திங்கள், பிப்ரவரி 08, 2010
சங்கரன்கோவிலை அடுத்த செந்தட்டி கிராமத்தில் இரண்டு தலித்கள் படுகொலை-உண்மை அறியும் குழு அறிக்கை
சங்கரன்கோவிலை அடுத்த செந்தட்டி கிராமத்தில்
இரண்டு தலித்கள் படுகொலை.
உண்மை அறியும் குழு அறிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்த செந்தட்டி கிராமம் சங்கரன்கோவிலிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் சென்ற மார்ச் 6, 2009 அன்று பரமசிவன் (22) மற்றும் ஈஸ்வரன் (55) ஆகிய இரு தலித்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியாகியது. இதை ஒட்டிய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையும் தலித் மக்கள் மத்தியில் அச்சம் உருவாகியிருப்பதையும் கேள்விப்பட்டு உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அறிக்கை அளிப்பதற்கென கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.
01. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) சென்னை.
02. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (PPR) புதுச்சேரி.
03. வழக்கறிஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) மதுரை.
04. பேரா. சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) காரைக்குடி.
05. பேரா. ச. சங்கரலிங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) மதுரை.
06. ஏ. சையது அலி, மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் குழு (NCHRO) கன்னியாகுமரி மாவட்டம்.
07. லுக்மான், பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா (PFI), கடையநல்லூர்.
08. பூமொழி, மாவட்டத் தலைவர், தமிழ்நாடு மனித உரிமை இயக்கம், சேலம்.
09. மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) திருவாரூர்.
10. ராஜு, தமிழ்நாடு மனித உரிமை இயக்கம், சேலம்.
11. கு. பழனிச்சாமி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), மதுரை.
இக்குழு 2009 மார்ச் 18 அன்று சங்கரன்கோவில், காந்தி நகர், செந்தட்டி கிராமம் ஆகியவற்றுக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இரு தரப்பு மக்கள், நாட்டாமையினர், காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்தது.
கடந்த இரண்டாண்டுகளாக செந்தட்டியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழா சம்பந்தமாக நடைபெற்று வரும் சமாதானப் பேச்சு வார்த்தைகள், புகார் மனுக்கள் முதலான ஆவணங்கள் பலவற்றையும் பரிசீலித்தது.
பின்னணி : -
சங்கரன்கோவிலை அடுத்த செந்தட்டி சின்னகோவிலான் குளம் காவல்நிலைய சரகத்தில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம். அடிப்படை வசதிகளற்ற இந்த கிராமத்தில் யாதவர் (சுமார் 145 குடும்பங்கள்), செட்டியார் (சுமார் 135 குடும்பங்கள்), தேவேந்திரகுல வேளாளர்கள் (சுமார் 45 குடும்பங்கள்), அருந்ததியர்கள் (சுமார் 15 குடும்பத்தினர்) மற்றும் சில உதிரி சாதி சாதியினர் வசித்து வருகின்றனர்.
யாதவர் மற்றும் செட்டியார் சமூகத்தினர் சிறிதளவு நிலம் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். தேவேந்திர குல வேளாளர்களில் மிகச் சிலரே சிறிதளவு நிலம் வைத்துள்ளனர். இவர்கள் பல காலமாக யாதவர் மற்றும் செட்டியார் மக்களிடம் விவசாய வேலைகள் செய்தும் அருகில் உள்ள சங்கரன்கோவிலில் கொத்துவேலை முதலான பணிகளைச் செய்தும் வாழ்ந்து வருகின்றனர்.
யாதவர், தேவேந்திர குல வேளாளர் ஆகிய இரு சமூகத்திலும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்ளனர். பீடி சுற்றும் தொழிலில் எல்லாச் சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் சொற்ப வருமானமும் அவர்களுக்குக் கிடைக்கிறது. பொதுவில் எல்லா தரப்பு மக்களிடமும் கல்வி அறிவு குறைவாக இருந்த போதிலும் தேவேந்திர குல மக்கள் ரொம்பவும் பின்தங்கியுள்ளனர். ஒரு நடுநிலைப்பள்ளி (தற்போது 6ம் வகுப்பு வரை மட்டும்), சத்துணவுக் கூடம், அங்கன்வாடி, ஊராட்சி மன்றக் கட்டிடம் ஆகியன உள்ளன.
யாதவ இனத்தினர் மத்தியில் சாதிச் சங்கம் வலுவாக உள்ளதற்கு ஆதாரமாக அவ்வமைப்பின் நிரந்தரக் கட்டிடம், விளம்பரங்கள் அங்கு உள்ளன. தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் வலுவான அமைப்புகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. புதிய தமிழகம் கட்சியின் சுவரொட்டிகள் சில காணப்பட்டன என்கிற போதிலும் அவ்வமைப்பு முறைப்படி இயங்குவதாகத் தெரியவில்லை. சுப்பிரமணி, அமரன் முதலான நாட்டாமைகளே அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இவ்விரு நாட்டாமைகளும் வெட்டிக் கொல்லப்பட்ட பரமசிவனின் சகோதரர் மாரியப்பன், ஈஸ்வரன் மனைவி கருப்பாயி அம்மாள் ஆகியோரும் தமது பிரச்சினைகளை எங்களிடம் விளக்கினர். போலீஸ் கைது செய்து விடலாம் என்ற அச்சத்தின் காரணமாக யாதவர் தெருவில் ஆண்கள் யாரும் இல்லை. அங்கிருந்த பெண்களை மட்டுமே எங்களால் சந்திக்க முடிந்தது. மாடசாமி மனைவி மாடத்தி (58) என்பவர் பல விபரங்களைச் சொன்னார்.
இச்சிறு கிராமத்திலுள்ள மூன்று முக்கிய சாதியினருக்கும் கோயில்கள் தனித்தனியே உள்ள போதிலும் ஊரின் நடுவில் அமைந்துள்ள முப்பிடாதி அம்மன் கோயில் எல்லோருக்கும் பொதுவாக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. 2003ம் ஆண்டில் எல்லாத் தரப்பிடமிருந்தும் நிதி வசூலிக்கப்பட்டு கூடவே நன்கொடையும் திரட்டி சுமார் 3 லட்ச ரூபாய் செலவில் இக்கோயிலைப் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தியுள்ளனர். இந்த செலவில் சுமார் 1 லட்ச ரூபாயைத் தம் பங்கிற்கு வசூலித்துக் கொடுத்ததாக தேவேந்திர குல வேளாளர்கள் சொல்கின்றனர். இதை யாதவர்கள் மறுக்கின்றனர். தேவேந்திரர்கள் இந்த பணத்தைக் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லையென யாதவர்கள் கூறுகின்றனர். கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டில் நன்கொடையாளர்கள் பட்டியல் உள்ளது. அதில் தேவேந்திரர்கள் பெயர் எதுவும் காணப்படவில்லை என்பதை ஆதாரமாகச் சொல்கின்றனர். ஆனால் அது நன்கொடையாளர் பட்டியல்தானே தவிர ஊர் மக்கள் சார்பாக வரி அளித்தவர்களின் பட்டியல் அல்ல என்பதை எமது குழு பதிவு செய்து கொண்டது.
முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழாக்களை மூன்று சாதியினரும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சேர்ந்து நடத்தியுள்ளனர். மூன்று பிரிவினரும் கொடை விழாவில் சேர்ந்து சாமியாடியுள்ளனர். பிறகு செட்டியார்கள் தனியே நடத்தியுள்ளனர். யாதவர்களும் இணைந்து கொடை விழா நடத்துவது தொடர்ந்தது. இரு சாராரிடமும் இது தொடர்பாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இரு சாராரும் வரி செலுத்தியுள்ளதற்கு ஆவணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக சென்ற 28.09.2008 அன்று சங்கரன்கோவில் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதற்கு முந்தைய ஆண்டு கணக்கு ஒன்றின்படி யாதவர் சமூகத்தினரின் பங்கு (140 * 65 = ரூ. 9075) எனவும் தேவேந்திரர்களின் பங்கு (45 * 65 = ரூ. 2925) எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இரு சாராரும் இணைந்து வரி செலுத்தி இந்த விழாக்களை நடத்தியுள்ளனர் என்பது உறுதியாகிறது.
குடமுழுக்கு நடைபெற்ற தினத்திலிருந்தே (2003) யாதவர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. தேவேந்திரர்கள் தீர்த்தம் கொண்டு வரும்போது உள்ளே வரக் கூடாது என யாதவர்கள் தடுத்துள்ளனர். சமாதானக் கூட்டம் ஒன்று நடத்தி தற்காலிகமாகப் பிரச்சனை காவல் துறையினரால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக முளைவிட்டுக் கொண்டிருந்த பிரச்சனை சென்ற ஆண்டில் பெரிய சிக்கலாகியது. தேவேந்திரர்களுக்குச் சொந்தமான சுடலை மாடசாமி திருவிழாவின் பொது இளைஞர்கள் பாடிய பாடல் ஒன்று பிடிக்கவில்லை என்று காரணம் சொல்லி யாதவர்கள் மின்சாரத்தைத் துண்டித்து இடைய+று செய்துள்ளனர்.
முதலில் செட்டியார்கள் முப்பிடாதி அம்மன் கொடைவிழாவை நடத்தியுள்ளனர். செப்டம்பர் 30, 2008 அன்று யாதவ மக்கள் திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு கணக்கு வழக்குகளை பேச்சு வார்த்தை மூலம் ‘செட்டில்’ பண்ணாமல் திருவிழாவை நடத்தக் கூடாது என தேவேந்திரர்கள் மனு கொடுத்ததை ஒட்டி 2008 செப்டம்பர் 28ல் காவல் துறைக் கண்காணிப்பாளர் சமாதானக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். இதில் மேற்படி கணக்கு செட்டில் செய்யப்பட்டதோடு யாதவர்கள், தேவேந்திரர்கள் ஆகியோரும் தனித் தனியே தாங்கள் விரும்பும் தேதிகளில் கொடைவிழாவை நடத்துவதற்கு இருதரப்பினரும் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ளனர். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இக்கைசாத்துகள் இடப்பட்டுள்ளன.
எனினும் பிரச்சனை தொடரவே செய்தது. மீண்டும் 13.10.2008 அன்று ஒரு சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு அதில் எந்த முடிவும் வராமல் 10.11.2008ல் அடுத்த சமாதானக் கூட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இனிவரும் பேச்சு வார்த்தைகளில் செட்டியார் சமூகத்தினரையும் சேர்த்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் சிறுசிறு பிரச்சனைகள் உருவாகியுள்ளன. எடுத்துக்காட்டாக 04.11.2008 அன்று சண்முகம் மகன் சுடலையின் நாய் ஒன்றை யாதவ சமூகத்தைச் சேர்ந்த வேலுச்சாமி, முருகேஷ் ஆகியோர் அடித்துக் கொன்றுள்ளனர். மீண்டும் 24.11.2008 அன்று சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் யாதவர்களும் செட்டியார்களும் இணைந்து தேவேந்திரர்களின் கருத்துக்களை மறுத்துள்ளனர். முப்பிடாதி அம்மன் கோவில் கட்டியதில் தேவேந்திரர்களுக்கு பங்கு இல்லையென கூறியுள்ளனர். நேரடியாக வட்டாட்சியரும் காவல் துறை அதிகாரிகளும் பார்வையிட்டு முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் மற்ற இரு சமூகத்தினரும் கொடை விழாக்களை நடத்தியதை முன்னிட்டு, 28.09.2008 அன்று எடுத்த ஒருமித்த முடிவின்படி 10.03.2009ல் தங்களை கொடைவிழா நடத்த அனுமதிக்குமாறு தேவேந்திரர்கள் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தனர்.
அன்றிரவே நடைபாதைகளில் முட்களை வெட்டிப்போட்டு தேவேந்திரர்களின் போக்குவரத்திற்கு இடைய+று செய்யப்பட்டுள்ளது. வேலுச்சாமி, சுரேஷ், சுப்பையா, கண்ணன் ஆகிய யாதவ இனத்தினர் இவ்வாறு முட்களை வெட்டிப் போட்டுள்ளதோடு, அதைத் தட்டிக் கேட்டவர்களை அரிவாளால் வெட்டிக் கொலை செய்வோம் என மிரட்டியும் உள்ளனர். செட்டியார் சாதியைச் சேர்ந்த மகாலிங்கம், அருணாச்சலம் ஆகியோர் தேவேந்திரர்களுக்கு கடைகளில் பலசரக்கு சாமான்களை விற்பதை நிறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து தேவேந்திரர்கள் 10.03.2009ல் கொடைவிழா நடத்துவதை வற்புறுத்தி மனு அளித்ததன் பேரில் சென்ற 05.03.2009 அன்று திருநெல்வேலி கோட்டாட்சியர் தலைமையில் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தில் கோட்டாட்சியர் கலந்து கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய தேர்தல் ஆய்வுக் கூட்டத்திற்கு அவர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. கோட்டாட்சியர் வராததாலும் மூன்று தரப்பினரும் தத்தம் கருத்துகளில் பிடிவாதமாக இருந்ததாலும் மீண்டும் கோட்டாட்சியர் தலைமையில் 12.03.2009ல் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
படுகொலை சம்பவம் : -
எந்த முடிவும் வராமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட அடுத்த நாள் காலையில் கொல்லப்பட்ட ஈஸ்வரனின் மகன் மாடசாமி வேலி ஓரமாக காலைக் கடன்களை முடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே யாதவ சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி வந்துள்ளார். அவரைக் கண்டதும் எழுந்திருக்கவில்லை எனச் சொல்லி 1 மணி நேரத்திற்குப் பிறகு வந்த யாதவப் பெண்மணிகள் சிலர் தகராறு செய்த போது அந்த பெண்மணி வந்தது தமக்குத் தெரியாது என தேவேந்திரர்கள் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஈஸ்வரனின் மனைவி கருப்பாயி அம்மாள் குழாய் அடியில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும்போது யாதவ சமூகத்தைச் சேர்ந்த குருவம்மாளும் மற்றவர்களும் வந்து அவரைக் கடுமையாக அடித்துள்ளனர். அடித்தவர்கள் போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர். கருப்பாயி அம்மாள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அன்றிரவு மருத்துவமனையில் இருந்த கருப்பாய் அம்மாளைப் பார்த்து விட்டு குறுக்குப் பாதை வழியே அவரது உறவினர்கள் திரும்பி வரும் போது அய்யர்காடு ஓடைப்பக்கம் இரவு 9.15 மணியளவில் யாதவர்கள் வழி மறித்துள்ளனர். சுமார் 3 பேர் அவர்களை வழிமறித்த போதும் சுமார் 25 யாதவர்கள் வெட்டரிவாளுடன் அருகில் மறைந்திருந்துள்ளனர். கருப்புசாமி மகன் பரமசிவனை (22) கொடூரமாக கொலை செய்து உடலை கண்டந்துண்டமாக வெட்டி வீசியெறிந்துள்ளனர்.
ராஜன் மகன் சுரேஷ் (22) சுடலை மகன் ஈஸ்வரன் (55) ஆகியோர்களைத் தாக்கியபோது சுரேஷ் மட்டும் தப்பித்து ஓடிவிட ஈஸ்வரனின் தலை துண்டித்து வீசப்பட்டது. கொல்லப்பட்ட பரமசிவனின் சித்தப்பா கிருஷ்ணனும் (35) காயங்களுடன் தப்பியோடியுள்ளார்.
அச்சத்தால் கலங்கிய தேவேந்திரர்கள் அவ்வளவு பேரும் கிராமத்தை விட்டு வெளியேறி சங்கரன்கோவிலில் தேவேந்திரர்கள் அதிகம் வசிக்கக் கூடிய காந்தி நகர் பகுதியில் தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு இடம் பெயர்ந்து வந்த சுமார் 100 பேரையும் சமுதாயக் கூடத்தில் தங்க வைத்து சென்ற 17.03.2009 வரை நாட்டாமை கருப்புசாமியும் மற்றவர்களும் பராமரித்துள்ளனர். இதற்கிடையில் பிரச்சனை தமிழக அளவில் கவனம் பெற்றதை ஒட்டி மாவட்ட ஆட்சியரும் மற்றவர்களும் தலையிட்டு காந்தி நகரில் இடம் பெயர்ந்து இருந்த தேவேந்திரர்களை வற்புறுத்தி அழைத்து வந்து செந்தட்டியில் உள்ள தத்தம் வீடுகளுக்குத் திரும்ப வைத்துள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின்படி தேவேந்திரர்களைத் தாக்கி கொலை செய்ததாக 14 யாதவர்களின் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புலனாய்வில் 7 யாதவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக துணைக் கண்காணிப்பாளர் எங்களிடம் கூறினார். இவர்களில் இதுவரை 15 பேர் காவல் துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவர் நீதி மன்றத்தில் முன்னிலை ஆகியுள்ளனர். இவர்கள் மீது இ.பி.கோ. 147, 148, 341, 343, 302 ஆகிய பிரிவுகளிலும் 1989ம் ஆண்டின் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 3(2)(5) பிரிவின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்ற எண் : 34/2009
எமது பார்வைகள்:-
எந்த அடிப்படை வசதிகளுகம் இல்லாத வளர்ச்சியற்ற ஒரு பின்தங்கிய கிராமம் செந்தட்டி. எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் கல்வி வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. தேவேந்திரர்கள் கல்வி நிலை, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
சமீப காலம் வரை தேவேந்திரர்கள் மற்ற இரு உயர் சாதியினரிடம் பிணம் எரிப்பது உள்பட்ட அடிமைத் தொழில்களைச் செய்து வந்துள்ளனர். பிரச்சனை முற்றிய கடந்த ஓராண்டு காலமாகவே தேவேந்திரர்கள் இப்பணியை நிறுத்தியுள்ளனர். இதையொட்டி யாதவர்களும், செட்டியார்களும், தேவேந்திரர்களை சமூக விலக்க செய்துள்ளனர். ஊரில் அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. உச்சக்கட்டமாக கடைகளில் சாமான்கள் வழங்குவதையும் நிறுத்தியுள்ளனர். பிணம் எரிப்பது முதலான பணிகளில் அருந்ததியர்களை பயன்படுத்தியுள்ளனர்.
தேவேந்திரர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தேவேந்திரர்களின் தெரு இரு பிரிவாக உள்ளது. யாதவர் பகுதியையொட்டிய தெருவில் உள்ளோர் ரொம்பவும் பாதுகாப்பற்று உள்ளனர். நிறுத்தி வைத்துள்ள போலீஸ் படையால் இவர்களின் அச்சத்தை நீக்க முடியவில்லை.
கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் யாதவர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி உள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டு இருப்போர்களில் கொலைக்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் விடுபட்டுள்ளதாக இரு தரப்பு மக்களிடமும் கருத்துக்கள் உள்ளன. எனினும் இதை துணைக் கண்காணிப்பாளர் எங்களிடம் மறுத்தார். தங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே கொலைக்குக் காரணம் என்பதை யாதவர்கள் ஒத்துக் கொண்டனர்.
காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி உடனடியாக முக்கியக் குற்றவாளிகளை கைது செய்ததோடு, வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி உடனடியாகக் கொல்லப்பட்ட இரு குடும்பத்திற்கு தலா ரூ.1.5 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
காவல் துணை துணைக் கண்காணிப்பாளர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் ஓரளவு நடுநிலையுடன் காணப்பட்ட போதிலும் வழக்கமாக பொதுப் புத்தியில் சாதியம் தொடர்பாக காணப்படும் பல தவறான கருத்துக்களை சுமந்தவராகவும் இருந்தார். புதிய தமிழகம் கட்சி வந்த பிறகுதான் எல்லா பிரச்சனைகளும் தோன்றுகின்றன என்றார். வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தலித்கள் தவறாக பயன்படுத்துவதாக குறை கூறினார். பிரச்சனைக்குரிய பகுதிகளில் வருவாய் மற்றும் காவல் துறைகளில் போதிய தலித்கள் பணியமர்த்தப்படுவதால் பிரச்சனைகளை தீர்த்து விட முடியாது என்றார். செந்தட்டி தவிர பிள்ளையார் குளம், பந்தப்புளி ஆகிய பகுதிகளிலும், தீண்டாமை பிரச்சனை உள்ள போதிலும் கண்காணிப்பதற்கு போதிய அளவு காவல்துறையினர் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டார். காவல்துறையின் பணி அதிகரித்துள்ள அளவிற்கு காவலர்கள் எண்ணிக்கை மேம்படுத்தப்படவில்லை என்றார்.
கடந்த 6 ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பிரச்சனை முற்றியுள்ளது. தேவேந்திரர்கள் சமூக விலக்க செய்யப்பட்டுள்ளனர். 28.09.2008 அன்று நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் 3 சாதியினரும் தனித் தனியே கொடை விழா நடத்துவதற்க மனப்ப+ர்வமாக ஒப்புதல் அளித்த போது அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மார்ச் 10, 2009 அன்று கொடை விழா நடத்த அனுமதி கேட்ட தேவேந்திரர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்குரிய முயற்சிகளை எடுக்காமல் தேவையில்லாமல் சமாதானக் கூட்டங்கள் நடத்துவதிலேயே வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் காலத்தை வீணடித்துள்ளனர். உரிய நடவடிக்கைகளுக்குப் பதிலாக சமாதானக் கூட்டம் என்ற நிலைப்பாட்டை இவ்விரு துறையினரும் எடுத்ததே பிரச்சனை இரு தலித்களின் படுகொலையில் முடிந்ததற்குக் காரணம்.
கொலைச் சம்பவத்திற்கு முதல்நாள் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கோட்டாட்சியர் கலந்து கொள்ளாமல் போனது வருந்தத்தக்கது. அவருக்கு வேறு முக்கிய வேலைகள் இருந்த போதிலும் இந்த பிரச்சனைக்கு அவர் அதிக அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். தீண்டாமைப் பிரச்சனைக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதற்கு அரசு அதிகாரிகள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
பிரச்சனை என வரும்போது தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் பகுதியில் உள்ள உயர் சாதியினர் ஒன்றாக இணைந்து கொள்வது என்பது இங்கும் ஏற்பட்டுள்ளது. செட்டியார்களும் யாதவர்களும் சேர்ந்து செயல்பட்டுள்ளனர். கல்வி, பொருளாதாரம் முதலியவற்றில் பெரிய முன்னேற்றம் இல்லாதவர்களானபோதும் யாதவர்கள் மனத்தில் உள்ள சாதி உணர்வ கவலையளிக்கிறது.
பள்ளி ஆசிரியர்களில் இருவர் தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தமது பிள்ளைகள் பாரபட்சமின்றி நடத்தப்படுவதாகவும் எனினும் அங்கன்வாடி, சத்துணவுக் கூடம் ஆகியவற்றில் பணியாற்றுவோர் உள்ளுர் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தம் குழந்தைகள் இழிவு செய்யப்படுவதாகவும் தேவேந்திரர்கள் குற்றம் சாட்டினர். இதை சத்துணவு பொறுப்பாளர் சண்முகத் தாய் அங்கன்வாடி உதவியாளர் பெரமு ஆகியோர் மறுத்தனர்.
பள்ளி செயல்பட்டபோதும் அச்சத்தின் காரணமாக தேவேந்திரர்களின் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை. அவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகள்:-
செந்தட்டி கிராமம் தவிர பிள்ளையார்குளம், பந்தப்புளி முதலான பகுதிகளிலும் தொடர்ந்து தீண்டாமை பிரச்சனை இருந்து வருகிறது. அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். வன் கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி இப்பகுதி தீண்டாமைக் கலவர சாத்தியப் பகுதியாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
எண்ணிக்கையில் குறைந்தவர்களாகவும் அமைப்பு பலமற்றவர்களாகவும் மிகுந்த அப்பாவிகளாகவும் உள்ள தேவேந்திரர்களின் மனத்தில் பொதிந்துள்ள அச்சத்தை நீக்குவது அரசு மற்றும் சிவில் சமூகத்தின் உடனடி கடமையாகிறது. குற்றவாளிகள் மீதான வழக்கு தீவிரமாகவும் விரைவாகவும் நடத்தி முடிக்கப்படுதல், பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்குதல் ஆகியவை தேவேந்திரர்கள் மத்தியில் உள்ள பயத்தைப் போக்க உதவும். செந்தட்டி கிராம்த்திற்குள் நிரந்தரமாக ஒரு புறக் காவல் நிலையம் உடனடியாக அமைக்கப்படுதல் வேண்டும். சம்பவம் நடந்த போது அங்கிருந்த இரு காவலர்கள் ஓடிச் சென்றுள்ளனர். அவ்வாறு மீண்டும் நடைபெறாமல் போதிய அளவு காவல் துறையினர் ஆயுதங்களுடன் காவல் நிலையத்தில் அமர்த்தப்படுதல் வேண்டும்.
கொலை செய்யப்பட்ட இரு குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 இலட்சம் இழப்பீடுகள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திலும் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்டோர் முன் வைக்கின்றனர். இதை அரசு ஏற்க வேண்டும்.
28.09.2008 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
தேவேந்திரர்கள் மீது சமூக விலக்கு செய்யக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட வேண்டும். சமூக விலக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
இப்பகுதியின் பின்தங்கிய நிலைமை குறித்து முன்பே வரிவாகச் சொன்னோம். சிறப்புக் கூறு திட்டத்தின் கீழ் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இக்கிராம முன்னேற்றத்திற்கு செலவிடப்பட வேண்டும். எல்லாத் தரப்பு மக்கள் மத்தியிலும் கல்வியின் முக்கியத்துவம் வற்புறுத்தப்படுதல் அவசியம்.
கழிப்பிட வசதி இல்லாதது பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. பொதுவாக இந்திய கிராமங்களின் நிலை இதுதான் என்ற போதிலும் இங்குள்ள பிரத்யோகமான சூழலைக் கணக்கில் கொண்டு எல்லாப் பகுதி மக்களுக்கும் உடனடியாக கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
முப்பிடாதி அம்மன் கோவில் ஒரு ஆலயமாக மட்டுமின்றி ஊரின் மையமாகவும் அமைந்துள்ளது. புறம்போக்கு இடத்தில் (நத்தம் புல எண் : 1210) இது கட்டப்பட்டுள்ளது. பிரச்சினைக்குரிய முப்பிடாதி அம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதுவரை மூன்று பிரிவினரும் தனித் தனியே கொடை விழாக்களை நடத்த உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
19.03.2009,
மதுரை.
(மார்ச் 19, 2009 மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது)
லேபிள்கள்:
சங்கரன்கோவில்,
செந்தட்டி,
தலித்கள்,
தேவேந்திரர்,
முப்பிடாதி அம்மன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
nenju porukkuthilleye intha nilai ketta manitharkalai parkum pothu,...... enimelum porukkam edu vaali aru ....... enpathutan sariyaka irukkum...by., PALLAN
வெட்கக்கேடான விடயம்தான். ஒரு ஆண்டு முந்தைய சேதியை இன்று தரக் காரணம் ஏதும் உண்டா?.
அண்ணாச்சி ,
நெல்லை மாவட்டத்தில் 20வருசமா இருக்கிறேன்.
ஒரு ஆசிரியர் ஒரு தலித மாண்வனை பார்த்து ஏதும் கேட்டுக்கூட முடியாது. உடனே ‘என்னை சாதி பெயர் சொல்லி திட்டாற்ங்க’ என்று போலீசில் புகார் அளிக்கப்படும். ஆசிரியர் தண்டிக்கப்படுவார்.
இந்த தேவர், தலித இந்த மாநில/மத்திய செல்ல பிள்ளைகளைடம் மாட்டிகொண்டு உண்மையிலே அடுத்த சாதிக்காரன் தான் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இது தான் உன்மை. இந்த 2 ரவுடிகளிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள தனி மனைதன் சாதிக்ளை விரும்பாமல் இருந்தாலும், அவற்றோடு ஓட்டிக்கொள்ள வேண்டியுள்ளது. ஏன்னெஇல் அப்போது தான் கொங்சம் பாதுக்காப்பாகவது இருக்கும்.
கருத்துரையிடுக