செவ்வாய், ஜனவரி 17, 2023

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்

 

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்

மு.சிவகுருநாதன்


 

 

             இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத  பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி வளர்ச்சி நாள் மற்றும் சூழலியல் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு   போன்ற நேரங்களில் மாணவர்களுக்குச் சில போட்டிகள் நடத்தப்படுவது வாடிக்கை. இவற்றில் பெருந்திரள் மாணவர்களின் பங்கேற்பு இருக்காது.  

          இந்தக் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமையை வளர்க்க கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவித்து பள்ளி, ஒன்றியம், மாவட்டம் அளவிலான போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 6-8 மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 6 தலைப்புகளில் 36 வகையான போட்டிகளும் இத்தலைப்புகளுடன் கூடுதலாக கருவி இசையில் தோற்கருவிகள், துளைக் காற்றுக்கருவிகள், தந்திக்கருவிகள் மற்றும் இசைச் சங்கமம் ஆகியன இணைந்த 79 தலைப்புகளிலும் மேனிலை (+1, +2) வகுப்புகளுக்கும் இதே வகையினங்களில் அமைந்த 85 வகையான போட்டிகளும் அறிவிக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் படிக்கும்  பெருமளவு மாணவர்கள் பங்கேற்க வழி செய்யப்பட்டது.

           இதில் தேர்வாகும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு வெளிநாட்டுச் சுற்றுலாவிற்கும் அழைத்துச் செல்லப்படுவர். இது சிறப்பான முன்முயற்சி என்பதில் அய்யமில்லை. இத்திட்டத்தை அமல்படுத்திய தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்கும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிப்போம். இதற்கானத் திட்டமிடல்களை முன்கூட்டியே மேற்கொள்ளாமல் பருவமழை மற்றும் அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத்தேர்வுகள் தொடங்கும் நேரத்தில்  நடத்தியது பெருங்குறையாகும். அடுத்தக் கல்வியாண்டில் முன்னதாக நடத்தத் திட்டமிடுதல் நல்லது.

        கலை இலக்கிய வடிவங்கள் எவ்வளவு சரியாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவோரின் தாக்கத்திற்கு அவை ஆளாகின்றன. நாட்டார் கலை வடிவங்களான  கூத்துகள், நடனம், இசை ஆகியவற்றில் சுதந்திர வெளிப்பாடுகளையும் பன்முகக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவோர் பெரும்பாலும் ஆணாக இருப்பதாலும்  அவர்களது ஆதிக்கமும் பார்வைகளும் மிகுதியாக ஊடுருவுகின்றன.  வீதி நாடகங்களில் கூட பெண்களை கேலி, கிண்டல் செய்யும் மோசமான பார்வைகளும் நிறைந்ததாக ஆகிவிட்டன.

         தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவை காணொளி ஊடகங்களில் பார்க்கக் கிடைக்கின்றன. இவற்றில் பங்குபெறுவோரின் பேச்சு, தொனி, உடல்மொழிகள் அனைத்தும் பெண்களுக்கு எதிராகவே இயங்குகின்றன. இம்மாதிரியான கேலி, கிண்டல்கள் மிகவும் இயல்பானவையாகக் கருதப்பட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் எங்கும் நிறைப்பவையாக உள்ளன. நாட்டார் கலைகள், பட்டிமன்றம் போன்ற வடிவங்களிலும் நகைச்சுவை என்ற பெயரில் நிகழ்த்தும் ஆபாசங்கள் நமது மனங்களில் நுழைந்து பெருந்தாக்கம் விளைவிக்கின்றன.  போக்சோ (POCSO) போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், வன்முறைகள் அதிகரித்துள்ள சூழலில் இவற்றை வெறும் நகைச்சுவையாகக் கடந்துவிட இயலாது


 

         கலைத் திருவிழாக்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பெரும்பான்மையான இடத்தைப் பிடித்திருப்பது நடனம் அடுத்து பறையிசை மற்றும் பறையாட்டம் (தப்பாட்டம்). கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம், கணியன்கூத்து, நாட்டுப்புற நடனம், செவ்வியல் நடனம் ஆகிய நடனங்கள்  மட்டுமே சுற்றறிக்கையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. பறையாட்டம் அல்லது தப்பாட்டம் என்ற பெயரே இப்பட்டியலில் இல்லை. தோல்கருவி இசையில் பறை, முரசு, தபேலா, செண்டை தவில், மிருதங்கம், டிரம்ஸ் போன்றவை உள்ளன. ஆனால் நடந்த போட்டிகளில் பறையிசையும் பறையாட்டமும் முதன்மை இடம் பெற்றிருப்பது தெரிகிறது. இதனுடைய தாக்கம் மற்றும் சமூக ஊடாட்டங்களை கொஞ்சம் ஆய்வுக்குட்படுத்துவது அவசியம்.

       பறையிசை தொல் தமிழர்களின் இசையாக சொல்லப்படுகிறது. ஆனால்  இன்றும் இதன் சமூக மதிப்பு குறித்த கேள்விகள் உண்டு. இது தீண்டாமை மற்றும் சமூக ஒடுக்குமுறையின் வடிவமாக உள்ளது. பறையிசை மற்றும் தப்பாட்டம் போன்றவை, சாதீய ஒடுக்குமுறையின் விளைவாக தலித் சமூகத்தின் ஒரு பிரிவினரால் செய்யப்பட்டவை. அவைகள் அந்த ஒடுக்குமுறையை மறு உறுதி செய்வதாக இருப்பதால் தடை செய்யப்பட வேண்டும், என வி.சி.. நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான து.ரவிக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பே வேண்டுகோள் வைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

       கிராமசபைக் கூட்டங்கள், ஊராட்சி அறிவிப்புகள், புயல், வெள்ள எச்சரிக்கைகளை தண்டோரா போட்டு அறிவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. இங்கு பயன்படுவது தப்பு எனச் சொல்லப்படும் பறையே. சென்ற ஆண்டு தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தண்டோரா போடும் முறையைத் தடைசெய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

       சதிராட்டம் எனப்படும் தேவதாசிகளால் உருவாக்கி வளர்க்கப்பட்ட நடனம் உயர்த்தப்பட்ட சாதியினரால் கைக்கொள்ளப்பட்டு பரத நாட்டியமாக மேல்நிலையாக்கம் பெற்றது. விலங்குகளின் தோல் பறையில் பயன்படுவதாலோ என்னவோ பறைக்கு அவ்வாறான சமூக மதிப்பு கிடைக்க வாய்ப்பில்லை. 1990களில் தமுஎச மேடை ஒன்றில் பறையொலித்து விழாவைத் தொடங்கி வைத்தபோது எழுத்தாளர் சுஜாதா மிகுந்த கூச்சத்துடன் வெகுதூரத்தில் எட்டிப்பிடித்துக் கொண்டு அடித்தது பலருக்கு நினைவிருக்கலாம்.

       நீங்கள் எவ்வளவுதான் வீரமுழக்கமிட்டாலும் பறையிசையை தேரோட்டம், கோயில் திருவிழாக்களின்போது வீதிகளில்தான் இசைக்கமுடியும். செண்டை மேளத்திற்கு கூட உள்ளே இடமுண்டு; பறைக்கு கிடையாது. இறுதி ஊர்வலத்தில் டாஸ்மாக் சரக்கடித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கட்டாயம் செய்ய வேண்டிய வேலையாக இதைச் சமூகம் கட்டமைத்திருக்கிறது. இந்தத் தீண்டாமைப்பார்வை இன்றும் தொடர்கிறது. சிலர் பறையை எழுச்சியின் சின்னமாகப் பார்ப்பதைப்போலவே இதை அடிமை விலங்காகக் கருதும் மனப்பான்மையும் சமூகத்தில் உண்டு. இத்தகைய சமூகப்பார்வைகளை நாம் முற்றாக புறந்தள்ளிவிட முடியாது.

        தப்பாட்டக்கலையை சில பத்தாண்டுகளுக்கு முன்னதாக தலித் எழுச்சியின் குறியீடாக மாற்றியவர் தஞ்சை ரெட்டிப்பாளையம் ரெங்கராஜன் குழுவினர். இவரது வாழ்க்கையை மறைந்த எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள்தப்பாட்டம்என்ற பெயரில் நாவலாக எழுதினார். இக்கலை ஊக்கம் பெற்றதன் பின்னணியில் நாடகக்கலைப் பேராசிரியர்கள் கே.ஏ.குணசேகரன், கு.முருகேசன், சே.ராமானுஜம், இரா.ராசு, மு.ராமசாமி ஆகியோரின் பங்கும் இதற்குத் தளமமைத்த தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகம், தென்னகப் பண்பாட்டும் மையம் ஆகியவற்றின்  பங்கும் இருந்தன.

         ரெங்கராஜனால் உருவாக்கப்பட்டவீரசோழ தப்பாட்டக் குழுஎன்ற பறையாட்டக் குழு பேரா. கே.ஏ.குணசேகரனின் தன்னானேகுழுவுடன் சேர்ந்து மேடையேறின. தலித், இடதுசாரி  இயக்க மேடைகளில் இவற்றிற்கு குறிப்பிடத்தக்க பங்கேற்பு இருந்தது. அதன் வீச்சு எங்கும் பரவவில்லை. மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டுருக்கிறது. தற்போது பறையொலிப் பயிற்சி கோடைகால சிறப்புப் பயிற்சியாக சுருங்கியுள்ளது. குறிப்பிட்ட ஒரு சிலரைத்தவிர பொதுச்சமூகமும் தமிழக அரசும் இக்கலையைக் கண்டுகொள்ளவில்லை. 

            பறையிசைதான் மனிதனின் ஆதி இசை; தமிழரின் தொல்லிசை என்று எதைச் சொன்னாலும் சமூகத்தில் பறை என்பது தீண்டாமையின் வடிவமாகவே உள்ளது. இத்தீண்டாமையை சாதியச் சமூகம் மட்டுமல்ல, தமிழக அரசும் கடைபிடிக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. 2019 இல் மட்டும் தமிழக அரசு பறையாட்டக் கலைஞர் ராஜா என்பவருக்கு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. இதற்கு முன்போ பின்போ இவ்வாறாக அங்கீகாரம் அரசால்கூட வழங்கப்பட்டதில்லை. அரசிற்கு சினிமாக்காரர்கள் மட்டுமே கலைஞர்களாகத் தெரிகிறார்கள்.

      அடிக்கல் நாட்டுதல்எனும் அரசின் தொடக்கவிழாவை பூமிபூசைஎன்ற பெயர் மாற்றத்துடன் இந்துமத விழாவாக அரசு அலுவலர்களும் அமைச்சர்களும் நடத்துகின்றனர். அரசு விழாக்களில் குத்துவிளக்கேற்றுதல் போன்ற மதச்சடங்குகளுக்கு அளவில்லை. மதச்சார்பற்ற அரசு என்று சொல்லப்படுகிற நமது மக்களாட்சி அமைப்பில் இன்னும் முழுமையான மதநீக்கம் நடைபெறவில்லை. தமிழக அரசின் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் சில நிமிடங்கள் பறையொலியை இசைக்கச் செய்தால் என்ன? பறைக்கு இன்றுள்ள சமூக மதிப்பை கேள்விக்குட்படுத்தாமல் அல்லது அதற்குரிய அங்கீகாரத்தைத் தராமல் குழந்தைகளை மட்டும் அதில் ஈடுபடச் செய்வது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். 

        கோயில் திருவிழாக்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரிலும் ஆடல் பாடல் என்கிற பெயரிலும் ஆபாச நடனங்கள்  நிகழ்த்தப்படுகின்றன. உயர்நீதிமன்றம் இதற்குத் தடை விதித்துள்ளது. எந்தப் பாணி நடனமாக இருந்தாலும் அவற்றில் சினிமாவின் தாக்கம் அதிகம். சினிமா நடனங்களைக் காப்பியடித்தே குழந்தைகள் எல்லா வகையான நடனங்களையும் கற்றுக்கொள்கின்றனர். நடுவீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி இந்த ஆபாச அடவுகளை இயல்பான ஒன்றாக மாற்றியுள்ளது. பள்ளிகளில் சிறப்பாக நடனமாடும் பெண் குழந்தைகள் இம்மாதிரியான ஆடல் பாடல் ஆபாச நிகழ்வுகளில் பங்கேற்கும் கேடு நிகழ்வதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

        சினிமா நடனங்களைக் காப்பியடித்தல், மிக மோசமான வரிகளைக் கொண்ட சினிமாப் பாடல்களுக்கு நடனமாடுதல் போன்றவற்றின் மூலம் குழந்தைகளிடம் எத்தகைய மதிப்பீடுகளை உருவாக்குகிறோம் என்பது இங்கு சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். அரசு செயல்பாடுகளில் மதநீக்கம்  நடைபெற வேண்டியதைப்போல பறை போன்ற கலை வடிவங்களில் சாதி நீக்கமும் அனைத்து கலை வடிவங்களையும் ஆபாச நீக்கமும் செய்து பெண்களுக்கு எதிரான பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவது முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பதைக் காட்டிலும் அவர்களை ஒரு சிறந்த சமூக உறுப்பினராக்குவது இன்றியமையாதத் தேவையாகும்.       

நன்றி: புதிய விடியல் ஜனவரி 01-15, 2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக