று தமிழில் மாற்றி மாற்றி எழுதுவதைப் போலவே ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவாறு எழுவதை மாற்றிக்கொண்டால் நல்லது. ‘Jigme Khesar Nangyel Wanchuck’ (பக்.131, தமிழ்வழி), Jigme Khesar Namgyel Wangchuck (page: 113, ஆங்கில வழி)

     கலைச் சொற்கள் பட்டியலில், “குடியுரிமை - எந்த ஒரு நாட்டிலும் வாழ்வதற்கான உரிமை” (பக்.134, 9 சமூக அறிவியல்) என்று எழுதுவது எவ்வளவு அலங்கோலம்? ஒரு நாட்டின் குடியுரிமை பெற்றுவிட்டால் எந்த நாட்டிலும் வாழ முடியுமா? ‘எந்த’ என்ற சொல் இங்கு தேவையற்றது மட்டுமல்ல; உண்மைப் பொருளையும் சிதைப்பது.

    ஆங்கில வழியிலும் குழப்பம் தொடர்கிறது. ‘District Panchayat’ (page: 121) பயிற்சிகளில்  ‘Zilla Parishad’ (page: 125) என்று மாறுவதேன்?
‘பொருத்துக’ பயிற்சி  (பக்.148, 9 சமூக அறிவியல்) கீழ்க்கண்டவாறு உள்ளது. இதை நீங்கள் பொருத்திக் காட்டுங்கள் பார்க்கலாம்!


  •   மாவட்ட ஊராட்சி – கிராமங்கள்
  •   கிராம சபைகள் – மாநகரத் தலைவர்
  •   பகுதி குழுக்கள் – பெருந்தலைவர்
  •   ஊராட்சி ஒன்றியம்  - மாவட்ட ஆட்சியர்
  •   மாநகராட்சி – நகராட்சிகள்  
  
    ஊராட்சி ஒன்றியத் தலைவரைப் ‘பெருந்தலைவர்’ என்றழைக்கக் கூடாது என அரசாணை கூட போடப்பட்டுள்ளது. நகராட்சியின் பெருந்தலைவராக பெரியார் இருந்தார் என்ற  குறிப்பும் பாடநூலில் உண்டு. (பக்.141).      


    ஆறாம் வகுப்பு குடிமையியல் பகுதி மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. மறைமுக மக்களாட்சி என்று சொல்லாமல் பிரதிநிதித்துவ மக்களாட்சி (  Representative Democracy) என்று குறிப்பிட்டதற்கு பாராட்டலாம். (பக். 218)

“அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1920 ஆம் ஆண்டுதான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் இந்தியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது”. (பக். 221)

சென்னை மாகாண நீதிக்கட்சி அரசில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டதை (1921) சொல்லியிருக்கலாம் . ‘ஓட்டுரிமை’ என்பதை 'வாக்குரிமை'யாக்குதல் நலம். 

   “ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லவா? (பக். 226) என்று சொல்வது தவறு. மக்கள்தொகை அடிப்படையில் ஒன்றிற்கு மேற்பட்ட (இரு) ஊராட்சிகளுக்கும் ஒரே ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இருப்பதும் உண்டு.  மக்கள்தொகை அடிப்படை தானே தவிர ஊராட்சி அடிப்படையில் ஒன்றியக்குழு உறிப்பினர் எண்ணிக்கை இல்லை.

   ஒன்பதாம் வகுப்பைப் போலில்லாமல் கிராம சபைக் கூட்டப் படம் பாகுபாடு இல்லாத வகையில் உள்ளது. திரைப்படங்களில் வரும் ‘மரத்தடிப் பஞ்சாயத்து; படங்களைப் போடுவது மிக மோசமானது. கிராமசபைக் கூட்டத்தில் யாருக்கும் சிறப்புரிமையோ, தகுதியோ வழங்கக்கூடாது; கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் சமதளத்தில் அமரவேண்டும் என்பது விதி. மக்கள் தரையில் அமர்ந்திருக்கும்போது மாவட்ட ஆட்சியரும் தரையில்தான் அமரவேண்டும். முன்பொருமுறை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் ஆலங்காடு ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தரையில் அமர, அவரது காலணிகளை (shoes) உதவியாளர் கைகளில் வைத்துக்கொண்டே நின்றது சர்ச்சையானது நினைவிருக்கலாம்.

    “கிராம சபைக் கூட்டத்தில், மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரடியாகச் சொல்லலாம்”. (பக். 228) என்று சொல்லியிருப்பதும் நன்று. ஆனால் ஒன்பதாம்வகுப்பில், “கிராம சபை கூட்டங்களில், வரவு செலவு கணக்குகளும், திட்டங்களினால் பயனடையந்தோர் பற்றியும் கலந்துரையாடப்படும்”. (பக்.138) என்று கிராமசபையின் நோக்கங்களையும் சட்டக்கூறுகளையும் சிதைப்பது சரியல்ல.  

    இருக்கைப் பட்டையை மட்டும் சொல்லிவிட்டு, தலைக் கவசம் அணிவது பற்றி ஏதுமில்லை. ஜீப்ரா கிராசிங், இருக்கை பெல்ட் என்றெல்லாம் எழுத்வதை எப்போது மாற்றிக்கொள்ளப் போகிறோம்?

    “பாதசாரிகள்: கவனக்குறைவு, கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது”.  என்று காரணங்களைப் பட்டியலிட்டு “பாதசாரிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்? (பக்.148, 9 சமூக அறிவியல்) என்று வினா எழுப்பப்படுகிறது? பாதசாரிகளுக்கான விதிகளை இதுவரையில் சரியாகச் சொல்லிக் கொடுக்காமல் கல்வியறிவின்மை என்பது அபத்தம். வலப்புறத்தில் நடக்கும் பாதசாரிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இதுவரைத் தவறாகவேச் சொல்லிக் கொடுத்துவிட்டு ‘கல்வியறிவின்மை’ எனக் கடந்துவிடுவது வேதனை.

   “நடைபாதை இருக்கும் இடங்களில் சாலைகளின் இரு பக்கங்களிலும் நடக்கலாம்”, “நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிர் வரும் வாகனங்களை நோக்கி வலப் பக்க ஓரத்தில் நடக்க வேண்டும். (பக். 237) என்ற உண்மையை முதலில் சொன்னப் பாடநூல் என்ற பெருமை இதற்குக் கிடைக்கிறது”. 


                              (தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக