ஒரு நாள் போதுமா?
மு.சிவகுருநாதன்
இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன்.
கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள். எனவே புதிய நூல்களின் வரவு குறைவு. புத்தகக் கண்காட்சியின் கடைகள் பட்டியல் (site map) கூட இல்லை. உள்ளே நுழைய முடியாத குறுகலான கழிப்பறை; கழிவுகள் ஆறாக ஓட மெரினா மாற்றுத்திறனாளி மரப்பாலம் போல பிளைவுட் பலகையில் நடந்து வெளியேற வேண்டிய அவலம்.
புத்தகம் வாங்க வருவோருக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராமல் 'பாபாசி' பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. 46 ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் எந்தப் பாடமும் கற்கப்போவதில்லை.
படிப்பது வேறு; பேசுவது வேறு. வாயாளிகள் முன்னரங்க மேடைகளில் எதோ கத்திக் கொண்டுள்ளனர். இந்த வாய் வீச்சாளிகளுக்கு அளிக்கும் வசதிகளில் 5% ஐ கழிப்பறை, குடிநீர் வசதிகளைச் செய்து தரலாம். யார் செய்வது?
பெரும் பதிப்பக நூல்களை வீட்டிலிருந்தே வாங்கிவிடலாம். சிறிய பதிப்பகங்கள் வெளியிடும் அல்லது காணக்கிடைக்காத நூல்களைத் தேடி வாங்குவதுதான் கண்காட்சியின் சிறப்பாக இருக்க முடியும்? ஆனால் அதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை.
ஒவ்வொரு வரிசையாக செல்லும்போதுதான் அனைத்துக் கடைகளையும் பார்வையிட முடியும். முகப்பில் ஒருவரிசையிலிருந்து அடுத்த வரிசைக்குச் செல்லத் தடை செய்துள்ளனர். இது என்ன குரூரத் திட்டமிடல்?
குறுக்கு வழிகளில் நெரிசல் அதிகம். இந்தப் பிரபலங்களின் தொந்தரவு வேறு அதிகம். சினிமாக்காரர்கள் இலக்கியவாதி என்கிற போர்வையில் அரங்குகளை ஆக்ரமிக்கிறார்கள்.
சில நூல்களை வாங்கிக் கொண்டு திரும்பினேன். பேரா. அ.மார்க்ஸ், சிராஜுதீன், அப்பணசாமி, மணலி அப்துல்காதர், தம்பி, புதுச்சேரி விசாகன் போன்று ஒருசிலரை மட்டுமே சந்திக்க முடிந்தது. கொரோனா பீதி மறுபடி கிளம்பியிருக்கும் நிலையில் இவ்வளவு நெரிசலை ஏற்படுத்தும் அரங்க அமைப்பும் இடைவெளிக்குறைவும் வசதியின்மையும் கடும் கண்டனத்திற்குரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக