பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்
மு.சிவகுருநாதன்
‘கண்டறியாதன கண்டேன்’ என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கி.வா.ஜகநாதன் எழுதி ‘அல்லயன்ஸ்’ வெளியிட்ட பயண நூல் ஒன்று. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட சின்ன அண்ணாமலையின் நூல் மற்றொன்று. பயண நூலான இதுவும் ராஜாஜி, கல்கி ஆகியோர் பற்றிப் பேசுகிறது. ஸ்ரீநிவாச ராகவன் என்பவர் எழுதிய தமிழகத்திலுள்ள கோயில்கள் பற்றி பக்தி நூலொன்றும் இதே பெயரில் கிடைக்கிறது.
“கண்டறியாதன கண்டேன்”, என்பது திருநாவுக்கரசர் தேவாரத்தின் பாடல் வரியாகும். இங்கு ‘கண்டேன்’ என்ற சொல், ஒரு வியப்போடு பார்ப்பதை குறிக்கிறது. நாவுக்கரசருக்கு எதைக் கண்டாலும் இறைவனும் இறைவியுமாகத் தெரிகிறது. உலகம் எங்கும் சிவனும் சக்தியும் ஒன்றாக இருப்பது போல காணமுடிகிறது. எனவே “கண்டறியாதன கண்டேன்”, என்று வியப்புடன் பட்டியலிடுகிறார். இதன் உட்பொருளும் நமக்கு ஒருவாறு விளங்கவே செய்கிறது.
உலகமே ஆணும் பெண்ணுமாக இருப்பது இயற்கைதானே! இதில் வியப்படைய என்ன இருக்கிறது? பொதி வேண்டுமென்றே இத்தலைப்பைத் தேர்வு செய்திருப்பார் போலும்! சிவவாக்கியாரின் “கருமை செம்மை வெண்மையைக் கடந்து…” (2015), வள்ளலாரின் “வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயிலாச்சுதடி” (2018) போன்ற நூல்தலைப்பைப்போல இந்நூல் தலைப்பும் அமையக் காணலாம். ஆனால் “உனக்கு நீயே விளக்கு” என்று மெய்ப்பொருள் காண வலியுறுத்தி கோதமரின் உருவப் படத்துடன் இந்நூல் வெளியாகியுள்ளது.
இந்த விமர்சனக் கட்டுரை நூலை ‘மணல்வீடு’ வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் 11 கட்டுரைகள் உள்ளன. சி.மணி, சிற்பி, ரமேஷ் பிரேதன், புதிய மாதவி, தவசிக்கருப்புசாமி, தில்லை, சுகன்யா ஞானசூரி ஆகியோரின் படைப்புகள் கவிதை வெளியில் அணி வகுக்கின்றன.
நா.விச்வநாதனின் 'இசைப்பிறவரல்', ஆல்பர்ட், பவா.செல்லதுரை பற்றிய கட்டுரைகள் கலை இலக்கியச் சங்குமுகமாக வெளிப்படுகிறது. பி.எஸ்.ராமையாவும் சி.சு.செல்லப்பாவும் - மணிக்கொடி, எழுத்து இதழ்களை முன்வைத்து... எனும் கட்டுரை இதழியல், வரலாறெழுதியல் தலைப்பில் இருக்கிறது. கண்ணகனின் விமர்சனமும் பொதியின் பின்னுரையும் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன.
தோழர் பொதியவெற்பனின் மொழிநடை தனித்துவமானது. இருப்பினும் புதிதாக வாசிப்போருக்குச் சற்று தடங்கலை அளிப்பதும் இவரது எழுத்தின் பலவீனமாக அமைந்துள்ளது. தான் கூறவந்த கருத்துகளை நேரடியாகக் கூறாமல் பிறரது விமர்சனங்களை ஒன்றாக அடுக்கி, அத்துடன் ஒத்தும் உறழ்ந்தும் தனது கருத்துகளை வெளிப்படுத்துவது இவரது பாங்காகும். இது சில நேரங்களில் சலிப்பைத் தந்தாலும் அவரது விமர்சனக்கட்டுரைகள் பன்முகப்பிரதிகள் களமாடும் இடமாக அமைவது சிறப்பு.
சி.மணியின் ‘நரகம்’ கவிதையில் வெளிப்படும் அருவெறுப்புணர்ச்சி நா.வானமாமலை, சி.கனகசபாபதி, தி.சு.நடராசன் போன்றோரின் பார்வைகளை எடுத்துக்காட்டி பன்முக வாசிப்புகளை சாத்தியப்படுத்தியது இக்கவிதையின் சாதனை என்ற முடிவைக் கண்டடைகிறார்.
‘தமிழ் வசனக் கவிதையின் தந்தை’ பாரதியென்றால் ‘புதுக்கவிதையின் தந்தை’ ந.பிச்சமூர்த்தி, ‘தமிழ் நவீன கவிதையின் தந்தை’ சி.மணியே என்பேன் (பக்.37) என்றும் பின்னுரையில் எதிர்க்கவிதையின் தந்தை க.நா.சு. என்றும் அன்னாரை ‘புதுக்கவிதையின் தந்தை’ என்று சிலர் அழைப்பதை மறுக்கும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டதான விளக்கத்தையும் அளிக்கத் தவறவில்லை.
சி.மணியின் ‘தாவோதேஜிங்’ தமிழாக்கம் அவரது பங்களிப்பாய் தமிழுக்கு வாய்த்த அருங்கொடை என்று குறிப்பிட்டு, ‘ஞானம்’ கவிதையில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் குரலைக் கேட்கலாம். ‘அறிந்ததனின்றும் விடுதலை’ என்றவர் குரலே சி.மணியின் ‘ஞான’மாக எதிரொலிக்கின்றது. இதுவரை காலமும் நாம் நமது அறிவென நம்பியது நம் மண்டையில் முன்னோர்களால் திணிக்கப்பட்ட சரக்கு என்பது பிடிபடும்போது அதனின்றும் விடுதலை சாத்தியமாகின்றது (பக்.35) என்பதை விளக்குகிறார்.
“வேரில்லாக் கம்பெடுத்து, தூரில்லாக் கூடை பின்னி, மையமத்து போனதை”, சுய அறிமுகமாய் முன்பு சொல்லிச்சென்ற பொதியவெற்பன், சி.மணியின் பங்களிப்பு எல்லாமும் நம்மில் ‘இருப்பது தெரியாமல் சுவடற்று நிலைத்த’ பூரணச் சாரங்கி இழைப்பின் கமகங்களே, (பக்.39) என்று நிறைவு செய்கிறார்.
அடுத்து வானம்பாடி கவிதை மரபிலிருந்து சிற்பியின் கவிதைகளை அலசுகிறார். சிற்பியின் கவிதைமொழி பாரதியின் தாக்கம் பெற்றவை. பாரதிதாசனைப்போல யாப்பு வடிவங்களை இலாவகமாகக் கையாளும் வல்லமையுடையவர்கள் எழுத்து மரபின் சி.மணியும் வானம்பாடி மரபின் சிற்பியும் என்று முடிவு கட்டுகிறார்.
சிற்பியின் கவிதைமொழியை தென்கலை வைணவ - கைங்கர்ய மார்க்கத்தின் குரலாகப் பார்க்கிறார். மேலும் திருமூலரின் சித்தர் மரபுக்குரல், அப்பரின் வேத எதிர் வழக்கான காபாலிகச் சைவ மரபுக்குரல் போன்றவற்றின் தொடர் நீட்சியாகவும் கணிக்கிறார். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம், சிற்பிக்கு எதற்கு மார்க்சியம் எல்லாம்? என்று எழுப்பிய கேள்வியை முன்னிறுத்தி, தாய்மடி அறியாக் குட்டியாய் தலைமயங்கிக் கிடந்தது வரலாற்றின் முரண்நகை என்று விமர்சிக்கவும் செய்கிறார். உடனே, “பரிமூரணத்திலும் மூளித்தனம் / மூளியிலும் உண்டு பரிபூரணத்துவம்”, தனக்கும் சிற்பிக்கும் சேர்த்து சமாதானம் சொல்லிக் கொள்ளவதுபோல் எள்ளலாக நிறைவு செய்கிறார்.
‘ஜூகுப்ஸபிபதஸம்’ எனப்படும் அருவருப்பதிர்ச்சிக்கு இ.பா. சுட்டும் சாருநிவேதிதாவின் ‘ஜீரோ டிகிரி’யும் தனது பரிந்துரைகளாக கரிச்சான் குஞ்சுவின் சிறுகதையும் ‘பசித்த மானுடம்’ நாவலையும் தருகிறார். ரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’யிலும் ‘பன்றிக்குட்டி’யிலும் அருவருப்பதிர்ச்சி நிகழ்த்திக் காட்டப்படுவதை விளக்குகிறார்.
“தேசியம் ஒரு கற்பிதம்”, (பெனடிக் ஆண்டர்சன்) என்ற அ.மார்க்சின் சாரம்சப்படுத்தப்பட்ட பார்வைக்கு மாற்றாக உடல். மொழி, நிலம், இனம் போன்றவற்றால் தேசியம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை ‘பன்றிக்குட்டி’ கவிதை வழியே எடுத்துரைக்கிறார். இங்கு தேசியம் கற்பிதமா, இல்லையா என்பது பிரச்சினை இல்லை. இந்தக் கற்பிதம் தேவையானதா, தேவையற்றதா என்பதுதானே இங்கே பிரச்சினை, என்று ரமேஷ் பிரேதன் கவிதைகளின் வழி அ.மார்க்ஸ் மீதான விமர்சனத்தையும் முன்வைக்கிறார்.
புதிய மாதவியின் ‘பாலைத் திணை’ தொகுப்பில் முலைவரி விதித்த கூட்டம், பிரம்ம மூகூர்த்தமும் பூச்சூடும் ஆண்டாளும் போன்ற சில கவிதைகளை முன்வைத்து, வைக்கம் போராட்டம், ஆண்டாள், me too, மதுரை மீனாட்சி, கொற்றவையின் துணங்கைக் கூத்து என வாசிப்பு மிகை நுட்பம் சார்ந்த, விசேஷமான அறிவுத்துறையான கவிதை விமர்சனயியலுக்கு கூடுதல் வலு சேர்க்கிறார்.
கூத்துப் பாரம்பரியத்தை உள்வாங்கி உட்செரித்த தவசிக்கருப்பசாமியின் (மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன்) அவற்றை தனக்கான கவிதையியலாக மடைமாற்றித் தகவமைத்துக் கொண்டதன் பெரும்பேறான வெளிப்பாடுகள் ‘அழிபசி’யின் விளிம்புநிலை வேர்மூலக் கவிதைகளாவதைக் கவனிக்கிறார். த.பழமலய், இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் போன்ற போன்றோரின் கவிதை மரபுகளின் வெவ்வேறு பாயச்சல்களாக தவசிக்கருப்புசாமியும் தமிழச்சியும் இருப்பதாக இவரது பார்வை அமைகிறது. தில்லையின் ‘விடாய்’, சுகன்யா ஞானசூரியின் ‘நாடிலி’ மீதும் பொதி தனது ஆய்வு முறையியலை சுருக்கமாக முன்வைக்கிறார்.
இசை, ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு மொழி கிடையாது. ஆனால் அரசியல் உண்டல்லாவா! அதை நா.விச்வநாதனுக்கு எதிர்வினையாக ‘இசைப்பிறவரலும் இசைகேடான இடைப்பிறவரல்களும்’ என்ற கட்டுரை வெளிப்படுத்துகிறது. டி.எம்.கிருஷ்ணாவின் கருத்தை முன்னுறுத்தி, கருத்தியல் வன்முறை என்று கடுமையாக எதிர்வினை புரிகிறது இக்கட்டுரை. இதன் வழியே அதிகாரத்தைக் கேள்வி கேட்கிறார். இறுதியாக, பின்குறிப்பில் மாறுபட்ட தாம்பூல ரசனைகளின் வழியே, நட்பு சார்ந்து, நா.விச்வநாதனின் ரசனைக்கும் இடமிருப்பதை ஏற்கும் முரண்நகையும் இருக்கிறது.
மூன்று மகத்தான உரையாடல் கலைஞர்களாக தஞ்சை ப்ரகாஷ், தொ.பரமசிவன், ஆல்பர்ட் ஆகியோரைக் குறிப்பிட்டு, முன்னிருவரைவிடவும் பின்னவருக்கு வாய்த்த மாணவர்கள் அதிகமானோர் மட்டுமல்ல; ஆளுமையிலும் பன்முகம் கொண்டவர்கள் என மதிப்பிடுகிறார். வறட்டு வேதாந்திகளின் பார்வைக்கு மாறாக, ஹெகல், அத்வைதம், பாரதி, ஜெயகாந்தன் ஆகிய நான்கையும் ஆல்பர்ட்டின் பிரதிகள் ஓப்பிடுவதைக் காண்கிறார்.
பவா செல்லத்துரையின் ‘19, டி.எம்.சரோனை’ முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை ஜெயமோகன் மீதான, சகபயணியை மிகுதிக்கண் மேற்சென்று இடைக்காமல், தகுதிக்கு மீறிக் கொண்டாடி நிற்கும் அவரது பார்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டி நிற்கிறது. இதைச் சுட்டுவது பொதியின் கடனென்றாலும் பவாவின் பார்வைகள் மாறப்போவதில்லை. என்ன செய்வது? ஜெயமோகனின் அரசியலைத் தாண்டிய கலைப் படைப்பாளி, மகா கலைஞன் என்கிற பிம்பம் விஸ்வரூபமாய் அவர் முன்நிற்கிறது!
பி.எஸ்.ராமையா (மணிக்கொடி), சி.சு.செல்லப்பா (எழுத்து) ஆகிய இருவருக்குமான தமிழிலக்கியச் சூழலின் இடம் குறித்து இதழியல் கட்டுரை ஆய்வு செய்கிறது. அ.மார்க்ஸ், வேதசகாயகுமார், கி.அ.சச்சிதானந்தம், ரா.அ.பத்மநாபன், பிரமிள், எம்.வி.வெங்கட்ராம், கா.சிவத்தம்பி, சு.கைலாசபதி, வீ.அரசு என பலதரப்புகளை எடுத்துக்காட்டி, அவற்றை வெட்டியும் ஒட்டியும் தனது கருத்துகளைப் பதிவு செய்கிறார். மணிக்கொடியை ஒட்டுமொத்தமாக அணுகாமல் மூன்று ஆசிரியப் பொறுப்பில் நான்கு கட்டங்களாக வெளியானதை கவனங்கொண்டு மதிப்பிடவேண்டுமென்று வரையறை செய்கிறார்.
மணிக்கொடி சிறுகதையில் மட்டுமே சாதித்தது; ஆனால் எழுத்து விமர்சனம், புதுக்கவிதை, இதழியல் என முத்துறையிலும் சாதனை படைத்தது; சிற்றிதழ் மரபிலும் மொழியாக்கப் பணியிலும் முன்னோடியாகத் திகழ்ந்ததையும் குறிப்பிடுகிறார்.
விருதுகளைப் பெற மறுத்து, சமரசங்களற்று, காந்திய அறப்பிடிவாதியாக தன் சிலுவையை தானே சுமந்த சி.சு.செல்லப்பாவின் வரிப்புணர்வுடன் செம்மாந்தப் பெருமித வாழ்வாகப் போற்றுகிறார்.
1980-90 களில் நவீன இசங்களை அறிமுகம் செய்த பல சிற்றிதழ் படைப்பாளிகளின் மொழிநடை அன்றைவிட இன்று வெகுவாகவும் எளிமையாகவும் மாற்றமடைந்துள்ளது. கவியரங்கக் கவிதைகள் கவிதையியலைச் சீரழித்த நிலையில் ‘கவிதா நிகழ்வை’ முன்னெடுத்தவர் பொதி. நவீன மொழியியல் சிந்தனைகளை உள்வாங்கியவர். அகராதியியல் அறிஞர், விமர்சகப் படைப்பாளி, தொகுப்பாசிரியர் என பன்முக ஆளுமையுடைய பொதியவெற்பன் நவீனத் தமிழை அறியாதவரல்லர். இருப்பினும் வேண்டுமென்றே, திட்டமிட்டுப் பயன்படுத்தும், வாசகர்களை தூரப்படுத்தும் மொழிநடையை தனது படைப்புகளில் தவிர்க்க வேண்டுமாய் கோரிக்கை வைக்கிறேன். இது உங்களுடைய எழுத்து இன்னும் பரவலாகச் சென்றடைய வழிவகுக்கும். பவா ஜெமோ பற்றிய பார்வைகளை மாற்றிக் கொள்கிறாரோ இல்லையோ, நீங்கள் இதை மாற்றினால் நல்லது.
நூல் விவரங்கள்:
விலை: ₹ 200 பக்கங்கள்: 208
முதல் பதிப்பு: பிப்ரவரி 2022
வெளியீடு:
மணல்வீடு, ஏர்வாடி,குட்டப்பட்டி - அஞ்சல், 636453,
மேட்டூர் - வட்டம், சேலம் - மாவட்டம்.
பேசி: 9894605371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
இணையம்: www.manalveedu.org
நன்றி: பேசும் புதிய சக்தி - ஜனவரி 2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக