செவ்வாய், ஜனவரி 17, 2023

தமிழர் – தமிழ் -  தமிழகம்: தொன்மையும் வரலாறும்

 

தமிழர்தமிழ் -  தமிழகம்: தொன்மையும் வரலாறும்

(விவாதத்திற்கான சில குறிப்புகள்)

மு.சிவகுருநாதன்


 

 

          தமிழர் தமிழ்தமிழகம் என்ற இணைவின் தொன்மை, வரலாறு, மானுடவியல், நிலம், அரசியல், பண்பாடு, மெய்யியல், கலைகள், பொற்காலம், இருண்ட காலம், அந்நியர் போன்ற பல்வேறு தளங்களில் நமக்கான தெளிவை உண்டாக்க வேண்டிய தேவையிருக்கிறது. தமிழர்களின் வரலாற்றை எங்கிருந்து தொடங்குவது? சிந்துவெளியிலிருந்தா அல்லது கீழடியிலிருந்தா? எதிலிருந்து தொடங்குவது சரியாக இருக்கும்?

        ஹரப்பா (பஞ்சாப்), மொகஞ்சதாரோ (சிந்து), ராகிகர்கி (அரியானா), தோலவிரா (கட்ச்குஜராத்), கன்வேரிவாலா (சோலிஸ்தான் பாலைவனம்) போன்ற பல இடங்களில் சிந்துவெளி நகர நாகரிக எச்சங்கள் கிடைத்துள்ளன.  இங்கு கிடைத்த கரிம மாதிரிகளைக் கொண்டு இவற்றின் காலம் கி.மு.2600-1900 கால கட்டத்தைச் சேர்ந்தவை என நிருபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியில் கிடைத்த பல்வேறு பொருள்களையும் கட்டுமானங்களையும்  நாமறிவோம்.  

       கீழடியில்   கிடைத்த கரிம மாதிரி ஆய்வுகள் கி.மு.6ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு.3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட அதாவது இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. செங்கல் கட்டுமானம், மிருதுவான மண் பூச்சு, தமிழி எழுத்துகள் (தமிழ் பிராமி), மணிகள், வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், காதணிகள், வளையல்கள், இரும்புப் பொருள்கள், நூல் நூற்கும் தக்களி, கொம்புகள், சுடுமண் அச்சுகள், சுடுமண் உருவங்கள், உறை கிணறுகள், தங்க அணிகலன்கள் போன்ற பல்வேறு தடயங்கள் கிடைத்துள்ளன.   

      கீழடியில் காணப்படும் சில குறியீடுகள் சிந்துவெளி முத்திரை எண்கள்: 225, 307, 318, 347, 365 ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகின்றன. கொடுமணல், அழகன்குளம், பொருந்தல் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாய்வு காலக்கணிப்பின்படி தமிழ் பிராமி எனப்படும் தமிழியின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு என்பதை கி.மு. 6 நூற்றாண்டு என்று முன்தள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

        திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம் முதல்கட்ட தொல்லியல் அகழ்வாய்வில் கிடைத்த கீழ் பழங்கற்காலக் கருவிகள் (Lower Palaeolithic) 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்த இடைப் பழங்கற்காலக் கருவிகள் (Middle Palaeolithic)  3,85,000 ஆண்டுகள் பழமையானது எனவும் நிறுவப்பட்டன. இரும்புகாலத்தைச் சேர்ந்த சேலம் மாங்காடு, தெலுங்கனூர் போன்ற இடங்களிலுள்ள பெருங்கற்படை ஈமச்சின்ன மாதிரிகளிலிருந்து இரும்புக்காலம் கி.மு. 2000 என்ற முடிவும் பெறப்பட்டுள்ளது.

       ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளில் எடுக்கப்பட்ட கரிமங்களின் காலக்கணக்கீடு கி.மு. 9 ஆம் நூற்றாண்டு என்று தெரிய வருகிறது.        சிந்துவெளி கீழடி இரண்டிற்குமுள்ள தொடர்பு, தென்னிந்தியப் பகுதிகளில் நகரமயமாதல் தொடக்கம், தமிழ் பிராமி எழுத்துகளின் காலம் ஆகியன பற்றிய புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் பெற்றிருந்த கல்வியறிவும் எழுத்தறிவும் காணக் கிடைக்கிறது.

          கரிமக் காலக்கணக்கீடுகள், மரபணு ஆய்வுகள்  போன்றவை அறிவியல் பூர்வமாக உலகளவிலான அங்கீகாரத்தைப் பெறுகின்றன. ஆனால் சிந்துவெளி சித்திர எழுத்துப் புதிர்களை ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்றோர் ஓரளவிற்கு விடுவித்திருந்தாலும் இன்னும் பலரால் ஏற்கப்படவில்லை. ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகள் போன்று இன்னும் பல்வேறு வகையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான்  சிந்துவெளி புதிர்கள் முற்றிலுமாக விடுவிக்கப்படும். பூர்ண சந்திர ஜீவாவின் சிந்துவெளியில் முந்துதமிழ்மற்றும் பேரா. இரா.மதிவாணன் சிந்துவெளி நாகரிக மற்றும் எழுத்தாய்வுகள் இங்கு எவ்வாறு அணுகப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்படும் ஆய்வுகளுக்கு மட்டுமே ஆங்கீகாரம் கிடைக்கும் என்கிற நிலையும் உள்ளது.

      இதுவரையிலான தொல்லியல் அகழ்வாய்வுகள் போதுமானவையா? தற்போதைய தமிழகம் தாண்டியும் ஆய்வுகள் நடைபெற வேண்டிய தேவை உள்ள நிலையில் தமிழகத் தொல்லியல் துறை மட்டும் செயல்படுவது போதுமானதல்ல. அறிவியல்பூர்வமான நிரூபணங்களை அகலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கிரேக்க ரோமானிய மற்றும் பன்னாட்டு வாணிகத் தொடர்புகளை இன்னும் விரிவாக ஆய்வு செய்ய  உலகளாவிய ஆய்வுத்தடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

      மயிலாடுதுறைசெம்பியன் கண்டியூர், கோயம்புத்தூர்ஆனைமலை, மதுரைகோவலன்பொட்டல், ஈரோடுகொடுமணல், கரூர்நெடுங்கூர் போன்ற இடங்களில் பெருங்கற்காலப் பொருள்கள் கிடைத்தன.                                                                                                                                                                                               திருநெல்வேலிமாங்குடி, இராமநாதபுரம்தேரிருவேலி, விருதுநகர்திருத்தங்கல் போன்றவற்றில் நுண்கற்கால அடையாளங்கள் காணப்பட்டன.   திருவள்ளூர்பரிக்குளத்தில் பழையகற்கால அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.  

      தூத்துக்குடிகொற்கை, காஞ்சிபுரம்வசவசமுத்திரம், கரூர், தருமபுரிபனையகுளம், இராமநாதபுரம்தொண்டி, கள்ளக்குறிச்சி  திருக்கோவிலூர், மயிலாடுதுறைபூம்புகார், கடலூர்மாளிகைமேடு,  கோயம்புத்தூர்பேரூர், திருவண்ணாமலைஆண்டிப்பட்டி, மதுரைமாங்குளம் போன்ற இடங்களில் தொடக்க வரலாற்றுக்காலப் பொருள்கள் அகழ்வாய்வில் கிடைத்தன. கீழடியில் நடந்ததுபோல  அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், பொருந்தல், அகழ்வாய்வுகளின்   அடுத்த கட்ட நிலை? ஆனால் இவ்விடங்களில் அடுத்தக்கட்ட ஆய்வுகள் நடைபெறவில்லை. தொல்லியல் ஆய்வுகள் இன்னும் அகலிக்க வேண்டும் என்பதையே இவை உணர்த்துகின்றன. பூம்புகார் போன்ற இடங்களில் கடலடி அகழ்வாய்வுகளும் விரிவான அளவில்  நடைபெற வேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

            சங்ககாலம் (கி.மு.300–கி.பி.300) பற்றிய சொல்லாடல்கள், கட்டமைப்புகள் பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளினடைப்படையில் அமைகின்றன. இவற்றை அறிவியல் பூர்வமாக நிருபிக்க தொல்லியல் சார்ந்த தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றைப் பெற நாம் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள், நேர்மையான ஆய்வுகளின் திசைவழியைக் காணமுடிகிறதா? மேலும் இலக்கிய வழி ஆய்வியலிலும் புதிய முறையியலையும் அறிவியல் அணுகுமுறையையும் புகுத்தமுடியும். அக்கால இணைமொழி நூல்களை விரிவாக ஆய்வு செய்யவும் வேண்டும்.

       தமிழர்களின் நிலம் எது? தொல்காப்பியம் சுட்டும் ஐவகை நிலம் எதில் அடங்குகிறது?  குமரிக்கண்டம் எனும் லெமூரியாவா? குமரிக்கண்டம் போன்ற அறிவியல் பூர்வமற்ற புனைவை இன்னும் எவ்வளவு காலம் தூக்கிச் சுமக்க முடியும்? தமிழர்களின் தொன்மையை மனித இனம் தோன்றியிராத டினோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு நீட்டிக்க வேண்டிய அரசியல் தற்போது தேவையில்லை.

         குமரிக்கண்டம் (லெமூரியா) குறித்து ஆய்வாளர் சு.கி.ஜெயகரன் எழுதியகுமரி நில நீட்சிநூலுக்கு முன்னுரை எழுதியுள்ள அறிஞர் எஸ்.வி.ராஜதுரை, “அறிவியல் நலன் கருதி லெமூரியா கருதுகோள்களை இனியேனும் கைவிட்டுவிடுவதுதான் அறிவுடைமைஎன்கிறார். இந்நூலில் சு.கி.ஜெயகரன், ஆரியர்களின் மேன்மையை வலியுறுத்த பிரம்ம ஞான சபையினரால்  கண்டுபிடிக்கப்பட்ட ஓர் கற்பனைக் கோட்பாடு இது. இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள், கிழக்கத்திய மறைஞான நூற்கள், உள்ளுணர்வு (Intution), புலன் கடந்த உணர்வு (Extra sensor Perception) ஆகியன மட்டுமே, என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

     கடல்கோள்கள் நிறைய நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கியிருக்கின்றன. இன்றிருக்கின்ற தமிழகத்தின் சிலபகுதிகள் கடலால் அழிபட்டிருக்கிறது. இது குமரிக்கண்டமல்ல; குமரி நிலநீட்சி என்பதை அறிஞர் சு.கி.ஜெயகரன் தெளிவான அறிவியல். நிலவியல், வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

     மேலும் தமிழ் மொழிக்கு இருக்கின்ற தொன்மை போதுமானது. இன்றைக்கு முன் (இ.மு.) 35,000 ஆண்டுகளுக்கு முன்னதாக உலக அளவில் நடைபெற்ற நாகரிக வளர்ச்சியை இந்நூலில் ஆசிரியர் பட்டிலிட்டு அவற்றைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறார். அதைப்போல தமிழ்நாட்டு நாகரிக வளர்ச்சியை சங்காலியா பகுப்பில் அடிப்படையில் இ.மு. 50,000 – 75,000 முதல் ஆறுகட்டங்களாகப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.  

       வரலாற்றில் பொற்காலங்களுக்கும் இருண்ட காலங்களுக்கும் என்றும் இடமில்லை. ஆனால் இத்தகைய கட்டமைப்புகள் தமிழின் பெருமிதங்களாகப் போற்றப்படுகின்றன. இதன் பின்னாலுள்ள அரசியல் சொல்லாடல்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதா? இடைக்காலத்தில் உற்பத்தியான பொற்காலச் சொல்லாடல் சங்ககாலத்தில் ஏன் இல்லை? பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் பக்தியிலக்கிய காலகட்டம் தமிழர் தமிழ் தமிழகம் அடையாளமாக வலிந்து திணிக்கப்படுகிறது.

        எடுத்துக்காட்டாக, பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் பிரம்மதேயங்களின் திருவுளச்சீட்டு முறையானகுடவோலைமுறை மக்களாட்சியாக விதந்தோதப்படுகிறது. சங்ககாலத்திலேயே  குடவோலை முறை  இருந்ததாகச் சொல்லப்படும்  மருதன் இள நாகனாரின் அகநானூற்றுப் பாலைநிலப் பாடல் (77)  துணைக்கழைக்கப்படுகிறது. “குடத்திலிட்ட ஓலைகளை எடுப்பதைப் போல கழுகு போர்க்களத்தில் இறந்த வீரனது உடலிலிருந்து குடலை எடுக்கும்”, என்பதான உவமை இந்த அகப்பாடலில் சொல்லப்படுகிறது. இது சங்ககாலம் எனப்படும் கி.மு. 300 – கி.பி. 300 காலப்பகுதியைச் சேர்ந்த இந்த இலக்கியச் சான்றுக்கு உத்திரமேரூர் கல்வெட்டுகள் இரண்டையும் (காலம்: கி.பி. 916, 921) இணைத்துக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வரலாறாக்கும் வேலையை பலர் செய்து வருகின்றனர். இதன் பின்னணிகளை அறியாது தமிழ் அறிவுலகம் இதை ஆய்வாகக் கொண்டாட இயலாது என்பதையும்  உணர வேண்டும்.

       கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார் போன்ற வரலாற்று அறிஞராகட்டும், தமிழறிஞராகட்டும் களப்பிரர்கள் தவிர பிற யார் மீதும் இவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தததில்லை. களப்பிரர்களையும் அவ்வம்சத்து அரசர்களையும் இருண்ட குலம், இருண்ட காலம், இருள் படர்ந்த காலம், காட்டுமிராண்டிகள், கொள்ளைக்காரர்கள், கொடுங்கோலாட்சி செய்தவர்கள், நாகரீகத்தின் எதிரிகள், கலியரசர்கள், கொடிய அரசர்கள், நாடோடிகள், தமிழ் வாழ்வை மொழியைச் சீரழித்தவர்கள், மக்களைக் கொன்று செல்வங்களைச் சூறையாடியவர்கள், தமிழ் மொழி பண்பாட்டை அழித்தவர்கள், அரச பாரம்பரியமற்றவர்கள் என்றெல்லாம் வசைமாரி பொழிந்தனர். அந்நிலை இன்றும் தொடர்கிறது.

     இந்தியாவில் நிலவும் கொடுமைகளுக்கு நேருவே காரணம் என்று பிரதமர் மோடியும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடிக் கூறுவதைப்போல, கணியன் பாலன் என்ற ஆய்வாளர் எழுதிய பெருநூல் தமிழகத்தின் அனைத்து அழிவுகளுக்கும் களப்பிரரை  மட்டும்  காரணம் சொல்கிறது. இவர் கி.மு.50-கி.பி.250 காலகட்டத்தை சங்கம் மருவிய காலம் என்கிறார். இக்காலத்திலேயே அதாவது கி.பி. 150க்குப்பின் வைதீகச் சிந்தனைகளும், பிராமணீயமும் ஊடுருவிய, புரையோடிப்போன தமிழ்ச்சமூகமாக மாறிவிட்டதைப் பதிவு செய்கிறார். அடுத்த களப்பிரர் (கி.பி.250-கி.பி.550) காலத்தில் மொழி, இசை, இலக்கியம், கலை, அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், பொருளாதார அடித்தளம், உற்பத்தி உறவுகள், சங்ககால மதிப்பீடுகள்  எல்லாம் அழிந்தன என்கிறார். களப்பிரர் காலத்திற்கு முன்பே சீரழிவு; அதற்கும் அவர்களே காரணம் என்பதுகளப்பிரப் போபியாவிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். வைதீகத்தைவிட களப்பிரர் படையெடுப்பால் அழிந்தது என்பது புதிய பாணியாக உள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் வைதீகத்தை மேலும் வலுவூட்டவே பயன்படுகின்றன.   

        களப்பிரர் காலத்தை மயிலை சீனி வேங்கடசாமி தனது ஆய்வுகளின் மூலம் அக்காலத்தை விடியற்காலம் ஆக்கினார். அதற்குப் பிந்தைய ஆய்வுகள் எவ்வழியில் பயணப்படுகின்றன?   களப்பிரரின் இருண்டகாலம்  இந்நூலினால் விடியற்காலம்ஆகிறது. மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானல் களப்பிரர் வரலாற்றில் பகற்காலத்தைக் காணக்கூடும், என்று மயிலை சீனி.வேங்கடசாமி களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூல் முகவுரையில் குறிப்பிடுகிறார். 

      சங்க காலத்திற்கும் இடைக்காலத்திற்கும் உள்ள இடைவெளியை எப்படி நிரப்புவது? களப்பிரர் காலம்  இருண்ட காலம் அல்லது சங்கம் மருவிய காலம் என்று வெறுமனே கடந்துவிடுவது (skip) சரியாக இருக்குமா? இத்தடத்தில் உரிய, விரிவான ஆய்வுகள் நடைபெறவில்லை. சங்க இலக்கியம், பாலி, பிராகிருத மொழி மற்றும்  சமய இலக்கிய நூல்களை விரிவான ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அதுவரையில் பெருமிதங்களைப்போல இருண்ட காலங்களும் புனைவாகவே இருக்கும்.

       தமிழர்களின் தத்துவம்மெய்யியல் எத்தகையது? வைதீக மரபுகளான சைவ, வைணவ  சமயங்கள் தமிழர்களுடையதா? அல்லது அவைதீக சமயங்களான சமணம், பவுத்தம், ஆசீவகம் மட்டுமே நம்முடையதா? ஆசீவகம் மட்டுமே தமிழ் மரபு என்றும் மற்கலி கோசலர் தமிழர் என்றும் பேரா.க.நெடுஞ்செழியன் போன்றோர் கணிக்கின்றனர். சமயஞ்சாரத மரபு நம்மிடம் இல்லையா? தமிழர் தத்துவ மரபில் பகுத்தறிவின் இடம் என்ன?  பொருள்முதல்வாதத் தத்துவ மரபுகள் அனைத்தும் தமிழருடையது என்று உறவு கொண்டாடுவது சரியா இருக்க முடியுமா? “தீதும் நன்றும் பிறர்தர வாரா, யாதும் ஊரே யாவரும் கேளீர்”, போன்ற சொல்லாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழர்களின் மெய்யியலை அளவிட இயலுமா?  நல்லனவெல்லாம் தமிழுருடையதாகவும் தீயனவெல்லாம் பிறருடையதாகவும் கட்டமைப்பது தமிழரசியலுக்கு மட்டுமே பயன்படும்.

        தமிழ் நிலத்தில் சாதிகள் எப்போது தோன்றின? தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்போது நுழைந்தது? மேல்-கீழ், உயர்வு-தாழ்வு சொல்லாடல்கள் எப்போது உருவாயின? அந்தணர் என்பது யாரைக் குறிக்கிறது? தொல்காப்பியத்திலுள்ள இழிசனர் யாரைச் சுட்டுகிறது? இழிசனன், சண்டாளன், புலையன் என்பது வெறும் தொழில்சார்ந்த பெயர்கள் மட்டுமா? இவை மேல்-கீழ், உயர்வு-தாழ்வு என்கிற மனப்பான்மையை உருவாக்கவில்லையா? சாதி என்பதைப் போன்று சங்கம் என்பது தமிழ்ச்சொல் அல்லவே! சங்கம் வைத்து தமிழை வளர்த்தன் பின்னணி என்னவாக இருக்கும்? தமிழ் மரபுகளில் அழிந்துபோனவை, நிலைத்திருப்பவை எவை? தமிழர்களின் தத்துவ மரபுத் தொடர்ச்சியை எங்கு காணமுடியும்? தமிழர்களின் தொல்கலை மரபுகள், இசை என்னவாயிற்று? எல்லாம் அழிந்தன என்றாலும் அவற்றின் எச்சங்கள் எங்காவது இருக்குமல்லவா? இதற்கான நடுநிலையான ஆய்வுகளுக்குப் பதிலாக ஒரு கருத்தைப் பிடித்துத் தொங்கும் ஆய்வுகளே தமிழ்ச்சூழலை ஆக்ரமித்துள்ளன.   

       தொல்லியல், மானுடவியல், அறிவியல்பூர்வமான இலக்கிய ஆய்வுகள் என புதுவெளிச்சம் பாய்ச்ச பலர் முன்வரவேண்டும். அரசுகளும் துறைகளும் இதற்கு உரிய மதிப்பளிக்கவும் வேண்டும். நமது உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது செக்குமாட்டுத்தனத்தை விடுத்து இத்தகைய ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். வெறும் போலிப் பெருமிதங்கள், புனைவுகள் வழி கட்டப்படும் வரலாறும் தொன்மையும் நிலைத்து நிற்காது.

நன்றி: காக்கைச் சிறகினிலே… இலக்கிய மாத இதழ் ஜனவரி 2023

குறிப்பு: இடப்பற்றாக்குறை காரணமாக இறுதிப் பத்தி இதழில் இடம்பெறவில்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக