சனி, பிப்ரவரி 20, 2010

தோழர் ஜோதிபாசு


தோழர் ஜோதிபாசு

(08.07.1914 - 17.01.2010)


- மு. சிவகுருநாதன்மரணம் இயற்கையானது; ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதுவும் 96 வயதில் மரணமடைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுக்கு வணக்கத்துடன் விடையளிக்கத்தான் வேண்டும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்த ஒரு கம்யூனிஸ்ட்க்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில் ஆயுட்கால நீட்டிப்பு அநியாயமானது.


முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மரணம் மும்பை தாக்குதல்களை சாக்காக வைத்து ஊடகங்கள் வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்தன. அவரது இருப்பை அழித்தொழிக்கும் வேலையை ஊடகங்கள் திட்டமிட்டு செய்துகாட்டின. ‘இந்தியா டுடேஇதழ் அஞ்சலிக்குறிப்பு என்ற பெயரில் வி.பி.சிங்கின் மீது அவதூறை வாரி இறைத்தது. ‘இந்தியா டுடே இலக்கிய மலர் 1993 - 1994’ ‘நிறப்பிரிகையால் நடத்தப்பட்ட புதுச்சேரி கூட்டத்தில் (மே 30, 1993) மலம் துடைக்க முடிவு செய்யப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. மலம் துடைக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள், நியாயங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அதைப்போலவே வி.பி.சிங்கிற்கு எதிரான அவதூறு அஞ்சலியை எதிர்த்து கீற்று.காம் சார்பில் . மார்க்ஸ் , தியாகு, ஞாநி, ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பங்கேற்ற கண்டனக் கூட்டம் டிசம்பர் 14, 2008 அன்று சென்னையில் நடத்தப்பட்டது.


நிறப்பிரிகையின் அதிரடி முடிவால் விற்பனை குறைந்துவிடுமோ என்று அஞ்சியஇந்தியா டுடேநிர்வாகம் வாஸந்தி மூலம்நிறப்பிரிகைகுழுவினரை இந்தியா டுடே இதழில் எழுதவைக்க மேற்கொண்ட முயற்சியும் அதற்கு ரவிக்குமார் இணங்கிப் போனதும் அனைவரும் அறிந்த செய்திகள். அதனால்இந்தியா டுடேஇதழ் (பிப்.03.2010) இந்த முறை ஜோதிபாசுவைப் பற்றிஜோதி பாபுர் சோங்கேஎன்ற ஆவணப்படம் எடுத்த சினிமா இயக்குநர் கௌதம்கோஷ் அஞ்சலியை மட்டும் வெளியிட்டு தனது வாலை சுருட்டிக் கொண்டது. அந்த வேலையை தனதாக்கிக்கொண்ட சன்டே இந்தியன்’ (25ஜன. 7 பிப். 2010) இதழ் சுதானுகுருவின் 5 பக்ககவர் ஸ்டோரிமூலம் ஜோதிபாசை காய்ந்திருக்கிறது. EPWதுணையாசிரியர் ஸ்ரீசீனிவாசன் ரமணி, மூத்த பத்தரிக்கையாளர் பருண் தாஸ் குப்தா ஆகியோருக்கு தலா ஒரு பக்கம் ஒதுக்கி சமன்செய்வதாக வேடம் பூண்டுள்ளது.


மறைந்த ஜோதிபாசு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நாம் சொல்ல வரவில்லை. இதனை அவரே விரும்பியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். அடல் பிகாரி வாஜ்பாய், நரேந்திர மோடி போன்றவர்களை அளவுக்கு அதிகமாக பாராட்டியும் புகழ்ந்தும் எழுதும் இந்துத்துவப் பத்தரிக்கைகள் இடதுசாரிகள், சமூக நீதி பேசுவோர், தலித்கள் என்று வரும்போது அவதூறுகளை அள்ளி வீசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. தனது இறுதிக்காலத்திலிருக்கும் வாஜ்பாய்க்கு இவர்கள் எப்படி அஞ்சலி எழுதுவார்கள் என்று இப்போதே சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு இவர்கள் மேட்டிமைத்தனமான உயர்சாதி மனோபாவத்துடன், வர்க்க - சாதிக் காழ்ப்புணர்வுடன் மதவெறி நிரம்ப உடையவர்களாக இருக்கிறார்கள். நரேந்திர மோடிக்கு இந்தியாவின் மாநில முதல்வர்களில் முதலிடத்தை ... (08 பிப். 21 பிப்., 2010) வழங்கி தங்களது மதவெறி அரசியலை இப்போதும் வெளிப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.


1914இல் ஒரு மேல்தட்டு குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு கல்லூரிப்படிப்பு முடிந்ததும் பார்-அட்-லா படிக்க லண்டன் சென்றார். ரயில்வே தொழிற்சங்கவாதியாக செயல்பட்டு சட்டமன்ற உறுப்பினராகிறார். 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதும் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய முன்னணித் தலைவராக செயல்பட்டு முதல் பொலிட்
பீரோவின் 9 உறுப்பினர்களில் ஒருவராகிறார். 8 முன்னணி தலைவர்கள் அனைவரும் மறைந்து விட மீதமிருந்தவர் இவர் ஒருவர் மட்டுமே. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பி.சி.கோஷ் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அமைச்சரவையில் முதன்முதலில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். 1969 தேர்தலில் வங்காள காங்கிரசுடன் இணைந்துஐக்கிய முன்னணிஎன்ற பெயரில் இடது சாரிகள் போட்டியிட்டு அஜய் குமார் முகர்ஜியிடம் பாசு மீண்டும் துணை முதல்வரானார். 1975 நெருக்கடி நிலையால் காங்கிரஸ் மீது ஏற்பட்ட வெறுப்பு 1977-ல் காங்கிரஸ் தோல்வியடைய முதன்மைக்காரணமாக இருந்தது.


1977 தேர்தலில் CPI(M) தலைமையிலான இடது முன்னணி வெற்றி பெற்று ஜோதிபாசு முதல்வராக வழிகோலியது. அதன் பின்னால் நடைபெற்ற 1982, 1987, 1991, 1996 ஆகிய தேர்தல் களிலும் இடது முன்னணியே வெற்றி பெற்று 2000 வரை 23 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் முதல்வராக இருந்து இந்திய அளவில் சாதனை ஏற்படுத்தினார். 2000ல் உடல் நிலை காரணமாக முதல்வர் பதவியிருந்து தாமே முன்வந்து விலகினார்.


உலகமயமாக்கல், தனியார்மயம், தாராளமயம் என்றமுதலீட்டிய சட்டகத்துக்குள் இந்திய முழுமையும் இயங்கிக் கொண்டிருக்க ஒரு மாநிலம் அல்லது சில மாநிலங்கள் மட்டும் அவற்றிலிருந்து எப்படி வேறுபட்டு நிற்கமுடியும் என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி. பிற தேசிய கட்சிகள், மாநிலக்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களிலிருந்து மேற்கு வங்காளம் ஒப்பீட்டளவில் எவ்வாறு வித்தியாசப்படுகிறது என்பதே முக்கியம். 33 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் அங்கு உருவாகி இருக்கக்கூடிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார வர்க்கம், நந்திகிராம், சிங்கூர் பிரச்சினைகளில் அரசின் நிலைப்பாடு, மார்க்சிஸ்ட் - மாவோயிஸ்ட் மோதல்கள், உள்கட்சி முரண்பாடு போன்ற விஷயங்களில் இடது சாரி அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும்.


இதே ஊடகப்புலிகள் ஆந்திர முதல்வர் ஓஸ்.எஸ். ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் (2009) மரணமடைந்தபோது என்ன எழுதினார்கள்? தானைத்தலைவன், மக்கள் தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி (இந்தியா டுடே செப் 06, 2009). அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் சுரங்கத் தொழிலில் கொடிகட்டி பறப்பதையும் அதிகாரவர்க்கம் ஊழலில் திளைத்து அதிகாரங்களை எப்படி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்பது பற்றியும் யாரும் மூச்சுக்கூட விடவில்லை.


இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் கருத்துக் கணிப்பில் (...08-21,பிப். 2010) முதலிடம் பெறும் நரேந்திர மோடிக்கு 19.5% -ம் இரண்டாமிடம் பெறும் ஷீலா தீட்சித்க்கு 9.8%ம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா 0.8% 18வது இடத்திலும் அச்சுதானந்தன் 1.0% பெற்று 17வது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கவேண்டிய பி.எஸ். எடியூரப்பா 3.5% பெற்று 6-வது இடத்தில் உள்ளார் போலியான நேர்மைக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் இருக்கமுடியும்? கருத்துக் கணிப்பின் நம்பகத்தன்மை கேலிக்கைக்குரியதாக உள்ளது.


சுதானுகுருவில் குற்றச்சாட்டுப் பட்டியலில் தொழில்மயத்தில் 1960க்கு பிறகு மேற்கு வங்காளம் பின்தங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. தொழில் வளம் என்பது பன்னாட்டு கம்பெனிகளின் எண்ணிக்கையை பொறுத்ததல்ல என்பதை இவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு அரசு வேலையில் பிரதிநிதித்துவம் குறைவு என்றும் அவர்களின் சமூக வளர்ச்சிக்குறியீடோ மோசமான நிலையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதிலும் இதே நிலை இருப்பதைத்தானே சச்சார் கமிட்டி அறிக்கையும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் சுட்டிக்காட்டுகின்றன. இதன்பேரில் நடவடிக்கை எடுப்பதை தடுப்பது இந்த இந்துத்துவ சக்திதான் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். குஜராத், ஒரிசா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இசுலாம், கிருஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மதக் கலவரங்கள் மேற்கு வங்காளத்தில் நடைபெறவில்லை என்பதை இவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை. மேலும் 1984 இல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட போது சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் நாடெங்கும் நிகழ்ந்தபோதும் மேற்கு வங்காளம் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தில் 22% மேற்குவங்காளத்தில் தான் நிகழ்ந்தது இதில் 55% மேற்குவங்க விவசாயிகள் பலனடைந்திருக்கிறார்கள் என்பது அனைவரும் ஏற்கும் உண்மை. பயனடைந்தவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூட விமர்சனம் சொல்வார்கள். இருந்துவிட்டு போகட்டுமே. மிட்டல், டாடா, பிர்லா, அம்பானிகளுக்கு கொடுக்கவில்லை தானே!


நந்திகிராம், சிங்கூர் பிரச்சினைகளில் இடதுசாரி அரசின் நிலைப்பாட்டை யாரும் சரியென்று சொல்லவில்லை. தொழில் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை களைவதற்காக டாடாக்களிடம் சிக்கிக் கெண்டார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது. இடது சாரி குண்டர்கள் பற்றி பேசுபவர்கள் காங்கிரஸ், பா..., ஆர்.எஸ்.எஸ், சிவசேனை, தி.மு.., .தி.மு.. குண்டர்களைப் பற்றியும் பேசவேண்டும். ஏன் பேசுவதில்லை என்பதுதான் தெரியவில்லை. நாடெங்கிலும் ஆட்சி அதிகாரத்தில் நடைபெறும் இச்சீரழிவிற்கு இடதுசாரிகளும் ஆளாகிவிட்டார்கள். லால்கர் பிரச்சினையில் பழங்குடி மக்களுக்கு எதிராக மத்திய அரசு, இடதுசாரி மார்க்சிஸ்ட்களும் இன்னொரு பக்கம் மாவோயிஸ்ட்கள் கூட எதிராகவே இருப்பதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். இந்தியாவெங்கும் நூற்றுக் கணக்கான நந்திகிராம்களும், சிங்கூர்களும் இருக்க எந்த எதிர்ப்பும் இன்றி விளைநிலங்கள் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கைக்கு செல்லும்போது, இங்கு மட்டும் பெரும் எதிர்ப்பு தோன்றுவதற்கு காரணம் கம்யூனிச அடித்தளம் மற்றும் போராட்டகுணம் என்பதை மறுக்க முடியாது. நேற்று மார்க்சிஸ்ட்கள் செய்ததை இன்று பழங்குடி மக்கள் செய்கிறார்கள். நாளை வேறு யாராவது அந்தப்பணியைத் தொடர்வார்கள்.


மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட்க்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் திருணாமுல் காங்கிரஸ் இருக்கவே முடியாது. இடதுசாரிகளின் தவறுகளால் மம்தா பானர்ஜி போராளியாக மாறியிருப்பதான தோற்றம் வரலாற்றின் அவலங்களில் ஒன்று. தமிழ் நாட்டில் ஜெயலலிதா தவறு செய்யும் போது கருணாநிதியுடமும் கருணாநிதி தவறு செய்யும் போது ஜெயலலிதாவிடம் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பை அளிப்தை ஒத்த அவலம் இது. ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு அரசு மத்தியதர மற்றும் உயர் வகுப்பினரை திருப்திப்படுத்துவது என்பது நடவாத விஷயம். இருப்பினும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுத்தான் சரியாக மதிப்பிடமுடியும்.


சுமார் 20 ஆண்டுகாலம் முதல்வர் இருந்த அனுபவத்தில் இந்தியா முதலாளித்துவ ஜனநாயக சட்டகத்துக்குள் தான் செயல்பட முடிந்த எல்லையை அவர் நன்கு உணர்ந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக1996 இல் பிரதமர் வாய்ப்பு ஜோதிபாசுவுக்குத் தரப்பட்டபோது அவரது பிரதமராகும் ஆவல் வெளிப்பட்டது. ஆனால், கட்சியின் முடிவு அதற்கு எதிராக இருந்தது. பின்நாளில் இதைவரலாற்றுத் தவறுஎன பாசு வருணித்தார். தனக்கு ஒன்றும் இழப்பில்லை, ஆனால், வங்காளத்திற்கும் கட்சிக்கும் பெரிய இழப்பு என்றார். பாசு பிரதமராகியிருந்தால் கூடுதலாக சில குற்றச்சாட்டுகளைத்தான் சுமக்க வேண்டியிருந்திருக்கும்; வேறொன்றும் நடைபெறப் போவதில்லை என்பதை ஏனோ அவர் அறியவில்லை.


அவருடைய மற்றொரு சாதனை மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையாகும். ஆனாலும், அதிலுள்ள ஊழல், சீர்கேடு போன்றவற்றை அவர் உணர்ந்தேயிருந்தார். தொடர்ந்து பதவியில் நீடிக்க வாய்ப்புகள் இருந்தும் 2000 இல் தாமாக முன்வந்து பதவி விலகியது இந்திய அரசியலில் பெரும்பானோர் செய்யாத ஒன்று என்பதை குறிப்பிடத்தேவையில்லை. அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தனது மரணத்திற்கு பின்பும் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என்றே நாம் சொல்லவேண்டியுள்ளது.


இறப்பிற்குப் பின்பு அவரது விருப்பப்படி கண்தானம் செய்யப்பட்டது. உடல் கொல்கத்தாவில் உள்ள எஸ். எஸ்.கே.எம்.மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இன்றைய உலகமய - இந்தியச் சூழலில் இதைவிட ஒரு கம்யூனிஸ்ட் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக