சனி, பிப்ரவரி 20, 2010

குடிமக்களை ‘வேட்டை’ யாடும் மத்திய அரசும், தேசபக்தி தி.மு.க. அரசும்


குடிமக்களை ‘வேட்டை’ யாடும் மத்திய அரசும்,

தேசபக்தி தி.மு.க. அரசும்- மு. சிவகுருநாதன்


தந்தை பெரியார் 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் அதாவது இந்தியா விடுதலைபெற்ற நாளை துக்க நாளாக அறிவித்து, சுதந்திரத் திருநாள் எனும் ஏமாற்றுத் திருவிழாக்களில் கலந்து கொள்வதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். (விடுதலை : 06.08.1948) அவருடைய உழைப்பை அறுவடை செய்து கொண்டிருக்கும் மு. கருணாநிதியின் தி.மு.க. அரசு, ஜனவரி 26, 2010 குடியரசு நாள் விழா முடிந்ததும் துண்டறிக்கை விநியோகிக்கச் சென்ற பியூஷ் சேத்தியா (நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்) மீது தேசத்துரோகச் சட்டம் மற்றும் பல்வேறு கடுமையான சட்டப்பிரிவுகளின்படி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் மத்திய, மாநில அரசு பயங்கரவாதத்தின் கோர முகம் வெளிப்படுகிறது.


“வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துகிறோம்” என்ற பெயரில் மன்மோகன்களும், சிதம்பரங்களும், கனிம வளமும், காட்டு வளமும், நீர்வளமும் நிரம்பிய சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா ஆகிய மாநிலங்களிலுள்ள பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க பழங்குடி மக்களை அப்புறப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர். இதனை எதிர்க்கும் பழங்குடி மக்களையும், விவசாயிகளையும் அரசு நக்சலைட்கள், மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி ‘ பச்சை வேட்டை’ (Operation Green Hunt) என்ற பெயரில் ராணுவம், போலீஸ் மற்றும் அரசு ஆதரவு கூலிப்படைகள் மூலம் குடிமக்கள் மீதே போர் தொடுத்து வருகின்றது. ‘பச்சை வேட்டை’ நடவடிக்கைகளின் விளைவாக இன்று 644 கிராமங்களைச் சேர்ந்த மூன்று லட்சம் பழங்குடி மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.


சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா ஆகிய மாநிலங்களிலும், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரம் ஆகிய மாநில எல்லையோரங்களிலும் உள்ள தண்டகாரண்யக் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் புதையுண்டு போயுள்ள இரும்பு, நிலக்கரி, கிரானைட், பாக்சைட், சிலிகா, சுண்ணாம்புக்கல் போன்ற பல்வேறு வகையான தாதுப்பொருட்களை ஜிண்டால், வேதாந்தா, டாடா, மிட்டல், ஸ்டெர்லைட் போன்ற உள்நாட்டு, அயல்நாட்டு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் இயற்கை வளங்களை அள்ளிக் கொடுக்க பழங்குடி மக்கள் இடையூறாக இருக்கிறார்கள். எனவேதான் அரசு தன் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தால் அவர்களை அகதிகளாக்குகிறது.


அந்நிய நாடுகளில் செயல்படும் இயக்கங்களுக்கு நிதி, ஆயுதங்கள் அளித்து வளர்த்து விடுவதைப் போன்று இன்று அரசாங்கம் உள்நாட்டிலேயே பல்வேறு கூலிப்படைகளை அமைத்து குடிமக்களுக்கெதிரான போரைத் தீவிரமாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில் சத்தீஸ்கரில் ‘சல்வா ஜுடும்’, ஒரிசாவில் சாந்திசமீதி போன்றவை பீகாரின் ‘ரன்வீர் சேனா’ போல் கட்டியமைக்கப்பட்டுள்ளன. போராடும் மக்களில் ஒரு பிரிவினரை இவ்வாறு கூலிப்படைகளாக்கி மக்களை பிளவுபடுத்துவதோடல்லாது, இந்த சட்ட விரோத கூலிப்படைக்களுக்குண்டான ஆயுதம், பொருள் போன்றவற்றை அரசே சப்ளை செய்கிறது. இவர்கள் கொள்ளையடித்தல், கொலை, ஆள் கடத்தல், பாலியல் வன் கொடுமை போன்றவற்றை அரசு உதவியோடு செய்து வருகின்றனர்.


போராடும் மக்களை நக்சலைட்டாகவும், மாவோயிஸ்ட்டாகவும் சித்தரிக்கப்பட்டு அவர்களை ராணுவமும், போலீசும், கூலிப்படைகளும் சொல்லெண்ணா துயரங்களுக்குள்ளாக்குகின்றன. ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எண்ணற்ற பழங்குடிப் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகள் கூட கொல்லப்பட்டும், தாக்குதல்களுக்கு ஆட்பட்டும், சித்ரவதை செய்யப்பட்டும் வருகின்றனர். ஆண்கள் ராணுவம், போலீஸ், கூலிப்படை ஆகியவற்றிற்கு பயந்து காடுகளில் ஒளிந்துள்ளனர். அச்சத்தால் உறைந்து போயுள்ள இவர்களை பசி வாட்டுகிறது.


“மாவோயிஸ்ட்டுகளும் இந்தியாவின் குடிமக்கள்தான். அவர்கள் மீது அரசாங்கம் போர் தொடுக்கக் கூடாது”, என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசு மற்றும் கூலிப்படைகளின் மனித உரிமை மீறல்களை உச்சநீதிமன்றமும், தேசிய மனித உரிமை ஆணையங்களும் பலமுறை கண்டனம் செய்துள்ளன. அருந்ததிராய் போன்ற மனித உரிமைப் போராளிகள் அரசின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளினால் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை விளக்கி அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் அரசு பன்னாட்டு கம்பெனிகளின் ஏஜென்ட்டாக மாறி சொந்த நாட்டு மக்களின் மீதே ஒரு லட்சம் துணை ராணுவப்படைகளைக் கொண்டு பெரும்போர் தொடுத்துள்ளது.


“மாவோயிஸ்ட்களின் இந்த வன்முறை நடவடிக்கைகளை சில அமைப்புகள் நியாயப்படுத்தப் பார்க்கின்றன. ஆனால் இந்த வன்முறையை நாட்டில் உள்ள பெரும்பாலானோர் கடுமையாக கண்டிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மாவோயிஸ்ட் - நக்சல்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் மொத்த படித்தவர்களும் இந்த வன்முறையை கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நக்சல் கொள்கைகளை நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்ட நிலையில் அவர்களை அடக்கி அந்தப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வழி காண வேண்டும்” என்கிறார் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் (தினமணி - திருச்சி: 17.02.2010). மேலும், “ஜனநாயக - குடியரசு அமைப்பில் எந்தவொரு அமைப்பும் வன்முறை மூலம் சட்டப்பூர்வமான அதிகார அமைப்பை கைப்பற்ற உரிமை இல்லை” என்றும் சொல்கிறார். மனித உரிமை செயல்பாட்டாளர்கள், நடுநிலையாளர்கள் மாவோயிஸ்ட் வன்முறை, அரச வன்முறை ஆகிய எந்த வன்முறைக்கும் எதிராகவே உள்ளனர். ஆனால் மெத்தப் படித்தவர்கள் மாவோயிஸ்ட் வன்முறையை ஆதரிப்பதாக இட்டுக்கட்டி பிரச்சாரம் செய்கிறார் சிதம்பரம்.


அரச வன்முறை மூலம் பல லட்சம் மக்களை அப்புறப்படுத்தி விட்டு, என்ன மாதிரியான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை சட்டப்பூர்வ அதிகார அமைப்பு (அரசு) ஏன் வெளிப்படையாக பேசுவதில்லை? அப்பாவி பழங்குடி மக்களை வேட்டையாட 1 லட்சம் ராணுவம் எதற்கு? நீதிமன்ற நெறிமுறைகளைக் கூட கடைபிடிக்க விரும்பாத அரச பயங்கரவாதிகள் (ஆளும் வர்க்கம், ராணுவம், போலீஸ், அரசு ஆதரவு கூலிப்படையினர்) சாதிக்க நினைப்பது என்ன என்பதை ப. சிதம்பரமும் மன்மோகன்சிங்கும் விளக்க வேண்டியது அவசியம்.


மேற்கு வங்காளம் மித்னாபூர் மாவட்டத்தில் துணை ராணுவப்படை முகாம் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து நக்சல்கள் மீதான கூட்டு நடவடிக்கை தொடரும் என மத்திய - மாநில அரசுகள் அறிவிக்கின்றன. முன்பே மாவோயிஸ்ட்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்ததை ஏற்க மறுத்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் மேற்கு வங்க இடதுசாரி அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை மறுப்பதோடு, ‘வேட்டை’ தொடரும், தாக்குதல் தொடரும் என்று போர்ப் பரணி பாடி வருவதை பெரும்பாலான ஊடகங்கள் ஒருவித வன்மத்தோடு செய்தி வெளியிடுகின்றன. தீவிரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் இந்த ஊடகங்கள் மக்களுக்கு எதிரான செய்திகளை மட்டும் வெளியிட்டு அரச பயங்கரவாதத்தை பொதுமக்களின் பொதுப்புத்தியில் இயல்பானதொன்றாக பதிய வைக்க பெரும் முயற்சி செய்கின்றன. முதலீட்டிய ஆதரவு ஊடகங்கள் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்களை மறைத்தும் நக்சல் தாக்குதல்களை மிகைப்படுத்தியும் செய்திகளை வெளியிடுகின்றன.
‘பச்சை வேட்டை’ குறித்து அரசு நிர்வாகம் அளிக்கும் விவரங்களைத் தவிர உண்மை நிலவரங்களை வெளியிடக் கூடாது என பத்திரிக்கைகள் மிரட்டப்பட்டு, எழுத்துரிமை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.


தண்டேவாடாவுக்குச் சென்ற அறிவு ஜீவிகள், ஊடகவியலாளர்கள், உண்மை அறியும் குழுக்களைச் சேர்ந்தவர்களை உள்ளூர் போலீஸ், அரசு ஆதரவு கூலிப்படையினர் (சல்வா ஜுடும், சாந்தி சமீதி) போன்றோர்களால் கடுமையான தாக்குதல்களுக்கும் இழிவுபடுத்தல்களுக்கும் உள்ளாயினர். சட்டப்பூர்வமான அதிகார அமைப்பு பற்றி பேசும்
ப. சிதம்பரம் போன்றோர் அரசின் வன்முறையை சட்டப்பூர்வமானதொன்றாக கட்டமைக்கின்றனர். சட்டப்பூர்வமாக்கப்பட்ட இந்த அரச வன்முறையின் கோரப்படியில் சிக்கி பல லட்சம் ஆதிவாசிகள் இன்று அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாகப் பேசுவது, போராட்டங்கள் நடத்துவது இன்று நக்சலைட் ஆதரவுச் செயல்பாடு என்று அரசும், ஊடகமும் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. ராணுவமும், போலீசும், கூலிப்படைகளும் சாகும் தருவாயில் உள்ள வயதான பெண்கள், சிறு குழந்தைகள் ஆகியோரைக் கூட நக்சலைட் என்ற முத்திரை குத்தி கொலை செய்கிறார்கள் அல்லது உறுப்புக்களை வெட்டி முடமாக்குகிறார்கள். காந்தீவாதிகள் கூட இவர்களது பார்வையில் நக்சலைட்டாகத்தான் தெரிகிறார்கள். “மாவோயிஸ்ட்டுகளும் இந்திய குடிமக்களே” என்று சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதியை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?


சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் வசிக்கும் தண்டேவாடா மாவட்டத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக ‘வனவாசி சேத்னா ஆசிரமம்’ (VCA) என்ற அமைப்பின் மூலம் சேவையாற்றி வரும் காந்தீயவாதியும், மனித உரிமைப் போராளியுமான ஹிமான்சு குமார் அரச பயங்கரவாதத்தின் கூட்டுக் கொடுமைகளை எதிர்த்தார் என்ற காரணத்திற்காக, அவரது ஆசிரமம் இடித்துத் தள்ளப்பட்டது. ஹிமான்சு குமாரையும் அவரது அமைப்பினரையும் அங்கு செயல்படாமல் தடுக்க மிரட்டல், ஊழியர்கள் மீது தாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் இன்று அவர் அப்பகுதியை விட்டு வெளியேறி விட்டார். பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக யாரும் செயல்பட, எழுத, பேச முடியாத நிலையை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ளன. பிநாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளை தனக்குத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொண்டு, பிறகு பெரிய அடக்குமுறை சட்டங்களையும், அத்துமீறல்களை கட்டவிழ்த்து விடுவது வாடிக்கையாகிவிட்டது.


கனிம, காட்டு, நீர் வளங்களை நிறைந்த பழங்குடியினரின் வாழ்வாதாரமாக உள்ள தண்டகாரண்யப் பகுதியை விட்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக பழங்குடியினரை அரசாங்கம் தனிமைப்படுத்தியிருக்கிறது. கூலிப்படையை அமைத்து அவர்களை பிளவுபடுத்தியிருக்கிறது. வெளி ஆட்கள் யாரும் ஆதரவு நிலைப்பாடு எடுப்பதையும் திட்டமிட்டு வெளியேற்றி வைத்திருக்கிறது. இதனால் அப்பாவி பழங்குடி மக்களை மாவோயிஸ்ட்களிடம் நெருங்கிச் செல்ல வழி வகுத்திருக்கிறது.


காந்தீயவாதி ஹிமான்சு குமார் நிலைமையை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் “அரசு கூலிப்படையான ‘சல்வா ஜுடும்’ க்கு சாராயம், கோழிகள், ஆடுகள், பெண்கள் தேவை. இவை அனைத்தையும் அவர்கள் பழங்குடி மக்களிடமிருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். அரசு மாவோயிஸ்ட்களின் வன்முறை பற்றி ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கிறது. பழங்குடி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டேயிருக்கிறது. அரச வன்முறையைக் கைவிடாமல் மாவோயிஸ்ட்களின் வன்முறையை மட்டும் எப்படி கைவிட முடியும்? வெளிப்படையாக சொல்வது போல் அரசு விரும்புவது அமைதியை அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசுக்குத் தேவை அங்குள்ள நிலங்களும் அவற்றிலுள்ள வளங்களுமே. அதனை அபகரிக்க அரசு வெறித்தனத்தை நாடுகிறது. இது ஏழைப் பழங்குடி மக்களின் போராட்டம். நக்சலைட்கள் ஒரு அடையாளம் மட்டுமே. மார்க்ஸ், காந்தி ஆகியோர் இல்லாமல் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போராடத்தான் செய்வார்கள்”. இத்தகைய கருத்துக்களை ஹிமான்சு குமார் போன்ற காந்தீயவாதிகளும் மனித உரிமைப் போராளிகளும் தொடர்ந்து எடுத்து வைக்கிறார்கள். அமைதியையோ உண்மையான வளர்ச்சியையோ விரும்பாத அரசு பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகவும், தங்களுடைய கமிஷன்களுக்காகவும் சொந்த குடிமக்களை கொல்லத் துணிந்திருக்கிறது.


மேற்கு வங்காளத்தில் இடது சாரிகளே நந்திகிராம், சிங்கூர் போன்ற பிரச்சினைகளில் முதலீட்டியத்தின் ஆதரவாளர்களாக மாறிப்போன வரலாற்றை நாம் கண்ணெதிரே கண்டுவருகிறோம். இந்த நிலையில் தமிழ்நாட்டு தி.மு.க அரசிடம் பெரிதாக என்ன எதிர்பார்த்து விடமுடியும்?


சிறப்புப்பொருளாதார மண்டலங்கள், நேரடி அந்நிய முதலீடு என தினமும் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட்டும் இனி கையகப்படுத்த வேண்டியது எனவும் நிறைய இருக்கினறன. சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், சென்னையை அழகுபடுத்துதல், கூவத்தை தூய்மையாக்கல், விமான நிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம், புதிய துறைமுகம் நிர்மாணித்தல் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் அரசாக கலைஞர் மு. கருணாநிதியின் அரசும், இது பற்றிய எவ்வித மாற்றுக் கருத்தையும் விமர்சனத்தையும் ஏற்க மறுக்கும் கருத்துரிமைக்கு எதிரான பாசிச அரசாகவும் செயல்படுகிறது. புதுச்சேரி துறைமுகத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டாலும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் அப்பகுதிக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் பெருத்த சுற்றுச் சூழல் பாதிப்பு காத்திருக்கிறது.


தமிழகத்தில் ‘சிப்காட்’ ஆல் கையகப்படுத்தப்படப் போகும் விளை நிலங்கள் தவிர இரும்புத்தாது வெட்டியெடுக்க ‘ஜிண்டால்’ நிறுவனத்திற்காக சேலம் கவுத்தி வேடியப்பன் மலையை தாரைவார்த்து முதலீட்டிய சேவை புரிந்திருக்கிறது தமிழக அரசு. தற்போது மதுரை ஒத்தக்கடை யானை மலையை குடைந்து ‘கலை சிற்ப நகரம்’ அமைக்கப் போவதாக அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பெரிய எதிர்ப்பு இல்லாதது போல் தமது ஊடக பலத்தால் பொய்யான மாயை ஒன்றை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.


சேது சமுத்திர திட்டம் போன்ற சுற்றுச் சூழலுக்கு எதிரான திட்டங்களுக்கு இங்கு அமோக ஆதரவு உள்ளது. இந்துத்துவாதிகளின் மிரட்டலால் மாற்றுப் பாதை குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த மாற்றுப்பாதை தமிழகத்தை பெரும் கேடிற்கு உள்ளாக்கும். வட தமிழ்நாட்டிற்கு கல்பாக்கம், தென்தமிழ் நாட்டிற்கு கூடங்குளம் ஆகியவை முழுத் தமிழ் நாட்டையும் காலி செய்ய போதுமானது. முதுமலை சிங்காரா காட்டுப் பகுதியில் அமைய இருந்த ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்’ அதற்குப் பதிலாக தேனி கம்பம் சுருளியாறு அருவிக்கு அருகில் மாற்றப்படப் போவதாகத் தெரிகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசு எதுவும் சொல்லாது. மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு இந்த மாதிரியான மக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடலோர பாதுகாப்பு மேலாண்மைச் சட்டத்தின் மூலம் மீனவர்களின் வாழ்வுரிமை எந்நேரமும் பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம்.


சென்னையில் சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்க ஆயிரக்கணக்கான குடிசைகள் முன்னறிவிப்பின்றி அப்புறப்படுத்தப்படுகின்றன. சென்னையின் புறநகரில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு துறைமுகத்திலிருந்து சரக்குகளை (60 முதல் 80 டன்) போக்குவரத்து நெருக்கடியின்றி விரைவாகக் கொண்டு செல்வதற்குத் தான் இந்த அதிவேக உயரச்சாலை அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான ஒரு வரைவு திட்டத்தை சென்னை துறைமுகம் தயாரித்தது. 9 கி.மீ நீளமுள்ள இத்திட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டிச் செல்லக் கூடியது. இதில் முக்கிய அரசியல்வாதிகள், மேல்தட்டு வர்க்கத்தினர், வி.ஐ.பி.கள் போன்றோர்களின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால், புதிய வரைவு திட்டம் 19 கி.மீ. நீளத்திற்கு கூவம் ஆற்றின் மீது கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.


புதிய திட்டத்தினால் செலவு ரூ.1000 கோடியிலிருந்து ரூ.2000 கோடியாக உயர்ந்ததோடு மட்டுமல்லாது ‘குடிசையில்லாத சென்னை’ என்ற அரசின் மறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாகவும் அமைந்து விட்டது. இதற்குச் சுற்றுச்சூழல் அமைச்சகம், கடலோர மேலாண்மை பாதுகாப்பு அமைப்புகள் போன்றவற்றிடமிருந்து உரிய அனுமதி எதனையும் பெறவில்லை. கூவத்தில் உள்ள மண்ணின் தன்மை, அதிக எடையைத் தாங்குமா என்பது குறித்து எந்தவித உத்திரவாதமும், ஆய்வும் இல்லை. மேலும், அதிக வளைவுகள் கொண்ட இப்பாதையில் அதிக எடை கொண்ட சரக்கு வாகனங்கள் செல்வது சாத்தியமா என்பது கூட ஆய்வு செய்யப்படவில்லை.


படிப்படியாக குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றித்தர தொடங்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் இன்று குடிசைகளை அப்புறப்படுத்தும் வேலையை பொதுப்பணித் துறையுடன் சேர்ந்து செய்கிறது. பல காலம் தொட்டே அடிக்கடி நடக்கும் அல்லது நடக்க வைக்கப்படும் தீ விபத்துகள் மூலம் குடிசைகள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு வந்தன. தற்போது எவ்வித முன்னறிவிப்பின்றி பல்லாயிரக்கணக்கான குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்ட குடிசைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு மற்றும் மாற்று வாழ்விடங்கள் அளிக்கப்படவில்லை. பல இடங்களில் முறையாக நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையாணையையும் மீறி குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களிடம் முன் கூட்டியே தகவல் தெரிவித்து கலந்துரையாடல் நடத்தி மாற்றிடங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் எதுவும் நடக்கவில்லை.


குடிசைப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றாக பறி போய் உள்ளது. வாழ்விழந்த குடிசைப்பகுதி மக்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர், கார்கில் நகர், எர்னாவூர் போன்ற மாநகரத்தை விட்டு தொலைவில் இடம் பெயர்க்கப்பட்ட இடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் உள்ளனர். அவர்களது குழந்தைகளின் கல்வி முற்றிலும் அழிந்து போயுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அடங்கிய உண்மையறியும் குழுவின் அறிக்கை இது குறித்த விரிவான விவரங்களைத் தருகிறது.


மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரிக்காய் (பாசில்லஸ் துரிஞ்ஜியன்சிஸ்) விவகாரத்தில் 10க்கு மேற்பட்ட மாநில முதல்வர்கள் காட்டிய எதிர்ப்பில் நமது தமிழ்நாட்டுக்குப் பங்கில்லை. அது மத்திய அரசின் பணியென்று ஒதுங்கியிருந்ததாக கருத முடியாது. இவை பற்றியெல்லாம் தெளிவாக அரசியல் நிலைப்பாடு தி.மு.க. விற்கு இல்லை என்பதே உண்மை. நம்மாழ்வார் என்ன பெரிய விஞ்ஞானியா? என்று கேட்ட வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நிலைதான் தி.மு.க.வின் நிலையாகும்.


பன்னாட்டு கம்பெனிகளுக்கும், நிறுவனங்களுக்கும் நமது இயற்கை வளங்களை தாரைவார்ப்பதில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பெரும் போட்டியே நிலவுகிறது. அந்த நிறுவனங்களுக்கு தரகர்களாகவும் பங்குதாரர்களாகவும் கூலிக்காரர்களாகவும் இந்திய அரசியல் வாதிகள் செயல்படத் தொடங்கியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்றோரை மிரட்டவும் அவர்களது செயல்பாடுகளைத் தடுக்கவும் பியூஷ் சேத்தியா போன்றவர்களின் கைதின் வாயிலாகவும், வேறு பல வழிகளிலும் மத்திய - மாநில அரசுகள் அடக்குமுறைகளை ஏவி வருகின்றன.


நைஜீரியாவில் ‘ஷெல்’ நிறுவனத்திற்கு எதிராகப் போராடி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கென் சரோ விவாவின் அரசியல் அறிக்கையிலிருந்து சில வரிகளைச் சொல்லி முடிக்கலாம் என்று தோன்றுகிறது.


“அரசியல் ரீதியான ஒதுக்கப்படுதல்களுக்கும்,
பொருளாதார நசுக்குதல்களுக்கும் உள்ளான
எங்களுடைய நிலை எனக்கு வேதனையளிக்கிறது.
பாழ்நிலமாகும் பூமி எனக்கு கவலையளிக்கிறது.
எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்றும்
எங்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றும் நான் ஆசைப்படுகிறேன்.புரட்சி மாற்றத்தைக் குறிக்கிறது.
அது ஒரு போதும் வன்முறையில் ஈடுபாடு உடையதல்ல.
யுத்தங்கள் ஒரு பிரச்சினையையும் தீர்ப்பதில்லை.
கலாச்சாரத்தையும் மக்களின் ஆத்ம ஞானத்தையும்
பின் தள்ளுவதைத் தான் செய்கின்றன.


நன்றி

1) EPW Nov.21, 2009.
2) ஓகோனிக்கு எதிரான யுத்தம் - ‘பயணி’ வெளியீடு.
3) சென்னை குடிசைப்பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம் பெயர்த்துக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்நிலை - உண்மையறியும் குழு அறிக்கை.
4) தலித் முரசு இதழ்கள்

குறிப்புகள் :

01 ஜனவரி 30, 2010 சென்னையில் நடைபெற்ற ‘சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும்’ என்ற பன் மாநில முழுநாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட மனிதஉரிமை ஆர்வலர்கள் பேரா. பாபையா, வி.எஸ். கிருஷ்ணா, டாக்டர் அபூர்வானந்த், சத்தியா சிவராமன், கவிதா ஸ்ரீவத்சலா, எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், பேரா.பிரபா. கல்விமணி சே.கோச்சடை, பேரா.சிவக்குமார், கோ. சுகுமாரன், ரஜினி, கே. கேசவன், ஏ.எஸ். அப்துல்காதர், பா.புழேந்தி போன்றோர் உள்ளிட்ட சுமார் 80 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று பியூஷ் சேத்தியா கைதை கண்டித்தும், உடன் விடுதலை செய்து வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டது.

02 பிப்ரவரி 05. 2010 அன்று சேலத்தில் ‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ சார்பில் பேரா. அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் மேலும் பலர் பங்கேற்ற தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

03 பிப்ரவரி 09, 2010 சென்னையில் இது தொடர்பான கூட்டம் ஒன்று ‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ சார்பில் நடத்தப்பட்டது.

04 தற்போது பியூஷ் சேத்தியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

1 கருத்து:

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

கருத்துரையிடுக