புதன், ஜூன் 16, 2010

21- ஆம் நூற்றாண்டில் செத்த மூளை- மு.சிவகுருநாதன்

21- ஆம் நூற்றாண்டில் செத்த மூளை- மு.சிவகுருநாதன்


‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைபடத்தைப் பற்றி ‘எதிர்மறைகளின் அபத்தம்’ என்ற தலைப்பில் பிப்ரவரி 2010 உயிர்மை இதழில் சாருநிவேதிதா செல்வராகவனை கடுமையாகத் திட்டி எழுதியிருக்கிறார். ஏற்கனவே சாரு செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’ படத்தை ஏகத்துக்குப் பாராட்டி எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. ‘ஆயிரத்தில் ஒருவனை’ கடுமையாக திட்டுவதற்கும் ‘புதுப்பேட்டையை’ அளவுக்கு அதிகமாக பாராட்டுவதற்கும் தகுதி இருப்பதாக தெரியவில்லை. சாருவின் சினிமா விமர்சன அளவுகோல் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து அமையக் கூடியதாகவே இருக்கிறது.


பல்வேறு ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளை உருவி எடுத்து தயாரிக்கப்பட்ட படம் என்ற விமர்சனம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். ‘சுட்ட’ காட்சிகளை விலாவாரியாக சாரு குறிப்பிடுவதையும் ஒத்துக்கொள்வோம். சாருவின் ‘ஜீரோ டிகிரி’ காப்பியடிக்கப்பட்டது, பலரால் எழுதப்பட்டது என்றெல்லாம் புகார் எழுந்தது. சாருவைப் போலவே செல்வராகவனும் அவர்களின் பாதிப்பு என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியும். இவற்றை ஒதுக்கி விட்டு படத்துக்கு வருவோம்.


தமிழ் சினிமாவில் ஏ.பி.நாகராஜன் பாணி சினிமாவிலிருந்து இன்றைய கமல்ஹாசன் படங்கள் வரை இந்துத்துவ பழந்தமிழ் பெருமை பேசும் படங்களாக அமைந்துள்ள வரலாற்றை நாம் அவதானிக்க முடியும். தமிழக, இந்திய மன்னர்களை உண்மையாகச் சித்தரிக்கும் படங்கள் வரவேயில்லை. சிம்புதேவனின் ‘23-ம் புலிகேசி’ என்ற காமெடிப்படம் அளவிற்கு கூட தமிழ் மன்னர்களை விமர்சித்த படங்கள் இல்லை. இந்த வகையில் மீரா நாயரின் ‘காமசூத்ரா’ வை குறிப்பிட்டுச் சொல்லமுடியும். இந்திய மன்னர்களின் பாலியல் வேட்கையையும், அவனது பாலியல் விழைவுக்காக பெண்கள் அந்தப்புரத்தில் உற்பத்தி செய்யப்படுவதையும், நாட்டில் உள்ள அழகான பெண்கள் அரசனால் சீரழிக்கப்படுவதையும் மிகவும் வெளிப்படையாக பேசிய படம் காமசூத்ரா.


சாரு தனது குப்பை இலக்கியத்தில் பலகுரல் தன்மைகளைக் கண்டுபிடிப்பது போல் செல்வராகவனின் காப்பியடிக்கப்பட்ட இந்தப்படத்திலும் பலகுரல்களைக் காண முடியுமே! சோழப்பெருமை, குடிப்பெருமை, விடுதலைப்புலிகள் ஆதரவு, ஈழப்போர் ஆகியவற்றைத் தொட்டுச் சென்றாலும் இடையிடையே வரும் சில காட்சிப்படுத்தல்கள் மூலமும் உள் முரண்கள் மூலமும் அரசர்களின் வேறொரு பரிணாமம் வெளிப்பட்டு விடுகிறது.


ஆடைகளைக் களைத்து, சிறுநீர் கழிக்கச் செய்து கன்னித் தன்மை பரிசோதனை செய்தல், மஞ்சள் பூசி குளிப்பாட்டுதல், வாசனைத் திரவியங்கள் பூசி அலங்காரம் செய்தல் போன்றவை அப்படியே மீரா நாயரின் ‘காமசூத்ரா’வை நினைவூட்டுகின்றன. ஒரே ஒரு வித்தியாசம் ‘காமசூத்ரா’வில் மன்னனின் விருப்பத்திற்கேற்ப கதாநாயகி தயார் செய்யப்படுவாள். இங்கு பழிவாங்கத் துடிக்கும் பாண்டிய வாரிசான கதாநாயகியின் விருப்பத்தின் பேரில் நிகழ்த்தப்படுகின்றன. அரசனது காம விழைவிற்கு பெண்களைத் தயார் செய்ய சிறுநீர் கழிக்கச் செய்து அதன் மூலம் கன்னித் தன்மையை (Virginity) சோதனை செய்கின்ற நமது இந்திய-தமிழ் மன்னர்களின் கலாச்சார நிகழ்வை Fetish Pissing வகை நீலப்படத்தோடு ஒப்பிட முடியாது. சாரு அனார்கிஸம் எல்லாம் பேசிக் களைத்த பிறகு வைணவம், இந்து, ´sheரடி பாபா, நித்தியானந்தன் ஆகியவற்றின் புகழ் பாடுவதோடு சேர்ந்து தமிழ்க்குடி, சோழப்பெருமைகளையும் பாடத் தொடங்கிவிட்டார். இதில் “நான் சோழர் குலப்பெருமை பேசும் வீரத்தமிழன் இல்லை” என்ற விளக்கம் வேறு. சாருவின் சிந்தனை வீழ்ச்சி எதிர்பாராதது மட்டுமல்ல; யாருக்கும் நிகழக்கூடாத ஒன்றாகவும் இருக்க வேண்டுமென எண்ணத் தோன்றுகிறது.


சோழர்கள் மட்டுமல்ல, எந்த அரச வம்சமும் சிறுபான்மை இனக்குழுவை ஒடுக்கியும் அழித்தும் பல்லாயிரம் உடல்களுக்கு மீது கட்டப்பட்டதுதான் குலப்பெருமையும், பேரரசு உருவாக்கமும் இதில் சிதைக்கப்பட்ட பல்லாயிரம் பெண்ணுடல்களுக்கு முக்கிய இடம் உண்டு. இவற்றையயல்லாம் அறியாதவரல்ல சாரு. சாருவின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் அரசியல் அவரது கண்ணை மறைக்கிறது.


“என்கிட்ட ‘காண்டம்’ இருக்கு, படுத்துக்க வர்றியா?” என்று கதாநாயகன் கேட்பதை கேட்டு ‘இந்து மக்கள் கட்சி’ அளவுக்கு பதறியடித்து நீலப்படம் என்று சாரு அலறுகிறார். இவரது ‘ஜீரோ டிகிரி’ நாவல் லீனா மணிமேகலையின் கவிதைகள் போன்றவற்றை எதிர்க்கும் மதவெறிகும்பலுடன் சாருவும் கைகோர்க்கத் தொடங்கியிருப்பதுதான் இவரது சிந்தனை வீழ்ச்சியின் இறுதிக்கட்டம்.


‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை பெரிதாக தூக்கி வைத்து ஆட வேண்டியதும் இல்லை. சராசரி தமிழ்ப்படம் அவ்வளவுதான். இதைவிட மோசமான தமிழ்ப்படங்கள் அன்றாடம் ( உ.ம் ) விஜய், அஜித், விஜயகாந்த், ரஜினி படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ‘காமசூத்ரா’வை பார்க்காதவர்களுக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் உள்ள சில காட்சிகள் மூலம் தமிழ்திரைப்பட உலகில் அதிர்ச்சி அளித்த வகையில் ( இலக்கிய உலகில் சாரு நிவேதிதா அளித்த அதிர்ச்சி மதிப்பீடுகள் போல ) செல்வராகவனை பாராட்டலாம் என்று நான் கருதுகிறேன். நித்தியானந்தனின் சீடரான சாரு நிவேதிதா அவனிடம் குடும்ப சகிதம் ஏமாந்த கதைகளையும் அவனை மிகச் சிறந்த அறிவாளி என்றும் மோசடிக்காரன் என்றும் மயக்க நிலையில் குமுதம் ரிப்போட்டரில் தொடர் எழுதுவதையும், பிதற்றுவதையும் பார்க்கும் போது (இது பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்) சாருவின் உண்மையான முகமும் ஒரு கலகக்கார நடிகனின் மதிப்பீட்டு வீழ்ச்சியும் ஒரு சேர வெளிப்படும் போது அதிர்ச்சியடைய வேண்டியுள்ளது.

தலைப்பு உதவி - நன்றி: சாரு நிவேதிதா


சாரு பிறரை கிண்டலடிக்கப் பயன்படுத்தி ‘9ஆம் நூற்றாண்டு செத்த மூளை’க்கு தானே உதாரணமாகிப் போனதுதான் தமிழிலக்கிய உலகின் அவலம். சாருவின் அவலமும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக