புதன், ஜூன் 16, 2010

அறிவியல் வழியே சாதி - இனப் பெருமை

அறிவியல் வழியே சாதி - இனப் பெருமை- மு.சிவகுருநாதன்


ஜனவரி 15, 2010இல் வளை வடிவ (கங்கண) சூரிய கிரகணம் நிகழ்வு நடந்தது. கிரகணம் தொடர்பான மூட நம்பிக்கைகள், மற்றும் அதற்கான உண்மையான காரணங்களை விளக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அவ்வப்போது சிறு வெளியீடுகளை வெளியிட்டு அறிவியல் கருத்துகளைப் பரப்பும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.NCSTC NST ஆகியவற்றின் உதவியுடன் செயல்பட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வளை வடிவ சூரிய கிரணகனம் தொடர்பாக பொங்கல் கிரகணம் என்ற பெயரில் த.வி.வெங்கடேஸ்வரனால் எழுதப்பட்ட குறுநூல் 32 பக்கத்தில் விளக்கப்படங்களுடன் வெளி வந்துள்ளது.


இக்குறு நூலுக்கு பொங்கல் கிரகணம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் கூடவே அட்டையின் இரண்டு பக்கங்களிலும் ஜல்லி கட்டு மாடு பிடிக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்கள். பொங்கல் அன்று நிகழ்ந்ததைத் தவிர வளை வடிவ கிரகணத்துக்கும் பொங்கலுக்கும் யாதொரும் சம்மந்தமுமில்லை. பொங்கல் கிரகணம் என்று சொல்வது அறிவியலுக்கு எதிரானது; அநியாயமானது. புராணக் கதைகள் பற்றி விளக்கி விட்டு ஏன் இவர்கள் புதுக் கதை அளக்கிறார்கள்! அறிவியல் பெயரில் நடத்தும் மோசடியின்றி வேறென்ன?


இதைப்போலவே வளை வடிவ சூரிய கிரகணத்திற்கும் பொங்கலுக்கும் அதைத் தொடர்ந்து நடத்தப்படுகிற ஜல்லிகட்டுக்கும் உள்ள தொடர்புதான் என்ன? வீர விளையாட்டு என்ற பெருமை பேசி அத்துடன் சாதிப் பெருமை, தமிழினப் பெருமை பேசுவதோடு மட்டும் நில்லாது மிருகவதைக்குக் காரணமான ஜல்லிக்கட்டடில் வெளிப்படும் சாதிய, இனவாதம் மிகவும் கேவலமான ஒன்றாகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த விதமான இரட்டை நிலையை கடைபிடிப்பது சரியாகப்படவில்லை.


அறிவியலில் புனைவுகளுக்கும், புராணங்களுக்கும் இடமில்லை. மேலும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளுக்கும் இடம் இருக்கமுடியாது. சாதிப்பெருமையும், குலப்பெருமையும் பேசுவது ஒரு அறிவியலாளனின் வேலைத் திட்டமாக இருக்கமுடியாது. ஜல்லிக்கட்டை மிருகவதை என்பதோடு மட்டுமல்லாது மனித வதை என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். புனைவுகளின் மூலம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து வீரம், சாதி, இனம் என்ற போலியான மாயைகள் கட்டப்படுகின்றன. இப்போக்கை அறிவியல் நோக்குள்ளவர்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும். பள்ளிக்குழந்தைகளிடம்
கருத்தியல் பரப்புரை செய்யும் இந்நூல்களை மிகுந்த கவனத்துடன் தயாரிக்க வேண்டியது அவசியம். அரசு பாடப் புத்தகங்களைப் போல தகவல், கருத்துப் பிழைகள் மலிந்ததாக இருக்க வேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக